
ஞானி ஒருவர் அவனிடம் சிறு பேழை ஒன்றைக் கொடுத்து, “இதிலுள்ள பூதம் நீ சொல்லும் வேலையைச் செய்யும். நீ நினைக்கும் வேலையைக் கூட செய்யும். நல்ல அடிமையாக உனது ஏவலுக்காக காத்திருக்கும். நீ அதை வேலை ஏவவில்லை என்றால், அது உன்னை ஏவும்! ஆகவே கவனமாகக் கையாளு” தந்து மறைந்தார்.
அவனுக்குள் புதுரத்தம் பாய்ந்தது; புதுபலம் கூடியது. அந்த கையடக்க பூதத்தைச் சொடுக்கினான்; உலகிலுள்ள பழைய , புதிய அதிசயங்களைக் கண்முன் கொண்டு வந்தது. விரும்பும் பொருள் எங்கு கிடைக்கிறது என்பதறிந்து, அப்பொருள்களின் தரம், பழுதில்லா பயன், நீடித்த உழைப்பு பற்றிய தகவல்களை நுகர்வோர் கருத்தறிந்து சொன்னது. அவற்றில் தெரிவு செய்து வாங்கி பாவித்தான். விற்பனைப் பிரிவு அலுவலராகப் பணியாற்றும் அவனுக்கு பயணம் , தங்குமிடம், சுவையான உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கு அது பேருதவியாக இருந்தது . தான் சொல்லுவதை மட்டுமல்ல, தனது ஆழ்மனதில் பதிந்த ஆசைகளக்கூட எப்படி இந்த பூதம் ஊடுருவி அறிந்துகொள்கிறது என்பதை வியந்தான்.
அவன் சுட்டுவிரலை அசைத்து பூதத்திடம் தன் தங்கைகள் பற்றிய விவரங்கள் தந்து அவர்களுக்குத் தக்க வரன்கள் தேடித்தர பணித்தான். பூதம் தனது செயல்பரிவாரங்களோடு களத்தில் இறங்கியது. சிலநொடிகளில் வரன்களின் பட்டியலை சமர்ப்பித்தது . அந்த வரன்களில் பொருத்தமானவரை அவர்களது கல்வித்தகுதி ,பணியாற்றும் நிறுவனங்களின் தரம், வேலை நியமன முறைகள், வரன்களின் குணபாவங்களையும் அறிந்து பட்டியலிட்டது .அவனது குடும்பத்தார் இயல்புக்கு ஏற்றவர்களை வரிசைப்படுத்தியது .
வரன் தெரிவைத் தொடர்ந்து பூதபரிவாரங்களின் கைங்கரியத்தில் தங்கைமார் விரும்பும் நகைகள், சேலை துணிமணிகள் ஆகியவற்றை பிடித்த வடிவங்களில், வண்ணங்களில், உட்கார்ந்த இடத்திலிருந்தே தெரிவு செய்தனர். தேர்ந்த பொருள்கள் வீடு தேடிவந்தன. அவன் ஒற்றைவிரல் தடவலில் பணப்பட்டுவாடாவும் செய்தான் .
திருமண நிகழ்வுகளில் மணமக்களை, நண்பர்களை விரும்பிய நிலையில், தனியாகவும், சேர்ந்தும், பொதுப்படமும் ,தன்படமும் எடுத்து நெகிழ்வான தருணங்களை பதிவு செய்ததும் நடந்தது. மணமுடித்து வெளிநாடுகளுக்குச் சென்ற தங்கைமார் குடும்பத்தினரோடு அவன் வீட்டிலிருந்தே பேசமுடிந்தது. அம்மாவுக்கும் அவனுக்கும் பெரும் திருப்தி! ஈங்கிதை யான் பெறவே என்ன தவம் செய்தேனோ என்று அவனுக்கு கர்வம் கூடியது.
