
1.சிலர் சிரிப்பார்… சிலர் அழுவார்….
அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. இருவரும் கடைசியாக, ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் தேதி குறிப்பிடப்பட்டது.
அவள் அவனுக்கு கொடுத்த பொருட்களைத் தேடி எடுத்து கிழிக்க வேண்டியதை கிழித்தும், எரிக்க வேண்டியதை எரித்தும் குளிர் காய்ந்தான் அவன்.
அவன் அவளுக்கு கொடுத்த பொருட்களைத் தேடி எடுத்து எல்லாவற்றையும் ஒன்றின் பின் ஒன்றாக கண்ணீருடன் தடவிப்பார்க்கிறாள்.
முதன் முதலாய் அவள் வாங்கி கொடுத்த கைகடிகாரத்தை எடுத்து சுத்தியலாய் ஒரே போடு போட்டான். அது சுக்குநூறாகச் சிதறியது. இப்படித்தான் தன் வாழ்க்கையையும் சிதறிவிட்டதாக கேலியாக சிரித்தவன், புதிதாய் ஒரு கைகடிகாரத்தை தன் கையில் கட்டினான். இனி எல்லாமே அவனுக்கு புதிதுதான்.
முதன் முதலாய் அவன் வாங்கிக் கொடுத்த கரடிபொம்மையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள். அதனைக் கொடுக்கும் போது அவனது முகத்தில் தெரிந்த காதலை மீண்டும் மீண்டும் நினைக்கலானாள். அவனாகவே அந்தப் பொம்மையைப் பாவித்து இறுக்கமாய்க் கட்டியணைத்துகொண்டாள்.
தனது நண்பர்களை, ஒவ்வொருவராய் அழைத்து இனி தான் சுதந்திர பறவை எனவும், வாழ்க்கை மீதான நம்பிக்கைகளையும் புத்துணர்ச்சி பொங்க பேசினான்.
தனது நண்பர்களை, ஒவ்வொருவராய் அழைத்து இனி தன்னால் வெளியில் முகம் காட்டவே முடியாது எனவும், இனிமேல் நான்கு சுவர்தான் தன் வாழ்க்கை எனவும் விம்மிவிம்மி பேசினாள்.
சமூக ஊடகங்களில், தனது ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணங்களையும் புதுப்புது புகைப்படங்களாக எடுத்து அதற்கேற்ற உற்சாகமான பாடல்களையும் இணைத்துப் பதிவிட்டான்.
சமூக ஊடகங்களில் தனது ஒவ்வொரு புகைப்படத்தையும் பகிர்ந்து அதன் பின்னணியின் சோகப்பாடல்களை இணைத்து பதிவிட்டாள்.
இன்றுதான் அந்த நாள். இன்றோடு இருவருக்கும் எல்லாம் முடிந்தது. அப்படித்தான் நீதிமன்றத்தில் சொன்னார்கள். இருவரும் கடைசியாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அடுத்த நொடியே இருவரும் வேறெங்கோ பார்க்கலானார்கள். அதுதான் அவர்கள் இவ்வளவுநாளுக்கும் வைத்திருந்த இறுதி மரியாதை.
இருவரும் வெளியேறினார்கள். நல்ல வெயில். இருவரும் அவரவர் வாகனத்தில் ஏறி அமர்ந்தார்கள். வாகனத்தின் குளிர்சாதனத்தைத் திறந்து ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டார்கள்.
அடுத்த என்ன என்கிற கேள்வி அவனுக்கு கை நடுக்கத்தைக் கொடுத்தது. அதே கேள்வி அவளுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.
அவளால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அவனால் அழுகையை அடக்கமுடியவில்லை.
2. வழிப்பறி
“மனம் திருந்துங்கள்… மனம் திருந்துங்கள்….!!”
“நண்பர்களே மனம் திருந்துங்கள்….”
“கடைசி காலம் வந்துவிட்டது….”
“உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் வேண்டாமா..?”
“கடைசி காலம் வந்துவிட்டது….”
“நண்பர்களே மனம் திருந்துங்கள்….”
“மனம் திருந்துங்கள்… மனம் திருந்துங்கள்….!!”
“நண்பர்களே மனம் திருந்துங்கள்.. கடைசி காலம் வந்துவிட்டது…. உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் வேண்டாமா..?”
– ஏங்க..? உங்களுக்கு அவசரம்னா நீங்க முதல்ல போங்களேன். நாங்க அப்பறமா வரோம். ஏன் எங்களைத் தொல்லை பண்றீங்க…?