...
இணைய இதழ் 112சிறுகதைகள்

அம்பிகா புன்னகைக்கிறாள் – உ. ராஜேஷ்வர்

சிறுகதை | வாசகசாலை

ஆசௌசம்!

“What is this?, Why the hell is so damaged and burnt?”

“It was our ancient Shiva temple, முன்னர் நடந்த ஒரு படையெடுப்பின் போது எரிக்கப்பட்டது”

“Oh, I See!”

“Yes Miss Helena”, என கன்னியாகுமரியின் புராதன சின்னங்களைப் பார்வையிட வந்த ருஷ்ய பெண்ணான ஹெலேனாவிடம் பெரிய கோவில் குருக்களான சங்கரன் விளக்கிக் கொண்டிருந்தார்.

“இங்க பூஜாஸ் செய்றது இல்லையா?”, சங்கரனிடம் ஹெலேனா வினவினார்.

“No ஹெலேனா, எங்க சம்பிரதாயப்படி கோவில்ல தீட்டு ஆய்டுத்துனா, We don’t worship that place!”

“தீட்டு? What the hell is that?”

“அது ஆசௌசம்! I Will explain it latter, now come inside mam”, எனப் பேசிக்கொண்டே தற்போது வழிபாட்டில் உள்ள பெரிய கோவிலுக்கு இருவரும் வந்து சேர்ந்தனர்.

“பெரிய கோவிலின் சிறப்பே அம்பிகைதான், இது பாண்டியர் காலத்துக் கோவில், மதுரைல மீனாக்ஷி அம்மன் எப்படி க்ஷேமமா இருக்காளோ, அதே அளவு இந்த அம்பிகையும் சிறப்பு வாய்ந்தவா!”

“I will tell you an interesting story madam, எலெக்ட்ரிசிட்டி இல்லாத காலத்துல வெறும் தீபம் மட்டும்தான், அப்போலாம் அம்பாள் விக்ரகம் புன்னகைக்குற மாதிரியே இருக்குமாம். இப்பவும் கூட தான். But மக்கள் அதெல்லாம் எங்க கவனிக்குறாங்க, அம்பாள் என்ன Dress போட்டுருக்கான்னு ன் பாக்குறா!”

இருவரிடத்திலும் சிறு புன்னகை.

கோவிலின் ராஜ கோபுரம், பிறகு கொடிமரம் கடந்து வலது பக்கத்தில் வீற்றிருக்கும் அம்பிகையின் சன்னதிக்குள் இருவரும் பிரவேசித்தனர். கோவில் நடை திறக்கப்பட்டு சில நிமிடங்களே ஆகியிருந்தபடியால் பக்தர்களின் நடமாட்டம் பெரிதாகக் காணப்படவில்லை.

அம்பிகையின் சன்னதி நீண்ட நெடிய பிரகாரத்தைக் கொண்டது, பகல் வேலைகளிலும் ஓரளவிற்கு மேல் உள்ளே சூரியக் கதிர்கள் நுழையாத வண்ணம் இருள் பூண்டிருக்கும். ஆகவே, மின்விளக்குகளை ஒவ்வொன்றாக ஒளிரவிட்டபடி சங்கரன் ஹெலேனாவுடன் அர்த்த மண்டப பகுதிக்குள் நுழைந்தார்.

அப்போது மின்விளக்கின் வெளிச்சத்தில் சரியாக அர்த்த மண்டபத்தின் வாயிலில் குருதி படிந்த துணி ஒன்று மடிந்து கிடந்ததைக் காண முடிந்தது. கண்ட காட்சி ஒருகணம் சங்கரனுக்கு இதயத்துடிப்பை நிறுத்தியது. உடல் முழுவதும் நடுங்கத் துவங்கியிருந்த க்ஷணத்தில், அர்த்த மண்டபத்தைக் கடந்து, கருவறையின் நிலைக்கதவு வரை குருதிப் படிமம் ஆங்காங்கே வடிந்து கிடந்தது.

“ஐயோ கடவுளே, அபச்சாரம், அபச்சாரம்!”, என அலறியபடி அர்த்த மண்டபத்தைக் கடந்து உள்ளே கருவறையை நோக்கி ஓட்டம் பிடித்தார்.

அங்கே அம்பாளின் விக்ரகத்திற்கு நேரெதிரே சங்கரனின் புதல்வியான அம்பிகா நின்றிருந்தாள். அவள் உடுத்தியிருந்த மஞ்சள்நிற பாவாடையில் இரத்தக்கறை அப்பட்டமாக ஒட்டிக்கொண்டு தெரிந்தது.