கல்யாணக் கடன்கள், அலைச்சல்கள் சேர்ந்து உடலலுப்பு தாக்கியது. நிழலுதிர்த்த மரமானான்; திரும்பின திசையெங்கும் வெயில் கிள்ளித் தொடர்ந்தது . எனினும் அவனது மனமறிந்து கையடக்க பூதம், அவன் மனநிலைக்கேற்ப வழங்கிய கேளிக்கைகள் மகிழ்ச்சியை, ஆறுதலைத் தந்தது. அவனது பெரும்பாலான வரவு செலவுகள், உறவாடல்கள் திறனறிபூதம் வழி என்பதால் புதுப்புது விற்பனை அறிவிப்புகளும் , விளம்பரங்களும் பரிவார செயலிகள் வழி நொடிக்கு நொடி மினுங்கி சினுங்கி குவிந்தன. இவற்றை எல்லாம் அழிப்பதும், இனி அவை வராமல் தடுப்பதும் அனுதினமும் சள்ளையான வேலையாக இருந்தது. பரிவார செயலிகள் சிமிட்டி, “எங்களை அழை அல்லது அணை! எங்களது சேவைத்தரம் பற்றி மதிப்பிடு” எனக்கெஞ்சி அடம்பிடித்தன. அவற்றை ஒதுக்கிக் கடப்பது எரிச்சலாக இருந்தது.
“நீ யாரைக் கட்டுவியோ, நான் காலாகாலத்தில் ஒரு பேரப்பிள்ளையை பார்த்தாகணும்.! கொஞ்சி வளத்துட்டு கண்ணை மூடனும் “னு அம்மா அடைமழையாய் நச்சரித்தாள். அம்மாவின் வாயை மூட தனக்கான பெண் பார்க்க பூதத்தை நாடினான். இதுவரை யாரையும் காதலிக்க வாய்க்கவில்லை .கல்யாணத்திற்குப் பின்னாவது காதல் மனைவி அமைய வேண்டும் என்ற அவனது உள்ளமறிந்து பூதம் தரவுகளோடு படங்களை வரிசையிட்டது. சுயம்வர இளவரசனைப் போல் தீரா ஆசையை உள்ளடக்கி ஓய்ந்த நேரமெல்லாம் பார்த்து ஒதுக்கினான். ஒன்றும் தேறவில்லை. காலம் பனிக்கட்டியாகக் கரைந்தது. நரைபூத்த தலைக்கு இளமைப் பூசினான். அது இயல்பான முகத்தை வயோதிக வாலிபனாகக் காட்டியது. அம்மாவின் அனத்தலில் வீடு கசந்தது. அம்மா உறங்கும் சமயத்தில் வீடுபோனாலும், சத்தம்கேட்டு எழுந்து வந்து அன்பால் வறுப்பாள்.
‘தூக்கம் வர எதாவது காட்டு’ என்று பூதபரிவாரத்தை சொடுக்கினான். பரிவாரங்கள் வழியே அவனது இளமைப்பசியைத் தூண்டும் கவர்ச்சி தலைப்புகள் சிமிட்டி அவனைத் தூண்டில் போட்டு இழுத்தன. பார்க்க பார்க்க கிளுகிளுப்பையும் சூட்டையும் கிளப்பின. கொம்பில் கனியவேண்டிய காய் வெம்பி தோல் சுருங்கியது. வானவில் கனவில் மிதக்கும் கண்களைச் சுற்றி கருவளையம் கோட்டை கட்டியது. கடல் உள்வாங்குவது போல் முன்நெற்றி மயிர்கள் பின்வாங்கின .
பூதப் பரிவாரங்கள் விளம்பிய கிளுகிளு கதைகள் பணிநேரத்திலும் மனதுக்குள் படமெடுத்தாடின ; பாதையில் பார்க்கும் பெண்களெல்லாம் மோகம் ததும்பும் போகப் பாத்திரங்களாகத் தோன்றினர்!. இரு பெண்களோடு பிறந்து வளர்ந்தவன்; இருபாலார் கல்வி நிறுவனங்களில் படித்தவன். அப்போதெல்லாம் தோன்றாத இச்சைகள், மன விகாரங்கள் இப்போது மனதை அலைக்கழிக்கிறன. எந்தப் பெண்ணையும் முகம் பார்த்து பேசக் கூசினான். தான் ஒரு மனநோயாளியாக மாறிவிட்டோமோ என்ற அச்சம் அவனை மருட்டியது.
காம ஊடகங்களிருந்து காணொலி அழைப்புகள் நவநவமான நளின பெண்ணுருவங்களாகத் தோன்றி உருகும் மொழிகளில் பேசின. தாளமுடியாமல் அந்த இணைப்புகளின் நிராகரிப்புச் சுட்டிகளைச் சொடுக்கினான். இரண்டுநாள் அணைத்து வைத்திருந்தான் . தொடர்ந்து அலறிய அலுவலக அழைப்பை இயக்கும்போது குறுக்கே மறிக்கும் ஈர்க்கும் அறிவிப்புகளும், பூடக அழைப்புகளும் குவிந்து சிமிட்டின. பூதப்பரிவாரங்கள் குரூரமாக முறுவலித்தன. பயந்தான் .
