இணைய இதழ் 106தொடர்கள்

காலம் கரைக்காத கணங்கள்;13-மு.இராமநாதன்

தொடர் | வாசகசாலை

கம்பன் வீட்டுக் கட்டுத்தறி

‘அந்தக் கனி மரத்திலே பழுத்திருந்தது. எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன்’- இப்படிச் சொன்னார் அறிஞர் அண்ணா. அவர் குறிப்பிட்ட ‘இதயக்கனி’ யாரென்று பச்சைப் பிள்ளைக்குக்கூடத் தெரியும்.

பள்ளிப் பிராயத்தில் என் மடியிலும் ஒரு கனி வந்து விழுந்தது. அந்தக் கனியை ஈன்ற மரம் காரைக்குடியில் இருந்தது. கம்பன் கழகம் என்பது மரத்தின் பெயர். காரைக்குடியில் பிறந்து வளர்ந்ததால் அந்த மரத்தின் நிழல் கிடைத்தது. எந்த முயற்சியும் இல்லாமல் என் மடியில் விழுந்த கனியின் பேர் கம்பராமாயணம். அண்ணாவைப் போல் அதை நான் இதயத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவில்லை. திருமூலரைப் போல புந்தியில் வைத்துப் போற்றவும் இல்லை. கனியின் சுவை நுகர மெனக்கெடவும் இல்லை. ஆனால் அந்தக் கனியின் மதிப்பு எனக்குத் தெரிந்திருந்தது. காரணம்: காரைக்குடிக் கம்பன் விழாக்கள் ஊட்டிய செவியுணவு.

கம்பன் தனது காப்பியத்திற்குச் சூட்டிய பெயர் இராமாவதாரம். ‘கம்பனுக்கு மேலோர் கவிஞன் பிறப்பதில்லை’ என்பது கண்ணதாசன் வாக்கு. தமிழ்நாடு கல்வி சிறந்தது என்பதை நிறுவ, ‘புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்றான் பாரதி. அதாவது கம்பனால் பொலிந்தது தமிழ்நாடு. அதைத் தமிழ்ச் சமூகம் அறிந்துகொண்டது. ஆதலால் கம்பனின் படைப்பு இங்கு அவதார மகிமையைச் சொல்லும் இதிகாசமாகப் பார்க்கப்படவில்லை. மாறாகத் தமிழ் மொழியின் தனிப் பெரும் இலக்கியமாகப் போற்றப்பட்டது. ஆகவே ஆக்கியோனின் பெயராலேயே அவனது படைப்பும் விளிக்கப்பட்டது. இப்படித்தான் இராமாவதாரம் கம்பராமாயணம் ஆயிற்று. ஆகவே விழாவும் கழகமும் இராமாவதரத்திற்கு அல்ல, கம்பனுக்குத்தான். ‘கம்பராமாயணம் படிப்பது மோட்சத்திற்குப் போவதற்கு நுழைவுச்சீட்டு வாங்குவதற்கு  ஒப்பான நிலையாக இருந்த வழக்கத்துக்கு இதனால் [கம்பன் விழாவால்] முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது’ என்று எழுதினார் சோமலெ.

இன்னொரு சடையன்- சா.கணேசன்

இந்நாளில் கம்பனுக்குத் தமிழகம் நெடுகிலும் கழகங்கள் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் தாய்க் கழகம்- காரைக்குடிக் கம்பன் கழகம். தோன்றிய ஆண்டு: 1939. நிறுவியவர்: சா.கணேசன் (1908-1982).

சா.கணேசன் என்கிற பெயரைக் கேட்டவுடன் என் மனதில் தோன்றும் சித்திரங்கள் நான்கு. முதலாவது, அவர் சட்டை அணியமாட்டார்.  ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது சட்டையைத் துறந்தார். காந்தியடிகளின் செல்வாக்குக் காரணமாகலாம். முரட்டுக் கதர் வேட்டியும் தோள் துண்டுமே அவரது அடையாளங்கள். ஒரு கவியரங்கில் கம்பனாகத் தன்னை வரித்துக்கொண்டு கண்ணதாசன் பாடிய கவிதை இது:

அன்றொரு சடையன் என்னை
ஆளாக்கித் தேற்றி நின்றான்
இன்னொரு சடையன் என்னை
இந்த நூற்றாண்டில் காண
தன்னையும் கொண்டு வந்தான்
சட்டையும் கழற்றி வைத்து!

