கொஞ்சம் கூட கண் பொருந்தவில்லை.பாட்டு கேட்டால் உறக்கம் வரும் என்று நான்கு ஐந்து பாட்டுகளை கடந்து வந்த பிறகும், போட்ட மனக்கணக்கு தப்பாகி உறக்கம் வராமாலேயே இருந்தது. இந்த இரவை சுத்தமாக பிடிக்காமல் போயிருந்தது.பத்து வருடங்களுக்கு முன்னர் வரை,இப்படிப்பட்ட இரவுகள் இத்தனை அசெளகரியத்தை தந்து இருக்கவில்லை.ஆனால் இந்த கால இடைவெளியில் நிகழ்ந்த வாழ்க்கைமுறை மாற்றம், அந்த நாள்களில் சாதரணமாக கடந்து சென்ற அதே சூழலை, இன்று அசெளகரியமான சூழலாக மாற்றிவிட்டிருக்கிறது.
உடம்பு இத்தனை சொகுசிற்கு பழகி விட்டிருந்ததிற்காக, என்னை நானே நொந்துக் கொண்டேன். அப்பொழுதெல்லாம் இரவு நேரங்களில் இப்படி மின்சாரம் தடைபட்டுவிட்டதென்றால், பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பாதி மூடிய கண்களோடு சுருட்டிய பெட்ஷீட்டையும்,தலையணையையும் இடது கையில் வாரிக்கொண்டு, அம்மாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு முன் அறையில் போய் படுத்துக் கொள்வேன். திறந்திருக்கும் முன் அறை ஜன்னல் வழியாக உள்வரும் காற்று இதமாக தலைக்கோதி தூங்க வைத்துவிடும்.‘ஏய், கரெண்ட் வந்திரிச்சு எந்திரி’ என்று அம்மா எழுப்பி மறுபடியும் படுக்கையறைக்கு அழைத்து செல்லாவிட்டால், எந்த சிரமமுமின்றி முன் அறையிலேயே தூங்கி அந்த இரவுகள் கழிந்திருக்கும்.
இன்று முற்றத்தின் முன்னால் இப்படி மழை கொட்டிக் தீர்த்துக் கொண்டிருக்கிற இந்த இதமான சூழலிலும் கூட, மின்சாரம் இல்லாமல் போனதும், மின்விசிறி சுற்றாமல் இருப்பதுமே பெருங்குறைகளாக கண்ணை உறுத்தி தூங்க விடாமல் செய்துக்கொண்டிருக்கிறது. நினைப்பு தான் எல்லாம். நினைப்பை வைத்து மனதை எளிதாக ஏமாற்றிவிட்டலாம். எல்லாம் சரியாக இருப்பதாக நினைத்துக் கொண்டால் எல்லாம் சரியாக இருந்துவிடும். இல்லையென்று நினைத்தால் இல்லை. ‘ஏமாந்தக்கோழி’ ‘ஏமாந்தக்கோழி’ என்று வகுப்பில் கூட படித்தவர்களையும், தெருவில் கூட விளையாடிவர்களையும் பார்த்து சுட்டுவிரல் நீட்டி சிரித்த வயதில் புரியவில்லை. எல்லாருடைய மனமும்தான் ஏமாந்தக்கோழி என்று.
வேலை பார்க்கும் இடத்தில் குளிர்பெட்டி பழக்கி விட்டிருந்த சொகுசும், மின்சாரம் தடைப்பட்டாலும் சொகுசு தடைப்படாமல் பார்த்துக்கொள்ளும் ‘இன்வெட்டர்’ம் குளிர்சாதன பெட்டியோ, குறைந்தபட்சத்தில் மின்விசிறியாவது கண்டிப்பாக தேவை என்ற மனநிலையை உருவாக்கி வைத்துவிட்டது. ‘நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருப்பேன்’ இந்த வெட்டி வீராப்பு வசனத்தை, தோழிகள் கூட்டத்தில் மார்தட்டி கூறி ஒன்பது பத்து வருடங்கள் இருக்கும். இங்கு எதுவும் யாரும் மாறாமல் இருப்பதில்லை என்று அன்று அதை சொல்லும்போது தெரியவில்லை.
