![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/10/perumalmurugan-780x470.jpg)
கோடை விடுமுறையில் அம்மாயி வீட்டுக்கு மலரும் குமாரும் போயிருந்த போது க்ளூஸ் பூனை மூன்று குட்டிகள் போட்டிருந்தது. அருகில் நெருங்கிப் பார்க்க முடியவில்லை. எப்போதும் இருக்கும் க்ளூஸ் அல்ல. இப்போது தாய்ப்பூனை. கண்களை மலர் மேல் பதித்துக் கொடூரமாகச் சீறித் தடுத்தது. அவள் ஆசையாய் பார்ப்பது தெரிந்ததும் குட்டிகளை விட்டுத் நகராமல் இருந்த க்ளூஸ் இரவே வேறொரு இடத்திற்கு மாற்றிவிட்டது.
‘குட்டிங்க தானா வெளிய வர்றதுக்குள்ளப் பத்தெடம் மாத்தீரும் இந்தப் பூன. இங்கதான் எங்காச்சும் வெச்சிருக்கும்’ என்றார் அம்மாயி.
ஒளித்து வைத்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமாகி இருவரும் க்ளூஸையே கண்காணித்துக் கொண்டிருந்தனர். குட்டிகளையே மறந்தது போல இயல்பாக இருந்த க்ளூஸ் அம்மாயி போட்ட தயிர்ச்சோற்றை வயிறு முட்டத் தின்றது. உடலை விரித்து வாசல் படியோரம் படுத்துக் கிடந்தது. விளையாட்டுப் போக்கில் அவர்கள் கவனம் பிசகிய போது அதைக் காணவில்லை. வீட்டைச் சுற்றிலும் கட்டுத்தரைப் பக்கமும் சுற்றி வந்தும் கண்ணுக்குப் படவில்லை.
‘கடலக்கொடிப் போருக்கு அடியில வெச்சிருக்குது கண்ணுகளா’ என்றார் அந்தப் பக்கமிருந்து வந்த அப்புச்சி.
கடலைக்கொடிப் போர் தரையில் அழுந்துவது போல நின்றிருந்தது. கிட்டத்தட்டப் படுத்துப் பார்த்தும் ஒன்றும் தெரியவில்லை.
‘உள்ளதான் க்ளூசு போச்சு. அங்கதான் வெச்சிருக்கும். இன்னம் நாலு நாள்ல குட்டீவ வெளிய வந்திரும். பாத்துக்கலாம்’ என்று உறுதிப்படுத்தினார் அப்புச்சி.
அவர் சொன்னது போலவே குட்டிகள் வெளியே வரத் தொடங்கிய போது அங்கங்கே வெண்ணிறத்துடன் செந்நிற வரி படர்ந்த ஒருகுட்டி அவர்களை ஈர்த்தது. க்ளூஸ் சாம்பல் நிறம். மற்ற இரண்டு குட்டிகளும் அதே நிறம். செங்குட்டி மீதே கண்கள் இருந்தன.
‘புலிக்குட்டி மாதிரியே இருக்குதில்லடா’ என்றாள் மலர்.
‘போடி. இதுதான் புலிக்குட்டியா? சாவி குடுத்த பொம்ம நடந்து வர்ற மாதிரியே இருக்குது’ என்றான் குமார்.
‘அதென்ன கண்ணு அக்காவப் போடிவாடின்னு கூப்படறது. அக்கான்னு வாய் நெறயாக் கூப்புடு’ என்றார் அம்மாயி. எத்தனை முறை இதைச் சொன்னாலும் அம்மாயிக்குச் சலிப்பதில்லை.
‘அவ மட்டும் டா போட்டுக் கூப்படறாளே’ என்று கோபித்தான் குமார்.
‘அவ அக்கா. அப்பிடிக் கூப்பிடலாம்.’
அம்மாயி சொல்லும் தர்க்கம் சரியில்லை என்று அவனுக்குப் பட்டது.
‘அவ என்னயத் தம்பீன்னு கூப்புட்டா நானும் அக்கான்னு கூப்படறன்’ என்றான்.
‘செரி, உடுடா. அம்மாயி அப்பிடித்தான் சொல்லும். இந்தப் புலிக்குட்டியப் பாரு’ என்றாள் மலர்.
‘உனக்குத்தான் புலிக்குட்டி. எனக்கெல்லாம் பூனக்குட்டிதான்’ என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டே சொன்னான் குமார்.
‘பூனையும் புலியும் ஒரே எனந்தான். ஒருகாலத்துல பூனக்கித்தான் எல்லாம் தெரியுமாம். புலிக்கு ஒன்னுமே தெரியாதாம்’ என்றார் அம்மாயி.
‘நெசமா அம்மாயி?’ என்று நம்பிக்கை இல்லாமல் கேட்டான் குமார்.
‘ஆமா. அப்பிடி ஒரு கத இருக்குது’ என்று அம்மாயி சொன்னதும் ‘என்ன கத? அதச் சொல்லு’ என்று இருவரும் ஒருசேரக் கேட்டார்கள்.
‘துளியூண்டு கததான். பூன சின்ன உருவமா இருந்தாலும் அதுக்கு எல்லாமே தெரியுமாம். ஒன்னுமே தெரியாத புலி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுதாம். தானாச் செத்து அழுகிக் கெடக்கற மிருகங்களத் தின்னு காலத்த ஓட்டிக்கிட்டு இருந்துச்சாம். எத்தன நாளுத்தான் இப்பிடி வாழ்றதுன்னு கவலப்பட்ட புலி, ஒருநாளு பூனகிட்ட வந்து ‘நானும் நீயும் ஒரே எனந்தான? சாப்பாட்டுக்கே இப்பிடிக் கஷ்டப்பட்டு அலயறனே. எனக்கு வேட்டயாடச் சொல்லிக் குடே’ன்னு கெஞ்சிக் கேட்டுதாம். செரி, இதும் நம்ம எனந்தானன்னு பூன ஒவ்வொன்னாச் சொல்லிக் குடுத்துச்சாம். பதுங்கறது, பாயறது, ஓடறது, நீந்தறது, நகத்தை எப்பிடி நீட்டறது, பல்லுல எப்பிடிக் கடிக்கறது, எதஎத எப்பிடி வேட்டையாடறதுன்னு எல்லாத்தயும் சொல்லிக் குடுத்திருச்சாம்.’
குமாரால் அதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.
‘புலி வந்து பூனகிட்டக் கெஞ்சுச்சா?’ என்றான்.
‘கததானடா. குறுக்க பேசாத கேளு’ என்றாள் மலர்.
