ஆகப் பெரும் கதை விரும்பிகள் குழந்தைகளும் சிறார்களும்தான்! – ஷாராஜ்
கட்டுரை | வாசகசாலை
கவிதை, இசை, நடனம் உள்ளிட்ட பிற நுண்கலைகளும், நிகழ்த்து கலைகளும் மானிடவியலின் பிற்பகுதியில் உருவானவை. கற்காலம் முதலாகவே இருந்து வருவது கதை சொல்லலும், ஓவியமும்.
ஆதி மனிதர்கள் வேட்டைச் சமூகமாக வாழ்ந்ததும், மொழி உருவாகியிராததுமான காலத்தில், தாம் வேட்டையாடிய அனுபவத்தை சைகையாலும், நடிப்பாலும் பிறருக்குக் கதையாகச் சொல்லியிருப்பார்கள். அப்படியாக உலகில் முதல் கதை பிறந்திருக்கும். அவ்வாறே குகை வாழ் மனிதர்களான அவர்கள் தாம் வசித்த குகைகளில், தாம் வேட்டையாடிய விலங்குகள், பறவைகளின் படங்களைக் கரி, சுண்ணாம்பு முதலானவற்றாலும், இலைகள், மரப் பட்டைகளின் சாறினாலும் கோட்டோவியங்களாகத் தீட்டி வைத்துள்ளனர். அப்படித்தான் உலகில் முதல் ஓவியம் பிறந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட அந்த ஓவியங்களில் சில, இன்னமும் உலக நாடுகள் பலவற்றிலும் காணக் கிடைக்கக் கூடியனவாக உள்ளன.
கதை சொல்வதும் கேட்பதுமான முறை கற்காலம் முதலாக இருந்து வருகிறது. மொழி வளர் காலங்களில் கதைகளை எழுதுவதும், வாசிப்பதும் நடைமுறையாயிற்று. பின்பு வரிசைக் கிரமமாக நாடகம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் ஆகிய கலைகள் உருவாகி, கதைகளைக் காட்சிகளாகவும், நடிப்பாகவும் ஆக்கிக் காட்டின. இன்றைய காலத்தில் இணைய வாசிப்பு, ஒலிப் புத்தகம், யூ ட்யூப் காணொளியில் கதை சொல்தல் மற்றும் வாசித்தல், பாட்காஸ்ட், கதைச் செயலிகள் ஆகியவையும் சேர்ந்துவிட்டன. கதைகளை வெளிப்படுத்தும் ஊடகங்கள் மாறிக்கொண்டும், கூடிக்கொண்டும் இருக்கின்றன. கதைகளை வாசிப்பது, கேட்பது, நடிப்புக் கலைகள் வாயிலாகப் பார்ப்பது காலம்தோறும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களில் கதைகளுக்கான ஊடகங்கள் இன்னும் புதிது புதிதாக உருவாகும். எது எப்படியானாலும் மனிதர்கள் கதைகளை வாசிப்பதும், கேட்பதும், நடிப்புக் கலைகள் வாயிலாகப் பார்ப்பதும் நீடித்துக்கொண்டே இருக்கும்.
நேரடியாக கதைகள் என்று சொல்லப்படுகிற, எழுத்து வடிவிலான சிறுகதை, நாவல் ஆகியவற்றை வாசிப்பதும், கேட்பதும் மட்டுமே கதை நுகர்வு அல்ல. திரைப்படங்கள், தொ.கா. தொடர்கள், குறும்படங்கள் பார்ப்பதும் அடிப்படையில் கதை நுகர்வுதான்.
சகல விதமான் கலை – இலக்கியங்களையும் மனித குலம் விரும்புவதற்கு பொழுதுபோக்கு, கேளிக்கை இன்பம், ரசனை இன்பம், அறிதல் நாட்டம், கலை நுகர்வு, கற்கை உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. கதைகளுக்கும் அவை பொருந்தும்.
குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைத்து வயதிலும், பருவங்களிலும் கதை விரும்பிகள் உள்ளனர். எனினும் பெரியவர்களைப் பொறுத்தவரை சிலருக்குக் கதைகள் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. இன்னும் சிலருக்கு கதைகள் பிடித்தாலும் கதை வாசிக்கவோ, கேட்கவோ, திரைப்படங்கள், தொ.கா. தொடர்கள் பார்க்கவோ நேரம் இராது. அல்லது வேறு வகையில் வாழ்க்கைச் சூழல் அதற்கு இடம் கொடாமல் இருக்கும். ஆனால், குழந்தைகளையும் சிறார்களையும் பொறுத்த வரை ஏதோ ஒரு வகையில் கதைகள் அவர்களின் வாழ்வில் முக்கிய அங்கம் வகிப்பதைக் காணலாம்.
குழந்தைகளும் சிறார்களும்தான் ஆகப் பெரும் கதை விரும்பிகள். இரண்டு – மூன்று வயதுக் குழந்தைகளுக்கு தாய்மார்கள் படுக்கை நேரக் கதைகள் சொல்லித் தூங்க வைப்பதிலிருந்து அவர்களின் கதை நுகர்வு தொடங்குகிறது. மழலையர் பள்ளியிலும், துவக்கப் பள்ளியின் ஆரம்ப வகுப்புகளிலும் ஆசிரியை, ஆசிரியர்கள் கதை சொல்கிறார்கள். பாட நூல்களிலும் படக் கதைகள் இடம் பெறுகின்றன. விலங்குகளும் பறவைகளும் பிராணிகளும் பேசக் கூடிய அற்புதக் கதை உலகம் குழந்தைகளுக்கு அறிமுகமாகிறது. அந்த வெகுளிமைப் பருவத்தில், அக்கதைகள் யாவும் நிஜங்கள், அல்லது நிஜங்களாக சாத்தியம் உள்ளவை என நம்பும் அவர்கள், அக் கதைகளின் உலகில் வாழவே செய்வார்கள். கதை கேட்பதிலும், சிறார் சேனல்கள், யூ ட்யூப் காணொளிக் கதைகள் பார்ப்பதிலும் அவர்கள் ஆர்வம் மிகுந்திருக்கக் காரணம் அதுதான். வளரிளம் சிறார்கள் சிறார் சேனல்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதும், அற்புதக் கதைகளின் உலகம் அவர்களுக்கு அணுக்கமாக இருப்பதாலேயே.
*******
‘எல்லாக் குழந்தைகளுமே ஓவியர்கள்தாம். பெரியவர்களாக ஆகும்போது அவர்களில் பெரும்பாலானவர்களும் அதை மறந்து விடுகிறார்கள்’ என்பது பிக்காஸோவின் பிரபல கூற்று. அதை அடியொற்றிச் சொல்வதெனில், எல்லாக் குழந்தைகளுமே கதை விரும்பிகள்தாம்; பெரியவர்களாக ஆகும்போது அவர்களில் பலருக்கும் அந்த விருப்பம் இல்லாமல் போய்விடுகிறது. மற்ற பலருக்கு, பெற்றோராலும் ஆசிரியர்களாலும் விலக்கப்பட்ட கனிகளாக கதைகள் ஆகிவிடுகின்றன. கல்விச் சூழல் அதற்கு முக்கியக் காரணம்.
ஆனால், ஓவிய விஷயத்தில் அதை முற்றாகக் கைவிடுவது போலன்றி, கதை விஷயத்தில் பெரியவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு நீடிக்கவே செய்கிறது. அவர்களில் சிலர் சிறுகதைகள், நாவல்கள் வாசிப்பர். ஒலி நூல்கள், காணொளிகள் மூலம் கதை கேட்பது, வாசிப்பதும் இருக்கும். இவ் வழக்கமற்றவர்களுக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வாயிலாக கதை நுகர்வு தொடரும்.
குழந்தைகளின் கதை நுகர்வைப் பெற்றோரோ, ஆசிரியர்களோ தடுப்பதில்லை. துவக்கப் பள்ளிச் சிறார்களுக்கும் அது ஓரளவு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், உயர் நிலைச் சிறார்கள் கதை வாசிப்பிலோ, தொ.கா. / யூ ட்யூப் காணொளிகளில் கதைப் படங்கள் பார்த்தலிலோ ஈடுபடுவதை அனேக பெற்றோரும் ஆசிரியர்களும் விரும்புவதில்லை. அது அவர்களின் படிப்புக்கு ஊறு விளைவிக்கும் எனக் கருதித் தடுக்கின்றனர்.
