“எங்க போனா இந்த சிறுக்கி” ஆனந்தன் கடுகடுவென எரிச்சல் முகத்துடன் படுக்கையிலிருந்து எழுந்தான். லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டான். தன் வீட்டின் வாசலுக்கு வந்தான். பார்த்தவுடன் முகம் இறுகியது. மூர்க்கம் உள்ளுக்குள் குமிழ் விட ஆரம்பித்தது. திருமணத்திற்குப் பிறகு இதில் வீர்யம் கூடியே இருந்தது.
திருமணமாகி ஏழே மாதமான புத்தம் புதுக் கோதுமை நிற மனைவி வளர்மதி பெரிய காய்கறிப் பையுடன் தனக்குத்தானே சிரித்தப்படி வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தாள். இயல்பாகவே களை சொட்டும் முகம். அதில் சிரிப்பில் விரிந்த மலர்ச்சியில் கூடுதலாகக் களை சொட்டியது.
பூப்போட்ட அடர் கருப்பு நைட்டியில் அங்கங்கு வெளிப்பட்ட வெளிர் நிற உடம்பு கான்ட்ராஸ்டாகி மிளிர்ந்தாள்.
கழுத்திற்குக் கீழே அங்கங்கள் மென்மையாகக் குலுங்கியது. நெத்தி வகிடில் குங்குமம் அப்பப்பட்டு முடியைப் பின்பக்கம் கோடாலி முடிச்சில் கொத்தாக முடிந்திருந்தாள். இரண்டொரு முடிக்கற்றைகள் நெத்தியிலிருந்துத் தொங்கி இரண்டுக் கன்னத்து ஓரங்களையும் தொட்டுக் கொண்டு முகத்தை இன்னும் அழகுபடுத்தியது.
கழுத்தில் புதுத் தாலி மற்ற சில தங்க செயின்களோடு சேர்ந்து மின்னியது. மணிக்கட்டிலும் இரண்டு டிசைன் தங்க வளையல்கள் குலுங்கியபடி மின்னியது. எல்லாம் சேர்ந்து அழகு கூடி லட்சணம் பொங்கி வழிந்தது.
இப்படியான வளர்மதி தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாக நினைத்தான் ஆனந்தன். இதன் கூடவே போனஸாக கள்ளம் கபடம் இல்லாத மனசும் இன்றைய டிரெண்ட்டில் யாருக்கும் கிடைக்காத வரம். ஆனந்தன் மேகத்தில் மிதந்தான்.
எல்லாம் திருமணம் ஆன புதிதில்.
இந்த அழகு தனக்கே தனக்கு என்று உரிமையானவுடன் ஆனந்தனைக் கொஞ்சம் கொஞ்சமாக உறுத்த ஆரம்பிக்க மேகத்திலிருந்து பொத்தென்று விழுந்தான்.
எல்லோரும் உற்றுப் பார்க்கும் நிஜ உலகமும் அவள் உலவும் இணைய உலகமும் அவனைப் பயமுறுத்தியது. அவளிடம் இயல்பாக இருக்க முடியவில்லை.
முதல் கட்டமாகப் பெரிய பொய் சொல்லி அவள் வேலைக்குச் செல்வதை முடக்கி விட்டான். தன் சுமை பொருட்டு அக்கறைக் கொண்டு செய்கிறான் என்று அவன் மேல் வாஞ்சைக் கொண்டு மனதில் மகிழ்ச்சி பூத்தபடி வேலையை விட்டாள்.
ஆனந்தனுக்குப் பணத்திற்கு குறைச்சல் இல்லை. பணம் கொழிக்கும் அரசாங்க வேலையில் பணம் பார்ப்பவன். அதில் வந்த சொந்த வீடு. இவனின் வேலை தகிடுதத்தம் எல்லாம் வளர்மதிக்கு ஒன்றும் தெரியாது.
வளர்மதிப் பைகளைத் தூக்கிக் கொண்டு மெலிதான புன்னகையுடன் வீட்டிற்குள் படி ஏற எரிச்சலினூடே ஓடிய ஆனந்தனின் நினைவு கலைந்தது.
”என்னடி சிரிப்பு வேண்டியிருக்கு” கத்திவிட்டு வீட்டில் நுழைய விடாமல் வாசலை மறைத்தவாறு நின்று கொண்டான். ஏதும் புரியாமல் வளர்மதி வழக்கமான தன் புன்னகையுடன் முகம் சுருக்கி அவனைப் பார்த்தாள்.