அம்பிகா அசைவின்றி அம்பாளை பார்த்தபடி நின்றிருந்தாள்.

“ஷனியனே, ஐயோ, இப்படி பீடையா வந்து பொறந்து தொலச்சுருக்காளே! இப்படி நடந்துடுத்தே”, என அழுகையும் கோபமும் கலந்த குரலில் விண்ணதிர அலறியபடி, அம்பிகாவை சன்னிதானத்தை விட்டு வெளியே இட்டு வந்தார் சங்கரன். 

சங்கரனின் அலறல் சத்தம் கேட்டு ஆங்காங்கே நின்றிருந்த குருக்களும், ஒரு சில பக்தர்களும், ஒன்றும் புரியாத குழப்பத்தில் ஹெலெனாவும் கோவிலின் கொடிமரத்திற்கு அருகே விரைந்தனர்.

அப்போதும் சங்கரனின் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது, சூழ்ந்து கொண்டவர்கள் விஷயம் தெரிந்ததும் தங்களுக்குள்ளாக பேசத் துவங்கினர். ஒருசில நொடிகளுக்குள் சிறிதும் தாமதிக்காமல் சங்கரன் தன் புதல்வியை தரதரவென கோவிலைக் கடந்து அக்ரஹாரத்து வீதி வழியே இழுத்துச் சென்று மறைந்தார்.

கோபுரத்தைக் கடந்து அவர்கள் நடந்து சென்ற வீதியெங்கும் குருதிப் படிமம்.

“What the hell is happening here?”, என்று அருகே நின்றிருந்த மற்றொரு குருக்களிடம் ஹெலேனா வினவினார்.

“தீட்டு Madam தீட்டு!” என்று அவர் பவ்வியமாக பதிலுரைத்தார்.

“HOLLY SHIT” என்றபடி ஹெலேனா அவ்விடம் விட்டு நீங்கி பிற சன்னதிகளை பார்வையிட நகர்ந்து சென்றார்.

பிரம்மஹத்தி தோஷம்

பகல் பதினொரு மணிக்கெல்லாம் விஷயம் காட்டுத்தீ போல பரவியது. கோவிலின் நடை இழுத்து தாழிடப்பட்டது. ஆக்ரஹாரம் முழுவதும் ஆங்காங்கே மக்கள் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தனர். கண்ணும் காதும் வைத்து, பூச்சூடி பொட்டு வைத்துக் கொண்டது அலங்கார சம்பாஷனைகள்.

“எல்லாம் உன்னால வந்தது டீ, பிரம்மஹத்தி, உன்ன கட்டிண்டு வந்தேன் பாரு.. அப்போ புடிச்சது தோஷம்”, சங்கரன் தன் மனைவி தேவகியிடம் கடிந்துகொண்டிருந்தார்.

“இந்த ஷனியனுக்குதான் புத்தி சுவாதினம் இல்ல, உனக்குமா இல்ல, இந்த மாதிரி நேரத்துல ஆத்தோட வச்சுக்கோன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன். கழுதைய கொல்லப்புறத்துல கட்டிப் போட வேண்டியதுதானே?”

“என்ன நடக்கப் போகுதோ? இப்போவே அக்ரகாரம் பூராவும் இதேதான் பேசிட்டு இருக்கா! எப்படி சமாளிக்க போறேனோ கடவுளே. எளவு இத வுடு, தோஷம் ஆய்யுடுத்தே டீ, இந்த பாவத்த எங்க போய் தொலைக்க?” தனக்குள்ளாக புலம்பிக்கொண்டிருந்தவருக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“சங்கரா… அடேய் சங்கரா”, வெளியே யாரோ அழைப்பது வீடுமுழுக்க எதிரொலித்தது.

“உன்ன கமிட்டில இருந்து கூப்பிட்டு விட்டா, உன் மேல ரொம்ப கோவமா இருக்கா பாத்துக்கோ!”, சங்கரனிடம் சேதி சொல்ல வந்த பரணி முணுமுணுத்தான்.

“எல்லாம் என் தலையெழுத்து, இதோ வந்துடறேன்ணா”, என அழுகையைக் கட்டுபடுத்தியபடி நாலுகால் பாய்ச்சலில் பிராமண சங்கம் அமைந்திருந்த இடத்தை நோக்கி ஓட்டம் பிடித்தார் சங்கரன்.

