
வெள்ளையனின் கல்லறை
நைஜீரிய இலக்கியங்களை முழுமுற்றாக உள்வாங்கிக்கொள்ள, ஐரோப்பியர்களிடம் அவர்கள் அடிமைகளாக எதிர்கொண்ட வலிகளை உணர்வதும் அவசியமாகிறது. ஏனெனில் பெரும்பான்மையான நைஜீரிய இலக்கியங்கள், தாய் மண்ணிலும் அயல்நாடுகளிலும் நைஜீரியர்கள் சந்தித்த இனவெறியையும், மேற்கொண்ட அடிமை வாழ்வையும், உண்மையில் அவர்கள் நாட்டில் நிலவிய அமைதியையும், செல்வ செழிப்பையும், சுதந்திர வாழ்வையும் வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு புனையப்பட்டவையாகும். அவர்கள் கடந்துவந்த வலிகளை உலக மக்களுக்கு கடத்தும் ஒரு கடத்தியாக நைஜீரியர்கள் இலக்கியங்களை கருதினார்கள் குறிப்பிடும் அளவிற்கு இலக்கியங்களை அவர்களின் அடிமை வாழ்வின் தழும்புகள் ஊடறுத்துச் செல்கின்றன.
உடல் வலிமையும் வேலை திறனும் இயற்கையிலேயே குறைவாக வாய்க்கப் பெற்ற ஐரோப்பியர்களுக்கு, சாலைகள் அமைத்தல், தண்டவாளங்கள் இடுதல், மலைகளைச் செப்பனிட்டு காப்பி மற்றும் தேயிலை பயிரிட்டு வளர்த்தல் போன்ற கடினமான பணிகளைச் செய்ய உடல் வலிமை இயல்பிலேயே அதிகமாக வாய்க்கப்பெற்ற ஆப்பிரிக்க மற்றும் ஆசிய ஆண்களும், வீட்டு வேலைகள் மற்றும் அன்றாட பணிகளைச் செய்ய ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பெண் அடிமைகளும் ஐரோப்பியர்களுக்குத் தேவைப்பட்டனர். அடிமை வர்த்தகம் நடைபெற்ற காலகட்டம், வரலாற்றில் உலகம் முழுமைக்கும் மனித உரிமை மீறல்களும், வன்கொடுமைகளும் நடந்தேறிய காலகட்டங்களில் ஒன்றாக அறியப்படுவதன் பின்னணியில், மிக அதிக எண்ணிக்கையில் அடிமைகளாக நாடுகடத்தப்பட்ட நைஜீரியர்களின் அவலநிலை சொல்லிமாலாத துயரம்.
ஐரோப்பியர்களின் வருகைக்கு முன் ஏறத்தாள ஆயிரம் ஆண்டுகள் நைஜீரியர்கள் ஒரே இடத்தில் வாழ்ந்ததாகவும், உணவுக்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் அவர்கள் அந்தக் காலகட்டத்தில் வேறெங்கும் இடம்பெறவில்லை என்றும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். ஐரோப்பியர்களின் வருகைக்கு பின் நைஜீரியர்களின் நிலை முற்றிலும் தலைகீழானது. அவர்கள் கூட்டம் கூட்டமாக சிறைப்பிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டு, அந்நிய நாடுகளில் அடிமைகளாக விற்கப்பட்டனர். நைஜீரிய நாவலாசிரியரான அடோபி ட்ரிஷ்யா ந்வாபனி (Adaobi Tricia Nwaubani), 2022ம் ஆண்டுடன் ஆப்பிரிக்காவிற்குள் அடிமைத்தனம் நுழைந்து 403 ஆண்டுகள் கடந்து விட்டதாகவும், ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கும் மேலான அடிமை வாழ்வின் வலியைத் தான் நைஜீரிய எழுத்தாளர்கள் அவர்களின் இலக்கியங்களில் பதிவு செய்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
