இணைய இதழ் 116சிறுகதைகள்

காட்சியின்பம் – பாக்கியராஜ் கோதை

சிறுகதை | வாசகசாலை

இன்று தூய்மையான வெள்ளை நிற உடையைத் தேர்வு செய்து உடுத்திக் கொண்டேன். வழக்கத்திற்கு மாறாக அறை நண்பனின் வாசனைத் திரவியத்தையும் என் மேல் தெளித்துக் கொண்டு கிளம்பினேன். அது ‘ரோமன் அஃபேர்’ என்கிற பாட்டிலாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

சில நாட்களாகவே, இன்று எடுக்கப் போகும் அந்தக் காட்சி பற்றிப் பலரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னிடம் விசாரித்து இருந்தனர். இந்தத் திரைப்படத்திற்கான பணித்திட்ட கால அட்டவணையை (schedule) நானே பார்த்துக் கொள்வதால் எந்தெந்த காட்சிகள் எந்தெந்த நாள்களில் திட்டமிட வேண்டும் என்பதை முடிவு செய்யும் இடத்தில் இருந்தேன்.

படப்பிடிப்புத் தளத்திற்கு எப்பொழுதும் முதலில் வருவது நான்தான். அப்போதுதான் மேலாளருடன் சேர்ந்து அன்றைய நாளில் எழக்கூடிய சிக்கல்களை முன் கூட்டியே கணித்து, அதை உடனடியாகச் சரி செய்ய முடியும்.

உதவி இயக்குநர்களுக்கான ஓய்வூர்தி (caravan) சென்று அன்றைய நாளுக்கான காட்சித் தாளை மடிக்கணினியில் இருந்து படி எடுத்து, எழுது பலகையில் (writing pad) மாட்டி வைத்தேன். ‘காட்சி 34 / படிக்கட்டு இடுக்கு / பகல் / உள்’ என்பதை வாசிக்கும் குரல் கேட்டுத் திரும்பினேன். சிவராஜ் எட்டிப் பார்த்தபடி நின்றிருந்தான். அவன் சிரிப்பு, இந்தக் காட்சிக்காக எத்தனை நாள் தவமாகக் கிடந்தான் என்பதை வெளிப்படுத்தியது.

“சார் , எனி ஹெல்ப் வேணுமா?” என்றான். நான் பதில் ஏதும் பேசமால், யாரும் படித்து விடக் கூடாது என்பதற்காகக் காட்சித்தாளைப் பின்புறமாகத் திருப்பி அட்டையில் மாட்டிவிட்டேன்.

“என்ன சார், முடிகிடி வெட்டி டை அடிச்சீங்களோ?” ஆளு மணக்க இருக்கீங்களே” என்றான். இந்தக் காட்சியைக் காணத்தானே இப்படி அலங்கரித்து வந்துள்ளீர்கள் என்பதை மறைமுகமாகச் சொல்வது போல அவன் பேச்சு அமைய, “செட் அசிஸ்டெண்ட்ட வச்சு புளோரத் தொடைக்கச் சொல்லு, சீக்கிரம்” என்று எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னேன். அவன் கதவைத் திறக்கும் பொழுது “என்ன சிவ்வுண்ணா, டைரைக்டர் உன்ன அவமானப்படுத்தி திட்டுனதுக்கப்பறமும் நீ வேலைய விட்டுப் போகாம இருக்கன்னா, அதுக்குக் காரணம் இந்த சீனுதான” என்று நக்கல் அடித்தபடி நுழைந்தான் அரவிந்த்.

ஆச்சர்யமாக உதிப் தவிர அனைத்து உதவி இயக்குநர்களும் நேரமே வந்திருந்தனர். எனக்கென்னமோ அனைவருமே இன்று, தங்களைக் கொஞ்சம் கூடுதலாகவே அலங்கரித்து வந்திருப்பதாகத்தான் பட்டது.

நாயகன் இன்னமும் வரவில்லை. அவரும் என்னைப் போல உதவி இயக்குநராக இருந்து, நாயகனாக உயந்திருக்கிறவர். எவ்வித பந்தாவும் இருக்காது. என்னை அன்பாக ‘டூட்’ (Dude) என்றே அழைப்பார். அது என் வயதைக் குறைத்துக் காட்டும் என்பதால், அப்படி அழைப்பது எனக்குப் பிடித்திருந்தது.

