
ஆயிரம் முத்தங்கள்
ஆயிரம் முத்தங்கள்
நீ தந்துவிடும் தொலைவில் இருந்தபோது
கோடி வெள்ளிகளால்
பூத்திருந்தது என் வானம்
அன்றுதான்
பூமி சுழல்வதை உனக்கு நான்
விளக்கிக் கொண்டிருந்தேன்
நமக்கு மேல்
வரிசையாய் மின்னிக் கொண்டிருந்த
மூன்று வெள்ளிகள்
மொட்டைமாடி விளிம்பில் மறையும்போது
ஒரு முத்தம் மீதமிருந்தது
அப்படியானால் நாளை நீ
ஆயிரத்தோரு முத்தம் தர வேண்டும்.
***
மீன் முள்
வேலை இடைவெளியில்
உணவருந்தச் சென்றேன்
மிச்சமில்லாமல் வழிக்கப்பட்டிருந்த
குழம்புச் சட்டியின்
அடி ஆழத்தில் கிடந்தன
இரு மீன் துண்டுகள்
ஐந்து மீன்களை ஐயாயிரம் பேருக்கு
பகிர்ந்தவர் அருகில் இருந்திருந்தால்
கொஞ்சம் குழம்பு கேட்டிருப்பேன்
அந்நேரத்தில் அவரும் இல்லை
தனியாகச் சிதறிக் கிடந்த
மீனின் ஒரு கண்ணைப் பார்க்க
பரிதாபமாக இருந்தது
வெறுப்பில் திரும்பிவிடலாம் என்று நினைத்தேன்
ஆனால்
தின்பதற்காகக் கொலையுண்டு
பல இன்னல்களைத் தாண்டி
மேசை மேல் வந்திருக்கும் இதை
குப்பையிலிட்டால்
அடுத்த ஜென்மத்தில் என்னை எவரேனும்
இங்கனம் செய்யக்கூடும் என்ற பயத்தில்
தின்னத் தொடங்கினேன்
இப்போது
என் தொண்டையில்
குத்தி நிற்கிறது
ஒரு முள்.
***
கீழே விழும் கடல்
மழை பெய்தால்
விழ இடமில்லை
உலர நிலமில்லை
ஆனாலும் விடாமல் பெய்கிறது
வைரமழை
கூரையும் இல்லாமல்
குடையும் இல்லாமல்
வளையங்களில் குடியிருக்கும்
ஒருவன்
வால் நட்சத்திரங்களை
வானுக்குத் திருப்பி அனுப்பி
கடலைத் தேடுகிறான்
மிதக்கும் அவன் வீட்டை
நீரிலிட்டு நீந்தச் செய்து நிலத்தை அடைவதே
அவன் இலக்கு
எங்கும் கடல் இல்லை
இருக்கும் ஒரே கடலும்
ஒரு கோளத்தில் நிறைந்துள்ளது
இப்போது
அந்த கோளத்தைக் கவிழ்த்து
கடலைச் சிந்த வைக்க வேண்டும்
அதற்கென்ன வழியென்று கூறுங்கள்
கோளத்தில் எப்படி கடல் நிறைந்தது
என்பதை
அவன் பின்னால் கூறுவான்.
******