ஏறத்தாள பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்ச்சுகீசியர்களும், அவர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் என் ஏனைய ஐரோப்பியர்களும் ஆப்பிரிக்காவிற்குள் நுழைந்து அடிமை வர்த்தகத்தை ஆரம்பித்தனர். ட்ரான்ஸ் அட்லாண்டிக் ஸ்லேவ் டிரேட் (Trans Atlantic Slave Trade) என்று சொல்லப்பட்ட, அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் ஆப்பிரிக்கர்களை நாடு கடத்தும் பணியை, ஐரோப்பியர்கள் ஒரு இயக்கமாகவே மாற்றியிருந்தனர். ட்ரான்ஸ் அட்லாண்டிக் முக்கோண (Trans Atlantic Triangle) செயல்பாட்டின் மூலம் அவர்கள் அடிமைகளை பிடித்து தங்கள் நாடுகளுக்கு கடத்திச் சென்றனர். இதன்படி ஐரோப்பியக் கப்பல்கள், போர்க் கருவிகள் ஆயுதங்கள், மதுபானங்கள் மற்றும் உடைகளை ஏற்றிக்கொண்டு ஆப்பிரிக்கா வந்தடையும். ஆப்பிரிக்கர்களின் குறிப்பிட்ட சிலருக்கு ஐரோப்பிய கப்பல்களில் வந்த பொருள்களை கையூட்டாகக் கொடுத்து, அவர்களை அடர்ந்த காட்டுப் பகுதியில் வசித்த பூர்வகுடிகளான ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக பிடித்து வரும்படி அனுப்புவார்கள். ஐரோப்பியர்கள் நேரடியாக காட்டுக்குள் சென்று ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக பிடித்து வர முடியாமல் போனதற்கு காரணம் ஆப்பிரிக்கா முழுமைக்கும் பரவியிருந்த மலேரியா காய்ச்சலாகும். மலேரியா என்னும் கொடூர காய்ச்சலை கண்டு ஐரோப்பியர்கள் நடுங்கினர். கையூட்டு பெற்ற ஆப்பிரிக்கர்கள் பிடித்து வரும் அடிமைகளை மீண்டும் அதே கப்பல்களில் ஏற்றி ஐரோப்பாவிற்கு கொண்டு செல்வார்கள். முதன்முதலில் நாடு கடத்துவதற்காக ஆயிரம் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகப் பிடித்து ஐரோப்பிய கப்பலில் திணித்து, ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லும்போது, மூச்சுத்திணறி ஏறத்தாழ 800 பேர் இருந்ததாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பதினான்காம் நூற்றாண்டிலேயே ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்காவில் ஊடுருவி, அவர்களைச் சிறைபிடித்து, அடிமைகளாக நாடு கடத்தும் வேலையை துவங்கியிருந்தாலும் கூட, நைஜீரியாவின் இபோ குடியிருப்புக்குள் அவர்கள் 1854 ஆம் ஆண்டு வரை நேரடியாக நுழைய முடியவில்லை. இதுவரை ஆப்பிரிக்காவில் இருந்து சிறைபிடித்து செல்லப்பட்ட சுமார் 20 முதல் 30 மில்லியன் அடிமைகளில் ஏறத்தாழ 10 முதல் 20 சதவீதம் மட்டுமே நைஜீரிய இபோக்கள் என தரவுகள் கூறுகின்றன. ஐரோப்பியர்கள் நைஜீரிய இபோக்களை நேரடியாக அடிமைப்படுத்த முடியாமல் போனதற்கு பல காரணங்கள் இருந்தன. அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இனக்குழுக்களாக வசித்த இபோக்களிடம் பரவியிருந்த கடும் காய்ச்சலான மலேரியாவை கண்டு ஐரோப்பியர்கள் அஞ்சினர். நைஜீரியாவை ஐரோப்பியர்கள் வெள்ளையனின் கல்லறை (Whiteman’s grave) என்று அழைத்தார்கள்.