அடுத்தது, அவர் தனக்குச் சூட்டிக்கொண்ட பெயர்- ‘கம்பன் அடிப்பொடி’. அழைப்பிதழ்களில் அவர் பெயர் அப்படித்தான் இருந்தது. அப்படித்தான் அவர் ஒப்பமிட்டர்.  ‘கம்பன் அடிப்பொடி, கம்பன் மணிமண்டபம், காரைக்குடி’ என்பதுதான் அவரது முகவரியாக இருந்தது. சா.கணேசன் கவிஞரும் ஆவார். கம்பனின் பால் அவருக்கிருந்த பக்தியை அவர் யாத்த பின்வரும் பாடல் எடுத்துக்காட்டும்.


அன்னை ஆய், அத்தன் ஆகி
அருளும் ஆசான் ஆகிப்
பின்னும் என்னை ஆண்டு கொண்ட
பெருந் தெய்வம் தானே ஆகிக்
கன்னி எனும் தமிழ்த்தாய் ஈன்ற
கவிச்சக்கரவர்த்தி ஆன
என்னுடைய கம்பன் பாதம்
என்றும் என் உச்சி மீதே!

மூன்றாவது சித்திரம் அவரது குரலில் ஒலித்த கம்பன் வாழ்த்து.

கம்பன் வாழ்க!
கம்பன் புகழ் வாழ்க!
கன்னித் தமிழ் வாழ்க!

எல்லா நிகழ்வுகளின் தொடக்கத்திலும் முடிவிலும் இந்த வாழ்த்தைப் பாடுவார். அவையோர் அத்துணை பேரும் ஒவ்வொரு அடியின் முடிவிலும் ‘வாழ்க! வாழ்க!’ என்று ஏற்றுப் பாடுவார்கள். நூற்றுக்கணக்கான வாழ்த்தொலிகள் காற்றை நிறைக்கும்.

கடைசியாக, அவரது காலந்தவறாமை. “கம்பன் விழா, 32ஆம் ஆண்டு, இரண்டாம் நாள், பிற்பகல் நிகழ்ச்சி இன்னும் 10 நிமிடம் 21 நொடிகளில் துவங்கும்” என்று அறிவிப்பார். மணிக்கட்டில் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே சொல்லுவார். சொன்னபடியே தொடங்குவார். கம்பன் விழாவிற்கு முதல்வர்கள், அமைச்சர்கள், நீதியரசர்கள், தொழிலதிபர்கள், அறிவாளர்கள், அரசியலர்கள் என்று பலரும் வந்திருக்கிறார்கள். எந்த நிகழ்வும் யாருக்காகவும் காத்திருந்ததில்லை.


பொதுவாக நிகழ்ச்சிகளுக்குக் கண்ணதாசன் தாமதாகத்தான் வருவார். “ஒவ்வொருவருக்கும் ஒரு மதம் இருக்கும். சிலருக்கு இந்து மதம். சிலருக்கு கிறிஸ்துவ மதம். சிலருக்கு இஸ்லாமிய மதம். என்னுடைய மதம் தாமதம்” என்ற சமாதனத்துடன் அவர் துவங்கிய உரைகள் மிகுதி. ஆனால் எந்தச் சாக்கும் போக்கும் சா.கணேசனிடம் எடுபடாது என்பதைக் கவிஞர் அறிவார். சரியான நேரத்திற்கு முன்பாகவே வந்துவிடுவார். ஒரு கவியரங்கில் கண்ணதாசன் பாடிய கவிதை:

கடிகாரம் பார்த்தேதான்
காரியங்கள் செய்வதென
பிடிவாதம் கொண்டுள்ள
பேரவையின் தலைவர்களே!
கடிகாரம் என்பகைவன்;
கணேசர் பயத்தினிலே
காலத்தை நானறிந்து
கடுகிஇங்கே ஓடிவந்தேன்!


நான்கு நாள் விழா

காரைக்குடியில் கம்பன் விழா மூன்று நாட்கள் நடைபெறும். நான்காம் நாள் நிகழ்வு காரைக்குடியிலிருந்து 30கிமீ தொலைவில் இருக்கும் நாட்டரசன் கோட்டையில் நடக்கும். அங்குதான் கம்பனின் சமாதி இருப்பதாக நம்பப்படுகிறது. பங்குனி மாதம் அத்த நடசத்திரத்தன்று நான்காம் நாள் நிகழ்ச்சி நடக்கும். ஒன்பதாம் நூற்றாண்டில் பங்குனி மாத அத்த நாளன்று கம்பன் தன் காப்பியத்தை அரங்கேற்றியதாக ஒரு தனிப்பாடலின் வழி அறியக்கூடுவதால் இந்த ஏற்பாடு.

