இணைய இதழ்இணைய இதழ் 74கட்டுரைகள்

மண்ணும், மனிதர்களும் – வருணன்

கட்டுரை | வாசகசாலை

ராஜேஷ் வைரபாண்டியனின் ‘தேரி’ புதினத்தை முன்வைத்து

மிழ்நாட்டின் எல்லைக்குட்பட்ட நிலப்பரப்புக்குள் குறிஞ்சி துவங்கி பாலை ஈறான ஐவகை நிலங்களுள் பாலையைத் தவிர ஏனைய நிலங்கள்  தாம் இருக்கின்றன என்பதே நம்மில் பலருக்கும் இருக்கிற பொதுவான புரிதல். பொதுவாக பாலை என்பது தனி நிலமல்ல என்றும் குறிஞ்சி, மருதம் போன்றவை, பெரும்பாலும் கோடையின் வெம்மையால், தம் இயல்பிழந்து திரிந்து பாலை நிலத்திற்கென கொள்ளப்படும் தன்மைகளை கொள்ளுகின்றன என்றும் அறிகிறோம். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத பாலை நிலத்தன்மையை தூத்துக்குடி, திருச்செந்தூர் மாவட்ட வட்டாரங்களில் அமைந்துள்ள செம்மண் மேடுகள் நிறைந்த மணற்பெருவெளியான தேரிக்காட்டுப் பகுதிகளில் காணலாம். பாலை போன்றிருப்பினும் இந்திய நிலப்பகுதியில் வேறெங்குமே காணக்கிடைக்காத இச்செம்மண்  மேடுகள் நிறைந்த தேரி நிலம் தனித்துவமானது.  கோவில்பட்டி வட்டாரங்களில் காணக்கிடைக்கிற கரிசல் பூமியைப் போல நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மையற்றதாகவும், நெய்தலும் மருதமும் முயங்கிய நிலமாகவும் இருக்கிறது தேரி.

நீரைத் தேக்கவியலாத இந்நிலப்பகுதியில் பசுமையை எதிர்பார்க்க இயலாதெனினும், பனையும், கருவேலமும் சூழ்ந்த பிரதேசமாய் இருக்கிறது.  சவுக்கும், கோரைப்புற்களும், முந்திரிப்பழங்களும்  விளைகிற பூமியாகவும் தேரிக்காடு இருக்கிறது. பனையும், பனைசார் தொழிலுமே தேரி மக்களின் பிரதான தொழிலாய் இருப்பினும், கோரைப் புற்கள் கால்நடைகளுக்கு உணவாவதால் மேய்ச்சலும் இங்குண்டு. செம்மணற்மேடுகளால் நிறைந்த தேரிக்காட்டில் காற்றின் திசைக்கேற்ப மேடுகள் கரைவதும், சடுதியில் காற்று கூட்டிச் சேர்க்கிற இடங்களில் புதிய மேடுகள் எழுவதுமென இயற்கையே நிகழ்த்துகிற மாயாஜாலம், இதனை புதிர் நிரம்பிய நிலமாகவும் தோற்றங்கொள்ளச் செய்கிறது. மண்ணின் குணம் அங்கு வாழும் மனிதர்களுக்குள்ளும் வேர் பிடித்துச் செழிக்கிறது. நிலத்தின் தன்மை ஏறிய மனிதர்களின் வாழ்க்கை நிலத்தின் சாயையைக் கொள்கின்றன. 

நிலா ரசிகனாய் கவிதைகள் வழியே நமக்கு பரிச்சயமான ராஜேஷ் வைரபாண்டியனின் முதல் புதினமான  ‘தேரி’ , அதிகம் இலக்கிய வெளியில் பேசப்படாத தேரிக்காட்டினையும் அதன் மனிதர்களையும் நம் கரங்களில் கிடத்துகிறது. 

மிகச் சாதாரணமான ஒரு காதல் கதை எனும் பாவனையில் செல்லக்குட்டியின் கதையாகத் துவங்குகிறது நாவல். செல்லக்குட்டியும் அவனது பால்யத் தோழர்கள் அசரியாவும், பாதாள முனியும்  வயதிற்கேயுரிய குறும்புகளுக்குள் நம்மையும் இழுத்துச் செல்கிறார்கள். நாயகன் செல்லக்குட்டி தங்கராணியின் கடைக்கண் பார்வையில் வீழ்ந்துகிடக்க, நண்பர்களிருவரின் பகடியோடு துவங்குகிறது கதை. 

