
மூளைக்குள் கொதித்துக் கொண்டிருக்கும்
சிந்தனைச் சரடை அறுத்த தடையொலி
சுடரணைக்கிற அனல் காற்றென
ஊமையாக்கிய அலைப்பேசியின் அதிரோசை
திக்கற்றுப் பெய்யத் துவங்கிய மழையென
அறுந்த சரடு
விட்ட இடமும் மறந்து, தொடர்ந்த தடமும் துறந்து
அனாதை நாயென அலைகிறது
எடுத்து நோக்க
அவதானத்தை மேம்படுத்தும்
இருநாள் பயிற்சிப் பட்டறை குறித்த
விளம்பரச் சிணுங்கல்.
****
துறவி போல சும்மாயிருக்கிற
இருளைத் தவிர
சிறப்பென சொல்லிக்கொள்ள
ஏதுமற்ற அவ்விரவு தன் சூன்யத்துக்குள்
முழுமையடைந்தது.
****
பிடிக்கின்ற பழம் உண்டு
பிடிக்காத விதை
உமிழத் தெரிந்த உனக்கு
நினைவுகளென வருகையில் மட்டும்
ஏனிந்த பிறழ்வு மாயா?
****
நீர்ச்சுழலின் மையத்தில்
தூரிகை நனைத்து
ஓவியமொன்றைத் தீட்ட முனைகிறான்
குருட்டு ஓவியன்
அவனுக்குக் கடவுளென்றும்
அதற்கு வாழ்க்கையென்றும்
பெயர் சூட்டினேன்.
****
கணத்திற்கொரு முறை
அறிவிக்கையொலியால் நிறைகின்றன
அலைபேசிகள் இருக்கின்ற அறைகள்
யாரோ யாருக்கோ
ஏதோ சேதியனுப்பியபடியே இருக்கிறார்கள்
முக்கியமற்றவைதான்
தெரியும்!
இருப்பினும்
புதைத்த பிணத்தைத் தோண்டியெடுத்து
ஓ… இதுதானாவெனச் சொல்லி
மனதாற்றவேனும்
தொடுதிரைகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன
ட்டொங்… ட்டொங்…
இணையத் தொடர்பில் இல்லாதபோதும்
கண்ணாடிக் குளத்திற்குள் கற்களெறிவது போல்
செவிகளுக்குள் கேட்டபடியே
எதைக்கொண்டு அதை ஆற்றுவது?
*********