இணைய இதழ்இணைய இதழ் 102சிறுகதைகள்

அடுத்தது யாரோ – ஜெயா சிங்காரவேலு

சிறுகதை | வாசகசாலை

கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாகவே எங்கள் குடும்பத்தில் இரட்டைச் சாவுகளாகவே விழுகிறது. ஒருவர் இறந்து அதே வருடத்திற்குள் இன்னொருவரையும் கூட்டிக் கொண்டு சென்று விடுகிறார்.

பெரிய தாத்தாவும் மாமாவும், அம்மாச்சியும், இன்னொரு மாமாவும், நடு தாத்தாவும் அத்தையும். இப்படி வரிசைக்கட்டி எமன் தன் பணியைச் செவ்வென செய்கிறார். ஏதோ தெய்வக் குத்தமோ, இல்லை யாரேனும் விட்ட சாபமோ தெரியவில்லை.

யாராவது இறந்தாலே இளவட்டங்கள் நாங்கள் அடுத்த விக்கெட் யாராக இருக்கக் கூடும் என்று எங்களுக்குள் போட்டி வைத்துக் கொள்கிறோம்.. யாருக்கும் தெரியாமல்தான். காதோரம் நரைத்த சொந்தங்களுக்குக் கூடுதல் பயம் வந்து விடுகிறது. வேறு யாராவது இறந்தாலுமே அவர் ஒன்னுவிட்ட சித்தப்பாவோட மாமியார் என்ற ரேஞ்சுக்கு சொந்தமாக்கி விடுகிறார்கள். விட்டால் இந்திரா காந்திக்கும், எங்கள் அத்தைக்கும் சொந்தம்; இருவர் பேரிலும் இந்திரா இருக்கிறதே என்றும் சொல்வார்கள்.

இதை எப்படியாவது பொய்யென்று நிரூபிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். நான் யாரென்று சொல்லவே இல்லையே. நான்தான் வசந்தன். படித்து முடித்து விட்டு, சென்னையில் வேலையில் இருக்கிறேன். இப்போது ஒரு சோக நிகழ்வுக்கு வந்திருக்கிறேன். ஆம்; எழவுதான் விழுந்து விட்டது. முறைக்கு மாமன் மகள். இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம்தான். அதனால் எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் சுற்றுவோம். ஒரே வகுப்புதான் படித்தோம். பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் எவ்வளவு எடுத்தோம் என்று மற்றவர்கள் போட்டி போட்டார்கள். விடுமுறைக்குத் திருவெறும்பூர் வந்துவிடுவேன். இரண்டு மாதமும் ஒரே ஆட்டம்தான். மலைக்கோயில் தினமும் போவோம். அந்த சன்னதி தெருவில்தான் எங்கள் தாத்தா வீடு. அவளுக்கு ஒரு வயது ஆன போது அவளது அப்பா, என்னோட மாமாவுக்குப் பக்கவாதம் வந்து ஒரு கையும், காலும் செயல்படவில்லை. படிப்பு முடிந்தவுடன் அவளுக்குக் கல்யாணம் நடந்தது. அவளுக்கு ஒரு பெண் குழந்தை. இப்போது இரண்டாவது படிக்கிறாள். அப்பாவுக்கு முடியவில்லை என்ற காரணத்தால் சிறு வயதிலேயே மிகுந்த பொறுப்புடன் செயல்படுவாள். அவள் வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கவும், பேங்க் செல்லவும் பழகிக் கொண்டாள். கைவினைப் பொருட்கள் செய்வதில் வல்லவள். உடம்பு முடியாத அப்பாவினால் எங்கேயும் வெளியே சென்றதில்லை. தானாக காரியங்கள் செய்து பழகி முகத்தில் ஒரு கடுமை வந்து விட்டது. இயல்பான வயதுக்குரிய சில்மிஷங்கள் எதுவும் அவளிடம் இல்லை. உண்மையில் அவள் ஒரு சபிக்கப்பட்ட சிறு வயது குழந்தையாகவே இப்போது தோன்றுகிறாள். கல்யாணத்திற்குப் பிறகு அவளைத் தாங்கும் ஒருவர் வருகிறார். அவளை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார். அவள் முகம் முழுமையாக மாறி விடுகிறது. இப்போதாவது அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தது என்று எனக்கு சந்தோசமாக இருந்தது. ஆனால், அது நிலைக்கவில்லை. அவள் கணவருக்குக் கல்லீரல் கேன்சர். அதுவும் முற்றிய நிலையில். ஒரே மாதத்தில் ஆளை அடித்து விட்டது. இன்று அவர் மறைந்து விட்டார். கையோடு அவளின் சந்தோஷத்தையும் பறித்துக் கொண்டு சென்று விட்டார். அவள் கட்டிய குருவிக்கூடு கலைந்து விட்டது. என்னவென்று ஆறுதல் சொல்வது? நெஞ்சே வலிக்கிறது. ஏதோ புலம்புகிறேன். ஆள் உயர மாலையை அவருக்கு அணிவித்து விட்டு அவளின் கண்களை நேரில் சந்திக்க திராணியில்லாமல் வெளியே ஓடி வந்து விட்டேன்.