அடுத்த அத்தியாயத்திலேயே செவ்வந்தி சந்தோசராஜின் கதையும் துவங்க, காதற்கதைகள் ஒன்றல்ல இரண்டென ஆகிறது. மாறி மாறி பெண்ணின் ஜடைப்பின்னலைப் போல இவ்விரண்டு காதற்கதைகளும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் விரிகிறது. இரு கதைகளும் நிகழும் காலங்களை நேரடியாக எங்கும் சொல்லாமல் சில இடங்களில் காட்சி விளக்கங்களாய் வந்து போகிற விடயங்களை வைத்து செல்லக்குட்டியின் கதை தொன்னூறுகளில் நடக்கிறது என்பதையும், செவ்வந்தியின் கதை காலத்தின் அதற்கும் முந்தைய பக்கங்களைச் நிறைத்திருக்கிறது என்பதையும் நாம் அறிந்து கொள்கிறோம். 

இரு காலகட்டத்தின் கதைகளும் வளரவளர நாம் செவ்வந்தியின் மகள் தான் செல்லக்குட்டி காதலிக்கும் தங்கராணி என்பதை அறிகிறோம்; கூடவே தங்கராணியின் அண்ணன் தங்கவேலுவையும் அவனது சாதித் திமிரையும்.   

செவ்வந்தி- சந்தோசராஜின் கதை

தேநீர் கடை வைத்திருக்கிற கண்ணாடிக்காரரின் மூன்றாவது பிள்ளை செவ்வந்தி. தேநீர் போடுவதைத் தவிர அவரும் தெரிந்த விருப்பமான இன்னொன்று சாதிப் பெருமைப் பேசுவது. செவ்வந்தியின் உயிர் தோழி பேச்சி அண்டைவீட்டுக்காரி. மூத்த அண்ணன் அதிவீரனும் அக்காள் தங்கபுஷ்பத்துக்கும் அடுத்துப் பிறந்த கடைக்குட்டியெனும்  செல்லங் கொஞ்சலோடு வலம் வரும் அவள் ரூதுவானதை மூத்தவளைக் காட்டிலும் வெகுவிமரிசையாக கொண்டாடித் தீர்க்கிறார் கண்ணாடிக்காரர். அவ்விழாவில் வேலை செய்யவென வந்து தன் செய்நேர்த்தியால் எல்லோர் மனதையும் அள்ளுகிற சந்தோசராஜ், செவ்வந்தியுடையதையும் சேர்த்தே அள்ளிக் கொள்கிறான். அவர்களின் ரகசியக் காதல் வளர்ந்து ஒரு கட்டத்தில் அவள் வயிற்றுக்குள் சூல் கொள்கிறது.  அவர்கள் இருவரும் வேற்று சாதியினரென்பதும் காதலை அது கருவறுக்கத் துடிக்கிறது என்பதை அறிந்தும் தொடர்கிறது அவர்களது நேசம். ஒரு முறை ஆட்டுத் திருடனென தவறாக கருதப்பட்டு இரவில் செவ்வந்தியைச் சந்தித்துவிட்டுச் சென்ற சந்தோசம் நையப்புடைக்கப்பட நைந்து போகிறாள் செவ்வந்தி. 

பேச்சி மட்டுமே முதலில் அறிகிற ரகசியமாய் செவ்வந்தி கருவுற்ற சேதியை தான் மட்டுமே அறிந்த ரகசியமாய் காக்க எண்ணுகிறாள். ஊரில் யாரிடமும் பேசாத புதிரான பொட்டம்மையை நாடுகிறார்கள் தோழிகள். காதுங்காதும் வைத்தது போல மீண்டுவிட்டதாய் கொண்ட நிம்மதி கொஞ்ச காலத்திலிலேயே பொய்த்துப் போக செவ்வந்தி ஊர் வாய்க்கு பயந்து அதிவீரனிருக்கும் தின்னவேலிக்கு (திருநெல்வேலிக்கு) அனுப்பப்படுகிறாள். பிரசவம் முடிந்து ஆண்மகவோடு அவள் வந்துவிட்ட சேதியறிந்து பரவசத்தில் பரபரக்கிற சந்தோசம் அவளைப் பார்க்க வீட்டிற்குச் செல்ல, குழந்தையை கூட்டிக் கொண்டு  வலுக்கட்டாயமாக ஊரிலிருந்து அவனது கழுதைகளுடன் விரட்டியடிக்கப்படுகிறான். விதி எனும் ஒப்பனையில் சாதியக் கத்தி அவர்கள் வாழ்வில் கூராக இறங்குகிறது. செவ்வந்திக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டதை அறியவருகிற சந்தோசம் பெயரில் மட்டுமே சந்தோசத்தைக் கைக்கொண்டு தனது ஜீவனை நோய்தின்னக் கொடுத்து மருத்துவமனையில் மாள்கிறான். 

