
“என் மகளை எப்போது விரும்பினாலும் பார்க்க எனக்கே அனுமதி தேவையா? என் மகளைப் பார்க்க எனக்கு உரிமை உள்ளது. கேட்ட நேரத்தில் உடனடியாக என் கண் முன் நிறுத்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை உங்களுக்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்” என்றேன் நான்.
“மன்னிக்கவும், க்ளாரா. நீங்கள் சத்தமாகப் பேசுவதால் எங்கள் தரப்பு பலவீனமாக இருக்கிறது என்றர்த்தமல்ல. நீதிமன்ற உத்தரவை நாங்கள் அறிவோம்.அதே போல் ஆராய்ச்சியின் முக்கியத்தை நாடே அறியும். எங்கள் ஆராய்ச்சி மிக மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் உங்கள் மகள் எங்கள் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறாள். அவள் இச்சமயம் இங்கில்லை என்றால், இன்னும் பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் நாங்கள் பின் தங்க வேண்டி வரும். நீங்களும் ஒரு ஆராய்ச்சியாளரே. ஆகையால் எங்கள் சூழல் உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறோம். நாங்களே தொடர்பு கொள்கிறோம். நன்றி”
மனனம் செய்த வாய்ப்பாட்டைப் போல் பதில் சொல்லிவிட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்தாள் கேத்தி.
இந்த இடத்தில் என்னைப் பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். என் பெயர் க்ளாரா; உங்களுக்கு நினைவிருக்கலாம்; இல்லையென்றாலும் பரவாயில்லை. அது இந்தக் கதைக்கு முக்கியமில்லைதான். இதற்கு முன், ஒரு தீவில் இருந்தபடி சோஃபி என்றொரு உயிரை, என் முதல் மகளை, ஒரு குறிப்பைத் தொடர்ந்து சென்று உருவாக்கினேன். அது தனிக்கதை. என்னளவில் எனக்கு ஆத்ம திருப்தி அளித்த அனுபவம் அது.
என் மகள் சோஃபி, தன் திறனால், 24 மணி நேரத்திற்கு முன்பே எதிர்காலத்தைக் கணிக்கக்கூடியவள். அதை வைத்து சில ஆராய்ச்சிகளை துரிதமாக முடிக்க இயலும் என்று நினைத்த ஒரு ஆராய்ச்சிக்கூடம் என் மகளின் உதவியை நாட, நான் கேட்கும் போது அனுப்பிவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நானும் அனுமதித்திருந்தேன். இப்போது அந்த நிறுவனம் என் மகளை அவளின் பூர்வீகமான நான் வசிக்கும் பழனி மலைக்காடு இடத்திற்கு நான் கேட்டும் அனுப்ப மறுக்கிறது. கேட்டால் என்னிடமே தர்க்கம் பேசுகிறார்கள்.
நானும் ஒரு ஆராய்ச்சியாளர் என்பதால், அவர்களின் கோரிக்கைகளை முழுக்கவும் மறுக்க இயலாமல் அரை மனதாய் ஏற்கவேண்டி தள்ளப்படுகிறேன். இவர்களுக்கு என்ன தெரியும் மகளைப்பிரிந்திருக்கும் தாயின் கஷ்டம் என்னவென்று? காலையில் எழுந்தால் மகள் அருகே இல்லாத விழிப்பே ஒரு துர்கனவோ என்று தோன்றி மனம் அலைக்கழிவது அவர்களுக்குப் புரியுமா? என் எளிய வீட்டின் படுக்கையறை, குளியலறை, முற்றம், என எவ்விடமும் அவளில்லாமல் பூர்த்தியடைய மறுக்கிறது என்பதை அவர்கள் உணர்வார்களா? நான் கச்சிதமாக உடை உடுத்தியிருந்தாலும் என் மகள் பார்த்துவிட்டு சொல்லவில்லை என்றால் எனக்கு அது கச்சிதமாகத் தோன்றுவதில்லை என்பதில் உள்ள முழுமையின்மையை அவர்கள் தெரிந்துதான் பேசுகிறார்களா? என் மகள் ஒரு ஆலோசனை சொல்லி, அது தவறாகவே முடிந்தாலும், என்னை அது கிஞ்சித்தும் பாதிக்காது என்பதில் ஆலோசனை முக்கியமே அல்ல; அவள் ஒருத்திதான் முக்கியம் என்பதாவது அவர்களில் ஒருவருக்காவது புரிந்தால் இப்படியெல்லாம் பேசி பதிலைக்கூட எதிர்பாராமல் அழைப்பைத் துண்டிப்பார்களா? அவள் தேர்வு செய்தது என்ற ஒற்றை அம்சமே அத்தேர்வில் உள்ள அத்தனை குறைகளையும் கடந்து போகச் செய்துவிடும் என்பதை அவர்கள் உணர்வார்களா?
