கதைக்களம்

ரூஹாணிகள் – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

கதைக்களம் | வாசகசாலை

இரவின் இருட்டில் புராதனத்தன மிக்க தோற்றத்தில் அமானுஷ்யம் கலந்த குஞ்சாலிக்குட்டிதங்ஙள்  வீட்டு வராண்டாவில் மெஹர்னீஷாவைப் பொத்திப் பிடித்தபடிக்கு உட்கார்ந்திருந்தது உம்மா மைமூன்பீபி. கூட்டம் அவ்வளவாக இல்லை. தள்ளி உட்கார்ந்திருந்த ஹைதுருஸ் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த தன் மகளை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். மெஹர்னீஷாவின் முகம் கறுத்து வாடிப்போயிருந்தது. திடீரென சிரித்தாள். அவள் பார்வை போன பக்கம் உம்மா திரும்பியது. அங்கு யாரும் இல்லை. இனி வீரிட்டுக் கத்த ஆரம்பித்துவிடுவாள். மைமூன் முகத்தில் பயம் எழுந்ததைக் கண்டு எழுந்து பக்கத்தில் வந்து அமர்ந்தார் ஹைதுருஸ். மெஹர்னீஷாவை மெல்ல தன் நிலைப் படுத்தும் விதமாக, அவளின் போக்கை உடனடியாக மாற்றும் விதமாக, “மெஹருக்கு  என்ன வேணும்…?” என்று கேட்டார். அவள் கவனம் இருட்டுக்குள் இருந்தது. அவள் முகத்தில் மெல்ல அச்சம் பரவிக் கொண்டிருந்ததை உணர்ந்த ஹைதுருஸ் தன் மகளை  மெல்ல உலுக்கினார். திடும் என நினைவு வந்தவளாக அவள் வாப்பாவைப் பார்த்து சிரிப்பது போல காட்டினாள். பிறகு இருட்டை பார்த்து வெறிக்க ஆரம்பித்தாள். சங்கடமாக மகளை பார்த்தபடி இன்னும் அவளை அணைத்துப் பிடித்துக்கொண்டாள் மைமூன்பீபி.  

குளக்கரை ஓரத்தில் மக்கள் நடமாட்டமில்லாத அடர்ந்த தோப்புப் பகுதியில் பழங்கால பங்களா போன்ற அமைப்பில் இருந்தது தங்ஙளின் அந்த வீடு. வீட்டைச் சுற்றிலும் காடு போன்ற அமைப்பில் தோட்டம் போடப்பட்டு கேரளத்து மலையாள வீடுகளை  ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. முன் புறம் இருந்த பெரிய கேட் அருகே  மட்டும் சிறிய விளக்கு எரிந்து கொஞ்சம் வெளிச்சம் பரவிக் கிடக்க, மற்ற இடங்களில் கரிய இருள் அப்பிக் கிடந்து பீதியை ஊட்டிக் கொண்டிருந்தது. பகலில் பார்க்கும் போது இல்லாத பயமும் பீதியும் ஒரு வித அமானுஷ்ய தன்மையும் தங்களின் வீட்டுக்கு  இரவில் வந்து விடும்.  இரவுகளில் அந்தப் பக்கம் போகவே அச்சப்படுவார்கள். தங்ஙள் ஓதி ஓதி ஊதி விரட்டும் ரூஹாணிகளும், பேய்களும் அங்கேயே தோப்பில் சுற்றிக் கொண்டிருப்பதாக மக்கள் நம்பினார்கள். ஜின்களும் கூட அங்கே நடமாடுவதாக மக்கள் நம்பினார்கள். அநேக இரவுகளில் அச்சமூட்டும் சத்தமும் அழு குரல்களும் அங்கே வட்டமிட்டுக் கொண்டிருந்தன.  

மெஹர்னீஷா பருவம் அடைந்த பெண். ஹைதுருஸ் குடும்ப வகையராவிலேயே இப்படியான அழகான பெண் இல்லை என்று  மெஹர்னீஷாவைக் குறித்து எப்பவும் ஒரு பேச்சு இருந்தபடியே இருக்கும். மாநிறம்தான், இருந்தாலும் குழந்தைத் தனம் கொண்ட முகமும், வெச்ச கண் வெச்சபடி பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் உடல் வாகும் கொண்டிருந்தபடியால் வீதியில் உள்ள இளவட்டங்களுக்கு அவள் செல்லப் பெண்.  ஏதாவது விஷேசங்களுக்கு மெஹர்னீஷாவை அழைத்து போனார்கள் என்றால், ‘ அது யாரோட பொண்ணாக்குமே… கேட்டாக் குடுப்பாங்களா..?’ என்று விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். 