செல்லக்குட்டி – தங்கராணியின் கதை

ஈர்ப்பென்பது இயல்பிலேயே இருக்கிற காந்தத்தின் எதிர்முனைகளாய் செல்லக்குட்டி தங்கராணி இருவரின் பரஸ்பர ஈர்ப்பில் தான் நாவலே துவங்குகிறது. வெகு விரைவிலது காதலாய் கனிகிற அதன் பிரவாகத்தை அணையெனக் குறுக்கிட்டு தடுப்பதும் சாதியம் தான். கழுதை மேய்க்கிற, ஊரின் அழுக்குகளை வெளுக்கிற செல்லக்குட்டியின் நிழல் அண்டுவதைக் கூட அனுமதிக்க மனமில்லாத தங்கராணியின் அண்ணன் தங்கவேலு எப்படி அவர்கள் குலாவச் சகிப்பான்? இயல்பிலேயே துடுக்கான தங்கராணிக்கு அண்ணனை மீறுவது அத்தனையொன்றும் சிரமமில்லை. அவன் வாய்ச்சொல் வீரனென நன்கறிந்தவளவள். அம்மையின் எதிர்ப்பு தான் புரியாத புதிராக குழப்புகிறது அவளை. சாதியச் சேற்றில் மூழ்கிய மூளைக்காரி தான் அவளும் எனினும், தங்கராணியின் காதல் விவகாரத்தில் அதுவல்ல காரணமென தீர்க்கமாய் மறுக்கிறாள். விளக்க மறுக்கும் அம்மையின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வதென அறியாமல் தவிக்கிறாள் தங்கம்.  “…நான் ஒன்னும் காதலுக்கு எதிரியில்ல. ஆனா அவன் வேண்டாம். வேற யாரனாலும் கட்டிக்க” தங்கத்தின் முகம் பார்க்காமலேயே கூறினாள் தாய் [ப:57], எனும் ரீதியிலான திட மறுப்பாய் அது இருக்கிறது. 

வாசிப்பனுபவம்  

வழமையில் கடந்தகால வாசிப்பனுவங்களை முன்வைத்து அனுமானிக்கிற புள்ளிகளை நோக்கியே கதையின் நகர்வு இருக்குமென்ற ஊகம் மனதில் தொக்கி நிற்கும். கதையின் போக்கு குறித்தான, அதன் முடிச்சுகள் இவ்விதமாகத் தான் அவிழும் என்பன போன்ற சிற்சில சாத்தியங்களை வாசக மனம் உருவகித்துக் கொள்ளும். பெரும்பாலும் அச்சாத்தியங்களுக்கு அப்பால் ஊகிக்கப்படாத வேறொரு புதிய கோணத்தில் கதையாடல் நிகழத்துவங்கும் போது நம்மை நிமிரச் செய்து இன்னும் வாசிக்கும் வெறியை ஊட்டும். 

