இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

மெலியார் – சௌம்யா

சிறுகதை | வாசகசாலை

“இன்னும் இந்த ரன்ஷீட்டை நீ முடிக்கலயா? என்னதான் பண்ணுவியோ மசமசன்னு…”

நிரஞ்சனா விழித்தாள். இன்னும் முடிக்கவில்லையா என்று கேட்ட ரன்ஷீட்டுகள் வந்து இன்னும் கால் மணி நேரம் கூட ஆகவில்லை. கேட்ட புனிதா மேமுக்கும் அது தெரியும். டெலிவரி ஸ்டாஃப் ஆறுச்சாமி சற்று முன்தான் விநியோகம் செய்யப்படாத தபால்களுக்கு ரன்ஷீட்டில் காரணங்கள் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார். அவள் எண்ணிக்கை சரி பார்த்து வைத்திருந்தாள்; இனி கணினியில் அத்தகவல்களை உள்ளிட்டு, டெலிவரி ஆகாத‌ தபால்களை ஸ்கேன் செய்ய வேண்டும். எப்படியும் இன்னும் அரை மணி ஆகும்.

“மேம், இப்போதான் ஆறுச்சாமி அண்ணன் வந்தாரு” நிரஞ்சனா தயக்கமான‌ மெல்லிய பூஞ்சைக் குரலில் சொன்னாள். “ஆறுச்சாமி வந்து அரைமணி நேரமாச்சு. இன்னும் நீ முடிக்கல. இப்போதான் வந்தான்னு என் கிட்டயே சொல்றியா? மடமடன்னு வேலைய முடி.” என்றாள் புனிதா. நிரஞ்சனா மௌனமாகி வேலையைத் தொடர்ந்தாள்.

அந்தக் கொரியர் நிறுவனத்தில் நிரஞ்சனா பணிக்குச் சேர்ந்து ஓராண்டாகிறது. புக்கிங் வேலைக்கு அவளை தேர்ந்திருந்தனர். தபால் அனுப்ப வரும் வாடிக்கையாளர்களிடம் அவற்றை எடை பார்த்து எடுத்துக் கொண்டு, அதற்குரிய பணத்தை வாங்கிக் கல்லாவில் போட்டு அவர்களுக்கு ரசீது கொடுத்து அனுப்புவதுதான் அவளுக்கு இடப்பட்ட கடமை.

ரன்ஷீட் தொடர்பான‌ வேலைக‌ள் புனிதாவுடையவை. அந்தப் பிரிவின் பெயர் ஈடிபி. அதாவது எலக்ட்ரானிக் டேட்டா ப்ராசசிங். தபால் விநியோகிக்கச் செல்வோருக்குக் காலையில் ரன்ஷீட்டை – டெலிவரிக்கு கொண்டு செல்லும் தபால்களை ஸ்கேன் செய்த பட்டியல் – ப்ரிண்ட்அவுட் எடுத்துத் தருவதும், மாலை அவர்கள் திரும்பிய‌தும் டெலிவரி ஆகாதவற்றை ஸ்கேன் செய்து அதற்கான காரணங்களை உள்ளீடு செய்து முடிப்பதும் புனிதாவின் வேலை. அதைத்தான் நிரஞ்சனா செய்து சலிப்பும் ஏச்சும் வாங்குகிறாள்.

புனிதா அந்த நிறுவனத்தில் பத்தாண்டுகளாக வேலை செய்கிறாள். அந்தக் கிளையில் இந்த இருவர் மட்டுமே பெண்கள். விநியோகப் பணிக்கான‌ எழுவரும் ஆண்கள். அந்தக் கிளையின் இன்சார்ஜ் சேகரும் விநியோகிக்கச் செல்வார். பெரிய பார்ச‌ல்களை வேனில் கொண்டு போய் டெலிவரி செய்யும் பணி. காலை பதினோரு மணிக்கு டெலிவரி ஊழியர்கள் எல்லாம் கிளம்பிய பின் அலுவலகத்தில் இரு பெண்கள் மட்டுமே இருப்பர்.

ஓரளவு பிரசித்தி பெற்ற நிறுவனம் என்பதால் புக்கிங் செய்ய ஆட்கள் வந்து கொண்டே இருப்பர். நிரஞ்சனாவிற்கு ஓய்வு நேரமே கிட்டாது. மதியம் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருக்கும். மற்றபடி காலை ஒன்பது மணி முதல் மதியம் மூன்று மணி வரை கணிசமான கூட்டம் இருக்கும். பின் ஐந்து மணியிலிருந்து எட்டு மணி வரை ஆட்கள் வந்து கொண்டே இருப்பர். சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறைக‌ளில் கூட்டம் குறைவாக இருக்கும். நிரஞ்சனாவின் மதிய உணவு நேரமே மூன்றரை மணி என்பது வாடிக்கையாகி விட்டது.

புனிதா காலையில் இன்சார்ஜ் இருக்கும் வரை டெலிவரிகாரர்களுக்கு ரன்ஷீட்களை ப்ரிண்ட் எடுத்துக் கொடுத்து விட்டு அவர்கள் கிளம்பிச் சென்ற பின் ஓய்வாகி விடுவாள். பின் அவள் வேலை தபால்கள் குறித்து விசாரித்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு கணினியில் கண்காணித்து பதில் அளிப்பதுதான். மாலை ஐந்து மணிக்கு மேல் தபால் விநியோகம் முடிந்து ஒவ்வொருவராக‌ வருவர். அதன் பின் ரன்ஷீட் வேலை தொடங்கும்.

அலுவலக வேலை நேரம் காலை ஒன்பது முதல் இரவு எட்டு வரை. பத்தாண்டுகளாக இருப்பதாலும், மணமானவள், இரண்டு பிள்ளைகளுக்கு தாய் என்ற சலுகையையும் சேர்த்து மாலை ஆறரை மணிக்கெல்லாம் வீட்டிற்கு கிளம்பும் வழக்கத்தை புனிதா தானாக‌ உண்டாக்கிக் கொண்டாள். அதிக வேலை இருந்தால் ஏழு மணி. அதை மீறி இருந்ததில்லை. அதுவும் நிரஞ்சனா வந்து சேர்ந்த பின்புதான் இது வாடிக்கையாகி விட்டது. புனிதா முன்கூட்டியே கிளம்பி விட்டாலும் அதனால் பணிகள் தடைபடாமல் நிரஞ்சனா செய்து முடித்து விடுவதால் யாரும் அது குறித்துப் புகார் எழுப்பவில்லை.

ஆறரைக்கு கிளம்பும் முன் அதுவரை பணி முடிந்து திரும்பிய‌ டெலிவரி ஊழியர்களின் ரன்ஷீட்களை ஸ்கேன் செய்து பூர்த்தியாக்கும் வேலையை நிரஞ்சனாவைச் செய்ய வைப்பாள். அதன் பின் வருபவர்களது ரன் ஷீட்களையும் நிரஞ்சனாதான் பூர்த்தி செய்ய‌ வேண்டும். ஆரம்பத்தில் கற்றுத் தருவதற்காகத் தன்னை செய்ய வைப்பதாகத்தான் நிரஞ்சனா நம்பிக் கொண்டிருந்தாள். ஆனால், மொத்தமாக அந்த வேலையை அவள் தலையில் கட்டினாள் புனிதா. புக்கிங்கிற்காக வாடிக்கையாளர்கள் காத்திருந்தாலும், “சீக்கரம் கஸ்டமர்ஸ அனுப்பிட்டு இதை க்ளோஸ் பண்ணிரு” என்பாள் புனிதா.

நிரஞ்சனாவுக்கு சில நாட்கள் எரிச்சலாக‌ வரும். “இது உங்க வேலைதானே?” என்று தொண்டை வரை வரும் கேள்வியை மென்று விழுங்கி, “மேம், இங்க நிறைய பேர் வெயிட்டிங். ஆறு மணிக்கு மேல இன்னும் புக்கிங் அதிகமா வரும். இப்போ வந்தது வரைக்கும் மட்டும் க்ளோஸ் பண்ணிடறீங்களா?” என்பாள். புனிதா ஆவேசமாகி, “நான் கிளம்ப வேண்டாமா? உனக்கு வேலை கத்துக் கொடுத்தா நீ எனக்கே வேலை சொல்ற. கஸ்டமர்ஸ்கிட்ட ஏதாச்சும் பேசிட்டு இருந்தா டைம் ஆகத்தான் செய்யும். சுறுசுறுப்பா வேலையப் பார்க்கணும்” என்று கத்திக் கொண்டே ஒரு ஷீட்டை ஆடி அசைந்து அரை மணி நேரம் தடவி விட்டு, “ஆறரையாச்சு நான் கிளம்பனும்” என்று எழுந்து விடுவாள்.

