ராஜம்மாளுக்கு இப்போது அறுபத்து ஐந்து வயது இருக்கும். சில வருடங்கள் வரை மேலக்காட்டிற்கு களை வெட்டப் போய் வந்தவள். கடைசியாக ஊரை ஒட்டிய மந்தைக் காட்டில் மிளகாய் பறித்தவள். இந்த ஊரில் அவள் கால் படாத இடமே இருக்கமுடியாது.
எதற்கோ பயந்த நாய் இவளுக்குப் பின்னால் ஒளிந்த போது வரப்பில் அப்படியே தடுமாறிச் சாய்ந்தவள் அதன் பின்னால் கால்களைச் சுருக்கிக் கொண்டாள்.
‘நடக்காமல் அம்மாவால இருக்க முடியுமா.. வீட்டை வீட்டு வெளியேறா மனுசியா அவள்..’ என்று மகனும் எல்லா வைத்திய சாலைக்கும் அலைந்து பார்த்தான். ராஜம்மாள் தான் மகனை அலைய வைக்க விருப்பாதளாய் போதும் என்று நிறுத்திகொண்டாள்.
சிறு வயதில் தாய கட்டைகளோடு இப்படி ஒரே இடத்தில் அமர்ந்தது என்பதுதான் அவளுக்கு அமர்ந்தது என்பது பற்றிய ஞாபகம்.
பதினெட்டு வயதில் இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்தவள். ‘அரை குறுக்க நிலம் செவக்காடு தான் உனக்கும் உன் புருஷனுக்கும் பங்கு..’- என்று பிரித்துக் கொடுத்தார்கள்.
எந்த நேரத்தில் கால் வைத்தார்கள் என்று தெரியவில்லை, அவளையும் அவரையும் பிரிக்கவே முடியவில்லை அந்த நிலத்தில் இருந்து
அரை குறுக்கம் ஒன்றாகவும்,மூன்றாகவும் ஆன போது எந்த நோய் என்று தெரியாத ஒன்றுக்கு புருஷனை வாரிக் கொடுத்த அவளின் கூச்சல் தான் பின் நிற்கவே இல்லை.
பெரிய உத்திரக் கல்லை ஒற்றை ஆளாக புரட்டும் வல்லமையோடு எல்லாவற்றையும் எதிர் கொண்டாள். ஊருக்கு முன்னால் விதைத்து ஊருக்கு முன்னால் அறுவடையை வீட்டிக்கு கொண்டுவந்து விடுவாள்.
‘ஒரே மகனுக்கு இப்படி ஏன்…ஓடி ஓடி சேர்க்கிற..’ என்ற எந்த சொல்லும் அவளை ஒன்றுமே செய்யவில்லை
விழுகிறவனைத் தூக்கிவிட போகும் அவசரம் போலத்தான் எல்லாவற்றுக்கும் வேகம் அவளிடமிருக்கும். என்ன சொல்லி வளர்த்தாள் என்று தெரியவில்லை மகனை. தாயை விட பிள்ளை நல்லவனா… பிள்ளையை விட தாய் நல்லவளா என்று ஊராரால் சொல்ல முடியாது.
ஜன்னல் வழியாக கிழக்கும் வடக்காக வெள்ளாமை காட்டை பார்த்தவாறு காலை நேரத்தை ஒப்பேற்றி விடுவாள். அரசாங்க அதிகாரியான மகனை இது வரை ஒரு போதும் காட்டிற்கு அழைக்கவில்லை. ‘இந்த வெயில் என்னோடு போகட்டும்..’ என்பாள்.
நல்ல தம்பிக்கு காட்டை குத்தகைக்கு விடுவதாக வந்த போது அவனிடம் ‘ராஜம்மாள் கிட்ட குத்தகைக்கு காடு பிடிச்சி நீ வாழவா..’ என்றார்கள். அவள் அவ்வளவு கறார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், நல்லதம்பியிடம் எல்லாவற்றையும் முதலிலயே பேசிவிட்டாள்.
வாரத்துக்கு ஒரு தடவை வீட்டுக்கு வந்து காட்டின் நிலையைச் சொல்லவேண்டும் என்ற நிபந்தனையும் அதில் ஒன்று . அது ஒன்று தான் கஷ்டமாக இருந்தது. ‘லேசில் விடாதே.. போன… பொழுது போய் தான் திரும்பமுடியும். யாருக்கு என்ன பயிர்.. கழைக்கு என்ன மருந்து வச்ச…’ என்று ஒரு நூறு கேள்விக்காவது அவன் பதில் சொல்ல வேண்டும்.
