இணைய இதழ்இணைய இதழ் 79மொழிபெயர்ப்பு கவிதைகள்மொழிபெயர்ப்புகள்

ரையோகான் கவிதைகள் – ஆங்கிலத்திலிருந்து தமிழில்; சமயவேல்

மொழிபெயர்ப்பு கவிதைகள் | வாசகசாலை

வசந்தத்தின் முதல் நாட்கள்

வசந்தத்தின் முதல் நாட்கள்–ஆகாயம்
பிரகாசமான நீலம், சூரியன் மிகப்பெரியதாகவும் வெதுவெதுப்புடனும் இருக்கிறது
எல்லாமும் பச்சையாக மாறுகிறது.
எனது துறவுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, நான் கிராமத்திற்கு நடந்தேன்
எனது தினசரி உணவைப் பிச்சையெடுக்க.
குழந்தைகள், என்னை ஆலய வாசலில் கண்டுபிடித்தார்கள்
சந்தோஷமாகச் சுற்றிக் குழுமினார்கள்,
நான் நிற்கும் வரையிலும் என் கைகளைப்பிடித்து இழுத்தார்கள்
நான் எனது பிச்சைப் பாத்திரத்தை ஒரு வெள்ளைப்பாறைமேல் வைத்தேன்,
எனது பையை ஒரு கிளையில் தொங்கவிட்டேன்
முதலில் புற்களைத் திரித்து கயிறு-இழுக்கும் போட்டியை விளையாடினோம்
பிறகு நாங்கள் ஒரு பந்தைக் காற்றில் உதைத்தவாறே முறைவைத்துப் பாடினோம்:
நான் பந்தை உதைத்தேன்; அவர்கள் பாடினார்கள், அவர்கள் உதைத்தார்கள் நான் பாடினேன்.
காலம் மறந்துபோனது, நேரம் பறந்துபோனது
கடந்துசெல்லும் மக்கள் என்னைச் சுட்டிக்காட்டிச் சிரித்தார்கள்
‘ஏன் இப்படியொரு முட்டாளைப் போல நடந்துகொள்கிறீர்கள்?’
நான் எனது தலையை அசைத்தேன், பதிலளிக்கவில்லை.
நான் எதையாவது சொல்ல முடியும், ஆனால் ஏன்?
எனது இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா?
காலம் தொடங்கியதிலிருந்து இதேதான், இது மட்டுமே!

****

248 (114)
குஹாமி மலை,
அதன் மலைச்சரிவில் ஏறுவதற்குக் கொஞ்சம் படிகள்,
புனித நிழலில்,
ஒடாஹோ கோவிலை ஒட்டி,
நான் தனியாக வாழ்கிறேன்,
ஒவ்வொரு காலையிலும் ஒவ்வொரு மாலையிலும்,
உயரே செல்லும் பாறைப்பாதையில்
ஒரு கனத்த சுமையுடன் ஏறுகிறேன்
விறகு சேகரிக்க,
அல்லது கீழே செங்குத்தான பள்ளத்தாக்கு வழி
புதிய தண்ணீர் இறைப்பதற்கு
ஒவ்வொரு நாளும், எண்ணற்ற நாட்களாக,
இவ்வாறாக இதுவரை சமாளித்துவிட்டேன்,
சமீப ஆண்டுகளில் ஒரு நோய்மை
என்னை முழுமையாகப் பீடித்திருக்கிறது,
பயத்தைக்கொண்டு வதைக்கிறது
நான் அழிந்து போகலாம்,
சில்வண்டுக் கூடுகள் போல நண்பர்களற்று உதிர்ந்து போகலாம்,
ஆனால் சொற்ப நாட்களே முன்னால் இருக்கின்றன;
மேலும் நான் புதைக்கப்படலாம்,
பாறைக்கடியில் ஒரு அழுகிய பொருள்.

****

முதிர்ந்த காலம்
1796–1816 (age 39–59)
குஹாமி மலைமேல் ஐந்து குடைவறைகள் உள்ள குடிசையில் வசிக்கையில் எழுதியவை:

இங்கே இந்த கிராமத்திற்கு வந்ததும்,
பீச் பூக்கிறது
முழுமையான பூத்தல்.
சிவந்த இதழ்கள்
நதிமேல் பிரதிபலிக்கின்றன.

