‘இந்த இரவு ஏன் இவ்வளவு நீள் சுமையாய் இருக்கிறது. ரோஜா இதழ்களையொத்த இந்த இமைகளின் மேல் இவ்வளவு கனத்தை தூக்கி வைக்க முடியுமா? முடிகிறதே..விடிய விடிய இறக்கி வைக்க முடியாமல் சுமக்கவும் தான் முடிகிறதே’
தேக்கு மரத்திலிருந்து உதிர்ந்த பழுப்பிலையொன்று வத்ஸலாவின் வலது கையில் விழுந்ததில் சுரீரென வலியெடுக்கத் தொடங்கியது. இலை விழுந்ததால் அல்ல; கைகளை வெடுக்கென நகர்த்தியதால் உணர்ந்த வலி. நாள் முழுதும் கீபேடுகளைத் தட்டி தட்டி விரல் நரம்புகள் பாதித்து மருத்துவர் ஆராய்ந்து சில பல நிவாரணிகளை மாத்திரை வடிவிலும் களிம்பு வடிவிலும் சிபாரிசு செய்து அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் கடனே என விழுங்கியும் தடவியும் கூட நிற்காமல் இப்போது இலையின் உபயத்தால் விஸ்வரூபமெடுத்த வலி. வத்ஸலா பெஞ்சிலிருந்து எழுந்து நடக்கத் தொடங்கினாள். இரவு ஷிப்ட் டாக்டர் வரும் நேரம். அவரிடம் போய் பூஜாவின் நிலையைப் பற்றி வினவிடும் ஆர்வத்துடன் நடையை எட்டிப் போட்டாள்.
பூஜா இதற்கு முன்பும் அடிக்கடி மிரட்டியிருக்கிறாள் தான். பிடித்த உடையை வாங்கித் தராவிட்டால், பிடித்த நிறத்தை தேர்வு செய்ய அனுமதிக்காவிட்டால், உடைக்கேற்ற காதணிகள் வாங்கித் தராவிட்டால் என தொட்டதெற்கெல்லாம் கையை அறுத்துக் கொள்வதாகச் சொல்லி மிரட்டுவாள். மிரட்டுதலின் வழியே காரியங்களை சாதித்துக் கொள்ளும் சாகச தந்திரம் தனக்குத் தெரியாமல் போனதையெண்ணி வத்ஸலா ரொம்பவும் வருந்தினாள். நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் அவள் கணவன் மது அருந்திக் கொண்டிருந்தபோது ஆம்லெட் போட்டுவந்து தராத காரணத்தால், அவள் கூந்தலை பிடித்திழுத்துக் கொண்டு போய் ஸ்டோர் ரூமில் அடைத்துவிட்டு வந்தும் ஆத்திரம் பொறுக்காமல் கொல்லைப்புறத்திலிருந்த தாம்புக்கயிற்றையும் எலி பாஷாணத்தையும் எடுத்துவந்து அவள் முன்பாக வைத்து, ‘விடியறதுக்குள்ள இதுல எது புடிக்குதோ அத யூஸ் பண்ணி செத்துப் போய்டு. நான் வந்து கதவு தெறக்கும்போது உசுரோட இருக்கக் கூடாது’ எனக் கண்டிப்போடு சொல்லிவிட்டு கதவைச் சாத்திவிட்டுப் போனபோதும் கூட அவளுக்கு அவற்றில் ஏதேனுமொன்றைத் தேர்ந்தெடுக்க மனம் வரவேயில்லை.
அவளுக்கு வாழ வேண்டுமென்று அவ்வளவு ஆசையெல்லாம் இல்லை. அதே சமயம் ஏனோ சாவதற்கும் பிடிக்கவில்லை. உண்மையைச் சொன்னால் சாவதற்கு சலிப்பாக இருக்கிறது. தற்கொலை செய்துகொள்பவர்களைப் பார்த்தாலோ கேள்விப்பட்டாலோ அவளுக்கு மலைப்பாக இருக்கும். எப்படி இவர்கள் இன்ன வழியில் சாவதென்று ஒரு முறையைப் பிரயோகித்து சிரமப்பட்டு தங்கள் உயிரைப் போக்கிக் கொள்கிறார்கள்.. உயிர் இருக்கும் வரை கூடவே கைப்பிடித்து குழந்தையாய் வலம்வரும் இந்த நினைவுகளை எப்படி அம்போவென கைக்கழுவிப் போய்விடுகிறார்கள் என்றெல்லாம் அன்றைய நாள் முழுமைக்கும் யோசித்துக் கொண்டே இருப்பாள்.