”ஏண்டி காய் வாங்கறதுக்கு இவ்வளவு நேரமா? வேண்டாத வெட்டிப் பேச்சா? ஒரு மணி நேரம் ஆகுது? நைட்டி போட்டுட்டு காட்டிட்டே காய்கறி வாங்கனுமா? மேல துண்டு எங்க? இவ்வளவு நக போட்டுக்கனுமா?”
“ஏங்க என்னாச்சு? ரன்னிங் ரேஸ்ல ஓடிப் போய் திரும்பி ஓடி வந்து காய் வாங்கவா முடியும்? பார்த்துப் பொறுக்கி வாங்க வேண்டாமா? உங்களுக்கு டேஸ்டா சமையல் செஞ்சு போட வேணாம்? வந்து பாருங்க லேடீஸ் எல்லாம் பர்தா போட்டுட்டா காய் வாங்க வர்றாங்க? பாதி பேர் லூஸ் பிட்டிங் நைட்டிலதான் இருப்பாங்க. செளகரியம் முக்கியம். அப்பறம் தெரிஞ்சவங்களோட பேசாம வர முடியுமா? படி ஏறும் போதுதான் துண்ட எடுத்தேன். நழுவி நழுவி விழுது.” குழந்தைத்தனமானக் கோபத்துடன் பயந்தவாறு சொன்னாள்.
“ஏண்டி நழுவி …நழுவி ….நழுவி…..(நக்கலாக சிரித்தப்படி) விழுந்து அழக காட்றதுதானே உங்களுக்குப் பிடிக்கும்”
”சீ…சீ..சீ..என்ன பேச்சு இது? இண்டீசண்டா?”
மனதிற்குள் பொருமினாள். திருந்தவே இல்லை? வளர்மதி எரிச்சலுடன் சற்று பயத்துடன் தலையைக் குனிந்துவாறு தொடர்ந்தாள்.
”உங்க பேச்சு சரியில்ல. ஹர்ட்டிங்கா இருக்கு. மாறவே மாட்டீங்களா? நீங்கதான் பார்த்தீங்க இல்ல. ரெண்டு கைலயும் பைய பிடிச்சுட்டு வேற நடந்து வரேன். நீங்க எட்டிக் கூட பார்க்க மாட்டேன்றீங்க.
சூப்பர்வைஸ் பார்க்க மட்டும் ரெடியா இருக்கீங்க வாசல்ல. இது ரொம்ப ராங் ஆட்டிடுயூட்ங்க.”
“என்ன ஆட்டிஊட்டு? இங்கிலீஷ்ல புளுத்தற”
நக்கலாகச் சிரித்தான்.
இந்த மூர்க்கக் கணங்களில் ஆனந்தனின் அதே மூர்க்க ஓட்டத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உள்ளுக்குள் கோபம் வரும். சுபாவத்தில் மென்மையாகத்தான் எதிர் பதில் பேச வேண்டி இருக்கிறது என்பதில் மிகுந்த ஆற்றாமை உண்டு. சுபாவம் வரமா சாபமா?
இந்தக் கணங்களில் ஏண்டா வேலையை விட்டோம் என்கிற நினைப்பு மின்னலாக வந்து படுத்தி எடுக்கும். அவனை அண்டி இருக்கும் நிலை. பயமே வாழ்க்கையா?
முதுகிற்கு பின்னால் அழகுக் காட்டிவிட்டு விடுவிடுவென நடந்து உள்ளே வந்தாள்.
எரிச்சலுடன் காய்கறிப் பைகளைத் தொப்பென்று சமையலறை மேடையில் போட்டுவிட்டு பாத்ரூம் போய் கதவைச் சாத்திக்கொண்டாள். எப்போதும் அவன் தூங்கி எழுவதற்கு முன் கடைக்குப் போய்விட்டு வந்துவிடுவாள். இன்று என்றுமில்லாமல் முதல் தடவையாக சீக்கிரம் எழுந்துவிட்டான். எதிர்பாராத அனல் கொட்டலில் வேறுவிதமான டார்ச்சரில் ரணமானாள். நாளின் ஆரம்பமே
பிறாண்டி விட்டது.
