
இதுபோல பதட்டத்தோடு அமர்ந்திருந்திருந்து, அகல்யாவிற்கு நெடுநாளாகியிருந்தது. கடைசியாக இப்படி பலவீனமாக உணர்ந்தது, தனது பத்தாவது வயதிலாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள். இளம் விஞ்ஞானியான அகல்யா எளிதில் பதட்டபடுபவள் அல்ல. எதிலும் நிதானித்து, திறனோடு செயல்படுபவள். இல்லையென்றால் வெறும் முப்பது வயதில், நாட்டின் தண்டனை முறையையே மாற்றிவிடக் கூடிய அவளின் கண்டுபிடிப்போடு, இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் நுழைந்திருக்க முடியுமா? செயற்கை நுண்ணறிவில் டாக்டர் பட்டம் பெற்ற அகல்யா, பதின் பருவத்தில் விதையாக விழுந்த யோசனையை, தனது நீண்டகால உழைப்பின் மூலம் உருப்பெற செய்திருக்கிறாள். பலகட்ட சோதனைகளை கடந்து வந்த அவளின் கண்டுபிடிப்பிற்கு இன்றுதான் தீர்ப்பெழுதும் நாள். நீதிபதி வேறு யாருமல்ல, நாடே போற்றும் மூத்த விஞ்ஞானி நச்சராஜன். நாற்பது வயது வரை அவர் ஒரு சாதரண பள்ளி ஆசிரியர்தான், தொடர் கற்றலின் மூலம் இன்று, பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களின் ஆலோசகராக மாறியிருக்கிறார். அரசின் அறிவியல் சார்ந்த கூட்டமைப்புகளிலும் முக்கிய முடிவெடுக்கும் நபராக இருக்கிறார். அரசின் ஒப்புதல் சோதனைக்கான நடுவர் பட்டியலிலிருந்து யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யும் வாய்ப்பு அவளுக்கு இருந்தது. பட்டியலில், இவர் பெயரைப் பார்த்ததும் இவர்தான் வேண்டுமென நான்கு மாதங்களாக, காத்திருந்து அவரின் ஒரு மணி நேரத்தைப் பெற்றிருக்கிறாள்.
கடைசி நேர சரிபார்ப்பில் மும்முரமானாள். லேப்டாப்புடன் கேபிளால் இணைக்கபட்ட தலைக்கவசத்தை எடுத்து, அதன் உட்புறம் பொருத்தப்பட்டிருந்த சின்னச் சின்ன கூம்புகளை, திருகி சரி செய்து கொண்டிருக்கும் போதே, கதவுகள் திறக்கப்பட்டு, நச்சராஜன் உள்ளே வந்தார். அவரின் கம்பீரமான தோற்றம், அறுபது வயதை ஐம்பதென்றது. அருகில் ஒருவன் வட்ட கண்ணாடி அனிந்து வளைந்து நின்றான். எதிரில், விரித்த குடை போல சட்டென எழுந்து நின்ற அகல்யாவை அவர் கண்டு கொள்ளவேயில்லை, மேஜை மீதிருந்த, அவளின் கோப்புகளை வளைந்தவன் ஒவ்வொரு பக்கமாக, திருப்ப, அவர் படித்துக் கொண்டார். அவனை, அவர் வெளியே போக சொன்னதும், தன் காதலனை அவளிடம் விட்டு செல்வதைப் போல, அகல்யாவை முறைத்தபடி வேளியேறினான். அந்தப் பெரிய அறையில் இப்போது அவர்கள் மட்டுமே இருந்தனர். வியர்த்து கொட்டி, கைகள் நடுங்க, மழையில் நனைந்த பூனைகுட்டி போல அகல்யா நின்றுகொண்டிருந்தாள்.
“சின்ன வயசிலிருந்தே சயின்ஸ்ல இன்ட்ரெஸ்ட்டாமா” உட்கார்ந்த படி கை கொடுத்தார். அவள் கொஞ்சம் விலகிப் போய், மேலும் கீழும் தலையசைத்து, வணக்கம் வைத்தாள்.