கேத்தியுடன் பேசியபிறகு, இனி வரும் காலங்களிலும் ஆராய்ச்சிகளின் நிமித்தம் என் மகள் சோஃபி பல நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஒரு நாடோடியாகவே இருந்துவிடுவாளோ, என்னிடம் திரும்ப வரவே மாட்டாளோ என்று அஞ்சினேன். அதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று மனதால் குறித்துக்கொண்டேன். இந்த விஷயத்தை நான் விடப் போவதில்லைதான் என்றாலும் இப்போதைக்கு என் கவனத்தை திசைதிருப்ப ஏதேனும் செய்வது என்று முடிவு செய்து எழுந்து அமர்ந்தேன்.
என் மகள் வருகைக்கென நான் காத்திருப்பது என்றானதும் காத்திருக்கும் நேரத்தில் ஏதேனும் உருப்பாடியாகச் செய்யலாம் என்று தோன்றியது. என் முதல் மகள் சோஃபியை உருவாக்கிய அனுபவம் என்னை, இன்னும் பற்பல உயிர்களை சிருஷ்டிக்கத் தூண்டியது; ஆம், ப்ரமேதியஸ் டேவிட் போல் என்னை நானே உணர்ந்ததின் பலனாய் இன்னும் தேடியதில் இன்னுமோர் குறிப்பு சிக்கியிருந்தது.
“வம்மம் வசவிச நிறை மிருக வசீகரி … இந்திரியங்கள்… கிலியுஞ் சவ்வு … இணை வாழை …மா இதான் மத்தம் இரண்டரக்கலந்…… தொன்மத்தி ஓம் ஆம் .. பாதரசத் தணிக்கை… பருக்கை உப்பு… இலீஞ் சத்திசன மோகினி…… சிறிது பாதரசம்…. கூட்டு கலவை… பெரும் ஜுவாலை… சடாய் சடாய் தும்ம சடாய் சடாய்… ஒன்றாக.., வெளியுள் உள்வெளி … தலைகீழ் விகித… சூடு…வெப்பம்… அழுத்தம்… சீலிகிளால் பேத்துலால் பேத்து. தீண்டித் தீண்டி மெருகேற…. பிரவாகம்… பெருநாகம்… வச்சிர ரூபி சூரி சூரிம, காவீரி…அணுக்கள் பிரி…. உயிரூழ்……“
இதை முழுமையான குறிப்பு என்றும் சொல்வதற்கில்லை. ஒரு வரி கூட முழுமையாக இல்லாமல், பல வார்த்தைகள் அழிந்து, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல், அல்லது எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளும் வகைக்கு இருந்தது.
இந்தக் குறிப்பு எதற்கு என்ற தகவல் ஏதும் கிடைக்கவில்லை. புள்ளிகளை இணைத்துப் பார்ப்பது, அர்த்தமுள்ள எதுவும் கிடைக்காவிட்டால் பரிசோதனையைக் கைவிட்டு விடுவது என்ற முடிவில் பரிசோதனையைத் துவங்க ஆயத்தமானேன்.