வழக்கமாகக் கொஞ்சம் நேரம் கழித்து ஆனந்தன் பேய் போல கதவை இடிப்பான். வெளியே வரும் போது ’உனக்கெல்லாம் கோபம் வேற ஒரு கேடா?’ நக்கலாக சிரிப்பான். அழுத கண்களைத் துடைத்தபடி வெளியே வந்து பழைய அடிமை வளர்மதியாகி வேலைகளைத் தொடர்வாள். அன்று நாளே ஓடாமல் போகும் போது வரும் போதெல்லாம் உள்ளுக்குள் கரித்தபடி இருக்கும்.
இந்த மூன்று பெட் ரூம் கொண்ட பெரிய அழகான வேலைப்பாடு வீட்டில் ஏதாவது ஒரு ரூம் கதவைச் சாத்திக் கொண்டு தனக்குத் தானே ஆற்றாமையில் புலம்பிக்கொண்டது இதுவரை ஏழு அல்லது எட்டாவது தடவை.
இன்று பாத்ரூம். இன்று என்றும் இல்லாமல் மனது புண்பட்டு என்ன வாழ்க்கை என்று மனது கரித்தபடிக் கண்களில் நீர் வடிய தன்னை ஒரு குழந்தை போல உணர்ந்தாள். எங்கேயும் போகாமல் வீட்டுகுள்ளேயே அடைந்துக் கிடைக்க முடியுமா? தன் மீது அளவு கடந்த இரக்கம் சுரந்தது. கண்ணீர் தளும்பும் கண்களின் ஊடே எண்ணங்கள் ஓடியது.
வளர்மதிக்குத் தன் அழகில் மேல் அவனுக்கு அவ்வளவு காதல் என்று ஒவ்வொரு முறையும் தப்பாகப் புரிந்துக் கொண்டு விட்டது எவ்வளவு முட்டாள்தனம். I am stupidly innocent…!
தன் குணம்தான் இப்படி அவ்வப்போது அவனை உசுப்பேற்றுகிறது. இந்தச் சின்ன கீற்று அடி மனதில் இருந்துக் கொண்டே இருந்தது. இன்று கீற்றுப் பாறாங்கல்லாக மாறியது.
இந்தப் பாறை போகப் போக கணக்கத்தான் செய்தது. இதைத் தாங்க முடியாது இனிமேல். அவன் போன வாரம் தன் பிறந்த நாளுக்கு அணிவித்த மோதிரம் முள்ளாய் உறுத்தியது. இது அவன் பணம் இல்லை. தன் செட்டிமெண்ட் பணம். எரிச்சலுடன் கழட்டி சோப்புப் பிறையில் பொட்டென்று வைத்தாள். இவ்வளவுதான் தன் கோபத்தைக் காட்ட முடியும் என்பதை நினைத்து வெட்கப்பட்டாள். குழந்தை விசும்பவது போல தனக்குத்தானே பேசியபடி நிறைய யோசித்தாள்.
அடுத்த நாள் காலை. “லெட் அஸ் பார்ட் அஸ் பிரெண்ட்ஸ்” சற்று பயத்துடன் சொன்னாள். முதல் வார்த்தையை ஆங்கிலத்தில் ஆரம்பித்ததே பிரிவதின் தீவிரம் அவனை மூர்க்கம் ஆக்கிவிடக் கூடாது என்கிற பயத்தில்தான். அவனுடன் வாழ விரும்பவில்லை என்றும், அடுத்த நடவடிக்கைகள் லாயர் மூலமாக பேசப்படும் என்று கண்ணியமாகச் சொல்லிவிட்டு விடுவிடுவென திரும்பிப் பார்க்காமல் கிளம்பினாள். வாசலில் ஓலா டாக்ஸி தயாராக இருந்தது.
ஆனந்தன் அதிர்ந்தான். பேச்சே வரவில்லை. இது என்ன கனவா? வளர்மதியை சும்மாவேனும் வறுத்தெடுக்கும் டார்ச்சர் மூர்க்கம் எங்கே? இப்போது வெடித்துக் கொண்டு வர வேண்டிய மூர்க்கம் சுத்தமாகக் காணாமல் போய் இருந்தது. அவள் போயே விட்டாள்.
*****
இரண்டு வருடம் கழித்து ஒரு நாள் இரவு ஏழு மணி.
பெசன்ட் நகரில் உள்ள வளர்மதியின் பிளாட்டின் காலிங் பெல் அடிக்கப்பட்டது.
