இணைய இதழ்இணைய இதழ் 79சிறுகதைகள்

திட்டம் எண் 2.0 – தயாஜி

சிறுகதை | வாசகசாலை

ப்போது என்ன மணி இருக்கும்?. தெரியவில்லை. இன்று என்ன கிழமை தெரியவில்லை?. என் பெயர் என்ன?. நினைவில் இல்லை. ஆமாம். தெரியவில்லை என்பதும் நினைவில் இல்லை என்பதும் ஒன்றல்ல. உண்மையில் எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. ஏதோ ஓர் இராட்ச இரப்பர் கோடான கோடி நினைவுகளை ஒரே கோட்டில் அழித்து விட்டது.  கடைசியாய் என் நினைவுகளின் என்னதான் உள்ளதென கண்டறியவே இதனை எழுதுகிறேன். அப்பெரும் வெளிச்சம் என்னைச் சுற்றிலும் பரவி பிரகாசமடைந்ததுதான் என் கடைசி நினைவாக பதிவாகியுள்ளது.

அன்று, அந்த அபாய அறிவிப்பு வரும் போது நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன்? யாரெல்லாம் என்னுடன் இருந்தார்கள்?. எதுவும் பிடிபடவில்லை. 

புத்தகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். வேறு வேலையில் இருந்து கொண்டே கேட்டதால் பத்தாவது பக்கத்தில் இருந்த வாக்கியம் புரியவில்லை. அதனை அறிந்துகொண்ட புத்தகம் அதற்கான விளக்கத்தையும் சேர்த்து கொடுத்தது. அதற்கு அடுத்ததாய்க் கேட்ட காதாப்பாத்திரத்தின் வசனமொன்று எனக்கு சிரிப்பை மூட்டியது. நான் சிரிக்கவும் என்னுடன் புத்தகமும் சேர்ந்து சிரிக்கலானது. மீண்டும் ஒரு முறை அதை வெவ்வேறு பாணியில் வாசித்துக் காட்டியது. எந்த பாணியில் பலரும் சிரித்தார்கள் என்கிற குறிப்பையும் சொன்னது. 

யாரெல்லாம் சிரித்தார்கள் என்பதை பார்க்க விருப்பமா என்றது. உள்ளூர ஆசைதான். சட்டென செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டேன். எனக்கு பழக்கமானவர்களை விட பல புதிய முகங்கள் எனக்கு சிரித்துக்காட்டின. இது பயன் தரக்கூடிய வியாபார யுக்திதான். இனி வேறு வேலைகளைச் செய்ய மனம் போகாது. மீதமுள்ள முப்பது பக்கங்களையும் இலவசமாக கேட்கலாம், பார்க்கலாம். 

அதற்கு பிறகு கதையின் மீது ஆர்வம் இருந்தால் புத்தகத்தில் பின்னட்டையில் இருக்கும் சிறு குப்பியை திறந்து கண்களை ஸ்கேன்   செய்து பணம் கட்டிவிட்டு தொடரலாம். கூடுதல் பணம் கட்டும் வசதியிருந்தால் கண்ணாடி இல்லாமலேயே ஒருத்தியை ஒலி/ஒளி வடிவில் உடன் அழைத்து கதையைக் கேட்கலாம். எனக்குத் தெரிந்து மிகச் சிலரே அப்படி செய்திருக்கிறார்கள். செய்தவர்கள் சும்மா இல்லாமல். அவளுடன் புகைப்படங்கள் எடுத்து புத்தக விளம்பரத்தில் சேர்த்து நமது பொருளாதாரத்தையும் சோதிப்பார்கள். என்ன செய்வது. மாதம் வருமானத்தில் பெரும்பகுதி காற்றுக்கே போய்விடுகிறது. 

ஆரோக்கியம் வேண்டுமோ இல்லையோ, நமக்கு கௌரவம் முக்கியம். தூய்மையான காற்றுக்கு பணம் கட்டியவர்களுக்கே இங்கு முன்னுரிமை. அதுதான் அவர்களின் முதன்மையான கௌரவம். மற்றவர்கள் எல்லாம் எங்கள் வட்டாரத்திற்குள் வரவே கூடாது. அப்படியும் சிலர் திருட்டுத்தனமாக வந்துவிடுவதுண்டு. பலவகைகளில் முயற்சி செய்தும் அவர்களை முழுமையாக அழிக்க முடியவில்லை. ஏதாவது ஒரு வகையில் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். 

