1941 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிட்டிசன் கேன்’ திரைப்படம் சினிமா ஆர்வலர்களாலும் ரசிகர்களாலும் இயக்குநர்களாலும் இன்றுவரை கொண்டாடப்படும் படங்களில் ஒன்று. ஆர்ஸன் வெல்ஸ் இயக்கிய இந்தத் திரைப்படம் உலகளாவிய அளவில் முக்கியமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. இந்தத் திரைப்படத்தை எடுக்கும்போது ஆர்ஸன் வெல்ஸ்-ன் வயது 26 தான். இளம் வயதிலேயே ஆர்ஸன் வெல்ஸ் -ஐ புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற இந்தத் திரைப்படம் இன்றுவரை விமர்சகர்களால் உலகில் எடுக்கப்பட்ட தலைசிறந்த பத்து படங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டு வருகிறது. எனினும் இந்தக் கட்டுரை ‘சிட்டிஸன் கேன்’ திரைப் படத்தைப் பற்றியது அல்லது. மாறாக தன் இளவயதில் புகழின் உச்சிக்குச் சென்ற ஆர்ஸன் வெல்ஸ்-ன் வாழ்க்கையில் அதன்பிறகு என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றியது.
ஒரு அங்குலம் முன்னேறினால் ஐந்தங்குலம் பின்னோக்கி சரிவது ஆர்ஸன் வெல்ஸ்-ன் வாழ்க்கை எனலாம். அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையை இவ்விதம் பகுத்துப் பார்ப்பது ஒரு படைப்பாளனின் வீழ்ச்சியை அல்லது ஒரு சீரிய படைப்பாளனை ஹாலிவுட் ஸ்டுடியோ அமைப்பு எவ்விதம் நடத்தியது அல்லது திட்டமிட்டு பழிவாங்கியது என்பதைப் பற்றியதாக விரியும். மேலும் படைப்பு சார்ந்து மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்வு சார்ந்த தத்துவ நோக்கில் பார்க்கமுடியுமெனில் வெற்றி தோல்விக்கு அப்பால் ஒரு மனிதன் எதிர்கொள்ள நேரிடும் அலைக்கழிப்பையும், வீழ்ச்சியையும், அவமானங்களையும், அதை மீற எத்தனிக்கும் மனித விழைவையும் ஒரு பரந்துபட்ட அறிவின் கண்கொண்டு மனித வாழ்வை அறிந்து கொள்ளும் முயற்சியாக நாம் காண முடியும்.
ஆர்ஸன் வெல்ஸ் 1915-ஆம் ஆண்டு அமெரிக்காவின் விஸ்கன்ஸின் மாகாணத்தில் கேனோஷா நகரத்தில் பிறந்தார். அப்பா ரிச்சர்ட் வெல்ஸ் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர். அம்மா பியானோ கலைஞர். தோல்வியடைந்த திருமண வாழ்க்கை காரணமாக வெல்ஸின் பெற்றோர்கள் பிரிந்து வாழ்ந்தார்கள். ஆர்ஸன் வெல்ஸ் அம்மாவிடம் வளர்ந்தார். ஆனால், வெல்ஸின் அம்மா மிக இளம் வயதிலேயே மரணமுற்றார். பின்னர் வெல்ஸ், அம்மாவின் நண்பரின் கண்காணிப்பில் வளர்ந்தார். இளம் வயதில் படிப்பிலும், இலக்கிய வாசிப்பிலும் மேஜிக்கை கற்றுக் கொள்வதிலும் வெல்ஸின் கவனம் இருந்தது. பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு கல்வி உதவித் தொகை அவருக்கு கிடைத்தது. ஆனால், வெல்ஸ்-ன் பதினாறாம் வயதில் அவரது வளர்ப்புத் தந்தை அயர்லாந்துக்கு சுற்றுலாவுக்கு அனுப்பினார். அந்தப் பயணத்தின் போதுதான் டப்ளின் நகரத்தில் வெல்ஸ்-க்கு நாடகக் குழுக்களோடு பரிச்சயம் ஏற்பட்டது. டப்ளினில் நாடக நடிகர் தேர்வுக்குச் சென்ற வெல்ஸ் தன்னை ஒரு பிராட்வே நடிகர் என்று பொய் சொல்கிறார். தேர்வுக்குழுவினர் அது பொய்யென்று அறிந்து கொண்டாலும் நாடகத்தின் மீது இளம் வயது வெல்ஸுக்கு இருக்கும் ஈர்ப்பை பார்த்து நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதன்பிறகு டப்ளின் நகரத்தில் சிறியதும் பெரியதுமாக நாடகங்களில் நடிக்கிறார் வெல்ஸ்.
அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னர், நியூயார்க்கில் நாடகக் குழுக்களில் சேர்ந்து வெல்ஸ் பணியாற்றினார். பெர்டோல் பிரெக்டின் நாடகங்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட அவர் கிளாஸிக் நாடகங்களை நவீன வடிவத்தில் மேடையேற்றினார். 1937-ஆம் ஆண்டு தனது சொந்த நாடகத் தயாரிப்பு நிறுவனத்தை வெல்ஸ் தொடங்கினார். தன் இருபத்தோராவது வயதில் ஷேக்ஸ்பியரின் ‘மெகபத்’ நாடகத்தை முழுக்க முழுக்க ஆப்ஃரோ அமெரிக்க கறுப்பின நடிகர்களைக் கொண்டு தயாரித்தார். அந்த நாடகம் மிகப்பரவலான கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. அதே நேரத்தில் நிறவெறி பற்று கொண்ட அமெரிக்கர்களிடையே ஒரு வெறுப்பையும் சம்பாதித்துக் கொடுத்தது. ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலும் ரேடியோ நாடகங்களிலும் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது குறும்படத்தை எடுத்து முடிக்கிறார். நாடகத் தயாரிப்பிலும் நடிப்பிலும் கவனத்தைப் பெற்ற ஆர்ஸன் வெல்ஸ் மிக இளம் வயதிலேயே டைம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடம் பெறும் அளவுக்கு புகழ் பெற்றிருந்தார்.
நாடக உலகில் அவருக்கு கிடைத்த புகழ் வெளிச்சம் அவருக்கான ஹாலிவுட் வாசலை திறந்துவைக்கிறது. ஆரம்பத்தில் நிறைய வாய்ப்புகளை வெல்ஸ் நிராகரித்தாலும் RKO படத்தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டு படங்களை இயக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் வெல்ஸ். அப்படி வெல்ஸ் முதலில் இயக்கிய படம்தான் உலகெங்கிலும் இன்றுவரை சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘சிட்டிஸன் கேன்’ திரைப்படம். முதல் படத்திலேயே வெல்ஸுக்கும் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஒத்துப்போகவில்லை எனினும் தனக்குப் பிடித்த மாதிரி படத்தை எடுத்து முடித்தார். சிறந்த திரைக்கதையும் சிறப்பான கனவுத்தன்மை மிகுந்த ஒளிப்பதிவும் சிக்கலான கதை சொல்லல் முறையும் கொண்ட ‘சிட்டிஸன் கேன்’ இன்றுவரை உலகளாவிய அளவில் சினிமா பார்வையாளர்களையும், படைப்பாளர்களையும் ஒருசேர தீவிர தாக்கம் செலுத்தும் படங்களில் ஒன்றாக இருந்துவருகிறது.
