இணைய இதழ்இணைய இதழ் 47கட்டுரைகள்

ஓர்மைகளில் கசியும் கலுங்கு – சேலம் ராஜா

கட்டுரை | வாசகசாலை

ன்றைய காலம் எல்லோரையும் எங்காவது எதைநோக்கியோ ஓடவைத்துக்கொண்டே இருக்கிறது. ஓடும் நமக்கு எங்கே ஓடுகிறோமென இறுதிவரை தெரிவதே இல்லை. அந்த ஓட்டத்தில் எதையும் கவனிப்பதுமில்லை. எதையுமென்றால் நாம் பிறந்த ஊரை கூட. அங்கு நிகழும் மாற்றங்களை, இறுதியை நெருங்கிவிட்டு சாவை எதிர் நோக்கி காத்திருப்பவர்களையும் கூட நம் ஓட்டத்தில் கவனிப்பதில்லை. 

இந்த நாவலில் வரும் பட்டாளம் என்பவர் ‘சாகுற வரைக்கு வாழனும்’ என போகிற போக்கில் வெகு இயல்பாக சொல்லிச் செல்பவர். ஊரில் இருக்கின்ற ஒரு குளம் அதையொட்டி இருக்கின்ற ஒரு கலுங்கு, அவ்விடத்தில் தினசரி குடிக்க கூடும் மூன்று நண்பர்களை வைத்து ஊரின் பாடுகளைச் சொல்வதுபோல கட்டமைக்கப்பட்டதே இந்த நாவலின் கதை.

மூன்று நண்பர்களெனினும் மூவரும் சம வயதுடையவர்கள் அல்ல. பட்டாளத்தைவிட தானியலேசானுக்கு பன்னிரண்டு வயது குறைவு. தானியலைவிட சந்திரனுக்கு ஏகமான வயது குறைவு. ஆனாலும் இம் மூவருக்குள்ளும் அப்படியொரு ஒத்திசைவு.

இன்றைய நாளில் ஒரு ஆண் என்பவன் தன்னை முழுமையாக ஆசுவாசப்படுத்திக் கொள்ளவதற்கு, எல்லாவற்றையும் ஒளிவுமறைவற்று பகிர்ந்து கொள்ளவதென்பது இப்படி எப்பொழுதும் இணைபிரியாத நண்பர்களிடத்திலே நிகழ்கிறது. அதுவும் அது ஒரு குடி சந்திப்பென்றால் அவன் பிறந்த குழந்தையாக மாறி தாயிடம் அழுவதைப் போலவே கேவிக்கேவி அழுதபடி நண்பர்களிடம் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடிந்துவிடுகிறது.

பொதுவாகவே குடிப்பழக்கமுடைய நபர்களுக்கு சில குணாதிசயங்கள் உண்டு. மது உள்ளே சென்றதும் முகத்தை அஷ்டகோணலாக சிலர் மாற்றி தமது ஒவ்வாமையை வெளிப்படுத்துவர். இந்த நாவலில் பட்டாளமும் அப்படியானவரே. ஒரு முறை ஊற்றி வைத்ததை எடுத்து குடித்தாரென்றால் அந்த அசூசையை போக்க வாய்க்கு வந்தபடி வசைமொழிகளை உதிர்ப்பார். அவர் அதை நிறுத்த வேண்டுமானால் உடனே அவரது வாயில் அன்று குடிக்கு தோதாக வாங்கி வந்திருக்கும் நொறுவையைத் திணிக்க வேண்டும். பிறகே வசையை நிறுத்தி இயல்பிற்கு வருவார். கதையோட்டம் ஒவ்வொரு நாளும் தொடங்குவது இங்கிருந்துதான். ஆனாலும் ஒவ்வொரு நாளுமே நிகழும் இந்த காட்சிகள் சுவாரஸ்யமானதாக இருக்கும். 