‘எல்லாத்தயும் கத்துக்கிட்ட புலி தானே வேட்டையாடி வவுறு ரொம்பத் தின்னுச்சாம். சீரணமாயி வவுறு எளகுற வரைக்கும் ரண்டு நாளு மூனு நாளு தூங்கிக்கிட்டே கெடந்துச்சாம். எல்லாம் கெடச்சுட்டப்பறம் மனசு சும்மா இருக்குமா? மனசு அடங்காது. எந்திரிச்சு நின்னுக்கிட்டுப் பேயாட்டம் ஆட ஆரம்பிச்சிரும். இந்தப் பூன என்ன கையவலம் இருக்குது. அது நம்புளுக்குச் சமமா? இதுதான் குருவா? முன்னங்கால்ல ஒரு எத்து எத்துனா புழக்கயப் போட்டுருமேன்னு நெனப்பு ஓடுச்சாம். தனக்கு எல்லாம் தெரியும், தனக்குக் கீழதான் இன்னமே பூன இருக்கோணுமின்னு நெனச்சுச்சாம். அப்பிடிப் புலிக்குத் தலக்கனம் வந்திருச்சாம். ஒரு அடிக்குத் தாங்குமா பூன? இன்னைக்கிப் பாத்தரலாம்னு உறுமிக்கிட்டுப் பூனயப் புடிக்கப் பாஞ்சு வந்துச்சாம். ஒடனே சொதாரிச்சுக்கிட்டுப் பக்கத்துல இருந்த மரத்து மேல ஒரே தாவுல ஏறிக்கிடுச்சாம் பூன. உன்னோட புத்தி எனக்குத் தெரியும், அதான் மரமேற மட்டும் உனக்குச் சொல்லித் தர்லன்னு பூன சொல்லிச் சிரிச்சுச்சாம். இன்னக்கி வரைக்கும் புலிக்கு மரமேறத் தெரியாது பாத்துக்க’ என்று கதையை முடித்தார் அம்மாயி.
‘மரமேறத் தெரிஞ்ச புலியெல்லாம் இருக்குது அம்மாயி’ என்றான் குமார்.
‘அதென்னமோ கத இப்பிடித்தான் சொல்லுது’ என்று முடித்துக்கொண்டார் அம்மாயி.
‘நம்மூருப் புலிக்கு மரமேறத் தெரியாதுடா. செரி, இந்தப் புலிக்குட்டிய நாம கொண்டுக்கிட்டுப் போயி வளக்கலாமா?’
செங்குட்டியை மலருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. தன் சொப்புவாயைத் திறந்து கத்தும் சத்தத்தை அதன் வாயருகே காதை வைத்துக் கேட்டாள். முகம் காட்டாத பறவை ஒன்றின் குரல் போலத் தலைக்குள் ஏறி உடல் சிலிர்த்தது. வாரி அணைத்து வீட்டுக்குக் கொண்டு போய்விட வேண்டும் என்று கைகள் பரபரத்தன.
‘வீட்ல பீம் இருக்கறான். அம்மா பூன வேண்டான்னுதான் சொல்லும்’ என்றான் குமார். அவன் முகம் கடுகடுவென்று மாறிவிட்டது.
‘பீம் இருந்தா என்னடா? இதும் இருக்கட்டும்’ என்றாள் ஆர்வத்துடன்.
‘நாய்க்கும் பூனைக்கும் பொதுவா ஆவாது. பழகக் கொஞ்சம் நாளாவும். அதுவரைக்கும் பத்தரமாப் பாத்துக்கோணும்’ என்றார் அம்மாயி.
‘அதெல்லாம் பாத்துக்கலாம் அம்மாயி’ என்றாள் மலர்.
வீட்டில் செங்குட்டி ஓடும் காட்சி அவள் மனதில் விரிந்து கொண்டேயிருந்தது. அவள் பிடிவாதம் அவனுக்கும் தெரியும். அம்மாவிடம் சொல்லி மறுத்தாலும் அப்பாவிடம் அடம் பிடித்துச் சம்மதம் வாங்கிவிடுவாள். அதற்கு இப்போதே ஒத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது.
‘என்ன பேரு வெப்ப?’ என்றான் குமார்.
அவன் ஒத்துக்கொண்டான் என்றதும் செங்குட்டியைக் கைகளில் அள்ளி நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள். பெயர் வைக்கும் உரிமையை அவனுக்குக் கொடுத்துவிட நினைத்துச் சொன்னாள்.
‘நீயே ஒரு பேரு சொல்லு.’
சோட்டா பீம் தொடரில் ஈர்ப்பாகித்தான் நாய்க்கு ‘பீம்’ என்று பெயர் வைத்தான். இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கொஞ்ச நேரம் யோசித்தான்.
‘இதுக்கு சுட்கின்னு வெச்சரலாம். அது பீம். இது சுட்கி.’
‘செரி. பீமுக்குச் சக்தி வேணும்னா சுட்கி இருக்கோணும். இது சுட்கியாவே இருக்கட்டும்’ என்று உடனே அவள் ஒத்துக்கொண்டாள். அப்படி ஒரு கோணத்தை அவன் யோசிக்கவில்லை. அவள் சொல்வதைப் பார்த்தால் பீமை விடவும் சுட்கி பெரியவள் என்றாகிறது. பீமை விட இந்தக் குட்டிப்பூனை பெரியதா? அந்தப் பெயரை ஏன் சொன்னோம் என்றிருந்தது.
‘இது கடுவனா இருந்தா என்ன செய்யறது?’ என்றான்.
சுட்கியைக் கொண்டுபோய் அம்மாயிடம் காட்டினாள். அதன் வாலைத் தூக்கிப் பரிசோதித்த அம்மாயி ‘பொட்டக்குட்டியாட்டந்தான் தெரீது’ என்றார். அப்புச்சியாலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
‘இன்னங் கொஞ்சம் பெருசானாத்தான் கண்டுபுடிக்க முடியும். மல்லும் போது பாத்தாத் தெரியும். கடுவனா இருந்தா அடியில இருந்து மல்லும். பொட்டையா இருந்தா வாலுக்கடியில இருந்து மல்லும்’ என்றார் அவர்.
எல்லோரும் பார்க்கப் பூனை மல்லாது; ஆய் போகாது. தனியிடம் தேடிப் போய் மண்ணைப் பறித்து இருந்துவிட்டு பிறகு மண் தள்ளி மூடிவிட்டுத்தான் வரும். இந்தக் குட்டியும் அப்படி ரொம்பத் தூரம் போகுமா? குட்டியைப் பின்தொடர்ந்து கொண்டேயிருந்தால் கண்டுபிடிக்கலாம். அதுவரைக்கும் பொறுக்க முடியாது.
