
சட்டைக்கு அடங்காமல் திமிறிக் கொண்டு வெளிவருகிற தொப்பையைப் போல பேருந்திற்குள் அடங்காமல் படிக்கட்டில் தொங்கி கொண்டு வருகிற கூட்டத்தை பெயர்த்து உள்ளே நுழைவது பீக் அவர்ஸ்களில் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. உடுப்பை தாண்டி உற்று நோக்கி உள்நுழைகிற எக்ஸ் ரே கண்களை ரத்தமில்லாத வன்முறையென்று எந்தச் சட்டத்திலும் பிடித்துப் போட முடியாது.
உரசிக்கொண்டு நகர்தலும் முழு உடம்பு எரிவதும் தினமும் போகிற பெண்களுக்கு பழகிப் போன ஒன்று. தினமும் கொஞ்சம் கூட சோம்பேறித்தனப்படாமல் காலை நான்கு மணிக்கே எழுந்து பம்பரமாகச் சுற்றினால் மட்டுமே இந்த எட்டு நாற்பது பஸ்ஸை மிஸ் பண்ணாமல் பிடிக்க முடியும். இதைத் தவற விட்டால் மேனேஜர் குறைந்தது அரை மணி நேரமாவது இப்படியும் அப்படியும் சுற்றிச் சுற்றி அறிவுரை என்கிற பெயரில் எனை அளப்பார். அதற்கு நானே ஒரு வாய்ப்புக் கொடுத்த மாதிரி இருக்கும்..
என்ன.. வீட்டில் எல்லோருக்கும் டிபன் சாப்பாடு செய்து கட்டி கொடுத்து.. எடுத்து போகிற தண்ணீர் பாட்டில் முதற்கொண்டு எல்லாவற்றையும் சரியாக வைக்க வேண்டும். வீட்டில் வேறு யாரும் என்னைத் தவிர காலை வேலைகளில் உடம்பை கூட அசைப்பதில்லை.
நல்ல வேலையாக இன்று ஏறியவுடன் அடுத்த ஸ்டாப்பிலேயே உட்கார இடம் கிடைத்து விட்டது. சீட் கிடைக்க வேண்டுமென்கிற அவசரத்தில் சட்டென அமர்ந்ததில் இடுப்பு சுள்ளென்று வலிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு சுவாதீனமாக நின்று சமையல் செய்து கொண்டிருகிறபோது திடிரென காலை தூக்கி முழு பலத்தையும் திரட்டி கொடுத்த உதையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருந்துதான் இந்த வலி.
பல் கடித்து பொறுத்து கொண்டேன். குடிகாரன். தினமும் வொர்க் ஷாப்பில் இயந்திரங்களுடன் இருக்கிறவனிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? மேலே படிக்க வேண்டுமென அனுமதி கேட்டதற்கு ‘பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என்று விழுந்த உதையில் மேலே படிக்கிற ஆசையே மறந்து போனது.
ஆயாசமாக இருந்தது. கண்கள் மூடிக் கொண்டேன். எப்படியும் குறைந்தது முக்கால் மணி நேர பேருந்துப் பயணம். மனது பழைய நினைவுகளுக்குள் இழுத்துப் போனது.
“அம்மா, ப்ளீஸ்.. நான் மேல படிக்கிறேன்.. உனக்கு சொன்னா புரியாதா? பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிடுவேம்மா.. இன்னும் ரெண்டு வருஷம்தான்..மாஸ்டர்ஸ் முடிச்சிட்டு கலயாணம் பண்ணிக்கறேன்”
“நிம்மி எவ்வளவு சொன்னாலும் ஏன் ஒத்துக்க மாட்டேங்கற..அப்பா இல்லாத பொண்ணுன்னு கஷ்டம் தெரியாம வளர்த்தது தப்பா போச்சு…எனக்கு எதாவது ஆச்சுன்னா நீ தனியா அனாதையாதாண்டி நிப்ப..”
