அந்தி மாலை. சூரியன் மெல்ல அன்றைய நாளின் பகல் பொழுதுக்கு ஓய்வு கொடுத்துக் கொண்டிருந்த நேரம். சுற்றிலும் இயங்கும் எதன் மீதும் கவனம் செலுத்தாமல் சூரியனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர். அருகில் அவன் மகன் அஸ்வின் நின்றுகொண்டிருக்க, அவன் தோளில் கை வைத்தபடி நின்று கொண்டிருந்தான் சுந்தர். முகம் முழுவதும் ஒரு வகையான இறுக்கம் புரையோடிக் கிடந்தது. கண் இமைக்காமல் சூரியனை பார்த்துக் கொண்டிருந்தவன், தனது கைகளை எடுத்து இரு கண்களின் கருவிழி அருகில் வைத்து எடுத்தான். மீண்டும் அவன் சூரியனை பார்த்து முறைக்கத் துவங்கினான்.
சுந்தர் அருகில் வந்த அவனது தாயார் அமிர்தம்,” டேய் டாக்டர் ரவுண்ட்ஸ் வர்றதுக்கு இன்னும் அரைமணி நேரம் ஆகும். நீ அதுக்குள்ளே போய் ஏதாச்சும் சாப்பிட்டு வா” என்று கூற, “ப்ச்” என்ற சலிப்புடன் வேண்டாம் என்று தலையை ஆட்டி அங்கேயே நின்று கொண்டிருந்தான் சுந்தர். அவனுக்கு எதிரில் கண்களில் நீர் பொங்க மாடிப்படியில் அமர்ந்திருந்தாள் அழகுமீனா.
சுந்தர், அழகுமீனாவை உற்று கவனித்த மறுகணம், மீண்டும் மேலே சூரியனை பார்க்க ஆரம்பித்தான். மீண்டும் தலையை கீழே குனிந்தவன் தனது மகன் அஸ்வினிடம்,” நீ போய் அம்மாச்சி கிட்ட கொஞ்ச நேரம் உக்காரு, நா வெளில போயிட்டு வரேன்” என்று கூறி அங்கிருந்து வெளியேறினான். அஸ்வினை அருகில் அழைத்து அமர வைத்துக் கொண்டார் அழகுமீனா. அங்கிருந்து கிளம்பிய சுந்தர் நேராக சூர்யா மருத்துவமனை எதிரில் இருக்கும் ஒரு உணவகம் வாசல் நோக்கிச் சென்றான், ஏதோ யோசித்துவிட்டு, உணவகத்திற்குள் செல்லாமல் சுற்றி ஒரு முறை பார்த்து விட்டு அருகில் இருந்த தேநீர் கடைக்குச் சென்றான்.
உள்ளே சென்றவன் மைதா ஆப்பம், உளுந்த வடை அது போக இன்னும் சில தின்பண்டங்களை எடுத்து உண்டான். அருகில் இருப்பவர்கள் அவனை உற்றுக் கவனிக்கும் அளவுக்கு அவனது செய்கை இருந்தது. கடைக்காரர் அவன் எடுக்கும் தின்பண்டங்களின் கணக்கை விட்டு விடாமல் இருக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். எடுத்தவைகளை உண்டு முடித்த பின் கல்லாவிற்கு அருகில் கிழித்து வைக்கப் பட்டிருந்த செய்தித்தாள் கட்டில் இருந்து ஒன்றை உருவி, வாயை நன்றாகத் துடைத்து விட்டு,” ஒரு டீ” என்றான் சுந்தர். டீ’மாஸ்டர் அவனை வித்தியாசமாகப் பார்த்தபடி ஒரு தேநீரை ஆற்றி மேஜையில் வைக்க, அந்த தேநீரை எடுத்து ஏதோ யோசித்தவாறே குடித்து முடித்தான்.