****

தகுஹாட்ஸு எனப்படும் பிச்சைப் பாத்திரம்

எட்டாம் மாதத்தின் முதல் நாளில்
நான் நகருக்குள் நடக்கிறேன், பிச்சையெடுக்கிறேன்.
எனது அதி உற்சாகமான காலடிகளை வெள்ளை மேகங்கள் பின்தொடர்கின்றன. இலையுதிர்காலக் காற்றில் எனது கைத்தடி மேலுள்ள பச்சை மரகத மணிகள் குலுங்குகின்றன.
விடியலில் ஓராயிரம் வாசல்கள் திறக்கின்றன.
என் கண்களுக்கு முன்னே மூங்கில்களும் வாழைகளும் தாங்களாகவே தங்களுக்கு வண்ணமூட்டுகின்றன.
வீட்டுக்கு வீடு, கிழக்கிலிருந்து மேற்கே, நான் உணவுப் பிச்சை எடுக்கிறேன்;
வைன் கடை, மீன் சந்தை எல்லாம் ஒன்றுதான்.
உலகை நேரடியாகப் பார்த்துக்கொண்டு,
‘நரகத்து வாள்களின் மலை’யை ஒருவர் நசுக்குகிறார்.
மெல்ல நடப்பது அபாயகரமாகக் கொதித்து ஆவியுண்டாக்குகிறது
நெடுங்காலத்துக்கு முன்பு சுத்தோதன அரசரின் இளவரசர் கற்பித்தார்
பொற்காலத் துறவி நெருங்கிச்சென்று ஏற்றுக்கொண்டார்
2700 ஆண்டுகளுக்கும் முன்பு இது நடந்தது
நானும்கூட சாக்கியக் குடும்பத்தின் குழந்தைதான்
ஒற்றை அங்கி, ஒற்றைத் திருவோடு – மொத்தத்தில் தெளிவு:
முதியவர் விமலகிரி ஒருமுறை கூறினார்,
“தர்மத்தை நீங்கள் பெறுவதும் வழங்குவதும் போல நீங்கள் உணவைப் பெற்று வழங்குங்கள்.”
அவர் சுட்டுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
திடமாகப் பின்பற்றுகையில் யார்தான் கழுதையின் வயதை அடையமாட்டார்கள்?

****

இந்த உலகம்
நிரந்தரமல்ல என்பதைப்
பார்த்து உணருங்கள்.
முன்பாகப் பூத்ததோ தாமதமாகப் பூத்ததோ
மலர்கள் நிரந்தரமல்ல.

****

நான் வீட்டைவிட்டு வெளியேறி,
உள்ளது உள்ளவாறு உலகினுள் விழுந்ததிலிருந்து
காலக் கணக்குகள் எல்லாவற்றையும் நான் அழித்துவிட்டேன்
நேற்று நானொரு பசுமையான மலையில் குடியிருந்தேன்;
இன்று நான் நகரில் விளையாடுகிறேன்.
எனது அங்கியில் நூற்றுக்கும் மேற்பட்ட தையல்கள்.
ஒற்றைப் பிச்சைப்பாத்திரத்துக்கு வயதே இல்லை.
எனது கைத்தடி மேல் சாய்ந்தவாறு, தெளிந்த இரவுக்குள் நான் பாடுகிறேன்;
ஒரு வைக்கோல் பாயில் படுத்துக்கொண்டு, நிலவுக்கடியில் தூங்குகிறேன்.
நான் எண்ணிப்பார்ப்பதில்லை என்று யார் சொல்வது?
என்னுடைய உடல் இதுதான்.

****

மேகம் மூடிய ஆகாயம்
முழுக்கத் திறந்திருக்கிறது
ஒரு பிச்சைத் துறவியின் இதயமும்
— உள்ளது உள்ளபடி—
சொர்க்கத்திலிருந்து ஒரு பரிசு.

****

சிறுநகரில் உணவுப் பிச்சையை முடித்துவிட்டேன்.
நிறைந்தவனாக, துணிப்பையைத் தூக்குகிறேன்,
எந்த இடத்தை வீடென்று அழைப்பதென வியக்கிறேன்.
வெள்ளை மேகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அது என் குடிசையாக இருக்க முடியுமா?

