கடவுளும் கந்த்சரஸ்வதியும் – தேஜூ சிவன்
கூட்டம் அதிகமில்லை.
காதுகளில் shape of you.
ருசித்து உண்ண Chipotle Fried Chicken Meal
எதிரில் நிழலாடியது.
உட்காரலாமா?
ஒய்.. நாட்..
சிரித்து அமர்ந்தார்.
கையில் இருந்ததைப் பிரித்தார்.
Smoky Red Chicken.
ஒரு விள்ளல் வாயில் போட்டு ஏதோ கேட்டார்.
கந்த்சரஸ்..
வாட்..?
கந்த்சரஸ்வதிதானே?
ம்..நீங்க?
சொன்னார்.
அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள்.
நெட்ஸ்டார்க் போலிருந்தார். பிடரி மயிர் தோள்களில் வழிந்து கொண்டிருந்தது.
புதுமைப்பித்தனின் கடவுளா?
ஓ.. இலக்கியம் தெரியுமா? உன் கடவுள்.
சிக்கன் சாப்பிடறீங்க?
கடவுளைப் பார்த்து கேக்குற கேள்வியா இது?
வேறேன்ன கேக்கறது? எனக்கு வரம்லாம் வேண்டாம்.
நானும் இப்ப கொடுக்கற மாதிரி இல்ல..
தெரியுது. சரி என்ன விஷயம்?
கந்த்சரஸ் தேசத்தின் முக்கிய இம்யூனாலஜிஸ்ட்.. வைரஸ் பத்தி இண்டர்நேஷனல் செமினார்ல பேச வந்துருக்கே.
ம்.. இனி மக்கள் எப்டி நடந்துக்கணும்னு பேசி ஒரு கைட்லைன் தயார் பண்ணப் போறோம்.
தயார் பண்ணி?
இனி வரப் போவது வைரஸ் காலம். அதனை எதிர்க்க?
கடவுள் சிரித்தார்.
என்ன?
மக்களை மட்டும் தயார் பண்ணப் போறீங்களா?
வேற யாரை தயார் பண்ணனும்?
பார்மாச்சூட்டிகல் கம்பெனி…ஹாஸ்பிட்டல்ஸ்… டாக்டர்ஸ்.
அவங்களுக்கு என்ன?
என்னவா? போன வருஷம் என்ன நடந்தது? எவ்வளவு மெடிஸின்ஸ். ..சானிடைஸர்..மாஸ்க்..க்ளவ்ஸ்.. ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் .. எவ்ளோ கொள்ளை.. எவ்ளோ உயிர்பலி?
வேகமாகச் சிரித்தாள்.
உயிர்பலி.. அது உங்க அசைன்மெண்ட்தானே கடவுளே?
என்னதுதான். நான் என் வேலையை செஞ்சுதானே ஆகணும்?..மக்கள் உங்களையும் கடவுளாத்தானே பாத்தாங்க?
ஆமா. உண்மை தான். கூப்பிட்ட குரலுக்கு நீங்க எங்க சாமி வர்றீங்க?
அதுக்காக இப்டியா?
எப்டி..?
மக்களின் பயத்தை முதலீட்டா வச்சி மக்கள்கிட்ட எவ்வளவு காசு பிடுங்கினீங்க?
த பாருங்க சாமி… உங்கள உண்மையான கடவுளுன்னு நம்பிதான் பேசறேன். பத்திரிக்கை ஆள் கிடையாதுதானே?
சிரித்தார்.
ஐடி ப்ரூப் வேணுமா?
தயங்கினாள்.
என் தலை உச்சியைப் பார்.
பார்த்தாள்.
சரி..சரி.. நம்பறேன். காசு உள்ளவங்க தானே கொடுக்கறாங்க சாமி?
அப்ப இல்லாதவங்க?
கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டல் இல்லேன்னா மாற்று மருத்துவம்.
அங்கயும் நீங்கதானே இருக்கீங்க?
நீங்க வர வேண்டியது தானே?
நான் வர முடியாது.. அது என் வேலை இல்லை. காக்கறவர் வேற ஒருத்தர்.
மனுஷங்க மாதிரியே பேசறிங்க.. இந்த நாட்டு மக்கள் தொகை எவ்ளோ தெரியுமா?
