நள்ளிரவில் சம்பளம்!
அருகில் அந்நேரத்துக்கே (அதிசயமாகத்) திறந்திருந்த ஒரு தேநீர்க் கடையில் தேநீர் பருகி, அவரிடமே விசாரித்து மின்சார ரயில் பிடித்து சைதாப்பேட்டை வந்து சேர்ந்தோம். வெளியே வந்ததும் எதிர்ப்பட்ட ஒருவரிடம், “ஏங்க, கொத்தவால் சாவடி தெரு எந்தப் பக்கம் இருக்குது..?” என்று கேட்டோம். அவர் கை காட்டினார். “இப்டியே போனீங்கன்னா ஒரு ரோடு ஜாயிண்ட் வரும். அதைத் தாண்டி நேராவே போனீங்கன்னா கூப்பிடற தூரந்தான்.”. சாதாரணமாக ஒரு மனிதன் கூப்பிடுவது கேட்கும் தூரத்தைத்தான் ‘கூப்பிடுற தூரம்’ என்பார்கள். ஆனால், நாங்கள் சென்ற பாதையில் போனோம், னோம், ம், கொ.சா. தெரு வந்தபாடில்லை. வேறொருவரிடம் வழி விசாரித்த பிறகுதான் தெரிந்தது- நடிகர் விசு, கையில் மைக்கையும் வைத்துக்கொண்டு கூப்பிட்டால் எத்தனை தூரம் கேட்குமோ அத்தனை ‘கூப்பிடுகிற தூரத்தை’ முதல் ஆசாமி சொல்லித் தொலைத்திருக்கிறார் என்பது.
ஒருவழியாக அந்த சைதாப்பேட்டை வீட்டைக் கண்டுபிடித்து, எங்களின் பாஸ்போர்ட், விசாவைக் (கம்பெனி தந்த லெட்டர்தான், ஹி… ஹி..) காட்டி, அங்கிருந்தோரின் ஜோதியில் ஐக்கியமானோம். சற்று நேரத்தில் குளித்துத் தயாராகி, அலுவலகத்தில் ஜாயினிங் ரிப்போர்ட் கொடுத்து விடலாம் என்று அண்ணா சாலையில் இருந்த அலுவலகம் நோக்கிப் புறப்பட்டோம். மெயின் ரோடுக்கு வந்தால், சென்னைக்கு முதன்முதலாக வருகிறவர்கள் அடைகிற பிரமிப்பு எங்களையும் தாக்கியது – “பின்புறத்தில் நெருப்பு வைக்கப்பட்டது போல இந்த ஜனங்களெல்லாம் எங்கேடா இப்படி ஓடறானுங்க.?”
பேருந்தில் “டிவிஎஸ்’ன்னு கேட்டு டிக்கெட் எடுங்க. ஸ்டாப்பிங்ல எறங்கினதுமே எதிர்ல பாத்தா கம்பெனி போர்டு தெரியும்.” என்று காலையில் அறிமுகமான அறை(அரை) நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். இறங்கியதும் கண்ணில் பட்டது ‘ஸ்பென்சர் ப்ளாசா’ என்கிற மகத்தான பெரிய கட்டிடம். அன்றையத் தேதியில் சென்னையிலிருந்த ஒரே பெரிய மால் அதுதான். இந்தப் புறமாகத் திரும்பிப் பார்த்தால் சாலையின் எதிர்புறம் கம்பெனியின் போர்ட் தெரிந்தது. போய் எங்கள் சென்னை விஜயத்தைத் தெரிவித்துவிட்டு, மாலையில் வேலைக்கு வருவதை உறுதி செய்து கொண்டு, ஸ்.ப்ளாசாவுக்குள் நுழைந்து சுற்றினோம்- வாய் பிளந்து அதிசயமாகப் பார்த்தபடி. எதையும் வாங்கவில்லை, வாங்குகிற அளவிலும் விலைகள் இல்லை என்பது வேறு விடயம்.