நேற்றே எங்கள் இயக்குநர் அவரிடம், “நாளைக்கு வரும் போது வாய்க்குள்ளேயும் நல்லா சோப்பு போட்டு குளிச்சிட்டு வாடா, இல்லன்னா ஹீரோயினி அம்மா நடிக்க மாட்டேன்னு சொல்லிடப் போறாங்க” என்று நக்கலாகச் சொல்லிவிட்டுத்தான் போனார்.

“மேக்அப் டீம் மவுத் ஸ்பிரே வாங்கிட்டு வந்துட்டாங்களான்னு பாத்துட்டு வா, அல்ட்ரா மிண்ட் பிளேவர்டா, அடிச்சு வொர்க் ஆகுதான்னு கையோட டெஸ்ட் பண்ணி பாத்திரு” என்று அரவிந்திடம் சொன்னேன். ஓடினான்.

போன ஷெட்யூலிலேயே இந்தக் காட்சி எடுக்கப்பட வேண்டியது, ஆனால், கதைநாயகியின் பிரியத்திற்குரிய வாஜி எனும் நாய் அண்மையில் இறந்து விட்டதால், இந்த மாதிரியான காட்சியில் தற்பொழுது நடிக்க வாய்பில்லை என்று அவள் அழுதபடி என்னிடம் சொன்னாள். தள்ளிப்போட வேண்டிய சூழல்.

இந்தக் காட்சியை, எந்த நாளில், எப்படி எல்லாம் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி, இயக்குநர் என்னிடம் விவாதித்து இருந்தார். குறிப்பாக நாயகியின் மாதவிடாய் காலத்தின் பொழுது இக்காட்சியைத் திட்டமிட வேண்டாம் என்று இயக்குநர் எச்சரித்து இருந்தார். ‘தேவையில்லாத எரிச்சலா இருந்தா சீன ஒழுங்கா எடுக்க முடியாது’ என்பது அவரது நோக்கு. நான் இந்தக் காட்சியின் விவரங்களைக் கூறி, நாயகியின் மாதவிடாய் சுழற்சியை அவள் மேலாளர் மூலமாக அறிந்து கொண்டுதான் இன்று திட்டமிட்டிருக்கிறேன்.

நாயகன் அணியும் வெள்ளை உடையில் எந்தக் கறையும் இல்லை என்பதை, நானே உடை வடிவமைப்பாளரிடம் நேரடியாகச் சென்று கண்டு, உறுதிபடுத்திக் கொண்டேன். எதற்கும் அதே போல இன்னும் இரண்டு உடை வாங்கி வைக்கவும் சொல்லியிருந்தேன். ஒரு சிறு அழுக்கு கூட, அவருடன் நடிக்கும் நாயகிக்கு ஒவ்வாமை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். மேலும் நாயகன் மீது தெளிக்கப்பட வேண்டிய ‘ரோமன் அஃபேர்’ என்கிற வாசனைத்திரவியம் கூட நாயகிக்குப் பிடித்ததாய்தான் வாங்கி வைக்கச் சொல்லி இருந்தேன். இந்தத் தகவல்கள் எல்லாம் இயக்குநருக்குத் தெரியவந்தால், “நல்லா காட்டுறடா உன் டீடெய்ல” என்று என்னை நக்கலடித்திருப்பார்.

“உதிப்பண்ணா உங்ககிட்ட உடனே ஸ்கிருப்ட் பேட் வாங்கிட்டு வரச் சொன்னார்ணா” ஓடிவந்த கணேஷ் மூச்சிரைக்கச் சொன்னான். “அவனயே வரச் சொல்லு” கடுப்போடு பதிலளித்தேன்.

உதிப்பும் நானும் ஒரே நாளில் ஒன்று போலவே எங்கள் இயக்குநரிடம் வேலைக்குச் சேர்ந்தோம். கடந்தமுறை பணியாற்றிய திரைப்படத்தில் நான்தான் நடிகர்களுக்கு வசனங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய காட்சித்தாள்களைப் (Script pad) பார்த்துக் கொள்வேன். நான் வசனங்களை உச்சரிக்கும் முறை இயக்குநருக்கு மிகப் பிடிக்கும். படப்பிடிப்புத்தளத்தில் ‘பேட்’ கையில் வைத்திருப்பதென்பது ஒரு கெத்து, ‘இவர்தான் இயக்குநருக்கு அடுத்தபடி’ என்று மற்றெல்லோருக்கும் தெரியவைக்கும் கருவி அது. நடிகர்களுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் இதில்தான் அதிகம்.