அன்று அலுவலகத்திற்கு எதிராக இருந்த ‘பீட்சா ஹட்’ க்கு நான்கு ஐந்து தோழிகளும் நானுமாக சென்றிருந்தோம். பீட்சா ஹட்டையும், பீட்சாவையும் மிகவும் அருகில் பார்த்த முதல் அனுபவம் அது. ஏனோ பார்த்த மாத்திரத்திலேயே பிடிக்காமல் போன சிலவற்றில் ‘பீட்சா’வும் ஒன்றாக அன்றே சேர்ந்துக் கொண்டது. ‘எனக்கு வேண்டாம். எனக்கு இதுலாம் பிடிக்காது. நீங்க சாப்பிடுங்க’ என்று நான் சொல்ல, ‘சென்னைக்கு வந்து பத்து பதினைந்து நாள் தான் ஆகுது. இப்படிதான் பேசுவ, இன்னும் ரெண்டு மாசம் போனா நீயே எங்கள இங்க கூட்டிட்டு வருவ’ என்று தோழிகளின் ஒருத்தி கூற ‘நான் எப்பவும் மாறமாட்டேன்’ என்றோ ‘நான் எப்பவும் ஒரேமாதிரி தான் இருப்பேன்’ என்றோ இந்த இரண்டு வாக்கியத்தில் எதை அன்று சொன்னேன் என்று துல்லியமாக ஞாபகம் இல்லை. அதன்பிறகு எங்கள் டேபிளிற்கு வந்த பீட்சாவை தோழிகள் ஆர்வத்தோடு பகிர்ந்து கொண்டிருக்க, அந்த பீட்சா ஹட்டின் ஒரு ஓரத்து நாற்காலியில் அழுக்கு சட்டையோடு தான் வேலை பார்க்கும் வீட்டிலோ, அல்லது ஏதோ ஒரு அலுவலகத்திலோ சொல்லி அனுப்பிய கட்டளையை ஏற்று அங்கு வந்து தாயாராகிக் கொண்டிருக்கும் பீட்சாவை வாங்கி போவதற்காக காத்திருக்கும் நேரத்தில், ஒவ்வொரு டேபிளில் உள்ளவர்களும் பகிர்ந்துக் கொள்ளும் ‘பீட்சா’ துண்டுகளை ஏக்கத்தோடு, பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுவனின் மீது என் பார்வை நிலைகுத்திக் கொள்ள, மனதினுள் ஏதேதோ ஓடிக் கொண்டிருந்தது. இன்று வரை ‘பீட்சா’வை பார்த்தாலோ, இல்லை ‘பீட்சா’ என்ற வார்த்தையை கேட்டாலோ, ஞாபகம் வருவது அந்த அழுக்குச் சட்டையும் , ஏக்கத்தோடு அலைபாய்ந்த அந்த கண்களும் தான்.
பீட்சா விஷயத்தில் நான் சொன்னபடி இன்று வரை நான் மாறிப்போகவில்லை என்றாலும் , சொகுசு பழகிவிட்டத்தில் மாறிதான் போய்விட்டேன். இந்த முற்றத்து வீட்டிற்கு, நான் நாளை காலை வருவதாக தான் இருந்தது. இந்த வீடு எப்பொழுதும் என் மனதிற்கு நெருக்கமான வீடு. ‘ ‘ராத்திரியே போரேன்மா, ஆச்சி வீடு நல்லா இருக்கும். கூட ஒரு ராத்திரி அங்க தங்குன மாதிரி இருக்கும்’ என்று அம்மாவை தாஜா பண்ணி இரவு எட்டு மணிக்கு என் வீட்டிலிருந்து கிளம்பி ஒன்பது மணிக்கு இங்கு வந்து சேர்ந்தேன். ‘ நான் சாந்தி வீட்டு கல்யாணத்திக்கு போய்ட்டு நாளைக்கு காலையில ஒரு பத்து பதினோரு மணி போல அங்கன வாரேன்’ என்று அம்மா வண்டி ஏத்தி விடும்போது சொன்னாள்.
வீட்டிலிருந்து ஒரு மணி நேரத்தில் பிராயணப்பட்டு வந்து சேர்ந்து விடுகிற தூரத்தில் இருந்தும்கூட ஆச்சி வீட்டிற்கு வந்து தங்கி நான்கு, ஐந்து வருடங்கள் இருக்கும். சென்னையில் வேலை, மூன்று நான்கு மாதத்திற்கு ஒருமுறை சொந்த வீட்டில் இரண்டு நாட்கள் வந்து விடுமுறைத் தங்கல், என்று ஓடுகிற வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்தில் ஆச்சி வீட்டிற்கு வந்து தங்குவதெல்லாம் எட்டா கனியாக மாறி போய்விட்டது. ஒரு காலத்தில் கோடை விடுமுறை என்றாலே ஆச்சி வீடு தான் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் தெருவில் நடந்து போகும் தெரிந்த முகங்கள் , முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் என்னிடம் ‘அறுபது நாளும் இங்கதான?’ என்று கேட்டால், ‘அறுபதில்ல, அறுபத்தியோரு நாள்’ என்று கோபத் தொணியில், ஒரு நாளை கணக்கில் தவறவிட்டுவிட்ட அவர்களின் மீதான கோபத்தை வெளி படுத்தியிருக்கிறேன். இந்த கால ஓட்டத்தில் ஆச்சி தாத்தா இரண்டு பேரும் தவறி போன பிறகும் அத்தையும் மாமாவும் மட்டும் இருக்கிற இந்த வீட்டை இன்னும் ஆச்சி வீடு என்று வாய்நிறைய உரிமையோடு சொல்கிற அளவிற்கு, எங்களை மனநிறைவாக நடத்தும் வசந்தா அத்தை அத்தையாய் வாய்த்தது, எங்கள் பாக்கியம். நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்பொழுது தான் அத்தைக்கும் மாமாவுக்கும் கல்யாணம் நடந்தது. அதன்பிறகு வந்த கோடை விடுமுறை நாட்களில் நான் ஆச்சியை விட அத்தையிடமே அதிக நெருக்கமாக இருந்தேன். அத்தை தான் மூன்று வேளையும் கதை சொல்லி சாப்பாடு ஊட்டுவாள். குளத்திற்கு குளிக்க போகும் போது கூடவே கூட்டிப் போவாள். அவள் காட்டும் அன்பில் ஒரு அழகு நிறைந்திருக்கும். இத்தனை வருடங்களுக்கு பிறகும் அந்த அன்பில் சிறு மாற்றம் கூட வரவில்லை. அந்த அன்பு உருமாறாமல் அப்படியே இருந்து, இன்றும் கூட இரவு சாப்பாட்டை எனக்கு ஊட்டி விட்டது.