நிரஞ்சனாவுக்கு தடித்த‌ கண்ணாடியைக் கண்ணீர் மறைக்கும். கெச்சலான உடலுடன் பாவமாகப் பார்த்திருப்பாள். இருபது வயதிற்கான எந்தக் கனவும் அவளுக்கு இல்லை. அவளை இதுவரை எந்தப் பையனும் காதலிப்பதாகச் சொன்னதில்லை. சாலைகளில் கூட எந்த விடலையும் திரும்பிப் பார்த்த நினைவில்லை. திருமணம் குறித்த ஆசைகள் கூட மெல்ல அழிந்து விட்டன. தன்னை யாருக்கும் பிடிக்காது என்பதை ஏற்றுக் கொண்டு விட்டாள். த‌ன் தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மை அவளை எல்லா இடங்களிலும் அடங்கிப் போகச் செய்தது. அதிலிருந்து மீள‌ எடுத்த சில முயற்சிகள் இன்னும் மோசமான கேலியைத் தந்ததால் அந்த எண்ணத்தையே கைவிட்டு இயந்திரம் போலாகி விட்டாள்.

அவள் தன் தாழ்வுமனப்பான்மைக்காக வருந்தும் ஒரே விஷயம் தன்னை உருவக் கேலி செய்வார்கள் என்று பயந்தே கல்லூரிக்குச் செல்லாமல் விட்டதற்கு மட்டும்தான். கேலி செய்பவர்கள் கல்லூரிகளில் மட்டுமா இருக்கிறார்கள்! அதைப் பொருட்படுத்தாமல் படித்திருந்தால் மேலான வேலை எதற்காவது போயிருக்கலாம். படிப்புக்காகவோ பணிக்காகவோ தன் சந்தை மதிப்பு அதிகரித்திருக்கும் என அங்கலாய்ப்பு எழும்.

வாடிக்கையாளர்கள் குழுமி இருக்க, புக்கிங்கும் பார்க்க வேண்டும், ரன்ஷீட்களையும் பூர்த்தி செய்து முடிக்க வேண்டும். எட்டு மணிக்கு வீட்டிற்குக் கிளம்ப வேண்டியவள் எழ‌ எட்டரை, ஒன்பதாகி விடும். எல்லாம் முடிந்து கிளம்பும் நேரம் யாராவது ஒருவர், “புக்கிங் பண்ணனும்” என வந்து நிற்பார். “புக்கிங் டைம் முடிஞ்சுதுண்ணா” என்று தயங்கினால், “ரொம்ப அர்ஜெண்ட்டா அனுப்ப வேண்டியது” என்பார். அவளது ஓராண்டு அனுபவத்தில் அவசரமற்ற ஒரு தபால் கூட வந்ததே இல்லை என்பது பெரும் வியப்பாகவே இருக்கும்.

இன்சார்ஜ், “வாங்கி புக் பண்ணிரு. அர்ஜெண்ட்னு சொல்றாங்கல்ல” என்று அதட்டுவார். சில நாள் அவர் சொல்லும் முன்பே இவளே வாங்கி புக் செய்ய ஆரம்பித்தால், “லோடு கிளம்பப் போகுது இந்நேரத்துக்கு புக் பண்ணிட்டு இருந்தா எப்போ லோடு அனுப்பறது? உனக்கு புக்கிங் டைம் எட்டோட முடிஞ்சுதுனு தெரியுமா தெரியாதா?” என்று கத்துவார்.

இரண்டுக்கும் வாயைத் திறந்து பதில் பேச மாட்டாள். ‘நீங்கதானே அன்னிக்கு அப்படிச் சொன்னீங்க என்று கேட்டால் என்ன?’ என்று தன்னைத்தானே திட்டிக் கொள்வதோடு சரி.

எல்லாம் முடிந்து வீடு சென்றதும் அம்மாவிடம் திட்டு விழும். “உன் கூடத்தான் அந்தப் புனிதாவும் வேலை செய்யறா? டாண்ன்னு ஆறு மணிக்குக் கிளம்பறா. உனக்கு மட்டும் வீடு வர ஒம்பது மணியா? வீட்டுக்கு வந்தா நாலு வேலை செய்யணும்னே லேட்டா வருவியா நீ? வயசுப்புள்ளயாச்சே கை வைக்கக் கூடாதேன்னு நானும் பாக்கறேன். ஒரு நாள் இல்ல ஒரு நாள் நாலு இழுப்பு இழுத்து விட்டாத்தான் நீ நேரங்காலமா வீடு வருவ…”

“அம்மா, வேலை அவ்ளோ இருக்கும்மா.”

“உனக்கு மட்டும் அப்படி என்ன‌ வேலை? அவளுக்கு உன்னை விட சம்பளமும் ஜாஸ்தி. நீ வாங்கற பத்தாயிரத்துக்கு இருபத்து நாலு மணி நேரமும் அடிமை வேலை பார்ப்பியா?”

கேள்வியில் உள்ள நியாயம் உணர்ந்து எதிர்த்து பேச முடியாமல் பேச்சை மாற்றுவாள்.

“பசிக்குதும்மா…”

“போ… மாவு இருக்கு, நீயே சுட்டுத் தின்னு…”

யாரையும் எதிர்த்துப் பேசாமல் தன் தரப்பையும் கூடச் சொல்லாமல் ஊமையாகவே இருந்து பழகி விட்டது நிரஞ்சனாவிற்கு. எல்லாக் கேள்விகளையும் தனக்குள்ளேயே கேட்டு, அதற்கொரு சமாதானமும் சொல்லிக் கொள்வாள். எனவே, எல்லாம் சரிதான்.

அன்று ஏழேகால் மணி ஆகியும் புக்கிங்கில் இருந்த கூட்டத்தால் இன்னும் ரன்ஷீட்கள் ஸ்கேன் செய்து பூர்த்தி செய்யப்படாமல் இருந்தன. எப்படியும் இன்று ஒன்பதரை ஆகி விடப்போகிறது என்ற முன்முடிவுக்கு வந்திருந்தாள் நிரஞ்சனா. அதற்கேற்ப மனதைத் தயார் செய்து கொண்டே வேலை பார்த்தாள். வீட்டிற்குப் போனதும் அம்மாவிடம் என்ன சொல்வது என்பதற்கும் மனதில் ஒத்திகை பார்த்து பதில்கள் தயார் செய்து வைத்தாள்.

இன்னும் புக்கிங்கிற்கு ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர். இன்சார்ஜ் சேகர் வந்து, “எட்டு மணியோட புக்கிங் க்ளோஸ் பண்ணிரும்மா” என்றார். “சரிங்க சார். எட்டு மணிக்கு க்ளோஸ் பண்ணிட்டு உங்ககிட்ட கணக்கு குடுத்துட்டுதான் ரன்ஷீட் க்ளோஸ் பண்ணனும்” என்றாள், அவர் அதற்கு எதுவும் ஆறுதல் கூறுவார் என்ற எதிர்பார்ப்பில்.

“புனிதா இதைக் கூட பண்ணாம என்னத்தப் புடுங்கறா’ என்று கத்தி விட்டு பார்சல்களை வேனில் ஏற்றச் சென்றார். புனிதாவை அவர் திட்டியதே ஆறுதல் அளிப்பதை நிரஞ்சனா வியந்தாள். அந்த வசவால் தனக்கு எந்தப் பயனும் இல்லை, ஆனாலும், எவ்வளவு ஆறுதல்!

எட்டு மணிக்கு புக்கிங்கை முடித்து விட்டு விநியோகிக்காத தபால்கள், பார்சல்களை ஸ்கேன் செய்து கொண்டிருக்கும் போது வாசலில் கார் வந்து நின்றது. இன்சார்ஜ் ஒரு பதற்ற‌ உடல் மொழியில் “ஸார், ஸார்” என்று கூனினார்.

தலைமை அலுவலக மேலாளர் சுதன் உள்ளே வந்தார். முன்பே ஒரு முறை அவர் பகல் பொழுதில் வந்திருக்கிறார். அறிவிப்பில்லாமல் திடீரென சின்னக் கிளைகளை மேற்பார்வை இடுவார். முதலாளிக்கு மனைவி வழி உறவு என்றும் கேள்வி. வாசலில் நின்று வேனில் பார்சல்கள் ஏற்றப்படுவதை சற்று நேரம் பார்த்தவர் சேகரிடம் சில கேள்விகள் கேட்பது ஜன்னல் வழியே தெரிந்தது. அவர் பவ்யமாக பதிலளித்தார்.

நிரஞ்சனாவுக்குப் பதற்ற‌மானது. உள்ளே வந்து “இன்னும் இந்த வேலை முடிக்கலையா?” என்று கேட்பாரோ! கேட்டால் என்ன சொல்வது என்பதை மனதில் நடித்துப் பார்த்தும் எந்த பதிலும் சரி வரவில்லை. தன் பதிலுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவார் என்பதை ஊகிக்க முடிந்த நெருக்கத்தில் உள்ளவர்களிடமே இதெல்லாம் சரிப்படும். இவரிடம் பேசியதே இல்லை. மேலதிகாரி வேறு. பதறி வேலையில் தவறு வந்து விடுமோ என்று பயந்து கவனத்தை மாற்றினாள்.

சுதன் உள்ளே வந்தார். பயத்தையும் மீறி உள்ளே வந்ததும் அவர் தோற்றத்தைப் பார்த்து ஒரு கணம் ரசித்தாள். முப்பத்தைந்து வயதிற்குள்தான் இருக்கும். மாம்பழ நிறம் என்பார்களே அப்படி ஒரு மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறம். அடர்ந்த கேசம். கண்ணாடி அணிந்திருந்தார். அது அவருக்கு ஸ்டைலாக இருந்தது. தன் கனத்த கண்ணாடியை நினைத்துக் கொண்டாள். யோசிக்கும்போதே அவர் நிரஞ்சனாவிடம் கேட்டார்.