தனக்கான இறப்பென்பது ஒரு கணத்தில் வலியில்லாமல் பழுத்து உதிர்கிற இலையைப் போல மிதமாய் இருக்கவேண்டுமென அடிக்கடி சம்புகேஸ்வரரை வேண்டிக் கொள்வாள். அப்படிப்பட்ட ஒரு இறப்பைத் தான் அப்பாவும் தழுவியிருப்பாரென நள்ளிரவில் போன் வந்த ஒரு இரவில் திருப்திபட்டபடியே அவசரமாய் கிளம்பிப் போனாள். அந்த அவசரத்திலும் அவளுக்கந்த திருப்தி தேவையாயிருந்தது. அப்பாவுக்கு 84 வயது.. நிச்சயமாக ஒரு பழுப்பிலைதான்.
பேருந்து நிலையத்தை அடையும்வரை அவள் கணவனும் உடன் வருவானென்றுதான் நம்பிக் கொண்டிருந்தாள். அவனோ பூஜாவையும் அவளையும் பேருந்தில் ஏற்றிவிட்டப்பிறகு அவளிடம் ஐந்நூறு ரூபாய் வேண்டுமென நின்றுகொண்டான். புரியாமல் எதற்கென்றவளிடம், ‘நான் தூங்கிட்டு காலைல வர்றேன் வண்டிக்கு பெட்ரோல் போடனும்ல’ என்றவனிடம் எந்த வண்டிக்கு என அவளால் கேட்க முடியாது. எதுவும் பேசாமல் பர்ஸைப் பிரித்து ஐந்நூறு ரூபாயை எடுத்து நீட்டிவிட்டுத்தான் இறப்பு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
பூஜா மருந்தின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். அந்த டாக்டர் என்ன ஏதென்றெல்லாம் விசாரிக்காமல் இவளைக் கண்டவுடன் திட்டத் தொடங்கினாள்.
“ந்தாம்மா.. புள்ளைய பெத்துட்டா மட்டும் பத்தாது.. இப்படி மருந்து குடிக்கிற மாதிரி பண்ணி வச்சிருக்கியே..என்னம்மா நீயெல்லாம் ஒரு மனுஷி..” என திட்டிக்கொண்டே போனாள்.
வத்ஸலாவுக்கு பசி காதை அடைத்தது. டாக்டர் சொன்ன வாக்கியங்கள் நழுவிப்போய் விழுந்து கொண்டிருந்தன.
ஒரு குழந்தைக்கு தன் தாயின் முகம் மறந்துபோவது எத்தனை துயரமானது. எவ்வளவோ முயன்றும் தன்னைப் பெற்றவளின் முகத்தை சித்தியிடம் அவளால் கொண்டு வரவே முடியவில்லை. புகைப்படமாகத் தொங்கும் அம்மாவின் இளமைக்கால முகத்திற்கு கொஞ்சம் முதுமையைத் தந்து அவள் மடியில் படுத்து ஆறுதல் மொழி கேட்கவெல்லாம் நேரமுமில்லை. வேலைப்பளுவுக்கும் கடன்சுமைக்கும் மத்தியில் ஆறுதல் தேடும் ஒவ்வொரு முறையும் புகைப்படத்தை எடுத்துப் பார்ப்பதைவிட மனதில் இருத்தி வைப்பதுதான் என்றென்றைக்குமான அத்தியாவசியமாகப்பட்டது. ஆனால், அதற்குத் தான் அவளுக்கு கொடுப்பினை இல்லை. நான்கு பெண்களில் கடைசியாகப் பிறந்தவளின் நிலைமை எத்தனை சங்கடமானது என்பது வத்ஸலாவுக்கு நன்றாகத் தெரியும்.
