எழுபத்தி இரண்டு வயதான சுகுமாரி தனது புரை விழுந்த கண்களின் வழியே மகன் நடராசனை ஊடுருவிப் பார்த்தார். “என்னது..என்னது.. திரும்பவும் சொல்லு..” என்றார் பொக்கை வாய்ச் சிரிப்புடன்.
ஐம்பது வயதான அந்த நடராசன் அசடு வழிய அம்மாவைப் பார்த்து புன்னகைத்தார். “வந்து..கொஞ்ச நாளாவே உன் ஞாபகமா இருந்ததும்மா. உன்னைப் பார்க்கனும், உன் கையால ஒரு வாய் சாப்பிடனும்னு ஆசை. அதான் இப்படி சொல்லாம கொள்ளாம திடீர்ன்னு ஊருக்குக் கிளம்பி வந்துட்டேன்.”
“சந்தோசம்ப்பா.. சந்தோசம். என்னமோ இப்படி திடீர்னு தோணின உடனே கிளம்பினாத்தான் உண்டு இல்லையா. ரொம்ப திட்டம் போட்டா, வர முடியறதில்லை.. ம்..?”
ஒத்துக் கொள்வதாகத் தலையாட்டினார். “ஏம்மா, நான் இங்கே வந்து ஒரு நாலு வருசம் இருக்குமா? கடைசியா ராமராஜ் சித்தப்பா தவறினப்போ வந்தது”
“அவன் போய்ச் சேர்ந்து ஆறு வருசம் ஆச்சு சாமி.” என்றவர் மகனை உற்று நோக்கினார். “உனக்கும் வயசாகிட்டே வருது..! அது சரி, கேட்கிறேனேன்னு தப்பா நினைச்சுடாதே.. உன்னோட பயணத் திட்டம் என்ன? இருப்பியா இல்லை போன் வந்தா அப்படியே விட்டுட்டு திடீர்ன்னு சென்னை ஓடிடுவியா? ஏன் கேட்கறேன்னா முன்னாடியே சொல்லிட்டா அதுக்குத் தகுந்த மாதிரி நான் என் மனசை தயார் பண்ணிக்குவேன். உடனே கிளம்பும் போது ரொம்பவும் வருத்தமா இருக்கும். அதான்ப்பா..” என்றார் தழுதழுத்த குரலில்.
நெருங்கி வந்து ஆதரவாக அம்மாவை அணைத்துக் கொண்டார் அவர். “இருப்பேன்ம்மா.. போன் வந்தாலும், மெயில் கூப்பிட்டடாலும் போக மாட்டேன். குறைஞ்சது அஞ்சாறு நாளாவது உன் கூட இருப்பேன்..”
அடுத்து வந்த நாட்களில் சத்தியமாகவே தனது அம்மாவுக்கு மகனாக மாறிப் போனார் நடராசன். சுகுமாரியும் சளைக்காமல் தனது மகனுக்குப் பிடித்த உணவுகளை பார்த்து பார்த்து செய்தார்.
அம்மாவுடன் பல்லாங்குழி விளையாடி வேண்டுமென்றே தோற்றுப் போனார்.. வீட்டின் சில்லறை மராமத்து வேலைகளை ஆள் வைத்து சரி செய்து தந்தார்.. இரண்டு பேரும் மாலை நேரங்களில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்கள்.. அம்மாவின் பேரில் கோவிலுக்கு மின்சார மங்கல வாத்தியம் உபயம் செய்தார்.. தான் படித்த ஆரம்பப் பள்ளிக்கு தண்ணீர்த் தொட்டி வாங்கிக் கொடுத்தார்.. ஊரின் கடைவீதி அழைத்துச் சென்று அபுபெக்கர் கடையில் புதிய சேலைகள் எடுத்துத் தந்தார்.. அப்புறம் ராமசாமி செட்டியார் நகைக் கடையில் அம்மா வெட்கப்பட வெட்கப்பட ஒரு பவுனில் சிகப்புக் கல் வைத்த மோதிரம்..!
“உனக்கு வேற இன்னும் என்னென்ன வேணும்ன்னு கேளும்மா. செஞ்சு தர்றேன்.. வாங்கித் தர்றேன்..”
“எனக்கு என்னப்பா.. நான் பழுத்த மரம். நீ, வைதேகி, பேரன் மணிகண்டன் எல்லோரும் சந்தோசமா இருந்தா அதுவே மனசு நிறைஞ்சுடும் எனக்கு..”