மதுரை மக்களுக்கும் சென்னை மக்களுக்கும் பேசும், பழகும் முறைகளில் நிறைய வித்தியாசம் இருக்கத்தான் செய்தது. சட்டென்று ஒன்றிவிட இயலவில்லை. ஏதோ, மிஷினோடு மிஷினாய் வேலை பார்த்தோமா, காலை அறைக்குச் சென்று உறங்கினோமா, சமையலம்மையார் உணவென்ற பெயரில் ஏதோ பொங்கி வைப்பதை டப்பாவில் அடைத்து மறுபடி வேலைக்கு வந்தோமா என்று நாட்கள் மிகவே இயந்திரத்தனமாய் நகர்ந்தன. வந்த சம்பளம் கைக்கும் வாய்க்கும் பற்றாத நிலையிலேயே இருந்தது. எனவே, சென்னை வெகு விரைவிலேயே சலிப்புத்தட்ட, வெறுப்புத்தட்ட ஆரம்பித்தது. இந்த உணர்வுகள் எனக்கு மட்டும்தான். என்னோடு வந்து சேர்ந்திருந்த அந்த நண்பனுக்கு இல்லை, அவன் எப்படியோ இந்த வாழ்வுடன் ஒன்றி விட்டிருந்தான்.
இப்படியே சலித்துக் கொண்டபடியே எட்டு மாதங்கள் வரை ஓட்டிய என்னால் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல், மதுரைக்கு லீவுக்குப் போனவன், அங்கிருந்தே தபாலில் என் ராஜினாமாவை அனுப்பிவிட்டு, ஊரிலேயே தங்கி விட்டேன். தங்கி என்ன செய்தேன் என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, சென்னையில் இருந்த நாட்களில் எனக்குச் சுவாரசியம் தந்த ஒருசில விஷயங்களைச் சொல்லி விடுகிறேன்.
மதுரையில் ஒன்றாம் தேதி பிறந்தவுடன் டாணென்று சம்பளம் கையில் கிடைத்துவிடும். அப்படிப் பழகியிருந்த எனக்கு, சென்னையில் வித்தியாச அனுபவம் கிடைத்தது. முப்பத்தொன்றாம் தேதி நள்ளிரவிலேயே ஷிப்டிலிருந்த நண்பர்கள், “ப்ரதர், சம்பளம் போட்டாச்சாம். வாங்க போய் வாங்கலாம்” என்று போனார்கள்.
“என்னங்க இது நடுராத்திரில போயி ஸாலரி..?” என்று அதீத வியப்புடன் கேட்டேன்.
“மார்னிங் டூட்டி பாக்கறவங்க காலைல வாங்கிக்குவாங்க. நைட் டூட்டி பாக்கறவங்களுக்கு இப்டித்தான் நைட்லயே செட்டில் பண்றது இங்க வழக்கம். நம்ம கேஷியர் இதுக்காகவே மாசத்தோட கடைசி நாள்ல சாந்திலயோ, தேவி பாரடைஸ்லயோ நைட் ஷோ பாத்துட்டு வந்து சம்பளத்தைப் போட்றுவார்” என்றார்கள். வியப்புடன் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டதுடன், அந்த அதிசயமான கேஷியரின் முகத்தையும் ஒருமுறை கவனித்து வைத்துக் கொண்டேன். பின்னாளில் நான் வேலூர் அலுவலகத்துக்குச் சென்ற சமயம், அவர் பதவி உயர்வு பெற்று அங்கே அலுவலகக் கண்காணிப்பாளராக வருவார் என்பதை அந்நேரத்தில் அறிகிற ஞானம் எனக்கு வாய்த்திருக்கவில்லையே…
மதுரை அலுவலகத்தில் எங்களுக்குக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. எங்கள் செக்ஷனில் வேலை இல்லாத சமயம், எந்த செக்ஷனில் வேண்டுமானாலும் புகுந்து புறப்படுவோம். எல்லாரையும் தெரிந்திருக்கும். சென்னையில் அப்படியில்லை. எடிட்டோரியல் என்பது நாங்கள் நுழையத் தடை செய்யப்பட்ட பகுதி. அங்கிருப்பவர்கள் தேவதூதர்கள் போன்று கெத்துடன் நடந்து கொள்வார்கள். எனவே, பட்டை கட்டிய குதிரை போல அட்டெண்டென்சில் கையெழுத்தைப் போட்டதுமே, செக்ஷனுக்குள் புகுந்து, இரவு டூட்டி முடிந்து அப்படியே தரையில் சாய்ந்து ஒரு குறுந்தூக்கத்தைப் போட்டு, அதிகாலையில் எழுந்து அறைக்குச் சென்று, மாலை மீண்டும் இதே ருட்டீன். இதுவே எனக்கு சலிப்பைத் தந்திருக்கிறது என்பது இப்போது நினைக்கையில் புரிகிறது.
