
மீன் மாஃபியா
மெக்சிக்கோ கடற்கரைக்கு அருகில் உள்ள கலிஃபோர்னியா வளைகுடாவில் மட்டுமே காணப்படுகிற, ஓங்கில்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிறிய கடல் பாலூட்டி இது. இதன் பெயர் Vaquita. உலகிலேயே மிகச்சிறிய வாழிடம் கொண்ட கடல் பாலூட்டி இனம் இதுதான். கலிஃபோர்னியா வளைகுடாவின் 2235 சதுர கிலோமீட்டர் கடற்பகுதியில் மட்டுமே வகீடாவைப் பார்க்க முடியும். சமீபத்தில் இது உலகிலேயே மிக அரிதான பாலூட்டி என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.
1958-ல், அதாவது மிக சமீபத்தில் கண்டறியப்பட்ட இனம் இது. இன்றைய தேதியில், உலகில் மொத்தமாக மீதமிருக்கும் வகீடாக்கள் வெறும் பத்துதான். 1988-ல் எண்ணூறுக்கும் மேற்பட்ட வகீடாக்கள் இங்கு இருந்திருக்கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். வரலாற்று ரீதியாக இங்கு ஐயாயிரம் வகீடாக்கள் இருந்ததற்கும் ஆவணங்கள் உண்டு. ஐயாயிரம் எண்ணூறாகி, அந்தக் கழுதையும் தேய்ந்து கட்டெறும்பாகியிருக்கிறது.
“சரிதான், பேராசை பற்றிய அடுத்த கதை போல, வகீடாக்களின் இறைச்சி ருசியாக இருந்திருக்கும், அதனால் வந்த கோளாறு” என்று பலர் நினைக்கலாம். ஆனால், உண்மையில் வகீடாவின் இறைச்சி மட்டுமல்ல, தோல், எலும்பு என எந்த உடல் பாகத்துக்கும் வணிக ரீதியாக எந்த மதிப்பும் கிடையாது! பொதுவாக சிறு வாழிடங்களில் இருக்கும் விலங்குகளில் இருக்கும் அதீத மரபணுப் பிரச்சனைகளும் வகீடாக்களில் காணப்படுவதில்லை. இவற்றின் இனப்பெருக்க விகிதம் நன்றாகத்தான் இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அப்படியானால் வகீடாக்களின் அழிவுக்கு என்னதான் காரணம்?
வகீடாக்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத இடியாப்ப சிக்கல் கொண்ட ஒரு பெரிய வரலாறு அது. அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் வகீடாக்களை அப்படியே சமகாலத்து மெக்சிக்கோவில் விட்டுவிட்டு நாம் பண்டைய சீனாவுக்குப் பயணிக்கவேண்டும்.

பெரு மஞ்சள் கத்தாளை அல்லது பெரு மஞ்சள் பன்னா (Giant Yellow croaker) என்பது பண்டைய சீனாவில் பிரபலமான மீன் இனம். ராஜகுடும்பத்து விருந்துகள், செல்வந்தர்கள் வீட்டு விழாக்களில் எல்லாம் இது தவறாமல் இடம் பிடித்தது. இந்த மீனின் இறைச்சியை விடவும், இதன் காற்றுப்பைக்கு (Swim bladder) மருத்துவ குணங்கள் அதிகம் என்ற நம்பிக்கை இருந்ததால், காற்றுப்பையை வெட்டி பக்குவப்படுத்தி சூப் தயாரிக்கும் வழக்கம் இருந்தது. மரபும் மருத்துவ குணங்களும் சேர்ந்த இந்த மீன் இனம் விலை உயர்ந்ததாகவும் இருந்தது.

அவ்வப்போது இந்த மீனைப் பிடித்துக்கொண்டிருந்த சீனர்கள், 1950-களில் அதிக ஆற்றல் கொண்ட விசைப்படகு எஞ்சின்கள் வந்தபிறகு டன்கணக்கில் கத்தாளைகளைப் பிடிக்கத் தொடங்கினார்கள். அடுத்த சில ஆண்டுகளிலேயே கத்தாளைகளின் எண்ணிக்கை குறைய, காற்றுப்பைகள் அரிதான பண்டங்களாக மாறின, அவற்றின் விலையும் கூடியது. 1970 முதல் 2000 வரையிலான முப்பது ஆண்டு காலகட்டத்தில் கத்தாளை காற்றுப்பையின் விலை ஐந்து மடங்கு அதிகரித்தது!

