தமிழ்நாட்டு ஆண்கள் ஏன் சிவப்பு நிற தோலுடைய பெண்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பது குறித்த கேள்வி பெரும்பாலும் மாமை நிறமுடைய தமிழ்நாட்டு பெண்களுக்கு உண்டு. ஆனால், அதற்கான விடையை நாம் சிந்துவெளியிலிருந்து தேடத் துவங்க வேண்டியிருக்கிறது.
எப்படி செழித்துக் கிடந்த ஒரு பண்பாடு சிவப்பு நிறத்தை கொண்டாடியிருக்கிறது? அதன் நீட்சி எந்த மொழியிலாவது இருக்கிறதா என்று தேடிப் பார்க்கும்போது சங்க இலக்கியங்கள் செங்கல், செம்பு, மட்பாண்டம் என சிவப்பைக் கொண்டாடியிருக்கிறது. தற்கால தமிழ்நாடும் சிவப்பை கொண்டாடுகிறது. வாருங்கள் காரணங்களை ஆராய்வோம்.
இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத நூலான ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ நூல் தொல் தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி பண்பாட்டிலும் உயர்ந்து பறந்த சிவப்பு வண்ணத்தின் நிறக் குறியீடு குறித்து விரிவாகப் பேசுகிறது. சிந்துவெளியின் குறியீடுகளை முழுதாய் வாசித்தறிய முடியாத சூழ்நிலையில் அங்கிருந்த பண்பாடு எந்த நிறத்தை முன் நிறுத்துகிறது என்பதே அதன் நிறமொழி. உலகத்தின் ஒவ்வொரு பண்பாட்டிலும் நிறங்களை குறியீடாக பயன்படுத்தும் இயல்பு காணப்படுகிறது. சிந்துவெளி பண்பாட்டின் படைப்பாளர்கள் யார்? தொல் தமிழர்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டம் எத்தகையது? என்ற இரண்டு கேள்விகளுக்குமான விடையை நோக்கி இந்த சிவப்பு நிறம் நம்மை வழி
நடத்துமா? வாருங்கள் பார்ப்போம்.
சிந்துவெளி சிதைவிடங்களுக்கு செல்பவர்களின் கவனத்தை பெரிதும் கவரும் பொருட்கள் சுட்ட செங்கற்கள், தாமிரம் செம்பு உலோக கருவிகள், எங்கும் சிதறிக் கிடக்கும் மட்பாண்டங்கள்தான். இந்த மூன்றின் நிறமும் சிவப்பு. ஆம்; சிவப்பு என்பது அம்மக்களின் கூட்டு உளவியல் குறியீடு என்றே எடுத்துக் கொள்ளலாம். எங்கெங்கு காணினும் சிவப்பு. அதுவே அம்மக்களின் விருப்பத்திற்குரிய வண்ணமாக இருந்திருக்கலாம். இதன் நீட்சி வேறு எங்கேனும் தொடர்கிறதா? வேறு எந்த பண்பாட்டிலும் சிவப்புக் கொடி உயர்ந்து பறக்கிறதா? என்று தேடும் போதுதான் தொல் தமிழரின் செவ்வியல் இலக்கியமான சங்க இலக்கியங்கள் சிவப்பை உயர்த்திப் பிடிக்கின்றன என்பது ஊர்ஜிதமாகிறது. “சே”, “செம்”, “செவ்” என்ற பல வேர்ச் சொற்களின் விரிவாக்கம் பெரிது. உடல் முழுவதும் குருதி பூசி வெளிவருவதால் பிறந்த குழந்தையை “சேய்” என்கிறது தமிழ் சமூகம். சேயோன் எனும் முருகனும், சிவந்த நிறமுடைய சிவனும் கடவுள் புலத்திற்கு தொல் தமிழரின் கொடைகள். எத்தனையோ வண்ணங்கள் இருக்க தொல்காப்பியம் இரண்டு நிறங்களை மட்டுமே விளக்கிச் சொல்கிறது. ஒன்று கருப்பு இன்னொன்று சிவப்பு.. இரண்டும் நிறங்களை மட்டும் சொல்பவை அல்ல; நிறத்தின் தன்மையையும் சொல்கிறது.
