இணைய இதழ் 116கட்டுரைகள்

கருணையின் தத்துவம் : சித்தாந்தன் கவிதையை முன்வைத்து- ஜெயபால் பழனியாண்டி

கட்டுரை | வாசகசாலை

கவிதைகள் ஊற்றெடுப்பதற்கு காரணம் தேவையில்லை. எங்கிருந்து வேண்டுமானும் ஒரு கவிதை பிறந்துவிடலாம். ஆனால், சில கவிதைகள் தன் பிறப்பைத் தீர்மானித்துக் கொண்டே பிறக்கின்றன. தான் இந்த உலகிற்கு சொல்ல நினைப்பது என்ன என்பதை முடிவு செய்து கொண்டே அவை இந்த உலகத்தில் வந்து பிறக்கின்றன. இதில் கவிஞனுக்கே பெரும் பங்குண்டு. நான் என் கவிதை வாயிலாக என்ன சொல்ல வருகிறேன். அதற்குள் பிரயோகிக்க வேண்டிய சொற்கள் என்ன. எதை எதனோடு நான் பொருத்திக் காட்ட வேண்டும், இது அத்தனையும் மனதில் வந்து படிமமாக அமர்ந்துவிடுகின்றன. அதற்கு கவிதை உருவாகும் சூழலும் ஒத்துழைப்பினை நல்குகின்றது. அப்படி கவிஞனின் துணையோடு உருவான ஒரு கவிதையை அதன் வடிவமைப்பிலிருந்தும் அதன் சொல்லாடலில் இருந்தும் தனித்துப் பிரித்து ஓர் அர்த்தம் கொள்ள முற்படுகிறேன். அதற்காக நான் தேர்வு செய்த கவிதை சித்தாந்தன் எழுதிய “கருணை” எனும் தலைப்பிலான கவிதை.

இந்த கவிதை குறித்து நாம் விரிவாக பேசுவதற்கு முன்பாக அந்தக் கவிதையை முதலில் நாம் படித்துவிடுவது நல்லது.

     கருணை

     இன்று யார்பொருட்டும்

     நான் கருணை கொள்ளவில்லை

     தூரமாய்க் கொக்கொன்று

     கொத்திச் செல்லும் மீனின் அந்தரிப்பு

     என் கண்களில் உறைபடமாகின்றது

     தேவன்

     கருணையின் கடலளவு திரவத்தை

     என் கிண்ணங்களில் நிறைக்கின்றார்

     அது நுரைத்துத் ததும்புகிறது

     பின்

     கருணையின் மகத்துவம் பற்றிய

     ஒரு பாடலை இசைக்கிறார்

     அவரின் முகத்தில்

     ஏமாற்றத்தின் ரேகைகள் படர்கின்றன

     அவர் தந்திரமாக

     புன்னகை ஒன்றின் மூலம் மறைக்க முயல்கிறார்

     நுரையடங்கிய திரவத்தைப் பருகிய கிண்ணங்களை

     நான் கவிழ்த்து வைக்கின்றேன்

     அதனுள் அகப்பட்டுக்கொண்ட சிற்றெறும்பை

     விடுவித்துவிடுகின்றார் தேவன்

     நான் சிரித்துக் கொள்கிறேன்.

  • சித்தாத்தன் (136, மணல்வீடு, இதழ் எண்: 53, 2024)

கவிதையின் தலைப்பு கருணை. இங்கு கவிஞர் பேச விழைந்த பொருளும் அதனைக் குறித்துதான். கருணை என்பதை ஒரு வரியில் நாம் பொருள் புரிந்து கொள்ள முடியாது. அது பல்வேறு அர்த்த தளங்களுக்குள் செல்லக்கூடிய ஒன்று. இருந்தபோதும் நம்முடைய பொதுபுத்தி சொல்லும் உண்மை என்னவெனில் ஒருவருக்கு நாம் செய்யும் கைமாறு, உதவி, நன்மை என்று இப்படி எடுத்துக் கொள்ளலாம். அதனை வெளிப்படுத்துவதாகவே இக்கவிதை அமைகின்றது. ஆனால், இக்கவிதை பயணிக்கும் பாடுபொருளை நாம் அலசி ஆராய வேண்டியுள்ளது.