எண்பதுகளிலான எனது உயர் நிலைப் பள்ளிக் காலத்தில், மாணாக்கர்கள் கதைப் புத்தகங்கள் வாசிப்பதை ஆசிரியர்கள் கொலைக் குற்றம் போல எண்ணி, கடும் தடை விதித்திருந்தனர். மாணாக்கர்கள் யாராவது கதைப் புத்தகம் வாசிப்பதாகக் கேள்விப்பட்டாலே செமத்தியான பிரம்படி விழும். இதற்கு நேர் மாறாக ஒரு ஆசிரியர் இருந்தார். கதைப் புத்தகங்கள், வார – மாத பத்திரிகைகள் வாசிக்கத் தூண்டியவர் அவர் மட்டுமே. இதில் சுவையான வினோத முரண், கடுமையான பிரம்படிகளுக்குப் பிரசித்தி பெற்றவரும், மாணாக்கர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவருமான ஆசிரியர் அவர்தான். அவரைப் பற்றி, வகுப்பறைக்கு வெளியே பாடம் என்னும் (பெரியவர்களுக்கான) எனது சிறுகதையில் விளக்கமாக எழுதியிருப்பேன்.
பிள்ளைகள் கதைப் புத்தகம் வாசித்தால் படிப்பு கெட்டுவிடும் என்கிற மூட நம்பிக்கை பெற்றோர்களுக்கும் இருந்தது. அதனால் அவர்களும் அதைத் தடுக்கவே செய்வர். ஆனால், கதை வாசிப்பில் தீராத வேட்கை கொண்டவர்கள், இந்தத் தடைகளை மீறி சிறார் கதைப் புத்தகங்கள் வாங்கி வாசிப்போம். ஆசிரியர்களுக்குத் தெரியாமல் பள்ளிக்குக் கொண்டு சென்று, சக கதை விரும்பிகளுடன் புத்தகங்களைப் பரிமாறவும், பண்ட மாற்றாக மாற்றிக்கொள்ளவும் செய்வோம்.
குக் கிராமத்துச் சிறார்களான எங்களுக்கு பெற்றோர் ஒருபோதும் கதைப் புத்தகங்கள் வாங்கித் தர மாட்டார்கள். கதைப் புத்தகங்கள் வாசிப்பதே கூடாது என்கிற அவர்கள் எப்படி அதை வாங்கித் தருவார்கள்? தின்பண்டம் வாங்க தினமும் அல்லது எப்போதாவது தரப்படுகிற பத்து பைசா, இருபது பைசா, நாலணா எனப்படுகிற 25 பைசாக்களை சிறுகச் சிறுக சேமித்து வைத்து, 10 – 15 கி.மீ. தூரத்தில் உள்ள பெரிய ஊருக்குச் சென்று, பெட்டிக்கடைகளில் மாயாஜாலம், காமிக்ஸ் உள்ளிட்ட சிறார் கதைப் புத்தகங்களை வாங்கி வருவோம்.
பெற்றோர்கள், ஆசிரியர்களின் மூட நம்பிக்கைக்கு மாறாக, கதைப் புத்தக வாசிப்பில் முன்னணியில் இருந்த நான்கு மாணவர்கள்தான், படிப்பிலும் முன்னணியில் இருந்தனர். அதில் நானும் ஒருவன்.
இன்றும் பெரும்பாலான பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு அதே மூட நம்பிக்கை இருப்பதைக் காணலாம். ஆனால், அதை மீறி சிறார்களுக்கு கதை நுகர்வு ஏராளமாகக் கிடைக்கவே செய்கிறது. ஆனால், அதிகமானோர் தொ.கா கதைகள்., காணொளிகள் காண்பதன் மூலமே அதைப் பெறுகின்றனர். கதை வாசிப்பு மிகக் குறைவு.