கோவில் நிர்வாகிகள், அறங்காவலர் குழுவின் தலைவர், பிராமண சங்கத்தின் உறுப்பினர்கள் என பெருங்கூட்டம் ஒன்று சங்கரனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. சங்கரன் பிரவேசித்ததும் ஒருவர் மாறி ஒருவர் வார்த்தைகளால் வாட்டி வதைக்கத் துவங்கினர். சிலர் ‘இவன் பிராமணனா இருக்க அருகதை இல்லாதவன்’ எனத் தூற்றினர். ‘இவா குடும்பம் இந்த அக்ரஹாரத்துல இருந்தா இனி நாங்க யாரும் இங்க இருக்கப் போறது இல்லண்ணா பாத்துக்கோங்கோ’, என எங்கிருந்தோ சில குரல்கள் எதிரொலித்தது.

“இப்போவே சில நியூஸ் ரிப்போர்ட்டர்கள் வர ஆரம்பிச்சுட்டா.. கவனிச்சேளா மாமா?”, என சிலர் தங்களுக்குள்ளாக முணுமுணுத்தனர்.

சங்கரன் ஒன்றும் பேசாது தலையை குனிந்தபடி அழுது கொண்டிருந்தார்.

“இப்படி குழந்தை மாதிரி அழுதுட்டு இருந்தா எல்லாம் சரியா போய்டுமா சங்கரா?”, கோவில் தர்மகர்த்தா வினவினார்.

“பெரியவா பாத்து என்ன முடிவு எடுக்குறேளோ அதுக்கு நான் கட்டுபடுறேன்”, சங்கரன் ஒரேவரியில் தனது கருத்தை முன்வைத்தார்.

“இதுல என்ன முடிவு எடுக்க, அந்த பிரம்மஹத்திய எங்கேயாது கண் காணாத எடத்துல போய் வுட்டுட்டு வந்துடு, அப்போதான் உன்னால இந்த அக்ரஹாரத்துல இருக்க முடியும், கோவிலுக்குள்ள வரலாமா கூடாதான்னு இப்போ முடிவு பண்ண முடியாது”, என பிராமண சங்கத் தலைவர் கடுங்கோபத்தில் சங்கரனை நோக்கி எச்சரித்தார்.

“சரிண்ணா!”, தலையை குனிந்தபடியே சங்கரன் பதிலுரைத்தார்.

“சரி, இப்போ கோவில் தீட்ட எப்படி சரி கட்டுறது? அத பத்தி பேசுங்கோ”, ஒருவர் பேச்சைத் துவங்கினார்.

“செத்த இருங்கோ, டேய் சங்கரா உனக்கும் கோவிலுக்கும் சம்பந்தம் இல்ல, நீ போகலாம், அவள எங்கையாது தொலைச்சுட்டு வந்து சொல்லு”, என மற்றொருவர் சங்கரனை அவ்விடம் விட்டு வெளியேறும்படி ஆணையிட்டார்.

பரிகாரம்

“ண்ணா அவா என்ன சொன்னா?”, தேவகி தயங்கியபடி சங்கரனிடம் வினவினாள்.

சங்கரனிடமிருந்து பதில் ஏதும் எழவில்லை.

“ண்ணா ஏதாச்சும் சொல்லுங்கோ, இப்படி அமைதியா இருக்காதிங்கோ, மனம் கெடந்து பாடா பட்றது!”, தேவகி இம்முறை அழுகை கலந்த குரலில் விசும்பினாள்.

“நமக்கு பொறந்து தொலச்சுருக்காளே ‘சீமாட்டி’ அவள எங்கையாது போய் விட்டுட்டு, தலைமுழுகிட்டு வந்தாதான் இனி நம்மளால இங்க இருக்க முடியும். இல்லேன்னா பாட்டனார் காலத்துல இருந்து தங்கிருக்க இந்த புண்ணிய ஸ்தலத்த விட்டுட்டு, இந்த ஷனியன கூட்டிட்டு ஊரு ஊரா பரதேசம் போக வேண்டியதுதான்”, சங்கரன் தீர்க்கமாகக் கூறினார்.

“அவா சொன்னதுக்கு நீங்க என்ன சொன்னேள்?”, தேவகியின் குரலில் நடுக்கம் தொனித்தது.