சென்னையில் இருந்த காலங்களில் ஞாயிற்றுக்கிழமை அறையில் அடைந்து கிடக்காமல் கொஞ்சம் ஊரைச் சுற்றியதில் (திக்கு திசை தெரியாது. பத்து பேத்தை விசாரிச்சாவது போகவேண்டிய எடத்துக்கு எப்டியும் போயிடுவேன். மதுரைக்காரனோட முரட்டு தெகிரியம்) எனக்கு பெசண்ட் நகர் பீச்சும், அங்கிருந்த எட்டு லட்சுமிகளின் ஆலயமும் மிகப் பிடித்திருந்தது. இன்றுவரையில் கூட சென்னையில் பிடித்த இடங்களின் பட்டியலில் அதற்குத் தனியிடம் உண்டு.
சென்னை அலுவலகத்தில் வாரமலரின் பிரபல ஆசிரியரான, டீ கப் முகத்துடன் நடமாடி, சொந்த முகம் காட்டாத அந்த மனிதரைச் சந்திக்கிற வாய்ப்பு எனக்கு அமைந்தது. ஓரிரண்டு வார்த்தைகள் பேசவும் முடிந்தது என்பதிலொரு அற்ப சந்தோஷம். ஹி… ஹி…
இப்படிச் சிற்சில இனிய அனுபவங்களை மட்டுமே துணைக்கு வைத்துக் கொண்டு, எனக்குக் கசந்த சென்னை வாழ்க்கையை உதறிவிட்டு மதுரைக்குப் போய்விட்டேன். அங்கே மீண்டும் வேலைதேடு படலம். மதுரை அலுவலகத்திலிருந்த சமயம் புத்தகங்கள் படிக்கும், சேகரிக்கும் பழக்கம் என்னிடம் தொடங்கியிருந்ததைக் குறிப்பிட்டிருந்தேன், நினைவிருக்கிறதா..? இப்போது வீட்டில் ஒரு அறை நிறையப் புத்தகங்கள் குவிந்திருந்தன. ஒருநாள் வீட்டுக்கு வந்த நண்பன் ராமன், (என்னோடு ஒன்றாக ஜாயின் செய்து, அரசு வேலை கிடைத்துப் போனான் என்று முன்பு சொல்லியிருந்தது நினைவிருக்கிறதுதானே..?) சட்டென்று ஒரு ஐடியா தந்தான். “ஜி, பேசாம நீங்க ஒரு மொபைல் லைப்ரரி ஆரம்பிச்சிடுங்க. இப்ப வர்ற எல்லா வார, மாசப் பத்திரிகையும் வாங்கிப் படிக்க யாராலயும் முடியாது. தினம் ரெண்டு புக் தர்றேன், மாசம் இருபத்தஞ்சு ரூபா சந்தான்னா நிறையப் பேர் சேருவாங்க. அவங்க படிச்சு முடிச்சதும் புக்கும் உங்ககிட்டயே சேந்துரும்” என்றான்.
ஆஹா, செமையான மார்க்கெட்டிங் ஐடியாவாக இருக்கிறதே என்று அதை உடனே ஓகே செய்தேன். அவன் நடத்திக் கொண்டிருந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் ஏற்கனவே காலை வேளையில் பார்ட் டைம் இன்ஸ்ட்ரக்டராக இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு வருகிற மக்களின் மூலமாகவே கேன்வாஸ் செய்ததில் ஐடியா தீயாகப் பற்றிக் கொண்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் முதல் மாதத்திலேயே. ஒருசில புத்தகங்கள் மட்டும் இரண்டு பிரதிகள் வாங்க வேண்டியிருக்கும். மற்றவை சிங்கிள் காப்பியே போதுமானது. மாதம் முழுவதும் தருகிற அளவுக்கு அன்று வார, மாத இதழ்கள் நிறைய இருந்தன.ஷாப்பிங் மால்களும், மல்டிபிள் ஸ்க்ரீன்களும், இத்தனை சேனல்களும், சீரியல்களும் போட்டிக்கு அன்றைக்கு இல்லாததால் எனக்கு நிறைவான வருமானமும், புத்தகங்களும் சேரத் துவங்கியது.