1938இல் ரசிகமணி டி.கே.சி.யைச் சந்தித்தார் சா.கணேசன். அவர் வழங்கிய உற்சாகத்தில் 1939இல் காரைக்குடியில் கம்பன் விழாவைத் தொடங்கினார். அன்று தொடங்கிய தொடரோட்டத்தில் நாளது வரை முடக்கமில்லை.

விஞ்சி நின்றவன் கம்பன்

இன்று பெருவழக்காக மாறியிருக்கும் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமண்டபம் முதலான மேடை வடிவங்கள் உருப்பெற்றதும் நிலைபெற்றதும் கம்பன் விழாக்களில்தான்.

ஆரம்பகாலப் பட்டிமண்டபங்களில் இரண்டு அணிகள் வாதிட்டன. தலைப்புகள் இப்படி இருக்கும்: சகோதரப் பாசத்தில் விஞ்சியவர்- இலக்குவனா? பரதனா?; காப்பிய நோக்கிற்குப் பெரிதும் துணை செய்தவர்- மந்தரையா? சூர்ப்பனகையா?

பிற்பாடு அணிகள் மூன்றாகின. தோழமை மிகுந்தவர்- குகனா? சுக்ரீவனா? வீடணனா?. இந்தப் பட்டிமண்டபத்தின் முடிவில் ‘குகனொடும் ஐவர் ஆனேம், குன்று சூழ்வான் மகனொடும் [சுக்ரீவன்] அறுவர் ஆனேம்; நின்னொடும் [வீடணன்] எழுவர் ஆனேம்’ என்ற பாடல் காணாப் பாடம் ஆகியது.

தொடர்ந்து, பட்டிமண்டபத்தில் அணிகள் நான்காகின. ஒரு பட்டிமண்டபம் என் நினைவில் தங்கி நிற்கிறது. ஆண்டு 1973ஆக இருக்கலாம். கம்பராமயணத்தில் விஞ்சி நிற்பது அவலமா? வீரமா? சினமா? காதலா?. நான்கு அணிககளுக்கும் தலைமையேற்றவர்கள் முறையே இரா.ராதாகிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே), அ.ச.ஞானசம்பந்தன், சாலமன் பாப்பையா ஆகியோர். துணைப் பேச்சாளர்கள் பின்னாளில் கம்பன் மேடைகளை ஆண்ட சொ.சத்யசீலன், பா. நமச்சிவாயம், அ.அருணகிரி, அ.வ.ராசகோபாலன் முதலியோர். இரா.மீனாட்சி, சரசுவதி இராமநாதன், இளம்பிறை மணிமாறன், காந்திமதி முதலியோர் பெண் வழக்குரைஞர்கள். பேச்சாளர்களைத் தவிர கம்பனைக் கற்றவர்களில் 30-40 பேர் நோக்கர்களாக இருந்தார்கள். பேச்சாளர்களின் வாதங்கள் முடிந்ததும் நோக்கர்கள் நான்கில் ஒரு கட்சியை நீக்கினார்கள். அப்படி நீக்கப்பட்ட கட்சி- சினம். எஞ்சிய மூன்று கட்சிகளில் ஒன்றை நடுவர் தெரிவு செய்தார். அவர் தெரிவு செய்தது- வீரம்.

அடுத்த நாள் மேல்முறையீட்டு பட்டிமண்டபம் நடந்தது. அரங்கம் நீதி மன்றம் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது. நிஜ நீதியரசர்கள் எஸ்.மகராஜன், மு.மு.இஸ்மாயில் இருவரும் நடுவர்களாக இருந்தனர். நோக்கர்களின் சார்பாக புலவர் கீரன் தாங்கள் ஏன் ஒரு கட்சியை நீக்கினோம் என்று விளக்கினார். பாதிக்கப்பட்ட கட்சியினர் முறையீடு செய்தனர். வெற்றி பெற்ற கட்சியும் தன் வாதத்தை வலியுறுத்தியது. கடைசியாக நீதியரசர்கள் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை வழிமொழிந்தார்கள்.