சாவு வீட்டிலும் எதைப் பேசக் கூடாதோ அதைப் பேச வேண்டுமென்றே சில ஜென்மங்கள் தன் கொடு நாக்குகளை மடக்கி, நீட்டிக் கொண்டிருக்கும். சில மரணங்களில் கேலி இருக்கும், வருத்தம் இருக்கும். இந்த மரணத்தில் முழுக்க, முழுக்க வலியே இருந்தது.

இதற்கு அடுத்து யாருமே மரணிக்க கூடாது என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. ஏதேதோ எண்ண ஓட்டங்களில் மயக்கம் போல் வந்துவிட கீழே விழுந்து விட்டேன். ஓடி வந்து என் கரம் பற்றி முகத்தில் தண்ணீர் தெளித்தாள் அவள்.

 “வசந்தா கண்ணத் தொற”

மெல்ல விழித்துப் பார்த்தேன்.

“உனக்கு ஏதாவது ஒன்னுன்னாலும் என் புருஷனைத்தான் சொல்லுவாங்க” என்றாள்.

“எனக்கு ஒண்ணுமில்ல. நீ போ” என்று சொல்லிவிட்டு காரில் வந்து ஏறி விட்டேன்.

யார் நிஜமாக அழுகிறார்கள், யார் எப்படியெல்லாம் அழுகலாம் என்று முன்னேற்பாட்டுடன் இருக்கிறார்கள். இவர்கள் சாப்பிட்டு, நல்லா டீ, வடை எல்லாத்தையும் மொக்கி விட்டு சும்மா உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று தரம் பிரித்துக் கொண்ட என்னை நினைத்து சிரிப்பும் வந்து தொலைத்தது. முகத்தை மூடி சிரித்துக் கொண்டேன். அடடா, பரவாயில்லை நானும் நடிக்கப் பழகிக் கொண்டேன்.

அடுத்து யாரென்று அனிச்சை செயல் போல் கணக்கிட்ட என் பாழும் புத்தியை எண்ணி நொந்து கொண்டேன். ‘சேச்சே, இந்த மாதிரி நினைக்கக் கூடாது’ என்று மானசீகமாக கொட்டிக் கொண்டேன்.

கொஞ்ச நாள் யார் சாவுக்கும் போகாமல் இருக்கணும். இந்தப் பைத்தியம் எல்லாம் தெளியும்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை… சரியா அடுத்த நாற்பத்து எட்டு மணிநேரத்தில் ஒரு எழவு போனின் மூலமாக வந்தது. மனைவியின் பாட்டி இறந்து விட்டதாக. ‘ஓ! இதுவும் இரட்டைச் சாவா?’ என்ற குரங்கின் குரலை நசுக்கி விட்டு,” நீ மட்டும் போயிட்டு வந்துடு. எனக்கு வேலையிருக்கு” நழுவினேன்.

“அதானே எங்க வீட்டு சொந்தம்ன்னு சொன்னவுடனே ஐயாவுக்கு கலெக்டர் ஆர்டர் போட்டுடுவார்.” வேறு யார்? நான் தாலி கட்டிய கண்மணியின் குரலேதான்.

