உடல் எனும் நெளிவுகள் கொண்ட
நேர்கோட்டில்
ஒழுங்கற்ற பாறையைப் போல்
சில ஓவியங்கள் தீட்டுகிறாய்
கால் நூற்றாண்டுகள் கடந்த
ஓர் பின்னிரவில்
வெடித்துச் சிதறுகிறது பாறை
சிதிலமடைந்த ஓவியங்கள்
தொடையிடுக்கில் வழிகின்றன
முதிர்ந்த மரக்கட்டை போலான பாறை
கரையான்கள் சூழ நிலத்தில் கிடக்கிறது
எங்கோ கேட்கும் சங்கொலியில்
சுருதி விலகாத ராகம் இசைக்கிறார்கள்.
****
விடுபடல்களற்ற
காயமான வாழ்க்கை
என் உறக்கத்தில் சீழ் வடிக்கிறது
தினமும் நினைவுகளின்
எச்சிலைத் தொட்டு
அதன் மேல் வைக்கிறேன்
அம்மையே
ஒரு துண்டம் துயரத்தை
நறுக்கி,
குவளைப் பாலில்
கலந்து அருந்திய பின்
எனை ஈன்றிருக்கிறாய்
ஆலகாலனின்
தொண்டைக்குழியிலிருக்கும்
ஒரு சொட்டு அமுதை
அப்பாலில் கலந்து
இப்போது
எனக்குப் புகட்டேன்
மாதா
ஒரு பறவை
அதன் சிறகு
வலிக்க வலிக்க
பறந்து ஒழியட்டும்.
****
நம் சம்பாஷனைகளை
விறகடுப்பின்
வல மூலைக்கல்லில்
இட்டு வைக்கிறேன்
மாலைப்பனியில்
கதகதப்பேற்றும் வேளை
புகைநிமித்தம்
வந்தடையும்
சில சம்பாஷனைகளை
சாண உருண்டையிலிடுகிறேன்
பனியைக்கீறிக்கொண்டு
திமுதிமுவென
எரிகிறதடுப்பு மூலை.
****
படகுப் பயணம்
காணாத சிறுமியாய்
இருக்கும்போது
நீர்வழிப் போகும்
படகொன்றில்
ஏறி அமர்ந்து விட்டேன்
துடுப்பு வலிக்க வலிக்க
நதியின் பாதையில்
செல்கிறது படகு
முடிவற்றதைப் போல்
தோன்றும் நதியின் பாதையில்
சுழலொன்று இடைப்படுகிறது
சுழலில் நீந்திப் பழகிய படகு போலும்
எளிதாய்க் கடந்துவிட்டேன்
இன்னும்
நீர்வழி மட்டும் முடிந்த பாடில்லை
துடுப்பு வலித்த கரங்களில்
இப்போது குருதி கசிகிறது.
****
காலையும் மாலையும்
என் வரவேற்பறை சன்னலில்
ஒரு தேன்சிட்டு இளைப்பாறுகிறது
வண்ணத்துப்பூச்சொன்று
ஏதோ சொல்ல வந்து
பிறகு முத்தமிட்டுச் செல்கிறது
இலட்சம் பூக்கள்
ஒருசேர உதிர்ந்து
என் காலடியில் விழுகின்றன
பிறகு
நிஜங்களில் மூழ்கி மூழ்கி
மூச்சுத் திணறுகிறது
இந்த மழை
என் வாலிபங்களை
கழுவிப்போகிறது.
*********