“நீங்க இன்னுமா கிளம்பல?”

நிரஞ்சனாவிற்கு அந்தக் கேள்வி தந்த மகிழ்ச்சியைக் கையாளத் தெரியவில்லை. பதில் சொல்லக் கூடத் தோன்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பெரிய அதிகாரி தன்னை எத்தனை மரியாதையாக விளிக்கிறார். ‘இன்னும் வேலையை முடிக்கலயா?’ என்ற கேள்வியை எதிர்பார்த்தவளுக்கு ‘இன்னும் கிளம்பலையா?’ என்ற கேள்வி இனித்தது. இரண்டிற்கும் அர்த்தம் ஒன்றுதான். ஆனால், அணுகுமுறையில் எத்தனை வித்தியாசம்!’

“இல்ல, ஸார்… இன்னும் ஒர்க் முடியல.”

“நீங்க புக்கிங் ஸ்டாப் தானே? எட்டு மணிக்கு முடிஞ்சிருமே?”

“ஆமா, ஸார். புக்கிங் முடிஞ்சுது. ரன்ஷீட் க்ளோஸ் ஆகல. முடிச்சுட்டு கிளம்பனும்.”

கவனமாக புனிதா முடிக்கவில்லை என்ற குற்றம் சாட்டும் தொனியைத் தவிர்த்தாள்.

சுதன் சேகரை பார்த்தார். “ஈடிபி ஸ்டாஃப் யாரு?”

“புனிதா, ஸார்.”

“அவங்க வேலையை ஏன் புக்கிங் ஸ்டாஃபுக்குத் தரீங்க? ரெண்டு பேர் வச்சுருக்கறது தனித்தனி வேலைக்குத்தானே?”

சேகர் அவசரமாக “இல்ல, ஸார்… இன்னிக்குதான். அவங்க ஏதோ கல்யாண ரிசப்ஷன் போகணும்னு பர்மிஷன். அதான் இன்னிக்குப் பண்ணாமப் போய்ட்டாங்க…”

‘பொய், ஸார். தினம் நான்தான் பண்றேன். அவங்க டெய்லி இப்படித்தான் போறாங்க.’ என்று நிரஞ்சனாவின் மனம் கூவியது. ஆனால், வாயில் சொற்களை அடைத்துக் கொண்டாள். மனம் பதைபதைக்க மௌனமாக ஸ்கேன் செய்து கொண்டிருந்தாள்.

“ஓ! பர்மிஷன் லெட்டர் தந்தாங்களா?”

“இல்ல ஸார். பர்மிஷனுக்கெல்லாம் இதுவரை லெட்டர் வாங்கினதில்ல இங்க.”

“ரூல்ஸ்னு ஒன்னு இருக்கறதாவது தெரியுமா உங்களுக்கு? இனிமே யார் பர்மிஷ‌ன்ல போனாலும் லெட்டர் வாங்கி ஹெட் ஆஃபீஸ்ல சப்மிட் பண்ணனும்.”

சேகர் தலையாட்ட‌, நிரஞ்சனா பக்கம் திரும்பினார் சுதன். “உங்க பேர் என்னங்க?”

“நிரஞ்சனா, ஸார்.”

“நீங்க சீக்கிரம் முடிச்சுட்டு கிளம்புங்க. வீடு எங்க? ரொம்ப லேட்டாகுதே!”

“மூணாவது ஸ்டாப், ஸார். போயிருவேன்’ என்றாள். தன்னையறியாமல் “தினம் இந்த டைம் போய்ப் பழகிருச்சு” என்று முணுமுணுத்தாள். சட்டெனத் திரும்பினார் சுதன்.

“டெய்லி இவ்ளோ லேட்டாகுதா?”

“அது… பெரும்பாலும் ஆயிரும், ஸார்.”

சுதன் சேகரைப் பார்த்தான். சேகர் தடுமாறினார்.

“இந்தப் புள்ள கிளம்பற சமயத்துல யார்னா புக்கிங்குக்கு வந்துருவாங்க, ஸார். கஸ்டமர்ஸ எப்படித் திருப்பி அனுப்பறதுன்னு புக் பண்ண வேண்டி இருக்கும்.”

சுதன் நிரஞ்சனாவிடம் நெருங்கி வந்து ரன்ஷீட்களை வாங்கிப் பார்த்தான். ஒவ்வொரு டெலிவரி ஊழியரும் திரும்பிய நேரத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

“நாளைக்கு புனிதாவை என்னைக் கான்டாக்ட் பண்ணச் சொல்லுங்க, சேகர். மார்னிங் வந்ததுமே என்கிட்ட பேசிட்டு அவங்க வேலை ஆரம்பிச்சாப் போதும்.”

“…”

“நிரஞ்சனா, நீங்க நாளைல இருந்து இந்த ரன்ஷீட் வேலையை அப்படியே வச்சுருங்க. அவங்க முடிச்சுட்டுப் போகாட்டி நீங்க தொடாதீங்க. அப்படியே பெண்டிங் வைங்க. நாளைக்கு புனிதாகிட்ட நான் பேசறேன். நாளைல இருந்து இந்த வேலையை நீங்க பண்ணக் கூடாது. புக்கிங் மட்டும்தான் உங்க வேலை. புரிஞ்சுதுங்களா?”

நிரஞ்சனா பயந்தாள். “அதில்ல ஸார்… எனக்குச் சிரமமில்ல‌. நான் பண்ணிக்கறேன்.”

“நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா இல்லையா? ஒரே எக்ஸ்பீரியன்ஸ் உள்ள புக்கிங் ஸ்டாஃபை விட ஈடிபி ஸ்டாஃப்ஸ்க்கு கிட்டத்தட்ட மூவாயிரம் சம்பளம் அதிகம். எதுக்கு? கஸ்டமர்ஸ் டீல் பண்ணவும், இந்த ஸ்கேனிங்லாம் ஒழுங்காப் பண்ணி பார்சல் ட்ராக்கிங்ல ஸ்டேட்டஸ் சரியா அப்டேட் காட்டவும்தான். ஆனா, அதிக சம்பளத்தையும் வாங்கிட்டு அந்த வேலையை உங்க தலைலயும் கட்டறாங்கன்னா, அது தப்பில்லையா?”

“…”

சுதன் கிளம்பி விட்டார். சேகர் அவளிடம் திரும்பினார்.

“உன்கிட்ட தினம் லேட்டா போறதெல்லாம் சொல்லச் சொன்னாங்களா? ஊமை ஊரக் கெடுக்கும்கறது சரியாத்தான் இருக்கு. அவன் பொதுவா மேனேஜரா இருக்கலாம். இந்த ப்ராஞ்ச்சுக்கு நாந்தான் மேனேஜர், புரிஞ்சுக்க. நான் சொல்றதத்தான் நீ செய்யணும்.”

நிரஞ்சனா பயந்தாள். “ஸாரி, ஸார். வேணும்னு பண்ணல…”

“அவதான் அறிவுகெட்ட முண்ட, பொறுப்பில்லாம போறானா நீயும் இப்படிச் சொன்னா, அடுத்த வாரம் மீட்டிங்ல எல்லா ப்ரான்ச் மேனேஜர்கள் முன்னாடியும் என்னை கேவலமா கேப்பானுங்க. அதானே உங்களுக்கெல்லாம் வேணும்?”

“ஐயோ! இல்ல, ஸார்” – நிரஞ்சனா குற்றவுணர்வு கொண்டு கண் கலங்கினாள். செய்யாத தவறுக்கு குற்றவுணர்வு கொள்வதென்பது எப்பேர்ப்பட்ட அவலம்!

அன்று பணி முடிந்து வீடு சென்றும் இந்தச் சிந்தனையே தலைக்குள் ஓடியது. தினம் செய்யும் வேலைதானே! பேசாமல் இருந்திருக்கலாம். நாளைக்கு புனிதா மேம் வந்து என்ன சாமியாடப் போகுதோ! பயத்தில் இரவெல்லாம் உறக்கம் பிடிக்கவில்லை.

நாளை விடுமுறை எடுத்து விடலாமா என்ற யோசனையை பிறகு நாள் முழுக்க‌ என்ன நடந்திருக்குமோ எனத் தலை வெடித்து விடும் என்ற இன்னொரு யோசனை முறித்தது.

அன்று சரியாகக் கூட உண்ணாமல் அவதியாகக் கிளம்பினாள்.

“அப்படி அந்த ஆஃபீஸ்ல உனக்கு என்னதான் கொட்டி வச்சிருக்காங்களோ தெரில. இந்த பாத்திர‌த்தையாச்சும் கழுவிக் கவுத்திட்டு போலாம்ல”

அம்மாவின் கரிப்புக் குரலுக்கு நடுவே வெளியேறி வேகமாக நடந்தாள்.

அலுவலகத்திற்கு எப்போதுமே முதல் ஆளாகச் செல்வது நிரஞ்சனாதான். இன்று இன்னும் பத்து நிமிடங்கள் முன்பே வந்திருந்தாள். சேகரிடம்தான் சாவி இருக்கும். அவர் வரும் வரை காத்திருக்க வேண்டும். சேகர் 8:50க்கெல்லாம் வந்தார். முறைத்தார்.

