1975 ஆம் ஆண்டு ஜூன் 26 இந்தியர்களால் மறக்க முடியாத நாள். இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நள்ளிரவில் எமர்ஜென்சியை அறிவித்த நாள். அதன் களப் பலிகள் எண்ணற்ற மனிதர்கள், சமுக இயக்கச் செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள். அவர்களில் ஒருவர்தான் ஸ்நேகலதா ரெட்டி. [ரெட்டி என்ற இணையொட்டை, இனி தவிர்க்கிறேன்.] இயக்குநர், நடிகை, களப்போராளி, பெண்ணியவாதி, அரசியல் சமூக இயக்கங்களில் பங்கு கொண்டவர் என பன்மைத்துவம் கொண்ட ஒரு தீரம் மிக்க பெண்ணின் வாழ்க்கைப் பயணம் ஸ்நேகலதாவினுடையது.
தான் கொண்ட கொள்கைக்காக அதன் மீதிருந்த ஆத்மார்த்தமான நம்பிக்கைக்காக தன்னுயிரை இழந்தவர் ஸ்நேகலதா ரெட்டி. எமெர்ஜென்சி காலத்தில் காவல்துறை, முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் உடன் சேர்த்து பரோடா டைனமைட் வழக்கில் 25 நபர்களை சந்தேகத்தின் பேரில் தொடர்புடையவர்கள் எனக் கருதி கைது செய்தது. எல்லோரும் எமெர்ஜென்சியை, அதன் கொடுங்கோல் தன்மையை எதிர்த்த சமூக ஆர்வலர்கள், அரசியல் இயக்கத் தலைவர்கள் மற்றும் கலைஞர்கள். அதில் ஸ்நேகலதாவும் ஒருவர்.
ஸ்நேகலதா ரெட்டி பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட ஆந்திரப்பிரதேசத்தில் 1932 ம் ஆண்டு ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தார். எனினும் ஆங்கிலேய எதிர்ப்புணர்வும் சுதேசி உணர்வும் அவரது இளமைப் பருவத்திலேயே இருந்த காரணத்தினால் தனது பெயரை அவர் கிருஸ்துவ மதத்துக்காக மாற்றிக்கொள்ளவில்லை. பெரிய பொட்டு வைத்துகொள்ளவது, புடவை மட்டுமே அணிவது போன்ற எளிய ஆனால் எதிர்ப்புணர்வின் அங்கமாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். கல்லூரிப்படிப்பின்போதே நாடகம், காளி தொடர்பான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் எதிர்கால வாழ்க்கையை அரங்க நாடகத்துக்காக அர்ப்பணிப்பது என முடிவுசெய்தார். அதுதான் அவர் சென்னையில் மெட்ராஸ் பிளேயர்ஸ் என்னும் நாடகக் குழுவை துவக்கக் காரணமாக இருந்தது. ஷேக்ஸ்பியர், இப்சன் என ஆங்கில நாடகங்களை சென்னையில் மேடையேற்றினார். [மெட்ராஸ் பிளேயர்ஸ் நாடகக்குழு இன்னமும் இயங்கி வருகிறது] பெங்களூருக்கு குடிபெயர்ந்த பின்னும் அங்கும், ‘அபிநயா’ என்னும் நாடகக் குழுவினை தனது நண்பருடன் சேர்ந்து துவங்கினார். அவர் ஒரு தீவிர கலை செயல்பாட்டாளர். 1947 ஆம் ஆண்டு ஸ்நேகலதா இயக்குநர் பட்டாபிராம ரெட்டியை சந்தித்தார். ஆறே மாதங்களில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். நாடகமும் ஒருமித்திருந்த சமூக உணர்வும் அவர்களை இணைத்தது எனலாம்.
இங்கே கன்னட சினிமாவின் மிக முக்கியமான ஆக்கங்களில் ஒன்றான, ’சம்ஸ்காரா’ படத்தைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். பட்டாபிராம ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த, ‘சம்ஸ்காரா’வை புதிய அலை கன்னட சினிமாவின் துவக்கப்புள்ளியாக உறுதியாகச் சொல்லமுடியும்.
