கடற்கரை மணல்வெளி
காற்று அவர் கண்களின் நீரைக்
கொண்டுசென்று
மேகங்களில் வைக்கிறது…
அவர் இரத்தத்தை உறிஞ்சுகிறது வெயில்
தன்னைக் கண்டுகொள்ளாது
பாதையற்ற வானில்
மிதந்துசெல்லும் மேகங்களைக்கண்டு
சூரியனும் திகைக்கிறான்.
எப்போதும் மழைநோக்கித்தானே
அண்ணாந்து கிடக்கின்றன
அனைத்து உயிர்களும்?
காலம் காலமாய்
அவரைக் கண்டுகொண்ட மனிதர்களின்
மலைப்பிரசங்கங்கள் எல்லாமே
ஒரு பயனுமில்லாமல் கடலில் கலக்கின்றன.
காலமற்ற தருணங்களில் மாத்திரமே
மலர்ந்து கனியும் அந்த உலகைக்
கடலலைகள் இடையறாது பாட
தீராத வேட்கையுடன்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது
கடற்கரை மணல்வெளி.
இங்கே, வந்தும் வராததுபோலவும்
கண்டும் காணாதது போலவும்
பொழுதுபோக்கிச் சென்றுவிடுகிற
நம்மால்தானே இத்துணை போர்களும் துயர்களும்?
****
சுதந்திரம்
பேரழிவு தரும்
எத்துணை சிறிய
நுண்ணுயிரியும் ஆகலாம்.
எத்துணை பெரிய
மிருகமும் ஆகலாம்.
எதுவாகவுமன்றி
யாதுமாகியும் விரிந்துகிடக்கலாம்.
எத்துணை சுதந்திரம்
கொடுக்கப்பட்டுள்ளது நமக்கு?
நாம் செய்யவேண்டியதெல்லாம் என்ன?
துயர் சுழற்றும் காலச் சங்கிலியை
நாம் நிறுத்துவதற்கு அறியோமோ?
காலம் நோக்கியிராத
உறவு எனும் அன்பிலல்லவா
நாம் கவனம் செலுத்தவேண்டும்?
பாதையற்ற அந்தப் பாதையில்தானோ
நம் மனிதன் நடந்துசென்று கொண்டிருக்கிறான்
இட்ட அடி மண்தொட
எடுத்த அடி வான்உலுக்க
கவிதை! கவிதை! என
கவிதையின் மதம் கூவி அறையும்
அதன் வழங்கோசை வையம் பெற?
****
அவர் நடந்துகொண்டிருந்தார்
ஒரு பெருஞ்சுமையை
தனக்கும் சேர்த்தே
எல்லோரிடமும்
பிரித்துக் கொடுத்துவிட்டவர்போல்
அவர் நடந்துகொண்டிருந்தார்,
அத்துணை பளுவுடன்
அத்துணை இலகுவாக
அத்துணை பொறுப்புடன்
அத்துணை விடுதலையாக
ஒவ்வோரடியும்
பூமியை முத்தமிடுவது போலவும்
பூமிதான் தன்மகவின்
பாதங்களை முத்தமிடுவது போலவும்
உலகைப் புரந்துகொண்டிருக்கும்
கண்களின் ஊற்றைக்
கண்டுகொண்டவர் போலும்…
அவர் நடந்துகொண்டிருந்தார்.
சுற்றிலும்
விண்ணுயர்ந்த தாவரங்களையும் தாண்டி
உயரே எழுந்த அடுக்கக இல்லங்களின் நடுவே
புல்தரையில் ஒரு சிறு உருவமாய் அவர்…
அதைக் காணத் தவறாதவர்களாய்
உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த
ஆயிரமாயிரம் இல்லங்களிலும்
அவர் காலடிகள் ஏற்படுத்திய
அதிர்வலைகள்..!
அதையும் பிற அனைத்தையுமே
காணத் தவறாத உலகமேயாய்
அவர் அங்கே நடந்துகொண்டிருந்தார்.
****
ஆட்சி
மிகையான செல்வத்திற்காகவும்
‘தன்னை நிலைநாட்டுவதற்காகவும்தானே
அண்டை நாட்டுடன் போர் செய்தாய், மன்னா?
இல்லை, கவிஞரே
அந்த நாட்டுமக்களை
வரிச்சுமையால் கொடுமைப்படுத்-
(நிறுத்துங்கள்!) மன்னரே!
அந்தஸ்தில் உமக்குச் சமமானவர்தானே?
நட்புக்கொண்டு
அவருக்கு அறிவுரைகள் கூறியிருக்கலாமே?
உமது நாட்டிலும்
வறுமையையும் அறமின்மையையும்
உம் அகம் கண்டுகொள்ளாதிருப்பதன்
காரணம் என்ன?
எப்போதும் உமது பாதுகாப்புப்படைகள்தாமே
தெண்டச்சோறும் அரச மரியாதைகளுமாய்க்
கொழிக்கிறார்கள்!
செல்வ பாரங்களை வியாபிக்கச் செய்வதே
அறமென்றறியாத வியாபாரிகள் மட்டுமே
செல்வந்தர்களாய்க் கொழிக்கிறார்கள்
உயர்ந்திருக்க வேண்டியவர்கள் எல்லாம்
தாழ்ந்தும்
தாழ்ந்திருக்க வேண்டியவர்கள் எல்லாம்
உயர்ந்துமிருப்பதுதானே உண்மை! கொடுமை!
சமத்துவமில்லை என்கிறீர்!
சமத்துவமில்லை!
காற்று உலவ, வான் அளாவும்
இந்த இயற்கைவெளி தரும்
இன்பத்தைத் தவிர (அதையும்
ஏழ்மையும் செல்வபோதையும்
அனுபவிக்கவிடாது கொல்லும்)
அறத்தினால் கனிந்த
பிறிதொரு அமைதியையும் இன்பத்தையும்
எங்காவது பார்த்திருக்கிறீரா உமது நாட்டில்?
கவிஞரே, நீர் ஒன்று செய்யலாமே
என்னையும் என் அரசியலையும் கவிழ்த்து
நீரே ஓர் புரட்சிகர ஆட்சியை நிகழ்த்தலாமே?
அதைத்தானே செய்துகொண்டிருக்கிறேன் நண்பா,
உம்மையும் ஒவ்வொரு மனிதனின்
அகத்தையும்தான் கவிழ்த்து
‘நான்’ என்பதே இல்லாத ஓர் இலட்சிய ஆட்சியை
நாம் படைத்துவிடத்தானே போகிறோம்?
****
சந்தியாவேளை
என்ன வியப்பு இது!
நம்பிக்கைதரும் எத்துணை பெருங்களி இது!
அந்தி இருள் தொடங்கவும்
ஓடும் சாலையில் ஓடும் ஒவ்வொரு வாகனங்களும்
விளக்கேற்றிக்கொள்கின்றன!
ஒவ்வொரு வாகனங்களும்
‘என்னைப் பின்தொடராதே’ என்றே
பின்புறச் சிவப்பு விளக்குகளுடன்
ஒரேமாதிரியான
தன் தன்மையுடனே விரைகின்றன!
*********