கடைக்காரரிடம் காசைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் சுந்தர். கடைப்படியில் இருந்து கீழே இறங்கும் தருணம் மீண்டும் ஒரு முறை சூரியனை விழித்து பார்த்தபடி சாலையில் இறங்க, அவனை உரசி சென்ற ஒரு வாடகை ஆட்டோ, “ஓத்தா லவடே கபால்” என்று குரல் கொடுக்க, அந்த ஆட்டோவை அதிர்ந்து பார்த்து மீண்டும் சூர்யா மருத்துவமனையின் வாயிலுக்குச் சென்றான். உள்ளே அழகுமீனாவை தோளில் தட்டிக் கொண்டிருந்தார் அமிர்தம். அழகுமீனா அஸ்வினை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தார். அவர்கள் அருகே வேகமாக ஓடி வந்த சுந்தரத்திடம்,” டேய் கார்த்தி உடம்பு ட்ரீட்மென்ட்டுக்கு ரெஸ்பாண்ட் பண்ணலையாண்டா, இன்னும் ஒரு நாலு மணி நேரம் பாக்கலாம் இல்லனா ஒன்னும் பண்ண முடியாதுன்னு டாக்டர் சொல்றாங்கடா” என்று கூறி அழுது புலம்பினார். அமிர்தம் கூற கூற அழகுமீனாவின் அழுகை இன்னும் அதிகமானது. “இந்த வயசுல அம்மா இல்லன்னா என்ன பண்றது? எப்புடி இவன கரைசேக்குறது?” என்று கூறி அஸ்வினை பிடித்துக் கொண்டு அழுது தீர்த்தாள் அழகுமீனா.
இருவரிடமும் ஏதும் சொல்ல முடியாமல் உள்ளே சென்ற சுந்தர் மீண்டும் கார்த்திகாவை படுக்க வைத்திருந்த அவசர சிகிச்சை அறையின் வாயிலில் சென்று அங்கிருந்த கண்ணாடி வழியே அவளை பார்த்துக் கொண்டிருந்தான். கார்த்திகாவை பார்த்தபடி மீண்டும் விழிகளை அகல விரித்து, திரும்பி ஒரு முறை அவனது தாயாரையும், மாமியாரையும் பார்த்து விட்டு அவர்கள் அவனைக் கவனிப்பதற்கு முன்பு வேகமாகத் திரும்பி, தனது வலது கையின் ஆட்காட்டி விரலை எடுத்து கண்ணுக்குள் வைத்து எடுக்க, கண் சிவந்து ரெண்டு சொட்டு கண்ணீர் வந்தது. கண்ணீர் வெள்ளமென வரும் என்று எதிர்பார்த்த சுந்தருக்கு ஏமாற்றமே.
வந்த கண்ணீரை பின்னால் அமர்ந்திருந்த அமிர்தம் மற்றும் அழகுமீனாவிடம் காட்டுவதற்குள் காய்ந்து விட, கோபத்தில் நறநறவென பற்களைக் கடித்து மீண்டும் கார்த்திகா இருக்கும் திசை நோக்கித் திரும்பினான். “கண்ணு எதுவும் வத்திப் போச்சா?” என்று தனக்குத் தானே ஒரு கேள்வி கேட்டு விட்டு மீண்டும் அங்கிருந்து வெளியே நகர்ந்தான். வெளியே சென்றவன், மருத்துவமனையின் வாயில் அருகில் நின்று கொண்டிருந்த தருணம், உள்ளே நுழைந்தது ஒரு சொகுசுப் பேருந்து. அதில் இருந்து பயிற்சி மருத்துவர்கள் வரிசையாக இறங்க, அக்குழுவில் இறங்கிய ஒரு பெண் மருத்துவரை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர். அப்பெண் மருத்துவரை அவன் மட்டுமின்றி மருத்துவமனைக்கு வெளியே நின்ற இளைஞர்கள் பலரும் பார்த்துக் கொண்டிருந்தனர். மழை குழைத்து வைத்திருந்த மணல் மீது நடப்பது போல் மிக எச்சரிக்கையாக அங்கிருந்து நகர்ந்து சென்று கொண்டிருந்தாள் அப்பெண்.