“தமிழ் பண்பாடா?” என கையை மடக்கிக் கொண்டார். “ரொம்ப பயப்பட வேண்டாம். நான் ஒன்னும் உங்கள தின்னுட மாட்டே, ஆரம்பிங்க மிஸ் அகல்யா…”
அவர் தமிழில் பேசியதால், அகல்யாவும் தமிழிலேயே ஆரம்பித்தாள் “நம்ம நாட்ல நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரிச்சிட்டேதான் போகுது, கடுமையான தண்டனைகளும், மோசமான ஜெயில் வாழ்க்கையும் இருந்தாக்கூட, அது குற்றங்கள குறைக்கல. கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் மாதிரியான தீவிரமான குற்றங்களின் மீதான தண்டனைகள், குற்றவாளிகளுக்கு சுத்தமா பயத்த தரவேயில்ல. அதனுடைய புள்ளிவிவரங்கள்தான் உங்க டேபிள்ல இருக்கு. இப்படியே போனா நாட்டோட வளர்ச்சியவே இது முடக்கிப் போட்டுரும்”.
“தப்பு செஞ்ச எல்லாரையும் தூக்குல போட்ரலாமா…?” சலித்துக் கொண்டார்.
அகல்யா தன்னிடமிருந்த இன்னொரு கோப்பை அவரிடம் அளித்து “சக மனுசனோட வலிய உணராதவரைக்கும், இங்க எதுவும் மாறபோறது இல்ல. அத உணர்த்துரதுதான் இந்த ஏ.ஐ.எம்.என் சாப்ட்வேர். இந்த சாப்ட்வேர்ல, குற்றங்களால பாதிக்கப்படும்போது ஏற்படும் வலி, பயம் மாதிரியான உணர்வுகள் ப்ரொகிராம் செய்யப்பட்டிருக்கு. இதன் மூலமா பாதிக்கப்பட்டவங்களோட வலிய, குற்றவாளிகள அனுபவிக்க வைக்க முடியும். உடம்புல எந்த காயமும் ஏற்படலனாலும், அத உணர வைக்க முடியும். நாம செஞ்சது நமக்கு திருப்பி நடக்கும்னா, அத செய்யறதுக்கு யோசிப்பாங்க இல்லயா? இதுதான் என் சாப்ட்வேரோட அடிப்படை தியரி.
அவளை நிறுத்த சொல்லி சைகை செய்து, “இப்போ, நீங்க ஸ்கூட்டர்ல வேகமா போறீங்கனு வெச்சுக்கோங்க. யாரோ அடிபட்டு, ரத்த வெள்ளத்துல செத்துக் கெடக்கறத பாக்கறீங்க. தன்னால பயந்து, கொஞ்ச தூரம் மெதுவா போவீங்க. ஆனா, நேரம் போகப் போக பழைய மாறியே வேகமா ஒட்ட ஆரமிச்சிருவீங்கதானே… ? இதுவும் அது போல ஒரு தாக்கத்ததான் ஏற்படுத்தும்.” என்றபடி கோப்புகளை மூடினார்.
“இல்ல… அப்படியில்ல… நிஜமா நடக்கற மாதிரிதான் உணருவீங்க”
அகல்யாவை சொல்ல விடாமல் நிறுத்தி “அகல்யா, நீங்க சைன்டிஸ்டா, சைன்ஸ் பிக்சன் ரைட்டரா… நடைமுறைக்கு வாங்க. ஒருத்தன் கொல பண்ணனும் முடிவு பண்ணிட்டா, பண்ணித்தான் தீருவான். மக்கள்தொக அதிகமாகுதில்லயா? அதான் குற்றங்களும் அதிகமாகுது அகல்யா. பழக்கப்பட்ட முகமாத் தெரியுறீங்க. என் ஆபிஸ்க்கு நாளைக்கு வாங்க, வருசத்துக்கு அம்பது லட்சம் பேக்கேஜ்ல ஒரு வேல இருக்கு. உனக்கு ஒரு வாய்ப்பு தரேன். முடிஞ்சா யூஸ் பண்ணிக்கோ”. அவரின் விசிட்டிங் கார்ட் சுழன்றபடி மேஜையில் வந்து விழுந்தது.
