இணைய இதழ்இணைய இதழ் 90சிறுகதைகள்

ஆயிரம் குற்றவாளிகளும், ஒரு நிரபராதியும்..! – சகா

சிறுகதை | வாசகசாலை

காவல் நிலையத்தின் வாசல் தள்ளி ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் என் வண்டியை நிறுத்திவிட்டு பதட்டமாக இறங்கினேன்.

எத்தனையோ தடவை இதே சாலை வழியாகச் சென்று வந்திருந்தாலும் இத்தனை நாள் பார்ப்பதற்கு சாதாரணமான, கண்களுக்குப் பழக்கமான ஒரு கட்டிடம் போலத் தோன்றிய இந்த காவல் நிலையம் இன்றைக்கு ஏனோ பூதத்தின் கோட்டை போலத் தோற்றமளித்து பயமுறுத்தியது. 

அனைத்து அரசு அலுவலகங்கள் போலவே அதன் ஒவ்வொரு சென்டிமீட்டரிலும் ஆணவமும், புதிதாக உள்நுழைபவனை பயமுறுத்தும் அதிகாரத் தோரணையும் நிரம்பி வழிந்தன. தயங்கி நின்றேன். 

‘வரவேற்பாளர்’ என்ற போர்டின் கீழே அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த காவலர் தலை நிமிராமலேயே, ”என்ன வேணும்..” என்றார்.

“சார், என் பேரு திருஞானம். நேரு நகர்ல ராதை டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்ன்னு ஒரு கடை வெச்சிருக்கேன். கொஞ்ச நேரத்துக்கு முந்தி ஸ்டேசன்லருந்து போன் பண்ணி வரச் சொன்னாங்க, ஏதோ விசாரிக்கனும்ன்னு.” 

“அப்படி பெஞ்சில உட்காருங்க. அய்யா இப்போ வந்திடுவாரு..” 

உட்கார்ந்தேன். வந்த காரணம் தெரியாததால் மனம் எதை எதையோ நினைத்து குமைந்தது.

குமாரை போனில் அழைத்து விவரம் சொன்னேன். 

“என்னவாம், என்ன விசாரிக்கணுமாம்..?” 

”தெரியலையே..” 

”உன் தலைமுடி! போன்ல இதெல்லாம் கேட்க மாட்டியா நீ.? வான்னா உடனே போய் உட்கார்ந்திடறதா. அறிவில்லே உனக்கு.?” 

மிரண்டேன். ”டேய்..”

“அக்கம்பக்கம், தெரிஞ்சவங்க கூட ஏதாவது பிரச்சனை நடந்ததா?”

அவசரமாக யோசித்து மறுத்தேன். “நீ இங்கே வர்றியா. எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்.” 

“நீ எதுக்குப் போயிருக்கேன்னே உனக்குத் தெரியலை. நானும் வந்து.. ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் மாத்தி மாத்தி பார்த்துக்கிட்டிருக்கிறதா..”

மெளனித்தேன். 

“இந்த சூழல்ல ஒரு அட்வைஸ்தான் உனக்கு. ஏதாவது கேட்டா அதுக்கு மட்டும் பதில் சொல்லு. எக்ஸ்ட்ரா ஒரு வார்த்தை பேசாதே. அப்புறம், அதிலிருந்து ஆயிரம் கேள்வி கேட்பாங்க. என்ன பேசினோம்ன்னு ஞாபகம் வெச்சுக்கோ.” 

“ம்..” 

“ஆல் த பெஸ்ட். முடிச்சுட்டுக் கூப்பிடு. முதல் முறையா காவல் நிலையம் போயிருக்கே. நைட் பார்ட்டி வை..” 

எனக்கு இத்தனை ஆலோசனை சொல்லும் இந்த குமாரை அவசரப்பட்டு ஒரு பிரபல வழக்கறிஞர் என மனதிற்குள் தவறாக பிம்பப்படுத்திவிட வேண்டாம். அவன் ஒரு டீக்கடை நடத்தி வருகிறான். அது கோர்ட் வளாகத்திற்குள் இருக்கிறது.! 

