முரண்களின் மோதல்களில் வெடித்துச் சிதறுண்டது இருவருக்குமான மண வாழ்க்கை
அவளை தண்டிக்கும் பொருட்டு
அவள் எப்பொழுதும் விரும்பி உடுத்தும் நீல நிற சரிகையில்
வெண் பூக்கள் பதித்த அழகிய புடவை ஒன்றின்
முந்தானை தலைப்பில் தூக்கிட்டு கொண்டான்
இனி அவள் என்ன செய்வாள்
அதற்கு இணையாக வேறொரு புடவையை வாங்குவதை தவிர
•
எப்பொழுதாவது தான் கேட்பாள் அவனிடம்
ஒரு செல்ஃபி அனுப்புடா என
அவன் அந்த செல்ஃபிக்கு தன்னை ஆயுத்தப்படுத்தும் கணங்கள்
அவள் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும்
ஒரு காட்சி சித்திரமாய்
அவன் விரல்களால் தலைவாருவான்
சட்டை காலரை சரி செய்வான்
தாடியை தடவி ஒதுக்குவான்
அவளுக்கு அனுப்புவதற்கு முன்பு செல்ஃபி கண்ணாடியில் சிரித்து ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்பான்
செல்ஃபி அனுப்ப சொன்னா என்னடா பண்ணீட்டிருக்க என மீண்டும் வினவும் அடுத்த நொடியில்
அவனது அழகு இன்னும் கொஞ்சம் கூடிவிடும்….
•
என் இறந்துவிட்ட பூனை குட்டியின் உடலை வேக வேகமாக
கொத்தி கொண்டிருக்கும்
காக்கை
அப்படியே அதன் நினைவுகளையும்
என் மூளைக்குள்ளிருந்து
கொத்தி தின்று செரித்துவிட்டால்
நான் இந்த துக்கத்தை
இன்னும் எளிதில் கடந்துவிடுவேன்