“நான் என்ன சொல்ல வேண்டி கெடக்கு! பெரியவா சொல்றத ஆமோதிக்குறத தவிர்த்து நம்மளால ஒன்னும் பண்ண முடியாது”, சங்கரன் தேவகியின் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் பதிலுரைத்தார்.

“எப்படிண்ணா இப்படி ஒரு காரியத்த செய்றத்துக்கு நீங்க ஒத்துண்டு வந்தேள்? பாவம் குழந்தைக்கு நம்மள விட்டா வேற யாரு இருக்கா? நமக்கு இந்த ஊரும் வேணாம், இந்த ஜனமும் வேணாம், வேற எங்கையாது போய்டலாம், நல்ல ஹாஸ்பிட்டல்ல அம்பிகாவ சேர்த்துப் பாத்துகிட்டா இந்த பிரச்சனையை குணப்படுத்திடலாம்”, தேவகி தீர்க்கமாக தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்.

“இதோ பாரு தேவகி, அம்பாள தொட்டு பூஜை பண்ணுன கை, பொம்மனாட்டிகள அடிக்குற வழக்கம் கிடையாது, தேவையில்லாம கை ஒங்க வச்சுடாத, இன்னைக்கு ராத்திரி போல நாம கெளம்புறோம், காசில போயிட்டு இவள விட்டுட்டு, புடிச்ச பீடைய அங்கயே தொலைச்சுட்டு வந்துடறோம், நடந்த பாவத்துக்கு அதுதான் நமக்கு இருக்குற ஒரே பரிகாரம்.. புரியுதா?”, என தேவகியின் மறுமொழிக்கு காத்திராது சங்கரன் வாயிலைக் கடந்து வெளியேறினார்.   

துவேஷம்

அந்தி சரிந்து கடலுக்கு அப்பால் கதிரவன் மறைந்து கொண்டிருந்தான்.

அக்ராஹாரத்தின் தென்கோடியில் அரசு வாகனம் ஒன்று அலறும் சப்தம் வீதி முழுவதும் எதிரொலித்தது. அக்ரஹாரத்து மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி வந்திருக்கும் புதிய செய்தியை கேட்க ஒருமித்துக் காத்துக் கொண்டிருந்தனர்.

வழிச்செலவுக்கான பணத்தை சரிபார்த்துக்கொண்டிருந்த சங்கரனும், மூன்று நாட்களுக்கு தேவையான துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த தேவகியும் கூட அரசு தம்பட்டம் கேட்டு வாயிலுக்கு விரைந்தனர்.

“வழக்கத்திற்கு மாறான விஷயம் ஒன்னு நடந்திருக்கு. விவேகானந்தர் பாறையை தாண்டி கடல் உள் வாங்கியிருக்கு, இந்த மாற்றம் எதுனால, எப்போ இது இயல்புநிலைக்கு வரும்னு தெரியல, இதுனால ஊர்மக்களுக்கு தெரிவித்து கொள்வது என்னன்னா யாரும் கடலுக்கு பக்கத்துல போக வேண்டாம், நாளைக்கு சன் ரைஸ் பார்க்க யாரும் கடலுக்கு போக வேண்டாம், முடிந்தவரை எல்லோரும் பாதுகாப்பா இருக்கணும்னு மாவட்ட கலெக்டர் கேட்டுகிட்டார்”,

இந்த அறிவிப்பு அங்கு நின்றுகொண்டிருந்த மக்களுக்கு பேரதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் வழங்கியது. ஒருசிலர் அறிவிப்பு ஓயும் முன்னரே கடற்கரையை நோக்கி ஓட்டம் பிடித்தனர். அந்த விசித்திர நிகழ்வை ஆங்காங்கே மக்கள் கூட்டம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

“அந்த கிராதகி எப்போ கோவிலுக்குள்ள தீட்ட வச்சுட்டுப் போனாளோ அப்போ புடிச்சது எளவு”, அக்ரஹாரத்து பெண்மணி முணுமுணுத்தாள்.

“சரிதான், இதுவரைக்கும் இப்படிலாம் நடந்ததே இல்ல! அம்பாள் ரொம்ப கோவமா இருக்கா, அதுனாலதான் இப்படி எல்லாம் நடக்குது”, மற்றொருவர் சங்கரனின் காதுபடக் கூறினார்.

“ஒன்னும் தெரியாத மாதிரி நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கான் பாரு, எல்லா பீடையும் இவனால”, கடற்கரையில் நின்றுகொண்டிருந்த சங்கரனை, நேரடியாக சிலர் கடிந்துகொண்டனர்.