பெண் கடவுள்களின் உருவ பொம்மைகளுக்கு சிவப்பு அல்லது காவி வண்ணம் பூசுவதை குருதி பலிக்கு மாற்றாக பயன்படுத்துவதாக கருதுகிறார் டிடி கோசாம்பி. குருதி என்பது வளமை, செழிப்பு, தாய் தெய்வ மரபின் குறியீடு என்கிறார் அவர். தென் தமிழ்நாட்டில் உள்ள தாமிரபரணியின் இன்னொரு பெயர் சேயாறு. தாமிரா என்பது இந்தோ – ஆரிய மொழியில் செம்பு எனும் உலோகம் மற்றும் அதன் நிறத்தைக் குறிக்கும் சொல். ஆம்; தாமிரபரணி என்பது சேயாறு. சே என்பது சிவப்பு, சிவந்த ஆறு என்பதுதான் அதன் பொருள்.
தமிழ்ப் பண்பாடு அதன் வழிபாட்டுச் சடங்குகளின் காவி, மஞ்சள், சிவப்பு நிறங்களுக்கு முக்கியத்துவம் வழங்கக்கூடியது. மஞ்சளோ, குங்குமமோ பொருளுக்கான முக்கியத்துவம் அதே வண்ணத்தில் இருக்கும் வேதியல் பொருட்களை பயன்படுத்துவதை உற்றுநோக்குகையில் மேலதிகமான முக்கியத்துவம் பெறும் நிறங்கள் எப்படி பண்பாடுகளை அறியத்தரும் துருப்பாக இருக்கிறது என்பதை உணர முடியும்.
சிந்துவெளி எங்கும் விரவி கிடக்கும் சிவப்பு வண்ணத்தை தூக்கிப் பிடிக்கும் முக்கிய பொருட்கள் செங்கல், மட்பாண்டங்கள், செம்பு. சிந்துவெளி பண்பாட்டின் சுட்ட செங்கற்களை மிஞ்சும் அளவிற்கு இந்தியாவில் வேறொரு செங்கல் இல்லை. செங்கற்கள் தரக்கட்டுப்பாடு பேணப்பட்டவை. பண்டைய உலகின் ஆகச்சிறந்த செங்கல் வடிவமைப்பாளர்கள் என்ற தகுதி சிந்துவெளி மக்களுக்குறியது. செங்கற்கள் என்பவை சுட்டு சிவப்பான கற்கள் எனும் பொருள்பட மட்டும் குறிப்பிடப்படவில்லை. 1:2:4 என்ற விகிதத்தில் பருமன், அகலம், நீளம் உடையவை, உறுதியானவை, செம்மையாவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படக் கூடியவை, தரக்கட்டளையின்படி உருவாக்கப்பட்டவை என்பதுதான் அதன் பொருள். அவை வெறும் செங்கற்கள் மட்டுமல்ல, சிந்துவெளி மக்களின் தொழில்நுட்பத்திற்கான உரைகல்.
சிந்துவெளி பண்பாட்டிற்கு உரிமை கூறும் வேதகால இலக்கியங்களில் செங்கல்லைப் பற்றிய அறிமுகம் இல்லை. வழிபாட்டிற்கு பயன்படுத்தும் களிமண் கற்களைத் தாண்டி செங்கல் அறிமுகமே அவர்களுக்கு அருகில் வசித்து கொண்டிருந்த கருப்பு சிவப்பு பானைகளை பயன்படுத்தக்கூடிய செங்கல் சூளைகளைப் பற்றிய தொழில்நுட்பத்தை அறிந்த மக்களிடம்தான் பெற்றிருக்கிறார்கள். செங்கற்களுக்கும் அவர்களுடைய கட்டுமானங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரிக் வேத மக்கள் வீடுகளை மரம், வேய்கூரை, தட்டி போன்ற அழியக்கூடிய பொருட்களை பயன்படுத்தி கட்டும் வழக்கம் கொண்டிருந்தார்கள். வேதகால ஆரியர்களுக்கு செங்கல் செய்யும் தொழில்நுட்பம் தெரியாது. அவர்கள் அருகில் இருந்த கருப்பு சிவப்புப் பாண்ட பண்பாட்டு மக்களிடம் தொடர்பு கொண்டதுதான் இந்திய வரலாறு அடுத்த கட்ட நகர்வுகளுக்கு சென்றதற்கான தொடக்கப்புள்ளி. சுடாத கல் பச்சைக்கல். சுட்ட கல் செங்கல். செங்கல் என்பது செம்மையின் குறியீடு. செங்கற்கள் நிரம்பிய சிந்துவெளியின் நீட்சியாக செங்கல்லைக் கொண்டாடிய இலக்கியம் எங்கு இருக்கிறது என்று தேடும் போது சங்க இலக்கியம் பெரிதாய் பேசுகிறது. சுடுமண் கற்களால் கட்டப்பட்ட பண்டைய நகரங்கள் குறித்த நினைவுகளைப் பேசுகிறது. தொன்மையான நகரம் மதிரை பின்பு மதுரை என்று மருவியது. மதிரை என்பதே சுற்றுச்சுவரை குறிப்பிடும் மதிர்/ மதில் என்று சொல்லிலிருந்து மதுரையாகி உருவாகி இருக்கலாம் என்பது ஐராவதம் மகாதேவன் அவர்களின் கருத்து.