இரண்டு காலகட்டங்களில் நிகழுகிற இரு காதற்கதைகள் எனும் போதே கதைகளின் ஏதோ ஓர் இழை எங்கோ ஓரிடத்தில் பின்னி பிணையுமென வெகு சாதாரணமாக அனுமானித்துவிடலாம். ஆனால் அது எப்படி நிகழலாம் எனும் சாத்தியங்களை மனதில் ஓர் ஓரத்தில் அசைபோட்டபடியே பக்கங்களைக் கடக்கிற வாசகனின் கண்கள் நிலைகுத்தி நிற்கிற அளவுக்கு, ஊகங்களின் வரிசையிலேயே அல்லாத புனைவிற்குள் இதுவரையிலும் மிக மிக அரிதாக நிகழ்ந்திருக்கிற பிரிதொன்றை தொட்டு கதை விரிகிறபோது கதையனுபவம் வேறு ரூபங்கொள்கிறது. செவ்வந்தியே தங்கராணியின் அம்மை என்று நாம் அறிந்துகொள்கிற போதே இரு கதைகளை பிணைக்கும் பசை அது தான் என விளங்கி கொள்கிறோம். ஆனால் கதையோட்டத்தின் மிக முக்கியமான திருப்பம் இந்த உறவு வெளிப்படுவதால் நிகழுவதில்லை. மாறாக தனது காதல் ஏன் தனது தாயால் தாட்சணியமின்றி மறுக்கப்படுகிறது எனும் கேள்விக்கு தங்கராணிக்கு (அவள் வாயிலாக நமக்கும்) கிடைக்கிற பதில் நம்மை கண நேரத்திற்கேனும் மூர்ச்சையாக்குகிறது. ஒரு நாடகத்தின் அதீதமான உணர்வெழுச்சித் திருப்பமென அது (ப:126) தங்கராணியின் பெரியம்மாவின் ஒற்றை பதிலில் நிகழ்கிறது. அவளோடு சேர்த்து நம்மையும் அசைத்துப் பார்க்கிறது. இந்தப் புள்ளியிலிருந்து கதையாடல் வேறொரு பரிமாணம் கொள்கிறது நம் மனத்திரையில்.  உண்மையில் ஒரு படைப்பாளி வாசகனை மெல்ல தன்வயப்படுத்தி தன் புனைவுலகை நிர்மாணித்துக் கொள்ள கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்கிறார்.  அலையடிக்காத அதன் போக்கில் இருந்தார் போல சட்டென ஒரு உடைவு ஏற்பட்டு தன் முழு ஆகிருதியோடு புனைவு விரிவு கொள்ளுகிற நாடகீய உச்ச தருணம் அதன் போக்கையே சுழற்றியடித்து வாசகனைக் கிறக்கும். அப்படியான தருணமாக மேற்ச்சொன்ன தருணம் இருக்கும். புனைவு தருகிற, நாம் ஊகிக்கும் வாய்ப்பு குறைந்த, அத்திருப்பத்திலிருந்து வேறொரு கண் கொண்டு கதையை நாம் உள்வாங்கத் துவங்குகிறோம். அதலிருந்து வளர்ந்தபடியே செல்லும் புனைவின் பாதை, இன்னொரு உச்சத்த்திற்கு இழுத்துச் சென்று ஒரு திருப்பத்தில் (ப: 217) மீண்டும் சுழற்றியடிக்க சுவாரசியம் இன்னும் அதிகரிக்கிறது. 

மேற்சொன்ன இரு திருப்பங்களுமே மெலோடிராமாவிற்காக கதையில் சேர்க்கப்பட்ட அம்சங்கள். ஏனெனில் இவை வாசக ஆர்வத்தை தக்கவைத்துக் கொள்கிற விதத்தில், வாசிப்பின் சுவாரசியத்தை இன்னும் முடுக்கிவிட ஆசிரியரால் உருவாக்கப்பட்ட உந்துக் கருவிகள். சாதிய பாகுபாடு மனிதர்களை எப்படித் துண்டாடுகிறது, சிலர் கட்டியிருந்த எதிர்காலங்குறித்த கனவுகளை கலைத்துப் போட்டு, கனவுக் கோட்டைகளை மணல்வீடென மிதித்துச் சரிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவது கதையின் மிக முக்கியமான அடுக்காக இருக்கிறது. சாதியத்தால் ஏற்படுகிற அவமானங்களை மிக நுட்பமாக கதாபாத்திரங்களின் வாழ்வனுபவங்களாகவே காட்சிப்படுத்தி இருப்பது நல்ல அம்சம். ஆசிரியர் கூற்றென அநாவசிய பிரச்சார நெடியடிக்கிற விளக்க வியாக்கியானங்கள் என எதுவுமே இல்லை. கதாபாத்திரங்களை எழுத்து வெறுமனே பின்தொடர்கிறது. அதன் போக்கில் தங்களது கதையை தாங்களே விரித்து காட்டுகின்றனர் கதாபாத்திரங்கள். 

இப்படியான எழுத்தில் பாத்திர வார்ப்பென்பது மிக முக்கியமான இடம் பிடிக்கக்கூடியது. ஏனெனில் கதபாத்திரம் தன்னையே வெளிப்படுத்திக் கொள்கிற கதையாடல்களில், பாத்திரங்களோடு வாசகருக்கு பிடிப்பென்பது ஏற்பட்டால் மட்டுமே புனையப்பட்ட கதை முழுமையாக வாசகரோடு பேசும். அல்லேல் எல்லா கட்டுமானங்களும், புனைவுக் கருவிகளும் வாசகன் முன் பரப்பப்பட்ட வெறும் காட்சிப்பொருட்களென சுருங்கிவிடும். மெல்லத் துளிர்த்து நம்முள் வளர்ந்து வியாபிக்கிற பாத்திரவார்ப்புகள் தான் ’தேரி’யின் பெரும் பலம். 