என்ன குற்றத்திற்கு என்ன செக்சன், அதற்கு என்ன தண்டனை, தப்பிக்க என்ன வழிகள் என்பன போன்ற எல்லா நுணுக்கங்களும் அவனது கடை பெஞ்சில் வைத்துதான் அலசப்படும். சொல்லப் போனால் அந்த இடமே ஒரு மினி கோர்ட் மாதிரி இயங்கும். உலக நியாய, தர்மங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக அலசப்படும். தீவிரவாதிகள் தூக்கிலிடப்படுவார்கள். 

அப்படிப்பட்ட திறமைசாலிதான் ஆலோசனை சொல்லியிருக்கிறான்.

நேரம் கழிய கழிய பதட்டம் குறைந்து ஒரு மாதிரி அந்த இடத்துக்கு செட்டாகி விட்டேன். மேலே ஃபேன் ஓடினதில் கொட்டாவி உண்டாகி தூக்கம் வரும் போல இருக்க.. திடீரென ஸ்டேசன் பரபரப்பானது. போனில் யாரையோ திட்டினபடியே உள்ளே வந்தார் அவர். 

“அய்யா வந்துட்டாரு..”

என்னை அரைப் பார்வை பார்த்தார். வணக்கம் வைக்க வேண்டுமா.? தடுமாறி நின்றேன். வேகமாக அறைக்குள் போய்விட்டார். 

ஒரு கட்டு ஃபைலோடு ரைட்டர் உள்ளே போனார். 

தெரிந்தவர்கள் யாரேனும் வந்துவிடுவார்களோ என புதிய அச்சம் உண்டாகியது எனக்கு. எதிர்பாராத நேரத்தில் என்னை அழைத்தார்கள்.

“உட்காருங்க, என்ன விசயம்..?”

புரியாமல் பார்த்தேன். என்னைப் பற்றிச் சொல்லிவிட்டு விவரம் சொன்னேன். 

பேனா முனையில் காது குடைந்தபடியே கேட்டுக் கொண்டார். எனக்கு காது குறுகுறுத்தது. டேபிள் மேலிருந்த ஃபைலை எடுத்து எதையோ பார்த்தார். “உங்க கடையில மொத்தம் எத்தனை பேரு வேலை செய்யறாங்க. அவங்க பேர்லாம் சொல்லுங்க..”

சொன்னேன். 

“இப்போ நீங்க இங்கே இருக்கீங்க, கடையை யார் பார்த்துக்குவாங்க..?”

“வீட்டுல சார். இதெல்லாம் எத்துக்கு கேட்கறீங்கன்னு..”

”சொல்றேன். நீங்க சொன்ன லிஸ்ட் படி இப்போ எல்லோருமே உங்க கடைலதான் இருக்காங்களா.?” 

சில நொடி யோசித்தவன் “இல்லை சார். மூர்த்தி மூணு நாளா கடைக்கு வரலை. போன் செஞ்சேன். நாட் ரீச்சபிள்ல இருந்தது..” 

“ம்..” என்றபடி யோசனையோடு தலையாட்டினார். “அவன் ஆள் எப்படி.?”

”அஞ்சரை அடி உயரம் இருப்பான் சார். சாதாரணமான நிறம்தான். கண்ணாடி போட்டிருப்பான்.” 

“அடையாளம் கேட்கலை. குணாதிசயம், கேரக்டர்..?”

 .

“பத்தாவதோ என்னவோ படிப்பு சார். நாலஞ்சு வருசமா கூட இருக்கான். நல்ல உழைப்பாளி. நம்பிக்கையானவன். பேங்க் வரவு செலவுகளையெல்லாம் அவன்தான் பாத்துக்குறான். அப்பா இல்லை. கொஞ்சம் சிரமப்படற குடும்பம். பார்வதி நகர்ல வாடகை வீடு, ரேசன் அரிசி..” 

 “அவன் ஏன் இன்னைக்கு வேலைக்கு வரலை.?” 

“தெரியலை சார். அடிக்கடி லீவு போடறவன் கிடையாது. இந்த தடவைதான் இப்படி. சாயங்காலம் அவன் வீட்டுக்குப் போய் என்ன ஏதுன்னு..”

மதிக்காமல் அடுத்த கேள்விக்கு தாவினார். “இந்த சுபைதா யாரு..?”

விழித்தேன். 

“உங்க கடையில தான் வேலை செஞ்சாங்க போல.” 