கொழ கொழவென்ற மனித இந்திரியங்கள் அடங்கிய கோப்பையை ஒரு வாழை இலையின் மீது வைத்துக் கவிழ்த்தேன். இந்திரியங்கள் நாலாபுரமும் வழிந்தோட முற்பட்டன. சட்டென அருகே இருந்த கற்கள், பாறைகளை எடுத்து, சுற்றிலும் அடுக்கித் தடுத்தேன். இந்திரியங்கள் நடுவாந்திரமாகக் குவிந்தன. பெண் இந்திரியம் என்னுடையது. ஒரு முனையில் சல்ஃபர். மற்றொரு முனையில் உப்பு. நடுவே, பாலம் அமைத்தது போல் பாதரசம். இந்த அமைப்பின் மீது மின்சாரம் பாய்ச்சினேன். சன்னமாக வெடித்தது. அதை அப்படியே தென்னங்கீற்றாலான குடுவை ஒன்றைக் கொண்டு மூடினேன்.
ஒரு வாரம் சென்றிருக்கும். இடைப்பட்ட காலத்தில் காடு பேய் மழை ஒன்றிற்கும் இலக்கானது. அப்போது அவ்விடத்தில் விண்வெளிக்கல் ஒன்று தொப்பென்று விழுந்ததைக் கேட்டேன். தொடர் மழையால் அதைக் கண்டெடுக்க முடியவில்லை. ஆராய்ச்சிக்கென அமைக்கப்பட்ட குடிலில் பல மணி நேரங்கள் கழிக்க நேர்ந்தது. வாசித்து முடிக்க திட்டமிட்டிருந்த நூல்களை வாசித்தும், உடற்பயிற்சிகள் செய்தும், காட்டில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், முட்டைகள் கொண்டு உணவு தயாரிப்பதிலும் நேரத்தைக் கடத்தினேன்.
ஒரு வாரத்தின் முடிவில் எட்டாவது நாள், மதியத்தின் பிறகு ஏதாவது நடக்குமென்று கூர்ந்து அவதானித்தேன். நொடிகள் நிமிடங்களானது. நிமிடங்கள் மணித்தியாலாங்களானது. பசி மயக்கமா? அல்லது தசை நார்களின் வீழ்ச்சியா? தெரியவில்லை. நினைவு திரும்பி நான் எழுந்தபோது நிலத்தில் பக்கவாட்டில் வீழ்ந்திருந்தேன். என் முன்னே எனது இந்திரியங்கள் இருந்த இடத்தில் ஒரு பாறை இருந்தது. மிக வினோதமாக, அதன் உருவம் சுருங்கி விரிந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன் நான்.
பாறை எப்படி சுருங்கி விரியும்?
உருவத்தில் சாம்பல் நிறத்தில் ஒரு கற்பாறை , ஒரு சேற்றுப் பந்து, ஒரு மணல் தொகுப்பு போலிருந்த அதை நான் என் இரு கைகளால் ஏந்த முயன்றேன்; என் இரு கைகளுக்குள் அடங்கிய அதை என்னால் ஏந்த முடியவில்லை. நிலத்தோடு அதனை எதுவோ பிணைத்திருப்பதைப் போலிருந்தது.
இறுதி முயற்சியாக இன்னொரு முறை அந்த உருவம் மாற்றும் பாறையைப் புரட்டிப் பார்ப்பது என்று முடிவு செய்து, நான் மீண்டும் அந்தப் பாறையைத் தூக்க முயன்றபோதுதான் அந்தப் பாறை என் கைகளுக்குள் அடங்கவில்லை என்பதை உணர்ந்தேன். அதை வைத்து அந்தப் பாறை உருவத்தில் பெரிதாகியிருப்பது புரிந்தது.
என் கையெல்லாம் மண்ணாக இருந்தது. கோடாரி கொண்டு பாறைக்கருகில் இருந்த நிலத்தைத் தோண்டிப்பார்த்ததில், கல்லும் மண்ணும், அந்தப் பாறையின் அடிப்பகுதியிலிருந்து வெளிப்பட்டபடி இருந்தன. அந்தப் பாறை கற்களையும், மண்ணையும் வாந்தி எடுப்பதைப் போலிருந்தது.