‘சிட்டிஸன் கேன்’ திரைப்படம் அமெரிக்காவில் வெளியானபோது சரியான திரையரங்குகள் கிடைக்கவில்லை. பெரும்பாலான பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அந்தப்படத்தை வெளியிட முன்வரவில்லை. அந்தப்படத்தை வெளிவராமல் முடக்க தீவிர வேலை நடந்தது. ஆகவே தயாரிப்பு நிறுவனத்தால் பல முறை, பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. [1941 காலகட்டத்தில் பெரும்பாலான திரையரங்குகள் பெரிய ஸ்டூடியோக்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. மேலும் வெல்ஸ் ஒரு நிறவெறி எதிர்ப்பு, இடதுசாரி சார்புடையவர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.] எனவே தயாரிப்பு நிறுவனம் குறைவான திரையரங்குகளில் ‘சிட்டிஸன் கேன்’ திரைப்படத்தை ஒரு முக்கியத்துவம் குறைந்த திரைப்படத்தைப் போல வெளியிட்டது. வெல்ஸின் இளம் வயது நாடகப் புகழ், மேதமை எல்லாமும் சேர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக வெளியீட்டுக்கு முன் ‘சிட்டிஸன் கேன்’ இருந்தது. ஆனால், வெளியானபின் வணிக ரீதியாக பெரும் தோல்வியைத் தழுவியது.
அமெரிக்காவில் வெளியீட்டின்போது போதிய கவனம் பெறாமல் புறக்கணிக்கப்பட்ட இப்படம் ஐரோப்பிய இயக்குனர்கள், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக பிரான்சின் புதிய அலை [New Wave] சினிமாவின் தொடக்கப்புள்ளிகளாக கருதப்படும் ஆந்த்ரே பஸின் மற்றும் பிரான்ஸிஸ் த்ரூஃபோ ஆகியோர் பிரான்சில் படத்தை தொடர்ச்சியாகத் திரையிடவும் படம் பற்றிய விவாதங்களையும் முன்னெடுக்கவும் செய்தார்கள். ”சிட்டிஸன் கேன் திரைப்படம் எங்கள் தலைமுறை இயக்குநர்களுக்கு ஒரு சரியான திசை காட்டி. நாங்கள் போக வேண்டிய பாதையை எங்களுக்கு ஏற்படுத்தித் தந்தவர் ஆர்ஸன் வெல்ஸ்” என்று பிரான்ஸிஸ் த்ரூஃபோ கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
”சிட்டிஸன் கேன்” திரைப்படத்தை காலத்துக்கு முந்தி [Ahead of time] வெளியான திரைப்படம் எனலாம். வெளியானபோது படம் புறக்கணிப்பட்டாலும் 1956-ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்காவில் மறு வெளியீடு செய்யப்பட்டது. Sight & Sound பத்திரிகையின் ஒவ்வெரு பத்தாண்டுக்கும் நிகழ்த்தப்படும் சிறந்த படங்கள் தேர்வில் ”சிட்டிஸன் கேன்” படம் முதல் ஐந்துக்குள் அல்லது பத்து இடங்களுக்குள் கட்டாயம் இடம்பெறும். மார்ட்டின் ஸ்கார்சேஸே ‘மில்லியன் டாலர் திரைப்படம்’ என்று ‘சிட்டிஸன் கேன்’ படத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அவருடைய சிறந்த படங்கள் வரிசையில் சிட்டிஸன் கேன்-க்கு எப்போதும் இடமுண்டு. இவ்வளவு புகழ் பெற்றாலும் ஆர்ஸன் வெல்ஸின் சினிமா வாழ்க்கை சீரானதாக அல்லது ஏற்றம் மிகுந்ததாக இல்லை. அவர் படங்களின் தொடர் தோல்விகள், ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாமல் கைவிடப்பட்ட படங்கள் [கிட்டத்தட்ட அவ்வாறு கைவிடப்பட்ட படங்களின் எண்ணிக்கை இருபதுக்கு மேல் இருக்கும்], அமெரிக்க படத்தயாரிப்பு நிறுவனங்களுடனான அவருடைய உரசல் போக்கு என எல்லாமும் சேர்ந்து அவர் அடைய வேண்டிய இலக்கை, புகழை அடைய விடாமல் செய்தன எனலாம்.