ஷெட்யூல் திட்டமிடலிலும் நடிகர்களோடு பேச வேண்டியிருக்கும்தான், ஆனால், மேனேஜர்களே பெரும்பாலான ஊடகக் கருவியாக மாறி விடுவார்கள். சமயங்களில் நடிகர்களின் அவசர வேலைகளுக்கு ஏற்ப தேதியோ நேரமோ மாற்றித்தர முடியாவிட்டால், ஷெட்யூல் பார்க்கிறவர்கள் மீதுதான் அவர்களின் கோபம் கொப்பளிக்கும். சிறு தவறும் பல இலட்சம் செலவுகளை இழுத்து விட்டுவிடும். தயாரிப்பாளரிடமும் கெட்ட பெயர் வாங்கித் தருகிற முதன்மைத்துறை, இந்த ஷெட்யூலிங். அணுக்குண்டைக் கையில் வைத்திருப்பது போல, எந்நேரமும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தத் திரைப்படத்தில் முதலில் உதிப்தான் ஷெட்யூல் பார்க்கத் தொடங்கினான். தயாரிப்பாளர் நேரடியாக இயக்குநரிடம் வந்து உதிப் ஷெட்யூல் பார்ப்பதாக இருந்தால் சரி வராது என்றார். சென்றமுறை அவனால் ஏகப்பட்ட பிரச்சனைகள், ஏழு நாட்கள் படப்பிடிப்பு அதிகமாகமாகி விட்டதாகவும் ஆதங்கப்பட்டுப் பேசினார். இம்முறை அவரே அனுபவமுள்ள ஒரு ஷெட்யூல் டைரைக்டரை இங்கு அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். ஆனால், இயக்குநரோ புதியதாக வருகிறவன், தயாரிப்பாளருக்கு மட்டுமே சாதகமாக நடந்து கொள்வான் எனக் கருதி, என்னை ஷெட்யூல் பார்க்க வைப்பதாகச் சொல்லி தயாரிப்பாளரைச் சமாதானம் செய்து அனுப்பிவிட்டார். என் கைக்கு ஷெட்யூலிங் வர, உதிப்பின் கைக்கு ‘பேட்’ மாறிவிட்டது.

உதிப்புக்குத் தனியாக ஓர் இடத்தில் நாற்காலி போட்டு சிற்றுண்டி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.  அவன் மடியில் வெள்ளை நிறப் பூத்துண்டு. இயக்குநர் போன்ற தோரணையுடன் அமர்ந்திருந்தவன், என்னைப் பார்த்ததும் “நண்பா, வா வந்த வேலைய முதல்ல பாப்போம்” என்றான். உணவு பரிமாறிக் கொண்டிந்தவர் ஓடிச் சென்று எனக்கும் ஒரு நாற்காலி எடுத்து வந்தார். “ரெண்டே நிமிசம் சார், சாருக்கும் டிபன் எடுத்துட்டு வந்துர்றேன்’ என்று உதிப்பிடம் அனுமதி கேட்டு, கிளம்பியவரை இடைமறித்து, “வேண்டாம்ணே, எனக்கு நிறைய வேலை கிடக்கு” என்றேன். “நண்பா, பட்டினி கிடந்து வேலை பார்த்து அப்படி என்ன சாதிக்கப் போறோம்? நாளைக்கு உடம்புக்கு எதாவது பிரச்சன வந்தா இவனுங்களா பாத்துப்பாங்க, உங்களுக்கு வேற இன்னும் கல்யாணம் ஆகல, யார் இருக்கா, சொல்லுங்க” என்று அக்கறைப் பட்டான்.

வேலை இவ்வளவு கிடக்கும் பொழுது எப்படி இவனால் எந்தப் பதற்றமும் இல்லாமல் சாப்பிட முடிகிறது என்று வியந்திருக்கிறேன். அவனின் இயல்பே அதுதான். ‘கூல் ஃகய்’ என்றே அவனை நாயகி அழைப்பாள்.