அந்தப்பெண் உள்ளே சென்றதும், தனக்குள்ளாகவே ‘கார்த்திகா இப்புடி ஒடம்பு சரி இல்லாம இருக்குறப்ப நம்ம இப்படி செய்றது நல்லாவா இருக்கு?’ என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டு, அங்கிருந்து மீண்டும் உள்ளே வந்தான் சுந்தர். எப்படியாவது அழுது விடவேண்டும் என்று பெரு முயற்சி மேற்கொண்டு பார்த்தான் இருந்தும் தோல்வியில் முடிந்தது அவனது அனைத்து முயற்சிகளும். அவன் மனதிற்குள் ஏதோ ஒரு படபடப்பு இருந்து கொண்டே இருந்தது. அவன் எண்ணம் முழுக்க தனக்கு இன்னொரு திருமணம் நடந்து விடும் என்ற கற்பனைகள் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு வேலை இனியாவைத் திருமணம் செய்து வைத்து விடுவார்களோ என்று அவனது தாய் மாமா மகளைப் பற்றி சிறிது நேரம் யோசித்துப் பார்த்தான், அவளுக்கும் தனக்கும் பத்து வருடங்கள் இடைவெளி என்று யோசனை வந்தும், அப்போதெல்லாம் அப்படித்தானே என்று தனக்குள் யோசித்த தருணம், கார்த்திகாவின் தங்கை நினைவிற்கு வந்தாள்.
அவள் நினைவு வந்ததும் ‘அஸ்வின யோசிச்சு அத்தை மாமாவே லாவண்யாவ கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்க, அவளுக்கும் நமக்கும் ஆறு வருசம்தான் வித்யாசம்‘ ன மனதில் ஓட்டிப் பார்த்தான். ‘ஆமா; அதுதான் கரெக்ட்டா இருக்கும்‘ என தனக்குள் முணுமுணுத்துக்கொண்டு சற்று நிதானிக்க, சட்டென நினைவிற்கு வந்தாள் சண்முகப்ரியா. தங்கள் சொந்தத்தில் சற்றே ஏழ்மையான அன்னம் அத்தையின் மகள் சண்முகப்பிரியா. சுந்தரத்திற்கு ஒரு காலத்தில் சண்முகப்ரியாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆதலால் சண்முகப்ரியா மீது அவனது சிந்தனை மாறியது. வசதி கம்மியான குடும்பத்து பெண் என்பதால் திருமணம் தள்ளிப் போய் கொண்டே இருந்தது. ஆதலால் சண்முகப்ரியாவிற்கு வாழ்க்கை கொடுத்தது போல இருக்கும் என்று யோசித்து நின்றான். சற்று நேரம். சண்முகப்ரியாவின் சிந்தனை மூளையின் மூலையில் நின்று கொக்ண்டிருக்கும் போதே, சுந்தரின் அலுவலகத்தில் இருந்து அவனுடன் இணைத்து பணியாற்றும் சக ஊழியர்கள் வர, அவர்கள் பக்கமாக நகர்ந்தான் சுந்தர்.
வந்தவர்களில் லதாவும் ஒருவர். இயல்பாக அனைவரிடமும் நன்கு பழகக் கூடியவள். அவள் ஒற்றைத் தாயாக தனது மகளை வளர்ப்பவள். அவள் மீது பல கண்ணோட்டங்களில் பார்வைகள் விழும். அதில் ஏறத்தாழ அனைத்தும் அவளிடம் நெருங்கிப் பழகுவதற்கு அனுப்பும் பேச்சுமொழி விண்ணப்பங்களாகவே இருக்கும். அது தெரிந்தும் அவைகளை ஒதுக்கி, தனது வேலையில் மட்டும் கண்ணாக இருப்பவள் லதா. லதாவைப்’பார்த்ததும் தற்போது சுந்தருக்கு சண்முகப்ரியா இடத்திற்கு லதா வந்து அமர்ந்தாள். சக ஊழியர்கள் அனைவரும் சுந்தரைப் பார்த்ததும் அவனிடம் கார்த்திகாவின் உடல்நலம் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தவன் அவனையே அறியாமல் செவியில் விழுந்த பல குரல்களின்’கேள்விகளுக்கும் லதாவை பார்த்தே பதில் கூறிக்கொண்டிருந்தான், ஒரு கட்டத்தில் லதாவும் அதை உணர அந்த இடத்தில இருந்து மாற்றி நிற்கலானாள். பட்டென உணர்ந்தவன், லதா நின்ற இடத்தில வந்து நின்ற மாதவனை பார்த்து பேசத் தொடங்கினான். லதாவின் சங்கட