ஒரு கவிதையை வாசித்து மீண்டும் மறுவாசிப்பிற்கு உட்படுத்தும்பொழுது அது வேறொரு அர்த்த தளத்திற்குள் நம்மை கூட்டிச் செல்லலாம். எழுத்தை, சொற்களை அல்லது வார்த்தைகளை உடைத்து அதனை வேறு ஒன்றினோடும் தொடர்புப்படுத்திக் கொள்வதற்கு மறுவாசிப்பு துணைபுரிகின்றது. “ஓர் ஆசிரியன் கையாள முடிந்த கூறுகளுக்கும் கையாள முடியாத கூறுகளுக்கும் இடையே ஆசிரியனே உணர்ந்திராத ஓர் உறவைக் கண்டறிவதாகக் கட்டவிழ்ப்பு வாசிப்பு முயலவேண்டும். வெளிப்படையாகத் தெரியாதனவற்றை அது பார்வைக்குள் கொண்டு வரவேண்டும்” என்பார் அறிஞர் டெரிடா. (நவீன இலக்கிய கோட்பாட்டு நோக்கில் இலக்கியங்கள், பக்.236). இந்த அடிப்படையில் கவிஞர் சித்தாத்தன் எழுதிய கவிதையை நான் அலச முற்படுகின்றேன்.

நேரும் முரணும்

          கவிஞன் தன் கவிதை வாயிலாக நேர்மறையான ஒரு சிந்தனையை வைக்க முனைகிறான். ஆனால், கவிதையின் ஆரம்பம் என்பது ஒரு முரணில் இருந்து தொடங்குகின்றது. “இன்று யார்பொருட்டும் நான் கருணை கொள்ளவில்லை” இந்த இரண்டு வரி அடுத்த வரிகளுக்கு செல்லும்முன் பொதுப்படையானது. சாதாரணமாக யார் வேண்டுமானாலும் இதனைத் தன்னோடு பொருத்திக் கொள்ளலாம். பெரும்பாலான மனிதர்களுடைய இயல்பு வாழ்க்கை பெரும்பாலான நாட்களில் இப்படித்தான் நகர்கின்றது. யார் மீதும் எதன் பொருட்டும் கருணை கொள்ளாத வாழ்க்கையைக் கடைபிடிப்பதாகவே நாட்கள் நகர்கின்றன.

          முதல் இரு வரிகளைக் கடந்து அடுத்தடுத்து வரிகளை நாம் இணைத்துக் கொள்ளும் பொழுது ஒரு குறிப்பிட்ட கொக்கின் செயல்பாட்டிற்கும் அதன் சூழலுக்கும் பொருந்திப் போகின்றது. ஒரு காட்சிப்படுத்துதல் நிகழ்வு கவிதையை வாசிப்போா் மனதில் படிமமாக வந்து படிக்கின்றது.

இன்று யார்பொருட்டும்

     நான் கருணை கொள்ளவில்லை

     தூரமாய்க் கொக்கொன்று

     கொத்திச் செல்லும் மீனின் அந்தரிப்பு         

          என் கண்களில் உறைபடமாகின்றது

இந்த வரிகளில் “மீனின் அந்தரிப்பு” என்ற வார்த்தையை கவிஞர் கையாள்கிறார். அந்தரிப்பு என்பதற்கு உதவியின்மை, தனித்து விடுதல், பொறுப்பு துறப்பு என்னும் பொருள் விளக்கத்தை அகராதிகள் வெளிப்படுத்துகின்றன. கருணையே காட்டப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்ட கொக்கிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாத நிலையில் தனித்துவிடப்பட்ட ஓர் உயிரியாய் மீன் உள்ளது. பலநேரம் கருணையற்ற சில மனிதர்களிடம் கருணையின் அர்த்தத்தை நாம் தேட முடியாது. இங்கு நாம் மீனிற்காக குரல் கொடுப்போமெனில் கொக்கின் செயல் நமக்கு முரணாகத் தோன்றும். அதேவேளை கொக்கின் குணத்தை இயற்கையோடு அணுகும்பொழுது அதில் நாம் குறையைத் தேடப்போவதில்லை. ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் கவிஞன் தான் பின்னால் சொல்ல நினைப்பதற்கு கொக்கின் செயல் வாயிலாக ஒரு முரணான விசயத்தை முன் வைக்கின்றார். “யார் பொருட்டும் கருணை கொள்ளவில்லை” என்று அப்பட்டமாகக் கூறி ஆரம்பிக்கின்றார்.