இபோக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று திரும்பிய ஆங்கிலேயர்கள் மற்றும் ஏனைய ஐரோப்பியர்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டு அதன் ரணத்தை தாளமுடியாமல் துவண்டு மடிந்தனர். அவர்களின் இறப்பு நைஜீரியர்கள் மீது ஐரோப்பியர்களை பேரச்சம் கொள்ள செய்தது. இன்னொருபுறம் ஐரோப்பியர்களால் கொஞ்சம் கூட தாங்கிக்கொள்ள முடியாத இத்தகைய கடும் காய்ச்சலான மலேரியாவை எதிர்கொள்ளும் உடல் வலிமை கொண்ட நைஜீரியர்களான இபோக்களை எப்படியாவது அடிமைப்படுத்தி தங்கள் நாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பேராசையும் அவர்களிடம் பெருகிக் கொண்டிருந்தது. இருப்பினும் கையூட்டு பெற்றுக் கொண்டு மற்ற ஆப்பிரிக்க இனக்குழுக்களை போல அடிமைகளைப் பிடித்துவர இபோ இனக் குழுவில் ஐரோப்பியர்களுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் இபோ இனக்குழுவின் கட்டமைப்பு. இபோ மக்களிடம் ஏற்கனவே சாதீய பாகுபாடும், சுதந்திர மக்கள் மற்றும் அடிமைகள் என்ற இரண்டு பிரிவுகள் இருந்தது. இதன்படி அடிமைகள் அல்லாதவர்களை அடிமைகளாக பிடித்து தர இபோ இனக்குழுவின் சட்டம் ஒத்துக்கொள்ளாது. இபோ இனக்குழுவில் ஏற்கனவே அடிமைகளாக இருந்தவர்கள் அடிமைகள் அல்லாத சுதந்திர மக்களுக்கு சொந்தமானவர்கள் என்பதால் அவர்களையும் பிடித்துவந்து ஐரோப்பியர்களிடம் விற்பதை இபோ சட்டம் ஏற்றுக்கொள்ளாது. இபோ இனத்தின் தலைவனை இஸி (Eze) என்று அழைத்தனர். போர் வீரன், மற்ற இனக்குழுக்களிடம் இருந்து இபோ மக்களை சண்டையிட்டு காத்தவன், வீரதீர செயல்கள் புரிந்தவன் மட்டுமே இஸியாக பதவியேற்க முடியும். இஸியிடம் பெரும்பங்கு மேய்ச்சல் மற்றும் விவசாய நிலங்களும், ஆநிரைகளும், இன்னும் ஏராளமான இபோ இனத்திற்குச் சொந்தமான சொத்துக்களும் கையளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. இஸி என்பது ஏறத்தாள அரசனுக்குரிய அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பதவி. இபோ இனக்குழுவில் இஸியை மீறி யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால் கையூட்டு பெற்றுக்கொண்டு இபோ மக்களை அடிமைகளாக விற்க இடைத்தரகர்கள் யாரும் இபோ இனத்தில் உருவாக முடியவில்லை.
1820ம் ஆண்டில் குயினின் (Quinine) என்னும் மலேரியாவிற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அதன் செயல்திறனும் படிப்படியாக உறுதி செய்யப்பட்டதால், ஆங்கிலேயர்களால் நைஜீரியாவிற்குள் நுழைந்து இபோ மக்களை அடிமைகளாகப் பிடித்து பல ஐரோப்பிய நாடுகளில் விற்க முடிந்தது. ஐரோப்பியர்கள் இபோ இனக்குழுவிற்குள் ஊடுருவியதும் முதலில் இஸி பதவியை ஆங்கில வழிக்கல்வி கற்றவர்களுக்கு வழங்கினர். அதன் பின் இபோ இனக்குழுவின் கட்டமைப்பு முற்றிலும் சிதைந்து, ஆங்கிலேயரின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் தலைமையைக் கொண்டதாக மாறியது.
நைஜீரிய இனக்குழுக்களின் கட்டமைப்பு மற்றும் அவர்களுக்குள் நிலவிய சாதீய பாகுபாடு, அடிமை வர்த்தகம் சார்ந்த நிகழ்வுகள் மீதான புரிதல்கள், நைஜீரிய இலக்கியத்தின் மீதான புரிதல்களுக்கு அதிகம் உதவும். ஆச்சிபே (Achebe) முதல் அடோபி (Adaobi) வரையிலான நைஜீரிய எழுத்தாளர்கள் அனைவரும் தங்கள் எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் அவர்கள் எதிர்கொண்ட இன்னல்களை வாசகர்களிடம் முன்வைக்கின்றனர். ஒரு கட்டுரையில், ஒரு கதையில், ஒரு நாவலில் சொல்லி விளக்கிவிடக்கூடிய எளிய நிகழ்வு அல்ல இந்த அடிமை வர்த்தகம். அதனால் தான் நைஜீரிய எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களில் தலைமுறை தலைமுறையாக அதன் ரணங்களைப் பதிவுசெய்து வருகிறார்கள்.
(தொடரும்…)