நிற்றல் சற்றுத் தணிந்தது. சுந்தர் அந்த இடத்தில்தான் பார்த்துப் பேசுகிறான், லதாவைப் பார்த்து அல்ல என்று அனைவரும் சிந்தித்தனர்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த தருணத்திலேயே வாயிற்கதவு நோக்கி அமிர்தம் அவசரம் அவசரமாக ஓடி வந்தார். “டேய் சுந்தர்” என்று அவர் குரல் கொடுக்கவும், அத்திசை நோக்கி வேகமாக ஓடினான் சுந்தர்.” உன்ன டாக்டர் வந்து பாக்க சொன்னாங்க” என்று அவர் கூற, திரும்பி யாரையும் கவனிக்காமல் வேகமாக அவசர சிகிச்சை பிரிவு நோக்கி ஓடினான் சுந்தர். அலுவலக நண்பர்கள் அனைவரும் அங்கேயே காத்துக் கொண்டிருந்தனர். உள்ளே சென்றவன் அங்கு அவசர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் ஆனந்தை சந்திக்க அவரது அறைக்குச் சென்றான். உள்ளே படபடப்புடன் நுழைந்த சுந்தரைப் பார்த்ததும்,” எவளோ நாளா அவுங்களுக்கு கால் கலர் மாறியிருக்கு?” என்று மருத்துவர் கேட்க, “எனக்குத்’தெரிஞ்சு ஒரு வருசமா இப்படித்தான் இருக்கு” என்று சுந்தர் கூற, “அவுங்களுக்கு சுத்தமா ரத்த ஓட்டமே இல்ல சார். ஒருபக்க கால் ஃபுல்லா கருத்துப் போய்டுச்சு. எவ்ளோ ட்ரை பண்ணாலும் அவுங்களோட பிளட் பம்ப் ஆக மாட்டேங்குது” என்று கூறி அரைநொடி அமைதியானார் மருத்துவர்.” என்ன பண்ணலாம் டாக்டர்?” என்று சுந்தர் கேட்க,” சாரி சார், இதுக்கு டிரீட்மென்ட் பண்றது ரொம்ப கஷ்டம். இப்ப அவுங்களுக்கு வெண்டிலேட்டர் வெச்சிருக்கோம். அத எடுத்துட்டா அவ்ளோதான” என்று மருத்துவர் கூறி முடிக்க, தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தான் சுந்தர்.
உள்ளம் படபடக்க ஆரம்பித்தது. “சார்” என்று மருத்துவர் குரல் கொடுக்க. ஏதும் புரியாமல் சுதாரித்து மருத்துவரைப் பார்த்த சுந்தர், “வேற ஆப்ஷன் எதுவும் இருக்கா சார்?” என்று கேட்க, “இல்ல சார், இன்னும் எத்தனை நாள் வேணும்னாலும் வெண்டிலேட்டர் சப்போர்ட்ல வெச்சிருக்கலாம். ஆனா ,வெண்டிலேட்டர் எடுத்துட்டா அவ்ளோதான்” என்று மருத்துவர் கூறி முடிக்க, எதுவும் பேசாமல் மருத்துவர் முன்னே அமர்ந்திருந்தான் சுந்தர்.
மருத்துவரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்த சுந்தரை ஆழ்ந்து கவனித்த மருத்துவர், “சார் என்ன டிசைட் பண்றீங்க?” என்று கேட்க, தவிப்புடன், “சார் எந்த வாய்ப்புமே இல்லையா?” என்று சுந்தர் கேட்டான். “சார், அவுங்களுக்கு பிளட் இன்ஃபெக்ஷன் இடுப்பு வர பரவிடிச்சு, no other go, வேணா நா வெண்டிலேட்டர் எடுத்துட்டு வீட்டுக்கு அனுப்புறேன். அவுங்க பாடிய இன்னும் புண்ணாக்க வேண்டாம், let she have her pleasant last minutes, be with her and take care of your son” என்று கூறி விட்டு அவரது அறையில் இருந்த செவிலியரை அழைத்து, “பேஷண்ட் கார்த்திகாவுக்கு discharge summary ரெடி பண்ணுங்க, in case anything happens post ventilator removal, let me know and be prepared with the death summary report. பக்கத்துல patients டிஸ்டர்ப் ஆகாம பாத்துக்கங்க” என்று கூறிய மருத்துவர், சுந்தரைப் பார்த்து. “அவுங்கள follow பண்ணிக்கோங்க” என்று கூறி விட்டுக் கிளம்பினார்.