2008-ல் ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது இந்த காற்றுப்பைகளுக்கு Speculative Assets என்ற அந்தஸ்து கிடைத்தது. அதாவது, எதிர்காலத்தில் இதை விற்றால் நிறைய பணம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் ஒரு பொருள் வாங்கப்படும். அதுதான் speculative asset, அதாவது யூக மதிப்பு கொண்ட சொத்து. தொண்ணூறுகளில் பிட்காயின் சேகரித்தவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அடுத்த சில ஆண்டுகளில் காற்றுப்பைகள் விலை போகும் என்ற நம்பிக்கையில், 2008-ல் சீனர்கள் இதை வாங்கி சேமிக்கத் தொடங்கினார்கள். அது ஒரு தனி வணிகத்தையே உருவாக்கியது, காற்றுப்பைகளின் மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. ஆனாலும் கத்தாளை மீன்கள் கிட்டத்தட்ட அழிந்திருந்த நிலையில் காற்றுப்பைகளுக்குக் கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டிருந்தது. எத்தனை விலை கொடுத்தாவது அதை வாங்க சீனர்கள் தயாராக இருந்தார்கள்.

மீண்டும் மெக்சிக்கோவுக்குத் திரும்புவோம். 1920-களில் வேலை நிமித்தம் மெக்சிக்கோவுக்கு சென்றிருந்த சீன புலம்பெயர் குடிமக்கள், அங்கே கலிஃபோர்னியா வளைகுடாவில் Totoaba என்ற ஒரு வகை மீனைப் பார்க்கிறார்கள். அதன் காற்றுப்பை, கத்தாளையின் காற்றுப்பையைப் போலவே இருப்பதை கவனிக்கிறார்கள். மெக்சிகோவின் பூர்வ குடிகளுக்கு டொடொஆபா விருப்பமான ஒரு கடல் உணவு. தங்களது உணவுக்காக மட்டுமே அதைப் பிடித்துக்கொண்டிருந்ததவர்களுக்கு சீனர்கள் மூலம் தெரியவரும் காற்றுப்பை வியாபாரம் ஒரு நல்ல வணிக வாய்ப்பாகத் தெரிகிறது. சீனாவில் மா (Maw) என்று அழைக்கப்படும் டொடோஆபா காற்றுப்பைகளை முன்னிறுத்தி அந்த மீன்களைப் பிடிக்கத் தொடங்குகிறார்கள் மெக்சிகோவின் மீனவர்கள்.

முதலில் தூண்டில்கள் மூலமாக மட்டுமே டொடோஆபாக்கள் பிடிக்கப்படுகின்றன. 1940-களில் செவுள் வலைகள் (Gill nets) அறிமுகப்படுத்தப்பட்டதும் டொடோஆபாக்கள் டன் கணக்கில் பிடிபடுகின்றன. 1960-களில் எளிதில் கிழியாத நைலான் செவுள் வலைகள் வரவும் இந்த மீன்பிடித்தொழில் இன்னும் செழிக்கிறது.
தொடர்ந்த மீன்பிடி அழுத்தத்தால் டொடோஆபாக்க்களின் எண்ணிக்கை குறையவே, 1970-களில் டொடோஆபாக்களைப் பிடிப்பது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் ரகசியமாக இந்த மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலும் டொடோஆபாக்களைப் பிடிப்பது குறைந்துவிடுகிறது.
2008-ல் சீனாவை நெருக்கிய அதே பொருளாதார நெருக்கடி மெக்சிக்கோவின் கன்னத்திலும் அறைகிறது. சீனாவில் இந்த காற்றுப்பைகளுக்கு எக்கச்சக்க விலை என்பது மெக்சிக்கோ மீனவர்களுக்குத் தெரிய வருகிறது. வறுமையில் இருக்கும் மீனவர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. ஒரு டொடோஆபாவைப் பிடித்துவிட்டால் மூன்று மாதத்துக்கான பணம் கிடைத்துவிடும் என்பதால் இந்த சட்டவிரோதமான மீன்பிடித்தொழில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்குகிறது.
டொடோஆபா பிடிக்கப்படுவதை தடுப்பதற்காக அரசு அதிகாரிகள் வந்தால், கடத்தல்காரர்களுக்கு முன்பே தகவல் அனுப்பப்படும் அளவுக்கு ஊழல் புரையோடிப்போன அமைப்பு அது. ஒரு காற்றுப்பையின் குறைந்தபட்ச விலை 10,000 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் எட்டு லட்ச ரூபாய்! ஆகவே இந்த சட்டவிரோத மீன்பிடித் தொழிலைப் பேணிப் பாதுகாக்க (?!), மெக்சிக்கோவின் போதைப்பொருள் கடத்தல் பெருந்தலைகளும் இந்தத் தொழிலில் குதித்தார்கள். மாஃபியாக்களின் துணையோடு ஒரு புதிய வணிகம் மெக்சிக்கோவில் உருவாகிறது.