சலனப் படங்கள் அதிக ஈர்ப்புடையவை. அதில் சில சாதகங்களும், அதற்கேயான சிறப்புகளும் உள்ளன. ஆகவேதான் வாசிப்பைவிட அவை அதிகம் கவர்கின்றன. அவற்றின் கதைகள், படமாக்கலுக்குத் தக்கபடி எழுதப்பட்டு, திரைக்கதை அமைக்கப்படுபவை. ஆனால், சிறுகதைகள், நாவல்களாக எழுதப்படுகிற கதை வடிவங்கள் அவற்றிலிருந்து மாறுபட்டவை. அவற்றை வாசிப்பது வேறு வித அனுபவம். சலனப் படங்களில் சாத்தியமாகாத சிறப்பம்சங்கள் பலவும் அதில் உள்ளன. அவை எழுத்து வடிவங்களுக்கே உரித்தானவை. குறிப்பாக மொழியறிவு, கற்பனை, படைப்பூக்கம் வளப்பட கதை வாசிப்பு அதிக அளவில் பயன்படும்.
எனவே, பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிறார்களுக்குக் கதை வாசிப்பை அனுமதிக்கவும், பரிந்துரைக்கவும் வேண்டும். அதோடு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவும்; ஆசிரியர்கள் பள்ளி விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை – இலக்கியப் போட்டிகளில் மாணாக்கர்களுக்கு சிறந்த கதைப் புத்தகங்களைப் பரிசாக வழங்கவும் வேண்டும். சொந்த பந்தங்களில் சிறார்களுக்கு பிறந்த நாள் அன்பளிப்பாகவோ, அவர்களின் படிப்பு மற்றும் பிற சாதனைகளைப் பாராட்டும் முகாந்திரமாகவோ இத்தகைய பரிசுகளை வழங்கலாம்.
*******
இது தொடர்பாக சில சுவையான அனுபவங்களைப் பகிர விரும்புகிறேன்.
2024 ஜனவரியில் வாசகசாலை வெளியீடாக, ஓர் அங்குலச் சிறுவன் என்ற தலைப்பிலான எனது முதல் சிறார் கதைத் தொகுப்பு வெளியானது. அச்சமயம், அத் தொகுப்பு உள்ளிட்ட நான்கு சிறார் கதைத் தொகுப்புகளை நான் ஏன் எழுதினேன், அவற்றில் எனது நோக்கங்கள் என்ன என்பது பற்றியெல்லாம் முகநூலில் விரிவாகவே எழுதியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, சிறார் இலக்கியம், மாணவச் சிறார்களுக்கான கலை – இலக்கிய செயல்பாடுகள், பாடத் திட்டத்துக்கு அப்பால் அவர்களின் அறிவு மற்றும் திறன்களை ஊக்குவித்தல் ஆகியவற்றில் நாட்டமுள்ள, தமிழாசிரியர்கள் அல்லது தமிழ் வழிப் பள்ளி ஆசிரியர்களாகவும் உள்ள சக படைப்பாள நண்பர்கள் ஓரிருவராவது அந்த நூலை வாங்கி, மாணவக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஓரஞ்சாரமாக இருந்தது.
ஆசிரியர்கள் ஒருவர் கூட அப்படிக் கேட்கவில்லை.
ஆனால், நூலாசிரியர் பிரதிகள் எனக்கு வந்துவிட்ட தகவலை முகநூலில் வெளியிட்ட உடனே நண்பரும் சக படைப்பாளியுமான விஜயராஜ் அருணாச்சலம் ஐந்து பிரதிகள் தேவை என்று அலைபேசியில் கேட்டார். உங்களுக்கு எதற்கு ஐந்து பிரதிகள் என விசாரித்தேன். தெரிந்தவர்களின் குழந்தைகளுக்கு அன்பளிப்பதற்காக என்றார். பேசி முடித்து அலைபேசியை அணைப்பதற்குள் ஜீ.பே.யில் பணத்தையும் அனுப்பிவிட்டார்.
எனது மூத்த சகோதரியின் மகள் திருமதி ஹேமலதா உதயன், அப்போது கோவை வடவள்ளி, காமதேனு நகரில் உள்ள சித்விகாஸ் வித்யா மந்திர் என்னும் சிறிய ஆங்கிலப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணி புரிந்துகொண்டிருந்தாள். அவள் என் கதைகள் எதையும் வாசித்ததில்லை. ஆனால், குழந்தைகள் கல்வி, குழந்தை வளர்ப்பு, அவர்களின் தனித்திறன் மேம்பாடுகள் பற்றி கருத்தியல் ரீதியாக நாங்கள் பல முறை உரையாடியிருக்கிறோம். அதில் சம அலைவரிசை எனலாம்.