யு. ஆர்.அனந்த மூர்த்தியின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். எல்லா சமூக கட்டுப்பாடுகளையும் மீறும் குணாம்சம் கொண்டது மனித இருப்பு என்பதை ஆணித்தரமாக சொன்ன படைப்பு சம்ஸ்காரா. திரைக்கதை எழுதி நடித்த கிரிஷ் கர்னாட் பின்னாட்களில் இந்திய அளவில் முக்கிய நாடக இயக்குநராக, நடிகராக மிளிர்ந்தவர். [காவேரி பிரச்சினையின்போது தமிழர்களுக்கு கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை முறையாகத் தர வேண்டும் என நீதிக்குரல் எழுப்பியவர் கிரிஷ் கர்னாட்].
கிரிஷ் கர்னாட், எழுத்தாளர் பி.லங்கேஷ், ஸ்நேகலதா ரெட்டி ஆகியோரின் நடிப்பும், சிறப்பான திரைக்கதையும், ஒளிப்பதிவும் படத்தை ஒரு மிகச் சிறந்த காண்பியல் அனுபவமாக பார்வையாளர்களுக்கு அளித்தன. நாவலின் மைய இழையோட்டம் சிதையாமல் சினிமாவாக மாற்றியிருக்கும் இயக்குநரும் அவரது குழுவினரும் ஒரு வலிமையான வணிக நோக்கில்லாத கலைப்படத்தின் இருப்பை உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
ராம் மனோகர் லோஹியாவின் அரசியல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் ஸ்நேகலதா
மற்றும் அவரது கணவர் பட்டாபிராம ரெட்டி. எமர்ஜென்சி அறிவிப்புக்கு பின்னர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமைறைவானார். இந்திராகாந்தி அரசை சிறு சிறு வன்முறைச் செயல்கள் மூலம் பொதுமக்களை பாதிக்காத வண்ணம் அச்சுறுத்த வேண்டும் என்பது ஜார்ஜ் பெர்னாண்டஸின் நோக்கமாக இருந்தது. ஜார்ஜை ஆதரித்தாலும் வன்முறை கூடாது என்பதில் ஸ்நேகலதா உறுதியாக இருந்தார். பெங்களூரில் தலைமறைவாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸை சந்தித்த நபர்களில் ஸ்நேகலதா தம்பதியினர் முக்கியமானவர்கள். 1976 ஆம் ஆண்டு ஸ்நேகலதா மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மத்திய சிறைச்சாலையில் எட்டு மாதங்கள் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
வழக்கில் அவர் பிரதான குற்றவாளியில்லை. முதல் தகவல் அறிக்கையில் அவர் பெயரே இடம்பெறவில்லை. ஆனாலும் அவர் அந்த எட்டுமாதங்கள் கொடும் சித்ரவதைக்கு ஆளானார். அவருக்கு இருந்த ஆஸ்துமா நோய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. காற்றோட்டமில்லாத இருட்டு அறையில் சரியான உணவில்லாமல், போதிய மருத்துவ சிகிச்சையில்லாமல் அவர் அடைக்கப்பட்டிபிருந்தார். பல நாட்கள் அவர் மயங்கி சுயநினைவில்லாமல் கிடந்திருக்கிறார். எனினும் காவல்துறை அவருக்கு போதிய மருத்துவ சிகிச்சையை அளிக்கவில்லை. கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஸ்நேகலதா பரோலில் வெளியே வந்தார். ஆனால் ஐந்தே நாட்களில் இறந்து போனார். அப்போது அவருக்கு வயது 44.
சிறையில் இருந்தபோதும் அங்கே இழைக்கப்பட்ட மனித உரிமைகளுக்கு எதிரான செயல்களை எதிர்த்தார். பெண் சிறைக்கைதிகளை ஆண் சிறைக்காவல் அதிகாரிகள் நடத்தும் போக்குக்கு கடுமையான கண்டனங்களையும் எதிர்ப்பையும் பதிவு செய்தார். பல நேரங்களில் உண்ணாவிரதம் இருப்பார். அதன் சிறிய பலனாக சிறையில் கைதிகளுக்கு ஓரளவு சுமாரான உணவும், கழிவறை சுகாதாரமும் கிடைக்கப்பெற்றது.
சிறையில் இருந்த நாட்களில் நேர்ந்த கொடுமைகளை அவர் தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். சோபியா என்னும் தலைமை சிறைக்காவலர் பெண் கைதிகளை சித்ரவதைக்கு ஆளாக்குவதை எதிர்த்து உயரதிகாரி தேசாய்க்கு அவர் தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதினார். ஆனால் இரண்டுநாள் கழித்து சித்ரவதை செய்தவரையும் சித்ரவதைக்கு ஆளானவர்களையும் ஒரே அறையில் வைத்து விசாரணை நடந்ததை தனது நாட்குறிப்பில் கேலியாகப் பதிவு செய்துள்ளார் ஸ்நேகலதா.