ஏற்கனவே ‘ஒம்பொண்ண எம்பய்யனுக்கு கொடு…’ என்று ஆளாளுக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்காமலும், எந்தவித பதிலும் சொல்லாமலும், ’இன்ஷா அல்லாஹ்.பார்ப்போம்..’ என்று தப்பித்துக் கொண்டிருக்கும் நிலையில் யார் கண் பட்டதோ திடுமென ஒரு நாள் தேவை இல்லாமல், மெஹர் எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தாள். அவள் சுபாவம் அது என்று இரண்டு நாள் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். வாசலில் நின்று வீதியில்  வருவோர் போவோரையெல்லாம் பார்த்து சிரிக்க ஆரம்பித்த போது, மைமூன் மகளைத் திட்டினாள். உம்மாவின் கண்டிப்புக்கு எப்போதும் பயப்படும் மெஹர், உம்மா திட்டுவதை காதில் வாங்கவே இல்லை.  “என்னளா! நாம்பாட்டுக்கு கத்திக்கிட்டே இரிக்கேன்.நீ பாட்டுக்கு வாசல்ல நின்னு சிரிச்சுட்டிருக்க..?” கோபம் தலைக்கேற, மைமூன் கத்தினாள். மெஹர் உம்மாவைப் பார்த்து சிரித்தாள். ஒரு திட்டுக்கே பயப்படுபவளுக்கு என்னாகிவிட்டது…! மைமூன் குழம்பினாள். மெஹர்னீஷா உம்மாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்க, மைமூனுக்கு ஒண்ணும் புரியவில்லை. கிட்டத்தில் வந்து, மகளைப் பிடித்து உலுக்கினாள். திடுமென முகம் கோணினாள் மெஹர். பிறகு எங்கேயோ பார்த்துக் கொண்டு பயந்தாள், மைமூன் எதுவும் புரியாமல் குலை நடுங்கினாள். 

இரவு கணவனிடம் விவரம் சொல்லி சங்கடப்பட்டாள் மைமூன். “எதையாச்சும் கண்டு பயந்திருப்பா…  அதுக்கேன் நீ டென்ஷன் ஆவுற…” என்றார் ஹைதுருஸ். அதன் பிறகு மைமூன் மகளை கண்காணிக்க ஆரம்பித்தாள். திடீரென ஒரு நாள் மோந்தி நேரம் மெஹர் எங்கேயோ பார்த்துக்கொண்டு பயந்தவாறு வீரிட்டுக் கத்தி நடுங்க, என்னமோ விபரீதம் என உணர்ந்த மைமூன் பதட்டமடைந்தாள். நல்ல இருந்த பொண்ணுக்கு என்னாச்சு, ஏன் இப்படியாச்சு அவர்களுக்கு காரணம் பிடிபடவில்லை. காத்துக் கறுப்பு ஏதும் அண்டியிருக்குமோ என்கிற பயம்தான் முதலில் மைமூனை பீதி கொள்ள வைத்தது. வெளியே எங்கும் போகாத பொண்ணுக்கு எப்பிடி காத்துக் கருப்பு அண்டும்..? வேறு எதுவும் பிரச்சனை இரிக்குமோ…? அவளுக்குள் கேள்விகள் குடைந்தது. உறவினர்கள் யாருக்கும் தெரிந்து விடுவதற்குள் இதை குணப்படுத்தணும் என்கிற பதட்டம்தான் இப்போது அதிகமானது. பக்கத்தில் உள்ள மொல்லாக்காவிடம் கூட்டிச் சென்று காட்டி மந்திரித்து வந்தார்கள். இரண்டு நாட்கள் படுத்தே கிடந்தாள் மெஹர். சரியாகிவிடும் என்று நம்பிக் கொண்டிருக்க முன்னை விட அதிகமாக பயம் அவளை ஆட்கொண்டது. 

“யாரோ என்னப் புடிச்சி  நெருக்குறாங்கும்மா…” என்று வீரிட்டுக் கத்த, பெற்றோர்கள் பதறிப் போனார்கள். மெஹரை விட அவர்களுக்கு பயம் அதிகமானது. காரணம் புரிபடாமல் தவிப்பு கூடியது. போன வாரம் மௌத்தான கடைசி வீட்டு ஜொகரமாவோட ரூகாணியாயிரிக்குமோ..! வயசான ஜொகரமா எதுக்கு எம்பொண்ணு மேல  சேரணும் ? இன்னும் பயம் கூடியது. ‘மோந்தி நேரம் வாசல்ல வந்து நிக்கண்டம்னா கேட்டத்தானே… இப்பப் பாரு..! யாரு கெடந்து அவதிப்படுறது..?’ பொலம்பிக் கொண்டே இருந்தாள் மைமூன். இரண்டு நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் சமாதானத்துக்கு வந்திருந்தாள் மெஹர். நிலமை கொஞ்சம் சரியானதால் மகளிடம், கவலை ததும்ப மெல்லக் கேட்டாள் கேட்டாள் மைமூன்,   “என்னளா  ஆச்சு ஒனக்கு..?” “தெரிலமா..” என்று மெஹர் ஆழ ஆரம்பித்தாள்.  “எதையாச்சும் கண்டு பயந்தியாக்கும்..?” மெஹர் யோசிப்பது போல பாவனை காட்டிவிட்டு, “தெரியலமா..” என்றாள் அழுதவாறே. செல்ல மகளைக் கட்டிக்கொண்டு மைமூன்பீபியும் அழுதாள். தம்பி ஜாகீரும், தங்கை ரஹமத்தும் அக்காவுக்கு என்ன ஆச்சு என்று எதுவும் புரியாமல் மலங்க மலங்க பார்த்தபடி நின்றிருந்தனர். அதன் பிறகு அக்காவிடம் பேசுவதற்குப் பயப்பட்டார்கள். 

