மௌன விளக்கு
கிணற்று மேட்டில்
ஒற்றை விளக்கு எரிகிறது
கிணற்றுக்குள் இருளை
கிணற்றுக்கு வெளியே நிற்கும் இருளிலிருந்து பிரிக்கிறது
எதன் பொருட்டோ மௌனம்
ஒளிர்கிறது
பரவிப் பரவி
கூர்மையான
சொற்களிலிருந்து
அன்பு தோய்ந்த சொற்களைப்
பிரிக்கிறது.
****
இருட்டறையில் கிடக்க வாய்த்தவனுக்கு
ஜன்னலில் தெரியும் வானம்
உலகை விடப் பெரியது
அவ்வப்போது சிறகடித்துக் கடக்கும் பறவை
அவனது கண்களிலிருந்து கிளம்பி மனதுக்குள் வாலையாட்டி அமர்கிறது
நிலவும் சூரியனும்
சலித்த அன்றாடத்தை தலைகீழாகப் புரட்டுவதாக அவன் நம்பத் தொடங்குகிறான்
சமயங்களில் காண்கிற மழைக்குப் பிறகான வானவில்லின் நிறத்தை இருட்டுக்குப் பூசி முகம் பார்க்கிறவனிடம்
உண்மை விளம்பிகள் தள்ளியே நிற்கலாம்
நம்பிக் கொண்டிருப்பவன்
தெளியும் வரை
எது இதமளிக்கிறதோ
அதுவே உண்மை.
****
நாங்கள் கைவிடப்பட்டவர்கள்
கைவிடப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து கைகளைக் கோர்த்திருப்பது கூட
குருதி வாசம் நுகர்பவர்களுக்கு வலிக்கிறது
கூட்டத்தில் ஒருவன் சிறுவனாக இருந்தபோது
எங்கள் வீட்டில்
தேநீர் பருகியிருக்கிறான்
மீசை அரும்புகையில் சரியாக வன்முறைக்குப் பழக்கிவிடும் சமயோசிதம் நிச்சயம் மெச்சக் கூடியதில்லை
எதையோ சாதித்த உற்சாகத்தில்
உயரும் கைகளிலிருந்து எங்கள் ஆடை கீழே உதிர்கிறது
பொதுசனம்
மூக்கின் மீது விரலை வைப்பதை
சாதனையாக நினைக்கிறீர்கள்
அவை
உங்கள் அதிகாரத்தின்
முடை நாற்றம் பொறுக்காமல்
பொத்துவதற்கானவை
அடுத்த நாளின்
பிழைப்பைப் பார்க்க ஏதுவாக
‘உச்’ கொட்டுபவர்களால் எழுதப்படும்
கைவிடப்பட்டவர்களுக்கான
கவிதைகள்
இதோ அடுத்தடுத்த வரிகளில் முடியப்போகின்றன
அப்படியானதா எங்கள் வாழ்வும் சாவும்?
********