பூங்காவின் கடைசி பெஞ்ச்சில்
எப்போதும் யாரும் அமர்வதில்லை
நானும்தான்
பறவைகளின் எச்சத்தால் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததந்த பெஞ்ச்.
பெஞ்ச்சின் அருகில் வாழும் மரங்கள் உதிர்த்த இலைகள் சூழ
பூங்காவில் அமர்ந்திருந்தது அந்த பெஞ்ச்.
கிட்டே நெருங்கிச் சென்று பார்த்தால்
சிமெண்ட் உதிர்ந்து
பெஞ்ச்சுக்கு உள்ளேயிருந்த துருப்பிடித்த கம்பிகள் தெரியும்.
அவ்வளவு வயசான பெஞ்ச்சால் நம்மைத் தாங்க முடியுமோ?
திடீரென்று ஒருநாள் அந்த பெஞ்ச்சை இடித்துவிட்டார்கள்.
அங்கே அழகான புதிய பெஞ்ச் ஒன்று பிறந்திருந்தது.
அதன் மீது எந்தப் பறவையும் அமர்வதில்லை.
இலைகளனைத்தையும் இப்போதெல்லாம் பெறுக்கிவிடுகிறார்கள்.
புதிய பெஞ்ச்சின் மீது மக்கள் அமர்கிறார்கள்.
குழந்தைகள் ஏறிக் குதித்து விளையாடுகிறார்கள்.
பழைய பெஞ்ச் இதைப் பார்த்தால் மனிதர்களைப் பற்றி கேவலமாக நினைத்துவிடுமோ?
இல்லை! இல்லை!!
பறவைகளுக்கான பெஞ்ச் இடிக்கப்பட்டதால்
பறவைகள் மனிதர்கள் மீது கோபித்து கொள்ளுமோ?
இல்லை! இல்லை!!
பல பத்தாண்டுகளாக அங்கேயே வாழும்
அரசமரத்துக்கு மட்டுந்தான் தெரியும்
புது பெஞ்ச்சுக்கு அடியில்
இன்னும் மிச்சமிருக்கும்
பழைய பெஞ்ச்சின் தடங்கள்
இன்னும் புதிய பெஞ்ச்சை மனிதர்களுக்கேற்ப பழக்கிவிடுவதைப பற்றி.
****
நீள வரிசையில் நிற்கின்றன ரயில் பெட்டிகள்
ரயிலில் ஏறுபவர்களுக்கு
ரயில் பெட்டிகள்
ரயில் விளையாட்டு விளையாடுவது தெரியாதபடி
உறங்கி விடுகிறார்கள்.
அவர்கள் உறங்கும் நேரம்
குதித்துக் கைதட்டி
விளையாட்டை ஊக்குவிக்கும்
மலைகளைப் பார்ப்பதில்லை
வேகமாக ஓடும் ரயிலின் உள்ளே நுழைந்த பட்டாம்பூச்சிக்கு
எப்படி எதுவும் ஆகவில்லை என்று யோசிப்பதில்லை?
ஸ்டேசனிலிருந்து ரயில் கிளம்பும்போது
“‘கூ சிக்குபுக்கு! சிக்குபுக்கு!’ என்று சொல்லியவாறு
ஓடத் துவங்கும் ரயில் பெட்டிகளின்
கண்களை நான் மட்டும்
சன்னல் வழி பார்த்துவிட்டேன் என்று சொன்னாள்” ஸ்டேசன் பெஞ்சில் என்னருகில் அமர்ந்திருந்த யாரோ ஒரு பாப்பா,
“அவை கண்கள் இல்லை
ரயிலின் சன்னல் வழித் தெரியும் நட்சத்திரங்கள்” என்று
நான் அவளிடம் சொல்லவில்லை.
******