மறுபடியும் மொல்லாக்கவிடம் சென்றார்கள். “அப்பிடியா… அப்ப இது வேற சங்கதியாக்குமே.. ஊட்டுக்குள்ள ஒரு நடமாட்டம் இருக்கு அதான் இப்பிடி வாட்டுதுகிட்டியா…” என்று பீதியைக் கிளப்பிவிட்டு அவருடைய வைத்திய முறையைக் காட்டினார். தாயத்து மந்திரிச்சுக் கொடுத்து இடுப்பில் கட்டச்சொன்னார். குர்ஆன் ஆயத்து எழுதிய செப்புத் தகடு அடைத்த நான்கு சிறிய குப்பிகளைக் கொடுத்து வீட்டின் முன் புறமும், பின் புறமும் நான்கு மூலைகளிலும் சாம்பிராணிப் புகை காட்டி கட்டச்சொன்னார்.  

வீட்டுக்குள் ரூஹாணீ அலைவதாக மொல்லாக்கா சொன்னபிறகு இரவுகளில் ஒரு பீதி ஏற்பட்டு மைமூன் மிகுந்த அச்சத்தின் பிடியில் சிக்கி மெஹரை பக்கத்திலேயே படுக்க வைத்துக்கொண்டாள். சிறிய சத்தத்துக்கும் மெஹர் பயந்து அலறினாள். பகலில் எப்படியோ சமாளித்துக் கொண்டார்கள். இரவுகளில்தான் அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘’பயமா இருக்குமா.. பயமா இருக்குமா” என்று புலம்பி அரட்டிக்கொண்டே இருந்தாள். குடும்பத்தில் நிம்மதியில்லாமல் போனது. டாக்டரிடம் அழைத்துச் செல்லலாம் என்று ஹைதுருஸ் சொன்னபோது, மைமூன் ஒத்துக்கொள்ளவில்லை. “இதுக்கெல்லாமா டாக்டருகிட்டப் போவாங்க… இதையெல்லாம் மருந்து குடுத்து செரியாக்க முடியுமாக்கும்..?  நா ஒரே பேஜராயிக் கெடக்கேன். நல்ல மொல்லாக்கா கிட்டக்கட்டாணும்..” என்று கணவனை அதட்டினாள்.   

குஞ்சாலிக்குட்டி தங்ஙள் கிட்டக் காட்டலாம் என்றிருந்த நிலையில்தான், அடுத்த லைனில் குடியிருந்த சேப்பத்தி விஷயம் கேள்விப்பட்டு வந்து “கஞ்சிக்கோட்டுல ஒரு பூசாரி உண்டு. நல்ல சுகம் கிட்டும். நமக்கு அங்கு புகா…” என்றாள். மைமூன் பீவிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மகளின் கோப்புராட்டியைப் பார்க்கும் போது நெஞ்சுக்குள் பீதி கிடந்து பிராண்டியது. குஞ்சாலிக்குட்டி தங்ஙள் கிட்ட கூட்டிப்போனால் விஷயம் எப்படியும் மொஹல்லா முழுக்கவும் தெரிஞ்ச்சிரும். எப்படியாவது பொண்ணுக்கு சரியாகணும்… மறு பேச்சில்லாமல் உடனே சரியென்று தலையாட்டினாள். “அப்ப வைநேரத்துக்கு போலாம்“ என்றாள் சேப்பத்தி. சாயங்காலமே போகலாம் என்று சேப்பத்தி சொல்லி விட்டதில் உள்ளுக்குள் திடும் என ஒரு கலக்கம் ஏற்பட்டது. நாளைக்குப் போலாம்  அல்லது ரெண்டு நாள் கழிச்சுப் போலாம் என்றோ சேப்பத்தி சொல்லுவாள் என்று பார்த்தால் உடனே இன்னிக்கு  சாயங்காலமே போலாம் என்கிறாளே… கணவனிடம் எப்படிச் சொல்லி அனுமதி வாங்குவது…? பூசாரியிடம் செல்ல அவர் ஒத்துக் கொள்வாரா…? ‘நீயென்ன காபிரா…’ என்று ஏதும்  திட்டிவிடுவாரோ கொஞ்சம் பயமாக உணர்ந்தாள் மைமூன்பிவி. 

எப்படியாவது பொண்ணு குணமாகணும். வயசுப் பொண்ணு வேற. இதச் சாக்க வச்சே மாப்பிளை வருவது தட்டிப் போகும். வெளிய விஷயம் தெரியரதுக்குள்ள பொண்ண குணப்படுத்தணும். ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லுறதுக்கு பொறாமை புடிச்ச குடும்பது ஆளுங்களே போதும். இப்படியாக மைமூனுக்குள் எண்ணங்கள் ஓட, கணவனிடம் அனுமதி வாங்க தைரியம் வந்தது. மதியம் சாப்பிட வந்த ஹைதுரூஸிடம் மெல்ல விஷயம் சொன்னாள் மைமூன். அவர் எதுவும் சொல்லவில்லை. கணவன் முகத்தில் ஒரு வித அச்சம் ஓடுவதை கவனித்தாள். “யாருக்கும் தெரியாண்டாம் என்ன… சேப்பத்தி கிட்டயும் சொல்லி வச்சிரு…” என்றார் ஹைதுருஸ். கணவர் முகத்தில் நிலவிய குழப்பத்தைப் பார்த்துக்  கொண்டு  தலையாட்டிய மைமூன்,  “நீங்களும் கூட வாங்க… தனியாப் போவ பயமாயிருக்கு” என்றாள். கொஞ்சம் யோசித்துவிட்டு தலையாட்டியபடி “சரி..” என்றார் ஹைதுருஸ். 