துணைகோடல்

          தன் கவிதை வாயிலாக ஒரு கருத்தைச் சமுதாயத்திற்கு தான் மட்டும் சொன்னால் அது சரிபட்டு வராது என எண்ணத் துணிந்த கவிஞன் உடன் கடவுளைத் துணைக்கு அழைக்கின்றார். தேவன் என்னும் பாத்திரத்தைப் படைத்து தனது நாடகத்தை நடத்த முற்படுகின்றார். கவிஞனுக்கும் தேவனுக்கும் ஒரு மேசையில் உரையாடல் நிகழ்கின்றது. புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ சிறுகதையை இங்கே நாம் நினைவூட்டிக் கொள்ளலாம். ஒருவேளை கவிஞருக்கும் இந்தச் சிறுகதையின் தாக்கத்தால் எழுந்த கவிதையாகக்கூட இருக்கக்கூடும். கவிதையின் ஆரம்ப வரிகளில் கடவுளை முன்னிலைப்படுத்துகின்றார். அவரை நகைப்பிற்குள்ளாக்கின்றார். பின் தன்னுடைய செயல்பாட்டின் வாயிலாக கடவுளை மகிழ்ச்சிப்படுத்துகின்றார். தேவன் தொடங்கி அடுத்தடுத்த வரிகளைப் பார்க்கும்பொழுது நமக்கு பிடிபடும்.

          கவிஞர் கடவுளின் வாயிலாக கருணைக்கு ஓர் அர்த்தத் தளத்தை உருவாக்க முனைகின்றார். கடவுளிடம் மட்டுமே கருணை உள்ளது. அதன் ஒரு துளியை எதிர்நிற்பவருக்கு ஊட்ட நினைக்கின்றார் என்பதாக கவிதையின் வரிகளை நாம் புரிந்துகொள்ள முடியும். இப்படி கடவுளின் அடுத்தடுத்த செயல்பாடுகளின் வாயிலாக கருணையின் தத்துவத்தை கட்டமைக்க முயல்கின்றார் கவிஞர்.

கருணையின் கட்டமைப்பு

          கருணை என்பது கண்ணுக்குத் தெரியாத உருவம். அதனை நாம் அளவுகோலிட்டு காட்டிவிட முடியாது.

தேவன்

     கருணையின் கடலளவு திரவத்தை

     என் கிண்ணங்களில் நிறைக்கின்றார்.”

கிண்ணத்தில் கடலை நிறைத்துவிட முடியாது. இங்கு கருணை கடல் நீரோடு ஒப்பிடப்படுகின்றது.

     “அது நுரைத்துத் ததும்புகிறது” கிண்ணங்களில் நிரப்பப்பட்ட கருணையானது நுரை ததும்பி வெளியே வர முற்படுகின்றது. கடலும் தன் நுரையை கரைக்குக் கொண்டு வந்து தள்ளிக்கொண்டே இருக்கும். இங்கு கிண்ணங்களில் நிரப்பப்பட்ட கடலளவு கருணையின் திரவம் தன் இருப்பைக் காட்டிக்கொள்ள நினைக்கின்றது.

பின்

     கருணையின் மகத்துவம் பற்றிய

     ஒரு பாடலை இசைக்கிறார்

     அவரின் முகத்தில்

     ஏமாற்றத்தின் ரேகைகள் படர்கின்றன

     அவர் தந்திரமாக

     புன்னகை ஒன்றின் மூலம் மறைக்க முயல்கிறார்

கருணை என்பதை நாம் அப்படி விட்டுவிட முடியாது. உலக மக்களுக்கு புரியவைக்க வேண்டும். அதன் மகத்துவம் ஒரு மேசையில் முடிந்துவிடக்கூடிய ஒன்றல்ல. அதனை ஒரு பாடல் வாயிலாக உலகிற்கான கல்வியாக கடவுள் எடுத்துரைக்க நினைக்கின்றார். ஆனால், சூழல் அதற்கு உகந்ததாக இல்லை. இந்த உலகமும் அப்படித்தான். நாம் நினைத்த அத்தனையையும் நாம் நினைத்த நேரத்தில் நிகழ்த்திவிட முடியாது. ஏமாற்றத்திற்கு உள்ளாகிறார் கடவுள். அதனைக் குறிப்பிடுவதுவே “அவரின் முகத்தில் ஏமாற்றத்தின் ரேகைகள் படர்கின்றன” என்னும் வரிகள். தனது தோல்வியை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய தலைக்கணம் அதற்கு உடனே இடம்கொடுத்துவிடாது. அதனை மறைப்பதற்கே ஒரு புன்னகை தேவைப்படுகின்றது. இந்த புன்னகை என்பது இயலாமையால் எழக்கூடிய ஒன்றாக நாம் பார்க்கிறோம்.