அகல்யா பேச்சிழந்து நின்றாள். தன் பெருங்கனவின் சிதிலங்களில் நிற்பது போல இருந்தது அவளுக்கு. தலைகுனிந்து… “சரி சார்… நா வரேன்…” அவளின் குரல் கூட சிதைந்து விட்டிருந்தது.
“குட்… என்னோட அரை மணி நேரம், மொத்தமா வீணாகிடுமோன்னு நெனச்சேன். அட்லீஸ்ட் அது உங்க லைப்ப மாத்திருக்கே” என்றபடி எழுந்தார்.
அகல்யா தலை நிமிர்ந்து சொன்னாள், “ஒரு கண்டிசன்…”
“இப்ப என்ன மேடம்…?” கடுப்போடு கேட்டார்.
“என் சாப்ட்வேர, நீங்களே ஒருமுறை ட்ரைப் பண்ணிப் பாருங்க, அதுக்கு அப்புறமும் நீங்க இதே முடிவில இருந்தீங்கனா, நா கண்டிப்பா அந்த வேலய ஏத்துக்கறேன்”
“டோட்டல் வேஸ்ட்…” அவர் அங்கிருந்து நகர ஆரம்பித்தார்.
“ரொம்ப பயமா இருந்தா உங்க அசிஸ்டன்ட கூட பக்கத்துல வெச்சுகோங்க” சப்தமாக கேட்டாள் அகல்யா.
அவர் சிரித்தபடி திரும்பினார், “நா யாருக்கும் இவ்ளோ கரிசனம் காட்டினது கிடையாது. ஆனா, உங்க முகம்தான், எங்கயோப் பாத்த மாதிரி இருக்கு. எங்கன்னுதான் தெரியல. உங்களுக்கு நோ சொல்லி, இப்படியே விட்டுட்டுப் போகவும் மனசில்ல” சொல்லி முடித்து அவள் அருகில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
அகல்யா, அந்த தலை கவசத்தை எடுத்து, அவர் தலையினில் பொருத்தினாள். இப்போது அவள், அவருக்கு மிக அருகில் இருந்தாள்.
“ஷாக் அடிக்கவெச்சு என்ன கொன்னுரமாட்டீங்களே” சிரித்தபடி கேட்டார்.
“அப்படி செய்ய நா இங்க வரல” அவள் குரலில் இறுக்கம் கூடியது.
அவரின் கை, கால்களை இருக்கையோடு பெல்ட்டால் பிணைத்தாள்.
அவருக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது, அவரின் நெற்றியில் படிந்திருந்த வியர்வையை தனது கைகுட்டையால் துடைத்தபடி, “ரொம்ப பயப்படாதீங்க, நான் ஒன்னும் உங்கள தின்னுட மாட்டேன்” என்றாள்.
அவரின் முகம் மாறிப்போனது, கை, கால்களை லேசாக அசைத்துப் பார்த்தார். துளி நகரவில்லை. ரெக்கார்டிங் தியேட்டர் போன்று ஒலியை வெளியே கசியவிடாத அறை அது. வாய்விட்டுக் கத்தினாலும் வெளியில் கேட்கப் போவதில்லை. பயமாக இருந்தாலும், இவள் என்ன செய்துவிடப் போகிறாள் என்ற இளக்காரமும் அவர் மனதில் இருந்தது.
அவள் தன் லேப்டாப்பில் டைப் செய்ய ஆரம்பித்தாள்… அவரின் தலை கவசத்தின் உள்ளிருந்த கூம்புகள், லேசாக தலையை அழுத்த ஆரம்பித்தன…
“என்ன பண்ற? ஆணி மாறி குத்துதே”.