‘கடுவனா இருந்தாலுஞ் செரி, பொட்டையா இருந்தாலுஞ் செரி, சுட்கினே கூப்படலாம்’ என்று பெயரை உறுதிப்படுத்தினாள் மலர். தான் வைத்த பெயரைத் தானே திரும்பப் பெற முடியாமல் குமார் தடுமாறினான். ஒருவழியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்தான். ‘என்னன்னாலும் சுட்கி அல்லக்கை தான? பீம்தான் எல்லாம்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
மேலும் ஒருவாரம் அம்மாயி வீட்டில் இருந்தார்கள். ‘சுட்கி சுட்கி’ என்றும் ‘நீ புலிக்குட்டியாடி சுட்கி’ என்றும் சொல்லிப் பூனைக்குட்டியைக் கொஞ்சித் திரிந்தாள் மலர். அவளைப் பொருத்தவரை சுட்கி பெண்தான். அவனுக்கு அத்தனை ஈடுபாடு வரவில்லை. அவள் ‘புலிக்குட்டி’ என்று கொஞ்சும் போதெல்லாம் ‘புழுக்கைக்குட்டி’ என்று முணுமுணுத்தவன் பிறகு அதைச் சத்தமாகவே சொன்னான். ‘போடா… இது புலிக்குட்டிதான். நகத்த நீட்டி உன்னயக் கீறறப்ப ஒத்துக்குவ’ என்றாள்.
‘ஆமா. பூனகிட்டப் பாத்து இருந்துக்கோணும். பயந்தாங்கொள்ளி சீவன். சின்னச் சத்தம் கேட்டாலும் பொதருக்குள்ளயோ ஊட்டுக்குள்ளயோ ஓடிப் பூந்துக்கும். அப்பக் கைல புடிச்சம்னா நகத்த நீட்டி ரத்தம் வர்றம் மாதிரி அழுந்தப் பெராண்டிரும். வளக்கறவங்கன்னு நாய்க்கு நெனப்பிருக்கும். அறியாத நகமோ பல்லோ பட்டுட்டாத்தான். பூன அப்படியில்ல. அதுக்குப் பயம் வந்திருச்சின்னா நம்மள ஆருன்னெல்லாம் பாக்காது’ என்றார் அம்மாயி.
‘அம்மாயி சொல்றதக் கேட்டயாடி? இந்தப் பயந்தாங்கொள்ளிப் பூனயத்தான் புலிக்குட்டின்னு கொஞ்சற’ என்று அவன் கேலி செய்தான்.
‘நெறத்தப் பாத்தாப் புலிக்குட்டி. கண்ணப் பாத்தாப் புலிக்குட்டி. பல்லப் பாத்தாப் புலிக்குட்டி. பயத்த ஏன் பாக்கோணும்? வேட்ட புடிக்கறதுல புலிக்குட்டி. எம்புலிக்குட்டியே தான்டா இது’ என்று விட்டுக் கொடுக்காமல் கொஞ்சலைத் தொடர்ந்தாள். அவள் அப்படிக் கொஞ்சியது அழகாயிருந்தது. அம்மாயி பேசுவது போலவே தோன்றியது. ‘ஆமாமா புலிக்குட்டியேதான்’ என்று மகிழ்ந்து சிரித்தான்.
இந்தப் புழுக்கைக்குட்டி வீட்டுக்கு வருவது உறுதியாகிவிட்டது. அம்மாவிடமும் சொல்லிவிட்டாள். இனி ஒன்றும் செய்ய முடியாது. பீமுக்குப் போட்டியாகிவிடுமோ இந்தப் புழுக்கைக் குட்டி என்றுதான் குமாரின் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. வீட்டுக்கு பீம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருசம் ஆகப் போகிறது. பூங்குட்டியாகத்தான் வாங்கி வந்தார்கள். இப்போது முழங்கால் உயரம் வளர்ந்துவிட்டான். அவனும் செம்மி நிறம்தான். சுட்கியும் செந்நிறம். நிறப்பொருத்தம் அமைந்திருக்கிறது. இரண்டுக்கும் குணப்பொருத்தமும் சேர்ந்துவிட்டால் நல்லது.
அவளுக்கும் சில யோசனைகள் இருந்தன. சுட்கியைப் பீம் ஏற்கும் வரை பத்திரமாக வைத்துப் பராமரிக்க வேண்டும். கிளி வளர்ப்பதற்காக அப்புச்சி எப்போதோ வாங்கி வைத்திருந்த கம்பிக்கூண்டு தொண்டுப்பட்டியில் சும்மாதான் கிடந்தது. கொஞ்ச நாள் சுட்கியை அந்தக் கூண்டுக்குள் விட்டுவிடலாம் என்று நினைத்தாள். பேத்தி கேட்டதும் அப்புச்சி சந்தோசத்தோடு அந்தக் கூண்டை எடுத்துத் துருப் போக உப்புக் காகிதத்தில் தேய்த்து எடுத்தார். தைப்பொங்கலின் போது மாட்டுக்கொம்புக்கு அடித்து மிச்சமிருந்த நீலப் பெயிண்டைக் கூண்டுக்கு அடித்தார். தாழ் கொக்கியைச் சரிசெய்து கொடுத்தார்.
கூண்டுக்குள் சுட்கியை விட்டதும் இடைவிடாமல் கத்தினாள். தாய்ப்பூனை வந்து காலைத் தூக்கிக் கூண்டின் மேல் அடித்து வெளியே கொண்டு வர முயன்றது. பால் குடித்த பிறகு கூண்டுக்குள் விட்டால் சத்தம் போடாமல் தூங்கும் என்று அம்மாயி சொன்னார். அது ஓரளவு பலித்தது. வீட்டுக்குப் போன பிறகு கத்தினாலும் கூண்டைத் திறக்கக் கூடாது. கொஞ்ச நாள் பீமுக்கும் பழக வேண்டும். சுட்கிக்கும் பழக வேண்டும். சிறிய இதழ்கள் விரித்துப் பொலிவு காட்டும் டேபிள் ரோஸ் ஒன்றைப் போலச் சுட்கியை எடுத்து நெஞ்சோடு சேர்த்துக் கொள்ளும் போது ஏதேதோ யோசனைகள் ஓடின. ‘உன்னய நல்லா வளப்பன்’ என்று சுட்கியின் காதுக்குள் சொன்னாள். சுடர் போல நேர் நிற்கும் அவள் காது மடல்களை உதடுகளால் வருடிக் கொடுத்தாள். உடல் சிலிர்த்துக் கீழிறங்கி ஓடத் துள்ளினாள் சுட்கி. ‘மூச்சுக்காத்துப் பட்டாக் கூட வலிக்குதாடி கண்ணு’ என்று கொஞ்சினாள்.