பதற்றத்தின் உச்சிக்குச் சென்றான் சுந்தர். வெளியே வந்தவனின் முகம் இருண்டு இருந்தது. தூரத்தில் அமிர்தம் இருந்தார். சுந்தர் வரும் வழியில் அவரது சக ஊழியர்கள் காத்திருக்க, அவனையே அறியாமல் மீண்டும் லதாவைப் பார்க்க,’ என்ன ஆச்சு?’ என்று கேட்ட லதாவிடம், கையை விரித்து காட்டி விட்டு நகர்ந்து சென்றான் சுந்தர். அமிர்தத்திடம் சென்று விஷத்தைக் கூற, அஸ்வினை கட்டிப்பிடித்த படி அலற ஆரம்பித்தார்கள் அமிர்தமும் அழகுமீனாவும், அழகுமீனாவைத் தேற்றுவதற்கு யாராலும் முடியவில்லை. சுந்தரை அழைத்துக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே சென்ற செவிலியர், செயற்கை சுவாச கருவியை அகற்றப்போவதாகத் தெரிவித்து, அகற்றினார். அகற்றிய நொடியில் ஒரு பெருமூச்சு இழுத்து விட்ட கார்த்திகா, சுந்தரை பார்த்த படி கண் மூடினாள். மருத்துவமனையே திரும்பி பார்க்கும் அளவிற்கு அழுகை சத்தம் கேட்டது. அவ்வளவு அழுகுரல்களுக்கும் மத்தியில் அழுகை வராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான் சுந்தர்.
இப்படி அழுகை வராமல் நிற்கிறோமே என்ற மனக்குமுறல் ஒரு புறம்.. அழாத தன்னை தனது சுற்றத்தார் எப்படி பார்ப்பர் என்ற சிந்தனை மறுபுறம்.. தனக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை துணை என்ற சிந்தனையும் அப்போது அவன் மனதில் இருந்து அகற்ற முடியாமல் இருந்தது. அதோடு அங்கே நிற்காமல் முடிக்க வேண்டிய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர். அஸ்வினை அவ்வப்போது கவனித்து பார்த்துக் கொண்டு மருத்துவமனையில் முடிக்க வேண்டிய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான். கார்த்திகாவின் சகோதரர் மற்றும் உறவினர்கள் சிலர் மருத்துவமனைக்கே வந்து சேர, அவர்கள் அழகுமீனாவை முடிந்த வரை தேற்றி அமரவைத்தனர்.
ஒரு வழியாக அடுத்த இரண்டு மணி நேரத்தில் கார்த்திகாவின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல எல்லா ஆயத்த பணிகளையும் முடித்து வீட்டிற்கு கிளம்பினர். சுந்தரின் அண்ணன் மற்றும் அவனது தங்கை, வெளியூரில் இருக்கும் அவனது சொந்தங்கள் அனைவரும் இரவோடு இரவாக வந்து சேர, அன்றைய இரவு முழுவதும் சுந்தர் ஒரு துளி கண்ணீருக்காய் காத்துக் கிடந்தது தோற்றுப் போனான். ஏதோ ஒரு வித படபடப்பு அவனுக்கு மிகுதியாய் இருந்தது. அதே நேரம் பசி வழக்கத்தைவிட அதிகமாக எடுத்துக் கொண்டே இருந்தது, நெடுநேரமாக எங்கேயாவது வெளியே சென்று எதையாவது சாப்பிட்டு வரவேண்டும் என்று அவனுக்கு ஒரு சிந்தனை. ஏதோ திடீர் அவசரம் போல அழைப்பு வராத கைபேசியை எடுத்து காதில் வைத்து, “அங்கையே இருங்க நா வரேன்” என்று கூறிக்கொண்டே, யாரிடமும் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டான் சுந்தர்.அவனைத் தடுக்க நினைப்பவர்கள் வாயைத் திறக்கும் முன்னரே அவன் வீடு இருக்கும் தெருவின் ஓரம் சென்றிருந்தான் சுந்தர். வேகமாகச் சென்று அருகில் இருக்கும் பிரதான சாலையில் இயங்கிக் கொண்டிருந்த தள்ளுவண்டி தேநீர் கடையில் ஒரு தேநீருடன், சில பண்டங்களை எடுத்து வாயில் போட்டு பசியமர்த்த ஆரம்பித்தான். நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு கூட்டம் அதிகம் இல்லை.