“எலக்ட்ரோட்ஸ் உங்க தலய தொட்டிருக்கு அவ்ளோதான்… அதுசரி, இவ்ளோ கேள்வி கேட்டீங்களே, பத்து சயின்டிஸ்ட்ஸ் இருந்த லிஸ்ட்ல, உங்கள எதுக்காக செலக்ட் பண்ணினேனு ஏன் கேக்கல? பழக்கப்பட்ட முகமா இருக்குனு சொன்னீங்களே, உனக்கு என்ன தெரியுமானு ஏன் கேக்கல? சின்ன வயசிலேர்ந்து சயின்ஸ்ல இன்ட்ரெஸ்ட்டானு கேட்டீங்களே, என்னோட நாலங்கிளாஸ் சயின்ஸ் டீச்சர் யார்னு ஏன் கேக்கல? யாருமில்லாதப்போ என்ன அவனோட ரூமுக்கு வர சொல்லி, அவன் என்ன செஞ்சான்னு ஏன் கேக்கல? என்னால ஏன் அத யார்கிட்டயும் சொல்ல முடியலனு ஏன்டா கேக்கல?”. அகல்யாவின் கண்கள் சிவந்து, கண்ணீர் ரத்தமாய் வழிந்தது.
இருபது வருடங்களுக்கு முன் தான் செய்த கொடும்பாவத்தை நினைத்து பயந்து கதற ஆரம்பித்தான்.. “ப்ளீஸ் எதுவும் பண்ணிடாத, என்ன வேணும்னாலும் கேளு… ப்ளீஸ்… என்ன வேணும்…”.
“இதுவும் தப்பான கேள்விதான், இப்போ எந்த தண்டனைக்கான வலிய தரப் போறன்னு ஏன் கேக்கல”. இறுதியாக ஒரு பட்டனைத் தட்டினாள் அகல்யா. அவனது கால்கள் விரைத்துக் கொண்டன. கை நகங்கள் கைப்பிடியை கீறின. பற்கள் நொறுங்கிட கடித்து கொண்டான். அவனது உடல் திடீரென சுருங்கி விட்டதாய் உணர்ந்தான். பெரிய புழுவொன்று அவன்மீது படரும் அருவருப்பில் நெளிந்தான். பயத்தில் வாய்விட்டு கதறினான். கடவுளிடம் காப்பாற்றுமாறு மன்றாடினான். எதுவும் பலனளிக்கவில்லை. இயலாமையில் வெறுத்துப் போய், கண்ணீர் விட்டு அழுதான். பல வருடங்களாய் அவள் நெஞ்சில் எரிந்த தீ, அவன் கண்ணீரால் கனலானது.
அவனது ஒரு கையை மட்டும் விடுவித்தாள், அவன் இன்னும் தேம்பிக் கொண்டிருந்தான். அகல்யா தன் கையை அவனிடம் நீட்டினாள். அவன் அனிச்சையாய் கையை மடக்கி விலகிக் கொண்டான். இறுதியாக ஒன்றைக் கூறினாள். “இங்க ஒவ்வொரு பதினஞ்சு நிமிசத்துக்கும், ஒரு கொழந்தைக்கு, இந்த கொடுமை நடக்குது. உனக்கு ஒரு வாய்ப்பு தரேன் முடிஞ்சா யூஸ் பண்ணிக்கோ” ஒப்புதல் கையொப்பமிட வேண்டிய கோப்பை அவன் மீது எரிந்துவிட்டு நடந்தாள். சில நாட்கள் கழித்து, ஒப்புதல் அளிக்கப்பட்ட செய்தி அவளை வந்து சேர்ந்தது.
அகல்யாவிற்கு நீதி வழங்கப்படவில்லை. எனவே, அவள் அதை உருவாக்கிக் கொண்டாள்.