சுட்கியை வீட்டுக்குக் கொண்டு போவதற்குக் குமார் ஒத்துக் கொண்டாலும் அவனுக்குள் ஒரு விலகல் வந்துவிட்டதை உணர்ந்தாள். எல்லாவற்றையும் குட்டிச்சுட்கியின் இருப்பு சரியாக்கிவிடும் என்று நம்பினாள். அப்புச்சியின் டிவிஎஸ் 50 வண்டியில் ஊருக்குக் கிளம்பினார்கள். கூண்டுக்குள் சுட்கியை விட்டு அம்மாயி யோசனைப்படி ஒரு வெள்ளைத் துணியால் மூடி மேலே கயிற்றால் பிணைத்திருந்த கைப்பிடியைப் பற்றித் தூக்கிக் கொண்டாள். இருவரையும் அப்புச்சியே கொண்டுவந்து விடுவதாகத் திட்டம். கூண்டை டிவிஎஸ் 50இன் முன்பக்கம் வைத்துக் கொள்ளலாம் என்றார் அப்புச்சி. அவளுக்கு ஏனோ அது பிடிக்கவில்லை. கையிலேயே இருக்கட்டும் என்று பிடிவாதமாகச் சொன்னாள்.
குமார் வண்டியோட்டக் கூண்டைக் கையில் பிடித்தபடி பின்னால் உட்கார்ந்து கொண்டாள். மறுநாள் வந்து வண்டியை எடுத்துக் கொள்வதாகச் சொன்ன அப்புச்சி, டவுனுக்குள் போகாமல் குறுக்கு வழியாக வீட்டுக்குப் போக வழி சொன்னார். அதெல்லாம் தெரியும் என்று தலையாட்டிக் கொண்டு வண்டியை வேகமாக விட்டான் குமார். அவ்வண்டியின் அதிகபட்ச வேகத்தில் அவன் ஓட்ட முயன்றான். சுட்கிக் கூண்டைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு காற்றுக்கு முகத்தைக் காட்டினாள் மலர்.
சுட்கி வீட்டுக்குள் வந்ததும் பீமின் காதுகள் விறைத்துக்கொண்டன. வேட்டை நாயினத்திற்கே உரிய மோப்பசக்தி கொண்டவன். கண்களை விரித்துக் கூண்டைப் பார்த்தான். வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தால் ஓடி வந்து மேலே தொத்துக்கால் போட்டு ஏறுவான். இப்போது ஒருநிமிடம் அப்படியே உட்கார்ந்திருந்தவன் சட்டெனப் பாய்ந்து குரைத்துக்கொண்டு ஓடி வந்து கூண்டை மோந்து பார்த்தான்.
‘ஒனக்குத் தொணையிடா. நல்லாப் பாத்துக்க’ என்று குமார் சொன்னது மலருக்கு ஆறுதலாக இருந்தது.
‘அடே… செம்பூன. இப்பிடிக் குட்டி கெடைக்கறது அபூர்வம்’ என்று ஆசையாக வந்தாள் சம்பூரணம்.
‘இதொன்னுதாம்மா இந்த நெறம். மத்த ரண்டும் தாய் மாதிரியே சாம்பல்’ என்றாள் மலர்.
‘மேலெல்லாம் சடசடயாப் புளியம்பழம் தொங்கறாப்பல இருக்குது’ என்று சிரித்துக் கூண்டைத் திறக்கச் சம்பூரணம் முயன்றாள்.
‘வேண்டாம்மா.’
மலர் தடுத்தாள்.
‘பீமுக்குப் பழகட்டும்’ என்றான் குமார்.
‘புது விருந்தாளியா?’ என்று கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்த மகேந்திரன் பையை சோபாவில் போட்டுவிட்டுக் கூண்டுக்கு அருகே வந்து அமர்ந்தான்.
‘விருந்தாளி இல்லப்பா. நம்ம வீட்டு மெம்பர்’ என்றாள் மலர்.
‘கொஞ்ச நாளுக்கு விருந்தாளி மாதிரிதான் கவனிச்சுக்கணும். அப்பறம் மெம்பர் ஆயிருவாரு’ என்று சிரித்தான் மகேந்திரன்.
‘இதோட நிக்கட்டும். ஒருநாயி ஒருபூன போதும். உங்களுக்கு வேல செய்யறதில்லாத இதுவளுக்கும் என்னால வேல செய்ய முடியாது’ என்று கோபமாகச் சொல்வது போல முகத்தை வைத்துக்கொண்டு சம்பூரணம் சொன்னாள். அவர் குரலில் சலிப்பில்லை என்றாலும் எச்சரிக்கை இருப்பதாகத் தோன்றியது.
‘இந்த ஒருவருசந்தான். ப்ளஸ் ஒன் போனதும் பிள்ள ஆஸ்டலுக்குப் போயிருவா. இவனுக்கு இன்னம் மூனு வருசம். பத்து முடிச்சொடன இவனயும் ஆஸ்டல்லதான் போடோணும். அப்பறம் என்ன, ஒனக்கு இதுவ ரண்டுந்தான் தொண’ என்றான் மகேந்திரன்.
‘நானெல்லாம் ஆஸ்டலுக்குப் போவ மாட்டன்’ என்றான் குமார். அவன் முகத்தில் தீவிரம் தெரிந்தது.
‘இப்ப இப்பிடித்தான் சொல்லுவ. போனதுக்கு அப்பறம் வீட்டுக்கே வர மாட்ட. எத்தன பசங்களப் பாத்திருக்கறன் நானு’ என்று அவன் தீவிரத்தைக் குறைப்பது போல மகேந்திரன் சொன்னான்.
‘நான் போவ மாட்டன்.’
கத்துவது போலச் சொல்லி அம்மாவைக் கட்டிக்கொண்டான் குமார்.
‘எத்தன நாளைக்கு அம்மா பையன இருக்கப் போறயின்னு பாக்கறன்’ என்றபடி உடை மாற்ற அறைக்குள் போனான் மகேந்திரன்.
‘பீமப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாதும்மா’ என்று அழுவது போலக் குமார் சொன்னான்.
‘நீ வீட்டிலருந்தே ஸ்கூலுக்குப் போ. காலேஜ்கூட பக்கத்துலயே சேந்துக்க.’
கேலி என்று தெரியாத மாதிரி சம்பூரணம் சொன்னாள். மலர் சிரித்தாள்.
‘செரி செரி. விருந்தாளிக்கு என்ன குடுத்தீங்க.’
மகேந்திரன் குரல் உள்ளிருந்து வந்து எல்லோரையும் திசை மாற்றிற்று.