அங்கே போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே கார்த்திகாவுடன் அவன் வாழ்ந்த வாழ்வை மெல்ல மூளைக்குள் ஓட்டிப் பார்த்தான். அவன் திருப்பிய ஒவ்வொரு நாள் வாழ்க்கை குறிப்பிலும் கார்த்திகாவோடு மிக அன்னியோன்னியமாக வாழ்ந்ததும், அவனுக்கு தேவையானது முழுவதையும் தேடித் தேடிச் செய்யும் மனைவியாக, ஒரு நல்ல தோழியாக கார்த்திகா இருந்ததை உணர்ந்தான் சுந்தர். ஆனால், அவளே இன்று தன்னுடன் இல்லை; அவளுக்காக ஒரு துளி நீர் கூட சுரக்க மறுக்கும் கண்கள், கண்கள்தானா இல்லை கண்ணில் ஏதும் பிரச்னை உள்ளதோ என்று யோசித்துக் கொண்டிருந்தான். “ஏன் எப்பவுமே ray ban கிளாஸ் போடுறீங்க?” என்று எப்போதோ அவன் நண்பர் ஒருவரிடம் கேட்டதற்கு, “கண்ணில் நீர் வற்றி விட்டது” என்று அவர் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.
நமக்கும் அவ்வாறோ என்று சிந்தித்த வாக்கில் அமர்ந்திருந்த சுந்தரின் கண்களுக்கு சண்முகப்ரியாவின் முகம் தெரிந்தது, கண்களை லேசாக விழித்துப் பார்த்தான், அப்போதுதான் சண்முகப்ரியாவும் அவளது தாயாரும் பேருந்தில் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். வெளியூரில் இருந்து கிளம்பியதால், மிக தாமதாக வர நேர்ந்தது என்று சுந்தரிடம் கூறியபடியே, அவனைக் கட்டித் தழுவி அழத் துவங்கினாள் அன்னம் அத்தை. “இங்க என்ன பண்ற?” என்று அவர்கள் கேட்க, கூட்டத்திற்கு தேநீர் வாங்க வந்ததாக தெரிவித்து, “ஒரு 50 பேருக்கு வரமாதிரி டீ போட்டு டெலிவெரி பண்ணுவீங்களா?” என்று கடைக்காரரிடம் கேட்க, “இப்ப முடியாதுண்ணா. காலைல வேணா பண்றேன்” என்றார் கடைக்காரர். “சரி விடு நம்ம கிளம்பலாம்” என்று சுந்தரின் அத்தை கூற, அங்கிருந்து கிளம்பத் தயாரான சுந்தரிடம், “135 ரூபா” என்று கடைக்காரர் கைநீட்ட, ஏதும் பேசாமல் எடுத்துக் கொடுத்த சுந்தரை வித்தியாசமாக பார்த்தனர் சண்முகப்ரியாவும் அவளது தாயாரும்.
மெல்ல அவர்களை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் சுந்தர். சுந்தரை பார்க்கும் போது அவன் மீது பரிதாபப்பட்டுக் கொண்டே கூட்டம் இருந்ததால் அவன் எங்கு சென்றான் என்று கூட யாரும் கேள்வி கேட்கவில்லை.சண்முகப்ரியாவின் தாய் அன்னத்திற்கு’மட்டும் அவனின் நடவடிக்கை சுருக்கென்று இருந்தது. மெல்ல அமிர்தத்தை தனியாக அழைத்து அவளது காதில் சுந்தர் நடந்து கொண்டதை பற்றிக் கூற, அமிர்தம் ஒரு வித மீளாத குழப்பத்திற்கு சென்றாள். சுந்தரத்திற்கு என்ன ஆனது; ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்று அந்தக் கூட்டத்தில் சுந்தரை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள் அமிர்தம். அப்போதுதான் உணர்ந்தாள் சுந்தரம் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை என்று. அப்போது முதல் அவளது பார்வை சுந்தரத்தின் மீது மட்டுமே இருந்தது.