ஆர்ஸன் வெல்ஸ்ஸை ஒரு படைப்பாளியாகப் புரிந்துகொள்ள, அவருக்கும் அவரை நடிக்கக் கேட்டு வந்த இளம் இயக்குநருக்கும் இடையே நிகழ்ந்த உடையாடலை நாம் பார்க்கலாம். வெல்ஸ், தன்னை படத்தில் நடிக்கக் கேட்டு வந்த இயக்குநரிடம் ”திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டுவிட்டதா, எனக்கு வாசிக்க கொடு’’ என்று கேட்கிறார். இயக்குநர் தன்னிடம் திரைக்கதை இல்லை என்கிறார். ”நீ ஒரு புதிய இயக்குநர், இதுதான் உன் முதல் படம், முழுமையான திரைக்கதையும் கைவசம் இல்லை, உன்னை நம்பி நடிக்க நான் தயாரில்லை’’ என்று சொல்கிறார் வெல்ஸ். அந்தப் புதிய இயக்குநரோ ”சிட்டிஸன் கேன் திரைப்படம் உங்கள் முதல் படம், அப்போது நீங்கள் சினிமாவுக்கு ஒரு புதிய இயக்குனர்தானே, அப்படித்தான் இதுவும்’’ என்று மடக்குகிறார். ”சரி, என் கதாபாத்திரத்தை பற்றிச் சொல்’’ என்று வெல்ஸ் கேட்க ”நீங்கள் ஒரு மேஜிக் செய்பவர்’’ என்கிறார். ”அப்படியா, இயல்பில் நான் ஒரு அமெச்சூர் மாஜிசியன்தான், ஆனால், இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை’’ என்கிறார் வெல்ஸ். ஆனால், பிறகு நடிக்க ஒப்புக்கொள்கிறார்.
படப்பிடிப்பு தொடங்கிய பின் ஒருநாள் இயக்குநருடன் மதிய உணவின்போது பேச்சு கொடுக்கிறார்.. ”நீ ஒரு திமிர் பிடித்த இளைய இயக்குநர், உன் திமிரால் என்னை கட்டாயப்படுத்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்தாய்.. படப்பிடிப்பு எப்படி போய்க்கொண்டி ருக்கிறது?” என்று கேட்க, இயக்குநர் சோர்வாக, ”எதுவும் திட்டமிட்டபடி சரியாக நடக்கவில்லை. நடிகர் உள்ளிட்ட குழுவினர் என்னை வெறுக்கிறார்கள். நான் சொல்வதைக் கேட்பதில்லை. இந்தக் காட்சிகள் திரைக்கதையில் இல்லை, எங்களால் நடிக்க முடியாது.” என்று சொல்கிறார்கள் என்று புலம்ப, ”திரைக்கதையில் இல்லாததை படமாக்கும் போது நடிகர்களிடம் பொய் சொல்ல வேண்டும். மீண்டும் அந்தக் காட்சியை எடுக்கும்போது அது ஒரு ‘கனவுக் காட்சி’ என்று அவர்களிடம் பொய் சொல், அவர்கள் காட்சியை நடித்துக் கொடுப்பார்கள்” என்கிறார் வெல்ஸ். மறுநாள் படப்பிடிப்பில் அந்தப் புதிய இயக்குநர் தனது குழுவினரிடம் இன்றைக்கு நான் எடுக்கப்போவது கனவுக் காட்சி என்று பொய் சொல்ல, எதிர்ப்பேதுமில்லாமல் நடிகர்கள் நடித்துக் கொடுக்கிறார்கள். மெல்ல மெல்ல நடிகர்களின் ஒத்துழைப்பு அந்த புதிய இயக்குநருக்கு கிடக்கிறது. மொத்த படப்பிடிப்பின் போதும் இயக்குநர் சோர்வடையும் போதெல்லாம் வெல்ஸ் அந்த இயக்குநரை ஊக்கப்படுத்தி வேலை செய்யச் சொல்கிறார். ” உன் படத்தை விருப்பத்துடன், உனக்குப் பிடித்த மாதிரி உருவாக்கு, தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதே, அந்த சமரசம் வாழ்நாள் முழுவதும் உன்னை துரத்தி துரத்தி வேட்டையாடிக் கொண்டேயிருக்கும்.” வெல்ஸ் அந்த புதிய இயக்குநருக்கு சொன்ன வார்த்தைகள் இங்கே சினிமாவில் வேலை செய்பவர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான். வெல்ஸை ஒரு இயக்குநராக, படைப்பு சார்ந்து உள்ளார்ந்த அக்கறை கொண்ட படைப்பாளியாகப் புரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி பொருத்தமான ஒன்று.