எங்களுடைய கிண்டல், கேலி, குசும்பு இதெல்லாம் அவளிடம் காட்டுவது இல்லை. அப்புறம் சண்டை, சச்சரவு, கோபம், வன்முறை எல்லாமே வரைமுறை இல்லாமல் வரும். யார் தாங்குவது?

நெருங்கிய உறவுகளின் ஏக்கமும், பொறாமையும், அகந்தையும், அதிகாரமும், உரிமையுணர்வும், உடமையுணர்வும் நெருக்கியதில் மூச்சு முட்டுவது இயல்பானது தானே!

***

அவள் ஊருக்குச் சென்று விட்டாள். நண்பனைப் பார்க்க வந்திருந்தேன். ஒரே போர் அடிக்கிறது. யாராவது பிரபலம் இறந்தால் டிவியில் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம். என்ன.. நீ இவ்வளவு கேவலமானவனா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. உண்மையைச் சொல்லுங்கள்.. நீங்கள் யாரும் தொடர்ந்து ஒளிப்பரப்பப்படும் சாவு செய்திகளை பார்ப்பது இல்லையென்று. நான் உண்மையை வெளியில் சொல்வதால் எனக்குக் கெட்ட பெயர். யார் எப்படி அழுகிறார்கள்? என்ன டிரஸ் போட்டு இருக்கிறார்கள், இறந்தவரின் வீட்டு வேலை செய்பவர் முதல், துணி சலவை செய்பவர் வரை அத்தனைப் பேரையும் பேட்டி எடுத்து போடுகிறார்களே? நீங்கள் பார்க்காமல்தானா அத்தனையும் செய்கிறார்கள். அவரை குழியில் தள்ளி மூடும் வரையும், பின் அவரின் சமாதியைப் பார்வையிட வருபவர்களையும் தகுந்த பாடலோடு ஒளிப்பரப்பு செய்கிறார்களே!

“வசந்தா, என்னடா பகலிலே கண்ணை திறந்துகிட்டு கனவா?”

“அது ஒண்ணுமில்லடா கண்ணா. அந்த நடிகர் இறந்தாரே அவரைப் பற்றி யோசித்தேன்”

“ஆமாண்டா, நல்ல மனுஷன். நல்லது செய்யிறவங்களுக்கு நல்லதே நடக்கும் அப்படின்னு சொல்றது எல்லாம் சும்மாதான் போல. அவர் எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கிறார். ஆனாலும் அவர் போயிட்டார்”

“இங்க யாரு தான் சாகாம இருக்காங்க. கடவுள் கொடுத்த உயிர் கடைசியில் அவரிடமேதான் போகும்?”

“என்ன தத்துவம் எல்லாம் சொல்ற?”

“எல்லாம் தானா வருது”

***

இப்போதெல்லாம் வீட்டுக்குச் செல்லவே பிடிக்கவில்லை. வீட்டில் பார்த்து வைத்த திருமணம் என்னோடது. அனிதாவும் நல்லவள், கொஞ்சம் அழகானவள் கூட. இருந்தாலும் என் ரசனைக்கு அப்பாற்பட்ட குணம் அவளுடையது. எனக்கு விஜய் பிடிக்குமென்றால் அவளுக்கு அஜீத். ஞாயிறு என்றால் அம்மா இட்லியுடன் கறிக்குழம்பு வைத்து விடுவார். இங்கு எப்போதும் சிக்கன்தான். அவளுக்கு கறி பிடிக்காது. சரி, வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்ற நம் தேசத்தின் பாரம்பரியத்தின் படி இருப்போம் என்றால் என் முன்கோபமும், அவள் பின்கோபமும் முட்டிக்கொண்டு விடுகிறது. எங்களிடம் வேகமும்,மோகமும் அமோகமாக இருக்கிறது. இங்கே கொஞ்சும் வெட்கப்பட்டுக் கொள்கிறேன். மானங்கெட்ட மனசு.

