
1. பிரபஞ்சத்தை தரித்த ஆதியின் பாடல்
அணிய வேண்டும்
அணிய வேண்டாம்
என முரணான
கருத்துக்களை முன்வைத்தனர்
அணியாத பொழுது
அணிவதன் பாதுகாப்பையும்
அணிந்த பொழுது
அணியாததன் சுதந்திரத்தையும் உணர்ந்தேன்
அணிந்த தருணங்களில்
அணியாதவர்கள் நகைக்க
அணியாத தருணங்களில்
அணிந்தவர்கள் பயந்து விலகினர்
அணிய மறந்து
வெளியேறிய பின்னும்
அவசரமாய் அணிய விரைந்தேன்
கூட்டிற்கு
அணியாமல் இருப்பது குற்றம் அணிந்துகொள்வது பாதுகாப்பு என
பிரசங்கித்து கொண்டிருந்தவர்கள்
அதை நழுவாது பிடித்து நின்றது
நகைப்பாகத்தான் இருந்தது
அணியாதவர்கள் பற்றிய கவலையோ அணிந்தவர்களின் பெருமையோ
அன்றி மேலும் ஒன்றை அணிந்து கொள்கின்றேன்
யாரும் காணாமல்
அந்தியின் மறைவில் உலர்த்துகின்றேன்
தேடுபவரின் கண்களை
நுங்கெடுத்துவிடுகின்றது இருள்.
***
2. குற்றமே தண்டனை
குற்றவாளிக்குக் கிடைத்தது
உபசரிப்பு
நல்ல உணவு
ஓய்வு
ஆறுதல் மொழி
காயங்களுக்கு மருந்து
நியாயங்களைச் சொல்ல வாய்ப்பு
ஆனால் மறுக்கப்பட்டது
குற்றங்களை மறக்க அவகாசம்.
*****