கதையின் நாயகனான செல்லக்குட்டி சுழலும் புனைவுச்சக்கரத்தின் மைய அச்சேன இருப்பினும், ஆரக்கால்களைப் போலிருக்கிற பிற முக்கிய மற்றும் துணைப் பாத்திரங்களும், தம்மளவில் ஒரு முழுமையை கொண்டுள்ளனர். வெறுமனே வந்து போகாமல், மையக் கதைக்கு தொடர்பற்ற வெறும் துணுக்குத் தோரணங்களாக, பக்க நிரப்பிகளாய் அல்லாமல், நிகழுகிற அத்தனையும் கதைமையத்தின் ஓட்டத்தோடு இயைந்து வருகின்றார் போலவே எல்லா கதாபாத்திரங்களும் எழுதப்பட்டுள்ளனர். தோழமையின்றி காதல் வாழ்தல் கடினமென்பது உலகப்பொது உண்மை. அதற்கொப்ப செவ்வந்தியின் கதையில் வருகிற பேச்சியும், செல்லக்குட்டியின் கதையில் வருகிற அசரியா பாத்திரமும் ஈர்க்கின்றனர். அசரியா தனது முரட்டுத்தனத்தால் நண்பனின் கேடையமாக இருக்கிறானென்றால், பேச்சியோ தனது துடுக்குத்தனத்தால் தன் தோழிக்கு நிழலாகிறாள். 

மேம்பட்ட இனமாக தம்மைக் கருதிக் கொள்ளும் மனிதர்களின் ஆகப் பெரிய முட்டாள்தனம் எப்போதும் போர்கள் தாம். அதற்கு நிகரான முட்டாள்தனங்களாக நிறவெறியையும், சாதிவெறியையும் கொள்ள முடியும். இவ்விரண்டிலும் மிகக் குறிப்பாக சாதி வெறி ரொம்பவே விசித்திரமானது. நிறவெறி எனும் மடமையிலாவது வெளிப்படையான நிற வேற்றுமை என்பது இருக்கிறது. ஆனால் சாதியம் உண்மையில் உள்ளீடற்றது. வழிவழியாக ஊதிப்பெருக்கப்பட்டுவரும் வெற்றுக்குமிழ். சாதிய வெறியில் ஊறிய முந்தைய தலைமுறை மனிதர்கள் அம்மடமையை கடமை போல அடுத்த தலைமுறையினருக்குக் கடத்துகின்றனர். தங்கவேலுவின் வெறியின் வேர் அவனது தாத்தன் கண்ணாடிக்காரரில் இருந்து கிளர்ந்திருப்பது ஓர் உதாரணம்.  

கழுதை மேய்க்கிற சித்திரப்பூவை கண் வைத்திருக்கும் தங்கவேலுவுக்கு  அவளுடலைத் துய்ப்பதில் நெருடலெதுவும் இல்லை. ஆனால் அதுவே அவர்கள் தனித்திருக்கும் ஒரு தருணத்தில் அவள் தனது செருப்புகளை போட்டுப் பார்க்க ஆசைப்பட்டு கேட்பதை தாங்கவொண்ணா மீறலாக பாவிக்கிறான். அவளது உடல் கூட தனது ஆளுமைக்குட்பட்டதே எனும் மேட்டிமைத் திமிர் அப்பட்டமாக வெளிப்படும் தருணமது. அவனது குணஇயல்பு, சிறுவர்களை மன்னித்து விடுகிற ரேஞ்சர்களை மனதிற்குள் வசைபாடும் அக்காட்சியிலேயே (ப:163) அடிக்கோடிடப்படுகிறது. மேலும் அவன் சித்திரப்பூவை  நடத்துகிற விதத்தால் (ப:165) அவளது நிலை பள்ளியில் சிறுமைப்பட்டு ஒடுங்குகிற செல்லக்குட்டியின் மன அவஸ்த்தையை ஒத்திருக்கிறது. எல்லா உயிர்களும் சம மதிப்புள்ளவை எனும் கருத்தினை காணமற் போன சித்திரப்பூவை தேடுகிற படலத்தை முன்வைத்து நம்மையே மறுபரீசலனை செய்யத் தூண்டுகிறது.  அவளது இன்மை மீது கட்டமைக்கப்படுகிற புரளி செத்தவளை மீண்டும் மீண்டும் சாகடிக்கிறது. அத்தனை எளிதாக ஒரு பெண் மீது ஏவப்படும் புரளி அவளை மட்டுமல்லாமல் அவளது தந்தை பச்சை முத்துவையும் சேர்த்தே செரித்து விடுகிறது. 