நான் பத்தாம் வகுப்புப் படித்தபோது (1974) நடந்த கம்பன் விழாவிற்குத் தலைமையேற்றவர் அப்போது முதல்வராக இருந்த கலைஞர். அதற்கு இரண்டாண்டுகள் முன்புதான் புதிய கம்பன் மணிமண்டபம் கட்டப்பட்டிருந்தது. அதற்கு முன்பு வரை மீனாட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் பந்தல் போட்டு விழா நடக்கும். அப்போதும் ஒரு முறை கலைஞர் வந்திருக்கிறார்.

தமிழ் மன்றத் தேர்வு

எனது பள்ளி நாட்களுக்குப் பிறகு கம்பன் விழாக்களுக்குப் போவது குறைந்துவிட்டது. கம்பனால் நான் பெற்ற பயன்கள் பல. உள்ளே போன கம்பனின் செல்வாக்கு இன்றும் தொடர்கிறது. இங்கே இரண்டு நிகழ்வுகள் மட்டும்.

அந்நாளில் சிவகங்கை தனி மாவட்டம் ஆகவில்லை. காரைக்குடி வட்டமும் உருவாகவில்லை. இராமனாதபுர மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் இருந்தது காரைக்குடி. பத்து, பதினோராம் வகுப்புகளுக்குத் தமிழில் மன்றத் தேர்வு நடக்கும். திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள பள்ளிகள் ஒரு மன்றத்தின் கீழ் வரும். மன்றம் முழுமைக்கும் ஒரு தேர்வு நடக்கும். தமிழ் இரண்டாம் தாளில், பாடப் பகுதியில் அல்லாத ஒரு பாடல் தரப்படும். அதற்குப் பொருள் எழுத வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள். பொதுவாக நாமக்கல் கவிஞர், கவிமணி, பாரதிதாசன் இவர்களில் யாரேனும் எழுதிய ஒரு பாடல் தரப்படும். எளிய பதங்கள், எளிய நடை, இவற்றுடன் மாணவர் எல்லோருக்கும் பொருள் விளங்கும்படியான பாடலாக அது இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இந்த விதியை மதிக்காத ஒரு தமிழாசிரியர் அந்த ஆண்டு கேள்வித்தாளைத் தயாரித்திருந்தார். அவர் கொடுத்திருந்த பாடல்:

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, நேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.


கீழே சில அருஞ்சொற்களுக்கு விளக்கமும் கொடுத்திருந்தார். அவையாவன: வண்மை – வள்ளல் தன்மை, திண்மை – துணிவு, செறுநர் – பகைவர், வெண்மை – அறியாமை.

இது கோசல நாட்டைப் புகழ்ந்து கம்பன் பாடியது. பால காண்டத்தில் வரும். இந்த அருஞ்சொற்பொருளுடன் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் இந்தப் பாடலுக்குப் பொருள் எழுதிவிடுவான் என்கிற அந்த ஆசிரியரின் எதிர்பார்ப்பு அதீதமானது என்று பிற்பாடு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் எனக்குப் பெரிய சிக்கல் எழவில்லை. அந்தத் தேர்வுக்குச் சில நாட்கள் முன்பு நடந்த கம்பன் விழாவில் இந்தப் பாடலைப் பொதுவுடமைத் தத்துவத்தோடு இணைத்து வார்த்தை வார்த்தையாக விளக்கியிருந்தார் க.கு.கோதண்டராமன். பாடலின் பொருள் இதுதான்:

(கோசல நாட்டில்) வறுமை என்பதே இல்லை, அதனால் வள்ளல் தன்மைக்கு அவசியமில்லை; பகைவர் எவரும் இல்லை, அதனால் துணிவோடு இருப்பது அவசியமில்லை; யாரும் பொய் பேசுவது இல்லை, அதனால் அங்கே உண்மை என்பதற்குப் பொருளில்லை; மக்களுக்குக் கேள்வியறிவு மிகுந்திருக்கிறது, அதனால் அங்கு அறியாமை இல்லை.

இப்படிக் கோர்வையாக இல்லாவிட்டலும் அந்தப் பாடலுக்கான பொருளை ஒரு மாதிரி எழுதிவிட்டேன். அந்தத் தேர்வில் எனக்கு முதலிடம் கிடைத்தது. கம்பன்தான் காரணம். மு.வ.வின் உரையுடன் கூடிய திருக்குறள் கையடக்கப் பிரதி பரிசாகக் கிடைத்தது. பல ஆண்டுகள் அந்த நூல் கூடவே இருந்தது.