வளர்மதி கதவைத் திறந்தாள். வெளியே நின்றிருந்தவளைப் பார்த்து லேசாக அதிர்ந்தாள். பெண் போலீஸ். உயர் அதிகாரி தோரணை. வளர்மதியிடம் முக்கியமான விஷயங்கள் பேச வேண்டும் உள்ளே வரலாமா என்று கேட்டாள். ஐடி கார்டைக் காட்டித்தான் அனுமதி கேட்டாள்.
”எஸ், வாங்க மேடம்”
தயக்கத்துடன் உள்ளே வரவேற்று உட்காரச் சொன்னாள். லேசாக பயம் இருந்தது.
உயர் காவல் துறை பெண் அதிகாரி அபூர்வா ரமேஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள். பதிலுக்கு வளர்மதி தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“ஐ ஆம் ஹாப்பி டு ஸீ யூ வளர்மதி. மேடம் நீங்க எல்லாம் வேணாம். உன்ன விட சின்னவ. லெட் அஸ் பி பிரெண்ட்ஸ் வளர். அந்த மோட்லதான் இங்க வந்துருக்கேன். என்னோட போலீஸ் யூனிஃபார்ம மறந்துடு வளர். ஓகேவா? ஷாக்கிங் அண்ட் சர்ப்ரைஸ்ங் ஃபார் யூ இல்ல”
“எஸ் மேடம் சாரி……அபூர்வா”
இருவரும் சிரித்தார்கள்.
“ஆர் யூ வொர்க்கிங்?”
“ஒரு எம்என்சில மானேஜர் போஸ்ட்ல இருக்கேன்”
“சூப்பர்மா. சந்தோஷமாகத்தான் இருக்கேன்னு தெரியுது. வீடு அழகா வச்சுருக்க. இது வாடகை பிளாட்டா?”
”ஆமா”
”நீ மட்டும்தான் இருக்கியா?”
”ஆமா”
“எவ்வளவு விஷயம் நடந்திருக்கு வளர்மதி. ஏதாவது தெரியுமா? அந்தப் பக்கம் எட்டி கூட பார்க்கல? ரொம்ப பிசியா?”
அன்பாகச் சிரித்தபடி வளர்மதியின் கையைப் பிடித்து அபூர்வா,
”நத்திங் சீரியஸ். லக்கி நீ. இப்ப நடக்கற கேஸ்ல நீ இல்ல. ஆனா, நானும் ஒரு பொண்ணு என்கிற மனிதாபிமான அப்ரோச்சில் உன்ன மீட் பண்ண வந்துருக்கேன். என்னோட வெரி வெரி ரேர் & பெர்சனல் விஷ் இது. காரணம் யூ ஹாவ் டன் அ கிரேட் ஜாப்” பெரிதாகச் சிரித்தாள்.
“கிரேட் ஜாப்?” முகம் சற்று பிரகாசமாகி பயம் போய் சிரித்து சகஜமானாள் வளர்மதி.
“எஸ்ம்மா. இவன்….. அதான் உன்னோட எக்ஸ் ஹஸ்பெண்ட் மாட்றதுக்கு. முதல்ல விஷயங்கள சொல்லிடறேன். அப்பறம் உன்னோட ஜாப். சஸ்பென்ஸ் வச்சுதான் சொல்வேன். அப்பத்தான் கிரிஸ்பா இருக்கும்”
சிரித்துவிட்டு தன் பையிலிருந்து இரண்டு பெரிய நகைப்பெட்டிகளை புன்முறுவலுடன் எடுத்துத் திறந்துக் காட்டினாள் அபூர்வா.
பார்த்தவுடன் முகம் பிரகாசமாகி மனம் நெகிழ்ந்தாள். அவளின் கல்யாண நகைகள். மேளமும் நாதஸ்வர இசையும் மெலிதாக நினைவில் கேட்டது. முதலில் தாலியைப் பார்த்தவுடன் கண்களில் நீர் முட்டியது. இதை இன்று திரும்பிப் பார்ப்போம் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
தன் வீட்டில் தன்னுடைய திருமணத்திற்குப் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்ட நகைகள். விவாகரத்து செட்டில்மெண்ட்டில் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றி விட்டான் ஆனந்தன்.
