![](https://vasagasalai.com/wp-content/uploads/2023/05/Picsart_23-05-17_01-04-58-930-780x405.jpg)
தேநீர் சுவை
மழையினூடான பின்னிரவு
பயணத்தின் நடுவில்
சாரலைச் சுமந்தபடியே
நான் பருகிய தேநீரின் சுவையை
ஒரு அதிகாலைப் பொழுதில்
பனி படர்ந்த இருளில்
குளிர்காற்றினை ஸ்பரிசித்தபடியே
சுவைத்திருக்கக் கூடும்
நீயும்
புகைப்படங்களில் தங்கிவிட்ட
அந்தப் பொழுதும், குடிசைக்கடையும்
இன்னும் அங்கேயே இருக்கக் கூடும்
வேறு யாருக்கோவான தேநீரோடு!
***
நீயும், நானும்
இலக்கற்ற பயணம்,
ஒன்றாய் ஒரு கோப்பைத் தேநீர்,
கேளிக்கை, கேக் கட்டிங்,
கொண்டாட்டம்,
தியேட்டர், ஷாப்பிங்,
பூஜை, புனஸ்காரம்
இப்படி
எதுவும் இல்லாமல்
கொடிகள் படர்ந்த பால்கனியில்
நீயும் நானுமாய் மட்டும்
கைகோர்த்து, வார்த்தைகளற்று
பார்த்துக்கொண்டேயிருக்கும் கணத்தில்
மெளனமாய் சொல்லிவிடுகிறாய்
நம் மணநாள் வாழ்த்துக்களை.
***
சாளரம்
என் கவிதைகளில் எல்லாம் சாளரங்களே
எட்டிப் பார்க்கிறதென்கின்றாய்
சன்னல் இல்லா அறையில்
மூச்சு முட்டாதா?
எதுவுமற்ற பொழுதுகளில்,
யாருமற்ற தனிமையில்
எப்படி உயிர்த்திருப்பேன்?
திரைகள் தோறும் மறைந்திருக்கும்
உலகின் அழகைக் காணவேண்டாமா?
விடுபட்டுப்போன நட்பின், ”எப்படி இருக்கிறாய்?”
என்ற விசாரிப்பு அந்த சாளரத்தின் வழியாகவே
என்னை வந்தடைகிறது!
என் சாளரத்தின் கதவுகள்
ஒருபோதும் அடைக்கப்படுவதேயில்லை,
உன்னை தூரத்தில் இருந்து
பார்த்துக் கொண்டிருப்பதற்காகவேனும்
என் அறைக்கோர் சாளரம்
அவசியமாய் இருக்கிறது.
********