நிரஞ்சனா வழமைக்கும் கூடுதல் பணிவுடன் சாவியை வாங்கித் திறந்தாள். வேகமாகக் கூட்டி சுத்தம் செய்தாள். பணியாளர் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். அன்றைய விநியோகத்திற்கான லோட் வந்து இறங்கியது. ஏரியா வாரியாக அவரவர் தபால்களைப் பிரிக்கும் போது புனிதா வந்தாள். இருக்கையில் அவள் அமரும்போது சேகர் சொன்னார்:

“அட்டெண்டென்ஸ்ல கையெழுத்து போட்டுட்டு சுதன் ஸாருக்குக் கூப்பிட்டுப் பேசிரு…”

“ஏன் என்னாச்சு?”

“ஆமா, நீ பாட்டுக்கும் ஆறாச்சுன்னா குண்டி மண்ணைத் தட்டிட்டு கிளம்பிடற, நேத்து அவர் எட்டு மணிக்கு வந்து பார்த்து ரன்ஷீட்டே க்ளோஸ் பண்ணலயானு ஒரே சத்தம். நேத்து பாத்து புக்கிங் வேற ஜாஸ்தி. இந்தப் புள்ள அதைப் பாக்குமா இதை பாக்குமா?”

“நான் ஆறரைக்கு போறதுக்கு ஒரு வருஷம் முன்னமே ஹெட் ஆஃபீஸ் அக்கவுண்டன்ட் ப்ரீத்தா மேம்கிட்ட பெர்மிஷன் வாங்கி இருக்கேன். சரின்னு சொல்லிட்டாங்க.”

“லூஸா நீ? அக்கவுண்ட்டன்டுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இத்தனை நாள் நான் கண்டுக்காம விட்டேன். இப்ப சுதன் வந்து பாத்துட்டாரு. என்ன சொல்லணுமோ அதை அவர் கிட்ட சொல்லிக்கோ.”

நிரஞ்சனாவுக்கு சேகர் மேல் மதிப்பு கூடியது. தான் உளறியதைப் புனிதாவிடம் அவர் கூற‌வில்லை. மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே புனிதா நிரஞ்சனாவிடம் பாய்ந்தாள்.

“நீ எட்டு மணி வரை சீட்டைத் தேய்ச்சுட்டு என்னதான் பண்ணிட்டு இருந்த? உனக்கு இது க்ளோஸ் பண்ண பத்து நிமிஷம் போதும். அந்த டைம் கூடவா கிடைக்கல?”

“மேம், நேத்து செம்ம கூட்டம். கஸ்டமர்ஸ வெயிட் பண்ண வச்சு இந்த வேலையை பண்ண முடியாதுல்ல…” – ரன்ஷீட் ஸ்கேன் செய்ய அமர்ந்தாள் புனிதா.

“மேம், நீங்க அவர்கிட்ட பேசிட்டுதான் வேலை ஆரம்பிக்கனும்னு சொன்னாரு.”

“என்ன? திமிரா உனக்கு?”

“இல்ல மேம். அப்பறம் உங்கள அதுக்கு வேற ஏதாச்சும் சொல்லிறப் போறாங்கனுதான்.”

ஒரு நொடி பல்லைக் கடித்தவள், மொபைல் எடுத்து சுதன் நம்பருக்கு அழைத்தாள்.

“ஸார், நான் புனிதா பேசறேன். குட் மார்னிங்.”

“……”

“இல்ல, ஸார். நான் போறதுக்குள்ள டெலிவரி ஸ்டாஃப்ஸ் ரெண்டு பேர்தான், ஸார் வந்திருந்தாங்க. இல்லைனா முடிச்சு வச்சிட்டே போயிருப்பேன்.”

“……”

“சரிங்க, ஸார்.”

“……”

“அதில்ல, ஸார்… நான் போய்தான் புள்ளைங்களுக்கு ஏதாச்சும் சாப்பிடத் தரணும். அதான் சில நாள் கொஞ்சம் சீக்கிரமாப் போவேன்.”

“……”

“பாத்துக்கறேன் சார். அந்தப் புள்ள வீடு கொஞ்சம் பக்கம்தான், ஸார். அவளுக்கு லேட்டாப் போறதுல ஒன்னும் பிரச்சனை இல்ல ஸார்.”

“……”

“ஓக்கே, ஸார். ஓக்கே, ஸார்.”

பேசி முடித்தவள், “சேகர்ணா, சுதன்ட்ட பேசிட்டேன். எல்லாம் சொல்லிட்டேன்.”

“என்ன சொன்னாரு?”

“நீங்களே ரன்ஷீட்டலாம் செக் பண்ணி க்ளோஸ் பண்ணுங்க. அதுல தப்பு வந்துரக் கூடாதுல்ல. அதுக்குதான் சொல்றேன்னாரு.”

“நீ க்ளோஸ் பண்ணிட்டு போ இனி.”

“நான் போறவரைக்கும் வரதைத்தான் க்ளோஸ் பண்ணுவேன். அப்பறம் அவ க்ளோஸ் பண்ணட்டும். அப்படி அந்தப் புள்ளைக்கு கை நோவுதுன்னு நீ வருத்தப்பட்டா நீ வந்து க்ளோஸ் பண்ணு.”

“இந்த வேலைய நான் பாக்கணும்னா அப்பறம் நீ எதுக்கு சம்பளம் வாங்கற? புடுங்கறதுக்கா? எகத்தாள மயிருப் பேச்செல்லாம் என்கிட்ட வச்சுக்காத.”

அவர்களுக்குள் பேச்சு சூடானது. இருவருமே பத்தாண்டுகளுக்கும் மேல் அங்கே பணியில் இருப்பவர்கள். கிளையின் இன்சார்ஜாக தற்போது இருக்கும் சேகர், ஆரம்பத்தில் சைக்கிளில் டெலிவரிக்கு வந்தவர்தான். அவருக்குப் படிப்பெல்லாம் அதிகமில்லை; அனுபவ முதிர்ச்சியால் இப்பதவியைத் தந்திருந்தனர். கொரியர் நிறுவனத்தில் கிளைகளின் இன்சார்ஜ்களுக்குப் படிப்பு தகுதி எதுவும் இருப்பதில்லை. எனவே பதவிக்கான பெரிய மரியாதை எதுவும் அதே அனுபவமுள்ள மற்றவர்கள் அவர்களுக்குத் தருவதுமில்லை. ஆரம்பத்தில் புனிதா சேகரை எப்படி பேசிக் கொண்டிருந்தாளோ அதே பேச்சுதான் இப்போதும். அவர்களது சண்டையும் அப்படிதான். இன்று அடித்துக் கொள்வார்கள். நாளை சேர்ந்து விடுவர்.

“என்ன ஆளாளுக்கு அந்தப் புள்ள மேல ரொம்ப கரிசனப்படறீங்களே! சுதன் என்னடான்னா வயசுப் புள்ளைய லேட்டா அனுப்பாதீங்கன்றான்? ஏன் நாங்கெல்லாம் லேட்டா போனா கையப் பிடிச்சு இழுக்க மாட்டானுங்களா?”

நிரஞ்சனா மெல்ல மகிழ ஆரம்பிக்கும் போதே, கவனித்த புனிதா அந்த ஆயுதத்தை எறிந்தாள். “உனக்கெல்லாம் நைட் பன்னென்டு மணிக்கு தனியாப் போனாக் கூட எந்த ஆபத்தும் வராதுன்னு உன்னப் பாத்ததுமே புரிய வேணாம்.”

அவமானத்தில் குறுகி புனிதாவைப் பார்த்தாள் நிரஞ்சனா. குரூரம் கண்களில் மின்னச் சிரித்தாள் புனிதா. “ஒங்க ஏரியா அவ்ளோ பாதுகாப்புனு சொல்ல வந்தேன்”

நிரஞ்சனா புனிதாவின் கேலி புரிந்தும் அமைதியாய் புக்கிங் செய்ய ஆரம்பித்தாள். கண்ணீரை உள்ளிழுக்க முயன்று சில சமயம் தோற்று பின் சமாளித்து வேலையில் ஆழ்ந்தாள். எப்படியும் தனக்கு இதிலிருந்து ஒரு விடிவு வரப்போவதில்லை என்பது உறுதி. இது பெரிதாக வெடிக்காமல் இருந்ததே தற்போதைய நிம்மதி என்று ஆறுதல் பட்டாள்.

அன்று மாலையும் வழக்கம் போல புனிதா கிளம்பினாள்.

“இங்க பாரு… நாலு ரூட் முடிச்சுட்டேன். இன்னும் நாலு ரூட்டு வரணும். வந்ததும் சீக்கிரம் இதை முடிச்சுட்டு புக்கிங் பாரு. எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்காத.”

“சரி, மேம்.”

“ரன்ஷீட்க்கு கீழ செக்டு பைனு என் சைன் போட்டு விடு. இனிமே எல்லாத்துலயும் என் கையெழுத்தே இருக்கட்டும். ஓகேவா. என் கையெழுத்து தெரியும்ல. இப்படித்தான்.”

போட்டுக் காட்டினாள். சுலபம்தான்.

நிரஞ்சனாவுக்குப் புரிந்து விட்டது. சுதன் ‘நீங்க க்ளோஸ் பண்ணின எல்லா ரன்ஷீட்லயும் உங்க கையெழுத்து இருக்கணும் இனி’ என்று அவளிடம் கூறி இருக்க வேண்டும்.