****

ஒரு வளைந்த சடங்குக் குச்சி

அதை ஒரு பாவோட்டுடன் அல்லது கூழாங்கல்லுடன்
ஒப்பிட வேண்டாம்
ஒரு ஆபரணத்துடன்கூட ஒப்பிட வேண்டாம்.
ஒரு கருப்பு டிராகனின் கொம்பைப்போல இது அரியது.
ஒரு நீல யானையின் தந்தத்தைப்போல உயிராதாரம்.
இலையுதிர்கால மாலைப்பொழுதில் தர்மம் குறித்து உரையாடுவதை அது ஆதரிக்கிறது
வசந்தகால மதியத்தில் நான் தூங்குகையில் எனக்குத் தோழமை தருகிறது.
தூசி தட்டுவதற்குக்கூட பயனற்றது எனினும்
அது, ‘வழி’யின் இதயத்தைத் தூயதாக்குகிறது.

****

கடந்தகாலம் கடந்துவிட்டது.
எதிர்காலம் இன்னும் வரவில்லை.
நிகழ்காலம் நிலைத்திருப்பதில்லை.
எதுவும் நம்பத்தகுந்தது இல்லை; எல்லாமும் மாறியாக வேண்டும்.
நீங்கள் பட்டங்களையும் பதவிகளையும் வீணாகப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்,
நீங்களே அவற்றைப் பலவந்தமாக நம்புகிறீர்கள்.
புதிய ஞானங்களைத் துரத்திக்கொண்டு செல்லாதீர்.
பழைய பார்வைகளை விட்டுவிடுங்கள்
இன்றியமையாதவற்றைக் கற்றுக்கொண்டு
அதன் வழியாகப் பாருங்கள்
அதன் வழியாகப் பார்ப்பதற்கு அங்கே எதுவும் எஞ்சியிருக்கவில்லை
பிறகு, உங்கள் தவறான பார்வைகளை அறிந்துகொள்வீர்கள்.

****

விடுதலையின் அங்கி மகத்தானது,
அறக்கொடையின் வடிவமற்ற புலம்.
புத்தர்கள் அதை உறுதியானதாகப் பரப்பினார்கள்
முன்னோர்கள் அதை அந்தரங்கமாகப் பெற்றுக்கொண்டார்கள்.
பரந்ததுக்கும் அப்பால், ஒடுங்கியதற்கும் அப்பால்,
துணிக்கும் அப்பால், நூலிழைகளுக்கும் அப்பால்
இவ்வாறாக அதைப் பாராமரிக்க வேண்டும்,
பிறகு நீங்கள் அங்கியைப் பாதுகாப்பவர் என்று அழைக்கப்படுவீர்கள்.

****

நேற்று எது சரியாக இருந்ததோ
இன்று அது தவறாக இருக்கிறது
இன்று எது சரியாக இருக்கிறதோ அது
நேற்று தவறாக இருக்கவில்லை என்று நீ எவ்வாறு அறிவாய்?
சரி அல்லது தவறு என்று இங்கு எதுவும் இல்லை,
லாபத்தையோ நஷ்டத்தையோ முன்னரே கணிக்க முடியாது.
தங்களது இசையை மாற்றிக்கொள்ள முடியாமல்,
முட்டாளாக இருப்பவர்கள் ஒரு யாழின் நரம்புகளோடு ஒட்டிக்கொண்டு கிடக்கிறார்கள்
ஞானமுள்ளவர்கள் மூலாதாரத்தைப் பெறுகிறார்கள்.
ஆனால் வெகுகாலம் அலைந்து திரிகிறார்கள்.
நீங்கள் முட்டாளாகவோ ஞானவானாகவோ இல்லாதபோது மட்டுமே
மார்க்கத்தை அடைந்த ஒருவர் என்று உங்களை அழைக்க முடியும்.

****

உங்கள் விரலால் சுட்டிக்காட்டுவது மூலம் நீங்கள்
நிலவைப் பார்க்கிறீர்கள்.
நிலவின் மூலம் நீங்கள் விரலை அறிகிறீர்கள்.
நிலவும் விரலும்
வெவ்வேறல்ல, ஒன்றும் அல்ல.
தொடக்கநிலையில் உள்ளவருக்கு வழிகாட்டுவதற்காக,
இந்த ஒப்புமை தற்காலிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதை நீங்கள் உணர்ந்த பிறகு
அங்கே நிலவும் இல்லை, விரலும் இல்லை.

