சருகுகளுக்கு நடுவில்
சத்தம் போடாமல் நிற்கின்றன மரங்கள்!
வேட்டைக்காரர்கள்
மரங்களை வேட்டையாட வரவில்லையென்று
அவற்றுக்குத் தெரியாதோ?
*******
நீ
நினைவில் வைத்திருக்கும்
அத்தனைப் பேரின் நினைவுகளிலும்
இருக்கிறாய்
நினைவுகளாக கடத்தப்படுகிறாய்
கதைகளாக மாற்றப்படுகிறாய்
உனக்கான குணாதிசயங்கள்
நபருக்கு நபர் மாறுகின்றன
அவரவர் நினைவின் கதைகளில்
அவரவரின் மனிதனாய்
நீ. .
*****
ரோஜாப் பூக்களை பொக்கேக்களில் வைத்தார்கள்
கல்யாண வீட்டின் வாசலில் வைத்தார்கள்
பெண் குழந்தையின் தலையில் ஹேர்பின் குத்தி நட்டார்கள்
பாடைகளின் மாலையிலிருந்து பிய்த்தெறியவும் செய்தார்கள்
தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் ரோஜாச் செடிகளிலிருந்து
சில ரோஜாப் பூக்கள் காணாமல் போன செய்தியைக் கூட
கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால்
இப்போது நான் கடற்கரையில் அமர்ந்தபடி
அலையோடு விளையாடிக் கொண்டிருக்கும் இந்த ரோஜா இதழ் போல்
ஒரு கொண்டாட்டமான ரோஜாவைப் பார்த்ததில்லை!
இவ்வளவு மகிழ்ச்சியான ரோஜாவைப் பார்த்ததை
யாரிடமாவது சொல்ல வேண்டும்
ஒரு ரோஜாச் செடியிடமாவது சொல்லிவிட வேண்டும்.
*****
மறதியும்
ஞாபகமும்
வெவ்வேறல்ல
ஊர் ஊராகப் பறந்த வலசை சென்ற நினைவுகளற்ற பறவைக்கு
இருப்பது மறதி அல்ல
ஊர் ஊராகப் பறந்து வலசை செல்லும் வழியை மறக்காமல் இருப்பது ஞாபகம் அல்ல
எது தேவையோ
அதுவே ஞாபகம்
எது தேவையில்லையோ
அதுவே மறதி.
*****
காளான் குடைகளுக்கு மேல்
பொழிகின்ற மழைக்கு
அடியிலிருந்து முளைக்கிறது விண்மீன்
அவ்விண்மீனின் பிம்பம்
இப்போது வானத்தில் தெரிகிறது
வானத்திலிருந்து
மழைத் தூண்டில் வீசுபவனைப் பார்த்தேன்
மேகத்தில் தெரிந்த அவன் உருவம்
மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தது
அந்தி முடிந்து பிறந்த இரவு
துவங்குவதற்குள்
அவன் நிலவைப் பிடித்துவிடுவானா என்று யோசித்தபடியே
எழுதிக் கொண்டிருக்கிறேன்?
*****
சம்பந்தமற்ற முகங்கள் திடீர் திடீரென
நினைவில் வந்து தொலைக்கின்றன.
ஒன்றின் நினைவைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள்
மற்றொரு முகம்
மற்றொரு முகமென்று
அடுக்கடுக்காய் வந்து தொலைகிறது
சின்ன வயதில்
நூலகத்து அலமாரியில்
புத்தகங்களைத் தள்ளி விளையாடுவதுண்டு
ஒருவேளை அப்புதகங்களின் சாபமாகத்தான்
இன்று இப்படி ஆகிவிட்டேனோ?
*****
நீங்கள் நேற்றிலிருந்து இன்றுக்குள் வந்ததைப் போல்
இன்றிலிருந்து நாளைக்கும் செல்வீர்களேயானால்
உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்!
******
யாரிடமெல்லாம் பொய் சொன்னேன் என்றும்
யாரிடமெல்லாம் உண்மைகளைச் சொன்னேன் என்றும்
சத்தியமாக நினைவில்லை
அந்தந்த நேரத்துக்கான பொய்களும் உண்மைகளும்
எனது தூக்குக் கயிற்றின் கீழிருக்கும் ஸ்டூலைத் தள்ளிவிட்டபடியே இருப்பது மட்டும் எனக்குத் தெரியும்!
*********