ரோஜாச் செடிகளில் தாமரைகள் மற்றும் இரு நுண்கதைகள் – ஷாராஜ்
நுண்கதை | வாசகசாலை

- மூலகங்களில் யார் பெரியவர்?
பூமியின் நால்பெரும் சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றுக்குள் ஒரு வாக்குவாதம். தம்முள் யார் பெரியவர், யார் முக்கியமானவர் என்பதே பேசுபொருள்.
முதலில் நிலம் கம்பீரமாக மொழிந்தது. “நான்தான் பூமியில் அனைத்திற்கும் ஆதாரம். நான் இல்லையென்றால், எந்த உயிரும் நிலைத்து நிற்க முடியாது. தாவரங்கள், புழு – பூச்சிகள், பறவைகள், பிராணிகள், மிருகங்கள், மனிதர்கள் என அனைத்தும் என் மீதுதான் வாழ்கின்றன. எனவே, நான்தான் பெரியவன்.”
நீரின் குரல், ஆற்று நீரின் இன்னிசையாக ஒலித்தது. “அந்த உயிர்கள் அனைத்திற்கும் நான்தான் ஜீவன். நான் இல்லையேல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. ஆகவே, பெரியவனோ சிறியவனோ, நான்தான் முக்கியமானவன்.”
நெருப்பு, பொறி பறக்கப் பேசியது. “நான்தான் உயிரின் ஆற்றல். நான் இல்லையென்றால், எந்த உயிரும் இயங்காது; உலகில் எந்தச் செயலும் நடக்காது. பூமியில் இருளை விரட்டி ஒளியைக் கொடுப்பவன் சூரியன். அவன் இல்லையெனில் பூமியில் உயிரினங்கள் வாழ இயலுமா? சூரியனுக்கே நான்தான் சக்தி. ஆகையால், நம்மில் பெரியவனும் நானே; முக்கியமானவனும் நானே!”
காற்று மெல்லிய புன்னகையுடன் கூறியது, “நான்தான் சுவாசம். நான் இல்லையென்றால் அனைத்து உயிர்களும் இறந்துவிடும். நான் இன்றி எந்த உயிரும் பிறக்கவும் இயலாது. ஆகவே, உங்கள் அனைவரையும்விட உயர்ந்தவன், உயிர் ஆதாரமான நானே!”
ஒவ்வொரு மூலகங்களும் தமது முக்கியத்துவத்தை அழுத்தமாக எடுத்துரைத்தன. ஆனால், மற்றவை அதை ஏற்கத் தயாராக இல்லை. விவாதம் வலுத்தது; சச்சரவாக மாறியது. பூமியின் அமைதியே குலைந்துவிடுமோ என்ற அச்சம் சூழ்ந்தது.
அப்போது, எங்கிருந்தோ வெளியின் குரல் ஒலித்தது. “நிறுத்துங்கள்!”
நான்கு மூலகங்களும் திடுக்கிட்டு அமைதியாயின.
வெளியின் குரல் தொடர்ந்தது. “நீங்கள் நால்வரும் முக்கியமானவர்கள்தான். இந்தப் ப்ரபஞ்ச இயக்கத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒரு புள்ளியில் இணையும்போதுதான் உயிர்கள் உருவாகின்றன; இந்த உலகமே இயங்குகிறது.”
நால்பெரும் சக்திகளும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன.
குரல் மேலும் கூறியது, “உங்கள் நால்வரையும் தன்னுள்ளே அடக்கி இருக்கும் நான், உங்களை விட மிகச் சிறியவன். ஆனால், உங்களின் சக்தியை நான் உணர்ந்திருக்கிறேன். உங்கள் நால்வரின் ஒருங்கிணைப்பே என் பலம்.”
வெளியின் தன்னடக்கத்தைக் கேட்டு நான்கு மூலகங்களும் வெட்கித் தலை குனிந்தன.
- வீட்டு வாடகை ஒப்பந்தம்
ஷரத்துகள்:
- வாடகைதாரர் முன் பணம் ரூபாய் ஐந்து லட்சம் தர வேண்டும். வீடு காலி செய்த பின் ஆறு மாதங்கள் கழிந்த பிறகே அத் தொகை திருப்பித் தரப்படும்.