உண்மையில் எனக்கு பேட் பிடிப்பதில்தான் பெரு விருப்பம். அதை இவன் பறித்துக் கொண்டானே என்கிற ஆற்றாமை எனக்கு அதிகமிருந்தது. அதுவும் தவறிழைத்து, பதவி கீழிறக்கப்பட வேண்டியவனுக்குப் பதவி உயர்வு கிடைத்தது போல, பேட் கிடைத்திருப்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அவன் பொறுமையாக உண்பதைப் பார்க்கச் சகிக்காமல், என் கையில் இருந்த காட்சித்தாளை உதிப்பிடம் கொடுத்துவிட்டு நகரும் போது, “ஹாய் டூட்ஸ்” என்று நாயகன் எங்களை நோக்கி ஓடி வந்தார்.

“ஒரே ஷிவரிங்கா இருக்கு. எப்படி பண்ணப்போறேன்னு தெரிலயே” என்றார். தரையில் முட்டியிட்டு அமர்ந்தபடி பேசியது, உண்மையில் அவருக்கு இந்தக் காட்சியின் மீதான ஆர்வத்தைவிட, பயமே அதிகமாக இருந்ததை என்பதை உறுதி செய்தது. அவர் அமர்ந்த விதத்தைப் பார்த்து, பலரும் பதறியபடி நாற்காலி கொண்டு வந்து போட்டனர்.

நாற்காலின் நுனியில் அமர்ந்தபடி, “சீன் படிச்சிட்டீங்களா டூட்?” என்றார்.

நான் ஏற்கனவே படித்திருந்தேன். இரவில் இயக்குநர் சில பல திருத்தங்களைச் செய்திருந்தார். உதிப் இன்னமும் படிக்கவில்லை. ஆனால், தான் படித்துவிட்டதாகவும், சாப்பிட்ட பிறகு இந்தக் காட்சியைப் பற்றி விவாதிக்கலாம் என்றும் பொய் சொன்னான். உடனே “சூப்பர் டூட், பிளீஸ் டூட், அப்பறம் எதாவது சொதப்பிட்டா, எல்லார் முன்னாடியும் டைரக்டர் கிட்ட பாட்டு வாங்கி, அசிங்கமா போய்டும்” என்றார் நாயகன். “வேணும்னா டைரக்டர் வர்றதுக்கு முன்ன கேரவேன்லயே ஒரு மானிட்டர் பாத்துடலாமா? என்ன நண்பா?” என்று எனக்குக் கண்காட்டி, நாயகனின் பதற்றதைப் புரிந்து கொள்ளாமல் நக்கல் சிரிப்பு சிரித்தான் உதிப். தொழில்மேல் அக்கறை உள்ள கலைஞர்கள் யாராவது இப்படிப் பேசுவார்களா என்ன ?

பொதுவாக எந்தக் காட்சியானாலும் நடிகர்களை, அந்தக் காட்சிக்குள் இழுத்து வருவது ஒரு கலை. இயக்குநராக வர வேண்டியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதில் முதன்மையானது இதுவே என்பர். நடிகர்களைக் கால்நடைகளைப் போல நடத்த வேண்டுமென இயக்குநர் ஹிட்ச்ஹாக் சொன்னது ஹாலிவுட்டில் மிகப் பெரிய சர்ச்சையானது. எங்கள் இயக்குநருமே அப்படித்தான் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார். இந்தப் பக்கம் திரும்பி, இடது இமைகள் மூன்று முறை துடிக்க வேண்டும், அதன் பிறகே கண்ணீர் வர வேண்டும் என்றால், அது அப்படியேதான் வர வேண்டும். அது சரியாக அமையும் வரை ஐநூறு முறை கூட எடுப்பார். எனக்கு அந்த வழிமுறை முற்றிலும் ஒத்துவராது, அது நடிப்புத்திறனை மிக செயற்கையாக வெளிக்கொண்டு வந்துவிடும் என்பது என் ஆழமான நம்பிக்கை. எனக்கு, அதே ஹாலிவுட்டின் இன்னொரு இயக்குநர் ஸ்பைக் லீ சொன்னது போல ‘நடிகர்கள் அந்தக் கதைப்பாத்திரத்திற்குள் செல்வதற்குண்டான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களுக்கான சுதந்திரத்தைத் தந்தால், அவர்களின் பதற்றம் நீங்கி, இயல்பான உணர்ச்சிகளை வெளிப்பட வைத்துவிட முடியும்’ என்ற கருத்தில்தான் உடன்பாடு. ஆனால், எங்கள் இயக்குநர் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்ததில் இரண்டு நடிகர்கள் தேசியவிருதுகளே வாங்கியிருக்கிறார்கள்.