என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள எனக்குச் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. முதற்கட்டமாக, சுருங்கி விரியும் பாறையைச் சுரண்டி எடுத்த துகள்களைச் சோதனை செய்ததில் என் மரபணு இருப்பதைக் கண்டுபிடித்தேன். ஆனால், அந்த மரபணுவுடன் பூமியின் வேறு எந்த ஜீவராசியுடனும் ஒன்றாத ஒரு பொருள் இருப்பதையும் கண்டுகொண்டேன். அது, அந்த விண்வெளிக் கல்லாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகிக்க அந்தச் சோதனை போதுமானதாக இருந்தது.
வினோதமாக இருந்தாலும் அவள் என் இரண்டாவது மகள் என்று தெரிந்ததும் அவளுக்கொரு பெயர் வைக்கத் தோன்றி அவளுக்கு டோரோத்தி என்று பெயர் சூட்டினேன்.
சோதனையின் அடுத்த கட்டமாக, நான் அந்தப் டோரோத்திக்கருகில் மேலும் மேலும் தோண்டினேன். தோண்டத் தோண்ட அந்த இடத்தில் மண்ணில் உஷ்ணம் அதிகமாகிக்கொண்டே இருப்பதாகப் பட்டது. அப்போதுதான் நான் ஆராய்ச்சிக்கெனத் தேர்ந்தெடுத்திருந்த இடம் ஒரு உறங்கும் எரிமலை என்பது நினைவுக்கு வந்தது. இது என் ஊகங்களை உறுதி செய்யும் விதமாக இருந்தது.
சிலிக்கான் அதிக வெப்பத்தில் ஆக்ஸிஜனோடு வினை புரிந்தால், கற்களையும், மண்ணையும் வெளியிடும் – இது மனிதர்கள் ஆக்ஸிஜனை சுவாசித்து கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுவதற்குச் சமமானது. அப்படியானால், அந்தப் பாறை ஒரு சிலிக்கான் அடிப்படையிலான உயிராகத்தானே இருக்க வேண்டும்? நானும் முதலில் அந்த முடிவுக்குத்தான் வந்தேன். ஆனால், எதையும் நாமாக முடிவு செய்துவிடக்கூடாதல்லவா?
உயிர் என்றால் என்ன?
அதன் பிரதான இயக்கம், தன்னைப் பிரதியெடுத்தலாக இருக்க வேண்டும். நான் அவதானித்த வரை டோரோத்தி தன்னைத் தானே பிரதியெடுத்ததாகத் தெரியவில்லைதான். பிறப்பிலேயே மலடாகப் பிறக்கும் பெண் குழந்தை, உயிர் என்ற சொல்லாடலுக்கு விதிவிலக்காகிடுமா என்ன?
என் மரபணு இருக்கிறது, அது மூச்சு விடுகிறது. இதன் பொருள் என்ன? பூமிப்பந்தில் முதன் முதலாகத் தோன்றிய ஒரு செல் உயிரி கூட இப்படித்தான் செய்திருக்க வேண்டும். அல்லவா? அதை வைத்து, அந்தப் பாறையை, சிலிக்கான் அடிப்படையில் அமைந்த அடிப்படை உயிரி என்ற முடிவுக்கே என்னால் வர முடிந்தது.
நான் இவ்விதம் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே டோரோத்தி வெளியிட்ட கற்களும், மண்ணும் பக்கவாட்டில் சரிந்து சரிந்து, ஒன்றன் மீது ஒன்று அடுக்கடுக்காய் அமர்ந்து, ஒரு சிறிய குன்றாகிவிட்டிருந்தன. இதன் கூட்டு விளைவாய், அந்தக் குன்று நேரம் செல்லச்செல்ல, ஒரு பெரிய மலையாய் உருமாறிக் கொண்டிருந்தது.