காலையில் பீமை வெளியில் கூட்டிச் செல்வது குமாரின் வேலை. பீமை வாங்கி வந்த போதே, ‘நீதான் காலையில வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போவணும்’ என்று நிபந்தனை விதித்தான் மகேந்திரன். குமாரைப் பள்ளிக்குக் கிளப்புவதே கடினம். கத்தி, அடித்து, உலுக்கி என்னென்னவோ செய்துதான் எழுப்ப வேண்டும். நாய்க்குட்டி வாங்கலாம் என்று முடிவு செய்தபோது மகேந்திரனின் மண்டையில் இந்த யோசனை உதித்தது. தன் நிபந்தனையைக் கடுமையாக அமலாக்கவும் செய்தான். பீம் வீட்டுக்கு வந்தபோதே துள்ளிக் குதித்து ஓடும் தரத்தில் இருந்தான். கழுத்தில் சங்கிலி பிணைக்க முடிந்தது.
அலாரம் வைத்து ஆசையாய்ச் சிலநாள் வெளியில் கூட்டிச் சென்று உலாத்தி, ஆய் இருக்க வைத்துக் கூட்டி வந்த குமார் பிறகு சலித்துத் தூக்கத்தைத் தொடர்ந்தான். மகேந்திரன் விடவில்லை. குமார் எழாத நாளொன்றில் தன் அலுவலக நண்பன் ஒருவன் கேட்கிறான் என்றும் அவனுக்குக் கொடுப்பதாகவும் சொல்லிப் பீமை ஒயர்கூடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு கிளம்பினான். ‘இனிமேல் இப்படி ஆகாது’ என்று குமார் அழுது அரற்றித் தடுத்தான். அதிகாலையில் எழுதுவது அதன்பின் அவனுக்கு வழக்கமாயிற்று.
பீம் நடைக்குச் செல்லும் காலை நேரத்தில் சுட்கியைக் கூண்டிலிருந்து வெளியே விட்டார்கள். பின்பக்கம் ஓடிப் போய் மண்ணைப் பறித்து ஆய் இருந்துவிட்டுத் தன் பிஞ்சுக் கால்களால் மண்ணை இழுத்து மூடினாள். அவள் கால்களைக் கழுவி வீட்டுக்குள் கொண்டு வருவது மலரின் வேலை. சுட்கிக்காகவே அவ்வப்போது பீமைக் கட்டி வைத்துவிட்டுச் சுட்கியை உலாத்த விட்டார்கள். உடலை விறைப்பாக்கிக் கொண்டு சுட்கியையே பார்த்துக் கொண்டு பீம் நின்றான். அவனை அதிகம் கட்டி வைக்க வேண்டாம் என்று குமார் சண்டை போட்டான். அப்படி இருவருக்கும் சின்னச் சின்னச் சண்டை வந்தது.
நடை முடிந்து பீமோடு உள்ளே நுழையும் போதே ‘புழுக்கயக் கூண்டுக்குள்ள உடு’ என்று கத்துவான் குமார். நடையின் போது எங்காவது சிறு சத்தம் கேட்டால் அங்கே திரும்பிச் சங்கிலியை இழுத்துக்கொண்டு போவான். அவனை மீட்பதற்குப் பெருஞ்சக்தி வேண்டும். சிலசமயம் உடலை வளைத்துச் சங்கிலியைக் குஞ்சி இழுக்க வேண்டியிருக்கும். வேர்வை கொட்டக் கொட்டத்தான் குமார் திரும்புவான். சுட்கி வந்த பிறகு வீட்டுக்குச் சில அடிகள் இருக்கும்போதே குரல் கொடுக்கத் தொடங்கிவிடுவான். ‘புழுக்கயக் கூண்டுக்குள்ள உடு’ என்பதுதான் அவன் வசனம். புழுக்கை என்று சொல்ல வேண்டாம் என்றாலும் கேட்பதில்லை. அப்படிச் சொல்லி அக்காவைச் சீண்டுவதில் ஆனந்தம்.
அன்று அவன் பீமோடு வரும்போது கழிப்பறையில் இருந்தாள் மலர். சமையல் அறையில் அம்மியில் எதையோ நசுக்கிக் கொண்டிருந்தாள் சம்பூரணம். மாடியில் உலாத்தியபடி செல்பேசியில் மகேந்திரன் பேசிக் கொண்டிருந்தான். ‘புழுக்கயக் கூண்டுக்குள்ள உடு’ என்னும் கத்தலுக்குப் பதில் இல்லை. மலருக்குக் கேட்டாலும் சட்டென்று வெளியே வர முடியவில்லை. அவசர அவசரமாகக் கதவைத் திறந்துகொண்டு வாசலுக்கு ஓடி வந்தாள். அதற்குள் இரண்டு மூன்று முறை அவன் கத்திவிட்டான். முற்றத்தில் நின்றுகொண்டிருந்தாள் சுட்கி. அவளைப் பார்த்துக் குரைத்தபடி சங்கிலியை இழுத்தான் பீம். அவனை அமைதிப்படுத்திக் கட்டுவதற்குக் குமார் முயன்றுகொண்டிருந்தான். பீமைப் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டதால் சுட்கிக்குப் பயம் போய்விட்டது போலும்.
சுட்கியைத் தூக்கி நெஞ்சோடு வைத்துக்கொண்டு, ‘இந்தக் கருவாயனுக்குச் சும்மா இருக்க முடியலியா?’ என்று கோபத்தோடு கத்தினாள் மலர்.
பீமுக்கு உடலெல்லாம் செம்மி நிறம் என்றாலும் வாய்ப்பகுதியில் மட்டும் மினுமினுக்கும் மையைப் பூசிவிட்டது போல அடர்கருமை. அதைக் குறித்துத்தான் அவள் திட்டினாள். பீமைக் கட்டிவிட்டு வீட்டுக்குள் வந்த குமார் நேரடியாக அம்மாவிடம் போய், ‘என்னயக் கருவாயன்னு சொல்றாம்மா’ என்று சம்பூரணத்திடம் புகார் சொன்னான்.
‘உன்னய ஆருடா சொன்னா? அந்த பீமத்தான் கருவாயன்னு சொன்னன். அவனுக்கு வாயி கருப்புத்தான?’ என்றாள் மலர்.
‘அவனக்கூடக் கருவாயன்னு சொல்லக் கூடாது.’
‘சுட்கிய நீ புழுக்கையின்னு சொல்லாத இரு. நானுஞ் சொல்லுல.’
‘இது புழுக்கயில்லாத புலியா?’
‘நீயும் செரி, அவனுஞ் செரி கருவாயனுங்க தானடா.’
‘போதும் போதும். ஆரும் ஆரையும் எதுவும் சொல்ல வேண்டாம். அவுங்கவுங்க பேரச் சொல்லிக் கூப்புடுங்க போதும். காலங்காத்தால எம்வேலய உட்டுட்டு உங்க வேச்சியத்தப் பாக்க என்னால முடியாது. உங்கொப்பன் எங்க போனாரு?’