“உனக்கு என்னம்மா ஆகும்.. ஏன் கண்டதையும் நினைச்சு இப்படி பயந்து சாகுற”
“இப்ப என்ன உனக்கு படிக்கணும்.. அவ்வளவுதான..அதை கல்யாணம் பண்ணிட்டு படிச்சுக்கோ..அத்தைகிட்ட நான் பேசறேன்”
இத்தோடு இதைப்பற்றி ஆயிரம் முறை பேசியாயிற்று. அம்மா விடாமல் சமீப நாட்களில் இப்படியேதான் புலம்பிக் கொண்டிருகிறாள். அப்போது புரியவில்லை அவளுக்கு புற்றுநோயின் ஆரம்ப கட்டமென்று. சாமர்த்தியமாக என்னிடம் சொல்லாமல் அவசர அவசரமாக அத்தையிடம் பேசி கல்யாணம் நடத்தி வைத்தாள். பிறகு வெகு நாட்கள் அவள் தாக்கு பிடிக்கவில்லை.
எட்டாவது வரை படித்த கணேசன்தான் மாப்பிளை. உறவு விட்டு போக கூடாது என்று என் அப்பாவின் தங்கை மகனுக்கே கல்யாணம் செய்து தர அம்மா ஒப்புக்கொண்டாள். வேறு யாருக்கும் நிறைய செலவு செய்து திருமணம் நடத்த வசதியில்லை என்று அம்மா அழுத போது நான்தான் சமாதானபடுத்தினேன்.
முரடன்தான் ஆனால் மிகவும் நல்லவன் என்றாள் அத்தை. வேறு வழி இல்லாமல் எளிமையாக நடந்தது எங்கள் திருமணம். முதல் நாளிலேயே கணேசனின் குணம் தெரிந்து போனது.
அலங்காரங்களுக்கு நடுவே தனிமையில் முதன் முதலில் சந்திக்கையில் நிறைய பேச ஒத்திகை எல்லாம் பார்த்திருந்தேன். எச்சிலை முழுங்கி கொண்டு மெதுவாய் பேச தொடங்குவதற்கு முன்பே என்னை முழுவதுமாக முற்றுகையிட்டான். அன்றும் குடித்திருந்தான்.
சில வாரங்களுக்குள் அவனை முழுவதுமாக படித்து விட்டேன். முரடன். அதிகம் பேச மாட்டான். என் அழகு அவனுக்கு பிடிக்கும். ஆனால் அவனை விட நான் அதிகம் படித்திருக்கிறேன், நிறம் அதிகம் என்ற காம்ப்ளெக்ஸ் அவனுக்கு. ஆத்திரத்தில் என்னை எப்போதும் மட்டம் தட்டிக்கொண்டே இருப்பான்.
அம்மா இறந்த பின்பு இன்னும் மோசம். கோபம் வந்தால் பளிரென அறைவான். பொறி கலங்கி போகும். முதல் முறை அறை வாங்கிய போது மயக்கம் வந்து விட்டது. ஒரு மன்னிப்பு.. ம்ஹும்…கொஞ்சம் கூட ஆறுதலாய் அவன் பேசி நான் கேட்டதில்லை.
பெரும்பாலும் பாத்திரங்கள் உருண்டுதான் என் கோபத்தை அறிவிக்கும். நான் பேசுவதை பொறுமையாய் கேட்கிற ஒரே அறை சமையல் கட்டு. எத்தனை உருட்டினாலும் பாத்திரங்கள் என் மேல் எப்போதும் கோபப்பட்டதில்லை.
நான் வாங்கிய நிறைய அடிகளுக்கு அத்தைதான் காரணம். பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு புண்ணியம் கட்டிக்கொள்வாள். ‘அவன் ஆம்பிளடி’ என்பாள் எகத்தாளமாய்..எனக்கு இதெல்லாம் பழகி விட்டது. நிச்சயம் இதெல்லாம் ஒரு நாள் மாறிவிடும் என்கிற நம்பிக்கை எனக்கு.காலம்தான் சுபீரியர்
ஆதிரைதான் என் சேலைக்கு பின் ஒளிந்து கொள்வாள். நான்காவது படிகிறாள். தினமும் வேலை முடிந்து எழு மணிக்கு வீட்டுக்கு போகையில் ஓடி வந்து கட்டிக்கொள்வாள்.
