இணைய இதழ் 122கவிதைகள்

அன்றிலன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

காற்றில் துருப்பிடிக்கும் வயதைக் கண்டுபிடித்தல்

முதன் முதலில்
எனது வயதை அறிய
முதலாம் வகுப்பு ஆசிரியர்
இடக்காதை வலது கையால்
தலை மீது வைத்துத் தொடக் கூறினார்

சிலருக்கு எனது காது போலவே
இருந்தும்
அதைத் தொட முடியாதென
வயதைக் குறைத்துக் கொண்டனர்

எங்கோவொரு இடத்தில்
வயது
யாருக்கேனும் துருத்தியபடியிருக்கிறது
முன்போ அல்லது பின்போ.

வரைகட்டத் தாளில் ஏறி
ஒரு புள்ளியைத் தொட்டதும்
இறக்கம் அடைவது போல்
வயது ஏற ஆசைப்பட்டவர்கள்
போதுமென
ஏணியிலிருந்து
இறங்கத் துவங்கினார்கள்

காற்றில் படப் பட
துருபிடித்துக் கொண்டிருக்கிறது
மனிதனின் வயது

சாண்டியாகோ கிழவன்
85 ஆம் நாளில்
மார்லின் மீனைப் பிடித்த கதைக்கும்
வயதுக்கும் ஒரு தொடர்புமில்லை.

*

நெய்தல் நிலத்தின்
உப்பளங்களில் ஊறிய பாதவெடிப்பில்
மேய்ச்சல் நிலத்தின் ரேகைகள்

யாவருக்குமான
மருத நிலத்தின் வேர்களுக்கு
உப்புச் சத்துக்களின் பற்றாக்குறை

நீர்மருது மரப்பொந்தில்
ஆண் இருவாட்சியின்
வருகையை எதிர்நோக்கும்
பெண் பறவையெனக்
காத்திருக்கும்
இழப்பை முகிழ்த்த கண்கள்
ஒரு செங்கோலின் ஒளியை

ஈரநெருப்பு மூண்டு கிடக்கும்
தெப்பத்திற்கு
என்றேனும் வாய்க்கும்
ஒரு பரிவின் குரலென்று
இன்னும் நம்புகின்றன
அக்கண்கள்.

*

நெளிவுகளினூடே நகரும்
நத்தை வழியில் இடரும்
எத்தனித்தலின் ஒளிக்கீற்றை
ஏந்திக்கொள்ளல்
ஆகாயத்தின் திறவு

அந்தியை அப்படியே பருகும்
வானத்தின் உடல் முழுதும்
ஆரஞ்சு வண்ணக்
குழைவின் வாசம்

எலிக்கறி உண்பவனின்
வளை முழுதும் பசியின் கன்னிகளோடு
அகப்பட்டுக் கொண்டிருக்கும்
இரைப்பை அமிலத்தில் ஊரும்
மெளத்தின் குரல்கள்
மேல்நோக்கிப் பார்ப்பதில்லை

எல்லா மீன்களும்
வலைகளுக்குள் அகப்படுமெனும்
சூத்திரம் உடைக்கும்
ஒளித் திரளைக் கூட்டும்
அவனே ஆசான்
அவனே ஆகாயம்.

*

andrilan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button