இதுபற்றிக் கேட்டால் கோபத்தில் மிரட்டலாகக் கத்தினான். கடைசியாக என்னிடம் இல்லை என்று பொய் சொல்லிச் சாதித்தான். சரி போகட்டும் என்று விட்டுவிட்டாள்.
பட்ட டார்ச்சர் போதும் என்று அந்தப் பக்கமே தலை வைத்துக் கூட படுப்பதில்லை. அன்று வீட்டை விட்டு வெளியே வந்து விவாகரத்துப் பேப்பர்களில் கையெழுத்துப் போட்டதோடு சரி.
“உங்கிட்டயே திரும்பி வந்ததுக்கு காரணம் உன்னோட குணம்”
கண்களில் நீர் தளும்பப் பார்த்தாள்.
”இந்த மாதிரி ஃபேமிலி டார்ச்சர் விஷயம் எல்லாம் என் சர்வீஸ்ஸில் புதுசு இல்ல. ஆனா, அந்தப் பொண்ணு வாயால விவரிச்சதைக் கேட்டதும் ரொம்ப எமோஷனலா பீல் பண்ணேன். டைரக்ட் ஃப்ரம் ஹார்ட். உன்னோட கல்யாணத்துக்குப் போட்ட நகைகளும் அவள மாதிரி எனக்கு எமோஷனல் பீலிங் தந்தது. பணம் கொட்ற கேஸ். தோராயமா 35-40 லட்ச ரூபாய் வொர்த் ஜுவெல்ஸ் இன்னிய தேதிக்கு.
ஆனா, நாங்க எமோஷனல் ஆங்கிள்ல அப்ரோச் பண்ணோம். லஞ்ச ஊழல் ஒழிப்பு டிபார்ட்மெண்ட் அதிகாரிகளோட சேர்ந்து. காரணம் இன்னொரு பொண்ணும் டார்ச்சர் ஆகி இருக்கு”
“யார்ங்க அவங்க?”சஸ்பென்ஸ் தாங்க மாட்டாமல் கேட்டாள் வளர்மதி
”சொல்றேன் வளர்மதி”
”ஆனந்தன் உன்ன டைவர்ஸ் பண்ணிட்டு ரெண்டாவது கல்யாணம் பண்ண பொண்ணு பேரு கார்த்திகா. இன்னொரு கல்யாணம் பண்ணி உன்ன வெறுப்பேத்தனம்னு எக்ஸ்பிரஸ் ஸ்பீட்ல பொண்ணு தேடி இருக்கான். கிட்டத்தட்ட ஏழு மாசம் வலை வீசித் தேடி தேடிக் கெடக்கல. நொந்துப் போய் இருக்கான். உன்னோட விஷயத்துல பிராடு பண்ண மாதிரி இங்க பண்ண முடியல. முன் வந்த ரெண்டு மூணு வரன் டைவர்சுக்கு காரணம் இவனோட டார்ச்சர்னு தெரிஞ்சதும் பின் வாங்கிட்டாங்க”
”கடைசியா இந்தப் பொண்ணு முன் வந்திருக்கு. இவன விட ரெண்டு வயசு பெரிய பொண்ணு. உன்ன மாதிரி அழகா செவப்பா இருக்கும். இவன் மயங்கி விழுந்துட்டான். அந்தப் பொண்ணு லைக் பண்ணல. விடாம துரத்தி பணம் நகை ஆசைக் காட்டி கால்ல விழாத குறையா சம்மதிக்க வச்சுட்டான். அதுல அப்பாவோட மெடிகல் டிரீட்மெண்ட் மெயின்”
“அப்பாவுக்கு என்ன உடம்பு?”