போதை மருந்து கடத்தும்போது காய்கறிக்கடை கொசுறு போல இந்த காற்றுப்பையையும் கூடவே கடத்தி பல டான்கள் சில்லறை லாபம் பார்க்கத் தொடங்கினார்கள். “இதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்?” என்று ஒரு டொடோஆபா மீனவரிடம் நிருபர் கேட்டபோது, “எல்லாம் உங்களுக்குத் தெரிந்தவர்கள்தான்” என்று அனைத்துமறிந்த புன்னகையோடு அவர் பதிலளிக்கிறார். “கடலில் இருந்து கிடைக்கும் கொகெயின்” (Aquatic Cocaine) என்று மெக்சிக்கோவின் டான்கள் டொடோஆபா காற்றுப்பையைப் புகழ்கிறார்கள். கார்களின் கால்மிதிக்கு அடியில் காற்றுப்பைகளை ஒளித்து வைப்பது, தலை துவட்டும் துண்டுகளில் சுருட்டி சூட்கேஸில் அடைத்து பயணிகள் விமானத்தில் காற்றுப்பைகளைக் கடத்துவது என்று எல்லாமே நடந்தது.
சீனாவில் அழிந்த மீனுக்கான மாற்றாகத் தொடங்கப்பட்ட ஒரு வணிகம், மெக்சிகோவின் கடத்தல் மாஃபியாவையும் ஈர்த்த கதை இது.
“மார்டின் ஸ்கோர்சேசி கதை போல எல்லாம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இதற்கும் நம்ம வகீடாவுக்கும் என்ன சம்பந்தம்?” என்கிறீர்களா?
சில பத்திகளுக்கு முன்னால் “செவுள் வலை” என்ற சொல்லாடலைப் படித்தது நினைவிருக்கிறதா? அங்குதான் நம் மாஃபியா கதைக்குள் வந்து சிக்கிக்கொள்கிறது வகீடா. டொடோஆபாவுக்காக வீசப்படும் செவுள் வலைகளில் தற்செயலாக வகீடாக்கள் மாட்டிக்கொள்கின்றன. வலையை மேலே இழுப்பதற்குள்ளாகவே இவை இறந்துவிடுகின்றன என்பதால், படகில் வைத்து இவற்றை வலையிலிருந்து விடுவித்து நீருக்குள் வீசினாலும் பயன் இருப்பதில்லை. வகீடாக்களின் இப்போதைய அழிவுக்கு ஒரே காரணமாக இருப்பவை இவ்வாறு சிக்கவைக்கும் செவுள் வலைகள்தான்.