சிரித்தார்.
உங்கள்ல முதல் ஆள் ஒழுங்கா வேலை செய்யறார்.. சீக்கிரமே சைனாவைத் தாண்டிடுவோம். மூணாவது ஆள் நீர் ரொம்ப பக்காவே வேலை பாக்கறீர். பெருந்தொற்று.. புயல்.. வெள்ளம்.. பஞ்சம்.. பட்டினி. மேல அவ்ளோ எடம் இருக்கா சாமீ?
மேலும் சிரித்தார்.
உங்கள் மூவரில் நடுப்புற ஒருத்தர் இருக்காரே.. அவர் என்னதான் பண்றார்.? கண்ணசந்து தூங்கறாரா?
கடவுள் வாய் பொத்தினார்.
இங்க உள்ள அரசியல் நெலமை தெரியாம இப்டில்லாம் பேசக்கூடாது? வெச்சு செஞ்சிடுவாங்க சரஸ்.
அடப்பாவிக் கடவுளே ..உங்களையும் மிரட்டிட்டாங்களா?
சிரித்தார்.
தெய்வீகச் சிரிப்பையா உம் சிரிப்பு. அவரைப் பாத்து கொஞ்சம் எழுப்பி விடுங்க
அம்மா தாயே ஏன் இப்டி காண்டு ஆகறே? கோபம் குறை. லாபமும் குறை. மனிதனை நினை.
முதல்ல அவங்கள நிறுத்தச் சொல்லுங்க. நாங்க நிறுத்தறோம்.
வேலு நாய்க்கர் மாதிரியே பேசறீயே. அவங்கள ஒண்ணும் பண்ண முடியாது. சட்டதிருத்தம் பண்ணிடுவாங்க..முடியலனா ஆளத் தூக்கிடுவாங்க.
அய்யே.. ஆள விடுங்க சாமி.. செமினாருக்கு நேரமாச்சு.
அப்ப வர்ட்டா..
திரும்ப எப்ப?
வரவேண்டிய நேரத்தில் வருவேன்.
அதான் எப்ப?
Armageddon.
சொல்லி வெண்புகையென மறைந்தார்.
***
உள்ளே நுழையும் போதே மேஹாவின் முகத்தில் கோபம் தெரிந்தது.
என்னடா செல்லம்?
பேசாதீங்க அப்பா.. உங்க மேல காண்டா இருக்கேன்.
என்னாச்சு?
ஒரு கற்றை காகிதத்தை நீட்டினாள்.
என்ன?
உங்க நாடகம்!
ஏன்?
எங்க தமிழ் மிஸ் ரொம்பக் கடுப்பா ஆய்ட்டாங்க.
ஏண்டா?
ஸ்கூல் ஆனுவல் டே செலெப்ரேஷன்ல இந்த ட்ராமா போட்டோம்னா எங்க தமிழ் மிஸ்ஸை ஸ்கூல்லேர்ந்து தூக்கிடுவாங்களாம்.
அவ்ளோ டெர்ரரா உங்க ஸ்கூல்?
பின்ன என்ன அப்பா? வருஷா வருஷம் நீட் எக்ஸாம்ல எங்க ஸ்கூல் ஸ்டூடண்ட்தான் நம்ப டிஸ்ட்ரிக்ட் டாப்பர். எல்லா கவர்ன்மெண்ட் மெடிக்கல் காலேஜ்லயும் எங்க ஸ்டூடண்ட் படிக்கறாங்க.. எங்க ஸ்கூல்ல இடம் கிடைக்கறது எவ்ளோ கஷ்டம்னு உனக்குத் தெரியாதப்பா?
சரி.. சரி.. விடு.. வேற எழுதி தர்றேன்.
ஒண்ணும் வேண்டாம். எங்க தமிழ் மிஸ்ஸே தயார் பண்ணிட்டாங்க.
என்ன டைட்டில்?
கலாமுக்கு ஒரு சலாம்.
கடவுளே.
இந்த முறை கடவுள் வரவில்லை.
********
அறிவியல் சிறுகதை. சிறப்பு உரையாடலின் வழியே கதை சொல்லும் முறையில் மேலும் மேலும் வளர்ச்சி நல்லது ஐயா