மனித குலத்தின் பண்பாட்டுக் குழுக்களை சமைக்கத் தெரிந்த, சமைத்துச் சாப்பிடாத என்று இரண்டு பெரும் பிரிவாக பிரிக்கலாம் என்கிறார் ஆய்வாளர் லெவி ஸ்டிராஸ். 1969-ஆம் ஆண்டு இந்திய மண்பாண்டங்கள் குறித்த தேசிய கருத்தரங்கத்தில் பேசிய இந்திய தொல்லியல் கழகத்தின் தலைவர் பி.பி லால் கிறிஸ்தவத்தின் முதல் சில நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ரோம நாட்டில் இருந்து இந்தியாவிற்கு திராட்சை மதுபானங்கள் இறக்குமதி செய்யப்பட்ட செய்திகளைத் தெரிவிக்கின்றன. இந்த இலக்கியச் செய்தி ஒரு குறிப்பு. இதை நம்பலாம், நம்பாமலும் விடலாம். ஆனால், அரிக்கமேட்டில் கனமான இரு கைப்பிடிகளுடன் கூடிய அம்போரா எனப்படும் கூம்பு வடிவ ஜாடிகள் கிடைத்துள்ளன. இந்த ஜாடிகள் இத்தாலியில் திராட்சை மது வகைகளை சேமித்து வைக்கவும் இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டன. இந்த ஜாடிகளின் உட்புறத்தில் ஒட்டி இருந்த உதிர் துகள்களை வேதியியல் பரிசோதனை செய்து பார்த்தபோது அவற்றில் திராட்சை மதுக்களின் எச்சமான பிசின் போன்ற பொருட்கள் காணப்பட்டன. அவற்றை வேதியியல் ஆய்வு செய்தபோது அவை ரோம நாட்டில் தயாரிக்கப்பட்ட மது வகைகளை ஒத்திருந்ததை அடையாளப்படுத்தியது. இதை சங்க இலக்கியம், “யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல்” அதாவது “யவனர்கள் கொண்டு வந்த குளிர்ந்த நறுமணமிக்க திராட்சை மது” என்று குறிப்பிடுகிறது. அதனால்தான் சங்க இலக்கியங்கள் வாழ்வியல் சார்ந்த துல்லியமான சித்தரிப்புகள் கொண்ட செவ்வியல் இலக்கியம் என்கிறோம்..