“சரிங்க, மேம்.”

அவள் சென்ற பின் வழக்கம் போல இரண்டு வேலைகளுக்கும் நடுவில் அல்லாடினாள்.

சுதன் ஸார் சொன்னது மனதில் வந்து போனது: ‘அவங்க முடிச்சுட்டுப் போகாட்டி நீங்க தொடாதீங்க. அப்படியே பெண்டிங் வைங்க’. ஆனாலும் அதைச் செயல்படுத்த பயமாக இருந்தது. சேகருக்கும், புனிதாவுக்கும் பதில் சொல்ல வேண்டும். இவர்களைத்தானே மறுநாள் தான் சந்திக்க வேண்டும். அது தன்னால் முடியாது. பெருமூச்சு விட்டாள்.

ரன்ஷீட் வேலைகளைச் செய்தாள். எல்லாவற்றிலும் புனிதா என்று கையெழுத்திட்டாள்.

மாதம் கடந்திருந்தது. அன்று டெலிவரி முடிந்து ஆறுச்சாமி வரக் கொஞ்சம் தாமதமாகி இருந்தது. வந்ததும் புனிதாவிடம் தபால்களையும் ரன்ஷீட்டையும் கொடுத்தார்.

“நான் கிளம்ப டைம் ஆச்சு. நீ நிரஞ்சனாட்டக் குடு.”

“அந்தப் புள்ளைக்குதான் கூட்டம் இருக்கே. நீ செக் பண்ணிட்டு சரியா இருக்கான்னு சொல்லிட்டா கிளம்பிருவேன். அப்பறம் அந்தப் புள்ள க்ளோஸ் பண்ணிக்கட்டும்.”

“ஆம்பள, உனக்கென்ன அவசரம் வீட்டுக்குப் போக? கொஞ்சம் வெயிட் பண்ணி அவ செக் பண்ணினப்பறம் போயேன். நான் இந்த‌ வேலைய முடிச்சதும் கிளம்பிருவேன்.”

“இங்க பாரு… ஆம்பள பொம்பள எல்லாம் நீ பேசாத. என் டூட்டி டைம் முடிஞ்சுது நான் கிளம்பறேன். நீ உன் டைமூக்கு முன்னாடியே கிளம்பற. அது தெரியும்ல? என்னுத வாங்கிச் செக் பண்ணிட்டு கிளம்பு.”

“இந்த அதிகாரம் பண்ற வேலைலாம் வேற யாரிட்டயாச்சும் வச்சுக்கோ. எனக்கு ஹெட் ஆஃபீஸ் வரை ஆள் இருக்கு. அங்க சொல்லிட்டுதான் சீக்கரம் கிளம்பறேன்.”

“ஒனக்கு ஊர்ல எல்லா ஆஃபீஸ்லயும் ஆள் இருக்கும். அதெல்லாம் என் பிரச்சனையில்ல. இப்ப இத செக் பண்ணுவியா மாட்டியா?”

“என்ன ஜாடை பேசறியா? இன்னிக்கு மட்டுமில்ல. இனி என்னிக்குமே உன் ரன்ஷீட்ட நான் தொட மாட்டேன். ஆனதப் பாரு.”

“நீ என்னுதத் தொடவும் வேணாம். என் ரன்ஷீட்டக் க்ளோஸ் பண்ணவும் வேணாம்.”

ஆறுச்சாமி திரும்ப கொண்டு வந்த தபால்களை ரன்ஷீட்டோடு எடுத்துக் கொண்டு கிளம்பினார். நிரஞ்சனாவுக்கு பதற்ற‌மானது.

“அண்ணா, என்கிட்டக் கொடுங்க. நான் பார்த்து செக் பண்ணிக்கறேன்.”

அவர் காதில் வாங்காமல் தன் இரு சக்கர வாகனத்தைக் கிளப்பினார்.

புனிதா சேகருக்கு அலைபேசியில் அழைத்தாள். “ஆறுச்சாமி ரன்ஷீட்டை தரமாட்டேனு எடுத்துட்டு போய்ட்டான். தேவை இல்லாம என்னை மோசமா வேற பேசறான்.”

நிரஞ்சனா பயத்துடன் அந்த உரையாடலைக் கவனித்தாள்.

“சேகர்ணா, நீ பேசுண்ணா. அவன் எப்படியோ போறான். நீ பேசி அவன்கிட்ட ரன்ஷீட்டை கொண்டு வந்து தரச் சொல்லு. அப்பறம் நாளைக்கு நான்தானே பதில் சொல்லணும்.”

சற்று நேரத்தில் சேகர் வந்தார். புனிதாவைப் பார்த்துக் கத்தினார்.

“நான் பேசிட்டேன். அவன் வர மாட்டேன்னுட்டான். நீ க்ளோஸ் பண்ண மாட்டேன்னு சொன்னதாலதான் போனேன்னு சொல்றான். நீ ஏன் அப்படிச் சொன்ன?”

“நான் அதெல்லாம் சொல்லல. நான் கிளம்பறேன். நிரஞ்சனா அப்பறம் பண்ணும்னுதான் சொன்னேன். அதுக்குள்ள அந்தாள் வார்த்தய விட்டான். நிரஞ்சனாட்டயே கேளு நீ.”

“நான் அவன் வீட்டுக்கே போய் பார்த்துட்டு வந்துட்டேன். உன்னால முடிஞ்சதை பாரு தர முடியாதுன்னு சொல்றான். இப்போ என்னதான் செய்யறது? நைட் எல்லார் ர‌ன்ஷீட்டும் சப்மிட் பண்ணி ஆகணுமே! உனக்குதான் அப்படி என்ன வாய் வேண்டி கிடக்கு? இதுக்கு நீதான் பொறுப்பு. நாளைக்கு கேள்வி வந்தா பதில் சொல்லிக்கோ.”

“நான் என்ன பண்றது? அந்தாள் அசிங்கமாப் பேசறான். அத நீ என்னனு கேக்க மாட்ட. அவனுக்கு சப்போர்ட் பண்ற‌. என்ன இருந்தாலும் ஆம்பளைங்க அப்படித்தானே!”

“ச்சீய்…” என்று கத்தி விட்டு சேகர் நகர்ந்து விட்டார்.

அன்று புனிதா எட்டு மணி வரை இருந்து மற்ற வேலைகளையும் முடித்தாள். ஆறுச்சாமி ஹெட் ஆஃபீஸில் சொல்லி யாராவது வரக்கூடும் என்ற பயம் அவள் பேச்சில் தெரிந்தது. இடையே ஆறுச்சாமிக்கு அழைத்துக் கொண்டே இருந்தாள். அவர் எடுக்கவே இல்லை.

“நாளைக்கு இதனால எனக்குத்தான் என்கொய்ரி வரும். நாசமாப் போறவன் நல்லாவே இருக்க மாட்டான்” என்று புலம்பிக் கொண்டும் சபித்துக் கொண்டும் இருந்தாள்.

நடுநடுவே நிரஞ்சனா மீது எரிந்து விழுந்தாள். சேகர் இரவு கிளம்பும் முன் புனிதாவிடம் சாத்வீகமாக சொன்னார். “சரி, நீ என்னதான் பேசி இருந்தாலும் அவன் ர‌ன்ஷீட்டையும் கவர்களையும் எடுத்துட்டு போனது தப்பு. நான் ஹெட் ஆஃபீஸ்ல பேசறேன். அவங்க ஆள் அனுப்பி வாங்கிப்பாங்க. போலீஸ் கூட வரலாம். அவன் பண்ணது தப்பு. பாத்துக்கலாம். நாளைக்கு உங்கிட்ட வந்து ஏதும் கேட்டா, நீ அவன் மேல தப்புன்ற மாதிரியே பேசு. ஏன்னா, நான் அப்படிதான் இன்னிக்கு சொல்லுவேன். நீ நாளைக்கு மாத்தி பேசிறாத.”

“சரிண்ணா.” நிரஞ்சனாவுக்கு புனிதாவின் அவதி ஆனந்தமாக இருந்தது.

மறுநாள் தலைமை அலுவலகத்தில் இருந்து இரண்டு பேர் வந்தனர். அதில் சுதன் ஸாரும் ஒருவர். நிரஞ்சனா இன்றும் அவர் தோற்றத்தை ரசித்துக் கொண்டே, புக்கிங் செய்தாள்.

புனிதாவிடம் இருவரும் சரமாரியாகக் கேள்விகள் கேட்டனர். “எப்படி ஷீட் எடுத்துட்டு போற வரை விட்டீங்க? அவர் வந்ததுமே வாங்கிச் செக் பண்ணி இருப்பீங்கல்ல?”

“ஸார், அவர் என் கைல தரவே இல்ல. வந்த உடனே கிளம்பனும் உடனே பாருன்னு சொன்னாரு. நான் அப்போ மாரிமுத்துவோட கன்சைன்மெண்ட் செக் பண்ணி ஷீட் க்ளோஸ் பண்ணிட்டு இருந்தேன். அது முடிஞ்சுட்டு பாக்கறேன்.. கால் மணி நேரம் இருங்கன்னேன். அதுக்குள்ள கோபமாக் கிளம்பிட்டார், ஸார்.”