அவர்களைக் கண்காணிக்கவே ஆங்காங்கு ‘ஜென்ஸி’ ஊர்ந்து கொண்டிருக்கும். சந்தேகிக்கும் நபர்களை ஜென்ஸி நெறுங்கும். கண்களை ஸ்கேன் செய்யும். யார் என்பதை அறியும். கள்ளத்தனமாக வந்தவர்கள் என்றால் உடனே அவர்களின் கணக்கை முடக்கிவிடும். அவர்களால் மேற்கொண்டு சுவாசிக்க முடியாது. கைதாவதைத் தவிர வேறெந்த உபாயமும் இருக்காது. பிறகு அவருடலில் குற்றவாளி என்னும் அடையாளத்தைப் பதிவு செய்யும். 

மூன்று முறை குற்றவாளி என்கிற அடையாளங்களைப் பெற்றவர்கள் தனித்தீவிற்கு நாடுகடத்தப்படுவார்கள். யார் என்கிற அடையாளம் முழுக்க அழிக்கப்படும். முற்றிலும் புதிய மனிதனாக சொல்வதை செய்யும் முழுநேர வேலை ஆளாக மாற்றப்படுவார்கள். மூன்று வேலை மட்டும் சுத்தமான காற்று அங்கு அனுமதிக்கப்படும். ஒவ்வொரு வாரமும் வேலையாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்கப்படும். யார் எடுக்கிறார்கள் யார்தான் சாப்பிடுகிறார்கள் என்கிற எந்த விபரங்களும் யாருக்கும் தெரியாது. ஒருமுறை உணவுப்பொருட்களைக் கொடுக்கச் சென்ற கணரக இயந்திரம் திரும்பி வரவில்லை. 

எங்கள் எல்லோரின் கைக்கடிகாரத்திலும் அந்த செய்தி பரபரப்பாக அலறத் தொடங்கியது. கடைசி வரை அது என்ன ஆனது என யாருக்குமே தெரியவில்லை. இதெப்படி சாத்தியமாகும் எங்களுக்கு ஒரே குழப்பம். நினைவுகளை அழித்தப்பிறகுதான் அந்தத் தீவிற்கு அனுப்புவார்கள். சொல்வதை மட்டுமே செய்யக்கூடிய மனித இயந்திரங்கள் அவர்கள். அவர்களில் யோசிக்கத் தெரிந்த ஒரு ஆள் எப்படி நுழைந்தான்.  இப்படி ஒரு அறிவாளிக்கு உள்ளே என்ன வேலை என்கிற கேள்விகளுக்கு யாருமே பதில் கொடுக்கவில்லை. யாருக்கும் பதில் தெரியவும் இல்லை. பாதுகாப்பு மேலும் பலமாக்கப்பட்டது.

ஒவ்வொரு நாள் இரவும் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும் ‘ஒலிச்சுவர்’ பேசிவிட்டுதான் மறு வேலை பார்க்கும். மறுவேலை என்பது பெரிதாக ஒன்றுமில்லை. குறிப்பிட்ட நேரத்தில் தூங்காதவர்களை கணக்கெடுக்கும். அதிக நேரம் உறங்காதவர்களுக்கும் அதிக நேரம் உறங்குபவர்களுக்கும் மாதாந்திர கட்டணத்தை அதிகரிக்க செய்யும். ஏற்கனவே கழித்துவிட்டு கிடைக்கும் வருமானத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடிவதில்லை. நிம்மதியாக ஒரு புத்தகத்தைக் கேட்கவே முடியவில்லை என்றால் என்ன சொல்ல. இதற்கு மேல் கழித்து கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது. இதற்கு பயந்தே உறங்கவும், அலாறம் இசைத்ததும் எழுந்து விடுகிறோம். 

ஆனால் எனக்கு அந்த பயம் வருவதில்லை. என்னால் அலாறத்தை எனக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும். பெரிய குற்றம்தான் ஆனால், என் பார்வையில் இதுவொன்றும் காதலிப்பதைவிட பெரிய குற்றமில்லை. புத்தகங்களை வாசிப்பவர்களின் மனநிலையை அறிய முடிந்தவர்களுக்கு காதலில் உணர்வு வகைமைகளை சரியாக கணிக்க முடியவில்லை. அதற்கான பணிகளை பல ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

அழுகை கோவம் சிரிப்பு காழ்ப்பு போன்ற தனித்தனி உணர்வுகளின் வெளிப்பாடுகளைக் கண்டறியும் ஸ்கேனருக்கு இவை ஒட்டுமொத்தமாக நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கும் காதல் உணர்வை நிலையாக உணர்வாக கணக்கிட முடியவில்லை. 