இந்தக் காட்சியில் இருந்த வசனங்களை நேற்று நள்ளிரவில் போன் செய்து, நீக்கிவிடச் சொல்லி சில திருத்தங்களைச் சொல்லியிருந்தார் இயக்குநர். பேட் பிடிக்கும் துணை இயக்குநர் (Pad Associate) என்ற வகையில் உதிப்புக்குத்தான் அவர் முதலில் போன் செய்திருக்கிறார். அவன் எடுக்கவில்லை என்றதும், எனக்கு அழைத்து மாற்றத்தைச் சொல்ல, அப்பொழுதே அதைத் திருத்தி முடித்திருந்தேன்.

காட்சியை இயக்குநர் சொன்னது போல, மாற்றி எழுதும் போதே, எனக்கு ஒரு மாதிரி தவிப்பாகிவிட்டது. மூச்சு எத்தனை முறை வர வேண்டுமென்ற குறிப்பினையும் கொடுத்திருந்தார். கனவில் நாயகனுக்குப் பதிலாக, நான் அந்தக் காட்சியில் மெய்யாகவே நடித்துக் கொண்டிருந்தேன். அருகில் படுத்திருந்தது நாயகிதானா என அறிவதற்குள் தூக்கம் கலைந்துவிட்டது.

நான் நாயகனிடம், இந்தக் காட்சி எடுக்கப்படும் பொழுது, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அனுமதி, ஆகையால் பதற்றம் வேண்டாம் என்று அமைதியாக்க முயன்றேன். உதிப் உணவை முடித்துவிட்டு, தனியே போய் ஒரு சிகரெட் ஊதினான். புகைப்பிடித்தலில் கூட அவன் இயக்குநரின் தொனியைப் படி எடுப்பது போல எனக்குப் பட்டது. இந்தக் காட்சிக்காக நாயகன் சிகரெட்டைத் தவிர்த்துவிட்டார்.

இயக்குநரிடம் பேட் பிடிப்பது பெரும் பொறுப்பும் பதற்றமும் மிகுந்த செயல். ஒரு சிறு பிழைக்கும் பட்டென்று சினமடைந்து கத்திவிடுவார். சில சமயங்களில் அதைப்பிடிங்கி நம் மீது எறிந்தும் விடுவார். ஒரு காவல்நிலையக் காட்சி எடுக்கும் பொழுது சொதப்பிய (எங்களுக்கும் முன்னர் வேலை செய்த) ஒரு துணை இயக்குநரை லத்தியால் வெளுத்திருக்கிறார் என்கிற செய்தி அனைவரும் அறிந்த ஒரு வலைப்பேச்சு சினிமா செய்தி.

நாயகியின் ஒப்பனை உதவியாள் முதல் கலை இயக்குநர் வரை அனைவரிடமும் தேவையான அனைத்து வேலைகளையும் மிச்சமின்றி நிறைவேற்றி, தயாராக வைத்துவிடச் சொன்னேன். இந்தக் காட்சியில் எந்தவித சொதப்பலும் இன்று நடந்துவிடக் கூடாது என்பதில் குறிக்கோளாக இருந்தேன்.

இந்தக் காட்சி எடுக்கும் பொழுது யார் யார் உள்ளிருக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்டால் என்ன செய்வதென்று, பேட் பிடிப்பதால் உதிப், பெண் உதவி இயக்குநர் இலக்கியா, ஒளிப்பதிவாளர், குவியக் கலைஞர்(Focus Puller) உள்பட ஆறு பேரை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதி வைத்திருந்தேன். ஷெட்யூலிங் பார்ப்பவருக்கு அங்கு வேலையில்லை எனினும் என் பெயரையும் அதில் நடுவாக இணைத்திருந்தேன். முன்னர் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் எந்தக் காட்சியிலும் நான் அருகிருக்கவில்லை. நான் இதற்கு முன் வேலை செய்த எந்தப் படத்திலும் இது போன்றதொரு காட்சியும் இடம்பெற்றிருக்கவில்லை.