“என்னங்க நீங்க எத்தனை வருசமா வேலை பாக்கறீங்க? அவரோடத செக் பண்ண அஞ்சு நிமிஷம் ஆகுமா உங்களுக்கு? பார்த்து அனுப்ப வேண்டிதானே?”

“ஸார், அது பாதி ஸ்கேன் பண்ணிட்டேன். கையோட முடிச்சுரலாம்னு பார்த்தேன்.”

“இதெல்லாம் பொறுப்பான பதிலே இல்லைங்க. டெலிவரி ஸ்டாஃப்ஸ் இல்லைனா நம்ம ஒர்க் எவ்ளோ பாதிக்கும் தெரியுமா? இந்த வேலைக்கு இப்போல்லாம் உடனே ஆளுங்க வரதும் இல்ல. அதெல்லாம் விடுங்க. இப்ப கொண்டு போன கவரைலாம் போட்டு கோபத்துல அவன் கொளுத்திட்டா எவ்ளோ பெரிய லீகல் பிரச்சனையாகும் அது?”

“…”

“கஸ்டமர்ஸ் எத்தனையோ இம்பார்டண்ட் விசயங்கள் அனுப்பி இரூப்பாங்க. பல கோடிக்கு செக் இருக்கலாம், காஸ்ட்லி பொருட்கள் பார்சல்ல இருக்கலாம். கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கோங்க. இல்ல உங்களால வேலை செய்ய முடியாதுன்னா கிளம்பிருங்க. இங்க இருக்கவே வேண்டாம்.”

“ஸார்… ஸாரி ஸார்.”

“சேகர், உங்களுக்கு எத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. உங்கள ஒரு ப்ரான்ச்க்கு இன்ச்சார்ஜா போடறோம்னா நீங்க அதுக்கான கெபாசிட்டியோட இருப்பீங்கனுதானே? இதுக்கு கூட ஒர்த் இல்லைனா அப்பறம் என்ன வேலை பாக்கறீங்க?” சுதன் எப்போதும் போல் மரியாதையாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே மற்றவர் ஒருமையில் சாடினார்.

“ஏன்யா, என்னத்த இத்தனை வருசமா கிழிக்கற? ஒருத்தன் ஆஃபீஸ்ல ஒரு பொருளை எடுத்துட்டுப் போறான்னா அதை தடுக்காம இத்தனை பேர் ஒக்காந்து நொட்டிட்டா இருக்கீங்க? நீயெல்லாம் ஒரு இன்சார்ஜூ…”

“இல்ல ஸார்… நான் அவன் வீட்டுக்கே போனேன். அவன் தரல…”

“வீட்டுக்குப் போய் அவன் பொண்டாட்டிய ஒக்கார வச்சு பேன் பாத்தியா?”

“…”

“இந்தாம்மா. நீதானே இங்க ஈடிபி இன்சார்ஜ். இதுக்கான ஆக்ஷனுக்கு ரெடியா இருந்துக்கோ. அந்த ஆறுச்சாமி நம்பர் குடு.”

ஆறுச்சாமியிடம் பேசினார். சில பல விவாதங்களுக்கு பிறகு, “உன் வேலைக்கு ஒன்னும் ஆகாது. எப்பவும் போல டெலிவரி பண்ணு. நேத்து ரன்ஷீட்டும் கன்சன்மெண்ட்ஸூம் எடுத்துட்டு வா. நான்தான் இங்க எல்லாத்துக்கும் மேல. நான் சொல்றேன்ல. வா.”

வைத்து விட்டு புனிதாவிடம் திரும்பினார்.

“நீ ஆம்பளைங்க எதுக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகணும்னு கேட்டியா?”

“இல்ல ஸார்… அது வந்து…”

“உன் வேலை தவிர்த்து மத்ததெல்லாம் நீ ஏன் பேசற? அவங்க வெயில்லயும் மழைலயும் அலையறவங்க. முடிஞ்சதும் எப்படா வீட்டுக்கு போவோம்னுதான் அவன் நினைப்பான்.”

“…”

ஆறுச்சாமி வந்தார். ரன்ஷீட்டை வாங்கி புனிதாவிடம் கிட்டத்தட்ட எறிந்தார் அந்த அதிகாரி. “இந்தா, க்ளோஸ் பண்ணி விடு. இந்த சனிக்கிழமை மீட்டிங் இருக்கும். நீயும் இன்ச்சார்ஜும் வந்துருங்க. எம்டிகிட்ட பேச வேண்டி இருக்கும்.”

கிளம்பி விட்டனர். புனிதா முகம் கருத்துப் போய் அமர்ந்தாள்.

அலுவலகத்தில் மற்ற டெலிவரி ஊழியர்கள் அனைவரும் கூடியும் தனித்துமாய் பேசிக் கொண்டனர். புனிதாவை வேலையை விட்டு தூக்கி விடுவார் என்றனர். டெலிவரி ஊழியரில் ஒருவரான மாரிமுத்து அண்ணன் நிரஞ்சனாவிடம் வந்தார்.

“அவளை தூக்கிருவாங்களாம். நீ ஏற்கனவே ஈடிபி வேலையும் பாக்கறதால உன்னை ஈடிபில போட்ருவாங்க. ஒரு வாரத்தில் புதுசா யாரையாச்சும் புக்கிங்குக்கு எடுப்பாங்க. எப்படியும் சம்பளத்துல உனக்கு மூவாயிரமாச்சும் அதிகம் வரும்” என்றார். நிரஞ்சனா செய்தியின் மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல், “புனிதா மேம் பாவம்” என்றாள்.

“என்னத்த பாவம். ஃப்ராடு அவ. மனசுல பெரிய ரதின்னு நெனப்பு. என்ன திமிர் பேச்சு! எப்போ பார்த்தாலும் யாரையும் மதிக்காம பேசறது. எல்லாரப் பத்தியும் இன்சார்ஜ்கிட்ட போட்டுக் கொடுக்கறதுன்னுதானே இருக்கா! போகட்டும் விடு. என்ன ஒன்னு.. ஒரு வாரம் நீயே ரெண்டு வேலையும் சமாளிக்க வேண்டி இருக்கும். வேற ஆள் போடற வரை.”

“எனக்கென்னமோ பயமாத்தாண்ணா இருக்கு.”

“நீ இப்படியே பயந்து பயந்து செத்துட்டு இருந்தா இப்படி அடிமையாவேதான் வச்சுட்டு இருப்பாங்க உன்னை. நாளைக்கு மீட்டிங் முடிஞ்சா உன்கிட்ட நீ இதை பார்த்துப்பியா முடியுமான்னு மெயின் ஆஃபீஸ்ல இருந்து கேட்டா முடியும்னு ஸ்ட்ராங்கா சொல்லு.”

நிரஞ்சனாவுக்குக் கொஞ்சம் தெம்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எப்படியும் இரண்டு வேலைகளையும் தான்தான் செய்கிறோம் இப்போதே. வேறு ஆள் போடும் வரை சமாளிக்க வேண்டும். சம்பளமும் கூடுதலாகக் கிடைக்கும். ஒத்துக் கொள்ளலாம்.

இருந்தாலும் புனிதாவுக்கு வேலை போவது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது நிரஞ்சனாவுக்கு. இன்னொருவர் துன்பத்தில் தான் மகிழ்வதா என்ற அறமெல்லாம் மூளைக்குள் உட்கார்ந்து கேள்வி கேட்டது. மூளையே அதற்கு பதிலும் சொன்னது – ‘அவளுக்கு வேலை போனாத்தான் மூதேவி உனக்கு அந்த வேலை கிடைக்கும்’.

சனிக்கிழமை காலை பத்து மணிக்கு மீட்டிங் என்று சேகரும், புனிதாவும் கிளம்பிச் சென்றனர். நிரஞ்சனா அப்போதிலிருந்தே ஈடிபி பொறுப்பை மனதளவில் ஏற்றுக் கொண்டாள். எல்லாருக்கும் கர்மஸ்ரத்தையாக ஸ்கேன் செய்து ரன்ஷீட் ப்ரிண்ட் எடுத்தாள். கவர்களும், பார்சல்களும் சரியாக ஸ்கேன் ஆகி உள்ளதா என்று சரி பார்த்தாள். ஓர் அலைபேசி அழைப்பையும் விடாமல் பேசினாள். வாடிக்கையாளரிடம் பொறுப்புடனும் நிதானமாகவும் பதில் சொன்னாள். தனக்கு இவ்வளவு பேச வருமா என்று அவளே அதிசயித்து மகிழ்ந்தாள். எல்லாரும் டெலிவரிக்குச் சென்ற பின் தனி ஆளாக அமர்ந்து புக்கிங்கையும், வாடிக்கையாளர் சேவையையும் சமாளித்தாள்.

மதியம் ஒரு மணி இருக்கும்போது சுதன் சார் நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.

“ஸார், சொல்லுங்க, ஸார்…”

“ஏன்மா நிரஞ்சனா, நீங்க ஈடிபி ஒர்க் பாப்பீங்களா? அதுல எல்லாம் தெரியுமா?”

“ஸார்…”

“நீங்க வந்து ஒன்ற வருஷம் ஆகுதுல்ல. எல்லாம் கத்துக்கிட்டு இருப்பீங்கதானே?”