“என்னம்மா தினமும் நீயும் லேட்டா வர அப்பா நான் தூங்குனதுக்கு அப்புறம் வராரு.. என் ப்ரெண்ட் சுவாதி வீட்ல எல்லாம் அவ தினமும் ஜாலியா அப்பா அம்மாவோட விளையாட்றா.. நாளைக்காவது சீக்கிரம் வாம்மா..ப்ளீஸ்” என கேட்கையில் ஏக்கம் தெறிந்து விழும்.
யாரோ தொடையை தட்டிய மாதிரி இருந்ததில் கண் விழித்தேன். பள்ளி மூட்டையை என் மடியில் வைத்து கொள்ள அனுமதி கேட்டது குழந்தை. ஆதிரை வயதுதான் இருக்கும். பாவம் இந்த சின்ன வயதிலேயே கூட்டத்தில் ஒரு மூட்டையை தூக்கி கொண்டு இன்னும் எத்தனை ஸ்டாப் தாண்டி இறங்குமோ.. சிநேகமாய் சிரிந்து எழுந்து இடம் கொடுத்தேன்.
அடுத்த நிறுத்தம் என் அலுவலகம் . உள்ளே நுழைந்தது தான் தெரியும். மூன்று மணி நேரம் போன வேகம் தெரியவில்லை. மேகலா வந்து லஞ்சுக்கு கூப்பிடும்போது தான் நேரம் பார்த்தேன். மணி ஒன்று.
மேகலா.. என் காலேஜ் பிரண்ட். அவளின் தயவில்தான் இந்த வேலை கிடைத்தது. என்னை போல் இல்லாமல் நல்ல வாழ்க்கை கிடைத்த மிடில் கிளாஸ் இல்லத்தரசி.
“எப்படி இருக்காருடி உன் பொண்ணு.. அத்தையும் ஹஸ்பண்ட்டும் கொஞ்சமாவது மாறி இருக்காங்களா” என்றாள் மேகலா..
“ம்.. ஆதிரை நல்லா இருக்கா.. வாழ்க்கை எப்போதும் போல நல்லாத்தான் போகுதுடி” என்றேன் புன்னகைத்துக்கொண்டே..
“உனக்கு சிலைதான் வெக்கணும் நிம்மி. இந்தனை பிரச்சனையிலயும் வாழ்க்கை நல்லா போகுதுன்னு சொல்ற பாரு” என்றாள் மேகலா..
அவளுக்கு காதல் திருமணம். அவள் கணவன் இவளுக்கு ஒன்று என்றாள் உருகி விடுவான். பேங்க் ஆபீசர். அவள் மாமியார் காலையில் எழுந்து இவளுக்கும் சேர்த்து சமைத்து அனுப்புவார்கள். ஒருவருக்கொருவர் அனுசரித்து போகும் குடும்பம்.
“யாருக்குதான் பிரச்சனை இல்ல.. எல்லாருக்கும் கடவுள் அவங்க அவங்க லெவலுக்கு பிரச்சனை கொடுத்திருப்பார். காலம் எல்லாத்தையும் மாத்திடும். அதுக்காக கிடைச்சிருக்கிற வாழ்கையை குறை சொல்லி என்னடி பிரயோஜனம்”
“அதெல்லாம் சரி நிம்மி இன்னிக்கு அந்த மேனேஜர் பிரகாஷ் உன்ன லேட் அவர்ஸ் உட்கார சொன்னாரா”
“ஆமா எதோ போர்டு மீட்டிங் ரிப்போர்ட் இருக்கு.. எத்தன நேரம் ஆனாலும் முடிச்சு கொடுத்துட்டு போக சொன்னார். முன்னாடி அந்த சீட்டை பாத்துகிட்ட யமுனா ரிசைன் பண்ணிட்டதால நான்தான் அதை பண்ணனும்னு கேட்டார்”
குரலை தாழ்த்தி கொண்ட மேகலா “இத பாரு நிம்மி.. அவன் அவ்வளவு நல்லவன் கிடையாது. இவன் கொடுத்த டார்ச்சர்லதான் யமுனா வேலைய விட்டு போய்ட்டாங்க. ரிப்போர்ட்ட படிக்கறேன் அப்படின்னு உன்னை படிப்பான்”
“இத ஏன் நீ எங்கிட்ட முன்னாடியே சொல்லல”
“தேவைப்படல.. ஆனா எதுக்கும் அவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு “
பேசிக்கொண்டிருக்கும் போதே போன் அடித்தது. அத்தை தான் பேசினாள்.