பொழுது மெதுவாக மங்கியது.வீட்டில் யாரும் இல்லை. ‘சின்னவளுக்கு மொட்டை போடணும் நீயும் வா..’ என்று முருகனை பார்க்க மகன் எவ்வளவோ அழைத்துப் பார்த்தான்.அந்த சின்ன இடத்தில் அவளால் அமரமுடியாது என்பதை விட வீட்டில் இருந்தாள் கொஞ்சம் நடக்கலாம் என்ற ஆசையில் மறுத்துவிட்டாள்.
‘சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ?’
‘அதை நான் பாத்துக்கிறேன் நீங்க பத்திரமா போயிட்டுவாங்க..’ என்று அனுப்பிவைத்தாள். ஒரு வகையான தனிமை அவளுக்கு இது புதியதாக இருந்தது.
பழைய வீடு என்றால் ஊருக்கு மத்தியில் இருக்கும், பேச்சுத் துணைக்கு யாராவது இருப்பார்கள். மகனின் சம்பாத்தியத்தில் பெரிய வீடும் சுற்றுச்சுவரும் அவளுக்கு அவ்வளவு நெருக்கமாக இல்லை. எத்தனையோ முறை வீட்டை பூட்டிக்கோ என்றாலும் ராஜம்மாளுக்கு அவ்வளவு அக்கறை இருந்ததில்லை. அன்றும் அப்படித்தான் படுக்கையில் சாய்ந்தாள்.
எந்த சப்தமும் இல்லை, துக்கமும் இல்லை. ஆனால், ஏதோ ஒரு உருவம் அசைவதற்கான நிழல் தெரிந்தாலும் வேகமாக எழுந்திரிக்க முடியவில்லை. திரும்பிப்படுத்து ஒரு கையை ஊன்றி மெதுவாக எழுந்து பூனையை விரட்டுவது போல தலைவாசல் நிலைக்கு நேராக நடக்க வைத்திருக்கும் கம்பை வீசி எறிந்தாள்.
ஓட நினைத்தவனின் கால்களுக்கு மத்தியில் அது மாட்டி தடுமாறச் செய்ய, சாவிக் கொத்து வைத்திருக்கும் சட்டத்தில் மோதி விழுந்தான் திருட வந்த முருகன். நெற்றியில் காயம்.
அவ்வளவு தெம்பு எங்கிருந்து வந்ததோ வெளியேர முடியாமல் வீட்டை உள் பக்கமாக பூட்டி விளக்கை போட்டாள் ராஜம்மாள்.
முருகனுக்கு நாம் மாட்டிகொண்டோம் என தெரிந்த நடுக்கத்தை விட இருட்டில் பார்த்த ராஜாம்மாள் கணவரின் புகைப்படம் இப்போது வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்த நடுக்கம் தான் அதிகமாக இருந்தது
திரும்பி ராஜம்மாள் முகத்தை பார்த்தான். ‘எந்திரி நாயே…’ என்ற முகமும் கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் வந்தது.
அடுக்களைக்குள் போனவள் துண்டு துணியை கொண்டுவந்து நெற்றியில் கட்டிக் கொள்ளச் சொன்னாள்
முருகனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. நல்ல வேலையாக இந்த அம்மாவிற்கு நம்மை அடையாளம் தெரியவில்லை என்று.
கடவாய் ஒட்டி உள் வாங்கிய வயிறைப் பார்த்தவள்… ‘சாப்டியா மூதேவி… ?’ என்றாள்.
‘தட்டு அங்கன இருக்கு… போ சாப்டு..’ என்றவளின் சொல்லுக்கு அப்படியே நின்றான். இன்னோரு குரல் அவளுக்கு இருக்கிறது என்று தெரியாதவன்.
கையைத் துடைத்துகொண்டு வந்தவனை தனக்கு கீழாக அமரச் சொன்னாள்.
‘திருட வந்த நாயி எதும் எடுக்காம ஏன்டா ஓடப் பார்த்த….’ என்றாள். முருகனுக்கு என்ன சொல்லுவதேன்று தெரியவில்லை.