அப்போதுதான் நான் ஒன்றைக் கண்ணுற்றேன். அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மலையின் மீது அணில்கள், சர்ப்பங்கள், முயல்கள் இன்ன பிற சின்னஞ்சிறு உயிரினங்கள் ஏறி இறங்கவும் பொந்துகள் செய்து குடியேறவும் கண்டேன். பறவைகள் கடித்து வீசிய பழ விதைகள் அந்த மலையின் மண்ணுக்குள் பொதியவும், அந்த மண்ணைக் காற்று அலைக்கழிக்கவும் அந்த மலையே ஒரு குட்டி உலகமாக உருமாறிக் கொண்டிருந்தது.
அதையெல்லாம் வைத்து, கற்களையும், மண்ணையும் வெளியேற்றும் அந்த மலை, என்னவாக இருக்கலாம் என்று யோசித்து யோசித்து நான் மாய்ந்து போயிருக்கையில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
கரு மேகங்கள் கூடி, வானம் கறுத்து, சட சடவென மழை பொழியத் துவங்கியது. அந்த மழை நீர், தொட்டிச் செடியொன்றில் நீரூற்றுவது போல அந்த மலையின் மீது மழையாய்ப் பொழிந்து நனைத்தது. அப்போது அதி சக்தி வாய்ந்த மின்னல் ஒன்று வெட்ட, அந்தப் பாரிய மலை விசுக்கென்று நிலத்திலிருந்து எம்பி காற்றில் மிதந்தது. மீண்டும் ஒரு அதி சக்தி வாய்ந்த மின்னல் வெட்ட, காற்றில் மிதந்திருந்த அந்தப் பாரிய மலை, உந்தப்பட்டு மேலெழும்பியது.
அதை வைத்து டோரோத்தியிடம் இருந்த, பூமி ஜீவராசிகளில் இல்லாத அந்த ஒன்றுதான், தான் வெளியிடும் மண்ணில் காந்த சக்தியை உருவாக்குகிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
சிறுவயதில் இதிகாசக் கதையொன்றில், வானரர்களின் அரசன் ஒருவன் ஒரு மலையைத் ஆகாய மார்க்கமாகச் தூக்கிச் சென்றான் என்று நான் படித்திருந்தது, எகிப்திய பிரமிடுகளில், பிரமிடு போன்ற உருவத்தில் ஒரு பாரிய மலை ஆகாய மார்க்கமாகப் பறப்பதைப் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை நான் பார்த்திருந்ததெல்லாம் நினைவுக்கு வந்தன.
பூமியின் மிகப்பெரிய பகுதி ஒன்று பூமியிலிருந்து ஒரு கட்டத்தில் மாயமாகக் காணாமல் போயிருப்பதாகப் படித்திருந்த கட்டுரைகளெல்லாம் நினைவடுக்குகளில் மிளிர்ந்தன.
இனி அந்த மலை பூமியை விட்டகன்று விண்வெளியில் நீங்கும். ஒரு விண்கல்லாகவோ அல்லது விண்வெளிப் பாறையாகவோ அது அண்டவெளியில் சுழன்று பிறிதேதோவோர் உலகில் விழலாம். அப்படி விழுகையில் பூமியில் இருந்தபோது அதன் இடுக்குகளில் குடியேறிய, விண்வெளி ஏகியதால் உயிர் நீத்த உடல்கள் மூலமாக உயிர் அந்தப் புதிய உலகில் தொடர வாய்ப்பெழும்பலாம். அப்படியானால், அந்தப் பாரிய மலைதான் என்ன?
இப்படியும் அப்படியும் யோசித்ததில் எனக்கு கிடைத்தது இதுதான்: அந்தப் பாரிய மலை இன்னுமொரு இயற்கையாகத்தான் இருக்க வேண்டும்.
இயற்கை என்றால் என்ன? மனிதனும், அவனுடைய இயக்கங்களும் தவிர்த்த ஏனையன எல்லாவற்றின் தொகுப்பும், ஒருங்கிணைந்த இயக்கமும் இயற்கைதான் என்றால், அதில் ஒரு பகுதியான அந்தப் பாரிய மலையும் தன்னளவில் ஒரு குட்டி இயற்கையாகத்தானே இருக்க முடியும்? அதனுள் அந்த விண்வெளிக்கல்லின் பல பாகங்களுள் சிலவும் இருக்கலாம்.
