![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/10/malarvizhi-ilangovan-768x470.jpg)
தவளையை வரைகிறவன்
வீட்டுப்பாடத்திற்குத்
தவளையொன்றை வரைய வேண்டுமென
அம்மாவிடம் சொல்லியபடி
இரு கைகளையும் தரையூன்றித்
தவ்விக் கொண்டிருக்கும்
அச்சிறுவனைப் பிடித்து
இடம் அமர்த்துவதற்குள்
வீட்டை நிறைக்கிறது
அம்மாத்தவளையின் சத்தம்
சிறுவன் சுவற்றில் தேய்த்த சோடா மூடியில்
ஒற்றை வரள் தவளையின் தொண்டை.
பிதுங்கியுருளும் அம்மாவின் பார்வையில்
அதனை அடக்கியவன்
பின்னொரு தனிமைப்பொழுதின் உரையாடலுக்கென
அந்தக் ‘கொர்ர்ரக்’குகளைத்
தன் கால்சட்டைப் பையிலிட்டுப்
பத்திரப்படுத்திக் கொள்கிறான்
விழி பிதுங்கும் அம்மாவின் கோபத்தில்
இரு குண்டுமணிகள் போதுமானதாய் இருந்தது அவனுக்கு
தவளையின் கண்கள் வரைவதற்கு
பின் மழையிரவுச் சத்தமாய்
அவ்விடம் முழுதும் ‘கொர்ர்ரக்… கொர்ர்ரக்’ என நிறைந்திருக்கும் அம்மாவைக் கண்டு
அவனின் சிரிப்பு
ஒரு காதிலிருந்து மற்றொரு காதிற்காய் நீள
அரைக்கோளப் பணப்பையின்
பிளந்த பற்பிணைப்பென
தவளையின் வாயை வரைந்து வைத்தான்
வரைதாளில்
திறந்த வாசல் நுழைந்த காற்று
புரட்டிக் கொண்டோடும் வரைதாளைப் பிடிக்க
அகன்ற கைகளோடு முதுகு கவிழ்ந்து
வெளியே தவ்வியோடும்
அவனை நிழலாய்த் தொடர்கிறது
கருத்த ராட்சதத் தவளையொன்று
சூரிய ஓவியனின் ஒளித்தூரிகையில்
சிறுவனின் கருநிழல் படர்ந்த பெருந்தவளை
தாளில் அமராமல்
தரையெங்கும் தவ்வித் திரிகிறது.
•
பிடி ஆதுரத்தை
அள்ளி இறைக்கிறேன்
ஆற்றில் இறைத்த பொரிகளென
அவை என்னைச் சுற்றிப் படர்கின்றன
சூழ்ந்து கொண்ட மீன்கள் சூழ்ந்து முத்தமிட்டு ருசிக்கின்றன அவற்றை
மென்கடி முத்தமிட்டு
எனைச் சூழ்ந்து கொள்ளும் மீன்கள்
உன் மச்சாவதாரம்