ஒருவனை அடையாளப்படுத்த ஊர் என்பது மிக முக்கியமானது. ஒரு ஊரில் பிறந்து அதே ஊரில் இறப்பவனிடம் அந்த ஊரினுடைய வயதும் அடங்கியிருக்கிறது. வயது என்றால் நாளுக்கு நாள் மாற்றம் நிகழ்வதுதானே; அதை அங்கேயே வாழ்ந்தவன் சொல்லக் கேட்பதில்தான் உண்மையும் இருக்கும். வேறு யாரும் செவி வழி கேட்டுச் சொல்வதில் உண்மைத்தன்மை இருக்காது. நாவலில் பட்டாளம் ஓரிடத்தில் தானியலேசானிடம் சொல்வார் – “தானியலே, காட்சிங்கது கண்ணுல கண்டவனுக்கு மட்டும்தான் சொந்தம். அத எப்படிச்சொன்னாலும் யாது மொழியில சொன்னாலும் காட்சிய முழுசா இன்னொருத்தனுக்கு கடத்ததுக்கு முடியாது. இந்த காலம் முழுக்க கண்டவனுக்கு மட்டுந்தா காட்சி சொந்தம். இந்த வலியகுளத்தை கொஞ்சம் கொஞ்சமா மூடி மூடிக் கடைசியா மிஞ்சிக் கெடக்க இந்த குட்டையில எனக்கொரு வலியகுளமும் எனக்கே எனக்கான சில காட்சிகளும் கெடக்கு.” 

இது எவ்வளவு மறுக்க முடியாத உண்மை! தனிமையில் அதுவும் முதுமையில் கைவிடப்பட்ட மனிதர்களுக்கே தெரியும், தனித்திருப்பது எவ்வளவு பெரிய துயரமான விசயமென்பது. ஒருமுறை சமைத்து உண்பதற்காக வாங்கி வந்த விலாங்கு மீன் ஒன்று தவறிச் சாடி குட்டையில் விழுந்துவிட அது ஆணா? பெண்ணா வெறும் பீக்கிறி தவளைகள் மட்டுமே நிறைந்துகிடக்கும் இந்த குட்டையில் அதுமட்டும் எப்படி தனித்து வாழும் என்கிற துயரம் பட்டாளத்தை வாட்டுகிறது. தனித்து போன அந்த ஒற்றை விலாங்கிற்காக பின்னான நாட்களில் ஜோடி மீன்களைக் கொண்டு வந்து குளத்தில் விடும் வரையில் ஒரு நிம்மதியிழந்த முகத்தோடே அவர் இருப்பது தனித்து விடப்பட்டவர்களுக்கே உண்டான பரிதவிப்பு. 

பட்டாளம் இராணுவக்காரர். மூன்று பிள்ளைகள். மனைவி சுலோச்சனா. பிள்ளைகள் சிறுவயதாக இருக்கும்போதே மனைவி இறந்துவிடுகிறாள். அதன்பிறகும் வேறொரு மணம் செய்யாது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, அவர்களும் குடும்பமென ஆனபிறகும் மனைவியின் ஓர்மைகள் கசிய ஊரின் வளத்தையும் இயற்கையையும் நேசித்துக்கொண்டு மீத நாட்களை தனதிரு குடி நண்பர்களோடு கலுங்கில் அமர்ந்து களிப்பவர். முதியவர்களை ஒதுக்கிவைக்கும் நாகரீகத்திற்கு நாம் மாறிவிட்ட பிறகு, வயது பழுத்தவர்களுக்கு தாம் வாழ்ந்த வாழ்வின் பாதையில் திரும்பிச்சென்று சந்தோசப்பட்டுக்கொள்ள இதுபோன்ற இடங்களே புகலிடமாக இருக்கிறது.

பெரியவர்கள் எப்போதும் குழந்தைக்கு ஈடானவர்கள் என்போம் அவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கூட கேட்க மறந்துவிடுவோம். பெரிதாக எதுவுமிருக்காது ஆனாலும் நாம் கேட்பதில்லை. ஒரு நாள் குடிப்பதற்குத் துணையாக தானியல், கிழங்கு வத்தல் வாங்கி வந்துவிட பட்டாளம் சொல்வார்- “தானியலே… எனக்க மருமவ எனக்க பேரனுக்கு உள்ளி வடை வாங்கி வாங்கி கொடுத்தா… ரொம்ப ஆசையா இருந்து… அவளுட்ட கேட்க முடியாதுல்ல..”. இப்படி ஒருபாடு ஆசைகள் இருப்பினும் அதை அவர் வெளிக்காட்டுவதில்லை. 