மூவர் உடுத்திக் கிழித்த உடையை உடுத்தி, அவர்கள் தின்று மிச்சம் வைத்த தின்பண்டம் கொறித்து, படுக்கையில் ஓரமாய் தள்ளப்பட்டு, கீழே விழுந்து என எல்லாவிதத்திலும் அனுபவித்திருக்கிறாள். அதனால் தான் பூஜாவுக்குப் பிறகு ஒரு குழந்தைக்கென அவள் சிந்திக்கவே இல்லை.
வத்ஸலா பணிபுரியும் தனியார் நிறுவனம் அம்மாபேட்டை மூன்றாவது கிராஸில் இருக்கிறது. அந்த அலுவலகத்தில் செலினா மட்டுமே அவளுக்கு எல்லா சூழலிலும் உற்றத் தோழி. எந்தக் குறைக்கும் துன்பத்துக்குமான ஏதேனுமொரு சாஸ்வதமான தீர்வு அவளிடம் எப்போதும் இருக்கும். காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் போது அவளது ஸ்கூட்டியில் தொற்றிக் கொள்வதிலிருந்து மாலையில் வீடு திரும்பும் வரை அத்தனை சுக துக்கங்களையும் அவளோடு தான் பகிர்ந்துகொள்வாள். ஞானம் முதிர்ந்த குருவைப் போல ஆலோசனை சொல்லும் செலினாவுக்கே சில நேரங்களில் வத்ஸலா விஷயம் தடுமாற்றத்தைக் கொடுக்கும்.
‘இப்போ என்ன.. நீ எது சம்பாதிச்சாலும் அது பூஜா ஒருத்திக்குத் தானே.. பேசாம கேட்டத வாங்கிக் குடுத்துட்டு போக வேண்டியது தானே?’ என்பாள். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்ததில் பெருகிய ஆசையையும் அலட்சியப் போக்கையும் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே பூஜாவிடம் காணத்தொடங்கியதில்தான் வத்ஸலா பயம் முற்றிக்கிடக்கிறாள்.
முன்பொருமுறை பூஜாவுக்கு வெள்ளிக் கொலுசு எடுக்க தீர்மானித்தபோது எழுந்த மனத்தாங்கல் இப்போதும் கசக்கிறது. மாதாந்திரச் செலவு போக கையிலிருக்கும் தொகையையும் பழைய கொலுசையும் வைத்துவிட்டு புதிதாய் ஒன்று வாங்குவது குறித்து விவாதம் நடந்தது. பூஜா போனிலிருந்த கொலுசு வகைகளை ஒவ்வொன்றாய் நகர்த்திக் காட்டினாள்.
‘ம்மா.. இது பாரேன் நிறைய மணியோட எவ்ளோ அழகா இருக்குனு. போட்டுக்கவும் ரொம்ப லேசா இருக்காம்.. வனி சொன்னா’
‘வனிதா சொன்னா அது அவளோட இருக்கட்டும் கண்ணு. அவங்க அப்பாக்கு இருக்குற வசதிக்கு மாசம் ஒண்ணு கூட மாத்திக்கலாம். நம்ம நெலம அப்டியா இருக்கு? நல்லா கனமா திடமா இருந்தாதான் ரொம்ப நாளைக்கு உழைக்கும். சரியா?’
பூஜாவுக்கு முகம் கறுத்துவிட்டது. ‘அம்மா, இதுதான் இப்போ டிரெண்டிங்கா இருக்கு.. ‘ என மெலிதாக முணுமுணுத்தாள்.
கொலுசு செய்யும் இடத்துக்கே சென்று பேரம் பேசி விலை குறைத்து வாங்கித் தந்ததில் அவளுக்கு விருப்பமே இல்லை.
இரவில் பணி முடிந்துத் திரும்பியதும் கொலுசணிந்த கால்களைப் பார்த்ததும், ‘கொலுசு புடிச்சிருக்கா?’ என அவள் கேட்ட கேள்விக்கு, ‘வாங்கி குடுத்த.. போட்டுகிட்டேன். நல்லாயிருக்கா இல்லையான்றது உன் கவலை’ என பேசிக்கொண்டே உள்ளறைக்குப் போய்விட்டாள் பூஜா.