“தெரியும், ஸார்.”

“மண்டேல இருந்து நீங்கதான் உங்க ப்ராஞ்ச்க்கு ஈடிபி இன்சார்ஜ். புக்கிங்க்கு வேற புது ஆளோ இல்லைனா வேற ப்ரான்ச்ல இருந்து ஆல்டர்னேட் ஸ்டாஃபோ அரேஞ் பண்ணித் தருவோம். அது வரை ஒரு வாரம், பத்து நாள் சமாளிப்பீங்கில்ல?”

நிரஞ்சனா மகிழ்ச்சியை சிரமப்பட்டு அடக்கிச் சொன்னாள், “சமாளிப்பேன், ஸார்”

“உங்க சேலரியும் இன்க்ரீஸ் ஆகும்மா. பொறுப்பா வேலை செய்ங்க. ஆல் த பெஸ்ட்.”

அலைபேசியை வைத்தவுடன் மாரிமுத்து அண்ணனுக்கு போன் செய்தாள். “அண்ணா, நீங்க சொன்ன மாதிரியே ஆயிடுச்சு. என்னை ஈடிபி ஸ்டாஃப் ஆக்கிட்டாங்க.”

மாரிமுத்து மகிழ்ந்தார். “நல்லதுடா. நீ நல்லா தைரியமா பேசிப் பழகணும். புரியுதா? ஆறுச்சாமிக்கு சொன்னா அந்த‌க் கழுத போனதுக்கு ரொம்ப சந்தோசப்படுவான்.”

ஆறுச்சாமிக்கும், இணக்கமாகப் பேசும் இன்னும் சில ஊழியர்களுக்கும் தகவல் சொன்னாள் நிரஞ்சனா. பெரும்பாலும் அவளது பதவி உயர்வை விடவும் புனிதாவின் வேலை போனதற்குத்தான் அதிகம் மகிழ்ந்தனர்.

அன்று வீடு போகும் வரை புனிதாவும் சேகரும் அலுவலகம் வரவில்லை. சேகர் மீட்டிங்குக்குச் சென்றதால் வேன் டெலிவரிக்கு வேறொருவரை மாற்றாக அனுப்பி இருந்தனர். எனவே, அவரே இரவும் லோட் ஏற்றி சென்றார். நடுவில் புனிதாவுக்கோ சேகருக்கோ அழைத்து, ‘என்ன ஆயிற்று?’ என்று கேக்கலாமா என்ற எண்ணத்தை நிரஞ்சனா கை விட்டாள். விஷயம் தெரிந்து கிண்டலாகப் பேசுவதாக புனிதா கருதக்கூடும். எல்லாம் தன்னால்தான் என சேகர் கடுப்பாகலாம். திங்கள் காலை சேகர் வந்ததும் விஷயம் தெரியப் போகிறது அதுவரை பொறுமையாய் இருப்போம்.

திங்கட்கிழமை எப்போதும் போல் வந்து அலுவலகத்தைப் பெருக்கினாள். லோட் வந்தது. சனிக்கிழமை வந்த புதிய டிரைவர்தான் இன்றும் வந்திருந்தார். அவரைக் குழப்பமாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே புனிதா தனது டூ வீலரில் வந்து இறங்கினாள்.

உள்ளே வந்ததும் அனைவரையும் அழைத்தாள்.

“முந்தாநேத்து மீட்டிங்ல பேசினோம். அவங்கவங்க தரப்பைச் சொன்னோம். என்னை எம்டி வார்ன் பண்ணினார். ஆனா, ஒரு இன்சார்ஜா தன் பொறுப்பை சரியா செய்யத் தவறினது சேகர் அண்ணன்தான்னு அவரை இன்சார்ஜ் போஸ்ட்ல இருந்து தூக்கிட்டாங்க. வேற‌ ப்ரான்ச்க்கு வேன் டிரைவராப் போட்டுட்டாங்க. இன்னில இருந்து அங்க போவார்.”

“…”

“அவருக்கு அடுத்தபடி அதிக எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளுன்றதால என்னை நம்ம ப்ராஞ்சுக்கு டெம்ப்ரவரி இன்சார்ஜாப் போட்ருக்காங்க‌. அனேகமா ஆறு மாசத்துல பெர்மணன்ட் ஆகிடும். இன்னில இருந்து நான்தான் உங்களுக்கு இன்சார்ஜ்.”

“…”

“என்ன யாரும் வாழ்த்தக் கூட மாட்டிங்களா வயித்தெரிச்சல் பிடிச்சவங்களா”

“வாழ்த்துக்கள் மேம்” – நிரஞ்சனா பூனைக் குட்டி குரலில் சொன்னாள்.

“என்னடி.. நீ அடுத்த ஈடிபி ஸ்டாஃப் ஆகிட்ட. நல்லாப் பண்ணிருவல்ல? புக்கிங் ஆள் வர வரை ரெண்டும் பாக்கணும் நீ. என் பேரக் காப்பாத்துடி.”

ஆறுச்சாமி பொறுக்க மாட்டாமல் கேட்டான் – “உனக்கு என்னதான் தண்டனை?”

“நான் என்ன தப்பு பண்ணினேன். நீ பண்ணின தப்பு அது. ரன்ஷீட்டையும் கவரையும் தூக்கிட்டுப் போனது. நியாயமாப் பாத்தா உன்னையும் என்கொயரிக்கு கூப்டுருக்கணும். சுதன் சாரும் அன்னிக்கு வந்தானே ஒருத்தன் சேவியர்னு அவனும் சேந்து எதோ தப்பு எங்க மேலன்ற மாதிரி திருப்பி உன்னைக் காப்பாத்திட்டாங்க. இன்சார்ஜ் போஸ்ட்ல இருந்தும் தப்பைத் தடுக்க முடியலைனும், திரும்ப வாங்கற சாமர்த்தியம் கூட இல்லாத ஒரு ஆளை இன்சார்ஜா வச்சுக்க முடியாதுன்னுதான் சேகரைத் தூக்கிட்டாங்க.”

“நீ பண்ணதுக்கு ஒன்ன மெச்சினாங்களா?”

“ஆறுச்சாமிண்ணா, பணியிடத்தில் பொம்பளயத் தப்பாப் பேசினா பெரிய விவகாராம் ஆகிடும். இப்பலாம் ஹராஸ்மெண்ட் சட்டம் ரொம்ப‌ மாறிடுச்சு தெரியும்ல. நான் அந்த விஷயத்தைப் பெருசுபடுத்தல என்கொய்ரில. அதனால உனக்கு ஒண்ணும் ஆபத்தில்ல.”

“…”

“தெரிஞ்சோ தெரியாமலோ நீ எனக்கு நல்லது பண்ணிருக்க. இந்தப் பொறுப்பு எனக்குக் கிடைச்சிருக்கு. நாம சண்டை போட வேணாம். என்னை வார்னிங்கோட விட்டாங்க. இங்க வேற பொறுப்பான ஆள் இல்லைன்றதும் காரணமா இருக்கலாம். ஆனா, டெலிவரி ஸ்டாஃப்ஸ் நீங்கெல்லாம் எனக்கு கோ-ஆப்ரேட் பண்ணனும். உங்க கோரிக்கைகளை நான் மேல பேசி வாங்கித் தருவேன். இனி இங்க தப்பு வராம நாமதான் பாத்துக்கணும்.”

அவர்கள் லேசாய் தலையசைத்து நகர்ந்தனர். புனிதா நிரஞ்சனாவிடம் சொன்னாள்.

“நான் கூட என் மேல ஆக்ஷ்ன் எடுப்பாங்கன்னுதான் நினைச்சேன். ஆனா, அங்க போனப்பறம்தான் தெரிஞ்சுது. எந்தத் தப்புக்கும் இன்சார்ஜ்தான் முதல் பொறுப்பு. ஆஃபீஸ் விட்டு ஒரு பொருள் கூட இன்சார்ஜ் பார்வைக்குத் தப்பி வெளிய போகக் கூடாது. அப்படி ஒரு துரும்பு மிஸ்ஸானாலும் நடவடிக்கை இன்சார்ஜ் மேலதான் விழும்னு சொல்லிட்டாங்க. டெலிவரில எந்தப் தப்புன்னாலும் அதையும் சரி பண்ண வேண்டியது இன்சார்ஜ்தான். சேகர் அண்ணன் இருந்த டைம்ல டெலிவரில நிறைய கம்ப்ளைன்ட்ஸ் வந்துட்டே இருந்துச்சுல்ல. எல்லாம் சேத்து, பெரிய சம்பவம் நடக்கவும் மொத்தமாத் தூக்கிட்டாங்க. இந்த சந்தர்ப்பத்துக்காக காத்துட்டு இருந்துருக்காங்க, அவரைத் தூக்க.”

நிரஞ்சனா மொத்த உற்சாகமும் வடிந்தவளானாள். ரன்ஷீட் போட்டாள். புக்கிங்கிற்கு ஓடினாள். புனிதா அனைவரையும் மென்மையாக அதட்டிக் கொண்டே இருந்தாள்.

“டெலிவரி ஸ்டாஃப்லாம் அவங்கவங்க ரன்ஷீட் போட்டு முடிஞ்சதும் உடனே கிளம்புங்க. ஏய் நிரஞ்சனா, இன்னுமா நீ ஃபர்ஸ்ட் ரூட் ரன்ஷீட் போட்டு முடியல. வேகமா முடி.”