***********
மின்விசிறி சுழலாத அமைதி ஒவ்வொரு இரவு உயிரினத்தின் சப்தத்தையும் மிக துல்லியமாக, தானாக காதில் கொண்டு வந்து சேர்த்தது. ‘ச்ஸ்ஸ்’ என்று இருமுறை சப்தம் வந்தது. ‘மூஞ்சிஎலி சத்தம் போடுது. திண்ணைக்கு வராதுலா?’ என்று பயத்தோடு நான் கேட்க ‘அதுலாம் வராது மக்கா, அது முற்றத்தில் கொஞ்ச நேரம் சுத்திட்டு, அப்படியே வெளிய போயிரும். நீ பயப்படாம உறங்கு’ என்று அத்தை அரைத்தூக்கத்தில் பதில் சொன்னாள். ஆனாலும் பயத்தில் கண்களை உருட்டி உருட்டி முற்றத்தையும் திண்ணையையும் இணைக்கும் மரப்படியையும் முற்றத்து இருட்டையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒற்றை மின்மினிப்பூச்சி ஒன்று பச்சை விளக்கை மினிக்கி காட்டி இரண்டு மூன்று முறை வாசலுக்கு ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு நேர்கோட்டில் பறந்துவிட்டு, பின்பு மறைந்து போனது. அதேநேரம் மூஞ்சிஎலி போன்ற ஒரு உருவம் முற்றத்தில் ஓடுவது போல தெரிய, அது பிரமையா உண்மையா என உறுதிசெய்ய எழுந்து சென்று முற்றத்தை கைபேசி ப்ளாஸ்லைட்டால் துளாவ, அந்த மூஞ்சிஎலி வாசல் கதவு வழியாக வெளியேறி கொண்டிருந்தது. நிம்மதி பெருமூச்சு விட்டு மீண்டும் வந்து படுத்துக் கொண்டேன்.
எவ்வளவோ முயன்றும் மருந்திற்கு கூட உறக்கம் வரவில்லை.கனத்த மழையில் இருந்து வேகம் குறைந்து மழை தூறலாக விழுந்துக் கொண்டிருந்தது. ‘ச்சை ஏன்தான் இந்த கரெண்ட் வராம இப்படி சாகடிக்குதோ’ இடதில் இருந்து வலமாக புரண்டு படுத்தேன். மீண்டும் முற்றத்தில் ஏதோ சலனம் கேட்டது. சிறுபயத்தோடும் தயக்கத்தோடும் முற்றத்தில் வந்து பார்க்க, முற்றம் டானா வடிவத்தில் வளையும் முக்கில் மழை குளிரின் நடுக்கத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு பூனை நடுங்கிக் கொண்டிருந்தது.எனக்கு அதனை பார்க்க பாவமாக இருந்தது.பூனைக்கு உதவி செய்வதாக நினைத்து, ‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி’ ரேன்சிற்கு நானே என்னைப் பற்றி மனதில் உயர்வாக நினைத்துக் கொண்டு கைப்பேசி ப்ளாஸ்லைட் உதவியோடு சென்று அடுப்பங்கரை துணியை எடுத்து வந்து அந்த பூனையின் மீது போர்த்தி விட்டேன்.
பின் இரண்டடி பின் நகர்ந்து பூனையை பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, அவ்வளவு நேரமும் அமைதியாக நடுங்கி கொண்டிருந்த பூனை போர்த்தி விட்டிருந்த அடுப்பங்கரை அழுக்கு துணியை உதறிவிட்டு, தூரலில் நனைந்தபடி வாசல் சுவரில் ஏறி சுவரின் மறுபக்கம் தெருவில் குதித்தது. தெருவில் குதிப்பதற்கு முன்னால் ஒரு நொடி என்னை திரும்பி பார்த்தது. ‘உன் சொகுச நீயே வச்சுக்கோ’ என்பதுபோல அதன் சாம்பல் நிறக்கண்கள் இருட்டில் மினுங்கியது. நான் மதில்சுவரை பார்த்தபடி நின்றிருந்தேன். உள்ளே மின்விசிறி சுழல ஆரம்பித்த சப்தம் கேட்டது.
*****
♥️