இந்தக் காணொலி காரிகைகள் ஆசைகாட்டி அழைத்து பணத்தை பறித்து தன்னை அதள பாதாளத்தில் தள்ளி சந்தி சிரிக்க வைத்து விடுவரோ? மின்னூடகச் செய்திகள் பல நினைவில் வந்து எச்சரித்தன.! அந்தக் காணொலிகளைப் பார்க்க விருப்பமுமில்லை, பார்க்காமலும் இருக்க ஆசை அடங்கவில்லை . மனம் கட்டுப்படவில்லை .இது நோய்மையின் முதிர்ச்சியோ என மிரண்டு போனான்.
மகனின் முகத்தில் அருள்மங்கி இருள் கவ்வியிருப்பதாக அம்மா உணர்ந்தாள். “மனசை அலைபாய விடாதப்பா ; கந்தசஷ்டி கவசத்தைக் கேளுப்பா, மனது ஒருநிலைப்படும். குலசாமியைக் கும்பிடறேன் உனக்கு சீக்கிரம் நல்லது நடக்கும் “ என்றாள். “தான் பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போது எவ்வளவு மனக்கட்டுப்பாடும் சுயஒழுக்கமும் கொண்டிருந்தோம் ! சிகரெட் பிடிக்கும் நண்பர்களோடு, மதுப்பிரியர்களோடும் பழகியிருக்கிறோம்; அவர்களின் வற்புறுத்தலுக்கு இரையாகாமல் மனதைக் கட்டுபடுத்தியிருந்தோம்! இன்று மனம் கட்டுப்பட மாட்டேங்குதே! இந்த மனக்குதிரையை அடக்கலைன்னா… கீழே தள்ளி மிதித்து கேலிப் பொருளாக்கிவிடுமே” – இப்படி மனம் ஒர்மைபடாது அலைந்த தருணங்களில் பெருங்கவிகள் , ஞானிகள் என்ன செய்தார்கள் என்று யோசித்தான்.
இரண்டுநாள் விடுப்பு எடுத்து வீட்டுள் கதவைமூடிப் படுத்தபடி பாரதியிடம் தஞ்சம் புகுந்தான் . ” மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு / தேகத்தை சாய்த்து விடு, அல்லால் அதில் சிந்தனையை மாய்த்துவிடு / யோகத்தில் இருத்திவிடு அல்லால் எந்தன் ஊனைச் சிதைத்துவிடு”, “நல்லதோர் வீணைசெய்தே நலம்கெட புழுதியில் எறிவதுண்டோ…. “ – எனத் திரும்பத் திரும்ப பாடிப்பாடி கண்ணீர் வழிய உறங்கிப் போனான். இரு இரவுகள் இப்படி நகர்ந்தன. மூன்றாம் நாள் காலையில் மனம் தெளிந்திருந்தது . திரிந்த மனம் நாய்க்குட்டி போல் காலுக்கு கீழ் முடங்கிக் கிடந்தது. ஜன்னல் வழி புன்னகைத்த சூரியன் புதிதாகத் தெரிந்தது. மனதில் உறுதிவேண்டும் என்று இதயம் லயம் மீட்டியது. குளித்து உண்டபிறகு வெளியே போய் புதிய எண்ணோடு சிம் கார்டு வாங்கினான்; பழைய சிம்கார்டை மூன்றுமுறை தலையைச் சுற்றி சாக்கடையில் எறிந்தான் . கைப்பேசியில் இருந்த பழைய தொடர்புகளையும், தேவையற்ற செயலிகளையும் நீக்கினான் . புதிய மின்னஞ்சல் முகவரியை உருவாக்கினான் . முக்கிய தொடர்புகளை மட்டும் பதிந்தான். கைப்பேசியின் தொடுதிரையை மாற்றி ,”வேடிக்கை மனிதரென்று நினைத்தாயோ.. “ எனும் பாரதியின் முகப்புபடத்தை வைத்தான். புதிய பொலிவோடு பூதம் கைக்குள் அடங்கியது போல் மௌனமாக முகமன் மொழிந்து,கட்டளைக்காக காத்திருந்தது .
******
கையடக்கபூதம் கதையை சிறப்பாக. வாசகசாலை தளத்தில் வெளியிட்டமைக்கு நன்றி ண்பர்களே