“இதுவும் வேற வழியில்லாம அப்பாவுக்கு கேன்சர் சிகிச்சைய ஏத்துக்கிட்டா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கண்டிஷன் போட்டு கல்யாணம் பண்ணிருச்சு. மேல படிப்புக் கடன் வீட்டுக் கடன் 25-30 லட்சம் இருக்கும். இன்னும் வேற படிக்குது. ஆனா, சின்சியரா படிக்குது. எல்லாத்தையும் ஏத்துகிறேன்னு இவனே முன் வந்து முந்திரிக் கொட்டையா ஒத்துக்கிட்டான்”
”30 லட்ச ரூபாய் பேர் பண்ண ரெடியாகவா?” வளர்மதி அதிர்ச்சியானாள்
“என்ன வளர்மதி கெஸ் பண்ண முடியல? அதான் உன்னோட நக கைவசம் இருந்ததே அப்ப?” சிரித்தாள் அபூர்வா
“ஓ காட்… என்ன ஒரு மாஸ்டர் பிளான்? யோசிக்கல அபூர்வா. என் மைண்டலேந்து எல்லாத்தையும் எடுத்துட்டேன்”
வளர்மதி சிலிர்த்துக் கொண்டாள்
”ஆனா, பொண்ணுக்குப் பணத்தாசை இல்லை. குட் கேர்ள். அப்பாவோட மெடிகல் நெக்ஸ்ட் படிப்புதான் அதுக்குதான் பிரியாரிட்டி. ஆச்சர்யமான விஷயம் கட்டுகட்டா பணம் நகை எல்லாம் முதல்லேயே கொடுத்துட்டான். கல்யாணம் பண்ணி உன்ன வெறுப்பேத்தனம்னு வெறி. ஆனா, இந்தப் பணமே அவனுக்கு வினையா வந்துடுச்சு”
”எமனா?”அதிர்ச்சியானாள்
”இவனப் பத்தி லஞ்ச ஊழல் ஒழிப்பு டிபார்ட்மெண்ட்டிற்கு இவனால டார்ச்சரான யாரோ ஒருத்தரு ஸ்ட்ராங்கா மொட்ட கடிதாசு எழுதிப் போட்டருங்காங்க.
அடிக்கடி வரும். ஆனா, எஸ்கேப் ஆயிட்டே இருந்தான். இவனுக்கு நெட் வொர்க் பெரிசு”
“இதுவா கிரேட் ஜாப்? நான் செய்யல. இதப் பத்தி ஒன்னும் தெரியாது. எனக்கு எதுக்கு வம்பு?” பயந்து போய் அபூர்வாவைப் பார்த்தாள்.
”நீ போடலைன்னு நூத்திப்பத்து பர்செண்ட் தெரியும் வளர்மதி. ஆனா, உன்னோட ஜாப் வேற” சிரித்தாள் அபூர்வா.
‘என்ன ஜாப் இது? சஸ்பென்ஸ் எப்போது அவிழும்?’ பதிலுக்கு வளரும் அசட்டுத்தனமாகச் சிரித்தாள்.
”அடுத்த நாள் விஜிலென்ஸ் டிபார்ட்மெண்ட் ரெய்டு. இவன் உஷார் பார்ட்டி ஆச்சே.. வீட்ல ஒன்னும் கிடைக்கல. கல்யாணம் பண்ண புது பொண்டாட்டிய மேல படிக்க வைக்க வேற தனி வீட்ல தங்க வச்சு, பணம் நகையெல்லாம் ஒளிச்சு வச்சுருக்கான்”
“ஃபிக்ஷன் மாதிரி இருக்கு. எப்படில்லாம் இருக்காங்க.. டிஸ்கஸ்டிங் ” வளர்மதி பொருமினாள்.
இடையில் டீ பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு நெருக்கமாகி உரையாடல் தொடர்ந்தது.
பேச்சில் ‘நீங்க’ ‘மேடம்’ அங்கங்கே இயல்பாக வந்து சிரித்தபடி திருத்திக் கொண்டாள்.
“என்ன ஜாப்?” அடங்காத ஆர்வத்துடன் ஆரம்பித்தாள் வளர்மதி
”வெயிட் வளர். இன்னும் கொஞ்சம் இருக்கு”
”……………………….”
”இவ்வளவு விஷயம் நடந்துருக்குன்னு உனக்குத் தெரியாதுங்கிறது எங்களுக்கு கிரேட் சர்பிரைஸ் வளர்மதி. அடுத்த கிரேட் திங் உன்ன இந்த கேஸ்ல கொண்டு வரணும்னு எண்ணமே எங்களுக்கு வரல. திஸ் இஸ் வெரி வெரி ரேர் திங் இன் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் வளர்மதி. ஏதோ ஒரு டிவைன் போர்ஸ் தடுத்திருக்கு. இது எங்களுக்கு ஒரு விதத்துல நல்லது. மாத்தி யோசிக்க வச்சது”
வளர்மதிக்குப் புல்லரித்தது.
நெகிழ்ச்சியாக அவளைப் பார்த்தாள்.
