இணைய இதழ்இணைய இதழ் 49சிறார் இலக்கியம்

சயின்டிஸ்ட் ஆதவன்;5 – செளமியா ரெட் 

சிறார் தொடர் | வாசகசாலை

“டொமேடோ இல்ல ஸ்டொமாடா”

ஆதவன், மித்ரன், மருதாணி மூவரும் அமுதா வீட்டுக்குச் சென்றனர். அமுதா தன்னுடைய செடிகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

மருதாணி: என்னக்கா. இவ்ளோ செடி இருக்கு உங்க வீட்டுல.

அமுதா: எனக்குதான் செடின்னா ரொம்ப புடிக்குமே!

மருதாணி: அப்டியாக்கா! இப்ப தானே உங்க வீட்ட நான் பாக்கறேன். 

அமுதா: ம்ம்ம்…

மித்ரன்: அது சரி. செடி புடிக்கும்னு சொன்னது புரிஞ்சது. செடி கூட உக்காந்து என்னவோ பேசிட்டு இருந்ததுதான் புரியல.

அமுதா: செடி கூட பேசினா, செடி நல்லா வளருமாம். உனக்குத் தெரியாதா?

மருதாணி: நெஜமாவாக்கா?

மித்ரன்: சும்மா சொல்றா. அதெல்லாம் நம்பாத.

அமுதா: ஹே நிஜமா தான்டா. நீ வேணும்னா யார்கிட்டயாவது கேட்டுப் பாரு.

மித்ரன்: ம்ம்ம்…

ஆதவன்: ஆமா. செடி எப்படி சாப்பாடு சாப்பிடும்?

அமுதா: நாம செடிக்கு தண்ணி ஊத்துவோம்ல. அதுதான் அதுக்கு சாப்பாடு. அதோட வேர் வழியா உறிஞ்சிக்கும்.

ஆதவன்: தண்ணில எல்லா சத்தும் இருக்குமா?

அமுதா: தண்ணில மட்டுமில்ல மண்ணுலயும் இருக்கும்.

மருதாணி: அப்போ மண்ணுதான் அதோட சாப்பாடா?

அமுதா: இல்ல. க்ளுக்கோஸ்தான் அதோட சாப்பாடு.

ஆதவன்: புரியற மாதிரி சொல்லு அமுதா. 

மருதாணி: ஏ, வாங்கப்பா எல்லாரும் விளையாடப் போலாம்.

ஆதவன்: இரு மருதாணி. இத கொஞ்சம் புரியிற மாதிரி பேசிட்டுப் போலாம்.

மித்ரன்: கொஞ்ச நேரம் விளையாடிட்டு வந்து பேசலாமே…

விளையாட்டு அணி பலம் பெற ஆரம்பித்தவுடன், எல்லோரும் விளையாடச் சென்றனர். ஆடி முடித்து, எதிரில் இருந்த வேப்ப மரத்து அடியில் இளைப்பாற அமர்ந்தனர். 

ஆதவன்: அமுதா. இப்போ சொல்லு. உண்மையில செடியோட சாப்பாடு என்ன?

அமுதா: உண்மையாவே க்ளுக்கோஸ்தான் அதோட சாப்பாடு. அது தயாராகறதுக்குதான் தண்ணி, காத்து, சூரிய வெளிச்சம் எல்லாம் தேவைப்படும்.

ஆதவன்: நாம சுவாசிக்கற மாதிரியே செடியும் சுவாசிக்குமா?

அமுதா: ஆமாடா. ஆனா, நாம ஆக்சிஜன உள்ள இழுத்து, கார்பன் டை ஆக்சைடை வெளிய விடுவோம். செடிகள் அத அப்படியே மாத்தி பண்ணும்.

ஆதவன்: மாத்தின்னா? கார்பன் டை ஆக்சைடை உள்ள இழுத்து ஆக்சிஜன வெளிய விட்ருமா?

அமுதா: ஆமா.

ஆதவன்: நிஜமாவா?