அது அவர்களால் முடியாது ஏனெனில் அதனை கண்டறியும் பணியில்தான் நானும் என் நண்பர்களும் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் மாறி மாறி வரக்கூடிய உணர்வு வெளிபாட்டிற்கு சரியான கட்டமைப்பை எங்களால் கொடுக்க முடியவில்லை.

மனிதர்களால் எப்படி உயிருக்கு உயிராக நேசிக்க முடிந்தவர்களை அடுத்த நொடியில் வெறுக்கவும், வெறுத்தவர்களை அடுத்த நொடியில் உயிருக்கு உயிராய் நேசிக்க முடிகிறது என்பது எங்கள் மனித குலத்தின் சாபமும் வரமும். அதைத்தான் இயந்திரங்கள் கண்டுகொள்ள திக்குமுக்காடுகின்றன. அதற்காகத்தான் மனிதர்களான எங்களை நியமித்து கண்காணிக்கின்றன. விரைவில் நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். அதன் பிறகு காதலிப்பதும் பெரும் குற்றப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படும். நாங்கள் என்ன செய்யவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறதோ அதை மட்டும்தான் நாங்கள் செய்யவேண்டும். யோசிக்கையில் ஒதுக்கப்பட்டவர்கள் இருக்கும் ஊருக்கும், எங்கள் வட்டாரத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவர்களுக்கு நினைவுகளை வைத்துக் கொள்ள உரிமை இல்லை. எங்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் உணர்வுகளை வகைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.  கூடவே சுத்தமான காற்று. 

காதலைவிட காற்று ஒன்றும் பெரிதல்ல என்கிற எண்ணம் வந்ததும் கைகடிகாரம் விசித்திர ஒலி எழுப்பும், குறிப்பிட்ட நேரத்தில் எண்ணத்தை மாற்றவில்லையெனில் நாங்களும் நினைவுகள் இழந்து கைதிகளாவோம். அதற்காகவே கதலா காற்றா. காற்றா காதலா என்கிற எண்ண விளையாட்டை நாங்கள் விளையாடுவோம். ஐந்தே நிமிடத்தில் காதல்தான் எல்லாம் என்போம், காதல் என்பதே இல்லை என்போம். 

இன்றுதான் எனக்கு அந்த ஐந்து நிமிடங்களையும் தாண்டி காதலை உணர வேண்டும் என தோன்றியது. 

பல நாட்களாக கட்டுப்பாட்டு பகுதிக்கு, பகுதி நேர வேலையாக உணவுகளை கொடுத்து வருகிறேன். வாரம் இருமுறை நாங்கள் செல்லலாம். மற்ற நாட்களில் தாணியங்கி மூலம் செயல்படும் இயந்திரங்களுக்கு ஓய்வும் அதற்கான பராமரிப்பு வேலைகளும் அப்போது நடைபெறும். எனக்கும் மேலும் சிலருக்கு மட்டுமே அந்தக் கணரக இயந்திரத்தை இயக்க தெரியும். எங்களில் யாருக்கு பணத்தேவை இருக்கிறதோ அவர்களுக்கு அந்தப்பகுதி நேர வேலை கிடைக்கும். அதில் எனக்கு அதிகமே கிடைக்கும். புத்தகம் கேட்பவர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமையை நான் பயன்படுத்திக் கொள்வேன். பெரும்பாலும் பகுதி நேர வேலைக்கான வருவாய், அப்படியே புத்தகத் தேர்விற்கு கழித்துக்கொள்ளப்படும். 

உணவுகளை அதற்கான இடத்தில் கொட்டிக்கொண்டிருந்தோம். எங்கள் கணரக இயந்திரத்தில் நுழைந்து கொண்டோம். கதவுகள் பூட்டிவிட்டதாய் அறிவிப்பு வந்தவுடன் வாசலை திறக்கும் விசையை அழுத்தினோம். கதவு திறந்தது. மனிதக்கூட்டம் அடித்துப்பிடித்துக் கொண்டு உணவுகளை எடுத்துக் கொண்டிருந்தன. இவ்வளவு மனிதர்களா குற்றவாளிகளாக மாறியுள்ளார்கள். பார்க்கவே மனம் ஏதோ செய்தது. என் மனமாற்றத்தைக் கண்டறிந்த கைகடிகாரம் முதல் எச்சரிக்கையாக அதிர்வுகளைக் கொடுத்தது. அப்போதுதான் அவளைப் பார்த்தேன். 