”மதிப்பு மிக்க தேசாய் அவர்களுக்கு , நீங்கள் நேற்று சிறைக்கு வந்திருந்தீர்கள் என்று அறிந்தேன். நான் எழுதிய புகார் கடிதம் தொடர்பாக நீங்கள் விசாரணை செய்ய வந்தீர்கள் என்றே நம்புகிறேன். நீங்கள் எனக்கு உங்கள் வருகையை தெரிவித்திருக்க வேண்டும். பரவாயில்லை, டெல்லியின் விதிமுறைகள் அதற்கு இடம் தரவில்லை போலும். சித்ரவதை செய்த சிறைக்காவலரின் முன்னே சித்ரவதைக்குள்ளான கைதிகளை விசாரணை செய்ததை என்னால் நம்ப முடியவில்லை. ஒருவேளை சமீபத்தில் நீங்கள் ‘டெல்லியில் பெற்ற, ‘பயிற்சி’யின் விளைவாக அது இருக்கலாம். நேற்று நடந்தது உண்மையில் விசாரணைதான் எனில் நீங்கள் ஒரு பிரமாதமான நடிகர். நான் என் கணவர்/ இயக்குநர் பட்டாபிராம ரெட்டியிடம் படத்தில் நடிக்க வைக்க உங்களைப் பரிந்துரை செய்ய விரும்புகிறேன். நேற்று நடந்தது ஒரு கேலியான ஒரு விசாரணை. சித்ரவதைக்குள்ளானவர்களை தொடர்ச்சியான மிரட்டலிலும் பயத்திலும் வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரான செயல். உண்மையில் நடந்தது என்ன என்பதை நீங்கள் அறிய விரும்பினால் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டும். உங்கள் தாமதம் எதிர்பார்த்த ஒன்றுதான்..” என்று நீளும் அக்கடிதம் எமெர்ஜென்ஸி நாட்களின் நெருக்கடிகளையும், நம் நாட்டின் சிறைக்காவலில் நிகழும் எண்ணற்ற வன்முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் நம் கண்முன்னே கொண்டுவருபவை.
சமூக அநீதிகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளும் எதிரான
குரல் ஸ்நேகலதாவினுடையது. ஒரு கலைஞன் எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் அநீதியின் பக்கம் நிற்கக்கூடாது என்பது அவரது வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம். நாம் எதை ஆதரிக்கிறோம், எதையெல்லாம் எதிர்க்கிறோம் அல்லது எப்போதெல்லாம் மௌனமாய் இருக்கிறோம் என்பதே நாம் யார் என்பதை, நம் சார்புகள் என்ன என்பதை நமக்கு தெளிவாகச் சொல்லிவிடும். ஆகவே நாம் என்பது வெறுமனே, ‘நாம்’ அல்ல. அதுவொரு அரசியல் சார்பு.
‘மேதைமைக்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்ன உறவோ’ என சுந்தர ராமசாமி தனது, ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலில் ஆற்றாமையை வெளிப்படுத்தி இருப்பார். நடிகை ஸ்நேகலதாவின் 44 வயதில் முடிந்துபோன வாழ்க்கையை அறிந்தபின் சு.ராவின் அந்த வரிகளே மனதில் அலையெழுப்பின.
***
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அறுபது வயது பூர்த்தியானதையொட்டி அவருடைய வாசகர்கள் உருவாக்கிய வலைத்தளம் ஒன்றில் எழுத்தாளரும் ஜெயமோகனின் மனைவியுமான அருண்மொழி நங்கையின் நீள் கட்டுரையை வாசித்தேன். அவரது அ-புனைவாக்கங்களை ஏற்கனவே அவருடைய வலைத்தளத்தில் படித்து இவர் அதிகம் எழுதாமல் போனது இலக்கியத்துக்கு இழப்பு என்ற மனநிலைக்கு வந்திருந்தேன். அது வெறும் புகழ்ச்சி அல்ல என்பது அவருடைய கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கும்போது புரியும்.
