
முகமூடி
நான் நிறைய பேசிக்கொள்கிறேன்
நான் நிறைய தோற்றுப் போகிறேன்
மனிதர்களிடமும் நிழல்களுடனும்
என்னிடமும்…
என்னோடு தோற்க
என்னை எப்போதும்
கைவிடும் ஒன்று எனக்கு முன்
வரிசையில் முந்துகிறது.
இருவருக்குள்ளும்
தள்ளுமுள்ளு.
அப்போதும் நான்தான் கடைசி.
எனக்கு முன்நிற்கும் அதற்கு
பாவம்,
துரோகத்தின் முகமூடி
அளிக்கப்படுகிறது.
அடுத்த
எனக்கு, ஏமாளியின்
முகமூடி.
தன்னுடையதை
கையில் வைத்து
அழுதுகொண்டிருக்கும் அதனைப் பார்க்க
சகிக்காமல்
முகமூடியை
கைமாற்றிக் கொண்டேன்.
காணின்
ஆழ்இருள்
போலவே
பேரொளியும்
காண்பதற்கு ஏதுமற்றது.
இரண்டும்
முயங்கும்
பல்வேறு புள்ளிகளில்
உருவாகின்றது
காலம்.
காலவண்ணங்களில்
கரைந்தழிகிறது
நித்தியம்.
நீ நான்
இவர்கள்
அவர்கள்
இன்ன,
பிற
மற்றும்
எல்லாம்
பற்றுகின்றன
எரிகின்றன
அழிகின்றன.
சுழலின்
அநித்தியத்தில்
ஒளிரும்
அது
முழு இருளா
அல்லது
முழுதே முழுதான
ஒளியா?
*
இனிமை
காலநிலங்களை
கடந்து உன்னை
வந்தடையும்
அன்று
பாதங்களின்
வெடிப்புகளில்,
கண்களின்
பசையற்ற
மின்னுதலில்,
உடலின்
தசையற்ற
மௌனத்தில்,
இருக்கும்
ஒரு துளி
நிறைஇனிமையைக்
கையளிப்பேன்.
கூடவே
நிலத்தையும்
காலத்தையும்.
கடந்து
வந்து சேர்.
துலாவின் மறுபகுதியை
நிரப்ப.
*
கொம்பு குலுக்கி
காகம் விரட்டி
மேயத் தொடங்கிறது
எருமை
எட்டிப் பறந்து
மீண்டும் அமர்ந்து
அதன்
முதுகுப்புண்
புசிக்கிறது
காக்கை.