மெல்ல அமிர்தத்தை கவனிக்க ஆரம்பித்த சொந்தங்களும், நட்பும் சுந்தரையும் கவனிக்க ஆரம்பித்தது. அரசல் புரசலாக அவனின் அழாமைக்கு கண்கள், காதுகள் முளைக்க ஆரம்பித்தது. அஸ்வின் நடப்பவை எதுவும் அறியாமல் அமர்ந்திருந்தான். முதல் நாள் இரவு முதல் மாமாவின் மகன் மற்றும் உறவுக்கார குழந்தைகளுடன் விளையாடித் திரிந்தவன், அடுத்த நாள் விடிந்தது முதல் ஏதோ சிந்தனையுடன் யாருடனும் விளையாடாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தான். கார்த்திகாவின் சடலம் வைக்கப் பட்டிருந்த பெட்டியை விட்டு சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தவன், அங்கிருந்து கார்த்திகாவின் சடலத்தை அவ்வப்போது பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான். இன்றுடன் அம்மாவை நம்மால் பார்க்க முடியாது என்பது அவனுக்குத்’தெரிந்திருந்தது. ஆதலால் அவன் எங்கும் நகராமல் அழகுமீனா அருகிலேயே சென்று அமர்ந்து கொண்டான். நேரம் பதினோரு மணியான வேலை கார்த்திகாவின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் துரிதமாக்கப்பட்டது. உடல் சற்று இளக்கம் கொடுக்க வேண்டும் என்று, உறை பெட்டியின் மேல் மூடியை திறந்து வைத்தனர். கண்ணாடி வழியாகத் தெரிந்த தாயின் முகம் நீண்ட நேரம் களைத்து வெளியில் தெரியவே, கண்கள் குளமாகின, தேம்பிக் கொண்டே “அம்மா…அம்மா…” என்று அழ ஆரம்பித்தான் அஸ்வின்.
வந்திருந்த கூட்டம் முழுவதும் அஸ்வினை பார்த்து பரிதாபித்துக் கொண்டிருந்தனர். அஸ்வின் யார் கூறுவதையும் கேட்கவில்லை, அழுகை இருக்க இருக்க அதிகமானது. உள்ளே நுழைந்து அஸ்வினைப் பார்த்த சுந்தர், அவனைத் தூக்கிச் சென்று, “அம்மா இப்ப வந்துடுவா, நீ அழாத, நீ அழுத்திட்டே இருந்தின்னா அம்மா வர லேட் ஆகும்” என்று சொல்லி அஸ்வினைத் தேற்றினான். ஆனாலும் ஒரு பயனும் இல்லை. அஸ்வின் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான். அப்போதும் சுந்தர் கண்களில் நீர் சுரக்க மறுத்தது. அஸ்வினை பார்த்தவர்கள் அனைவரும் கண் கலங்கி நின்றனர். இறுதியாக சடங்குகள் ஆரம்பமாகின, தாமதமாக வந்த சடங்கு செய்யும் நபர், பாடிய பாடலுக்கு சுற்றி நின்றவர்களில் அழாதவர்களே இல்லை எனலாம், சுந்தரை தவிர்த்து.
சுந்தர் நடத்தையில் ஒரு சின்ன நடுக்கம் கூட இல்லை. இன்னும் கூறினால் நேரமாக நேரமாக அவன் இன்னும் இறுகியவன் ஆனான். கார்த்திகாவின் உடலைச் சுமந்து செல்ல ரத வண்டி வந்து நின்றது. அவ்வண்டியில் அவளது பூத உடல் ஏற்றப் பட்டது. அதே வண்டியில் சுந்தர், அஸ்வின் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் ஏறிச் சென்றனர். பின்னால் சென்ற கூட்டம் அவரவர் வண்டிகளில் ஏறிப் புறப்பட்டது.