அம்மியைத் துடைத்துக் குழவியைச் சுவரோரம் அணை கொடுத்து வைத்துக்கொண்டே சம்பூரணத்தின் குரல் மேலெழுந்ததும் இருவரும் அடங்கினார்கள்.
‘பீமு வர்றப்ப ஒழுங்காப் புழுக்கயப் புடிச்சு வெச்சுக்க. இல்லீனா, ஒரு நாளக்கிப் பாயட்டுமுன்னு உட்ருவன்’ என்று முனகலாகச் சொன்னான் குமார்.
‘போடா கருவாயா’ என்று அவனுக்குக் கேட்கும்படி மட்டும் சொன்னாள் மலர்.
அன்றைய சண்டை வெவ்வேறு வகையில் தொடர்ந்தது. வாலை ஆட்டிக்கொண்டு பீம் தன்னருகில் வந்தாலும் ‘போடா’ என்று தள்ளினாள் மலர். சுட்கியைக் கண் கொண்டு குமார் பார்ப்பதில்லை. ஓரளவுக்குச் சுட்கியின் இருப்பைப் பீம் ஏற்றுக்கொண்ட மாதிரிதான் தெரிந்தது. என்றாலும் தனியாகத் திறந்துவிடப் பயமாக இருந்தது. எல்லோரும் வெளியேறிய பிறகு பதினொரு மணிவாக்கில் பீமைக் கட்டிப் போட்டுவிட்டுச் சுட்கியை அதன் போக்கில் திறந்துவிட்டாள் சம்பூரணம். விட்டால் சுட்கி சும்மா இருப்பதில்லை. வீட்டுக்கு வெளியே போய்ச் சுற்றிவிட்டு வந்தது. சிலசமயம் வரத் தாமதமானால் ஏதாவது தெருநாயிடம் சிக்கிக் கொண்டதோ என்று பயந்தாள். சாயங்காலம் மலர் வந்ததும் என்ன பதில் சொல்வது?
அப்படி ஏதும் ஆகவில்லை. தெருவில் நாய்க்குரைப்புச் சத்தம் கேட்டால் உடனே வீட்டுக்குள் ஓடிவந்து புகுந்து கொண்டாள் சுட்கி. ‘புத்திசாலிதான்’ என்று பாராட்டிக் கொஞ்சினாள் சம்பூரணம். பீம் நெடிக்கமாய் இரண்டடி உயரத்திற்கு வளர்ந்துவிட்டான். அவனை அள்ளிக் கொஞ்சவோ கட்டிக்கொள்ளவோ முடிவதில்லை. சுட்கியைக் கையாள்வது எளிதாக இருந்தது. உட்கார்ந்தால் உடனே வந்து ஏறி மடியில் பந்து போலச் சுருண்டு கொண்டாள். அவள் தலையைத் தடவிக்கொண்டே தொலைக்காட்சி பார்க்க முடிந்தது. ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது காலில் வந்து உரசுவதும் கால்களுக்கு இடையே சிக்கித் தடுமாறுவதும்தான் கஷ்டம். எச்சரிக்கையாக இல்லை என்றால் மிதிபட்டு விடுவாள்.
சுட்கி வெளியில் போய் வருவதைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்த இரவில் மலருக்குக் கோபம் வந்துவிட்டது.
‘வெளிய உடறன்னு அவளத் தொலச்சிருவம்மா நீ’ என்றாள்.
‘பூனைய எவ்வளவு நேரம் கூண்டுக்குள்ள வெச்சிருக்கறது?’
பதிலை வேகமாகச் சொன்னாள் சம்பூரணம்.
‘அவளுக்கு வவுறு ரொம்பச் சோறு வெய்யி. பாலோ தயிரோ ஒருசொட்டு ரண்டு சொட்டு கண்ணுல காட்டற. அவ எப்பிடித் திம்பா?’ என்று குற்றம் சாட்டினாள் மலர்.
‘இன்னொரு கால்படி சேத்துப் பால் வாங்கு’ என்று அனுமதி கொடுத்தான் மகேந்திரன்.
‘ஆமா. வாராவாரம் எலும்புக்கறி, ஆன்லைன் ஃபுட்டு, தடுப்பூசி மயிரு மண்ணாங்கட்டின்னு பீமுக்கு மாசம் ஆயரம் ரூவாயிக்கு மேல செலவாவுது. இப்ப இந்தப் புழுக்கைக்கும் செலவு பண்ணோணுமா?’
அம்மாவுக்கும் இது புழுக்கையா என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மலர். செலவுக் கணக்கை அம்மா சொன்னது குமாருக்கு எரிச்சலாயிற்று.
‘நான் வேணும்னா ஒருவேள சாப்பிடல. அத பீம் கணக்குல வெச்சுக்க’ என்றான்.
‘செரி, எனக்கும் காலையில டீ வேண்டாம். சுட்கிக்குப் பால் ஊத்து’ என்றாள் மலர்.
யாரும் எதுவும் பேசவில்லை. ஒருநிமிட அமைதிக்குப் பிறகு மலர் கேட்டாள்.
‘பீமுக்குச் சோத்துக் கிண்ணம், தட்டு, தண்ணிக் குண்டா எல்லாம் வாங்குன மாதிரி சுட்கிக்கு ஒரு கிண்ணம் வாங்கலாம்பா.’
மகேந்திரனை முந்திக்கொண்டு சம்பூரணம் சொன்னாள்.
‘வாரத்துக்கு மூனு தேங்கா ஒடைக்கறம். அந்தத் தொரட்டியே பூனைக்குப் போதும். காச வீணாக்க வேண்டாம்.’
‘நாய்க்குன்னா எது வேண்ணாலும் செய்வீங்க. பூனைக்கின்னாக் கணக்குப் பாப்பீங்க.’
அழுதுகொண்டே எழுந்து அறைக்குள் சென்றாள் மலர்.
‘செரீம்மா. ஒருகிண்ணம் வாங்கிக்கலாம். அதுல என்ன பெருசாச் செலவாயிரப் போவுது’ என்று மகேந்திரன் சொல்லச் சொல்ல அவள் அறைக்குள் போய்க் கதவைச் சாத்திக் கொண்டாள். இரண்டு படுக்கையறைகளில் ஒன்று அம்மாவுக்கும் அவளுக்கும். இன்னொன்று அப்பாவுக்கும் குமாருக்கும். கோபம் வந்துவிட்டால் உடனே அறைக்குள் போய்ப் படாரென்று கதவைச் சாத்திக்கொள்வது மலருக்கு வழக்கம்.