“ஓ, சுபைதா பானு.! பானுன்னு கூப்பிடுவோம். முழுப்பேரு தெரியாததால சின்ன குழப்பம். சுபைதா மூணு மாசம் முன்னாடி வரை என் கடையிலதான் வேலை செய்திட்டிருந்தா..”

“சுபைதாவுக்கும், மூர்த்திக்கும் என்ன பிரச்சனை..?”

“பிரச்சனை ஒண்ணும் இல்லை. மூர்த்தி மூணு மாசம் முன்னாடி வந்து என்கிட்ட சொன்னான். அவனும், சுபைதாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறதாகவும், நான்தான் அவங்களை சேர்த்து வைக்க உதவி செய்யணும்ன்னும் விரும்பிக் கேட்டுக்கிட்டான்..” 

 “ஓ.. அதுக்கு சார் என்ன சொன்னீங்க..”     

“நான் அதுக்கு உடன்படலை. எனக்கு பயங்கர கோபம் வந்திடுச்சு. வேலை செய்ய வந்த இடத்துல இதென்ன தேவையில்லாத அதிகப்பிரசங்கித்தனம்ன்னு திட்டினேன். வாழ்க்கையில இன்னும் அவன் போக வேண்டிய தூரத்தை சுட்டிக் காட்டினேன். முதல்ல வாழ்க்கையில முன்னேறு. இடையிலேயே இதிலெல்லாம் இடறி விழுந்திடாதேன்னு பாடம் புகட்டினேன்.”  

“அதெல்லாம் அவன் காதுல ஏறுச்சு..?”

“எங்கே சார். காதலிக்கிறவனுக்கு புத்தி வேலை செய்யுமா. நான் சொன்னதை மதிக்காம நீங்கதான் எங்களை சேர்த்து வைக்கனும் முதலாளி. இல்லை விசம் குடிச்சு செத்துப் போயிடுவோம்ன்னு கதறினான்..”

“அடப் பாவமே, அப்புறம்.”. 

“யோசிச்சுப் பார்த்தேன். அவனோட காதலுக்கு அவன் வீட்டுல பெரிசா எதிர்ப்பு இருக்காது. நான் போய் பக்குவமா பேசினா அவங்கம்மா சம்மதிச்சுடுவாங்க! அதனால சுபைதா வீட்டுல போய் முதல்ல பேசலாம்ன்னு முடிவெடுத்து அவங்கப்பா இஸ்மாயிலைத் தேடிப் போனேன்..”

“என்ன சொன்னாரு அவரு..?”

“அவரெங்கே சார். சரியான ப்ரசர் குக்கர். சேதி சொன்னதுமே கொந்தளிச்சுட்டாரு. என் முன்னாடியே சுபைதாவுக்கு அறை விழுந்தது. அடியும், உதையும் கூட. நான்தான் அவரை சமாதானம் பண்ணுனேன். ஒரு மணி நேரம் செலவழிச்சு தன்மையாப் பேசி சூழலைப் புரிய வெச்சேன். கடைசியா, ரெண்டு நாள் டைம் கொடுங்க. யோசிச்சு சொல்றேன்னு கேட்டுக்கிட்டாரு.” 

“ரெண்டு நாள் கழிச்சு கல்யாணத்துக்கு சரின்னு ஒத்துக்கிட்டாரு. அப்படித்தானே..”     

“இல்லை சார் அடுத்த நாள்லயிருந்து சுபைதா வேலைக்கு வரலை. புரியாம போன் கூப்பிட்டேன். போன்ல பேசின சுபைதா தன் அப்பா கோபமா இருக்கிறதாவும், வேலைக்குப் போகிறதை தடுத்திட்டதாகவும், தன்னோட கல்யாணத்துக்கு வேகமா ஏற்பாடுகள் நடக்கறதாகவும் அழுதபடியே சொன்னா. அதுக்குள்ள போனை பிடுங்கிப் பேசின அவ அப்பா தேவையில்லாம போன் பண்ணி வீண் தொந்தரவு செய்தா உன் கடை இருக்காதுன்னு மிரட்டினாரு.” 

“அதை முர்த்தி கிட்ட சொன்னீங்களா..?”

“பாவம் சார். சொன்னதுமே மனசு உடைஞ்சுப் போயிட்டான்! ஒரே புலம்பல். அழுகை. கலங்கினான். தூக்கு மாட்டி செத்துப் போறேன்னு பயமுறுத்தல். நான்தான் ஆறுதல்படுத்தி ஆலோசனை சொன்னேன்.”