இவளுக்கு அழுகையாக வந்தது. எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் அதை வாங்கித் தந்திருக்கிறாள். வத்ஸலா தனக்கு எதுவுமே சரியாக வாய்க்கவில்லையோ என அன்றிரவு முழுக்க நிறைய யோசித்தாள். கண்ணாடி முன் நின்று தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டாள். மூக்கின் தூரைப் பார்த்ததும் அவளுக்கு பிடித்த ஒற்றைக்கல் மூக்குத்தி நினைவுக்கு வந்தது. சந்துரு நினைவுக்கு வந்தான். நாற்பதைக் கடந்துவிட்ட முதிர்வை சந்தேகமாய் உணர்ந்தாள். தனக்கு நிறைய வயதாகிவிட்டதோ.. ஒருவேளை பூஜா தான் சரியாக இருக்கிறாளோ.. நம் வறுமையை தேவையின்றி நாம்தான் அவள் மீதும் ஏற்றி வைக்கிறோமோ.. வயதாகிவிட்டதால் நம் சிந்தனையும் முதிர்ந்துவிட்டதோ.. என்றெல்லாம் நிறைய கேள்விகள்.
பூஜா நிறைய முறை சொல்லியிருக்கிறாள்
‘ஏன்ம்மா நீ மூணு பேரோட பொறந்து கஷ்டப்பட்ட கதையெல்லாம் என்கிட்ட சொல்லி எப்ப பாத்தாலும் போரடிக்கிற? நான் அவ்ளோ கஷ்டப்பட்டேன் இவ்ளோ கஷ்டப்பட்டேன். உனக்கு பாரு இவ்ளோ செய்யறேன் இதெல்லாம் எனக்கு கிடைச்சதே இல்லனு எப்பவும் பஞ்சப்பாட்டு.. ‘
‘அதெல்லாம் உண்மை தானடி.. நான் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் உனக்கு கவலையில்ல.. உனக்கு வேண்டியது உடனே கிடைக்கணும்னு அடம் புடிக்கிற.. இது சரியா? நான்லாம் எங்க மூணு அக்காவும் போட்டுட்டு கடைசியா என்கிட்ட வர்ற ட்ரெஸ்தான் போடணும்.. உன்ன மாதிரி பிடிவாதம் புடிச்சிருந்தா சோறு கிடைச்சிருக்காது தெரியுமா?’
‘அங்கதான் நீ தப்பு பண்ற.. உனக்கு போராடுற குணமே இல்ல.. நமக்கு வேண்டியது கிடைக்கணும்னா போராடணும்.. நாலு நாள் பட்டினி கிடக்கணும் அடி வாங்கணும்.. எதுனாலும் பொறுத்துக்கணும். எனக்கு தேவையானத நான் அடையப் போராடுறதுல என்ன தப்பு? அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது’ என்றபோது வாயடைத்துப் போனாள் வத்ஸலா.
மருந்து வாசனையையும் மீறிக் யூகலிப்டஸ் மரங்களின் வாசம் கொஞ்சம் இதமாகக் கமழ்ந்தது. இப்போதெல்லாம் அடிக்கடி சந்துரு ஞாபகமாக உணர்கிறாள். அவன் தோன்றும்போது மட்டும் தான் ஞாபகமென்ற ஒன்று இருப்பதாகவும் அவளுக்குப் படுகிறது. அவன் அடிக்கடி சொல்வான், ‘இந்த மூக்குத்தி இல்லனா உன் முகமே களையிழந்த மாதிரி இருக்கு.. ப்ளீஸ் மூக்குத்தி போடு’ எனக் கெஞ்சுவான். அவளுக்கு அம்மாவின் நினைவு வரும். அம்மா தான் கன்னையன் ஆசாரியிடம் முதல்முதலாய் கூட்டிச் சென்று மூக்கு குத்திவிட்டாள். பாட்டி செய்து தந்த மூக்குத்தியை பத்திரமாக வைத்திருந்து இவளுக்கு போட்டுவிட்டாள். ‘என்ன அழகுடி நீ’ என நெட்டிமுறித்தாள்.