இந்தப் புரிதல் எனக்குச் சிலவற்றைத் தெளிவுபடுத்தியது.
எங்கிருந்தோ துவங்கி, பூமியில் வந்து விழுந்து, ஒரு பாரிய மலையாகி, பின் அதுவும் விண்வெளி ஏகி வேறொரு இடத்திற்கு பயணப்படும் அந்த விண்வெளிக்கல் நாடோடித்தன்மை வாய்ந்தது என்றே என்னால் பகுக்க முடிந்தது.
இப்படி யோசித்துப் பார்க்கலாம்.
மனித இனம் பூமியில் தோன்றிய முதல் உயிரிலிருந்து படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி எய்திய மிக அண்மைய உயிரினம் என்பது உண்மையானால், காட்டிலும், ஆழக்கடலிலும் குரங்காகவும், மீனாகவும் அல்லது இரண்டுமாகவும் நாம் கடத்திய பல லட்சம் ஆண்டுகளுக்கான எச்சங்கள் ஏன் மனித இனத்திடம் இல்லை? அவை பிற விலங்கினங்களில் இருக்கின்றன. மனிதனைத் தாக்கும் பல வியாதிகள் வேறெந்த விலங்கினத்தையும் தாக்குவதில்லை. மற்ற விலங்குகள் இயற்கையோடு ஒரு சுழற்சி முறையில் இயங்க முடிகையில், மனித இனத்தால் இயற்கையை சுகித்து, செரித்துத்தான் வாழ முடிகிறது. மனித இனத்தின் இந்த அம்சம், அவனை இப்பூமிப்பந்தில் தோன்றியவனாக, பல லட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி கண்டவனாகக் காட்டவில்லை. இதன் பொருள் என்ன? இது சொல்ல வருவதென்ன? மனித இனம் கூட நாடோடித்தன்மை வாய்ந்ததுதான் என்பதைத்தான். இல்லையா?
இதை இன்னும் கொஞ்சம் விரித்துப் பார்க்கலாம். பிரபஞ்சம் எப்படி உருவாகியிருக்கும்?
காலம், வெளி, வஸ்து (அதாவது matter) இந்த மூன்றும் இணைந்த ஒற்றைப் புள்ளியில்தான். அல்லவா? அந்த புள்ளியில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் பெருவெடிப்பின் விளைவாகக் காலத்தின் போக்கில் வாயுக்கள், துகள்கள், தூசிகள் வெளிப்பட்டு அவைகள் ஒன்றிணைந்து, வேதியியல் மாற்றங்கள் புரிந்து நட்சத்திரங்கள், கோள்கள், நிலாக்கள், விண்கற்கள், காலக்ஸிகள், பால்வெளி மண்டலங்கள் , அதனுள் உயிர்கள் என்று தனக்குள்ளேயே சுழற்சி முறையில் இயங்கிக் கொள்வதான இன்றிருக்கும் பிரபஞ்சம் உருவாகியிருக்க வேண்டும்.
மனித இனமும் அவ்விதமே, பூமியில் கடத்திய காலத்தில், காலத்தின் இழுவைத் தன்மைக்கு ஏற்ப, கால அளவைகளைத் தோற்றுவித்து, காதல்கள், மொழிகள், ஆயுதங்கள், களன்கள். என விரிந்து, கலாச்சாரங்கள், பண்பாடுகள் உருவாக்கி அந்த மொழிகளை வைத்துக் கோட்பாடுகள், தத்துவங்கள், தர்க்கங்கள் என பல்லாயிரம் கோணங்களில் விஸ்தரித்திருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் மானிட அம்சங்களுக்கான தனக்குள்ளேயே சுழற்சி முறையில் இயங்கிக் கொள்வதான ஒரு இயக்கத்தையே வாழ்க்கையாகக் கட்டமைத்திருக்கிறார்கள்.