‘சிட்டிஸன் கேன்’ வெளியாகி பதினைந்து வருடங்களுக்குப் பிறகு Touch of Evil திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு ஆர்சன் வெல்ஸ்க்கு கிடைக்கிறது. ஹாலிவுட்டில் அது அவரது மறு வருகை என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு முடிந்தவுடன் அவரது மற்ற படங்களைப் போலவே Touch of Evil திரைப்படத்துக்கு ஏற்பட்ட அநீதி பற்றியும், அதனால் ஒரு படைப்பாளியாக மேலதிக பாதிப்புக்குள்ளான ஆர்ஸன் வெல்ஸின் சூழல் நெருக்கடி பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.
யுனிவர்சல் ஸ்டூடியோ, ஆர்சன் வெல்ஸை Touch of Evil திரைப்படத்தில் நடிக்க வைக்கத்தான் முதலில் அணுகியது. கிட்டத்தட்ட தனது சினிமா வாழ்க்கையின் இறங்கு முகத்தில் இருந்த வெல்ஸும் நடிக்கத் தயாராகத்தான் இருந்தார். Charlton Heston படத்தில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், ஸ்டுடியோ Charlton Heston – னிடம் ஆர்சன் வெல்ஸும் இந்தப் படத்தில் பிரதான அங்கம் வகிக்கிறார் எனச் சொல்ல அதை Charlton Heston ஆர்சன் வெல்ஸ்தான் படத்தை இயக்கப் போகிறார் என தவறாகப் புரிந்துகொள்கிறார். பின்னர் உண்மை தெரிந்தாலும் ஆர்சன் வெல்ஸ்தான் படத்தை இயக்கவேண்டும் என்று அவர் பிடிவாதமாக ஸ்டுடியோவை வற்புறுத்தியதால், வெல்ஸ் இயக்குநராகப் பணியாற்ற ஸ்டுடியோ ஒப்புக்கொள்கிறது. ஆனால், நடிப்பதற்கு மட்டுமே வெல்ஸுக்கு சம்பளம் தரப்பட்டது.
ஆனால், வெல்ஸ் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அப்போது உச்சத்தில் இருந்த நடிகர்களை ஒப்பந்தம் செய்தார். நடிகை ஜேனட் லே முதலில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் வெல்ஸ் அவரை சந்தித்துப் பேசி சம்மதிக்க வைத்தார். மெர்சிடஸ் கேம்பிரிட்ஜ், டெனிஸ் வீவேர், மார்லின் டீடரெச் என அப்போதைய முக்கியமான ஹாலிவுட் நடிகர்கள் வெல்ஸுக்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்கள்.