சாதியை முன்வைத்து தனது அடக்குமுறையை ஏவுகிறவர்களுக்கு வேண்டுமானால் அது அதிகார போதையைத் தருகிற விசயமாய் இருக்கலாம்.ஆனால் சாதிய துவேசத்திற்கு பலியாகிற மனிதர்கள் மீதான உளவியல் தாக்குதல் மிக மோசமானது. தொடர் சிறுமைப்படுத்தல்களால் ஒரு மனிதனின் சுயத்தை ஒடுக்கி நிர்மூலமாக்குவது ஆகப் பெரிய வன்முறை. சாதி ரீதியான சீண்டல்களும் எள்ளல்களும் இதையை தான் செயலாக்குகின்றன. ஒரு மனிதனின் அறிவுசார் தெளிவு கூட அத்தொடர் தாக்குதலில் நிலைகுலைந்து போகிறது. காரணம் தொடுக்கப்படுகிற சகல தாக்குதல்களும் நுட்பமாக, அறிவுத்தளத்திலேயே அல்லாமல் முழுக்க முழுக்க உணர்ச்சித்தளத்திலேயே கட்டமைக்கப்படுகிறது. 

பட்டதாரியான செல்லக்குட்டி இரு மாதங்களுக்கு பதிலி ஆசிரியராக தான் பயின்ற பள்ளியிலேயே சேர்கின்ற தருணம் மேற்சொன்ன அம்சத்தோடு பொருத்திப் பார்த்து நினைவுகூரத்தக்கது. சமூகக் கட்டமைப்பு வலிந்து திணித்திருக்கிற குலத்தொழிலை முன்வைத்து அவன் மீது வன்மமாக ஏவப்படுகிற எள்ளல் சக ஆசிரியர்களால் மட்டுமல்லாது, வகுப்பு மாணவர்கள் வரை கடத்தப்படுவது அவதானிக்கத்தக்கது. தீண்டாமையை தொடரோட்டக்காரர் கையிலிருக்கும் சிறுதடியை தனக்கு அடுத்திருப்பவருக்கு தருவதைப் போல முந்தைய தலைமுறை அடுத்த தலைமுறையிடம் கையளிக்கிறது. செல்லக்குட்டியின் சுயம் ஒடுங்கி மீண்டும் தனது கிராமத்திற்கே திரும்புகிறான். சமத்துவம் மலர சமவாய்ப்புகள் மட்டுமல்ல, அதற்கு இணையான சமூக அங்கீகாரமும் அத்தியாவசியமானது என்பதை குறிப்பால் உணர்த்தும் இடமிது. நிகழ் யதார்த்தத்தில் சமூக அங்கீகாரமே எட்டாக் கனியாய் இன்னுமிருக்கிறது. 

கதாபாத்திர வார்ப்புகளைப் பொறுத்தவரை கதையோட்டத்தோடு பிணைக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் எனினும் அவர்களில் பலரும் வாசகனுக்குப் பழக்கமான அச்சிலிருந்து வார்க்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் மிகையின்றி தத்தமது இடத்திற்கு நியாயம் செய்வதால் கதையின் ஆற்றொழுக்கு நடைக்கு எவ்விதத்திலும் எவராலும் இடையூறில்லை. வழமையாக கதையாடல்களில் சகல  நற்குணங்களும் பொருந்திய ஒரு இலட்சியவாத பாத்திரம் உருவாக்கப்பட்டால் (தேரியில் அப்படியான பாத்திரமாக ‘வெட்சி’யைக் குறிப்பிடலாம்) அதற்கு நேர் எதிரான தீமையின் முழுஉருவாய் பிறிதொரு பாத்திரம் வார்க்கப்படும். 