இந்திய நிலப்பகுதி வாரியாக அகழாய்வுகளில் கிடைக்கக்கூடிய மண்பாண்ட மரபுகளில் மேல்கங்கை சமவெளியில் மட்டும் சாம்பல் நிற பானைகள் கிடைக்கின்றன. அதன் பிறகு மெருகூட்டப்பட்ட வடக்கு கரும்பாண்டம் கிடைக்கிறது. ஆனால், மற்ற வட, தென் மற்றும் கிழக்குப் பகுதிகளில் அகழாய்வில் கருப்பு சிவப்புப் பண்டங்களின் சிதறல்களும், மெருகூட்டப்பட்ட வடக்கு கரும்பாண்டமும் கிடைக்கிறது. தென்னிந்தியாவின் சாம்பல் நிற மட்பாண்டங்கள் ஒருபோதுமே கிடைக்கவில்லை என்பதை அகழாய்வாளர்கள் யாரும் தீவிரமாக கருத்தில் கொள்ளவில்லை என்பது வியப்பை அளிக்கிறது. இந்தியாவில் கிடைத்துள்ள 80 சதவீத விழுக்காடு பானைக்கீறல்களில் சிந்துவெளி வரிவடிவங்களோடு ஒப்பிடக்கூடிய கீறல்கள் கொண்ட பானை சில்லுகள் தமிழ்நாட்டில் கிடைத்திருப்பது தீவிரமான ஆய்வுக்கு இதுவரை உட்படுத்தப்படவில்லை. சாம்பல் வண்ணம் தீட்டிய மட்பாண்ட மக்களுக்கும், கருப்பு சிவப்பு பாண்டு மக்களுக்கும் இடையில் நீண்ட காலம் இணக்கமான உறவு இல்லை என்பதை இந்த மண்பாண்டங்கள் இந்திய வரலாற்றுக்கு செய்தியாக தருகின்றன.
சிந்துவெளி நகர கட்டமைப்பில் முக்கிய பணி ஆற்றியவர்கள் செங்கல் தயாரிப்பவர்களாகவே இருந்திருப்பர். புழங்கு கலன்களையும், முதுமக்கள் தாழிகளையும் உருவாக்கும் மட்பாண்ட செய்பவர்களும் சமூக பொருளாதார படிநிலையில் உயர்ந்த நிலையில் இருந்திருப்பர். இதேபோன்று சங்க இலக்கியம், பானை செய்யும் குயவர்களை “முதுவாய் குயவ” என்று அழைக்கிறது. இதற்கு தொன்மை சிறப்பு மிக்க, அறிவு பொருந்தியவன் என்பது பொருள். “கலம் செய் கோவே” என்கிறது. அரசனை குறிப்பது போல் ‘கோ’ என்கிறது. தமிழ் சமூகம் பானை செய்யும் குயவர்களை அய்யனார் வழிபாட்டின் பூசாரிகளாக நியமித்திருக்கிறது. புறநானூற்றின் 228-ஆம் பாடலும், 256-ஆம் பாடலும் குயவனை ‘கோ’ என்று உயர்த்துகிறது. 238-ஆம் பாடல் முதுமக்கள் தாழியின் நிறம் சிவப்பு என்று தெளிவாகச் சொல்கிறது. எதிர் எதிர் திசையில் இருக்கும் ஓர் இடமும், ஓர் இலக்கியமும் சிவப்பு வண்ணத்தை உயர்த்திப் பிடிக்கிறது. சிந்துவெளி வரிவடிவத்தின் தொடக்கம் குயவர்களின் பானைக் கீறல்களில் இருந்து தொடங்கி இருக்கக்கூடும் என்கிறார் எம்.எ.கே . தவாலிக்கர். குறியீடுகளே குயவனிடமிருந்துதான் துவங்கி இருக்க வேண்டும் என்பது அவரின் கருத்து.
இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட கால கட்டங்களில் எழுத்தறிவு பெற்ற சாமானிய மக்களாக சிந்துவெளிக்கு உரியவர்களும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு உரியவர்களும் இருந்தார்கள் என்பதை சிந்துவெளி போலவே கீறல்கள் உள்ள பானை சிதறல்கள் தமிழ்நாட்டில் கிடைத்திருப்பது உரத்துச் சொல்லுகிறது.