இதைத் தவிரவும் இன்னொரு வேலையும் செய்தேன். என் அண்ணியின் தம்பி வைதீகராக இருந்தான். அவனுடன் சேர்ந்து கொண்டு, அதிகாலையில் நடக்கக் கூடிய கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்றவற்றுக்கு உடன் செல்லத் துவங்கினேன். பாக்யராஜ் சொல்வது போல ‘ஸ்வாஹா’ பிசினஸ் எல்லாம் கிடையாது. ஒழுங்காக உச்சரித்துச் செய்து வைக்க வேண்டியது அவசியம் என்பதால் அவற்றுக்குரிய மந்திரங்களை முறையாகப் பாடம் செய்து கொண்டேன்.
எப்படியாயினும் காலை ஒன்பது மணிக்குள் அந்த வேலை முடிந்துவிடும். பிறகு இன்ஸ்டிட்யூட்டில் வாத்தியார் வேலை, மாலையானால் புத்தகங்கள் டிஸ்ட்ரிப்யூஷன்… இப்படிச் செய்கிற மூன்றிலும் வருமானம். ஆக, வேலை தேடுதல் என்பதில் தீவிரத்தனம் இல்லாமல், ‘கழுத கிடைக்கறப்ப கிடைக்கட்டும்’ என்றோர் அலட்சியம்தான் இருந்தது. அப்படியிருந்திருக்கக் கூடாதோ என்று இப்போது தோன்றுகிறது. என்ன செய்ய..? நடக்க வேண்டியவை நடந்தே தீரும் என்பது வல்லவன் வகுத்த விதி. அதை எவரால் மாற்றிவிட முடியும்..?
அப்படித்தான் வாழ்க்கையில் அடுத்த திருப்பமும் வந்தது. மதுரை அலுவலகத்தில் எனக்கு அறிமுகமான நண்பர்களில் நரேஷ் என்றொரு இளைஞன் இருந்தான். அப்பா, அம்மா, அத்தை, இரண்டு தங்கைகள் என்று மொத்தக் குடும்பத்தையும் அவன் வேலை செய்துதான் தாங்கி வந்தான். ஒரு இளைய சகோதரன் போன்று பழகி வந்தவன் அவன். எனவே, பழங்காநத்தத்தில் அலுவலகம் இருந்த தெருவுக்கு இரண்டு தெரு தள்ளியிருந்த அவன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதுண்டு. அவன் வீட்டினரும் என்னை மூத்த மகன் போன்றே நடத்துவார்கள். அத்தனைப் பேரும் பாசமாக இருப்பார்கள்.
ஒருமுறை அவனைப் பார்க்கச் சென்றபோது, அலுவலகம் சென்றுவிட்டான் என்றார்கள். சரி, வீட்டிற்கே போகலாம் என்று திரும்ப வந்து கொண்டிருந்தேன். மெயின் ரோட்டில் அலுவலகத்தைக் கடந்துதான் என் வீட்டிற்குச் செல்லும் ரோட்டைப் பிடிக்க வேண்டும். அப்படி அலுவலகத்தைக் கடக்கையில், கேட்டைத் திறந்து கொண்டு அந்த நிமிடந்தான் நரேஷும், இன்ஜியுமாகப் பேசியபடி வெளியே வந்தார்கள். என்னைப் பார்த்ததுமே, “நில்லுங்க கணேஷு” என்று கையாட்டினான் நரேஷ். “அட, கும்பிடப் போன தெய்வம் குறுக்கயே வந்துடுச்சே” என்றார் இன்ஜி.
“போங்க சார்… என்னைய் போயி தெய்வம், கிய்வம்னுக்கிட்டு” என்று நாணினேன். “அதில்லய்யா. வா, டீ சாப்பிடலாம்” என்று கடைக்கு அழைத்துச் சென்று டீ வாங்கித் தந்துவிட்டு, மெல்ல அந்தக் குண்டைத் தூக்கி என்மீது வீசினார்.
“நம்ம ஆபீஸ் வேலூர்ல புது ப்ரான்ச் ஆரம்பிக்கப் போறாங்க. நீ அங்க போய் ஜாயின் பண்ற. என்ன..?” என்று அனுமதியாய்க் கேட்காமல், உத்தரவாக அவர் சொல்ல, நான் அதிர்ச்சியாக அவரையே பார்த்தேன். –அதிர்ச்சி என்று வந்தபின் தொடரலாமோ..? அடுத்த பகுதிக்குக் காத்திருங்கள்.
(சரக்கு இன்னும் உண்டு…)