“சாயங்காலம் தீட்டு கழிச்சுட்டுதானே கோவில் தொறந்தா மாமி? அப்புறம் ஏன் இப்படி?”,

“என்னவோ தெரியலடீ? அவ உக்கிரம் இன்னும் தணியல போல”

“ஆமா மாமி, இப்பக்கூட நான் கோவில்ல இருந்துதான் வரேன், அம்பாள் முகம் சிடுசிடுன்னுல இருந்தது!”,

“அப்படியா?”

“ஐயோ!”

இவ்வாறாக அக்ரஹாரத்திலும், அறிவிப்பைக் கேள்வியுற்று கடற்கரையில் குழுமியிருந்த சிலரும் சங்கரனையும், அம்பிகாவையும் பழிக்கும் வண்ணம் பேசினர்.

பொறுமை இழந்த சங்கரன், “இனியும் இங்கு இருந்தால் செத்துதான் போகணும், இப்பவே ஆத்துல இருந்து ஸ்டேஷனுக்கு கெளம்பனும்”, எனத் தனக்குள்ளாக புலம்பியபடி தன் வீட்டை நோக்கி முன்னேறினார்.       

ஆசுவாசம்

கடல் உள்வாங்கிய சேதி தெரிந்ததும் சரிபாதி அக்ரஹாரம், கடற்கரையை நோக்கி விரைந்தது. சங்கரனும் அச்சேதி கேட்டு வெளியே சென்றிருந்தார். இதுதான் தக்க சமையம் என புரிந்து கொண்ட தேவகி, அம்பிகாவை அழைத்துக் கொண்டு அக்ரஹாரத்தின் தென்கோடியில் அமைந்திருந்த, பழைய சிவன் கோவிலுக்கு விரைந்தாள். கைகளில் சிறிய டார்ச் லைட் மற்றும் போர்வை ஒன்றும் அவளிடத்தில் இருந்தது. மேலும் ரயிலில் சாப்பிடுவதற்கு செய்து வைத்திருந்த புளியோதரையும், மோர் சாதமும் ஒரு தூக்குச்சட்டியில் கலகலத்தது. அந்த பேரிருளில், ஊரார் ஒதுக்கி வைத்த கோவிலின் ராஜகோபுரத்தில் அம்பிகாவை அழைத்துக்கொண்டு கவனமாக ஏறிச் சென்றாள். ஒவ்வொரு நிலையாக கடந்து கோபுரத்தின் மேல் தளத்திற்கு இருவரும் சென்றுவிட்டனர்.

“அம்பிகா, இங்க பாருடா செல்லம், இத சாப்டுட்டு இங்கயே இருக்கணும். சரியா? உன் தோப்பனார்ட்ட எப்படியாது பேசி புரிய வச்சுட்டா நம்ம இங்க இருந்து எங்கையாது தூரமா போய்டலாம். சரியா செல்லம்?” தேவகி அழுகை கலந்த குரலில் அம்பிகாவிடம் கூறினாள்.

“அம்மா வர்ற வரைக்கும் நீ வேற எங்கயும் போகக் கூடாது, இங்கயே படுத்துக்கோ சரியா!”, தேவகி இம்முறை அழுதே விட்டாள்.

பேதலித்துக் கொண்டிருந்த தனது சரீர சுமையை அங்கேயே கழற்றி வைத்துவிட்டு, உள்ளம் தெளிவுற தன் தாயை பார்த்து தலையை அசைத்தபடி, அந்த காரிருளில் சுருண்டு படுத்துக் கொண்டாள் அம்பிகா.

‘இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது ஈஸ்வரா! என் குழந்தைய நீ தான் கூடவே இருந்து பாத்துக்கணும். இந்த மனுஷன எப்படியாது ஒத்துக்க வைக்கணும். கடவுளே!’ என்று தனக்குள்ளாக புலம்பியபடி வீடு வந்து சேர்ந்தாள் தேவகி.