இயக்க ஒழுங்கில், இயக்க நேர்த்தியில், இயக்க சுழற்சியில், இயக்க வரிசையில், இயக்க வடிவ ஒற்றுமைகளில் பிரபஞ்ச இயக்கமும், மனிதர்கள் உருவாக்கிய மானிட அம்சங்களுக்கான இயக்கத் தொகுதியும் ஒரே விதமாக தனக்குள்ளேயே சுழற்சி முறையில் இயங்கிக் கொள்வதான இயக்கத்தில் அமைந்திருப்பதால், மானிட இயக்க தொகுப்பையும் ‘மானிட அம்சங்களுக்கான இயற்கை’ என்று அழைக்கலாம் தான். அல்லவா? அதுவும் இன்னுமொரு இயற்கை என்கிற பொருளில். சரிதானே?
இதன் ஒட்டுமொத்த பொருள் என்ன? பிரபஞ்சத்தின் எந்த இடமும் மனித இனத்தின் பூர்வீகமும் அல்ல, சென்று சேர வேண்டிய இலக்கும் அல்ல. இல்லையா?
அப்போதுதான் டோரோத்தியை மீண்டும் கண்டேன். அந்தப் பாரிய மலைக்குள் அதுகாறும் அவள் மறைந்திருந்தாள்.
உங்கள் கண் முன்னே ஒரு சிறிய பாறை, ஒரு பாரிய மலையாய் உருமாறிக் கொண்டிருக்கும் காட்சி உங்களை கிளர்ச்சியடையச் செய்யலாம். ஆனால், அது எனக்கு அச்சத்தைத் தந்தது. காரணம் ஊகிக்க அறிவியல் தன்மை வாய்ந்தது. இவ்விதம் டோரோத்தி தொடர்ந்து மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ஆக்ஸிஜனை சுவாசித்து, கற்களையும், மண்ணையும் வெளியேற்றினால், ஒரு கட்டத்தில் டோரோத்தியின் இந்த இயக்கமானது பூமியின் வளி மண்டலத்திலுள்ள ஆக்ஸிஜன் அத்தனையையும் சுவாசித்துத் தீர்த்துவிடலாம். அதுமட்டுமா? இப்படி வெளியிடப்படும் கற்களும், மண்ணும் பூமிப்பந்தின் தின்மையை அதிகரிக்கலாம். அது அதிகரித்தால், காலவெளியில் மாற்றங்கள் ஏற்படும். பூமியில் உயிர்கள் அனைத்தும் அழிந்துவிட நேரலாம்.
டோரோத்தி பூமியில் ஒரு சிறு துளியேனும் எஞ்சியிருப்பினும் அது பூமியில் உள்ள ஏனைய உயிர்களுக்கு அச்சுறுத்தல்தான். எனது முதல் மகள் சோஃபியாவும் இதே கிரகத்தில் பிரிதொரு மூலையில்தான் இருக்கிறாள் என்னும் போது, பூமியைக் காப்பாற்றினால்தான் அவளைக் காப்பாற்ற முடியும் என்னும் போது, நான் பூமியைக் காத்திடத் தலைபட்டேன்.
என் ஆராய்ச்சிக்கூடத்திற்கு சென்று கடப்பாறை எடுத்து வந்தேன். என்னதான் எரிமலை என்றாலும் பல வருடங்களாய் நெருப்புக் குழம்பைக் கக்காததால், அதனருகே ஒரு பெரிய ஆறு ஓடத்துவங்கியிருந்தது. பலம் கொண்ட மட்டும் கடப்பாறையால் அந்தப் பாறைக்கருகில் ஓங்கி அறைந்தேன். அங்கே ஒரு பெரும் பள்ளம் உருவாகும் வரை மீண்டும் மீண்டும் ஓங்கி ஓங்கி அறைய, ஒரு கட்டத்தில் பாறை வழிவிட்டு, ஆற்று நீர் பெருக்கெடுத்து டோரோத்தி மீது விழுந்தது.