கீழே சிதறிக்கிடந்த உணவைப் பொறுக்கிக் கொண்டும் போராடிக்கொண்டும் இருந்தாள். நிமிர்ந்தவள் ஒருகணம் என்னைப் பார்க்கிறாள். கண்ணாடியிலிருந்து நானும் அவளைப் பார்க்கிறேன். அவளிடம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். யாரிவள். இத்தனை நாட்களாய்ப் பார்க்கவில்லையே. புதியவளோ. என்ன குற்றம் செய்திருப்பாள். இவள் எப்படி குற்றவாளி ஆனால் என யோசிக்கலானேன். என் அடுத்தடுத்த உணர்வுகளை கண்டறிய கைகடிகாரம் சிரமப்படுவதை அதன் சிறு திரையில் பார்த்து உணர்ந்து கொண்டேன்.

அவளை மீண்டும் பார்க்க வேண்டும். அவள் யாரென்று அறிய வேண்டும். அவள் என்னிடம் வரவேண்டும். அதற்கு சாத்தியங்கள் இல்லை என்பது எனக்கு தெரியும் ஆனால் என்னால் அவளிடம் செல்ல முடியும். அதற்கான முதற்கட்ட வேலையாக உணவு கொண்டு வரும் கணரக வாகனத்தை திசை மாற்றி வேறு இடத்திற்கு அனுப்பிவிட்டேன்.

அவளை நான் தேடுவது எப்படியோ ‘ஜென்ஸி’க்கு தெரிந்திருக்க வேண்டும்.  என் மீது அதற்கு சந்தேகம் எழுந்துள்ளதாக நானும் கண்டுபிடித்துவிட்டேன். இனி நான் இன்னமும் தந்திரமாக வேலை செய்யவேண்டும். காதல் உணர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளைச் செய்யத்தொடங்கினேன். இது தனியாளாய் செய்யக்கூடிய காரியமல்ல. உடன் சில நண்பர்களையும் சேர்க்க முயன்றேன். சேர்த்தும் விட்டேன். உணர்வுகளைக் கண்டறியும் கைகடிகாரத்தையும் உறங்கும் நேரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சுவர் ஒலி/ஒளியையும் கட்டுப்படுத்தினோம். 

 அவள் என்னருகில் இருக்கிறாள். ரோபோக்கள் எல்லாம் கைகளில் எதையெதையோ வைத்திருக்க, அவற்றிலிருந்து மெல்லிய இசை எங்களைப் பரவசமாக்கிக் கொண்டிருந்தது. மெல்ல அவளின் கைகளைத் தொட்டேன். அவள் தயங்கினாள். எனக்கு உள்ளுக்குள் ஏதோ ரசவாதம் நிகழ்ந்தது. அப்படியே அவளை அணைத்து அவள் உதட்டில் என் உதட்டை வைத்துவிட்டேன். எனக்கு எல்லாமே சிலிர்த்தது நான் என் கட்டுப்பாட்டை இழந்தேன். அவளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டேன். இத்தனை நாட்களாய் இல்லாத ஏதோ ஒன்றுக்கு நான் என்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தேன். நான் சுயமாக சிந்திக்கிறேன். காதலிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. சுத்தமான காற்று எங்கள் உரிமை. இந்நாடும் அதன் அதிகாரிகளும் எங்களை சக மனிதர்களாக நடத்த வேண்டும். நாங்கள் இயந்திரங்கள் அல்ல. இயந்திரங்கள் கைகளில் நாங்கள் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எங்கள் கட்டுப்பாட்டில்தான் இயந்திரங்கள் இருந்திருக்க வேண்டும். எங்கள் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். 

ஏதோ விபரீதம் நடந்துவிட்டது. நான் ஜென்ஸி அருகில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறேன். ஆமாம் என் உணர்வுகள் வழி இயந்திரங்களை ஏமாற்றத்தெரிந்த எனக்கு கனவுகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை. என் கனவு என்னை காட்டிக்கொடுத்துவிட்டது. கனவு கலைந்தது. ஆனால் அவள் நினைவு அப்படியே தொடரவும். நான் குற்றவாளியானேன்.