இரண்டாவதாக சந்துரு தான் அவளது மூக்குத்தியை வெகுவாக இரசித்தவன். நிலவுக்குள் ஒரு நட்சத்திரம் எனக் கவிதையெல்லாம் எழுதிக் கொடுத்தான். அவர்களது காதல் வீட்டுக்குத் தெரிந்து பெரும் பிரச்சினையாகி, அவனைப் பிரிந்தபோது கழற்றி எறிந்தவள்தான். அதன்பிறகு மூக்குத்தி அணிவதை மறந்தேவிட்டதோடு பெரிய அக்கா மகளின் சடங்குக்கு சீராக அதைக் கொடுத்தும் விட்டாள். என்றாவது நினைவுக்கு வரும்போதெல்லாம் பூஜாவிடம் சொல்வாள்.
‘எனக்கு திரும்ப மூக்குத்தி போடணும் போல இருக்குடி.. ‘
பூஜா கேலியாகச் சிரிப்பாள். ‘என்னம்மா இந்த காலத்துல போய் மூக்குத்தி போடுறேன்னு காமெடி பண்ணிட்டு இருக்க.. நீ கண்டிப்பா பழமைவாதிதான்’ எனச் சொல்கையில் அவள் கணவனும் கூடச் சேர்ந்து கிண்டல் செய்வான்.
‘மூக்குத்தி போடுறது பழமைவாதமாவே இருக்கட்டுமே.. ஆனா, அத போடணும்னு நினைக்கிற என்னோட உரிமைய மறுக்குறது பிற்போக்குத்தனமா தெரியாதா இந்த ஜென்மங்களுக்கு?’ என அன்று முழுதும் செலினாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
முந்தைய இரவில் யாரோ ஒரு பையனுடன் இரவு 10 மணிக்கு மேல் பூஜா பேசிக் கொண்டிருந்ததை கண்டித்ததில் தான் இந்த விபரீதம் நிகழ்ந்து விட்டது.
‘நீ எப்டிமா என்னை சந்தேகப்படலாம்.. உனக்கே அசிங்கமா இல்ல?’
‘இல்லடி.. உன்னைத் தெரியும்.. ஆனா, பசங்க கூட இந்நேரத்துக்கு மேல பேசுறது நல்லதில்லை..நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்’ என சமாதானம் செய்யப் பார்த்தாள்.
‘நீ சொன்னத அவன் எதிர்முனைல கேட்டுட்டான்மா. போன கட் பண்ணிட்டான். நான் இப்போ எப்படி இந்த தியரில டவுட் கிளியர் பண்றது? நாளைக்கு எப்படி அவன் முகத்துல முழிக்கிறது?’ என புத்தகத்தை வீசியெறிந்தாள்.
வத்ஸலா எதுவும் வாய்பேசவில்லை. இல்லையென்றால் பூஜாவின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். பிறகு தனது மிரட்டும் வேலையைத் தொடங்கிவிடுவாள் என அவளுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவள் நடக்கக்கூடாதென நினைத்தது தான் இறுதியில் நடந்தது. கோபமாக கத்திவிட்டு பொருட்களையெல்லாம் போட்டு உடைத்துவிட்டு ரூமுக்குள் போய் கதவை சாத்திக்கொண்டாள்.
வத்ஸலாவுக்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது. ஒருவேளை தான் கேட்ட விதம் சரியில்லையோ என பலமுறை சிந்தித்தாள். அப்படியொன்றும் தவறாகக் கேட்டதாகப் படவில்லை. ‘இந்நேரத்துல பையனோட என்ன பேச்சு?’ அவள் கேட்டது இவ்வளவே தான். ஒரு அம்மாவுக்கு தன் மகளது வாழ்வு குறித்த பயம் இருக்கவே கூடாதா எனக் கலங்கியவாறே உறங்கிப் போனாள்.