இயக்குநரின் கப்பல் போன்ற அடர் சாம்பல் நிற பென்ஸ் கார் வர, அதன் அருகே ஓடிச் சென்று கதவைத் திறந்தேன். இரவு அவருக்குச் சரியான தூக்கமில்லை என்பதைக் கண்கள் காட்டிக்கொடுத்தன. காலை உணவைத் தவிர்த்து விட்டார். இந்தக் காட்சியை எப்படி எடுக்கப் போகின்றோம் என்கிற பதற்றத்தை அவரிடமும் நான் உணர்ந்தேன். அவரின் இந்தப் பதற்றமான நேரங்களில் நாங்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடித்துக் குதறுவதற்குண்டான கொதிப்பு மனநிலையில்தான் அவர் இருப்பார் .

படிக்கட்டு இடுக்குகளில் ஏற்கெனவே கறுப்புநிற துணிகளைச் சுற்றச் சொல்லி அந்த இடத்தைப் பிறர் யார் பார்வையிலும் பட்டுவிடாதபடி மூடி மறைக்கச் சொல்லி இருந்தேன். இது போன்ற காட்சிகளை யாராவது தங்களுடைய போனில் பதிவு செய்து, வெளியிட்டுவிட்டால், அது மிகப்பெரிய பிரச்சனைகளைக் கொண்டு வந்து விட்டுவிடும். இயக்குநர் படப்பிடிப்புப் பகுதியை நோட்டமிட்டு, உதிப்பிடம் அவன் தோள் மீது தட்டிக் கொடுத்து, “பரவால்லயே, பயங்கர முன்னெச்சரிக்கையா வேலைபாத்து வச்சிருக்கீங்க, ஞானம் கிடைச்சிருச்சா?” என்றார். நான் செய்த வேலைக்கு அவனுக்குப் பாராட்டு. உதிப் சிரித்தபடி ‘இதெல்லாம் நண்பனோட வேலை’ என்று என்னைக் கை காட்டினான். இயக்குநர் என்னைப் பாராட்டப் பார்ப்பதற்குள், கேமராவுக்குக் காட்டப்பட்ட தேங்காய் கற்பூரம் வரவே, அனைவரும் தொட்டுக் கும்பிட்டனர்.

அந்த படிக்கட்டு அரையிருளில் நாயகனும் நாயகியும் உதிப்பிடம் காட்சியைப் பற்றி மெல்லமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். உதிப் நாயகியின் காதில் ஏதோ சொல்ல, அவள் சட்டென்று அவனைச் செல்லமாக அடித்தாள். அங்கே ரோமன் அஃபேர் வாசனை நிரம்பியிருந்தது.

‘எல்லாத்தையும் வெளியேத்துடா’ என்று இயக்குநர் கட்டளையிட, நான் அந்த ஆறு பேர் தவிர மற்ற அனைவரையும் அன்போடு வெளியேறச் சொல்லி விரட்டினேன்.

மொத்தக் குழுவுமே அமைதியாக இருந்தது. நான் இருப்பதா வேண்டமா என்கிற குழப்பத்தில் தவித்தபடி, இயக்குநரின் பின்னால் காட்சித்திரையைப் (Monitor) பார்த்தபடி நின்றிருக்க. அவர் தன்னுடைய இருக்கையில் கண்மூடி ஆழமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். கண் திறந்ததும் ‘நீ எதுக்குடா, தேவையில்லாத ஆணியா இங்க நொட்டிக்கிட்டி கிடக்க?’ என்று அசிங்கப்படுத்திவிடுவாரோ என்கிற அச்சத்தில் சற்று மறைவாகவே நின்று கொண்டேன்.

எல்லாவற்றையும் மனத்திரைக்குள்ளேயே ஓட்டி ஓட்டி, இதை முதலில் எடுக்க வேண்டும், இதை இறுதியில் எடுக்க வேண்டும் எனச் செயற்திட்டம் வகுத்து வைத்திருப்பார் இயக்குநர். அதை அவர் சொல்லச் சொல்ல நாம் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிகாலை, நள்ளிரவு என எப்பொழுது வேண்டுமானாலும் அழைத்து திருத்தங்கள் சொல்வார். அவர் அழைக்கும் பொழுது நாம் தயாராக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார். அவருக்குக் குறிப்பெடுத்து எழுதி வைக்கும் பழக்கமில்லை. இதனால் குளிக்கச் செல்லும் போதுகூட என்னுடைய போனை நெகிழிப்பையில் சுற்றி அருகிலேயே வைத்திருப்பேன்.