சாயங்காலம் நாலு மணிக்கு அவர்கள் கிளம்பினார்கள். பாலக்காட்டுக்கு முன்னாடி நிறுத்தம் கஞ்சிக்கோடு. அங்கே இறங்கி, இடது புறம் செல்லும் தார் சாலையில் கொஞ்ச தூரம் நடை. வெளிச்சம் குறைந்து மோந்திநேரம் சூழ ஆரம்பித்திருந்தது. கூடு திரும்பும் பறவைகளின் ஒலி அந்த இடத்தை வேறு ஒரு சூழலை உருவாக்கிக்கொண்டிருந்தது.  இரு மருங்கிலும் வரிசையாக வீடுகளும், கடைகளும் இருந்தன. எல்லாம் தாண்டி தனியாக ஒரு  குடியிருப்பு பகுதியில் இருந்த ஒரு சிறிய வீட்டின் முன் சேப்பத்தி  அவர்களை நிறுத்தி,  ”இதானு..” என்றாள். சினிமாக்களில் பேயோட்டும் இடங்களைப் வேறு மாதிரியாகப் பார்த்துப் பழகியிருந்தபடி பயத்தையும், பீதியையும் தரும்படியான ஒரு அமானுஷ்யமான இடத்தை நினைத்துக் கொண்டு வந்த மைமூனுக்கு இந்த சிறிய வீட்டைப் பார்த்ததும் சப்பென்றிருந்தது!  பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டை சந்தேகமாகப் பார்த்தபடியே சேப்பத்தியைப் பார்த்தாள் மைமூன். அவளின் பார்வையின் சந்தேகத்தைப் புரிந்து கொண்ட சேப்பத்தி,  “வீடு பக்கந்தன்னே… ஆளு இப்ப வரும்…” என்றாள். மைமூன் கவலையுடன் மகளையே பார்த்துக் கொண்டிருக்க, மெஹர்னீஷா சுற்றியிருந்த மரம், செடி கொடிகளை வேடிக்கை பார்த்தபடி மிக இயல்பாக இருந்தாள். இதைக் கண்ட சேப்பத்தி, மைமூனிடம் ‘இங்கு வந்ததும் எப்படி சாந்தமாகி விட்டாள் மெஹர்…’ என்பதாக ஜாடை காட்டினாள். புரிந்து கொண்டவளாக மகளைப் பார்த்து கொஞ்சம் ஆசுவாசம் அடைந்து கொண்டு, கணவனைப் பார்த்து அதே போல ஜாடை செய்தாள் மைமூன் பீபி. அரை மணி நேர காத்திருப்புக்குப் பின்,  வேட்டி, சட்டை அணிந்த இளம் வயதான ஒருவர் வந்து சேர்ந்தார்.. அவரைக் கண்டதும் வேகமாக எழுந்து கொண்ட சேப்பத்தி தலை குனிந்து அவரை வணங்கினாள்.  

அந்த  இளம் வயதுக்காரர்தான்  பூசாரி என்பதை நம்பாமல் அவரயே பார்த்தபடிக்கு பூசாரிக்கு உதவும் சிஷ்யராக இருப்பராயிருக்கும் என்று எண்ணிக் கொண்டாள் மைமூன் பீபி. அவர் கதவைத் திறந்து வீட்டினுள் சென்றதும்,  “பூசாரியானு “என்றாள்  சேப்பத்தி. மாமூனின் நம்பிக்கை கொஞ்சம் தளர்ந்ததை அவளின் முகக்குறிப்பு உணர்த்தியதைக் கண்ட சேப்பத்தி, மைமூனின் முகத்தருகே குனிந்து மெல்லிய குரலில், “ஆளு செறுப்பக்கார்னு சம்ஸியம் கொள்ளண்டாம் வல்லிய ஆளானு.! சீக்கிரம் குணம் செய்யும்” என்றாள். பூசாரி வீட்டினுள் சென்றதும், வீடு கொஞ்சமாக வெளிச்சம் பெற்றது. முன் புறம் தொங்கிக் கொண்டிருந்த குண்டு பல்பும் எரிய ஆரம்பித்தது. உள்ளுக்குள் அவர் சாமி படங்களுக்கு ஊது பத்தி கொளுத்தியதை வெளிப்பட்ட வாசனை உணர்த்தியது. கொஞ்ச நேர காத்திருப்புக்குப் பின் சேப்பத்தி வீட்டினுள் சென்றாள். சிறிது நேரத்தில்  கையில் ஒரு துண்டுப் பேப்பருடன் வெளியே வந்து, மைமூனிடம்  நீட்டியபடி, ”இ பொருளக்க வேணும்… அக்கடையில கிட்டும்…” என்று கொஞ்சம் தள்ளியிருந்த பெட்டிக் கடையைக் காட்டினாள்.  பூஜை சாமான்கள் எழுதப்பட்ட அந்த துண்டுச் சீட்டை கணவரிடம் கொடுத்தாள் மைமூன். அதை வாங்கிக் கொண்ட ஹைதுருஸ் எரிச்சலுடன் அதைப் பார்த்தார். மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. சேப்பத்தி முன்னால் எதுவும் பேச முடியவில்லை.  ‘என்ன ஏதுணு ஒண்ணும் விசாரிக்காம அதுக்குள்ள பூஜைப் பொருட்களை வாங்கிட்டு வரச்சொல்றாரே…’ என்கிற எரிச்சலுடன் கடையை நோக்கிச் சென்றார். 