காலையில் எழுந்து பார்த்தபோது பூஜா எலிமருந்தைத் தின்று விட்டு நுரை பொங்கக் கிடந்தாள். இதுவரை ஒருமுறை கூட மகளின் படிப்பு பற்றியோ எதிர்காலம் பற்றியோ பேசியிராத அவள் கணவன் அவளை மருத்துவமனையில் எல்லோரும் பார்க்கும்படி அறைந்தான். மோசமான வார்த்தைகளால் திட்டினான். நல்லவேளையாக டாக்டர் வந்து உயிருக்கு ஆபத்தில்லை எனக் கூறியபிறகுதான் அங்கு அமைதி தோன்றியது. ஆனால், வத்ஸலா வெளியே இருக்கும் பூங்காவில் போய் உட்கார்ந்து நாள் முழுதும் அழுது கொண்டிருந்தாள். காலையிலிருந்து அவளது உறவுகளும் அக்கம்பக்கத்தினரும் அவளை ஒரு புழுவைப் போல பார்த்ததும் வசவுகளை வாரியிறைத்ததும் இன்னும் அவள் உடலை நடுங்கச் செய்து கொண்டிருக்கிறது.
‘இப்போ நிம்மதியா இருப்பா..’ ,
‘எல்லாம் தனியா சம்பாதிக்கிற திமிரு..’
‘அவ சம்பாதிக்கிறாதான்.. ஆனா, அவன் குடிகாரனா ஆனதே இவளால தானே.. அவன் ஊதாரியா இருக்குறதும் இவளுக்கு ஒரு வசதிதான்.’
‘ஆமாம்..குடும்பத்த தனியா சுமக்குறோம்னு வெளிய பீத்திக்கலாம்ல.’
‘அதுக்கு.. அந்த திமிர புள்ளைக்கிட்டயா காட்டுறது? இந்நேரம் அந்தக் குழந்தைய தின்னுட்டு தனியா நின்னுருப்பா.. எப்படியோ தப்பிச்சிட்டா’
வத்ஸலா உள்ளுக்குள் நொறுங்கிப்போய் மருத்துவமனைக்கு வெளியிலேயே கிடந்தாள். செலினா மாலை அலுவலகம் முடிந்து வந்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போனாள். நான்குநாட்களுக்குப் பிறகு பூஜாவை டிஸ்சார்ஜ் செய்தார்கள்.
வத்ஸலா தன்னைத் தானே மாற்றிக் கொள்ளப்போவதாக சம்புகேஸ்வரரிடம் உறுதியளித்தாள்.
முதல் வேளையாக பிடித்தம் செய்து வைத்திருந்த பி.எஃப் பணத்திலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொண்டு நகரின் பிரபலமான ஜுவல்லரிக்குள் நுழைந்தாள். கணவனுக்கு போன் செய்து பூஜாவை அங்கு அழைத்து வரும்படி கூறினாள். கொலுசு மட்டுமின்றி இனி அவளுக்குப் பிடித்தது எதுவாக இருந்தாலும் அவளே வாங்கிக் கொள்ளட்டுமென அவள் முடிவெடுத்திருந்த போது தான் தன்னையே ஏமாற்றிக்கொண்டு நடிக்கத் தயாராகிவிட்டதாக அவளுக்குப்பட்டது. ‘நாம் ஏன் நமக்காக வாழவேயில்லை.. நம் வாழ்வை யார் யாரோ வாழ்வது தெரிந்தும் எப்படி சம்மதித்திருக்கிறோம்’ என உள்ளுக்குள் எழுந்த வினாக்களுக்கு பதில் தெரியாத குழப்பம் அவளைச் சூழ்ந்துவிட்டது. அவ்வளவு குழப்பத்திலும் இனி வரும் நாட்களிலாவது தனக்காகவும் கொஞ்சம் வாழ்ந்துவிட வேண்டுமென்ற சிந்தனை மட்டும் அவள் புத்தியில் ஆழமாக ஊடுருவத் தொடங்கியது.
வத்ஸலாவின் கணவனும் பூஜாவும் உள்ளே நுழைந்தபோது அவள் இருக்கும் திசைக்கு வரும்படி கைகாட்டினாள். அருகில் சென்றவர்களை உற்சாகத்துடன் கொலுசு செக்ஷனுக்கு அழைத்துச் சென்றவளின் முகத்தில் ஒற்றைக்கல் மூக்குத்தி மின்னுவதை அவர்கள் அப்போதுதான் கவனித்தார்கள். அது அவள் முகத்தில் மலர்ந்திருந்த புன்னகையோடு உப ஒளியாய் மிளிர்ந்து கொண்டிருந்தது.
******