********

ரையோகான்: அறிமுகம்

ரையோகான் 1758இல் பிறந்து 1831 வரை வாழ்ந்த ஒரு அமைதியான, வழக்கத்திற்கு மாறான சாட்டோ ஜென் புத்தத் துறவி ஆவார். ஜென் வாழ்க்கையின் சாரத்தை முன்வைக்கும் அவருடைய கவிதைக்காகவும் அழகு எழுத்துக் கலைக்காகவும் ரையோகான் நினைவுகூரப்படுகிறார்.

ஜப்பானில், எச்சிகோ மாகாணத்தில் (இப்போது நிகதா மாகாணம்) உள்ள இசுமோசாகி கிராமத் தலைவரான எய்ஸோ யமமோட்டோ இவரது தந்தை. ரையோகான் தனது சிறுவயதிலேயே உலகைத் துறந்து, அருகிலுள்ள சாட்டோ ஜென் கோவிலான கோஷோ-ஜியில் பயிற்சி பெறத் தொடங்கினார். தனது குடும்பத்தை சந்திக்கவோ அல்லது தொண்டு செய்யவோ மறுத்துவிட்டார். ஒருமுறை ஜென் மாஸ்டர் கோகுசென் கோவிலுக்கு விஜயம் செய்தார். அவரது நடத்தையால் ரையோகான் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் கொகுசேனின் சீடராக இருக்க அனுமதி கோரினார். கோகுசென் ஏற்றுக்கொண்டார். இருவரும் தமாஷிமாவில் உள்ள என்ட்சே-ஜி மடத்திற்குத் திரும்பினர்.

என்ட்சு-ஜியில்தான் ரையோகான் ஞானம் பெற்றார். அடுத்த ஆண்டு கோகுசென் இறந்தார். எனவே ரையோகான் என்ட்சே-ஜியை விட்டு நீண்ட புனிதப் பயணத்தைத் தொடங்கினார். ரையோகான் தனது பெரும்பாலான நேரத்தை கவிதை எழுதவும், அழகுக் கையெழுத்து (Calligraphy) எழுதவும், இயற்கையோடு தொடர்பு கொள்ளவும் செலவிட்டார். அவரது கவிதைகள் பெரும்பாலும் மிகவும் எளிமையானவை மற்றும் இயற்கையால் ஈர்க்கப்பட்டவை. அவர் குழந்தைகளை நேசித்தார். சில சமயங்களில் அவர் அருகிலுள்ள கிராமத்தின் குழந்தைகளுடன் விளையாடியதால் உணவுக்காக பிச்சை எடுக்க மறந்துவிடுவார். மடாதிபதியாகவோ, ‘மடாலயக் கவிஞராகவோ’ இருக்க மறுத்துவிட்டார். ஜென் பாரம்பரியத்தில் அவரது மேற்கோள்களும் கவிதைகளும் அவரது சிறந்த நகைச்சுவை உணர்வைக் காட்டுகின்றன. மேலும் தன்னைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் சுட்டுகின்றன.

1826 இல் ரையோகான் நோய்வாய்ப்பட்டதால், துறவியாக தொடர்ந்து வாழ முடியவில்லை. அவர் தனது புரவலர்களில் ஒருவரான கிமுரா மோட்டோமோனின் வீட்டிற்கு குடிபெயர்ந்தார். மேலும் டீஷின் என்ற இளம் கன்னியாஸ்திரியால் பராமரிக்கப்பட்டார். முதல் வருகை அவர்கள் இருவரையும் உற்சாகப்படுத்தியது. மேலும் ரையோகானின் இறுதி ஆண்டுகளை பிரகாசமாக்கும் நெருக்கமான உறவுக்கு வழிவகுத்தது. அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக ஹைக்கூவைப் பரிமாறிக் கொண்டனர். 1831ஆம் ஆண்டு புத்தாண்டிலிருந்து 6 வது நாளில் ரையோகான் தனது நோயால் இறந்தார். தியான நிலையில் அமர்ந்திருந்த ரையோகான், ‘தூங்குவது போல்’ இறந்ததாக டெய்ஷின் பதிவு செய்கிறார்.

********

samayavelk@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button