தேவகி வருவதற்கும், இரண்டொரு நொடிகளில் சங்கரன் வீட்டிற்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

கடற்கரையில் பெண்கள் பேசிக்கொண்டதை தேவகியிடம் சங்கரன் கொட்டித் தீர்த்தார். ‘செத்துவிடலாம்னு தோணுது’ என்று தலையில் அடித்துக் கொண்டு அழுது புலம்பினார். ‘அம்பிகாவை அழைத்துக் கொண்டு உடனே கிளம்ப வேண்டும்’ என்று தேவகியிடம் படபடத்தார். அம்பிகா இங்கில்லை என்பதை தேவகி எடுத்துக் கூறினாள். தலையில் இடியை இறக்கியது போல சங்கரன் சுவரோடு சுவராகச் சரிந்து விழுந்தார். அவர்களுக்குள் காரசாரமாக வாக்குவாதம் நீண்டுகொண்டே சென்றது. ‘அவள் எங்கே? அவளைப் பார்த்தால் பார்த்த இடத்திலேயே கொன்னுடுவேன்!’ என்று வாயில் வரை அலறியபடி சங்கரன் விரைந்தார். தேவகி சங்கரனின் கால்களை பிடித்து அழுது மன்றாடினாள். அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு சங்கரனிடத்தில் சிறிது ஆசுவாசம்.     

தீட்டுக் கழிப்பு

காற்று திடீரென சுழன்றுகொண்டு அடிக்கத் துவங்கியது. வழக்கத்திற்கு மாறான அழுத்தத்தை அங்கிருந்தவர்கள் உணர்ந்தார்கள். ஊரெங்கிலும் பெரும் அமைதி நிலவியது. காற்று வீசவில்லை. மரமும், செடி கொடிகளும் அசைவற்று நின்றிருந்தது. கோவிலின் நடை தாழிடப்படும் முன் அடிக்கப்படும் மணியோசை மௌனத்தைக் கிழித்து பரவெளியில் பரவியது.

சரியாக எட்டு மணி முப்பத்தி ஐந்தாவது நிமிடத்தில் ஒரு பெரும் ராட்சச அலை, கரையைக் கடந்து நிலத்தைத் தாக்கியது. எள்ளளவும் எதிர்பாரா நிலையில் இருந்த மக்கள் யாவரும் அந்த கொடூர தாக்குதலில் உருக்குலைந்தனர். வீடுகளும் கூரைகளும் காற்றிலும் நீரிலும் அடித்து செல்லப்பட்டது. மக்கள் ஆங்காங்கே பிணமாகி மிதந்து கொண்டிருந்தனர். மரங்களிலும் கிளைகளிலும் பிணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மனித வாழ்விடத்திற்கான எந்த ஒரு அறிகுறியையும் அந்த ஆழிப்பேரலை விட்டுவைக்கவில்லை. ஒன்றரை மணிநேர தாக்குதலில் எழுபது சதவிகித மக்கள் பிணமாகினர். கடற்கரையை ஒட்டி அக்ரஹாரம் அமைந்திருந்த காரணத்தினால், அது பெருத்த சேதத்தை சந்தித்தது. அங்கும் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை.

சுபம்

மறுநாள் பொழுது வழக்கம் போலவே புலர்ந்தது. போர்வையை விலக்கிக் கொண்டு அம்பிகா சுற்றும் முற்றும் பார்த்தாள். நீண்ட பெரும் அமைதி நிலவியது. நிதானமாக கோபுரத்திலிருந்து ஒவ்வொரு படியாக இறங்கினாள். ஆங்காங்கே பிணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அக்ரஹாரம் அலங்கோலமாகக் காட்சியளித்தது. கடல் பாசியும், களர்நீரும் வீதியெங்கும் கசிந்து கொண்டிருந்தது. வீதியெங்கும் சிதறிக்கிடந்த பிணங்களின் மீது நடந்து சென்றாள். பெரிய கோவிலின் நடை திறந்து கிடந்தது. அவளைத் தடுப்பார் யாரும் இல்லை. பிரகாரத்தின் முட்டியளவு தண்ணீரைக் கடந்து அம்பாளின் சன்னதிக்குள் நுழைந்தாள்.

அர்த்த மண்டபத்தைக் கடந்து கருவறையை நோக்கி முன்னேறினாள். அதுவரை சன்னிதானத்தின் முகப்பிலேயே நின்றுவிடும் சூரியக் கதிர்கள் அதிசயமாய் அம்பாளின் முகத்தில் பட்டு ஜொலித்தது.

கருவறையில் வீற்றிருந்த அம்பாளுக்கு நேரெதிரே நின்றிருந்தாள் அம்பிகா.

தீட்டு கழிக்கப்பட்டுவிட்டது!

அம்பாள் புன்னகைத்தாள்!

அம்பிகாவும்!

-rajeshp62471996@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.