ஒரு குறுநாவல் போல நீளும் அருண்மொழி நங்கையின் அந்தக் கட்டுரை ஆகச்சிறந்த ஒரு நீள்கவிதை என்பேன். ஒரு பெண் தனது காதல் நினைவுகளை முப்பது வருடங்களுக்குப் பிறகு அதே கடந்தகால உணர்ச்சிக் கொந்தளிப்புடனும் நிகழ்கால நிதானத்துடனும் நினைவு கூர்ந்த புனைவம்சம் கூடிய காதல் கதை அது. பலருக்கு அந்தக் கட்டுரை குறித்து வேறுபட்ட அபிப்ராய பேதங்கள் இருப்பினும் அதில் வெளிப்பட்டிருக்கும் முதிர்ச்சி கூடிய அனுபவங்கள், உணர்ச்சி நிலைகள், ஒரு பெண்ணுடன் அல்லது ஆணுடன் காதல் உறவைப் பேண விரும்புபவர்களுக்கான நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்பது என் அபிப்ராயம்.
எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் எனக்கும் நேரடிப் பழக்கமில்லை. ஆனால் மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ் அவர்களுடனான நட்பும் அதைத் தொடர்ந்து அவர் மொழிபெயர்ப்பில் வெளியான ஆண்டன் செக்காவ் புத்தகமும், எம் வாழ்வில் மிக முக்கியமான இரு நிகழ்வுகள். மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ் சாரின் மேலப்புத்தேரி வாடகை வீட்டில் எங்களுக்கு திருமணம் ஆன பின் நாங்கள் முதலில் சென்றது எழுத்தாளர் சுந்தராசாமி சாரின் வீட்டுக்கு. பின்னர் அங்கிருந்து எழுத்தாளர் ஜெயமோகன் வீட்டுக்குச் சென்றோம். அந்த நினைவுகளைக் கொஞ்சம் எழுதிப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.
2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் கொச்சியிலிருந்து வேலை மாற்றலாகி சென்னைக்கு
வந்தேன். அப்போது எனக்கு அ.முத்துலிங்கம் எழுதிய, ‘அங்க இப்ப என்ன நேரம்?’ கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும் நல்வாய்ப்பு கிட்டியது. அந்தத் தொகுப்பில் செகாவின், ‘வேட்டைக்காரன்’ சிறுகதையின் மொழிபெயர்ப்பு சுருக்கத்தை வாசித்த பின்புதான் அந்த முழுக்கதையை தமிழில் படிக்க வேண்டும் என்கிற ஆவல் மேலோங்கியது. ‘வேட்டைக்காரன்’ கதையின் நுட்பங்களை
அ. முத்துலிங்கம் அங்குலம் அங்குலமாக விவரித்திருப்பதை மீண்டும் மீண்டும் வாசித்தபோது நாம் ஏன் செகாவின் கதைகளை மொழிபெயர்த்து நூலாகக் கொண்டுவரக் கூடாது என்ற எண்ணம் உறுதிபடத் தொடங்கியது.
அதன்பிறகான சில நாட்களில் நண்பர் மாமல்லன் கார்த்தி எனக்குப் பரிசளித்த சுந்தர ராமசாமியின், ‘விரிவும் ஆழமும் தேடி’, ‘காற்றில் கலந்த பேராசை’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளை தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. தொகுப்பில் சு.ரா தனக்கும் மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ் அவர்களுக்குமான நட்பைச் சொல்லும் கட்டுரையை வாசித்த பின்பு எம்.எஸ் என்கிற சித்திரம் எனது கற்பனையில் மெல்லத் துலங்கி வந்தது. சு.ராவை புகைப்படங்களில், பின்னட்டை ஓவியங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் எம்.எஸ் எப்படி இருப்பார் என அறியும் ஆவல் மிகுந்தது. என் கற்பனை எனக்களித்த சித்திரம் எனக்குப் போதுமானதாக இல்லை. அப்படியான ஒரு தருணத்தில்தான் நாம் ஏன், எம்.எஸ் அவர்களின் மொழிபெயர்ப்பில் செகாவ் கதைகளை தமிழில் கொண்டுவரக்கூடாது என்ற எண்ணம் ஒரு மின்னல் போல எனக்குள் ஒளிர்ந்தது. அதை விரைந்து செயல்படுத்த என் ஆழ்மனம் கட்டளையிட்டது. அதற்கான வழிமுறைகள் பின்னர் தானே என்னை வந்தடைந்தது.