தேங்காய், பழம், ஊதுபத்தி, கற்பூரம், விபூதி, எலுமிச்சை என ஒரு பாலிதீன் பை நிறைய பூஜைப் பொருட்களுடன் வந்ததும், சேப்பத்தி அவர்களையும்  வரச் சொல்லி வீட்டினுள் நுழைய, மூவரும் அவள் பின்னாடியே அந்த சிறிய வீட்டினுள் நுழைந்தார்கள். மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் பத்துக்கு பத்து அளவில் இருந்த அந்த சிறிய அறை ஒரு கோயிலின் தோற்றம் போலிருந்தது. கிழக்குப் பக்கத்தில் சுவர் முழுக்க பல வித சாமி படங்கள் மாட்டப்பட்டிருந்தது. என்னன்னவோ பூஜை பொருட்களுடன் சாமி படங்களுக்கு முன்னால் திரி விளக்கு எரிந்து கொண்டிருக்க, ஊதுபத்தி, கற்பூரம், எண்ணை கலந்த அந்த தெய்வீக நெடி அவர்களை பரவசம் கொள்ளச் செய்வதற்கு பதிலாக  கொஞ்சம் பீதியைக் ஏற்படுத்தியது! சேப்பத்தி மட்டும் கண்களை மூடியபடி குனிந்து வணங்கி விட்டு  கன்னத்தில் போட்டுக் கொண்டாள். சாமி படங்களுக்கு முன்னால் வெற்றுடம்புடன் அமர்ந்திருந்த பூசாரி, அவர்களை அமரும்படி சைகை செய்தார். சேப்பத்தி அவர்களை கொஞ்சம் தள்ளி தரையில் அமர வைத்தாள். 

மைமூனுக்கு அந்த சூழ்நிலையே  பிடிக்கவில்லை வேண்டா வெறுப்பாக உட்கார்ந்தாள். ஹைதுருஸ் சங்கடமாக உணர்ந்தார். மகளுக்காக இங்கெல்லாம் வர வேண்டியிருக்கே என்று கவலைப்பட்டு தயங்கியபடியே நின்று கொண்டிருக்க, அவரையும் உட்காரும்படி  கை காட்டினார் பூசாரி. இன்னும் கொஞ்சம் தள்ளி சுவற்றோரம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார் ஹைதுருஸ். பூசாரி ஏதோ சைகை காட்ட, மெஹர்நீஷாவை பூசாரியின் அருகே இன்னும் நகர்ந்து உட்காரும்படி சொன்னாள் சேப்பத்தி. எதுவும் புரியாமல் குழம்பியவளாக பூசாரியையும், அங்கு நிலவிய ஒரு வித அமானுஷ்ய சூழலையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மெஹர், பூசாரியின் அருகில் நகர்ந்து உட்கார்ந்தாள்.

மந்திரத்தை முணு முணுத்தவாறு பூசாரி ஏதோ சடங்குகள் செய்ய ஆரம்பிக்க, அவளுக்குள் மெல்ல ஒரு பீதி உருவானது! ஹைதுருஸ்க்கு இதுவெல்லாம் மகா தப்பு… எவ்வளவு பெரிய ஷிர்க் இது… என்று உள்ளுக்குள் உறுத்த ஆரம்பித்தது! ‘யா அல்லாஹ்! தெரியாமல் செய்யும் எங்களின் இந்த தவறை மன்னிப்பாயாக…’ என்று மனதினுள் வேண்டிக் கொண்டார்.  கொஞ்ச நேரத்தில் அறை முழுக்க புகை மண்டலமாகியது. பூசாரி மலையாளத்தில் மந்திர உற்சாடனத்தை சத்தமாக சொல்ல ஆரம்பித்தார். பயம் அப்பிய வெளிறிய முகத்துடன் மெஹர் உம்மாவைப் பார்க்க மைமூன் பீவி பீதிக்குள்ளானாள். தள்ளி உட்கார்ந்திருந்த சேப்பத்தி கண்களை மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாள். ஹைதுருஸ்க்கு  எழுந்து வெளியே போனால் தேவலை என்று பட்டது. எப்படியோ பொண்ணுக்கு குணமானால் சரி என்றும் நினைத்துக் கொண்டார். கொஞ்சம் விபூதியை அள்ளி மெஹரின் நெற்றியில் பூசிய பூசாரி, அப்படியே அவளின் தலையில் கையை வைத்து உள்ளங்கையால் அழுத்திப் பிடித்தபடி மந்திரத்தைத் தொடர்ந்தார். விட்டால் எழுந்து ஓடிப்போய் விடும் அழுத்தத்தில் பல்லைக் கடித்தவாறு  ஒருவித அவஸ்த்தையுடன் திமிறிக்கொண்டு எழுந்து ஓடும் மன நிலையில் உட்கார்ந்திருந்தாள். பூசாரியின் கரம் உடம்பில் எங்கோ அலைவதை அவள் உணர்ந்து திமிற முயற்சிக்க, பூசாரியின் இன்னொரு கரம் திமிற முடியாமல் அழுத்திப் பிடித்தது.  