“நி..நிர்மலா.. “வாய் குளறியது.. ஏறக்குறைய அழுது விடுவாள் போலிருந்தது
“என்ன அத்தை என்ன ஆச்சு.. எதாவது பிரச்சனயா.. எதுவா இருந்தாலும் பதட்டபடாம சொல்லுங்க”
“அ..அம்…மாடி கொஞ்சம் சீ… சீ சிக்கிரம் கிளம்பி சூர்யா ஆஸ்..பத்திரிக்கு வாம்மா.. கணேசனுக்கு வொர்க்க்ஷாப்ல வேலை பாக்கறப்ப மெசின்ல கை மாட்டிகிச்சாம்.”
உடைத்து போய் அழ தொடங்கினள்.. அத்தை படிக்காதவள். சிறு வயதிலேயே கணவனை இழந்தவள் என்பதால் தன் வாழ்க்கை தொலைந்த ஆத்திரத்தை இயலாமையை எப்போதும் பிறரிடம் காட்டுவாள். முதன் முறையாக என்னிடம் கொஞ்சம் ஆறுதலை எதிர்பார்க்கிறாள்.
“இ..இதோ கிளம்பிட்டேன் அத்தை”
பதட்டமாய் எழுந்தேன்..கடவுளே! பெரியதாய் ஒன்றும் ஆகி இருக்க கூடாது. அவசரமாய் அரை நாள் லீவு சொல்லி விட்டு ஆஸ்பத்திரிக்கு பறந்தேன்.. போவதற்குள் ஏறக்குறைய சர்ஜரி முடிந்து விட்டது.. நல்ல வேளையாக உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை.
முதன் முதலாக ஆத்திரம், முன்கோபம் தொலைத்து கையறு நிலையில் என் கணவன் அமர்திருந்தான். என்னை பார்த்தவுடன் சோகமாய் தலையை குனித்து கொண்டான். ஒரு கையை எடுத்திருந்தார்கள்.
என்னை பார்த்தவுடன் ஓடி வந்த அத்தை கட்டி கொண்டு பெரியதாக அழத்தொடங்கினாள். மற்ற நேரமாக இருந்தால், “ம்மா.. சும்மா இரு.. இப்ப என்ன நான் செத்தா போயிட்டேன்..உயிரோடதான உக்காந்திருக்கேன். கொஞ்சம் கத்தாம வாயை மூடு” என்று கூப்பாடு போட்டு இருப்பான். இன்று எதவும் பேசவில்லை. அத்தையை ஆறுதலாய் அணைத்து கொண்ட நான் அவனையும் கனிவுடன் பார்த்தேன். பார்வையை தாள முடியாமல் வேறு பக்கம் தலையை திருப்பி கொண்டான்.
விசாரித்ததில் தெரிந்தது. முந்தைய இரவு குடித்ததில் போதை தெளியாமல் கண்கள் மூடிக்கொண்டே மெஷினில் கை வைத்திருக்கிறான். எல்லா தவறும் இவன் மேல்தான். இன்சூரன்ஸ் கூட எதுவும் கிடைக்காது. அது ஒரு இம்போர்ட்டட் மெஷின். அதற்கும் வேறு கம்பெனி செலவு செய்ய வேண்டும்.
இவன் ரொம்ப நாட்களாக அங்கு வேலையில் இருந்ததால் இத்தோடு போகட்டும் என்று முதலாளி விட்டு விட்டார். வேறு யாராவது இருந்திருந்தால் நடந்த விபத்திற்கு போலீஸ் கம்ப்ளைன்ட் ஆகி இருக்கும்..