- மாத வாடகையான ரூபாய் பத்தாயிரத்தை ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதிக்குள் தவறாமல் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
- வீட்டில் உள்ள ஆழ்குழாயிலிருந்து ஒரு நாளைக்கு 12 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்க, புழங்க என அனைத்து உபயோகங்களுக்குமானது.
- வீட்டுக்குள் ஆணி, குண்டூசி, ஸ்டேப்லர் பயன்படுத்தக் கூடாது.
- வீட்டு உரிமையாளரின் மனைவி கூறும் சுத்திகரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தி வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உரிமையாளரின் அனுமதி இன்றி நகம் வெட்டவோ, காது குடையவோ கூடாது.
- வாடகைதாரர் மற்றும் அவரது குடும்பத்தார் ஒரு நாளைக்கு தலா முன்னூறு வார்த்தைகளுக்கு மேல் பேசக் கூடாது. முக்கியமாக, எதிர் வீட்டு ஆன்ட்டியிடம் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- தொலைக்காட்சி பார்ப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கேட்புக் கருவிகளில் மெல்லிய ஒலியில் பக்திப் பாடல்கள் மட்டும் கேட்கலாம்.
- அசைவம் சமைக்க அனுமதி கிடையாது. சைவம் சமைக்கும்போது வாசனை வீட்டிலிருந்து வெளியே செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- பகலில் கொட்டாவி விடக் கூடாது. இரவில் ஒவ்வொருவரும் இரு முறை மட்டுமே கொட்டாவி விட அனுமதி உண்டு. இது சி.சி.டி.வி. கேமெராவில் கண்காணிக்கப்படும். நிபந்தனையை மீறினால் ஐயாயிரம் ரூபாய் அபராதம்.
- செல்லப் பிராணிகள் வளர்க்க அனுமதி இல்லை. மீறி வளர்த்தால், அவற்றுக்குத் தனி வாடகை. மீன் தொட்டிக்கு ஐநூறு, ஒரு பூனைக்கு ஆயிரம், ஒரு நாய்க்கு இரண்டாயிரம் ரூபாய்கள்.
- இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் நிறுத்த இட ஒதுக்கீடு கிடையாது. நுழைவாயிலுக்கோ, சுவர்கள் மற்றும் தரைகளுக்கோ துளியளவு சேதாரமும், அழுக்கும் இல்லாத வகையில் நான்கு சக்கர வாகனங்களை வேண்டுமானால் வீட்டுக்குள் நிறுத்திக்கொள்ளலாம்.
- உறவினர்களுடன் அலைபேசியில் பேசுவதோ, கடிதத் தொடர்போ கூடாது. மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்பலாம்; பதில் வரக் கூடாது.
- வீட்டு உரிமையாளருக்குத் தெரியாத யாரேனும் வாடகைதாரர் மற்றும் குடும்பத்தாரை சந்திக்க வந்தால் அவர்களின் ஜாதகம், ஆதார் கார்டு, பேன் கார்டு, வங்கிக் கணக்கு விபரம், ஓட்டுநர் உரிமம், அசையும் மற்றும் அசையா சொத்துகள் முதலான ஆவணங்களின் நகல்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- குடியிருப்போர் சங்கத்தில் பங்கேற்கக் கூடாது.
- எந்த முன்னறிவிப்பும் இன்றி அல்லது போதுமான காரணமின்றி வாடகை ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள வீட்டு உரிமையாளருக்கு உரிமை உண்டு. அவ்வாறான சூழலில் ஒரு வருடம் கழிந்த பிறகே முன்பணம் திருப்பித் தரப்படும்.
3. ரோஜாச் செடிகளில் தாமரைகள்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதற்கு சில மாதங்கள் முன்பாக, சென்னை மாநகரில் திடீரென ஒரு வினோதம். ஒரு நாள் விடியற்பொழுதில் வீட்டுத் தோட்டங்கள், பூந்தொட்டிகள், பூங்காக்கள், பூச்செடி விற்பனையகங்கள் எங்கும் ரோஜாச் செடிகளில் ரோஜாக்களுக்கு பதிலாக தாமரைகள் மலர்ந்திருந்தன.