வெல்ஸ், Touch of Evil படப்பிடிப்பை நிறைய படப்பிடிப்பு ஒத்திகை [Rehearsal] செய்து தாமதாகத் தொடங்கினாலும் பன்னிரெண்டு பக்க திரைக்கதையை நான்கைந்து ஷாட்களில் கம்போஸ் செய்து படமாக்கி ஸ்டுடியோவை வியப்பில் ஆழ்த்தினார். யுனிவர்சல் ஸ்டுடியோவின் தயாரிப்பு பிரிவில் இருந்த ஆல்பர்ட் சக்ஸ்மித், வெல்சுக்கு தேவையான உதவிகளை செய்து தந்தார். வெல்சுக்கும், ஸஃக்ஸ்மித்-க்கும் இடையே நல்ல புரிதலும் நட்புறவும் இருந்தது. படப்பிடிப்பின்போது படத்தயாரிப்பு நிறுவனத்தின் தலையீடு இல்லாமல் ஆல்பர்ட் ஸஃக்ஸ்மித் பார்த்துக் கொண்டார். இதனால் வெல்ஸ் படைப்பூக்கத்துடன் வேலை செய்ய முடிந்தது.
திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கும் போது ஸஃக்ஸ்மித், எம் ஜி எம் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார். [Touch of Evil படத்தில் வெல்சுக்கு கட்டுப்பாடு இல்லாமல் போனதுக்கு இந்த மாற்றலும் ஒரு காரணம்.] மூன்று மாத கால அவகாசத்தில் படத்தின் எடிட் செய்யப்பட்ட முதல் உத்தேச பிரதியை [Rough cut] வெல்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பினார்.
ஆனால், அவர் அனுப்பிய உத்தேச வடிவம் ஸ்டுடியோவால் நிராகரிக்கப்பட்டது. வெல்ஸின் அனுமதியில்லாமல், தயாரிப்பு நிறுவனம் ஹாரி கெல்லர் என்னும் இயக்குநரை வைத்து கூடுதலாக காட்சிகளை படம் பிடித்து, தயாரிப்பு நிறுவனமே படத்தை எடிட் செய்து வெளியீட்டுக்குத் தயார் செய்தது. படம் 1958-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வணிக தோல்வியைத் தழுவியது.
தனது அனுமதியில்லாமல் எடிட் செய்யப்பட்ட படத்தை ஆர்ஸன் வெல்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. யுனிவர்சல் ஸ்டுடியோவுக்கு 58 பக்க குறிப்புக் கடிதம் [ MEMO] ஒன்றை தன் கைப்பட தட்டச்சு செய்து அவர் அனுப்பினார். அந்த நீண்ட குறிப்பில் அதிகமும் படம் எப்படி எடிட் செய்யப்பட வேண்டும் என்பதையும், காட்சிகளுக்கிடையே இருக்க வேண்டிய ஒத்திசைவு பற்றியும் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஆனால், படத்தயாரிப்பு நிறுவனம் எதையும் கண்டுகொள்ளவில்லை. வெல்ஸ் முழுமையாக படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அந்த விரிவான குறிப்பில், காட்சிகள் எழுதப்பட்ட நோக்கம், படப்பிடிப்பில் மேற்கொள்ளப்பட்ட படைப்பாக்க மாறுதல்கள், ஷாட்களின் காட்சிப்பூர்வ அடுக்குகள் [Editing pattern] பற்றிய குறிப்புகள், அவற்றுக்கிடையே இருக்கவேண்டிய ஒத்திசைவு [Rhythm] என எல்லாவற்றையும் விரிவாகக் குறிப்பிட்டுள்ள வெல்ஸ் ஒரு திரைப்படம் வெறுமனே கேமரா கொண்டு ஒளிப்பதிவு செய்யப்படுவது மட்டுமல்ல என்பதை தனது ஆணித்தரமான குறிப்பால் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கும், தனக்குப் பின்னர் வரப்போகும் படைப்பாளிகளுக்கும் அழியாத ஆவணம் ஒன்றின் மூலம் பதிவு செய்தார். இயக்குநர்கள் மட்டுமல்ல சினிமாவின் மீது பேரார்வம் கொண்ட எல்லாரும் வாசிக்க வேண்டிய குறிப்பு அது.