தன் மகள் மெஹருக்குள் குடிகொண்டிருக்கும் பேயோ, ஆவியோ என்ன கருமமோ ஓங்காரக் குரலில் பீரிட்டுக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து வெளியேறி அப்படியே தன் மகளை விட்டு ஓடிப்போகும் என மிக எதிர்பார்ப்புடன் மெஹரையே பயந்தவாறு பார்த்துக் கொண்டிருந்த மைமூன் ஏமாற்றமடைந்தாள்! இப்படித்தான் தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பாகும் பேய் படங்களிலும், சீரியல்களிலும் பார்த்திருக்கிறாள். ஆனால் இப்போது அப்படி எதுவும் நடக்காமல், மெஹர் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்க கொஞ்சம் எரிச்சலாவும் இருந்தது. மூலை  முடுக்கில் எங்காவது பேய் ஒளிந்திருக்கிறதோ என்று சுற்றிலும்  பார்வை மெல்ல சுழலவிட்டாள் பீதி குறையாமல். அப்படியே பின் புறம் திரும்பிப் பார்க்க குழப்பத்துடன் ஹைதுருஸ் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தாள். அறைக்குள் நிலவிய அமனுஷ்யம் குறைந்து இப்போது புகை நெடியால் மூச்சுத் திணறல் ஏற்படுவதை உணர்ந்தாள். 

அரை மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து நான்கு துண்டுகளாக்கி, மந்திரம் சொல்லி நான்கு பக்கமும் வீசிவிட்டு “ஒண்ணும் பேடிக்கண்டாம்… எல்லாம் ஸரியாயி.”  என்றார் பூசாரி. மெஹர்னீஷா அப்படியே  குனிந்தவாறு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாள். பிறகு மெல்லத் திரும்பி உம்மாவைப் பார்க்க, அவளின் வலது கையைப் பற்றிக் கொண்டு ஆறுதல் படுத்திய  மைமூன் மகளின் முகத்தை உற்றுப் பார்த்தாள். மெஹரின் முகத்தில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருந்தது போலப்பட்டது. சேப்பத்தி எழுந்து அவர்களை வெளியே  அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டு மறுபடியும் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வந்து, மைமூனிடம்  ”ரெண்டாயிரம் ரூபா தரீ..” என்றாள். ‘இதுக்கு ரெண்டாயிரமா…’ என்ற அதிர்ச்சியும் எரிச்சலுமாக பணத்தை எண்ணிக்கொடுத்தார் ஹைதுருஸ். 

வீடு வரும்போது மணி இரவு பத்தைத் தாண்டிவிட்டது. வீடு வந்தவுடன் மனைவியிடம் ஒருபாட்டம் புலம்பித் தீர்த்தார் ஹைதுருஸ். மைமூன் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் கழித்து  கணவனை ஏறிட்டபடி “இப்பிடியே பொண்ண வச்சிருக்கச் சொல்றீங்களாக்கும்…..?” கவலை ததும்பக் கேட்டாள் மைமூன். “எனக்கொன்னும் இது சரியாப் படல.. அதுக்குத்தான் நா அப்பவே டாக்டரிடம் கூட்டிட்டுப் போலாமுன்னு சொன்னேன். நா சொல்றத எங்க கேக்குற நீ!” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தார் ஹைதுருஸ்.    

இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த மெஹர் மூன்றாவது நாள் முகத்தைக் கோணலாக்கிக் கொண்டு உம்மாவைப் பார்த்து ரொம்ப நேரம் முறைத்துக் கொண்டே இருக்க, மைமூன்பீபி பயந்து போனாள். ஒருவாறு சமாளித்து மெல்ல மகளிடம் நெருங்கி தொளைத் தொட்டு உலுக்கி, ”ளா… மெகரு..! இங்க பாரு… என்னளா ஆச்சு ஒனக்கு..?” என்றாள் கண்களில் கண்ணீருடன். மெஹர் இப்போது வேறு எங்கோ பார்த்துக் கொண்டு சிரித்தாள். கஞ்சிக்கோடு பூசாரிகிட்ட கூட்டிக்கிட்டுப் போய் செலவு செஞ்சதெல்லாம் வீணாப்போச்சே என்கிற கவலையும் சேர்ந்து கொள்ள மைமூன்பீபி மகளைக் கட்டிக் கொண்டு உடைந்து அழுதாள். இரவு கணவனிடம் நிலைமையை எடுத்துச் சொன்னாள் அழுதபடியே. “அந்த தங்ஙள்ட்ட ஒருக்கா காட்டிப் பாக்கலாங்க. எனக்கென்னமோ அங்க போனா சரியாயிரும்னு தோணுது..”  “இதுக்குனு மன நல டாக்டர்ங்க இருக்காங்க அங்க கூட்டிட்டுப் போலாம் மைமூன்..நா சொல்றதக் கேளு ” ஹைதுருஸ் தீர்மானமாகச் சொன்னார். “நம்ம பொண்ணுக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு..?” ஆவேசமாகக் கேட்டாள் மைமூன். ஹைதுருஸ் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மைமூன் கேட்கவில்லை. அப்போதுதான் இனி வேறு வழி இல்லை சரி குஞ்சாலிக்குட்டி தங்ஙளிடமே போகலாம் என்று வேண்டா வெறுப்பாக தலையாட்டினார் ஹைதுருஸ். செலவு  எக்கச்சக்கமாகும். குஞ்சாலிக்குட்டி தங்ஙளிடமே போனால் எப்படியும் குணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை மக்களிடமிருந்தது. சரி இதையும்தான் பார்த்துவிடுவோமே. என்று கொஞ்சம் திருப்தியும் பட்டுக்கொண்டார்.  