“என்னன்னு..?”

“வீட்டை எதிர்த்து பிரச்சனை பண்ணி கல்யாணம் செய்திடாதே. பெரிய சிக்கலாகிடும். விட்டுடு. உனக்கு அவ தான்னு இருந்தா கண்டிப்பா கிடைப்பா. அப்படி இல்லைன்னா இவளை விடவும் சிறப்பான ஒருத்தியை கடவுள் அமைச்சுத் தருவாருன்னு பாசிட்டிவா சொன்னேன். சரின்னு மண்டையை ஆட்டினான். விதியை நொந்துக்கிட்டே வேலை செஞ்சான்..”

அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். “என்ன பிரச்சனைன்னு கேட்டீங்களே. இப்போ சொல்லவா என்ன பிரச்சனைன்னு.?” சஸ்பென்ஸ் வைத்தார் அவர். “அந்த சுபைதாவை நேத்திருந்து காணோம்.”

“அடடா எங்கே போனா சார். நல்ல பொண்ணாச்சே.” 

“தன் தங்கச்சி கூட கடைவீதிக்குப் போனவ அவளை ஏமாத்திட்டு எங்கேயோ எஸ்கேப்பாகிட்டா. மூர்த்தியையும் காணோம், சுபைதாவையும் காணோம். ஸோ..”

”ரெண்டு பேரையும் யாரோ கடத்திட்டுப் போயிருக்காங்க சார். எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம், அந்த சுபைதாவோட அப்பா இஸ்மாயில் பண்ணின வேலையா இருக்குமோ இது..?” 

முறைத்தார். “சுபைதாவோட அப்பா தன் மகளைக் காணோம்ன்னு புகார் கொடுத்திருக்காரு. மைனர் பெண்ணைக் கடத்திட்டுப் போயிட்டாங்கன்னு. உங்க பேருதான் முதல்ல இருக்கு.” 

“சார்..” தூக்கிவாரிப் போட அதிர்ச்சியுடன் அவரை வெறித்தேன். “நான் உண்டு, என் கடை உண்டுன்னு அமைதியா இருக்கிறவன், என்னைப் போய்..” உடல் நடுங்கியது. அழுதுவிடுவேன் என அச்சமாக இருந்தது. 

“ரெண்டு பேரும் உங்க பொறுப்புலதானே இருக்காங்க. எங்க வெச்சிருக்கீங்க ரெண்டு பேரையும்..?”

“அய்யோ சார்..” பதட்டத்தில் எழுந்தே விட்டேன். “நான் அவ்வளவெல்லாம் ஒர்த் இல்லை சார். என்னைப் பார்த்தா கடத்தல் பண்றவன் மாதிரியா இருக்கு.?” 

அழுதுவிட்டேன் சொல்லச் சொல்ல. “இதெல்லாம் எனக்குத் தேவையா சார்.? ரெண்டு பேரையும் ’கிளம்புங்க என் கடையை விட்டு’ன்னு மனிதநேயம் பார்க்காம துரத்தி விட்டிருந்தா இன்னைக்கு இந்த நிலை வந்திருக்குமா? தேவையில்லாம ஸ்டேசன் வந்து விசாரணைக்கு பதில் சொல்லி.. ஏதாவது ஒரு விசயத்தை உங்க கிட்டேயிருந்து மறைச்சேனா.? அத்தனையையும் சொன்னேனே. நான் தப்பு பண்ணியிருந்தா இப்படி கடையைத் திறந்து வெச்சு வியாபாரம் பண்ணிட்டிருப்பேனா..” 

 அவருடைய போன் ஒலித்தது.

“ஹலோ.. ஆமா சரி, ஆமா ஓ.! அவங்க அங்கேயே இருக்கட்டும் நான் கிளம்பி வர்றேன்..”

எழுந்தவர் என்னிடம் திரும்பி “எந்திரிங்க கிளம்பலாம்..” என்றார்.

“சார் என்னை ஜெயில்ல போட்டுடாதீங்க. சத்தியமா அவங்க எங்கே இருக்காங்கன்னு எனக்குத் தெரியாது.”