அதிசய நிகழ்வில் மக்கள் வியந்து குழம்பினர். சென்னையிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள தாவரவியலாளர்களுக்கும் திகைப்பு. ஆய்வு செய்தபோது மரபணு மாற்றம் நேர்ந்திருப்பது தெரிந்தது. காரணம் கண்டறிய இயலவில்லை. இந்தத் தாவரவியல் ஒழுங்கின்மை இயற்கையா, செயற்கையா என்பது புரியாத புதிர்.
அவை GMO (Genetically Modified Organism) உயிரினங்கள் அல்ல. சாதாரண ரோஜாச் செடிகள்தான். அதில் இப்போது தாமரைகள் மலரக் காரணம் என்ன?
உலகத் தாவரவியல் ஆய்வு மையங்கள், மரபணு மாற்ற விஞ்ஞானிகளாலும் அறிய இயலவில்லை.
ரோஜாத் தாமரை சர்வதேச ஹேஷ்டேக் ஆகியது. தாமரை மலர்ந்த ரோஜாச் செடிகளின் புகைப்படங்கள், வரைகலைகள், க்ராபிக்ஸ்கள் ட்ரெண்டாகின. காணொளிகள் வைரலாகின.
சீனாவின் எல்லை கடந்த ரகசியப் பரிசோதனையா? தேசத்தின் விவசாயம், சுற்றுச்சூழல் அமைப்பைச் சீர்குலைக்க பாகிஸ்தான், பங்களாதேசம் ஆகிய பிற திசை எல்லைப் பகை நாடுகளின் சதியா?
GMO-க்களை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாட்டுப் பூச்செடிகளிலும் இத்தகைய அசம்பாவிதங்கள் நேருமோ எனக் கவலைப்பட்டன. GMO இறக்குமதி, சாகுபடிகளைத் தடை செய்த அல்ஜீரியா, கிர்கிஸ்தான், பூடான், மடகாஸ்கர், பெரு, ரஷ்யா, வெனிசுலா, ஜிம்பாப்வே ஆகியவற்றுக்குப் பேரச்சம். இந்தத் தாவரவியல் வக்கிரம் பரவி, அவர்களின் உணவுப் பயிர்களை மாசுபடுத்தினால் என்ன செய்வது?
தமிழகக் ‘கவிஞ்சர்’ பட்டாளங்கள் முகநூல், இன்ஸ்டா, இணைய இதழ்கள் எங்கும் முள் தாமரைக் கவிதை மூட்டைகளைக் கொட்டி வாசகர்களை ரத்தக் கண்ணீர் விட வைத்தனர். தொ.கா. விவாதங்களில் சம்மந்தமே இல்லாத பல துறை உப்புமாக் கருத்தியலாளர்கள் கலந்துகொண்டு வாய்க்கால் வரப்புத் தகராறு போல அடித்துக்கொண்டனர்.
தமிழக அரசியல் களம் கொதித்துக்கொண்டிருந்தது. இது இந்துத்துவ சதி எனத் தமிழ் தேசியக் குரல் ஒன்று தொண்டை கிழியக் கத்தியது. ஒன்றிய டெம்ப்ளேட் அரசு, மாநில டெம்ப்ளேட் அரசை நிலைகுலையச் செய்வதற்காக தாவரவியல் முரண்பாட்டைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதாக ஆளும் கட்சியினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் குற்றம் சாட்டினர். தேர்தலை ஒட்டி நடத்தப்படும் சதி, மாநில ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சி என்றெல்லாம் மேடைகளில் முழங்கினர். இந்துத்துவக் கட்சியினர்களுக்கும், அமைப்பினர்களுக்கும் குஷியாகிவிட்டது. நாங்கள் எதுவும் செய்யவில்லை; ஆனால், இயற்கையே எங்களுக்கு சாதகம் என்றார் அதில் ஒரு தலைவர்.
அடுத்த நாளிலிருந்து ரோஜாச் செடிகளில் மல்லிகைகள் பூக்கலாயின.