நான் ஷெட்யூல் துறைக்கு மாறிவிட்ட பிறகு, அவரிடம் இருந்து வரும் அழைப்புகள் குறைந்து போயின. நேரடியாக உதிப்புக்கே பேசிவிடுகின்றார். இருந்தாலும் என்னிடமும் காட்சித்தாளின் இன்னொரு படியை எப்பொழுதும் வைத்திருப்பேன். அதனால்தான், அவர் நேற்று நள்ளிரவில் சொன்ன திருத்தங்களைக் கூட எளிதில் குறிப்பெடுத்துக் கொள்ள முடிந்தது.

மூடியிருக்கும் திரையைக் கிழித்தபடி ஆ..வென ஒருவன் மாடியின் ஏதோ ஒரு இடுக்கில் இருந்து, கீழே விழுந்தான். அதிர்ச்சியடைந்த நாயகி விழுந்தவனை விட அதிகமான ஒலி எழுப்பிக் கத்திவிட்டார். நல்வாய்ப்பாக விழுந்தவனுக்கு எந்தக் காயமும் இல்லை. யார் மீதும் விழவில்லை. இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கான ஆர்வத்தில் முன்நகர்ந்து வந்து கீழே விழுந்திருக்கிறான் என்று எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த உதவி இயக்குநர்கள் இதை கவனிந்திருக்க வேண்டுமே, எங்கே போய் தொலைந்தார்கள்? ஒருவேளை எதிர்பாராத விதமாக அவன் இறந்திருந்தால், அன்றைய படப்பிடிப்பையே நிறுத்த வேண்டி இருந்திருக்கும். அவனுக்கான நஷ்ட ஈடு, இன்றைக்கான செலவு, யூனியன் நடைமுறை எனச் சிக்கலுக்கு மேல் சிக்கலாகி இருக்கும். ஊடகத்தில் செய்தி கசிந்தால், அது இன்னும் அவப்பெயரை ஈட்டித்தரும்.

இயக்குநர் கீழே விழுந்தவனைப் பிடித்து, “வேடிக்கை பாக்குறதுல அப்படி என்ன, உன் *ன்னிக்கு சுகம் கேக்குது?” என்று அறைவிட்டார். அவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான். இயக்குநர் முறைப்பதற்குள், கிழிந்த அந்தத் திரையை மூடுவதற்கு உண்டான பணிகளைச் செய்தேன். சத்தம் கேட்டு தளத்திற்கு உள்ளே வந்திருந்த அத்தனை பேரையும் மறுபடி வெளியே போகச் சொல்லி விரட்டினேன்.

இயக்குநர் அழைத்து, “எவனயும் நம்பாத, நீயே வெளில இருந்து பாத்துக்க” என்று என்னை வெளியேறச் சொல்லி ஆணையிட்டார். பயந்துபோய் இருந்த நாயகியை உதிப் முதுகைத் தடவியபடி அமைதிப்படுத்திக் கொண்டிருக்க, நான் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.

தளத்தை விட்டு அனைவரையும் ஐநூறு அடி தள்ளி இருக்கச் சொல்லிவிட்டு, நான் மூடு திரை அருகே காவலாளி போல அமர்ந்தேன். கடைசி நிலையில் இருக்கும் உதவி இயக்குநர்கள்தாம் இது போன்ற கூட்டத்தை அப்புறப்படுத்தும் (Field Clear) வேலைகளைச் செய்வார்கள். நான் இது போன்ற மேல் கீழ் வேறுபாடுகளை யாரும் பார்க்கக் கூடாது, எந்த வேலையையும் எவரும் செய்யலாம் என்கிற சிந்தனை உடையவன்தான் எனினும், இன்று இப்படி அமர்ந்திருப்பதை அவமானமாக உணர்ந்தேன். உள்ளே நடக்கும் காட்சியைப் பற்றி இனி அறிய வாய்ப்பில்லை. தூரத்தில் இருந்து சிவராஜ் என்னைப் பார்த்துச் சிரிக்க, நான் பார்க்காதது போலத் திரும்பிக் கொண்டேன்.