செவுள் வலைகளால் வகீடாக்கள் அழிந்துவருகின்றன என்பதை அறிந்த மெக்சிக்கோ, 2015-ல் செவுள் வலைகளுக்குத் தடை விதித்தது. “இதைப் போல ஒரு மோசமான நிர்வாக முடிவு இருக்க முடியாது” என்று விமர்சிக்கிறார்கள் விஞ்ஞானிகள். செவுள் வலைகளை நம்பி டொடோஆபாக்கள் மட்டுமல்லாமல் பலவகையான இறால்களும் பிடிக்கப்பட்டு வந்தன. செவுள் வலை பயன்பாடு தடுக்கப்படுவதால் மட்டுமே, மொத்த மீன்பிடித் தொழில் 93% குறையும் என்கிறது ஒரு ஆய்வு! இந்த சூழலில் ஒரு வலையைத் தடை செய்வதற்கு முன்னதாக எத்தனை முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டும்?! நஷ்ட ஈடு, மாற்று வாழ்வாதாரம், வகீடாக்களை சிக்க வைக்காத மாற்று வலைகள் போன்ற எல்லாவற்றையும் முன்னிறுத்தியிருக்கவேண்டும். ஆனால், எதுவுமே ஒழுங்காக செய்யப்படவில்லை.
மாற்று வலை ஆராய்ச்சிக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. மீனவர்களுக்கான மாற்று வாழ்வாதாரத்துக்கும் எந்த யோசனைகளும் தரப்படவில்லை. செவுள் வலையைப் பயன்படுத்தாமல் இருப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிவாரண நிதி கூட முழுமையாக மீனவர்கள் கையில் போய்ச்சேரவில்லை. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஊழல். வகீடா பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்கூட கணிசமான பணம் பதுக்கப்பட்டது. சட்டவிரோதமாக செவுள் வலைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிந்தும்கூட அதைக் கண்காணிக்க நேர்மையான அமைப்புகள் இல்லாத சூழ்நிலை. இது ஒரு பக்கம் என்றால், அரசாங்கம் சொல்லும் முறையில் மீன்பிடித்தால் வரும் ஒரு ஆண்டு வருமானத்தை ஒரே நாளில் தரக்கூடியவையாக இருந்தன செவுள் வலைகள். காற்றுப்பையை விற்க விரும்பும் மாஃபியாக்களின் பாதுகாப்பும் கூடவே சேர்ந்துகொண்டது. அலட்சியப்போக்கோடு கொண்டுவரப்பட்ட இந்த சட்டமும் ஊழல் நிறைந்த சூழலும் வறுமையின் நெருக்கடியும் சேர்ந்துகொண்டதில் ஒரு கறுப்பு சந்தை தொடங்கியது. சட்டவிரோத செவுள் வலைத்தொழில் தொடர்ந்தது. வகீடாக்கள் தொடர்ந்து அழிந்தன. “உலகமயமாக்கல், பொருளாதார சட்டங்கள், சந்தை, சொகுசை விரும்பும் பெருந்தலைகள், கடல்தாண்டிய குற்றங்கள், சர்வதேச அளவில் விரிந்திருக்கும் கடத்தல் வலைப்பின்னல் ஆகிய எல்லா காரணிகளாலும் விளைந்த துயரம் இது” என்கிறார் எழுத்தாளர் க்வென் கில்ஃபோர்ட்.
மீதமிருக்கிற வகீடாக்களைப் பிடித்து வளர்த்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஒரு திட்டம் 2017-ல் கொண்டுவரப்பட்டு அதுவும் தோல்வியுற்றது. இப்போதைக்கு டொடோஆபாவுக்கான விலை குறைந்திருக்கிறது என்பதாலும், ஆய்வகத்திலேயே காற்றுப்பைகளை உருவாக்கும் முறை வெற்றி பெற்றிருக்கிறது என்பதாலும் சட்டவிரோதமாகக் காற்றுப்பைகளைக் கடத்துவது கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனாலும் செவுள் வலைப் பயன்பாடு முழுவதுமாக அறுந்துவிடவில்லை. “செவுள் வலையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அரசு எங்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை, குழந்தைகளைப் பட்டினி போட முடியுமா?” என்று கேட்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் சங்கத் தலைவர் ரமோன் ஃப்ராங்கோ டியாஸ். அங்கு புரையோடிப்போயிருக்கும் ஊழலை அறிந்திருப்பதால் அவரது தரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்ளும் விஞ்ஞானிகள், வகீடாக்கள் தாங்களாகவே தங்களை மீட்டெடுக்கும் அதிசய நிகழ்வு நடந்துவிடாதா என்று காத்திருக்கிறார்கள்.
வகீடாக்கள் ஏன் அழிந்துவருகின்றன என்பதை அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சியில்கூட கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், அதிநவீன விஞ்ஞானத்துக்கும் போக்குக் காட்டி வரும் ஒரு கடல் நிகழ்வு உண்டு, தெரியுமா?
(தொடரும்…)