ஒரு நாளிலேயே நிரஞ்சனாவுக்கு சோர்வு தட்டியது. அனைவரையும் அனுப்பி விட்டு புனிதா இன்சார்ஜ் இருக்கையில் அமர்ந்து அக்கௌன்ட் புக்கிங் செய்யும் நிரந்தர வாடிக்கையாளர்களிடம் மாதத் தொகை கேட்டு அலைபேச அமர்ந்து விட்டாள். வேறு எந்த வேலைக்கும் வரவில்லை. இதுவரை அவள் பார்த்து வந்த ஒரே வேலையான வாடிக்கையாளர் சேவையும் சேர்ந்து நிரஞ்சனாவிடம் வந்தது. அன்று மாலை ரன்ஷீட்டில் யார் கையெழுத்து போடுவது என்ற சந்தேகம் வந்தது நிரஞ்சனாவுக்கு.

“மேம், இதுல என் சைன் பண்ணவா?”

“ஏய், இரு இரு… ஒரு வாரத்துக்கு என்னைத்தான் செக் பண்ணச் சொல்லி இருக்காங்க, நீ புதுசுன்றதால. நீ ஏற்கனவே இங்க எல்லாம் பாக்கறவதான். ஆனாலும் அவங்க கேட்கறப்போ நான் இதெல்லாம் சொல்ல முடியாதுல்ல. ஒரு வாரம் நான் மேற்பார்வை பார்த்ததாவே இருக்கட்டும். செக்டு பை ல எப்போவும் போல என் சைன் போட்டுரு.”

இரண்டு நாட்கள் சென்றன. இரண்டு ஆள் வேலை செய்ததில் நிரஞ்சனா துவண்டு விட்டாள். “மேம், புக்கிங் சமாளிக்க முடியாட்டி வேற ப்ராஞ்ச்ல இருந்து ஆள் அனுப்பறதாச் சொன்னாங்க. நீங்க கேட்டுப் பாக்கறீங்களா?”

“அவங்க அப்படிதான் சொல்வாங்க. இப்போ நான் கேட்டா நீதான் இருக்கியே.. அப்பறம் என்ன? அந்தப் புள்ள பிசியா இருக்கறப்போ நீ கொஞ்சம் புக்கிங் பாக்கலாம்லன்னு என் பக்கம் திருப்புவாங்க. உனக்கு இதென்ன புதுசா? தட்டித் தூக்கிற மாட்ட? அதெல்லாம் சமாளிக்கலாம். போய் வேலையப் பாரு. ரொம்ப முடியாட்டி சொல்லு. நான் வரேன்.”

மாலையில் அதிக கூட்டத்தில் அழைத்தாள். “மேம், கொஞ்சம் புக்கிங் பாக்கறீங்களா?”

“நான் இங்க கலெக்ஷனுக்கு பேசிட்டு இருக்கறது தெரியலையா? ஒரு பொறுப்பெடுத்தா சரியாப் பண்ணனும். இந்த மாசம் கலெக்ஷன் நான் வாங்கித் தரணும். ஆஃபீஸூக்கு வருமானம் வரதுதான் முக்கியம். உன்னால முடியாட்டி அவங்க கேட்கறப்போவே முடியாதுன்னு சொல்லிருக்கணும். எல்லாம் சமாளிப்பேன்னு சொல்லி இருக்கல்ல…”

வாடிக்கையாளர்கள் மத்தியில் கத்தினாள். நிரஞ்சனாவுக்கு வேதனையாக இருந்தது. தொண்டையை அடைத்தது. நிதானப்படுத்திக் கொண்டு வேலையைப் பார்த்தாள்.

மாரிமுத்துவின் ரன்ஷீட் ஸ்கேன் செய்யும்போது கவனித்தாள். அவர் டெலிவரி செய்த ஒரு பொருளின் எண்ணுக்கு நேராக வாடிக்கையாளர் கையொப்பம் இல்லை. அதற்குப் பதில் அதற்கடுத்த பொருளுக்கு நேராகக் கையெழுத்து இருந்தது. ஆனால் அப்பொருள் டெலிவரி ஆகவில்லை. சில நேரம் இப்படி டெலிவரிகாரர்களும் பெறுநர்களும் சரியாகக் கவனிக்காமல் மாற்றிக் கையெழுத்தாகி விடும். மாலையில் டெலிவரி ஆகாது திரும்பிய‌ பார்சல்களை ஸ்கேன் செய்யும் ஈடிபி ஸ்டாஃப் அதைச் சரி செய்து மாற்றி அம்புக்குறி இட்டு ரன்ஷீட்டைக் க்ளோஸ் செய்ய வேண்டும். அவ்வப்போது நடக்கும் பிழைதான்.

அதே போல் மாற்றித் திருத்த முயன்றவள் ஒரு கணம் யோசித்தாள். அவர் டெலிவரி செய்யாமல் கையெழுத்து வாங்கி இருந்த பொருள் ஒரு பல் செட். பல் செட் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ஒரு மருத்துவமனைக்கு செல்கிறது. அந்தப் பல் மருத்துவரின் ஆர்டர்கள் வழமையாக அந்த நிறுவனத்திலிருந்துதான் வரும். அத்தயாரிப்பு நிறுவனம் அவர்கள் கொரியரில் மாதாந்திரக் கணக்கில் அக்கவுண்ட் புக்கிங் செய்பவர்கள். மாத பில்லே ஐம்பதாயிரத்திற்கு மேல் வரும். முன்பொரு முறை ஏரியா மாற்றி ஒரு ஊழியர் தவறாக டெலிவரி செய்து விட, அம்மாத பில் தொகை அறுபத்தைந்தாயிரத்தையும் செலுத்தாமல் அக்கவுண்டையும் கேன்சல் செய்து விட்டனர். திரும்ப சேகர்தான் போய் கெஞ்சிப் பேசி, இனி இப்படித் தவறேதும் நடக்காது என்று உறுதிமொழி தந்து அந்த டெலிவரியையும் நேர் செய்து அக்கவுண்ட் புக்கிங் ஆர்டரைத் திரும்பப் பெற்றார்.

அவ்வளவு கறாரான நிறுவனம் அது. அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மூலம் வரும் மாதாந்திர வருமானம் அதிகம் என்பதால் அவர்களுக்கான மரியாதையும் மதிப்பும் அதிகம். அவர்களை எதிர்த்தோ மறுத்தோ ஒரு சொல் கூட பேசி விடக் கூடாது.

ஒரு பல் செட்டின் விலை பதினைந்தாயிரம் என்று முன்பு எப்போதோ பில்லில் பார்த்த நினைவு. அந்தப் பல் செட் டப்பா மிகச் சிரியதாகத்தான் இருந்தது. ஒன்றோ இரண்டோ பற்கள் மட்டும் இருக்க வேண்டும். மாரிமுத்து பார்சல்களை வைத்துப் போன‌ கூடையில் இருந்து செக் செய்தவற்றை எடுத்து தனி ட்ரேயில் போட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த பல் செட்டை மட்டும் தவற விட்டாள். அது அவளது மேசைக்கு அடியில் சென்றது.

நிரஞ்சனாவின் மேசைக்கு எதிரில் மேலே கண்காணிப்பு கேமரா இருக்கிறது. அவளது மேசை முப்புறம் மூடியது என்பதால் கேமராவில் மேசையின் அடிப்பகுதி தெரியாது. தன் கைப்பையை மேசைக்கு அடியில்தான் வைத்திருப்பாள். இருக்கையில் அமர்ந்ததும் பல்செட் அட்டைப் பெட்டியை காலுக்குக் கீழே அழுத்தி கைப்பைக்குப் பின் மறைத்தாள்.

மாரிமுத்துவின் ரன்ஷீட்டை க்ளோஸ் செய்யும் போது பல்செட்டை டெலிவர்ட் என்று உள்ளிட்டாள். பின் செக்டு பை புனிதா என்று அழுத்தமாக கையெழுத்திட்டாள். வீட்டிற்கு செல்லும் முன் குனிந்து பையை எடுக்கும்போது பல் செட்டைப் பைக்குள் போட்டாள்.

பேருந்து விட்டு இறங்கியதும் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் பல் செட்டை வீசினாள்.

‘எந்தத் தப்புக்கும் இன்சார்ஜ் தான் முதல் பொறுப்பு. ஆஃபீஸ் விட்டு ஒரு பொருள் கூட இன்சார்ஜ் பார்வைக்குத் தப்பி வெளிய போகக் கூடாது. அப்படி துரும்பு மிஸ்ஸானாலும் நடவடிக்கை இன்சார்ஜ் மேலதான் விழும். டெலிவரில எந்தப் தப்புன்னாலும் அதையும் சரி பண்ண வேண்டியது இன்சார்ஜ்தான். சேகர் அண்ணன் இருந்த டைம்ல டெலிவரில நிறைய கம்ப்ளைன்ட்ஸ் வந்துட்டே இருந்துச்சுல்ல. எல்லாம் சேத்து, பெரிய சம்பவம் நடக்கவும் மொத்தமாத் தூக்கிட்டாங்க.’ – புனிதாவின் சொற்கள் காதில் ஒலித்தன.

sowumiyaa@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button