இடது காலை இழுத்து இழுத்து நடந்து வந்து அமர்ந்து கொண்டான். பயம் கொஞ்சம் விட்டுருந்தது. ‘பேர் என்னடா… ?’ என்றாள்.
‘முருகேன்.. ம்மா..’
‘எம் பையனும் முருகனைப் பார்க்கதான் போயிருக்கான்.. நீ இங்க வந்தயாக்கும்..’
அவனிடம் பதில் இல்லை.விட்டுவிட்டால் இப்படியே கூட போய்விடலாம் என்ற முடிவில் இருந்தான்
‘சொல்லுடா…. ஏன் எதையும் எடுக்கல…?’ என்றாள்.
‘ஐயா போட்டோவை பார்த்தேன்… ம்மா.. அதான்.. ‘ என்று இழுத்தான். ராஜம்மாளும் ஒரு முறை பார்த்துகொண்டாள்
‘அவர் உன்னை மாதிரி ஆளுங்ககிட்ட பழக மாட்டாரே…. எப்டி தெரியும்?’ என்றாள்.. ‘சரி, கொஞ்சம் தண்ணி கொண்டா… ‘ – அவன் எழுந்து போய் ஒரு சொம்பு நிறைய கொண்டுவந்தான். ராஜம்மாளின் அதிகாரம் முருகனுக்கு இருந்த கொஞ்ச சந்தேக்கத்தையும் தீர்த்தது. இதே குரல் தான். வயதானதால் உடம்பு ஒடுங்கிவிட்டது. இனி பயந்து என்னவாக போகிறது என்று எல்லாவற்றிக்கும் தயாராக இருந்தான்.
‘பெரியம்மா…. என்ன இன்னும் தெரியலையா… நல்லா பாருங்க….’ என்றான்
ராஜம்மாளுக்கு இப்போது தான் இவன் காலை இழுத்து இழுத்து நடந்து வந்த ஞாபகம் வந்தது.
‘அட கருங்காலிப் பயலே… நீ தானடா… அன்னைக்கி அவ்வளவு வாங்கியும் இன்னுமா திருந்தமா இருக்க….?’
‘இருவது வருஷம் இருக்குமாடா….?’ என்றாள்
முருகனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. ‘முப்பத்தி ரெண்டு வருஷம் ஆகுது பெரியம்மா… ‘ என்றான்
ராஜம்மாள் மகனுக்கு அப்போது ஆறு வயது இருக்கும். மெதுவாக முன்னேறும் நேரம். அடுக்களையை ஒட்டிய தாழ்வாரத்தில் அப்போது ஆடு வளர்த்தாள்.இரண்டு செம்பறி ஆடும் அதில் இருந்தது. பட்டியை தென்னங்கீற்றால் அடைத்து விட்டு செம்பறி ஆட்டைக் கட்ட மாட்டார்கள். வெள்ளாடு தான் ஓடும்.. செம்பறி ஆட்டுக்கு மனுஷ புத்தி..எங்கேயும் போகாது.
முருகன் திருட வருவதற்கு ஒரு வாரம் முன்னாடி ஒரு செம்பறி ஆட்டை தொலைத்திருந்தார்கள். திருடி போகத்தான் வாய்ப்பிருக்கிறது என்று திடமாக நம்பினர்கள். சரியாக அடுத்த சில நாளிலயே முருகனும் வந்திருந்தான்.
ராஜம்மாளுக்கு கால் காசு நட்டம் என்றால் கூடப் பொறுக்காது.ஒரு ஆட்டைக் காணவில்லை என்றால் சும்மாவா இருப்பாள்? புருஷனை தூங்கவிடவில்லை. இருவரும் கோழித் தூக்கத்தில் விழித்திருந்தார்கள்.
முதலில் வெள்ளாட்டின் சப்தம் தான் கேட்டது கதவிடுக்கு வழியாக பார்த்தாள். இதே நிழல் உருவம் தான். புருஷனை முன்கட்டு வழியியாக வெளியேறி அடுத்த சந்து வழியாக பின்னால் வர சொன்னவள் ஒருக்களித்த கதவைத் திறந்து கூரையின் மீதிருந்த பண்ணரிவாளை ஓட நினைத்த முருகனைப் பார்த்து வீசினாள்.