அமுதா: உண்மையாவே அதான். கார்பன் டை ஆக்சைடை உள்ள இழுத்து ஆக்சிஜன வெளிய விட்ரும். நமக்கு மூக்கு மாதிரி அதுக்கு ‘ஸ்டொமாடா’ அப்டினு ஒரு பாகம் இருக்கு.

மருதாணி: டொமேடோனா தக்காளிதானே. அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?

அமுதா: ஹா ஹா… டொமேடோ இல்ல மருதாணி. ஸ்டொமாடா. இலைகள்ல இருக்கிற குட்டி ஓட்டைகளுக்குப் பேரு அது.

மித்ரன்: இலையில ஓட்ட இருந்தா பூச்சி வச்சிருச்சுனுதான் அம்மா சொல்லுவாங்க.

அமுதா: இந்த ஓட்டை கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு சின்னதா இருக்கும். அதுலதான் செடி மூச்சு விடும்.

மித்ரன்: ஓ…!

அமுதா: ம்ம் ஆமா..

ஆதவன் அம்மா எல்லோரையும் கூப்பிட்டார். 

ஆ.அம்மா: எவ்ளோ நேரம்டா. மொட்ட வெயில்ல உக்காந்துட்டு இருப்பீங்க. தண்ணி குடிச்சுட்டு போயி விளையாடுங்க.

எல்லோரும் தண்ணீர் குடிக்க வீட்டிற்குள் சென்றனர்.

ஆதவன்: அம்மா… இப்பதான் நாங்க செடி எப்படி தண்ணி குடிக்கிதுனு பேசிட்டு இருந்தோம்.

ஆ.அம்மா: ம்ம்ம்.. மறக்காம நீங்களும் நிறைய தண்ணி குடிக்கனும் டா. வெயில் அதிகமா இருக்குதில்ல.

ஆதவன்: சரிம்மா..

குடித்த பின் மீண்டும் கொஞ்ச நேரம் விளையாட ஆரம்பித்தனர். ஓடி ஓய்ந்த பின், மீண்டும் செடி பற்றிய விவாதம் தொடங்கியது.

ஆதவன்: அந்த க்ளுக்கோஸ் எப்படி வருதுனு சொல்லலயே.

அமுதா: ஆங்… செடியோட இலைகள்ல பச்சையம்னு ஒன்னு இருக்கு. அது வெளியில இருந்து வெயில எடுத்துக்கும்.

காத்து அதாவது கார்பன் டை ஆக்சைடு, தண்ணி, சூரிய வெளிச்சம் இதெல்லாம் பச்சையத்தோட சேரும் போது… ப்பூபூபூபூம்ம்ம்ம்……..

வெடிப்பது போல சத்தம் போட்டாள் அமுதா. எல்லோரும் பயந்து விட்டனர். அமுதா சிரித்தாள். கொஞ்ச நேரம் சிரித்து ஓடி விளையாடினர்.

அமுதா: எல்லாம் சேரும் போது, க்ளுக்கோஸ் உருவாகும். அதுதான் செடியோட சாப்பாடு. அதிகமா சாப்பாடு இருந்தா நம்ம உடம்புல கொழுப்பா சேருதுல்ல. அது போல, செடிக்கு அதிக சாப்பாடு இருந்தா அது ஸ்டார்ச்சா சேர்த்து வச்சுக்கும்.

ஆதவன்: ம்ம்… சூப்பர்.

மித்ரன்: சரி. சாப்பாடு கிடைச்சா செடி வளரும். அப்பறம் ஏன் நீ அதுகிட்ட போய் பேசற? ஹாஹா.

அமுதா: செடிகளால ஜாலியா ஓடியாடி விளையாட முடியாது. அதனாலதான் பேசி செடிகள  ஜாலி பண்ணேன்.

மித்ரன்: பயங்கரமான ஆளு நீ அமுதா!

எல்லோரும் சிரித்தனர்.

தொடரும்…

sowmyamanobala@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button