“அவனுக்கு இப்படியெல்லாம் ஆகும்னு சத்தியமா கடுகு அளவு கூட நெனக்கல. அதுவும் நீ செய்வேன்னு. அடி மனசுல உன்ன திட்டிக்கிட்டே செஞ்சுருப்பான். அவன் கிட்டேந்து எஸ்கேப் ஆனது நீ செஞ்ச புண்ணியம். இல்லேன்னா உன்னையும் சேர்த்து ஊரே பார்க்க உள்ள வச்சுருப்பாங்க.”
”நா என்ன செஞ்சேன்?”
“வெயிட். இன்னும் கொஞ்சம் இருக்கு” அபூர்வா சிரித்தாள்.
“அங்கேயும் ரெய்ட்ல கெடைக்கல. புது வொய்ஃப் கார்த்திகா முன்னேற்பாடா உன்னோட நக போக மத்த நகைகள….
….எப்பேர்பட்ட ஆத்மா கார்த்திகா..
காசாக்கி மத்த ரொக்கத்துடன் பேங்க்ல தன் பேர்ல, அப்பா பேர்ல போட்டு வச்சிருக்கு. காரணம் ஆன்லைன் டிரான்ஸ்ஃபருக்கு தேவை.
மோர் ஓவர் கார்த்திகாவுக்கும் அப்பப்போ டார்ச்சர் கொடுத்துருக்கான். இது முக்கிய காரணம். படுக்கைல நீ விட்டுப்போன டிரெஸ்ஸெல்லாம் போடச் சொல்லி செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருக்கான். அவ்வளவு வெறுப்பு உன் மேல. அவள கர்ப்பமாக்கி படிப்புக்கு முட்டுக் கட்டை போடனும்னு முயற்சி செஞ்சுருக்கான். இது அவனோட மாஸ்டர் பிளான்”
“உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” வளர்மதி வாயைப் பொத்திக் கொண்டாள்.
”அவ மிரண்டுப் போய் பீதியோட வாழ்ந்திருக்கா. ரெண்டு மூணு தடவ சூயிசைட் பண்ண டிரைப் பண்ணி கைவிட்டிருக்கா. காரணம் இவனின் கெஞ்சல்தான். உனக்குத் தெரிஞ்சுதுனா
அவமானம் ஆகிடும். சட்டத்த விட உனக்குதான் நெறய பீதி அடைஞ்சுருக்கான் தன்ன திடீர்னு விட்டுட்டு போய்ட்டாளேன்னு. நீ இன்னசெண்ட்டா இருந்து டெரர்ரா ஆயிட்ட அவனுக்கு”
வளரின் கையப் பிடித்துப் பெரிதாகச் சிரித்தாள். ”காட் பனிஷ்டு ஹிம்” வளரும் வாய் கொள்ளாமல் சிரித்தாள்.
”ஆனா, ரெய்ட்ல எல்லாம் சிக்கிடிச்சு. பேங்க் பேலன்சுக்கு சப்போர்ட் இல்ல. அப்ரூவரா மாறி எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லிட்டா. சைக்கலாஜிக்கல உன் மேல அளவுக்கு மீறி பாசம் வந்துருக்கு இந்தப் பொண்ணுக்கு. இதுவும் ஒரு வகை உன்னோட இன்னொசெண்ட் ஆட்டிடுயூடின் ஸ்பெல்தான். அது கூட நீ பட்ட டார்ச்சரரையும் கெஸ் பண்ணி இருக்கு”
“ஓ கிரேட் சோல் அவங்க”
“எஸ். அவன் சொன்ன அடுத்த நாளே அத தனியா பாக்ஸ்ல எடுத்து வச்சிட்டா. உங்கிட்ட கொடுக்க வந்தது தெரிஞ்சு போய் டார்ச்சருர்க்கு ஆளாயிட்டா. கொடுக்காம போயிடுச்சு”
“ஓ ….! வெரி சேட். பாவம்ங்க கார்த்திகா. கல்யாணத்துக்கு மின்ன என்ன கன்சல்ட் பண்ணி இருக்கலாம்”
“இவ்வளவு நாள் தப்பிச்சவன் இப்ப வகையா மாட்டிக் கிட்டான். நெட்வொர்க் எல்லாம் உடச்சுட்டோம். அவன் மேல இப்ப பல கேசு போட்டிருக்கோம். தற்கொலைக்கு தூண்டியது. கார்த்திகாவோட மைனர் தங்கைய பாலியல் தொந்தரவு கொடுத்தது இருக்கு. அது கிட்டேயும் பணம் கொடுத்து ஆச காட்டி இருக்கான். அதுவும் முதல்ல விழுந்து பின்னாடி முழுச்சுகிடுச்சு. எல்லாம் ஸ்ட்ராங் கேஸ். கட்டாயமா பத்து அல்லது பன்னிரெண்டு வருஷம் ஜெயில்தான்.