தன் பிள்ளைக்கு மட்டுமல்லாது அணிப்பிள்ளைக்கும் இறங்கி தாய்ப்பால் ஊட்டுகிற வெட்சி தேரியின் தேவதையாக மிளிர்கிறாள். அதே வேளையில் செவ்வந்தியின் பாத்திரவார்ப்பு மிக நுட்பமாக படைக்கப்பட்டுள்ளது. காதலில் குழையும் பதின்மளாக நமக்கு அறிமுகமாகிற செவ்வந்தி தன் வாழ்வில் சாரமேறிப் போன கசப்பை கக்கத் துவங்குவது முதலே வேறொரு முகங் கொள்கிறாள். தனது உயிர்த்தோழி பேச்சியின் இழப்புக்கு பதில்கேட்கிற அவளே தான் பெற்ற மகளுக்கு நாம் நினைக்கவொன்னாத காரியங்களை செய்பவளாகவும் இருக்கிறாள். அவளுக்குள் கனற்வது சாதியத்தீயல்ல; மாறாக தன் கனவுகளை அது தீய்த்துப் பொசுக்கிய ஆற்றாமை. தான் வளர்த்த தீயில் தன்னை முழுதும் தொலைக்காதவாளாகவும் அவள் இருப்பது தான் அப்பாத்திரத்தை தனியாகக் காட்டுகிறது. முழுக்க கருப்பு வெள்ளையில் அல்லாமல் சாம்பல் நிறமேறி மிளிர்கிறது செவ்வந்தியின் பாத்திரம்.

 ‘செவ்வந்தி’யாகி அவள் வாழ்க்கையின் சுவடுகளைத் தொடர்ந்தால் மட்டுமே வாசகர்கள் தீதும் நன்றோடும் சேர்த்தே அவளை விளங்கிக் கொள்ள இயலும். அவள் முழுக்க தீதள்ளித் தின்னாதவள் என்பதற்கு மகன் தங்கவேலு தங்களது தாளாக் கோபம் எங்கெருந்து வருகிறதென கழிவிரக்கத்தால் அரற்றிட, அதற்கு விடைதெளியும் முகமாக துளிர்க்கும்அவளது சுயதேடலையும், மனக்குரலோடு உரையாடி கோபத்தின் ஊற்றுக்கண் குறித்து நிகழ்கிற கண்டடைதலுமே சான்று பகரும் (ப:281-82). ஒரு மனிதனுக்கோ அல்லது மனுஷிக்கொ தன்னுணர்வு பெறுதல் என்பதை விட சுயமீட்சிக்கான சிறந்த அறிகுறி ஏது!

தேரிக்காடு செம்மண் நிலமென்மதாலோ என்னவோ வரிசை கட்டி மரணங்களை நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது – பேச்சி, பொட்டம்மை, சந்தோசம், சித்தரப்பூ என. வன்மத்தில் கருக்கொண்டு கொலைகளாக, இயற்கையாய் நோய் விழுங்கிய உயிராய், கண நேர விபத்துகளாயும் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் மனிதர்களின் இருப்பிற்கும் இன்மைக்குமான இடைவெளிகள் கணப்பொழுதில் மறைந்து போவதைக் காட்டுகின்றன. முழுக்க முழுக்க கதபாத்திரங்களின் உரையாடல்களில் வட்டார வழக்கு மணக்கிறது. அவர்தம் வாழ்வியலோடு பிணைந்த எண்ணற்ற  செய்திகளை அவர்தம் இயல்பான உரையாடல்களுக்குள் பொதிந்து வைத்திருக்கிறார் ஆசிரியர். பெருவரியாக மனித உறவுகளுக்கிடையேயான உணர்வுத்தளத்திலேயே பயணிக்கிற கதையாடல், பிற்பகுதியில் தேரிக்காட்டில் நிகழுகிற மணற்கொள்ளையைச் சொல்கிற போது மெல்ல வேறு பரிமாணம் கொள்கிறது. அப்படி கிளைபிரிந்திருக்க வேண்டாமோ எனும் நினைப்பை தவிர்க்க இயலவில்லை.