அவளைச் சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் ஆன்லைன் மூலம் இரண்டு கிண்ணங்களை வர வைத்தான். ஒன்றில் உணவும் ஒன்றில் தண்ணீரும் வைத்தார்கள். தேங்காய் உடைக்கும் போது மட்டும் ‘இதுல தின்னா எறங்காத இவளுக்கு?’ என்று சுட்கியைப் பார்த்து முணுமுணுத்தாள் சம்பூரணம். பீமுக்கென வாங்கும் உணவுகளை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தாள் மலர். ஞாயிற்றுக்கிழமைகளில் பீமுக்கென வாங்கி வரும் எலும்புக்கறியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறுசதைகளை நோண்டி எடுத்துச் சுட்கிக்கு வைத்தான் மகேந்திரன். எல்லாம் மலரைச் சமாதானப்படுத்தத்தான். கறிப்பிசிறுகளைக் குதறிக் குதறி வெகுநேரம் வைத்துக்கொண்டு தின்றாள் சுட்கி.
சுட்கி கொஞ்சம் கொஞ்சமாகக் கூண்டை விட்டு வெளியில் நடமாடத் தொடங்கினாள். அவள் இப்போது கைக்குள் அடங்கும் பூங்குட்டியல்ல. உடல் நெடிக்கம் கொண்டிருந்தது. களி உருண்டை போலத் தலை பெருத்தது. கூண்டுக்குள் புரண்டு படுக்க முடியவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் இடித்தது. பெரிய கூண்டு வாங்கலாம் என்று இணையத்தில் மலர் தேடிப் பார்த்தாள். விரலளவு இடைவெளி விட்டு கம்பிகள் நெருங்கிய கூண்டுகள் பலவற்றைப் பார்த்தாள். அவற்றின் கதவுக்கான தாழ் புதுவித அமைப்பில் இருந்தது. பூனையால் அதை எப்படியும் திறக்க முடியாது. சுட்கியை மருத்துவமனைக்கோ அம்மாயி ஊருக்கோ கொண்டு போக வேண்டுமானால் அப்படி ஒரு கூண்டு இருந்தால்தான் ஆகும். ஒரு சந்தர்ப்பம் பார்த்து அப்பாவிடம் சொல்லி வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தாள்.
அப்போது பீமுக்குப் பிறந்த நாள் வந்தது. தன் நண்பன் வீட்டு நாய்க்குப் பிறந்த நாள் கொண்டாடினார்கள் என்றும் அதுபோலப் பீமுக்கும் கொண்டாட வேண்டும் என்றும் குமார் அம்மாவிடம் வற்புறுத்திக் கொண்டேயிருந்தான். பீம் என்றைக்குப் பிறந்தான் என்று தெரியாது. நன்றாகக் கண் விழித்து ஓடியாடும் சமயத்தில்தான் வாங்கி வந்தார்கள். எப்படியும் ஒருமாதக் குட்டியாக இருந்திருப்பான். எனினும் வீட்டுக்கு வந்த நாளையே அவனுடைய பிறந்த நாளாகக் கருதிக் கொண்டாடலாம் என்றான் குமார். அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை வந்தது. அதைப் பார்த்ததும் மகேந்திரன் ஒத்துக்கொண்டான். எப்படியும் அன்றைக்குக் கறி எடுப்பது உறுதி. பீமுக்கும் எலும்பு வாங்கி வர வேண்டியிருக்கும். கூடுதலாக ஒரு கேக்தானே என்று அவன் நினைத்தான்.
அப்பா ஒத்துக்கொண்டதும் குமார் ஆகாயத்தில் தலை முட்டும்படி குதித்தான். அம்மாயிக்கும் அப்புச்சிக்கும் பேசியில் சொன்னான். தாத்தா இறந்து சில வருசங்களாகி விட்டன. பாட்டி மட்டும் இருந்தார். அவருக்கும் சொன்னான். எல்லோரையும் அன்றைக்கு வர வேண்டும் என்றும் பீமுக்கு ஏதாவது பரிசு தர வேண்டும் என்றும் வலியுறுத்தினான்.
‘நாய்க்குப் பொறந்த நாளுன்னு ஊருல சொன்னா வாய்ல சிரிக்க மாட்டாங்க, பொச்சுல சிரிப்பாங்க கண்ணு’ என்றார் பாட்டி.
‘நீ ஆருக்கும் சொல்லாத வந்திராயா’ என்றான்.
‘பீமுக்கு என்ன வாங்கியாற?’ என்று கேட்டான்.
‘நாய்க்கு நரகலுத்தான் புடிக்கும். வாங்கியாரட்டுமா?’ என்று சிரித்தார் பாட்டி.
‘போயா நீ’ என்று கோபித்துக் கொண்டான்.
‘செரி கண்ணு. காசு குடுத்தர்றன். வேணுங்கறத நீயே வாங்கிக்க’ என்று பாட்டி சொன்னதும்தான் சமாதானமானான்.
‘பீத் திங்கற நாயக் கொண்டோயி நடுவூட்ல வெச்சதுமில்லாத அதுக்குப் பொறந்த நாளு கேக்குதா? கைல காசு கொழுத்துப் போச்சு. அதான் ஆடறாங்க’ என்று அம்மாயிடம் அப்புச்சி சொன்னார்.
‘என்னமோ பண்றாங்க, உடுங்க. கெழவி சொல்லுத்தான் கின்னாரம் ஏறப் போவுதா?’ என்றார் அம்மாயி.
‘அது செரி. நாய்க்குப் பொறந்த நாளு பரிசு என்ன வாங்கிக்கிட்டுப் போற?’
ஏளனமாகக் கேட்டார்.
‘எதுனா வாங்கிக் குடுன்னு கேக்கறான் பேரன். என்னத்த வாங்கிக் குடுக்கறது. காசக் குடுத்திரலாம்’ என்றார் அம்மாயி.
‘ஏன், ஒரு பவுனு வாங்கிக்கிட்டுப் போயி வையேன்.’
அவர் கேலிக்குப் பதிலடியாக, ‘நாய்க்குக் கலியாணம் பண்ணறப்ப வெச்சரலாம்’ என்றார் அம்மாயி.
தன் அம்மாவிடம் சம்பூரணம் சொன்னாள்.
‘அட எப்பவும் ஆக்கற கறிதானம்மா அன்னைக்கும் ஆக்கப் போறம். எதோ பிள்ளைங்க ஆசப்படறாங்க. அப்படியே ஒரு கேக்கு வெட்டீரலாம். வந்துட்டுத்தான் போங்களேன்.’