ஹூயுமனிடி ஆங்கிளில் கார்த்திகாவையும் நாங்க கேசுக்கு வெளியே கொண்டு வந்துடுவோம். இதிலும் உன்னோட ஸ்பெல் படர்ந்திருக்கு. பாவம் இந்தப் பணத்த நம்பிதான் அப்பாவோட கேன்சர் சிகிச்சை ஓடுது. பணத்தாசை இல்ல. படிப்புல சின்சியர் ”
”எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அபூர்வா. ஆனா, பாவம் கார்த்திகா. இவ்வளவு எமோஷனல பீல் பண்ணி நகைய திருப்பிக் கொண்டு வந்ததுக்கு மெனி மெனி தாங்கஸ் அபூர்வா” கண்களில் கண்ணீர் தளும்பியது.
“ஒரு ஆபிசர் அமுக்கலாம்னு பாத்தாரு. நாதான் ஸ்பெஷல் கேர் எடுத்து உன்னுட்ட சேர்க்க வந்தேன்”
வளர்மதியின் கண்களில் மீண்டும் நெகிழ்ச்சியில் கண்ணீர் தளிம்பியது.
”என்ன சஸ்பென்ச மறந்துட்டியா?”
“ஆஹா ஆமா. சொல்லு சொல்லு”
“நீதான் மொட்ட கடிதாசு எழுதிப் போட்டிருப்பேன்னு சந்தேகப் பட்டோம். ஆனா, நீ அதுக்கு சமமா…..”
முடிக்காமல் வளர்மதியை பார்த்துப் குறுகுறுப்பாக புன்னகைத்தாள் அபூர்வா ரமேஷ்.
“சமமா?” சஸ்பென்ஸ் முனையில் தொங்கியபடி இருந்தாள் வளர்.
“சமமா ’ஆபரேஷன்-வெ.வளர்மதி’ ஜாப். எங்க டிபார்மெண்ட்ல செல்லமா வச்ச பேரு. நீ யூனிக் கேஸ்”
“வெ.வளர்மதி?”
“வெள்ளந்தி வளர்மதி. அதிரடி டைவோர்ஸ்.இவனோட விஷயத்த எல்லாம் பிளஷ் அவுட் ஆயிடிச்சு”
வளர்மதி வாய் கொள்ளாமல் சிரித்துவிட்டு, “ஆமா அபூர்வா. எனக்கே ஆச்சர்யமா இருக்கும். ஆனா தெளிவா பாத்ரூம்ல உட்கார்ந்து திங்க் பண்ண முடிஞ்சுது. (சொல்லும் போது சிரிப்புத் தாங்கவில்லை வளர்மதிக்கு). ஆனா, ஒரு மாசம் பீதியா இருந்தது”
“சரி, நா இன்னொசெண்ட்னு எப்படி தெரியும்”?
“ஐய்யோ …ஆனந்தனே சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி புலம்பிட்டான். உன்னோட டைவோர்ஸ்ஸ கனவுலயும் எதிர்பார்க்கல. ஆடிப் போய்ட்டான்”
“ஓ காட் ………!எஸ் அபூர்வா….ஆனா, இப்போ இல்ல… ” குழந்தைத்தனமான வெட்கத்துடன் வளர்மதி புதிர் போட
”இல்ல?” அபூர்வா முழித்தாள்
”இப்போ அந்த இன்னொசென்ஸ் ஃபிப்டி பர்செண்ட் காணாம போனது எனக்கு நெறய வருத்தம் மேடம்” சொல்லி வாய் கொள்ளாமல் சிரித்தாள்.
“இன்னும் இருபத்து அஞ்சு பர்செண்டேஜ் காணாம போகும்”
“புரியல வளர்”
“ஆபரேஷனால”
”ஓ….. மை ஹக் டு யூ” அபூர்வா சிரித்து அணைக்க, வளர்மதியும் பெரிதாகச் சிரித்தாள்.
–ravishankark57@gmail.com