‘பாட்டி செத்துப் போனதுக்கு ஒரு வாரம் டேரா போட்டுட்டு அம்மா வீட்டிலேயே இருக்கிறா. எனக்குக் கூட அம்மா வீட்டுக்குப் போகணும் போல இருக்கு. கல்யாணம் ஆனவுடன் விட்டது தொல்லையின்னு என்னைய இவ கூட தனிக்குடித்தனம் வச்சிட்டாங்க. என்னைய அவ கேள்வி கேட்க, அவள நான் திருத்த, மாற்றியும் சொல்லிக்கலாம். ரெண்டு பேரும் வினாத்தாள் போல் இருக்கிறோம். இருவரும் விடை எழுதி மதிப்பெண்ணுக்காக அதாங்க குழந்தைக்காகக் காத்திருக்கிறோம்.’

அத்தை மகளிடம் பேசுவோம்.. பாவம் என்ன செய்கிறாளோ? மூன்று முறை முயன்றும் போனை எடுக்கவே இல்லை. அவளுக்கு என்ன கஷ்டமோ…பத்து நிமிடம் கழித்து அவளே பேசினாள்.

“வசந்தா தப்பா எடுத்துக்காத. அவர் இருக்கும்போது போன் பேசினால் யாரும் கேட்க மாட்டாங்க. இப்ப போன் வந்தவுடனே யாரு, என்னன்னு கேள்வி கேக்குறாங்க. வெளியில் போக முடியல. எந்தத் தப்பும் செய்யாமலேயே குற்றவாளி கூண்டில் நிக்கிறேன்”

“யாரு உங்க மாமியாரா?”

“என்னோட சின்ன கொழுந்தன், பத்தாவது படிக்கிறான் அவன் முதக்கொண்டு. நான் திரும்ப வேலைக்கு வேற போகனும். இருக்கிற வரை மகாராணி போல பார்த்துக்கிட்டார். பதினைந்து நாளுக்குள் எங்க வாழ்க்கை இப்படி திசை மாறிய பறவையா போகும்னு நினைக்கவே இல்ல”

“கவலப்படாத, எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. பணம் எதுவும் அவசரமா தேவைப்படுதா? நான் அனுப்பி வைக்கட்டுமா?”

“பணம் வேணாம் வசந்தா. திரும்ப நம்ம எந்தக் கவலையும் இல்லாம மலைக்கோயிலை சுத்தி ஓடுவோமே அது நினைவுக்கு வருது. இப்படி ஒரு ஜென்மம் எடுக்காம இருந்திருக்கலாம். முதல் பாதி கஷ்டப்பட்டா பிற்பாதி நல்லா இருப்போம்னு சொல்வாங்க, எனக்கு எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கு. நம்ம வீட்டில் ரெட்டைச் சாவு வரும்னு சொல்வாங்க இல்ல, அதுபோல் இவர் என்னையும் கூட்டிக்கிட்டு போனா தேவல”

முதல் முறையாக மனசுள் பயம் வந்தது. “சும்மா லூசு போல பேசுறது நிப்பாட்டு. அதெல்லாம் சும்மா. உன் பொண்ணை யாரு பார்த்துக்கிறது? இனி நீதான் அவளுக்கு அம்மா, அப்பா எல்லாம். கொஞ்ச நாள் வேணா அம்மா வீட்டுக்குப் போயிட்டு வா. உன்னோட புலம்பலை கேட்க ஆள் இல்லைன்னு நினைசுக்காத. என்னோட காது எப்பவும் இருக்கு”

“நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற மாதிரி ஆயிப் போச்சு பாரு”

“இப்ப சிரிச்சிட்ட பாரு.. அது போதும். எதா இருந்தாலும் கூப்பிடு”

மனம் வெள்ளைக் காகிதமாய் இருக்கையில் ஒருவர் மனதில் ஒருவர் ஓவியமாய் பால்ய கால விளையாட்டில் மூழ்கினோம்.

லேசா நெஞ்சை அடைக்கிற உணர்வு. ஆஹா.. எனக்கும் அழைப்பு வந்து விட்டதா? இவ்வளவு சின்ன வயசிலயா? அனிதா என்ன பண்ணுவா? அத்தை மக புருஷன் என்னைத்தான் கூப்பிடுறான் போல…

-jayasingaramjs@gmail.com

ஆசிரியர் குறிப்பு:

பெயர், ஜெயா சிங்காரவேலு. கரூரில் வசித்து வருகிறார். சிறப்புக் கல்வி படித்து கணிதத்தில் M.phil பட்டம் வாங்கியிருக்கிறார். சிறார் கதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button