உள்ளூரில் இப்படியான விஷயங்களுக்கு வைத்தியம் பார்த்தால் மொஹல்லா முழுக்க தகவல் பரவி கண்டபடி புரளி பேசித் திரிவார்கள். இதற்கு பயந்து உள்ளூர்வாசிகள் தங்ஙளிடம் போக கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள். அப்படியே போயாக வேண்டும் என்கிற பட்சத்தில் ஆளில்லாத இரவு நேரத்தை தேர்ந்தெடுப்பார்கள். பகலில் வெளியூர் ஆட்கள்தான் நிறைய வருவார்கள். எப்போதும் முன் வராண்டாவில் உட்கார இடமில்லாமல் கூட்டம் அப்பிக் கிடக்கும். தங்ஙளைப் பார்ப்பதே அரிதாக இருக்கும். 

மொஹல்லாவுக்கு வெளியே கடைசிப் பகுதியில் இருந்த தோப்பையொட்டி குஞ்சாலிக்குட்டி தங்ஙகளின் அந்த பங்களா அமைப்பிலான வீட்டின் முன் புற வராண்டாவை ஒட்டியிருக்கும் சந்து வழியாக சென்றால் சுவர்களில் கரியால் குர்ஆன் ஆயத்துகள் எழுதப்பட்ட  பெரிய விஸ்தாரமான அறை ஒன்று வரும். இந்த அறையைத்தான் ஓதி பார்க்கவும், மந்திரிக்கவும் தங்ஙள் பயன் படுத்தி வருகிறார்.  முன்னோர்கள் என்ன தொழில் செய்தார்கள் என்று இங்கு யாருக்கும் தெரியாது. 

ஆனால் அவருடைய வாப்பா மூஸா முசலியார் இந்த மாதிரியான மாந்திரீக  வேலைகளில் மிக கை தேர்ந்தவராக இதே கோட்டைமேட்டில்தான் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தார். ‘முசாலியார் மந்திரிக்க கிந்திரிக்க ஒண்ணும் செய்யண்டாம்… இவருக்க உருவத்தைக் கண்டே ரூகாணிகளெல்லாம் வெகுண்டு ஓடுமாக்கும்…’ என்பார்கள் பண்டு. அப்படியொரு ஆஜானுபாகு என்று சொல்லத்தக்க உருவ அமைப்பு கொண்டவராகவும், தோளில் பச்சைத் தூண்டும் தலைப்பா கட்டுமாக ஒளி  பொருந்திய கண்களுமாய் இருந்தார் முசாலியார். ஒருவரைக் கூர்ந்து பார்த்தரென்றால் அந்த மனிதன் ஆணியடித்தைப் போல அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உறைந்து நின்று விடுவான். முசாலியாரைப் பற்றிச் சொல்ல இன்னும் இப்படியாக நிறைய கதைகள் உண்டு மொஹல்லாவில். இப்போது அவரின் மூத்த மகன் குஞ்சாலிக்குட்டி தங்ஙள் வாப்பாவின் தொழிலுக்கு வாரிசாகியிருக்கிறார். இவருக்கு மூன்று ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் மக்களும் உண்டு. பெண் குழந்தைகள் தவிர மற்ற மூவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்ஙள் தனக்கு உதவியாக இரண்டு பசங்களை வைத்திருக்கிறார். ஜிப்பா அணிந்து, தலைப்பாகை கட்டிக் கொண்டு  இளம் வயது ஆலிம்ஷாக்களைப் போல அந்த இருவரும் காட்சியளிப்பார்கள். இருந்தாலும் எட்டாவது படிக்கும் கடைசி மகன் அபூபக்கர் அவ்வப் போது வாப்பாவுக்கு உதவியாக கூடமாட நின்று உதவிக் கொண்டிருப்பான்.    

இரவுப் பூச்சிகளின் ரீங்காரம் அமைதியைக் கிழித்தபடியிருந்தது. தோட்டத்திற்குள்ளிருந்து சிரியதும்,பெரியதுமாக என்னவோ சத்தங்கள். ஜின்களும், ரூகாணிகளும் எங்கும் அலைந்து கொண்டிருக்குமோ.. இவுங்க எப்படித்தான் இங்கு பயமில்லாம குடியிருக்காங்களோனு… ஒரு நினைப்பு மைமூன்பிபிக்குள் ஓடியது. பின் புற சந்திலிருந்து இரண்டு பெண்களும்,ஒரு ஆணும் வெளியே வந்தார்கள். இரண்டு பெண்களில் இளையவளானவள் அரண்டு போயிருந்தாள். ஹைதுருஸ் அவர்களை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். மொஹல்லாவாசிகளா வெளியாட்களா என்று தெரியவில்லை. பூசாரிக்கிட்டப் போன விவரம், இங்க வந்த விவரமெல்லாம் ரகமத்துல்லாவுக்கு தெரிஞ்சாப் போச்சு. மொஹல்லா முழுக்க நாறடிச்சுருவான். பெரிய தவ்ஹீத் ஆளு அவன். அடுத்து இவர்கள் முறை. சிறிது நேரத்தில் உள்ளே அழைக்கப்பட, மெஹரை பொத்தியபடியே மைமூன்பிபி உள்ளே சென்றாள். ஹைதுருஸும் பின் தொடர்ந்தார். முன் அறையில் வைத்துதான் என்ன ஏது என்ற முதல் விசாரணைகள் தொடங்கும். 