சுடுகாட்டிற்குள் சென்றடைந்ததும் அங்கு செய்ய வேண்டிய சடங்குகள் ஆரம்பமாகின. இறுதியாக ஒருமுறை முகத்தைப் பார்க்க அழைத்த குரல் காதில் விழவே, அம்மாவை காண மறுத்த அஸ்வின், அவனது மாமாவை கட்டி அணைத்துக் கொண்டான். கார்த்திகாவின் உடலின் மீது சூடத்தை வைத்து, “தம்பிய வந்து சூடம் பத்த வைக்கச் சொல்லுங்க” என்று குரல் கொடுத்தவுடன், சுந்தரும், கார்த்திகாவின் அண்ணனும் அஸ்வினை அழைத்துக் கொண்டு முன்னே சென்றனர். சூடத்தை ஏற்றச் சொன்னதும், பயந்த அஸ்வினின் கையை பிடித்து சூடத்தை பற்ற வைத்தார்கள் இருவரும். சூடம் எரியத் தொடங்கியதும் இருவரின் கைகளையும் உதறிய அஸ்வின், கார்த்திகாவின் தலைமாட்டிற்கு ஓடி சென்று, “அம்மா வலிக்குதாமா? சாரி மா. சீக்கிரம் வந்திரு மா. நா சேட்ட செய்ய மாட்டேன்மா” என்று கூறி மீண்டும் வந்து சுந்தரின் கையை பற்றிக் கொண்டான். சுற்றி நின்றவர்கள் அனைவரும் அஸ்வினை கண்ணுற்று நடுங்கி வீட்டிற்கு திரும்பினர்.
வீடு திரும்பியதும் அனைவரும் குளித்து விட்டு சாப்பிட, அமர்ந்தனர். யாரையும் சட்டை செய்யாத சுந்தர், அமிர்தத்திடம் அஸ்வினை பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்து, உள்ளே சென்று தூங்க ஆரம்பித்தான். அவன் தூங்க ஆரம்பிக்கும் பொழுது மதியம் மூன்று மணி இருந்திருக்கும், அத்துடன் வெளியே வரவே இல்லை, வந்திருந்தவர்கள் அனைவரும், சுந்தரை கரித்துக் கொட்டியபடி வீடு திரும்பினர், கார்த்திகாவின் அண்ணனுக்கு, அங்கு இருப்பது மிக அருவருப்பான ஒரு செயலாகப்பட்டது, தனது தங்கை இப்படி இறந்திருக்கிறாள். தங்கை மகன் செய்வதறியாமல் நிற்கிறான். இந்த ஜென்மம் இப்படி இருக்கிறதே என்று மனதளவில் பல சிந்தனைகளை ஓட விட்டுக் கொண்டிருந்தார்.
அடுத்த நாள் காலை சடங்குகளுக்காக மட்டுமே கார்த்திகாவின் அண்ணன் அங்கு இருந்தார். அமிர்தம்’நடப்பதை கவனித்த வண்ணம் இருக்க, இரவு ஒனபது மணிவாக்கில் உள்ளே சென்று சுந்தரை எழுப்ப, அமிர்தத்தை வெடுக்கென்று திட்டி வெளியே அனுப்பி விட்டான் சுந்தர். வீட்டிற்குள் ஒருவரும் மற்றவரோடு பேசவே இல்லை. “பாவம் கார்த்தி எப்படி இங்க குடும்பம் நடந்துச்சோ?” என்று கார்த்திகாவின் அண்ணன் மட்டும் ஒரு முறை கூறி அமர்ந்தார். அஸ்வினை நாங்க கூட்டிட்டு போறோம் என்று அழகுமீனா அமிர்தத்திடம் சொல்ல, அவரோ செய்வதறியாமல் அஸ்வினை கட்டிப் பிடித்துக் கொண்டு இருந்தார்.
அப்படியே ஒவ்வொருவராக அசந்தனர். காலை அனைவருக்கும் முன்னதாக எழுந்த சுந்தர் காலுக்கு அடியில் கிடந்த போர்வையை எடுத்து பக்கத்தில் போர்த்தியது போல போட்டுவிட்டு வெளியே சென்றவன், வராண்டாவில் கிடந்த நாளேட்டை எடுத்து உள்ளே வந்து, “கார்த்திகா லேட் ஆயிருச்சு பாரு” என்று சத்தமாக கூற, உள்ளே படுத்திருந்த அனைவரும் வெளியே வந்தனர், அனைவரையும் ஒருமுறை ஸ்தம்பித்துப் பார்த்த சுந்தர், பீறிட்டு ஓவென்று அழ’ஆரம்பித்தான்.
*******