கடவுளால் முடியாத ஒன்றினை கவிஞனால் நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஏனெனில் கவிதையைப் படைப்பது அக்கவிஞன் அல்லவா? கருணையின் சரியான விளக்கத்தை கடவுளுக்கு கற்றுத்தரும் முயற்சியில் கவிஞர் இறங்கிவிடுகின்றார்.

நுரையடங்கிய திரவத்தைப் பருகிய கிண்ணங்களை

     நான் கவிழ்த்துவைக்கின்றேன்

     அதனுள் அகப்பட்டுக்கொண்ட சிற்றெறும்பை

     விடுவித்துவிடுகின்றார் தேவன்

     நான் சிரித்துக்கொள்கிறேன்.”

பல தத்துவ விளக்கங்களுக்கெல்லாம் பிடிபடாத கருணை இயல்பான நிகழ்வொன்றின் வாயிலாகத் தனக்கான ஆடையைத் தானே உடுத்திக் கொள்கின்றது. கிண்ணங்களுக்குள் அகப்பட்டுக்கொண்ட சிற்றெறும்பை மீட்பதின் வாயிலாக கருணை தனக்கான அர்த்தத்தை நிறைவேற்றிக் கொள்கின்றது. அதற்கு சாட்சி கவிஞனின் சிரிப்பு.

          கவிதையின் ஆரம்பத்தில் மீனிற்கு கொக்கிடமிருந்து கிடைக்காத உதவி, கவிதையின் இறுதியில் எறும்பிற்கு கடவுளிடமிருந்து கிடைக்கின்றது. ஆகவே, இங்கு கருணையின் தத்துவத்தை கடவுளே கட்டமைக்கின்றார்.

          மேலும் இந்தக் கவிதையில் நிறைத்தல், இசைத்தல், மறைத்தல், படர்தல், கவிழ்த்தல் என்னும் சொற்களின் வாயிலாக கருணை அடுத்தடுத்த கட்டத்திற்குக் கடத்துவதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

கவிதையின் சூழல்

          கவிதை பேச விளையும் பொருள் கருணை குறித்ததாகும். அதன் தலைப்பே அதனை உணர்த்தி விடுகின்றது. உரையாடல் வடிவில் நிகழ்த்தப்படும் கவிதை அந்த உரையாடலுக்கு முன்பாக ஒரு நிகழ்வை நினைவூட்டல் அல்லது காட்சிப்படுத்துதல் வாயிலாக தான் பின்னால் பேசவிருக்கும் கருத்திற்கு வலு சேர்த்துக் கொள்கின்றது. உரையாடலுக்கு முன்பாக விவரிக்கப்படும் சூழலுக்கும் உரை நிகழ்த்தப் போகும் சூழலுக்கும் எவ்வித தொடர்புமில்லை.

          இங்கு கவிஞனின் உரையாடலுக்கு வருவோம். கவிஞன் மற்றும் கடவுளின் உரை ஒரு மேசையில் அமர்ந்த வண்ணம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இங்கு கவிஞன் நிஜமானால் கடவுள் கற்பனை பாத்திரம். கவிஞனும் நிஜமில்லை கடவுளும் நிஜமில்லையென்றால் உரையாடலே ஒரு கற்பனை வடிவம். ஒருவேளை இந்த உரையாடல் உண்மையாக நடைபெறும் பட்சத்தில் அந்த சூழலை நாம் மது அருந்தும் விடுதியாகவே உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். அல்லது கவிஞன் தன் வீட்டின் தனியறையில் தன் கற்பனைக் கடவுளோடு மது அருந்த ஆயத்தமாகியிருக்கலாம். கிண்ணங்களில் ஊற்றப்படும் கருணையின் திரவம் நுரை ததும்புகின்றது. இதனால் நாம் இப்படி அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும். அதன் பிறகாக எழும் பாடல், ஏமாற்றம், புன்னகை, மீண்டும் கிண்ணங்கள் கவிழ்ப்பு, கவிஞனின் சிரிப்பு என்று தனக்கான பின்னணியைக் கவிதை உருவாக்கிக் கொண்டுள்ளது.

          கடவுளின் கருணையை நகையாடுவதற்கு புதுமைப்பித்தன் கந்தசாமியைப் பயன்படுத்திக் கொள்கின்றார். இங்கு கவிஞர் தன்னையே கவிதைக்குள் மறைபொருளாக வைத்துக் கொண்டுள்ளார். மொத்தத்தில் கவிதை கருணையின் வடிவம்!

-jaayapal@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button