ஆயிற்று. ஒரு வாரம் ஓடி விட்டது. ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்க்கு வந்து விட்டோம். எப்போதும் வீட்டில் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து இருக்கிறான். இவனை இப்படி நான் பார்த்ததில்லை. குடிக்க பணம் வேண்டுமா என கேட்டதற்கு தீவிரமாக மறுத்து விட்டான்.
இதில் ஒரு சந்தோசமான விஷயம் என்னவென்றால் ஆதிரையுடன் சிரித்து பேசி விளையாடுகிறான். அவளும் ‘அப்பா அப்பா’ என்று குதித்து கொண்டு அவனிடம் ஓடுகின்றாள். நாளையிலிருந்து திரும்பவும் ஆபீஸ் போக வேண்டும்.. ஏற்கனவே ஒரு வாரம் லீவ் போட்டாகி விட்டது.
மேகலா அவள் கணவனுடன் இன்று மாலை வீட்டிற்கு வருவதாக சொல்லி இருக்கிறாள். அவள் கணவனிடம் எதாவது கடை வைக்க அவர் பேங்க் மூலமாக லோனுக்கு ஏற்பாடு செய்து தரச் சொல்லி இருக்கிறேன் என்றதும் அத்தை ஆதரவாக கையை பிடித்து கொண்டாள். கணேசன் கண்களில் நிறைய நன்றி தெரிந்தது.
ஆபீசில் நுழைந்ததுமே பிரகாஷ் என் சீட்டிற்கு வந்து விட்டான்.
“ஐ அம் வெரி சாரி டு ஹியர் த மெசேஜ்.. பாவம் ஒரு கைய வச்சு இனி அவர் என்ன பண்ண முடியும்” என்றான் போலியான வருத்தத்தோடு..
“அவருக்கு சிம்பதி பிடிக்காது சார்.. நேத்து இப்படி கேட்ட அவர் ப்ரெண்ட் ஒருத்தர கோபத்துல அறைஞ்சுட்டார். அதுக்கு ஒரு கை போதுமே சார்” என்றேன்.
கோபத்தை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
“ஆல்ரைட் நிர்மலா இன்னிக்கு நீங்க கொஞ்சம் லேட் ஹவர்ஸ் இருக்க வேண்டியிருக்கும்.. கொஞ்சம் ரிபோர்ட்ஸ் முடிக்கணும். அன்னிக்கு உங்க ஹஸ்பண்டுக்கு ஆக்சிடென்ட்டுன்னு சொல்லி கிளம்பிட்டீங்க.. இன்னிக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இருக்காதுன்னு நினைக்கறேன் ” என்றான்.
“சாரி சார்.. இன்னிக்கு டாக்டர் செக் அப்புக்கு கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கார். அடுத்த வாரத்துல இருந்து ஒண்ணும் பிரச்சனை இருக்காது சார்” என்றேன்.
‘பிரச்சனை’க்கு… நான் கொடுத்த அழுத்தம் அவனுக்கு புரிந்திருக்க வேண்டும்.
“அப்ப சரி இந்த வாரம் நான் மேகலாவை ரிப்போர்ட்டுக்கு யூஸ் பண்ணிக்கறேன்” என்று சொல்லி விட்டு நகர்ந்தான் புன்னகையுடன்.
“என்னடி சொல்ற.. இது நிஜமா.” என்றாள் மேகலா பதட்டத்துடன்..
“ஆமா. எங்கிட்ட அவன் அப்படித்தான் சொன்னான். ஒண்ணும் பயப்படாத..சரின்னு சொல்லி லேட் ஹவர்ஸ் இருந்து வேலை பண்ணிக்கொடு.. மேல கை வைக்க வந்தான்னா பளிச்சுன்னு செருப்பெடுத்து அடிச்சிட்டு வெளியே வந்துரு.. பார்த்துக்கலாம்” என்றேன் உறுதியாக
“இதெல்லாம் சரியா வருமா நிம்மி.. பிரச்சனை வேண்டாமே..”
