![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/01/Picsart_24-01-05_19-49-23-341-780x470.jpg)
கை நழுவிய கவிதை
எதைவிடவும் எது முக்கியம்
முற்றுப் பெறாத
கவிதை ஒன்றினை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
எரியும் மிச்சத்தை
அணைக்கும் சொற்களால்
உள்வாங்கினேன்
அது குறைபாடுள்ள அழகியல்
என்பதை ஒப்புக்கொள்கிறேன்
ஆயினும்
நிறைந்த தானியங்களுடன்
எழுந்து செல்கிறேன்
புறாக்கள்
வந்து இறங்கிவிட்டன.
****
பாதுகாக்கப்பட்ட இதயம்
இருமுனை கூர் கொண்ட
கத்தியால் மீண்டும் மீண்டும்
கீறிக் காயம்பட்ட
ஒரு இதயத்தை
சிறு கண்ணாடிக் குடுவைக்குள்
வைத்துப் பாதுகாக்கிறேன்
நீயும் வேறு உடைக்காதே!
****
கடைசி தேநீர்
எதிர் எதிரே
அமர்ந்து
விழிகளை
உற்றுநோக்கியபடி
இனி ஒருபோதும்
சந்திக்கவே இயலாத
துயரத்தை மென்று
விழுங்கியபடி
அந்தக் கடைசி
தேநீரைப் பருகி முடித்தோம்!
மிச்சம் வைத்த
ஒரு துளி நேசம்
நம்மைப் பார்த்து
புன்னகைக்கிறது!
****
இறுதிச் சுற்று
உன்னிலிருந்து
காணாமல் போக விழையும்
ஒவ்வொரு முறையும்
திரும்பி வர விரும்பாத தூரம்
என
உன் இதயத்தின்
பரப்பளவிற்குள்தான்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
*******