பானைத்தடம் என்பது மக்கள் புலம்பெயர்ந்த தடத்தைச் சொல்வது. கருப்பு சிவப்பு பாண்டம் ஒருவகையில் இந்திய முழுமைக்கும் கிடைக்கும் இந்தியாவின் நாடு தழுவிய மட்பாண்டம் என்றால், சங்க இலக்கியம் இந்தியாவின் நாடு தழுவிய செவ்வியல் இலக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சிந்துவெளி உரத்துச் சொன்ன இன்னொரு இன்னொரு பொருள் செம்பு உலோகம். வெண்கல பாத்திரங்கள், கருவிகள், ஆயுதங்கள் மற்றும் அணிகலன்கள் என்று அதிலிருந்து உருவான பொருட்கள் கொஞ்சம் அல்ல. மொஹஞ்சதாரோவின் நடனப் பெண் சிற்பம் இன்றும் இடுப்பில் கைவைத்து ‘இன்னும் என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று இன்றைய அரசியலை கேட்டுக் கொண்டிருக்கிறது. அதே மெழுகு இழப்பு செயல்முறைதான் இன்று தஞ்சையின் சோழர் வெண்கல சிலைகளுக்கான அடிப்படை ஆதாரம். சிந்துவெளி நிலப்பகுதி கொண்டாடிய செம்பை சங்க இலக்கியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
நெடுநல்வாடையில் அரசின் மாளிகை பற்றிய சித்தரிப்பில் செம்பால் செய்யப்பட்டது போன்று நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள கோட்டை சுவர்கள் என்கிறது சங்க இலக்கியம். மதுரைக் காஞ்சியில் மதுரை நகரின் மதில் சுவரை செஞ்சுவர் என்று அடையாளப்படுத்துகிறது. வேளிர் மரபின் முன்னோர்களோடு தொடர்புடைய துவரை நகரின் கோட்டை சுவர் செம்பால் செய்யப்பட்டது போன்ற பொலிவுடன் இருந்ததாக கபிலர் சொல்கிறார். “செம்பு புனைந்து இயற்றிய சேண்” என்கிறார். அகநானூற்றின் பாழி நகரத்தின் கோட்டை செம்புடன் தொடர்பு படுத்தப்படுகிறது. புகழ் பெற்ற பாண்டிய நகரம் பற்றி சித்தரிக்கும் புறநானூறு மற்றும் நற்றிணை பாடல்கள் செம்பை உருவகிக்கின்றன. செம்பு ஓர் அரிய வகை உலோகம். அத்தனை மலிவாய் பயன்படுத்தப்படக் கூடியது அல்ல. ஆனாலும் ஏன் இலக்கியங்கள் செம்பு போன்ற சுவர் என்று செம்பை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது என்று கேள்விகள்தான் பெரிதாய் அங்கு நிற்கிறது.
ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட செம்பு கலவையில் இருந்த ஆர்செனிக், ஹரப்பா பண்பாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட செம்பு கலவையிலும் இருந்தது அதன் நீட்சியைச் சொல்கிறதா?
தென்னிந்தியா என்பது செம்பு காலத்தை தொடாமல் புதிய கற்காலத்திலிருந்து நேரடியாக இரும்பு காலத்திற்குச் சென்று விட்டது என்கிற கருத்துகளோடு இரும்பு காலத்தின் முன்னோடிகள் நாமென அறிவிப்பு வந்திருக்கும் இந்தச் சுழலில், செம்பு மற்றும் தாமிர உலோகம் பற்றிய ஏராளமான தகவல்கள் சங்க இலக்கியங்களில் எப்படி விரவிக் கிடைக்கின்றன என்கிற கேள்விகள், சங்க இலக்கியச் சித்தரிப்புகள் அதற்கு முற்பட்ட காலகட்ட நிலப்பகுதிகளின் மீள்நினைவாக இருக்க கூடுமா என்பதும் நம்முன் நிற்கும் பெருவினா. இது ஒரு புறம் இருக்க தமிழ்நாட்டில் இன்னும் தோண்டப்பட வேண்டிய தொன்மங்கள் ஏராளமாக இருக்கின்றன என்பதைத்தான் இந்த சிவப்பு வண்ணம் மீண்டும் மீண்டும் சொல்கிறது.
தமிழ்நாட்டு ஆண்கள் சிவப்பு நிறமுடைய பெண்களையே விருப்பமாக கொண்டிருந்தாலும், சங்க இலக்கியங்கள் கரிய நிற பெண்களைத்தான் கொண்டாடுகிறது. நற்றிணையின் 134 வந்து பாடல்
“அம் மா மேனி நிரை தொடி குறு_மகள் “
என்கிறது. அதாவது “அழகிய கரிய நிற மேனியையும் வரிசையான வளையல்களையும் கொண்ட சிறுமகளே!” என பதிவு செய்திருக்கிறது. அவ்வுருவம் கிட்டத்தட்ட மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட இடுப்பில் கைவைத்து நிற்கும் நாட்டியப் பெண் உலோகச் சிலையைப் போல இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பது ஆய்வாளர் ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் கருத்து.