குடித்த பிறகு ஒவ்வொரு மனிதனுக்கும் மாய உலகம் ஒன்று விரியும். அதில் பொய்மை கலக்கப்பட்ட சில மூடநம்பிக்கைகளுக்கு கை கால் முளைக்க வைத்து வாசகனுக்கு வேடிக்கை காட்டியிருக்கிறார் ஆசிரியர். ஈத்தாமொழி தங்க குமரனின் வயலிலிருந்து தானியல் களவாடி கொண்டுவந்த சோளக்கொல்லை பொம்மைக்கு பட்டாளம் நாடி பிடித்து பார்த்ததை, சந்திரன் வரவில்லை என்றால் வாசகன் உண்மையெனவே நம்பிவிடுமளவிற்கு உண்மை கலந்திருக்கிறது அந்தப் பொய்களில். 

மனிதர்கள் மாற மாற மனிதர்களால் ஊரும் தனது தோற்றத்தை மாற்றுகிறது. மலைகளை வெட்டி எடுக்கிறார்கள்; மரங்கள் அடர்ந்த சாலையை அகலப்படுத்த மரங்கள் வெட்டப்படுகின்றன; குளத்தில் குப்பைகளைக் கொட்டி தூர்த்து குட்டையாக்கிவிட்ட பின்னர் அதில் மண்ணைக் கொட்டி மூடி விற்க தயார்படுத்துகிறார்கள் கொஞ்சம் பணம் படைத்தவர்கள். இது வலியகுளத்தில் பட்டாளத்திற்கு நேர்ந்த கதை மட்டுமல்ல நமது நாட்டில் ஆங்காங்கே இன்றும் நடந்தேறிக்கொண்டிருப்பவைகள் தாம். 

எல்லோரும் வெகுவாக இணைய புழக்கத்திற்கு மாறிவிட்ட பிறகு எல்லோரும் ஒருவித பொதுமொழியிலேயே பேசிப் பழகுவதை வாடிக்கையாக்கிவிட்டோம். ஆனால், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு வழக்காறு மொழி உள்ளது என்பது அறுகிக்கொண்டே வருகிறது. அந்த மொழி இன்றைய இலக்கிய படைப்புகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கிவிட்டது என்பது மகிழ்ச்சியான விசயம். ஒரு கதை அது நிகழும் அந்த நிலத்தின் மொழியிலேயே பதிவாகும் போதுதான் கூடுதலான அழுத்தத்தையும் மிளிர்வையும் பெறும். 

இந்த ஜீரணிக்க முடியாத பெரு வலியை கோபம் கொப்பளிக்க அடர்த்தியான மொழி நடையில் சொல்லிவிடாது, நாஞ்சில் நிலத்திற்கே உரிய வழக்காற்றில் வயிறு குலுங்க குலுங்க வாசகன் சிரிக்கும்படியாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். வருங்காலத்தில் யாராவது நாஞ்சில் மொழியில் ஆய்வுகள் மேற்கொண்டால் மீரான் மைதீனின் படைப்புகளை தவிர்க்கவே முடியாது.

இந்த “கலுங்குப் பட்டாளம்” இதே நாஞ்சில் மொழி மாறாமல் திரைப்படமாக்கப்பட்டால் அடிக்கடி பட்டாளமும், தானியலும் சொல்லுகிற “பிரச்சனையும் மயிருந்தான்” என்கிற எளிய வார்த்தை பிரத்யேகமாகப் பேசப்படும் என்பதில் மாற்றமில்லை. தன்னுடைய தனிப்பட்ட மொழி நடையில் பல பெரிய கதைக்களத்தையும் வெகு அனாயாசமாக வாசகனுக்கு கடத்திவிடும் நேர்த்தி தெரிந்தவர் மீரான் மைதீன். இதுபோல இன்னும் பல படைப்புகளை அவர் தர நாம் வாழ்த்துவோம். 

நூல்: கலுங்கு பட்டாளம்

ஆசிரியர்: மீரான் மைதீன். 

வெளியீடு: புலம்.

விலை: ₹130

****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button