ராஜேஷ் வைர பாண்டியன்

ஒரு இலக்கிய பிரதி மானுட அவஸ்தையை, வாழ்க்கைப்பாட்டை, உறவுச்சிக்கல்களை, சமூக-அரசியல் நெருக்கடிகளை என எதைக் குறித்து பேசினாலும் புனைவெனுமளவில் நிறைவை நோக்கிச் செல்கையில் வாசகரிடம் ஏதேனும் ஒரு வகையில் நம்பிக்கையை விதைப்பதாய் இருப்பது மிக நல்ல அம்சம். எல்லா இடர்களும் கடந்து நன்மையின் நிழல் கொஞ்சமேனும் ஒவ்வொரு மனிதருக்கும் எங்கோ மீதமிருக்கும் எனும் பிடிப்பை அது தர வேண்டும். தொடர்ந்து நிகழும் மரணங்களால் வாழ்வின் மீதான ஆதார நம்பிக்கை ஆட்டம் காணுவதாக உணரலாம். எல்லாம் கூடி வருகிறதாக, இறுதியில் வாழ்வின் வறட்சி தொலைந்து கொஞ்சம் பசுமை படர்வதாக செல்லக்குட்டி நிம்மதி கொள்கையில், இருந்தார்போல தான் ஏமாற்றப்பட்டு பரமபத பாம்பின் வாயிலகப்பட்டு கீழிறங்குவது போலச் சரிந்து துவங்கிய புள்ளிக்கே  திரும்புவது மொத்தமாக நம்பிக்கையின் ரேகைகளை அழித்து நிராதரவான மனநிலைக்கு தள்ளுவதாகத் தோன்றலாம். உள்ளபடி சுக்கலாய் உடையும் செல்லக்குட்டியை தனது அஸ்தமிக்காத திட நம்பிக்கையாலும், உள்ளார்ந்த பேரன்பாலும் தூக்கி நிறுத்துவது வெட்சி தான். அவளது கரம் பற்றியே அவன் எழுகிறான். வாழ்வனுபவத்தில் பெண்களுக்கேயுரித்தான தனிக்குணம் பெருவீழ்ச்சிக்குப் பிறகான மீளல். உண்மையில் உளதிடத்தில் அவர்களை ஓர் ஆண் என்றுமே விஞ்சவியலாது. வெட்சியிடம் இருந்தே நாமும் நம்பிக்கையின் கிரணங்களை கிரகித்துக் கொள்கிறோம். 

புனைவுக்கு இணையான சுவாரசியம் நேர்த்தியான அழகியல் ரசனையுடன் கூடிய நூலுருவாக்கத்திலும் காண இயலுவதை அவசியம் சொல்லியாக வேண்டும். பொதுவாக ஆங்கிலப் நாவல்களில் சேகரிப்பெற்கென கெட்டி அட்டைகளில் மிக நேர்த்தியான வடிவமைக்கப்பட்ட பிரதிகளை வெளியிடுவர். அதனைக் காண்கையில் இது போல தமிழிலும் சாத்தியமாகாதா என வாசக மனம் ஏங்கும். விலை தான் இதுபோன்ற தருணங்களில் சமரசங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும்.  ‘தேரி’ புதினத்தின்  நூல்பிரதி வெகு சிரத்தையுடன்  வடிவாக்கம் பெற்றிருப்பதை கைகளில் ஏந்திய நொடியே உணர முடிந்தது. தேரிக் காட்டில் உலவுகிற அத்தனை உயிரிகளும் அழகிய கோட்டோவியங்களாக ஆங்காங்கே வருவதும், தனித்தலைப்புகளிடப்பட்ட ஒவ்வொரு அத்தியாயத்தின் துவங்கத்திலும் பனைமரங்களின் நிழலுருவரிசை என ரசனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

கதையாக தங்குவதைக் காட்டிலும், கதை தரும் அனுபவத்தில், கதைமாந்தருடனான உறவாடலில் மனமூறிக் கிடக்கிற படைப்பாக தேரி இருக்கும். நாவலை வாசித்து முடித்ததும் தேரி நிலம் நிகழும் கதையில் ஊடாடாமல் வெறுமனே நிகழும் நாடகத்தின் பின்னணியில் தொங்கும் திரைச்சீலை போல இருப்பதாக வாசகர் நினைக்கக்கூடும். ஆனால் கதாபாத்திரங்களை, தேரி நிலத்தின் குணாம்சங்களை பற்றி அறிமுகமாகிக் கொண்ட பின்னர் அணுகுகிற போது நிலமே மனிதர்களின் உருவில் எழுந்துலாவுகிறதென்பதை உள்வாங்கிக் கொள்ளலாம். உண்மையில் தேரியின் வெம்மை தேரிக் காட்டு மனிதர்களுக்குள்ளும், நிலத்தில் நிறைந்திருக்கும் செம்மண்ணில் அம்மனிதர்களின் குருதிக் கவுச்சியும் விரவிக்கிடக்கிறது என்பது புரியும். இங்கு மண்ணும், மனிதரும் வேறுவேறாக அல்லாமல் இரண்டறக் கலந்து சங்கமித்திருப்பதை உணர முடியும்.  

தேரி (நாவல்),
ஆசிரியர் : ராஜேஷ் வைர பாண்டியன்,
வெளியீடு : உதிரிகள் பதிப்பகம்
பக்கங்கள்: 307
விலை : ரூ. 440 

*****

writervarunan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button