
அம்மா இல்லாத வீடு
தினமும் சாமி படங்களின் முன்
விளக்கேற்றியவள்
இன்று விளக்கின் முன் சாமியாக
அம்மா வேண்டுமென்று
அழுது அடம்பிடிக்கும் சின்னவளிடம்
சாமியைப் பார்க்கச் சென்றிருக்கும் அம்மா
இன்று வந்துவிடுவாளென்று சொல்லியே
தினமும் சமாளித்து வருகிறார் அப்பா
அக்காவிடம் அவ்வப்போது
சின்னச் சின்ன சண்டைகள் போடும் சின்னவள்
சொல்லிக்கொண்டே இருக்கிறாள்
அம்மா வந்ததும்
சொல்லி விடுவேன் என்று
பெரியவள்
பெரியவளான பின்புதான்
இன்னொரு அம்மா உருவாகிறாள்
இல்லத்தில்
சாமியைப் பார்க்கச்சென்ற அம்மா
இனியும் திரும்பி வரமாட்டாள்
என்றுணர்ந்த சின்னவள்
தினமும் வணங்கத் தொடங்குகிறாள்
அம்மா சாமியை
விளக்கேற்றிய பின்
விளக்கின் வெளிச்சத்தில்
அம்மாவின் முகத்தைத் தேடுகின்றன
அவள் விழிகள்.
****
வீட்டிற்குள் நுழைந்த வானம்
பட்டம் விட்டு
விளையாடிக்கொண்டிருக்கும்
சிறுவர்கள்
வீடு திரும்புகையில்
மறக்காமல் எடுத்துக்கொண்டு
வந்துவிடுகின்றனர்
அவர்களின் வானத்தையும்.
****
பரிசு
புதிதாக பிறந்த பறவைக்கு
வானத்தைப் பரிசளிக்கிறது
இயற்கை.
****
மரத்தடி வகுப்பு
வேப்ப அரச புங்கையென
பலவகை மரங்கள் சூழ்ந்த பள்ளிவளாகத்தில்
ஒதுக்கப்பட்டிருந்தது
ஒரு வகுப்பிற்கு ஒரு மரம்
மரத்தின் பெயர்களைச் சொல்லி
வகுப்புகளை அழைக்கும் பழக்கம்
எல்லோருக்கும் இருந்தது
நான்கு பக்கச் சுவர்களில்லை
வெயில் மழையை மறைக்கும் கூரையில்லை
இருந்தாலும் சொல்லிக்கொண்டோம்
வகுப்பறை என்று
எத்தனையோ முறை
சண்டையில் இடிந்து விழுந்திருக்கிறது
பூமிபூஜை போடாமலே நானும் நண்பனும்
சேர்த்துக் கட்டிய மண்வீடு
ஒவ்வொரு மாணவனும்
ஒரு குறளை வாசிக்க
வருகைப் பதிவேட்டில்
பெயரில்லாத பறவையின் குரலும்
சேர்ந்துகொள்ளும் எங்களுடன்
கண்முன்னே நிற்கிறது
கணிதப் பாடவேளையில்
நான்கு மாணவர்கள் கைப்பிடித்து
அழைத்து வந்த கால்முளைத்த கரும்பலகை
சுருண்டிருந்த உலக வரைபடத்தை
தூக்கி நிறுத்த சமூகஅறிவியல் ஆசிரியரின்
ஒப்புதலுக்குக் காத்து நின்ற
வளர்ந்த இரண்டு மாணவர்கள்
மணிஓசை இல்லாமலே
அவ்வப்போது மாணவர்களுக்கு
இடைவேளையைப் பரிசளித்த
காக்கைகள்
நீர் மூலக்கூறு உருவாவது பற்றி
வேதியியல் ஆசிரியர் சொன்னதை கவனிக்காமல்
மரத்திலிருந்து உதிர்ந்த பூவினை வைத்து
தாவரவியல் படித்த மாணவர்கள்
தேர்வுநாட்களில் மழைவர வேண்டி
மனதிற்குள் யாகம் வளர்த்த மாணவர்கள்
வேப்பமரத்தின் கீழ் கற்ற கல்வி
இன்றும் இனிக்க
அமர்ந்து படித்த அத்தனை மரங்களும்
போதிமரங்களானது வாழ்க்கையில்
காற்றும் தந்து கற்றும் தந்த
மரங்களைக் காண
பால்யகால நண்பர்களுடன்…
*******
கவிதைகள் மிகவும் சிறப்பு