பொறியியல் மன்றத் தேர்வு

இன்னொரு தேர்வின் முடிவிலும் எனக்குக் கம்பன் நினைவுக்கு வந்தான். அது பொறியியல் தேர்வு, ஹாங்காங்கில் நடந்தது. அந்த நகரில் பணியாற்ற பொறியியல் மன்றங்கள் நடத்தும் சில தேர்வுகளை எழுத வேண்டும். அப்படியான ஒன்று  பிரிட்டனின் Institute of Structural Engineers (IStructE) நடத்தும் தேர்வு. நான் அந்தத் தேர்வை எதிர்கொண்ட 2004ஆம் ஆண்டில் கேள்வித்தாள் எதிர்பாராத விதமாகக் கடினமாக இருந்தது. நல் வாய்ப்பாக நானறிந்த ஒரு வடிவமைப்பைக் குறித்த கேள்வியும் இருந்தது. அந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. எனினும் தேர்வானவர் பட்டியலில் எனது பெயரும் இருந்தது. அதற்குக் காரணம் நான் பொறியியல் கற்ற கோவை தொழில்நுட்பக் கல்லூரியும் (CIT) அங்கு பயிற்றுவித்த ஆசிரியர்களும்தான் என்பதை நினைத்துக்கொண்டேன். அப்போது கம்பன் விவரித்த ஒரு காட்சி மனதில் தோன்றியது.

இலங்கையிலிருந்து திரும்புகிற அனுமன் இராமனிடம் “கண்டேன் சீதையை” என்று சொல்லுகிற பாடல் மிகவும் புகழ் பெற்றது.

கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்,
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்நகர்;
‘அண்டர் நாயக! இனித் துறத்தி, ஐயமும்
பண்டுள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்

இந்தப் பாடலுக்கு ஏராளமான உரையாசிரியர்கள் பொருள் எழுதியிருக்கிறார்கள். அனுமன் “சீதையைக் கண்டேன்” என்று சொல்லியிருந்தால் “சீதையை” என்று சொன்னதும் அனுமன் கண்டானா இல்லையா என்கிற பதற்றம் இராமன் மனத்தில் தோன்றிவிடும் என்பதால்தான் “கண்டேன் சீதையை” என்று அனுமன் சொன்னான் என்று போகும் அவர்களது பொழிப்புரை. ஆனால் அனுமன் எப்படி வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம். ஏனெனில் அதற்கு முந்தைய பாடல்களிலேயே அனுமன் இராமனுக்குக் குறிப்புணர்த்தி விடுவான். அனுமன் வந்ததும் எப்போதும் செய்வது போல் இராமனை வணங்காமல் சீதை இருக்கிற தென் திசையை நோக்கி வணங்குவான். அனுமன் சீதையைப் பார்த்துவிட்டான் என்பதும் அவள் தென் திசையில் இருக்கிறாள் என்பதும் ‘குறிப்பினால் உணரும் கொள்கையான்’ ஆன இராமனுக்குப் புரிந்துவிடும்.

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல்தன்
மொய் கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான்.

என்பது பாடல். ஏந்தலை-இராமனை-தொழாமல், தையல் இருக்கிற திசையை நோக்கி ‘வையகம் தழீஇ நெடிது இறைஞ்’சுகிறான் அனுமன். இங்கே வையகம் என்பது நிலம். தன் மேனி முழுதும் நிலத்தில் படும்படியாக வணங்குகிறான். இந்தப் பாடலை அ.அறிவொளி காரைக்குடி கம்பன் விழா ஒன்றில் விளக்கியது என் மனதில் தங்கியிருக்கிறது. தழீஇ எனபது அளபெடை. தழுவி என்பது பொருள். அந்த இடத்தில் ஓர் அளபெடையைப் பயன்படுத்தியது கம்பனின் நுட்பம். அதை அறிவொளி அன்று விலாவாரியாக விளக்கினார்.


பாடலும் விளக்கமும் என் நினைவுக்கு வந்தன. ஹாங்காங்கிலிருந்து 4,000கிமீ தொலைவில் தென் மேற்கு திசையில் இருக்கும் சி.ஐ.டி.யை நோக்கி வையகம் தழீஇ நெடிது இறைஞ்சினேன். நான் வணங்கியது சி.ஐ.டி ஆசிரியர்களை நோக்கி மட்டுமல்ல, எந்த முன்முயற்சியும் இல்லாத போதும் எனக்குக் கம்பனை சாலப் பரிந்தூட்டிய காரைக்குடிக் கம்பன் கழக ஆசிரியர்களை நோக்கியும்தான்.

அனுபவம் தொடரும்….

Mu.Ramanathan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button