இரவெல்லாம் விழித்திருந்து எழுதியதால் எனக்கு அசதியாகவே இருந்தது. உள்ளே நடக்கும் காட்சி பற்றியே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

திடீரென உள்ளே இயக்குநரின் ஏசும் ஒலி கேட்டது. உள்ளே செல்லலாமா, என எண்ணுவதற்குள், இலக்கியா ஓடி வந்து, “ண்ணா, சார் கூப்பிட்டுறாரு, சீக்கிரம் வாங்க” என்றாள். சிவராஜிடம் ‘யாரும் அருகே வராமல் பார்த்துக் கொள்’ என்று சைகையில் கூறிவிட்டு, உள்ளே ஓடினேன்.

உதிப்பை இயக்குநர் கன்னாபின்னாவென்று கத்திக் கொண்டிருந்தார். “நீயெல்லாம் பேட் பாத்து என்ன மயித்த புடுங்கப் போற, ‘க்க்க்கு’ ‘க்கு’ வெளில போ” என்று இருமிக்கொண்டே திட்டிக் கொண்டிருந்தார். நான் தண்ணீர் எடுத்துத்தர முயல, அவர் கிழித்து வைத்திருந்த காட்சித்தாளை என்மீது தூக்கிப் போட்டார்.

என் கையில் இருந்த இன்னொரு பேட்-ஐ அவர் வெடுக்கென்று பிடிங்கினார். அதை ஒரு முறை உற்றுப்பார்த்துவிட்டு நடிகர்களை நோக்கி விரைந்தார்.

“டேய், ஷெட்யூல் போட புரடியூசர் சொன்ன அந்தாளயே வரச் சொல்லு. இனிமே நீயே பேட் பார்த்துக்க” என்றார். உதிப் சோகத்தோடு வெளியேற, நான் ஆர்வத்தோடு ஓடிச் சென்று பேட் பிடித்தேன்.

அறுபத்து மூன்றாவது முறையாக அந்த முத்தக் காட்சி திரும்ப எடுக்கப்பட்டது. இயக்குநர் நிறைவடையவில்லை. அந்தக் காட்சியைப் பார்ப்பதே இப்பொழுது ஒரு தண்டனையாகப் பட்டது. ஆனால், உதவி இயக்குநராக உற்றுப் பார்க்க வேண்டிய கட்டாய நிலை எனக்கு. இயக்குநர் கழிவறை சென்று வருவதாகச் சொல்லி நகர்ந்தார்.

நாயகி தன் கலங்கிய கண்களை மறைக்க, அதனை வெள்ளைத் துணியால் அழுத்தித் துடைத்தாள். களைப்பாய் இருந்த நாயகன் மெல்ல என் அருகே வந்து, “டேக் ஓகே பண்றதுக்கு எதுனா வழியிருந்தாச் சொல்லுங்க டூட், ரெண்டு பேர் வாயும் நக்கி நக்கி நாறுது” என்ற போதே, எதிர்பாராமல் வாந்தி எடுத்தார்.

படப்பிடிப்பு முடிந்து, இன்னோவாவில் அறை திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது, “என்ன பிரச்சனைன்னே தெரிலடா, காட்டுக்கத்து கத்திட்டாரு” என்று போனில் யாரிடமோ புகை ஊதியபடி புலம்பிக்கொண்டு வந்தான் உதிப்.

எனக்குத் தெரிந்திருந்தது.

இயக்குநர் திருத்தங்கள் சொல்லி எழுதிய காட்சித்தாளை அவனிடம் கொடுக்காமல், நான்தான் மறைத்து விட்டிருந்தேன்.

நாயகியின் எச்சிலாற்றில் இருந்து மீள முடியாமல், நான் இறந்து போவது போல வந்த கனவினால் திடுக்கிட்டு எழுந்தேன். அறை எங்கும் எச்சில் நாற்றம் சுழன்றடித்தது.

உதிப் அங்கே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.

எனக்குக் குமட்டிக் கொண்டு வர கழிவறை நோக்கி ஓடினேன்.

-pakkiyarajkothai@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button