அம்மாவின் கை பிடித்து கண்ணீர் வடித்தார்.
ஒரு வாரம் கழிய..
நடராசன் கிளம்பும் தருணம். வீட்டின் வெளியே கார் தயாராக நின்றிருந்தது.
“சரிம்மா.. நான் கிளம்பறேன். இன்னொரு சமயம் அவசியம் வர்றேன்..” உடைமைகளை சரிபார்த்தவாறே சொன்னார் நடராசன். கண்கள் கலங்கியிருந்தன. அம்மாவை அணைத்துக் கொண்டார். “இப்பவாவது என் கூட இரும்மா. வர்றியா..?”
“இல்லை சாமி. எனக்கு இந்த ஊருதான் சொர்க்கம். நீ உன்னால முடியும் போது வந்து இந்தக் கிழவியை ஒரு எட்டு பார்த்துக்கோ. அது போதும் ராசா.”
மகனை சந்தோசமாக வழியனுப்பி வைத்தார்.
கார் நகர்ந்தது. பெருமூச்சுடன் தளர்ந்த உடலை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைய முயன்றவரை பக்கத்து வீட்டு ரங்கம்மாள் கிழவி வம்புக்கு இழுத்தது.
“என்ன சுக்கு.. ஒரு வாரமா ஆளைக் கையிலயே பிடிக்க முடியலை. பயங்கர திரக்கு.!”
“மகன் வந்திருந்தான்ல ரங்கு. அதான் அவன் கூடவே இருந்தேன். பாவம் அவன். ப்ச்..”
“ஏன் அவனுக்கென்ன..?” புரியாமல் பார்த்தார் ரங்கம்மாள்.
“அவனுக்கு ஒண்ணுமில்லை. ஆனா.. பேரனுக்குத்தான்..” நிறுத்திவிட்டு புன்னகைத்தார். “பேரன் வேலை பார்த்திட்டிருந்த கம்பெனில அவனுக்கு வேலை மாத்தம் பண்ணிட்டாங்க. வெளிநாட்டுக்குப் போறான்.. லண்டனோ, அமெரிக்காவோ..”
“அடடே நல்ல விசயம்தானே..”
“ம். ஆனா, ஆசைஆசையா செல்லமா வளர்த்த ஒத்தை மகன்.! பிரிஞ்சு அத்தனை தூரம் போறானே.. இனி எப்போ அவனைப் பார்க்கப் போறோமோன்ற கவலை என் மகனுக்கு! அப்போதான் அவன் மனசுல ஒரு யோசனை.. பல வருசங்களுக்கு முந்தி நாமும் இதே மாதிரித்தானே நம்ம அம்மா, அப்பாவை விட்டுப் பிரிஞ்சு இங்கே வந்தோம்.. அப்படி நம்மளைப் பிரியற போது அவங்களுக்கும் இதே மாதிரிதானே வலிச்சிருக்கும். சுயநலமா அவங்களுக்கு பிரிவுத் துயரைத் தந்துட்டோமேன்னு மனசளவுல உணர்ந்திருக்கான். அந்த குற்ற உணர்ச்சியைத் தாங்க முடியாமத்தான் ஏக்கத்துல என்னைப் பார்க்க ஓடி வந்திருக்கான் என் மகன். பாவம்..”
“அட.. அப்படியா சங்கதி!”
“ஆமா அன்னைக்கே பேரன் போன் போட்டு எல்லாத்தையும் என்கிட்டே சொல்லிட்டான். கவலைப்படாதே பாட்டி, நானும் அப்பாவைப் போல மாறிட மாட்டேன்னு ஆறுதலாப் பேசினான். அவன் பேசினதை சொன்னா இவன் மனசுடைஞ்சுடுவான். அதனாலதான் மறைச்சு அவனோட உணர்வுகளுக்கு மரியாதை தந்து நடந்துக்கிட்டேன். என்ன பண்ண.. தலைவலியும், காய்ச்சலும் மட்டுமல்ல.. உறவும், பிரிவும் கூட தனக்கு வரும்போதுதான் மனுசங்களுக்கு அடுத்தவங்க மனசு புரியுது..”
யதார்த்த உண்மையை உடைத்தபடியே வீட்டுக்குள் நகர்கிறார் சுகுமாரி.