அவளுக்கும் ஒரு பிரதியை அன்பளித்தேன். அவள் அதில் ஓரிரு கதைகளை வாசித்துவிட்டு, விரைவில் வரவிருக்கிற தனது பள்ளி விழாவில் சிறார்களுக்குப் பரிசளிப்பாக அந்த நூல் பிரதிகளை வழங்கலாம் என எண்ணினாள். பள்ளித் தலைமை ஆசிரியையிடம் நூலை அறிமுகப்படுத்தி, மாணவர்களுக்குப் பரிசாக வழங்கும் விருப்பத்தைத் தெரிவித்தாள். இது போன்ற முயற்சிகளை வரவேற்கக்கூடிய அவரும் சம்மதம் தெரிவித்து, இருபது பிரதிகளுக்கான பணத்தையும் உடனே கொடுத்துவிட்டார்.
பணம் எனக்கு வந்து சேர்ந்ததும், பதிப்பாளர் வாசகசாலையைத் தொடர்புகொண்டேன். அச்சிடப்பட்ட பிரதிகள் தீர்ந்துவிட்டதால் மீண்டும் பதிப்பிக்க வேண்டும் என்றார்கள். பணம் அனுப்பி, இருபது பிரதிகள் அச்சிட்டு வாங்கினோம். அப் பள்ளியில் விழாவின்போது மாணாக்கர்களுக்குப் பரிசாக அந்த நூல் பிரதிகள் வழங்கப்பட்டன. அதில் ஒரு சிறுமி நூலை வாசித்துப் பார்க்கும் ஒளிப் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலப் பள்ளியிலிருந்து எனது சிறார் கதைகள் நூலுக்கு இப்படி ஆர்டர் கிடைத்தது எதிர்பாராத வியப்பை அளித்தது.
ஆங்கில ஆசிரியையான ஹேமலதாவுக்கு நான் அன்பளித்த பிரதியை, அவளுக்குத் தெரிந்த, தாய் – தந்தை இருவருமே விஞ்ஞானிகளாக உள்ள, ஜெர்மன் வாழ் தமிழ்ச் சிறுமிக்கு அன்பளித்துவிட்டாள் என்பது இன்னொரு சர்ப்ரைஸ்!
இது தவிர, ஆகஸ்ட் மாதத்தில், ஹேமலதாவின் மகளும் இரண்டாம் வகுப்பு பயில்கிறவளுமான சிறுமி ரக்ஸிதாவின் நெருங்கிய தோழி மயூராவுக்கு பிறந்த நாள் வந்தது. அதற்கு அன்பளிப்பாகத் தர ஹேமா என்னிடம் ஓர் அங்குலச் சிறுவன் பிரதி இருந்தால் ஒன்று வேண்டும் என்று விலைக்குக் கேட்டாள். பணம் வேண்டாம், என் அன்பளிப்பாகவும் இருக்கட்டும் என்று ஒரு பிரதியைக் கொடுத்தேன். சிறுமிகள் இருவரும் நூல் பிரதியோடு உள்ள ஒளிப்படத்தையும் இங்கே காணலாம்.
ஆங்கிலப் பள்ளியிலேயே தமிழ் சிறார் கதை நூலுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு உள்ளபோது, தமிழ் பள்ளிகளில் இன்னும் வரவேற்பு இருக்கும் என்பதே எனது நம்பிக்கை. ஆனால், ஆசிரியர்கள் இதற்கு ஒத்துழைக்கவும், முன்வரவும் வேண்டும். ஆனால், சக இலக்கியவாதிகளாகவும் உள்ள ஆசிரியர்களிடமிருந்து கூட எனது நூலுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. போகட்டும்! மற்றவர்களின் சிறார் கதை நூல்களுக்காவது, எங்காவது, யாரோ ஓரிருவராவது ஆதரவு காட்டினால் நல்லது.