அது பத்துக்குப் பத்து அளவிலான சின்ன அறை. குஷன் செரில் அமர்ந்திருந்தார் தங்ஙள்.அவர் முன் இருந்த மேசை மீது சில குர்ஆன்கள், சிறிய அளவிலான யாசின்கள், தஸ்பீக்குகள், நோட்டு புத்தகங்கள், எழுதும் தாள்கள், பேப்பர்கள், பேனா, பென்சில் என்று ஒரு எழுத்தாளரின் மேசை போல இருந்தது. இங்கும் லேசாகத்தான் விளக்கு வெளிச்சம் இருந்தது. ஏன் இது போன்ற இடங்களில் குறைவான வெளிச்சம் இருக்கிறது என யோசித்தார் ஹைதுருஸ்! எதிரில் இருந்த மர பெஞ்சில் அமரும்படி கை காட்டினார் தங்ஙள். பரவசம் பொங்கும் முகமும், வாப்பா மூஸா முஸலியாரின் அதே ஒளி வீசும் கண்களுமாய் சிறு பிராயத்து முஸலியார் போல ஒரு இமாமின் தோற்றத்தில் இருந்தார் குஞ்ஞாலிக்குட்டி தங்ஙள். மெஹர்னீஷாவை கொஞ்ச நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் தங்ஙள். அந்த கண்களின் ஒளி அவள் கண்களை தாக்க நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தலை குனிந்து கொண்டாள் மெஹர். அவள் முகம் மெல்ல மாறிக்கொண்டிருந்ததை மைமூன்பீபி  உணர்ந்தாள். குழப்பமும் பயமுமாக மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் மைமூன்பிபீ. உள்ளுக்குள்  ‘நல்லபடியாக குணம் கிட்டணுமே..’ என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தவளாக. தங்ஙள் என்ன சொல்லுவரோ என்ற எதிர்பார்ப்பில் மெல்ல தங்ஙளை ஏறெடுத்துப்பார்க்க, அவர் “ஏழாயிரம் ருப்பி ஆகும்..” என்று அவர் கட்டணத்தைச் சொல்ல, திடுக்கிட்டவளாக திரும்பி கணவனை நோக்கினாள் மைமூன்.   

தங்ஙள் எவ்வளவு பணம் கேட்பரோ என்ற தவிப்பில் இருந்த ஹைதுருஸ், தங்ஙள் சொன்ன தொகையைக் கேட்டதும், ‘இதுக்கு இவ்வளவு பணமா..’ என்று  அதிர்ச்சி அடைந்தவராக, உடனடியாக இவ்வளவு பணத்திற்கு எங்கே போவது… சரி அப்படியே கொடுத்தாலும் குணமாகுமா… இப்போது என்ன பதில் சொல்வது..என்றெல்லாம் புதுக் குழப்பமும், தவிப்பும் சேர்ந்து கொள்ள மனைவியின் முகத்தைப் பார்த்து, ’டாக்டர் கிட்டப் போலாம்னு நா திரும்பத் திரும்பச் சொன்னேன்… ஏழாயிரம் ரூபா கேக்குறாரு! இப்ப என்ன பண்ணுறது..?’ என்பதை பார்வையால் உணர்த்த முயற்சிக்க, “மூணு ஆயிற்சிக்கி வரணும் கிட்டியா..” என்றார் தங்ஙள். 

தங்ஙளுக்கு என்ன பதில் சொல்வது என்று கலந்தாலோசிக்க இருவரும் எழுந்து வெளியில் வந்தார்கள். திறந்திருந்த தங்ஙள் வீட்டு ஜன்னல் வழியாக தோப்பில் உலாவிக்கொண்டிருக்கும் ரூஹாணிகளின் கெக்கொலி மெஹர்னீஷாவை மிரள செய்த அதே நேரம், அவளைப் பற்றிப் பிடிக்க ஒரு பெரிய கரிய உருவத்தின் நீண்ட கையொன்று அலைந்து வருவதைப் பார்த்தாள். அது தங்ஙளின் கை போலவே தோன்றியது அவளுக்கு! கத்தக் கூட முடியாமல் உறைந்து போன நிலையில் அவள் நடுங்கிக் கொண்டிருக்க, வெளியே உம்மாவும், வாப்பாவும் பணம் தொடர்பாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள்.

******

ஜூலை 2016 – உயிர்மை மாத இதழில் வந்த சிறுகதை.
ஆசிரியரின் உரிய அனுமதியோடு இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

*******

firthouserajakumaaren@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button