I
யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் எழுதிவிட்டாலும் அவர்கள் தன் வேண்டுகோ நிராகரித்துவிடுவார்கள் என்று நினைத்த வெல்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த Charlton Heston-க்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் ” எனது குறிப்புக் கடிதத்தில் படத்தின் எடிட்டிங்கில் மேற்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச செயல்முறைகளை குறிப்பிட்டுள்ளேன். எனினும் தயாரிப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் எனது கோரிக்கையை நிராகரித்துவிடுவார்கள் என்றே நான் அஞ்சுகிறேன். அவசரகதியில் படத்தை வெளியிட விரும்பும் அவர்களுக்குப் படம் பற்றிய தரத்தில் அக்கறையேதும் இருக்கப்போவதில்லை. ஆகவே எனது குறைந்தபட்ச வேண்டுகோள்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொன்னூறுகளின் தொடக்கத்தில் சினிமா விமர்சகர் ஜோனாதன் ரோசன்பாம், ஆர்ஸன் வெல்ஸின் படைப்பாக்க குறிப்பை பிரசுரம் செய்கிறார். அதன்பின் மீண்டும் Touch of Evil படத்தைப்பற்றிய பேச்சும் விவாதமும் மேலெழுந்து வருகிறது. அதே காலகட்டத்தில் தான் யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனம் Touch of Evil படத்தை மீளுருவாக்கம் [Film preservation and Restoration] செய்யும் பணியைத் தொடங்குகிறது.
நாற்பது வருடங்கள் கழித்து தயாரிப்பாளர் ரிக் ஸ்மிட்ளின் மற்றும் புகழ்பெற்ற படத்தொகுப்பாளர் வால்டர் முர்ச் [Walter Murch] இருவரும் சேர்ந்து Touch of Evil படத்தை எடிட் செய்யும் பணியில் இறங்கினார்கள். படம் கருப்பு வெள்ளை, பெரும்பாலும் இரவில் படம்பிடிக்கப்பட்டது. சரியான ஒலித்தரம், ஒளி நிழல் மாறுபாடு ஆகியவற்றை மீணடும் சரியாக திரையில் கொண்டுவர பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. வெல்ஸின் குறிப்புகளை முன்னெட்டாக வைத்துக்கொண்டு அந்தப்படத்தில் பணியாற்றியவர்களிடம் நிறையப் பேசி தகவல்கள் சேகரித்து படத்தை வெல்ஸ் விரும்பியவாறு எடிட் செய்து வெளியிட்டார்கள்.
யுனிவெர்சல் நிறுவனம் எடிட் செய்து வெளியிட்ட படமும் வெல்ஸின் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு வால்டர் முர்ச் எடிட் செய்த படமும் நமக்குப் பார்க்கக் கிடைக்கின்றன. இரண்டு பிரதிகளுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான படைப்பு வேறுபாடுகள் இருக்கின்றன. அதுவே ஒரு படத்தை வணிகப்பண்டமாக பார்க்கிறவர்களுக்கும், ஒரு படைப்பை பிரித்துப்பார்க்கவே முடியாத தன் வாழ்வின் ஒரு அங்கமாக பார்க்கும் படைப்பாளிக்கும் இடையேயான வேறுபாட்டை நமக்கு கட்டியம் கூறுபவையாக இருக்கின்றன.
நாற்பதுகளின் தொடக்கத்தில் ஹாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனங்களின் எதேச்சதிகாரப் போக்குக்கு எதிராக எழுந்த காத்திரமான படைப்புக் குரல் ஆர்ஸன் வெல்ஸினுடையது. அந்த கலகக் குரல் அவரது படைப்பு திமிரிலிருந்தும் இன்னும் நேர்மறையாக சொல்லப்போனால் தன் படைப்பு மீதான சுய நம்பிக்கையிலிருந்தும் எழுந்த ஒன்று.
அதனாலேயே எல்லாத் தடைளையும் மீறி ஆர்ஸன் வெல்ஸ் இன்றுவரை ஒரு முக்கியமான படைப்பாளியாக இருந்து வருகிறார். இனியும் இருக்கப் போகிறார்.
(தொடரும்)