“அடச் சீ. வாய்யா. அவங்க ரெண்டு பேரும் கிடைச்சிட்டாங்க. டீயெஸ்பி ஆபிசுல அடைக்கலம் கேட்டு தஞ்சம் புகுந்திருக்காங்க..”

“மாரியாத்தா காளியத்தா அங்காள பரமேஸ்வரி அம்மன் தாயே என்னைக் காப்பத்தினதுக்கு நன்றி. அப்புறம் என்ன சார் கடத்தப்பட்டவங்களே வந்துட்டாங்க. எனக்கு இனி இங்கே என்ன வேலை. நான் போறேன். அங்கே கடையில போட்டது போட்டபடி கிடக்கு..” 

“லூசாய்யா நீ. கடத்தலுக்கு உடந்தைன்னு புகார் தந்திருக்கு. இல்லைன்னு நிரூபிக்க வேணாமா. போறேன் போறேன்னு குதிக்கிறே. போ எனக்கென்ன. பிரச்சனை பெரிசாகி மாட்டனும்ன்னு உன் தலையெழுத்து.” 

“நான் வர்றேன் சார்..” என்றேன் நொந்தபடி. 

வாசல் வந்து குமாருக்கு அழைத்து எதையோ உளறினேன் 

“முட்டாள் முட்டாள். நீ எதுக்குடா அவங்கப்பாகிட்ட சம்பந்தம் பேசப் போனே. பெரிய இவன். அவங்க லவ் பண்ணி நாசமாப் போனா உனக்கென்னடா கேடு. உனக்கெதுக்கு இந்த தாய் மாமா வேலையெல்லாம்..” 

“ஏதோ நல்லது பண்ணலாம்ன்னு நினைச்சு..”

“கிழிச்சே. நீ பண்ணின நல்லதோட பலனைப் பார்த்தியா.? நான் இப்போ அங்கே வந்தா பிரச்சனையை பெரிசு பண்ணித்தான் முடிப்பேன், நண்பன்னு பார்க்க மாட்டேன் உனக்கு நாலு அறை விழும்!” 

“கூப்பிடறேன் குமாரு, சார் வந்துட்டாரு.” 

பத்து நிமிட கொடும் பயணத்தில் ஒய்த்ரீ காவல் நிலையம் வந்தடைந்தோம். 

நான் வண்டியிலிருந்து இறங்கினதுமே மூர்த்தியின் அம்மாவும், அவனது தம்பியும் என்னை நோக்கி வந்தார்கள்.

அவனது அம்மா என்னைக் கண்டதும் ஒப்பாரி வைத்தாள். “நாம இருக்கிற இருப்புக்கு இதெல்லாம் தேவையா.? புத்தி கெட்டுப் போய் இவன் பண்ணின காரியத்தால நான் எங்கெல்லாம் வரவேண்டியிருக்கு. நீயாவது நல்ல பாதை காட்டியிருக்கக் கூடாதா..?” 

யார் வசனத்தை யார் பேசுவது. கடவுளே.. கண்கள் மூடிக் கொண்டேன்.

அவனது தம்பி இந்த நிகழ்வுகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல போனை நோண்டிக் கொண்டிருந்தான். கான்ஸ்டபிள் ஒருவர் கருணைப்பட்டு மேல் தகவல் தந்தார்.

“அந்தப் பொண்ணு சுபைதா, தான் மேஜர்ன்னு நிரூபிச்சுடுச்சு. போலீசு அவங்ககிட்ட சமரசம் பேசிட்டிருக்கு. எக்காரணம் கொண்டும் யாரும் ரெண்டு பேரையும் தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு எழுதி வாங்கிட்டு திருப்பி அனுப்பிடுவாங்க. அவ்வளவுதான், இனி அவங்க வாழ்க்கை அவங்க கையில. என்ன அந்த சுபைதாவோட அப்பன்தான் குதிச்சுட்டிருக்கான். வெட்டுவேன், குத்துவேன்னு.”  

ஒருவர் வெளியே வந்து “திருஞானம் யாரு, உள்ளே வாங்க” எனச் சொல்ல நடுங்கினபடி பலியாடாக உள்ளே நுழைந்தேன்.   

“எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க முதலாளி..” கூட்டாக என் காலில் விழுந்தனர் மூர்த்தியும், சுபைதாவும்.

பதறிப் போய் விலகினேன். அதிகாரி போன்ற ஒருவர் சொன்னார்.