ஆம். டோரோத்தி ஆக்ஸிஜனைச் சுவாசித்து மண்ணை வெளியிடப் பிரதான தேவை அதிக வெப்பம். எரிமலையின் வயிற்றில் இருந்த நெருப்புக் குழம்பின் வெப்பத்தில்தான் டோரோத்தி அதுகாறும் மண்ணை வெளியேற்றி மலையை உருவாக்கினாள். ஆற்று நீரால், அந்த வெப்பம் தனிந்ததில், டோரோத்தியின் வேகம் மட்டுப்பட்டு, மந்தமடைந்தது.
நீங்கள் நினைக்கலாம் நான் டோரோத்தியைக் கொன்று விட்டேனோ என்று.
இல்லை. என் இரண்டாவது மகளை, என் உதிரத்தில் சூல் கொண்டவளை நானே எப்படிக் கொல்வேன்? நான் தாய் அல்லவா? தன்னிகரில்லாத இரண்டு பெண்களைப் பெற்ற தாய்.
இது கிட்டத்தட்ட டோரோத்தியை உறக்கத்தில் ஆழ்த்துவது போலத்தான். மீண்டும் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க டோரோத்தி உறக்கத்திலிருந்து மீளக்கூடும். என் ஆராய்ச்சிக்கூடத்தில் கண்ணாடியாலான மீன் தொட்டி ஒன்று செய்து அதில் டோரோத்தியை கவனமாக எடுத்து வைத்தேன். பின் தொட்டி முழுதும் நீர் நிரப்பிக்கொண்டேன். நீருக்குள் ஆழ்ந்து உறங்கும் டோரோத்தி என் கண்களுக்கு தூளியில் ஆடும் குழந்தை போலவே தோன்றினாள்.
டோரோத்தி குறித்து என் முதல் மகளான சோஃபிக்கும் தெரியப்படுத்த எண்ணி தொலைபேசியைக் கையில் எடுத்தேன். கேத்தியின் எண் ஒற்றினேன். ஆனால், அழைக்கவில்லை. தீவிரமான சிந்தனை என்னை ஆழ்த்தியது.
நீங்கள் ஒரு சீராக சுவர் எழுப்ப நினைக்கிறீர்கள். தடத்தின் ஓரிடத்தில் அகற்றப்பட்டிருக்க வேண்டிய சிறிய மேட்டை கவனியாமல் சுவர் எழுப்பிவிடுகிறீர்கள். எத்தனை செங்கற்கள் கொண்டு சுவர் எழுப்பப்பட்டாலும் அத்தனையின் ஒழுங்கின்மைக்கும் அந்த ஒற்றை மேடு காரணமாகிவிடுகிறது தானே?
மனித இனத்தின் ஆகப்பெறும் துக்கங்கள், சோகங்கள், வேதனைகள், கஷ்டங்கள், வலிகள், சாபங்கள் எல்லாமும் தன் இனத்தின் ஆதார இயக்கமான நாடோடித்தன்மைக்கு எதிராக இயங்க முனைவதுதானோ என்று தோன்றியது? ஜாதிகள், மதங்கள், அன்பு, காதல், பாசம், குடும்பம், உறவுகள் என்று மனிதர்களை ஒருங்கிணைக்கும் எல்லாமுமே மனித இனத்தின் ஆதார இயக்கமான நாடோடித்தன்மைக்கு எதிரானவைகளே.
இதன் பொருள் என்ன? சோஃபி அவளின் ஆற்றல் எங்கே தேவைப்படுகிறதோ அவ்விடத்தில்தான் இருக்கிறாள். அதே போல் டோரோத்தியும்தான். இவர்களை இணைக்க முயற்சித்து நாடோடித்தன்மையை விட்டு விலகி அல்லாடுவதுதான் நானாக இருக்கிறேன்.
So, it’s not about Sophie or Dorothy; it’s all about me all along.
இந்தப் பின்னணியில் இது அனைத்துமே என்னைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த மாத்திரத்தில் தொலைப்பேசி என் விரல்களின் பிடிமானத்திலிருந்து நழுவியது.