இன்னும் கொஞ்சம் நேரத்தில் என் நினைவுகள் அழிக்கப்படும். நானும் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவேன். நினைவுகள் அற்ற மனிதனாக என்னால் எப்படி இனி இருக்க முடியும். நானும் இனி சொல்பேச்சு கேட்கும் இயந்திர கூட்டத்தில் ஒருவனாகக் கூடாது என்பதால்தான், என் திட்டத்தைச் செயல்படுத்தினேன். பரிசோதனை செய்திடாத திட்டம் என்பதால் அதன் விளைவு எப்படியும் இருக்கலாம். 

மனிதர்களின் நினைவுகளை இயந்திரங்கள் அழிப்பது போல, இயந்திரங்களின் டாத்தாக்களையும் அதன் பதிவேற்ற குறிப்புகளையும்   நான் அழித்துவிடுவதுதான் என் திட்டம். கையில் தயாராய் இருந்த விசையை அழுத்தினேன். அதன் ஒளி ஜென்ஸியின் மேல் பட்டு அதனுள் ஊடுருவி அதன் மூலம் ஆங்காங்கு சுற்றிக்கொண்டிருக்கும் மற்ற ஜென்ஸிக்களிடமும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

ஒவ்வொரு ஜென்ஸியிடம் இருந்தும் வெளியேறிய ஒளி கூட்டமைப்பு அதன் பிரகாசத்தை எல்லா இடங்களிலும் பரப்பியது. நான் எதிர்ப்பார்க்காத ஏதோ ஒன்று நடக்கப்போவதை என் உள்ளுணர்வு எச்சரிக்கவும் எனக்கு மயக்கம் வந்தது. 

அந்த வெளிச்ச வெள்ளத்தின் நானும் அடித்துக் கொண்டு போகிறேன். தலை வலிக்கத்தொடங்கியது. கண்கள் இருண்டன. யாரோ என்னை ஆகாயத்துக்கு தூக்கி வீசுகிறார்கள். ஏதோ ஒரு கை என்னைப் பிடித்து கீழே தள்ளுகிறது. நண்பர்கள் என்னை சுற்றி நின்றுக்கொண்டு சிரிக்கிறார்கள். ஜென்ஸி என்னை குற்றவாளி என முத்திரை குத்துகிறது. நான் மிக எளிதாக அந்த முத்திரையை அழிக்கிறேன். இயந்திரங்கள் மனிதர்கள் முன் மண்டியிடுகின்றன. மீண்டும் வெளிச்சம்!

இப்போது என்ன மணி இருக்கும்?. தெரியவில்லை. இன்று என்ன கிழமை தெரியவில்லை?. என் பெயர் என்ன?. நினைவில் இல்லை. ஆமாம். தெரியவில்லை என்பதும் நினைவில் இல்லை என்பதும் ஒன்றல்ல. உண்மையில் எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. ஏதோ ஓர் இராட்சத இரப்பர் கோடான கோடி நினைவுகளை ஒரே கோட்டில் அழித்து விட்டது.  கடைசியாய் என் நினைவுகளின் என்னதான் உள்ளதென கண்டறியவே இதனை எழுதுகிறேன். அம்மாபெரும் வெளிச்சம் என்னைச் சுற்றிலும் பரவி பிரகாசமடைந்ததுதான் என் கடைசி நினைவாக பதிவாகியுள்ளது.

அன்று, அந்த அபாய அறிவிப்பு வரும் போது நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன்?  யாரெல்லாம் என்னுடன் இருந்தார்கள்?. எதுவும் பிடிபடவில்லை. 

கைகடிகாரம் அதிர்ந்தது. எழுதுவதை நிறுத்தினேன். கைகடிகாரத் திரையில் என் முகத்தை நானே பார்க்கிறேன். என்னை அறியாமல் அதன் விசையை அழுத்துகிறேன். 

அதிலிருந்து என்னைப்போலவே ஓர் உருவம் வெளிவருகிறது. “இதுவெல்லாம் நடக்கும் என நான் யூகித்திருந்தேன். அதற்குத்தான் இந்த இரண்டாம் திட்டம். நீ யார். யாரை தேட வேண்டும். நீ தேடுகிறவள் எங்கிருக்கிறாள் என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது நீ புத்தகம் கேட்டுக்கொண்டிருந்தாய்…….”

 

**********

tayag17@gmail.com

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button