“எல்லாரும் இப்படி ஒதுங்கி போறதுனால தான் அவனுக்கு துளிர் விட்டு போய்டுது..கவலைப்படாம பண்ணு.. மத்ததை நான் பார்த்துக்கறேன்”
எல்லாம் எதிர்பார்த்த மாதிரியே நடந்தது. லஞ்ச் டைமில் ஏசி சர்வீஸ் என்று மீடியாவில் இருந்த காலேஜ் ப்ரெண்ட் மதுவின் ஆபீசில் இருந்து வந்த ஒருவன் சத்தமில்லாமல் கண்ணுக்கு புலப்படாத சின்ன காமெராக்களை அலுவலகத்தில் அங்கங்கே வைத்து விட்டு போனான். நான்தான் அட்மின் பார்த்துக்கொள்கிறேன் என்பதால் யாருக்கும் எந்த டவுட்டும் வரவில்லை.
பிரகாஷ் எல்லோரையும் அனுப்பி விட்டு பொறுமையாக மேகலாவை அணுகினான். எதிர்பாரத நேரத்தில் பின்னால் இருந்து வந்து அவன் கட்டி கொண்டதும் அவள் அதிகமாகவே பயந்து விட்டாள். அதிர்ந்தவள் பளிச்சென்று அறைந்து விட்டு ஒரே ஓட்டமாக வெளியே வந்தாள். வெளியே காத்திருந்த என்னைப் பார்த்ததும் அப்படியே மயங்கி விழப்போனவளை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டேன்.
எதற்கும் இருக்கட்டும் என்று அவள் கணவனை போன் செய்து வர சொல்லியிருந்தது நல்லதாக போயிற்று. உடனே அவனுடைய காரில் அவளை ஏற்றிக் கொண்டு அவன் கிளம்பி விட்டான். இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்து மேகலாவை தேடிய பிரகாஷ் அவளை காணவில்லை என்றதும் ‘ச்சே..’ என்று கையை குத்திக் கொண்டு உள்ளே போய் விட்டான்.
அடுத்த நாள் காலை குழப்பத்துடன் பயந்து கொண்டே வந்த மேகலாவை வரவேற்க புது மேனேஜர் பத்மினி காத்திருந்தாள்.
கேமராக்களின் பதிவுகள் என் மொபைலில் இணைக்கபட்டிருந்ததால் அதை அப்படியே எங்கள் கம்பெனி எம்.டி-யின் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி விட்டேன். இரவோடு இரவாக பிரகாஷ் கம்பி எண்ணி கொண்டிருக்கிறான்.
‘எல்லாம் கனவு மாதிரி இருக்கு நிம்மி.. நீ கிரேட்தாண்டி” என்றாள் மேகலா என்னை கட்டிக்கொண்டு. அலுவலகத்தில் எல்லோரும் என்னையும் மேகலாவையும் பாராட்டினார்கள்.
இப்போதெல்லாம் ஐந்து மணிக்கே எழுந்து அத்தை சமைத்து கொடுக்கிறாள். ஆதிரை நான் தாமதமாகப் போனாலும் ஏங்கிப் போவதில்லை. வீட்டிற்கு முன் ஆரம்பித்த பெட்டிக்கடையில் அப்பாவுடன் இருக்கிறாள் . சில ‘மகளிர் மட்டும்’ பேருந்துகள் புதிதாய் வருகின்றன. இப்போதெல்லாம் வீட்டில் பாத்திரங்கள் உருளுவதேயில்லை..
எல்லாம் கடந்து போய் காலம் மாறி இருக்கிறது. விபத்து நடந்த அன்று கணேசன் எப்போதும் வொர்க் ஷாப்பிற்கு எடுத்துப் போகும் தண்ணீர் பாட்டிலில் ஒரு சின்ன ஹைடோஸ் தூக்க மாத்திரை கலந்ததை பற்றி மட்டும் கடைசி வரை நான் யாரிடமும் சொல்லவேயில்லை.