காலச்சுவடு அலுவலகத்துக்கு தொலைபேசி செய்து எம்.எஸ் அவர்களின் தொடர்பு எண் வேண்டும் எனக் கேட்டேன். பலமுறை தொடர்ந்த முயற்சிக்குப் பிறகு எம்.எஸ் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எளிய, உறுத்தாத வார்த்தைகளை சன்னமாகப் பேசும் எம்.எஸ் என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். அவர் மொழிபெயர்த்ததில் எந்தெந்தக் கதைகளை வாசித்திருக்கிறீர்கள் என என்னிடம் கேட்டார். நான் எனக்குப் பிடித்த என்.எஸ்.மாதவன் அவர்களின் கதையான, ‘ஹிக்விட்டா’ கதையைப் பற்றி பேசினேன். அந்த முதல் பேச்சிலேயே நான் அவரிடம் நேரடியாகக் கேட்டேன். “ஸார், ஆண்டன் செகாவ் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தரமுடியுமா?” என்று. அவர் கொஞ்சம் யோசித்து, “பார்க்கலாம் சரவணன்” என்றார்.
அதன்பிறகு நான்கைந்து தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு “சரி, செகாவ் கதைகளின் ஆங்கில மூலத்தை அனுப்பி வையுங்கள்” என்றார். நானும் அனுப்பி வைத்தேன். ஒவ்வொரு கதைகளாக மொழிபெயர்த்து தபாலில் அனுப்பி வைப்பார். அதை தட்டச்சு செய்து மீண்டும் அவருக்கு அனுப்பி வைப்பேன். அதில் பிழை திருத்தங்கள் செய்து மீண்டும் எனக்கு அனுப்பி வைப்பார். இப்படியே தொகுப்பின் எல்லாக் கதைகளையும் மொழிபெயர்த்து பிழைத்திருத்தம் செய்து முடித்த பின் அச்சுக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன்.
ஒருநாள் திடீரென்று எம்.எஸ் சார் எனக்கு போன் செய்தார். “உங்களால இந்தத் தொகுப்பை சரியா கொண்டுவர முடியுமா?, நாம வேற யார்கிட்டயாவது கொடுத்திடலாமா?” என்று கேட்டார். நான் உள்ளே எழுந்த பதற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,“இல்ல ஸார், இந்தத் தொகுப்பை நல்ல முறையில் அச்சிட்டு கொண்டுவரலாம். என்னால முடியும்” என்று உறுதிபடச் சொன்னேன். ‘இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் உன் அடையாளத்தைத் தவறவிடுவது போலாகிவிடும்’ என்று என் உள்ளுணர்வு உறுதியாய் சொன்னது. எனவே எதன் பொருட்டும் அந்தப் புத்தகத்தை வேறொருவருக்குக் கொடுக்க நான் தயாராக இல்லை.
புத்தகம் அச்சாகி வந்து 2012 புத்தகக் கண்காட்சியில் பெரும் கவனத்தைப் பெற்றது. எம்.எஸ் புத்தக வெளியீட்டுக்கு வந்தார். எழுத்தாளர் பிரபஞ்சன் மிகச் சிறப்பான ஒரு உரையைத் தந்து வெளியீட்டை மறக்கவியலாததாக ஆக்கினார். வெளியீடு முடிந்த பின் எம்.எஸ் என்னிடம் புத்தகத்தில் தட்டச்சு பெ.மீரா என்று உள்ளதே யார் அந்தப் பெண் என்று கேட்டார். நான் மீராவை அறிமுகப்படுத்தினேன். மீரா எம்.எஸ் ஸாரிடம் ஆசீர்வாதம் வாங்கினார். ஆகவே நானும் எம்.எஸ் அவர்களின் பாதம் தொட்டு வணங்கினேன். “ரெண்டு பேரும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருங்கோ” என்று மனமார வாழ்த்தினார். நானும் மீராவும் கொஞ்சம் திடுக்கிட்டாலும் எதிர்பாராமல் கிடைத்த அந்த வாழ்த்தை ஏற்றுக்கொண்டோம்.