அன்றைக்கு அம்மாயி வந்தார். பாட்டியும் வந்தார். அப்புச்சி வரவில்லை. மாடுகன்றுகளைப் பார்க்க ஆள் வேண்டும் என்று சொல்லிவிட்டார். விடிகாலையிலேயே போய்க் கறி எடுத்து வந்திருந்தான் மகேந்திரன். காலை உணவை ஒப்பேற்றிவிட்டு மதிய உணவுக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். விடுமுறை நாள் அவனுக்குத் தோட்டப் பராமரிப்பு நாள். சமையலறையிலும் அதை ஒட்டிய உணவறையிலும் உட்கார்ந்து ஆளுக்கொரு வேலை செய்து கொண்டிருந்தனர். அம்மாயி வெங்காயம் உரித்தார். பாட்டி பூண்டு உரித்துக் கொண்டிருந்தார். சம்பூரணம் கொத்தமல்லி வறுத்துக் கொண்டிருந்தாள். சமையலறை அலமாரியில் சாய்ந்திருந்தாள் மலர். பின்கதவுக்கும் அலமாரிக்குமான இடைவெளியில் அம்மி கிடந்தது. அதன் மீது நின்றுகொண்டு கீச்சுக்குரலில் கத்திய சுட்கியை, ‘வா’ என்று தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.
பீமை குளிக்க வைத்து உடல் காய்ந்த பிறகு புதுக் கழுத்துப்பட்டை போட்டு உள்ளே கூட்டி வந்தான் குமார்.
‘பர்த்டே பேபி தயாராயிட்டான்’ என்று சிரித்தாள் மலர்.
‘ஒரு டிரஸும் எடுத்திருக்கலாமோ’ என்றாள் சம்பூரணம்.
‘தைக்கறதுக்கு ஆளில்லையே’ என்றான் குமார். அவனுக்கு அந்த எண்ணம் இருந்திருக்கும் போல. பல திட்டம் போட்டு வைத்திருந்தான். சமையல் முடிந்ததும் கேக் வெட்டுதல். எலும்பு மட்டும் இல்லாமல் பீமுக்கு நல்ல கறியும் கலந்த சோறு. மாலையில் அவனை வெளியில் அழைத்துப் போய் விளையாட விடுதல். குமார் தன் நண்பர்கள் இருவரையும் அழைத்திருந்தான்.
‘நம்ம காலத்துல நாயின்னா வாசப்படி ஏற உடமாட்டம். இப்பப் பாரு, நம்மளோடவே கட்டல்ல ஏறிப் படுத்துக்குது’ என்றார் பாட்டி.
‘அப்பத்த காலமெல்லாம் ஓடிப் போயிருச்சு. நாயும் மனுசரும் ஒன்னாத் திங்கற காலமாயிருச்சு’ என்று சொல்லிச் சிரித்தார் அம்மாயி.
அவர்கள் பேச்சு புரிந்தோ என்னவோ பீம் அறைக்குள் ஓடினான். அது சம்பூரணத்திற்கும் மலருக்குமான அறை.
‘உள்ள போயி என்ன பண்ணப் போறானோ? வெளிய வரச் சொல்லுடா’ என்றாள் மலர்.
‘என்ன பண்ணீருவான்? சும்மா ஒரு சுத்துச் சுத்தீட்டு வந்திருவான்’ என்றான் அவன்.
‘உன் ரூமுக்குள்ள வேண்ணாக் கொண்டோயி உட்டுக்க’ என்றாள் மலர்.
அவள் குரல் கொஞ்சம் தடித்து வந்தது. அது அவனையும் உசுப்பியது.
‘எல்லாமே என் ரூமுதான்’ என்று அழுத்தமாகக் கத்துவது போலச் சொன்னான்.
‘அதெப்படிடா? இப்ப வெளிய முடுக்கறயா, நான் போயி முடுக்கட்டுமா?’
பாட்டி பேச்சுக்குள் புகுந்தார்.
‘ஊடு பையனுக்குத்தான. கட்டிக் குடுத்துட்டா அப்பறம் உனக்கேது ஊடு? புருசமூடுதான் உன்னூடு’ என்றார் பாட்டி.
பீம் தானாக வெளியே வந்து சுவரையொட்டிப் படுத்துக் கொண்டான். கைகால்களைக் கழுவிய ஈரத்தைத் துடைத்தபடி மகேந்திரன் வந்து வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்தான்.
‘அப்பா… நீ சொல்லுப்பா. இந்த ரூமு எனக்கில்லையா? ஆயாவும் அவன் பக்கம் பேசுது’ என்று அழுவது போலக் கேட்டாள் மலர்.
மகேந்திரன் என்ன சொல்வது என்று தெரியாமல் சிரித்தான்.
‘என்னப்பா சிரிக்கற?’ என்று ஏமாற்றத்துடன் கேட்டாள் மலர்.
‘ஊடு எனக்குத்தானப்பா? அவள இன்னொரு ஊட்டுக்குத் தொரத்திருவமுல்ல.’
குமார் குரூரச் சிரிப்போடு அதைச் சொன்னதும் மலர் கோபம் மீறிப் பொசுபொசுவென்று மூச்சு விட்டாள்.
‘எனக்கப்பறந்தான்டா நீ பொறந்தா? எச்சப்பாலு குடிச்ச நாயி’ என்று கத்தினாள் அவள்.
‘யாருடி எச்ச? நீதாண்டி எச்ச’ என்று பதிலுக்குக் கத்தினான் அவன்.
இருவரும் அடித்துக் கொள்வார்களோ என்று சம்பூரணம் பயந்தாள். பேச்சை திசை மாற்ற முயன்றாள். பாட்டி உரித்து வைத்திருந்த பூண்டுப் பற்களில் கொஞ்சம் அள்ளிக்கொண்டே, ‘வேல செய்யறதுக்கு ஆளக் காணாம். சண்ட போடறதுக்கு உட்ரு’ என்றாள்.
பூண்டை மலரிடம் நீட்டி, ‘இத அந்த அம்மில வெச்சு நசுக்கிக் குடு. ரசத்துக்கு வேணும்’ என்றாள்.
‘எங்கிட்டயே வேல சொல்லு. அந்த நாய்க்காரனக் கொஞ்சு’ என்று சொல்லியபடி சுட்கியைக் கீழே இறக்கி விட்டு எழுந்தாள்.
‘ஆருடி நாய்க்காரன்?’ என்று அவளை நோக்கி வருவது போல இரண்டு அடி எடுத்து வைத்தான் குமார்.
சுவரோரம் படுத்திருந்த பீம் சட்டென்று எழுந்து ஒரே பாய்ச்சலில் சுட்கியின் கழுத்தைக் கவ்விக் குதறி எறிந்தான். வீச்சென்று ஒற்றைக் குரலோடு சுவரில் மோதிய சுட்கி கீழே விழுந்தாள். சுட்கியின் உடலை நோக்கி மறுபடியும் பீம் பாய்ந்தான். அதிர்ந்து பார்த்த மலர் தன்னருகில் இருந்த அம்மிக்குழவியைத் தூக்கி ‘டேய்ய்’ என்று பீம் மேல் வீசினாள். பீமின் தலையைச் சரியாகத் தாக்கிய குழவி அவன் அருகிலேயே விழுந்தது.