“பாருங்க, இவரு மேல கடத்தலுக்கு உடந்தைன்ன்னு புகார் தந்திருக்கீங்க. அதை வாபஸ் வாங்கிடுங்க. எக்காரணம் கொண்டும் யாரையும் தொல்லை பண்ணக் கூடாது. ஆகாதுன்னா ஒதுங்கி இருங்க. புரியுதா..?”

சுபைதாவின் அப்பா கர்ஜித்துக் கொண்டே இருந்தார் ”எப்படி வளர்த்த பொண்ணு. எவன் கைக்கோ போய் இப்படி சீரழியுதே அல்லா..”

“என் மக எப்பவோ செத்துப் போயிட்டா..” அவளது அம்மா மாரில் அடித்துக் கொண்டு அழத் துவங்க “ஸ், அதெலாம் உங்க வீட்டுல போய் வெச்சுக்கோங்க..” என ஒரு வைஜெயந்தி ஐபிஎஸ் அதட்டியது. 

கும்பல் மெல்ல மெல்ல நகர நானும் நாசுக்காக வெளியேறினேன். 

“டேய்..” என்றொரு குரல் கேட்டது. எல்லோரும் அதிர்ந்து திரும்பினோம்.

சுபைதாவின் அப்பா காரருகே நின்றிருந்தார். கண்களில் கொலை வெறியுடன் என்னை வெறித்தார். “நீதானேடா இதெல்லாத்தையும் திட்டம் போட்டு பண்ணினது.? நல்லவன் மாதிரி எங்கிட்டே வந்து பேசிட்டு பின்னாடியே இப்படி சதித் திட்டம் தீட்டி என் மகளை என்கிட்டேயிருந்து பிரிச்சு ஒரு அன்னக்காவடிக்கு கட்டி வெச்சுது.! அவங்களைக் கூட மன்னிச்சு விட்டுடுவேன்.. ஆனா, நம்பிக்கைத் துரோகி… உன்னை விட மாட்டேன்டா. உன் ப்யூசைப் பிடுங்கறேன், இந்த இஸ்மாயில் பாயோட இன்னொரு பக்கத்தை காட்டறேன் பாருடா..” 

ஆவேசமாக எச்சரித்து விட்டு காரில் ஏறி கிளம்பிப் போனார்.

எல்லோரும் என்னை வேடிக்கை பார்க்க உறைந்து போய் நின்றிருந்தேன். 

தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பிட மூர்த்தி புன்னகையுடன், “அவரைக் கண்டுக்காதீங்க முதலாளி. சீக்கிரமா ஒரு பேரனையோ, பேத்தியையோ கண்ணுல காட்டினா ஜில்லாயிடுவாரு..” என்றான் சிரிப்புடன்

“சீ போங்க. எப்ப பார்த்தாலும்.” அவனை செல்லமாக அடித்தாள் சுபைதா.

இருவரையும் மாறி மாறிப் பார்த்தேன் நான். 

“ஒரு வாரம் பத்து நாள் கழிச்சு வேலைக்கு வர்றோம் முதலாளி. ரெண்டு பேரும்தான். உங்களை விட்டா வேற யாரு எங்களுக்கு முதலுதவி, உறுதுணை, ஆதரவு, அடைக்கலம் எல்லாம்!” 

“ஏங்க, அதையும் சொல்லிடுங்க..” சுபைதா எதையோ எடுத்துக் கொடுத்தாள்.

“ஆமா. முதலாளி! நம்ம கடைக்குப் பின்னாடி ஒரு சின்ன காலி இடம் இருக்குல்ல. அங்கே ஒரு மறைப்பு போட்டு ரூம் மாதிரி ஏற்பாடு பண்ணித் தந்துட்டா நாங்க ரெண்டு பேரும் இனி அங்கேயே இருந்துடறோம்.! கடை வளர்ச்சிக்கும் கை கொடுப்போம்ல்ல.. இனி அது நம்ம கடை!”

மூர்த்தியும், சுபைதாவும் அவனது அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்வதும், சுபைதாவின் நெற்றியில் அந்த அம்மாள் அன்பு முத்தம் தருவதும், அவனது தம்பி அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதும் மங்கலான காட்சிகளாக எனக்குத் தெரிந்தன. 

*******

no1saga78@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button