செகாவ் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு மீராவுக்கு என் மீது ஒரு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். திருமணம் பற்றிய பேச்சு வந்தது. நண்பன் மாயன் இதுதான் திருமணம் செய்ய வேண்டிய நேரம் என்று உறுதியாய் சொன்னான். பின்னர் அவனே சொன்ன யோசனைதான் எம்.எஸ் சாரிடம் கேட்டுப் பார், அவர் தலைமையில் அவர் வீட்டிலேயே திருமணத்தை எளிமையாக நடத்திக்கொள்ளலாம் என்பது. நான் எம்.எஸ் சாரிடம் இது பற்றி போனில் கேட்டேன். அவர் எனக்கு யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றார். பின்னர் ஆறுமாத காலத்துக்குப் பிறகு என்னிடமும் மீராவிடமும் தனித்தனியாகப் பேசினார். பின்னர் அவர் வீட்டில் எளிமையான முறையில் திருமணம் என்பது முடிவாயிற்று. நான், மீரா, மாயன், சாந்தி, கவின், நண்பர்கள் மெய்யருள், ஆவணப்பட இயக்குநர் குமரன், தம்பி சித்திக் என எல்லோரும் நாகர்கோயில் சென்று ஹோட்டலில் தங்கினோம். அடுத்த நாள் எம்.எஸ் ஸாரின் வீட்டை எளிமையான அலங்காரங்கள் செய்தோம். மிகக் குறைந்த நண்பர்களுடனும் ஏற்பாடுகளுடனும் எங்கள் திருமணம் எம்.எஸ் ஸார் முன்னிலையில் நண்பர்கள் ஆளுக்கொரு திருக்குறள் வாசிக்க இனிதே நடந்தேறியது.
அதன்பிறகான இரண்டுநாட்கள் எங்களால் மறக்க முடியாத நாட்கள். நாங்கள் இருவரும் எம்.எஸ் சாருடனும் அம்மாவுடனும் இருந்தோம். திருமணம் முடிந்தவுடன் எங்கே போகலாம் என்று எம்.எஸ் எங்களிடம் கேட்டார். நான் சு.ரா அவர்களின் வீட்டுக்குப் போகலாம் என்றேன். கொஞ்சம் யோசித்தவர், “சரி” என்றார். “முதலில் சு.ரா வீட்டுக்குப் போவோம் பிறகு ஜெயமோகன் வீட்டுக்குப் போகலாம்” என்றார். அவர் விருப்பத்தை மீற முடியாமல் சரி என்றேன்.
முதலில் சுந்தர ராமசாமி ஸாரின் வீட்டுக்குப் போனோம். என் மிகப் பெரிய ஆதர்சம் சு.ரா அவர்கள். அவரின், ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலும், ‘விரிவும் ஆழமும் தேடி’, ‘காற்றில் கலந்த பேராசை’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் என்னுள் ஆழமான பாதிப்பை உண்டாக்கிய புத்தகங்கள் என உறுதியாய் சொல்ல முடியும்.
என் வாழ்க்கைப் போக்கினை, சென்சிபிலிட்டியை தீர்மானித்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி. திருமணத்துக்குப் பின் முதன்முதலாக அவர் வீட்டுக்குச் சென்றது அவரது ஆசீர்வாதம் போலவே இருந்தது. அடுத்ததாக ஜெயமோகனின் வீட்டுக்குச் சென்றோம். அப்போது அவர் வீட்டில் இல்லை. அருண்மொழி மேடம் மற்றும் பிள்ளைகளைச் சந்தித்துவிட்டு காஃபி குடித்துவிட்டு வீடு திரும்பினோம். எழுத்தாளர் அசோகமித்திரன் புகைப்படம் மட்டுமே ஜெயமோகன் வீட்டில் சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்தது. அது இம்மானுட வாழ்வில் ஒரு எழுத்தாளனின் இடம் என்ன என்பதை எனக்கு தெளிவாய் விளக்கிச் சொன்னது.
அந்த இரண்டு நாட்கள் எம்.எஸ் சாரின் வால்பிடித்து நடந்தோம். சுசீந்திரம் கோயிலுக்கு, கன்னியாகுமரிக்கு என அமைந்த பயணங்கள் எங்களுக்கிடையேயான இடைவெளியை இல்லாமலாக்கின. அவர் அவரது தனிப்பட்ட வாழ்வின் துயரங்களை, நெருக்கடிகளை, இழப்புகளை எல்லாவற்றையும் மீறின சந்தோஷத் தருணங்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டார். மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று அவர் கன்னியாகுமாரி அன்னையை தரிசிக்கச் செல்வதும் அதன் பின்னாலிருக்கும் அவரது காதல் கதையையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் வாழ்வனுபவங்களே எங்களுக்கு அவர் அளித்த சீதனம். எம்.எஸ் – எங்கள் நீளும் தலைமுறை கடந்தும் நிலைத்து நிற்கும் மாமனிதர். அவருக்கு எங்களின் அன்பான வணங்கங்களும் நன்றியும்.
தொடரும்…