சூரிய கிரகணம்
வேலை நேரம் நெருங்கிவிட்டதென
அதிகாலை 5 மணிக்கு
உறங்கிக் கொண்டிருந்த பகலை
எழுப்பியது இரவு!
கண்விழித்த பகல்
சந்திரனின் காதுகளில் சொன்னது,
“கொஞ்ச நேரம்
சூரியனை மறைத்து வையேன்
சோம்பல் முறித்துக்கொள்கிறேன்”
*
மதுரையே மன்னித்துவிடு!
அவள்
எதிர்பார்த்த பாண்டிய ராஜ்ஜியம்
அங்கு இல்லை!
பார்த்த எல்லாமும்
மாறிப் போயிருந்தது!
சத்திரத்தை தேடியவளுக்கு
உணவகம் கை காட்டப்பட்டது!
தண்ணீர் கேட்டவளுக்கு
நெகிழிக் குடுவை கைமாறி
பணம் கேட்கப்பட்டது!
வைகை ஆற்றுப் பாலத்தில்
நடக்க ஆரம்பித்தாள் அவள்!
தூங்காத இரு விழிகளிலும்
நிம்மதியை வாங்கப் போகும் சந்தோஷம் நிரம்பி வழிந்தது!
அப்போது போன்ற
கரைபுரண்டோடிய வெள்ளம்
இப்போது இல்லை!
ஆங்காங்கே சிற்றோடைகள்
ஒளிந்து தெரிந்து
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன!
பசுவும் கன்றுகளும்
ஓடித் திருந்த கரையோரங்களில்
கான்கிரீட் கட்டிடங்கள்
தூங்கிக் கொண்டிருந்தன!
கரை வழியே இறங்கி நடந்து
ஆற்றுக்குள் போனாள்!
நீண்ட காலமாக
விரிதலையாயிருந்த அடர் முடியை
இழுத்துக் கட்டினாள்!
‘மதுரையே என்னை மன்னித்துவிடு’ என தலை மேல் கைகூப்பி
நீரில் மூழ்கி எழுந்தாள்!
முந்தானையை விலக்கிய காற்றுக்கு
அப்போதுதான் தெரிந்தது
அவளுக்கு ஒரு முலைதான் என்று!
*
பாலைநில கள்ளிச்செடி
மகிழ்வுடன்
நிழல் விரித்தது!
மாலை வரை யாரும்
இளைப்பாற வரவில்லையென
முள் ஒடிந்து பால் வடித்து
அழ ஆரம்பித்தது
தாசி கொடுத்த பலகாரம்
வேண்டாமென வீசியெறிந்த
பிச்சைக்காரன் கண்டு
அவள் வடிக்கும் கண்ணீர் போல!
*
யாரோ ஒருவரின்
கனவில்
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!
இன்னொருவர் கனவில் நீங்கள்
மற்றவர் கனவில் அவர்!
இப்படியே…….
அந்த அவரின் உருவமும் நீங்கள்தான்!
நம் ஆட்டம்
தொடர்ந்துகொண்டே இருக்கும்
அவர்கள் விழித்துக்கொள்ளாத வரை!
ஏற்கனவே வாழ்ந்த வாழ்க்கையைத்தான்
மீண்டும் ஒருமுறை
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்!
அதில்
இறந்து போனவர்களும் அடக்கம்
நிகழ்கால மனிதர்களும் இருக்கிறார்கள்!
*
வடை சுட்டு முடித்த பாட்டி
காகம் பறந்து வராததால்
தானே பாட ஆரம்பித்தாள்!
வடை கிடைக்குமென
அருகில் வந்த குள்ளநரிக்குத்
தெரிந்திருக்க நியாயம் இல்லை
பாட்டி வளர்க்கும் சிங்கம்
இரண்டு நாள் பட்டினி என்பது!
- gsjesu@gmail.com