சரியாக முருகனின் கெண்டைக் கால் நரம்பில் வெட்டுவிழுந்தது. தேள் கொட்டினாலும் திருடனுக்கு சப்தம் வரக்கூடாது என்பது முருகனுக்கு தான் பொருந்தும். எந்த சப்தமும் இல்லாமல் வைக்கோல் போரில் படுத்தவனை ராஜம்மாளும் அவரும் இழுத்துவந்து கொல்லைப்புற திருணையில் கிடத்தினார்கள். மம்பட்டி பிடித்த கையால் ஓங்கி ஒரு அறை விட்டார். ஏற்கனவே திருடுன ஆட்டை எங்கடா வித்த என்றார்.
முருகன் அவர் கால்களை நன்றாக கட்டிக்கொண்டு, ‘சத்தியமா அது நான் இல்ல சாமி…. நான் இன்னைக்கு தான்.. வந்தேன்… என்ன நம்புங்க சாமி… ‘ என்றான்.
ராஜம்மாள்தான் அவன் கால்களை பார்த்து விட்டு கை நிறைய மஞ்சள் தூளை அள்ளி… ‘காயத்துல போடு… ‘என்றாள். வெட்டுப்பட்ட இடத்தில் ரத்தம் நிற்காமல் வந்தது. திரும்பி அடிக்க முன்னேறிய புருஷனை தடுத்தவள்..’இதோடு நிறுத்திக்கோ… ‘ என்று கை நிறைய உப்பை அள்ளிகொண்டு வந்து ‘சத்தியம் பன்னு’ என்றாள். அதோடு போனவன் தான் இந்த முருகன்.
ஏனோ… ராஜம்மாளுக்கு இப்போது முகம் மலர்ந்தது. ‘காலக் காட்டு…’ என்றாள். தையல் தடம் இல்லை ஆனால், வழித்த தோல் மடக்கி ஒட்டிக்கொண்ட மாதிரியான இடம் இருந்தது.
‘இந்த கால வச்சிக்கிட்டு இன்னும் எதுக்குடா இந்த பொழப்பு? என்றாள். இது அவன் வாழ்நாளின் நேரங்களை விட அதிகமாக கேட்கப்பட்ட கேள்வி.
‘சரி இப்போ எதுக்கு திருட வந்த…..’
‘இது என்னமா…. கேள்வி… வயித்து பொழப்புக்கு தான்… வேற எதுக்கு….. எனக்கு வேற என்ன தெரியும்… ஆனா போலீஸ்காரங்களுக்கு அடுத்து நான் மாட்டிக்கிர்றது உங்க கிட்ட தான் பெரியம்மா….’ என்றான்
‘சரி இரு….’என்று ராஜம்மாள் மெதுவாக உள்ளே சென்றாள். இரண்டு முழம் நீலம் உள்ள வெள்ளி அருணாக் கயிறை கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.
‘வேண்டாம்மா… நீங்க விட்டா போதும்…’
‘இத உனக்கு செய்யலடா… கொட்டிக்கார பயலே… எனக்கு செய்றேன். அன்னைக்கு உன் கெண்டைக்கால வெட்டும் போது உனக்கு இருந்த வலி எனக்கு இப்ப தான்டா தெரியுது. இது என் புருசனோடது.. இதை வச்சி இனி நான் என்ன பண்ண போறேன்… வாங்கிக்க… அன்னைக்கு என் பொழப்பு உன்னால நட்டப்படும்னு தான் பண்ணறீவா வீசுனேன்.. இன்னிக்கு எனக்கு என்னடா இல்ல… உன் காலுக்கு நான் செஞ்ச கைமாறா இருக்கட்டும்….’ என்று தந்தாள்.
இருவரின் காயமும் ஆற துவங்கியிருந்தது.
******
முடமாக்கியவள் முடமானாள். ராஜம்மாள் அன்றைய அறத்தின் படி உப்பின் மேல் சத்தியம் வாங்கினாள். இளமை வீரியம் சக்தி மிகுந்த அவள் அவனைப் பாதித்தாள் . இவளே முடமானாள். பாதிக்கப்பட்டவுடன் அவனின் பாதிப்பையும் வலியையும் உணர்ந்தாள் . எவரும் எவரின் நடமாடும் உரிமையைப் பறிக்கக் கூடாது என்ற அறத்தின் படியே அந்த வெள்ளி அரைஞாண் கயிற்றை இழப்பீடாகத் தருகிறாள். முதுமையில் கனிந்தவள் கள்வனை மன்னித்து அருள்கிறாள். இது சக்தியின் லீலை.